குழந்தைக்கு கல்வி

ஹலோ தோழிகளே

எனக்கு 4 வயது மகன் உள்ளான் அவனை இன்னும் பள்ளியில் சேர்க்கவில்லை இந்த‌ வருடம் தான் சேர்க்கவுள்ளோம். ஆனால் இன்னும் எதுவும் சரியாக‌ எழுத‌ மாட்டேன் என்கிறான். நான் பணிக்கு செல்வதால் மாலை தான் எழுத‌ வைக்கிறேன் A, B, C மட்டும் தான் போடுகிறான். இந்த‌ மூன்று எழுத்துக்கே 1 மாதம் ஆகி விட்டது இப்பொழுதும் D போட‌ 10 தடவை சொல்லி கொடுத்தால் அவன் போடும்பொழுது B போடுகிறான். சீக்கிரம் மறந்து விடுகிறான். அதுவும் மிகவும் மெதுவாக‌ போடுகிறான். அவன் போடுவதை பார்த்தாலே கோவம் வருகிறது. இதற்க்கே இப்படி செய்தால் இன்னும் மற்ற‌ எழுத்துக்கள், தமிழ் எழுத்துகள் எல்லம் எப்படி எழுதுவானோ? என்று கவலையாக‌ உள்ளது. நானும் என் கண‌வரும் அவனுக்கு ஒரு குறையும் வைப்பதில்லை. அவனுடைய‌ இந்த‌ செயல்களால் வெருப்பாக‌ உள்ளது. பால்வாடி அனுப்பலாம் என்றால் பக்கத்தில் எதுவும் இல்லை. சின்ன‌ பையன் போக‌ போக‌ சரியாகி விடுவான் என்று தோன்றினாலும். மனதிற்க்கு மிகவும் வேதனையாக‌ உள்ளது. வீட்டில் ஆங்கில‌ எழுத்துக்கள், தமிழ் எழுத்துக்கள், பழங்கள், காய்கறிகள் chart எல்லாம் உள்ளது. அதை கூட‌ சொல்ல‌ மாட்டேன்கிறான். ஆனால் A, B, C சொல்லுவான், rhymes பாடுவான் ஆனாலும் எழுத்து முக்கியம் இல்லையா? அவனுக்கு வேறு எப்படி சொல்லி கொடுப்பதேன்றே தெரியவில்லை

//மாலை தான் எழுத‌ வைக்கிறேன்// அது சின்னவரது உடலும் மூளையும் களைத்திருக்கும் நேரம் அல்லவா?

//A, B, C மட்டும் தான் போடுகிறான்.// :‍) நீங்களே, 'எழுதுகிறான்' என்று சொல்லாமல், 'போடுகிறான்' என்கிறீர்கள். :‍) இப்போதைக்கு, அவருக்கு அது காட்சிப் பொருள் ‍- படம் போலதான்.

//இந்த‌ மூன்று எழுத்துக்கே 1 மாதம் ஆகி விட்டது// அவர் குழந்தை. நீங்கள் வேறு தாமதமாக‌ ஆரம்பித்திருக்கிறீர்கள். நேரம் எடுக்கட்டும், நல்லது தான். //D போட‌ 10 தடவை சொல்லி கொடுத்தால் அவன் போடும்பொழுது B போடுகிறான். சீக்கிரம் மறந்து விடுகிறான்.// 10 தடவை எம்மாத்திரம்! திரும்பத் திரும்பச் சொன்னால் / வரைந்தால் நினைவில் இருக்கும். அடுத்த‌ விடயத்தைச் சொல்லிக் கொடுக்கும் போது ஏற்கனவே சொல்லிக் கொடுத்தவற்றை இடைக்கிடையே நினைவுபடுத்தியாக‌ வேண்டும். எழுத்து எழுத சிந்தனையைப் பழக்குவதற்கு வீடியோ நல்லது. தேடிப் பாருங்கள். நீங்கள் சொல்லிக் கொடுப்பதை விட‌ அது சுலபம்.

