சாலை நினைவுகள்

சாலை நினைவுகள்...
இது போல் அனுபவங்கள் உங்களுக்கும் இருக்கலாம்.

காலையில் வேலைக்குப் போகும் சமயம்... தினமும் ஏறக்குறைய ஒரே நேரம் ஒரே பாதையில் நடக்க நேரும். ஒரே முகங்கள், நடை உடை பாவனைகள், ஒரே வாகனம் அதே சந்தில் திரும்புவது, ஒரே பறவை குறிப்பிட்ட ஒரே மின்கம்பத்தில் குறிப்பிட்ட ஒரு திக்கைப் பார்த்தபடி... இப்படிப் பல அவதானங்கள்.

எங்களை அறியாமல் தினமும் ஆயிரம் குட்டிக் குட்டி அவதானிப்புகள், அவையெல்லாம் பதிவுகளாக மனதில்... இந்த கணணியைப் போல தன்னால் சேமிக்கப்பட்டு.. பிறகு பல நினைவுகள் அழிந்துவிட சிலது மட்டும் மீதமாகத் தேங்கிவிடுகிறது.

இன்று நினைவில் இருப்பவை வரும் ஆண்டு மறந்து போகலாம். இங்கே கொஞ்சம் பகிர்ந்து வைத்தால்... :-) மறக்காது இருப்பேன்.

கி.பி 2000 -
அப்போது நாங்கள் குடியிருந்த வாடகை வீட்டிலிருந்து பத்து நிமிட நடையில் பஸ் தரிப்பிடம். பஸ்... இரண்டெ ஸ்டேஜஸ் (இங்கு எத்தனை ஸ்டேஜஸ் என்று சொல்லிப் பணத்தை ஓட்டுனர் அருகே உள்ள இயந்திரத்தின் தட்டில் வைத்தால் பயணச் சிட்டையை இயந்திரம் நீட்டும். நாமே கிழித்துக் கொண்டு தட்டில் வைக்கப்படும் மீதியைப் பொறுக்கிக் கொண்டு போய் அமர வேண்டும்.) பஸ் நிறுத்தத்தில் இறங்கி சைகை விளக்கில் காத்திருந்து தெருவைக் கடந்து பத்து நிமிடம் நடக்க பாடசாலை. (உள்ளே போக இன்னொரு பத்து நிமிடம் தேவை என்பது வேறு.)

அந்த இரண்டாவது நடைப் பொழுதில் தினமும் ஒரு பெண்ணைக் காண்பேன். 'காண்பேன்' என்று சொன்னதன் அர்த்தம்... என் பார்வையில் படுவார் என்பது.

பார்த்ததும் இந்தியர் என்பது புரிந்தது. என் வயதுதான் இருப்பார். மலர்ந்த முகம். ஓட்ட ஓட்டமாக வருவார். எப்படியும் நான் நிற்கும் விளக்கு முனைக்கு வருவதற்குள் எனக்குப் பச்சை கிடைத்திருக்கும்.

ஆறு மாதங்கள் கழிந்தன. இதற்குள் தூரப் பார்வையிலேயே நட்பாகி இருந்தோம். மெதுவே... மிகவும் பழகியவர்கள் போல... பச்சைக்குக் காத்திருக்கும் வாகன வரிசைகளுக்கும் இயந்திர இரைச்சலுக்கும் மேலாக, தெருவைக் கடந்து "ஹாய்!" "காலை வணக்கம்!" "எப்படி இருக்கிறீர்கள்!" நலம்தானே!" எல்லாம் கத்திக் காற்றில் பரிமாறிக் கொள்ள ஆரம்பித்தோம். இதற்கு மேல் பேசிக் கொள்ள காலம் இடம் தரவில்லை. இருவரும் வேலைக்குப் போக வேண்டுமே!

ஒரு நாள் இவரைக் காணாவிட்டால் கூட மனம் தவித்துப் போகும், உடம்பு சுகமில்லையோ! குழந்தைகளுக்கு நலமில்லையோ! யாரை விசாரிப்பேன் நான்! அவர் சிரிப்பைப் பார்த்துவிட்டுப் போவதால்தான் அன்றைய நாள் நல்லதாக அமைவது போல் ஒரு நினைவு எனக்கு.

அவர் எங்கே வேலை செய்தார் என்று தெரியாது. நான் சமீபத்திலுள்ள அந்தக் கல்லூரியில் வேலை பார்ப்பதுவும் அவருக்கு தெரிந்திராது என்று தோன்றும்.
ஒரு நாள்... இருவரும் வெகு சமீபமாகச் சந்தித்துக் கொண்டோம். அப்படி ஒரு சந்தோஷம் எங்களுக்கு. அதை விபரிக்க வார்த்தையே இல்லை. அவசர அவசரமாக ஒரு அணைப்பு. என் மனதில் இருந்த ஆயிரம் கேள்விகளில் ஒன்று வார்த்தையாகி வெளியே வந்து விழுமுன்... 'டிக் டிக் டிக்' பச்சைவிளக்கு! பெருத்த ஏமாற்றத்துடன் அவசர அவசரமாகப் பிரிந்தோம்.