//அதுவும் மிகவும் மெதுவாக‌ போடுகிறான்.// உங்க அளவுக்கு வேகமாக எழுத‌ முடியாது அவரால். பென்சில் சரியாகப் பிடிப்பதற்கும் எழுதுவதற்கும் கைத் தசைகள் பழக்கப்பட‌ வேண்டும். வளர்ச்சியில் இதுவும் ஒரு படி. சின்னவர்கள் ஆரம்பத்தில் முழுக் கையாலும் பொருட்களைப் பிடிப்பது இதனால்தான்.

//அவன் போடுவதை பார்த்தாலே கோவம் வருகிறது.// உங்கள் மேலா குழந்தை மேலா! கோபம் வந்தால் பழக்கும் வேலையைச் செய்யாதீர்கள். அது எதிர்மாறான‌ விளைவைக் கொடுக்கும். விளையாட்டாக‌ இருந்தால் மட்டும் தான் இப்போது எழுத‌ முயற்சிப்பார். ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொன்றில் ஆர்வம் இருக்கும். குழந்தைக்கு இன்னும் செலெக்டிவாக‌ வெகு சில‌ விடயங்களில் தான் ஆர்வம் இருக்கும்.

//இதற்க்கே இப்படி செய்தால் இன்னும் மற்ற‌ எழுத்துக்கள், தமிழ் எழுத்துகள் எல்லம் எப்படி எழுதுவானோ?// எழுதுவார். உங்களாலேயே இந்த‌ ஒரு வரியை எழுத்துப் பிழையில்லாமல் தட்ட‌ முடியவில்லை, படித்துப் பாருங்கள். நீங்கள் டென்ஷன் ஆகாமல் விளையாட்டாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

வீடியோ பார்க்க‌ வையுங்க‌. //அவனுக்கு ஒரு குறையும் வைப்பதில்லை.// நீங்கள் கொஞ்சமாவது வெளியே அனுப்பியிருக்கலாம். எழுத்துப் பழகாவிட்டாலும் மற்ற‌ ரூட்டீன்களைப் பழகியிருப்பார். //அவனுடைய‌ இந்த‌ செயல்களால் வெருப்பாக‌ உள்ளது.// கர்ர்... குழந்தையை வெறுப்பீர்களா! //பால்வாடி அனுப்பலாம் என்றால் பக்கத்தில் எதுவும் இல்லை.// இதுதான் நீங்கள் வைக்கும் குறை. உங்கள் வசதிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சிரமம் பாராமல் இப்போதாவது அனுப்புங்க‌. இல்லாவிட்டால் பள்ளிக்குச் செல்ல‌ ஆரம்பித்ததும் பெரிய‌ மாற்றத்துக்கு ஈடுகொடுக்கச் சிரமப்படுவார் சின்னவர். நீங்க‌ வேறு டென்ஷன் கொடுப்பீங்க‌, பாவம் அவர்.

//சின்ன‌ பையன் போக‌ போக‌ சரியாகி விடுவான் என்று தோன்றினாலும்// இல்லைங்க‌, சிலதுக்கு நாம் சந்தர்ப்பங்களை அமைத்துக் கொடுக்க‌ வேண்டும். தானாகச் சரியாவதானால் நாள் எடுக்கும். அதற்குள் நீங்கள் வேறு உங்கள் அமைதியிழந்த‌ மன‌ நிலையால் அவருக்கு இன்னும் சிரமம் கொடுக்கப் போகிறீர்கள்.

//மனதிற்க்கு மிகவும் வேதனையாக‌ உள்ளது.// நீங்கள் அமைதியாக‌ இருப்பது முதலில் முக்கியம். இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறீர்கள். விரைவுபடுத்தாதீர்கள்; நேரம் கொடுங்கள். அல்லாவிட்டால் ஒட