பிறகு மீண்டும் சந்திக்க இன்னொரு ஆறு மாதம் எடுத்தது. ஆனால் இப்பொழுது கொஞ்சம் முன்னேறியிருந்தோம். வெட்கத்தை விட்டுக் காட்டுக் கத்தலில் தெருவைக் கடந்து எதையாவது சொல்லிவிட்டுப் போவோம். :-) மற்றவர் காதுக்கு விழுந்தாலும் விழாவிட்டாலும் நட்பைப் பரிமாறிக் கொள்ளும் திருப்தி.

ஒரு நாள் மீண்டும் சந்தித்தோம். முதல் வார்த்தையாகச் சொன்னார்... "ஃபோன் நம்பர் கொடுங்கள்." கடதாசிக்கும் பேனாவிற்கும் இருவரும் பரபரவென்று பைகளைக் குடைய... 'டிக்! டிக்! டிக்!' மீண்டும் பச்சைவிளக்கு.

ஒரு விடுமுறைக் காலத்தின் முன்பாக நான் பாடசாலையில் வேலை என்பதை அவருக்குச் சைகையில் தெரியப்படுத்தியிருந்தேன். இரண்டு வாரங்கள் மனது தேடாமல் இருக்குமே. ஆனால் கோடை விடுமுறை நீளமானதாயிற்றே! ஆறு வாரங்கள்! கொஞ்சம் கவலை வந்தது. மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கும் சமயம் அவர் வேறு வேலைக்கு மாறியிருந்தால்! வேறு வீடு மாறியிருக்கலாம். அல்லது... வாகனம் ஓட்ட ஆரம்பித்திருக்கலாம். என்னவாது செய்ய வேண்டும் இந்த நட்பைத் தொடர வைக்க. எப்படி!!

என் அதிர்ஷ்டம், ஒரு நாள் நேரத்திற்கு முன்பாகவே என் பஸ் தரிப்பிடத்தில் என்னை இறக்கியிருந்தது. வெகு தூரத்தில் தோழியைக் கண்டேன். விளக்கு பச்சைக்கு மாறியும் தெருவைக் கடக்காமல் நின்று, நிதானமாக வீசுவதற்காகக் கையில் பிடித்திருந்த பஸ் பயணச் சீட்டில் என் பெயரை எழுதி தொலைபேசி எண்ணையும் குறித்துக் கொண்டேன். அவர் அருகே வந்ததும் கையில் திணித்துவிட்டு என் பயணத்தைத் தொடர்ந்தேன்.

அன்று இரவு தொலைபேசி அழைப்பு வந்தது.
சந்தோஷம்! சந்தோஷம்! சந்தோஷம்!
எனக்கு இருந்தது போலவே இரண்டு பையன்கள் அவருக்கும். லாட்டாவும் இமாகுலாட்டாவும் நிறையப் பேசுவோம் - குழந்தைகள் பற்றி, எங்கள் பொழுது போக்குகள் பற்றி. பல நாட்கள் காலைய தெரு நிகழ்வுகள் மாலையில் இரைமீட்கப்படும்.

இரண்டு வருடங்கள் தொலைபேசி வழியாக எங்கள் நட்புத் தொடர்ந்தது. இங்கிருந்து முதல் தடவை இலங்கைக்குப் பயணம் போயிருந்த சமயம்... தொலைத்தேன் அந்த அன்பு நட்பை. ;(

என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. அவர் வீடு மாறியிருந்தால் நிச்சயம் புதிய இலக்கம் தொலைபேசியில் தெரிய வந்திருக்கும் எனக்கு. குடும்பத்தோடு மீண்டும் இந்தியாவிற்கே திரும்பியிருக்கக் கூடும்.

அப்போது மட்டும் எங்கள் கைகளில் அலைபேசிகள் இருந்திருந்தால் தொடர்பு விட்டுப் போகாது இருந்திருக்கக்கூடும். ;(

பரவாயில்லை, என் தோழியும் அவர் குடும்பத்தினரும் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும்.

5
Average: 5 (6 votes)

Comments

"அப்போது மட்டும் எங்கள் கைகளில் அலைபேசிகள் இருந்திருந்தால் தொடர்பு விட்டுப் போகாது இருந்திருக்கக்கூடும்"

என் நட்பை நான் இழந்து (24 வருடங்கள்) இன்றும் தவித்துக்கொண்டிருக்கிறேன்.

உங்கள் இழை பள்ளி நட்புக்களை நினைவு படுத்துகின்றது.

மீண்டும் உங்கள் தோழியை சந்திக்க‌ விரைவில் சந்தர்ப்பம் அமையும்.

தங்கள் பதிவைப் படித்ததில் இருந்து மனசு கவலையாகவெ இருக்கு. உங்க சாலை நட்பு பற்றி சொல்ல போறீங்க நு ஆர்வமா படித்தேன். நட்பு பிரின்தது வருததமா போச்சு. : ( எதோ கதையா இருன்தா கூட சில நாளுக்கு பிறகு சேர்ந்து இருப்பாங்க நு நானே மனச சமாதானம் செய்திருப்பேன். இப்ப என்ன செய்ய? : ( சீக்கிரமே உங்க நட்பு மீண்டும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன்
தயூ

நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!

ஆமாம். குடும்பத்திற்கென்று ஒரு அலைபேசி மட்டும்... அது தொலையாத தொலைபேசி... அவ்வளவு பெரிதாக, பாரமாக இருக்கும். எங்களுக்கு நண்பர்கள் குறைவு அப்போது. இங்கு பாதைகளும் பழக்கமில்லை. தொலைந்து போனால் வீட்டோடு தொடர்பு கொள்ள மட்டும் பயன்பட்டது. ஈமெய்ல் கூட குடும்பத்திற்கு ஒரு ஐடீ மட்டும் இருந்தது. பயன்படுத்தும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் பணம் செலவாகுமே என்கிற கவலையில் யாருக்கும் கொடுக்க நினைத்ததில்லை. யாரும் கேட்பதும் இல்லை அப்போதெல்லாம்.

தமிழ் தெரியாத தோழி. இதைப் படித்து என்னோடு தொடர்பு கொள்ளச் சாத்தியம் இல்லை. பார்க்கலாம். அடுத்த இந்தியப் பயணத்தில் சந்திக்கக் கூடும். அல்லது மீண்டும் இங்கே எங்காவது சந்திக்கக் கூடும்.

‍- இமா க்றிஸ்

நன்றி விஜி. :-) இன்னும் முப்பது வருடம் கழித்து முன்னேற்றங்கள் எப்படி இருக்கும் என்று யோசிக்கிறேன்.
நடை கொடுத்த நட்புகள் முன்பு. இணையம் இணைத்து வைத்த நட்புகள் நீங்கள் இன்று. நாளை!! இதற்கு மேல் நவீனமாக ஏதாவது வரக் கூடுமா!! :-)

‍- இமா க்றிஸ்

உறவுகளையே சில சமயம் தொலைத்து விடுகிறோமே. வருந்துவதற்கு இந்தப் பிரிவில் எதுவும் இல்லை என்று தெரியும். ஆனாலும் மனம் வருந்துகிறது சின்னதாக.

இங்கு கூட... பிரியமாக இருந்த குட்டிப்பெண் ஒருவரை அடியோடு காணோம். முன்பு இணையத்தில் வேறு இடங்களில் கண்ணில் படுவார். இப்போ ம்ஹும்! எங்கும் காணோம். என் மின்னஞ்சல்களுக்கும் பதிலில்லை. எதுவோ ஒரு காரணம் இருக்கும். அந்தக் காரணம் நல்லதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

‍- இமா க்றிஸ்

இமாம்மா சில நட்புக்கள் புன்னகையிலேயே நெருக்கம் ஆகும் . ஒரு நாள் இல்லனாலும் மனசு நிச்சயம் தேடும் . நானும் தோழியும் தினம் காலை வாக்கிங் போகும் போது உங்க வயதுடைய ஒரு தோழியும் தினம் பார்ப்போம் .அவங்க பார்க்க அழகா , டிராக் சூட் போட்டு ,உற்சாகமா இருப்பாங்க . தினம் எங்களை பார்த்து சிரிச்சுட்டு எங்க சேலையை கம்பெர் பண்ணி கிண்டல் பண்ணிட்டு போவாங்க .நானும் தினம் அவங்களை எதிர்பார்ப்பேன் . இரண்டுநாளா பார்க்கல ,டைம் மிஸ் ஆகுது .

இமாம்மா வின் தோழி கிடைச்சுட்டா இந்த தோழிகளுக்கும் கொள்ளை மகிழ்ச்சி.

Be simple be sample

ம்ம்... உங்க தோழி விரைவில் கிடைக்கட்டும். நானும் கூட இந்த கைப்பேசி எல்லாம் இருந்திருந்தா ஒரு தோழியை மிஸ் பண்ணிருக்க மாட்டேன்... என்ன பண்ண. இட்ஸ் ஓக்கே, என்றாவது கண்டு பிடிச்சுடுவேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கட‌ தோழியும் உங்களை நினைத்து கொண்டு தான் இருப்பார்கள்.
கடவுள் நினைத்தால் எல்லாம் நடக்கும்.

சாலை நினைவுகள் நட்பு அனுபவத்தை அழகா கொடுத்ததிருக்கீங்க. .
அருமைங்.. :-)
பிரிவு சோகம்தான் :-(

நட்புடன்
குணா

இந்த தவிப்பு இப்பொழுதும் இருக்கிறது @@ என் தோழிகளின் தொலைபேசி எண்களை தொலைத்து விட்டேன் ,,,அவர்களை தொலைத்து விட்டேன் ,,,அந்த வேதனை என்றும் இருக்கும் ,,,யாரும் தொலைக்ககூடாது என்பதே என் ஆசை

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

@ வந்தாலே அஷ்வதா வந்ததை தெரிஞ்சுக்க முடியுது :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் ஆசை செல்லம் போயி உங்க ப்ளாக் க பாருங்க

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

Doll? / Dal? கடசியில பருப்புன்னு திட்டிப்புட்டாங்க வனி 3:)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா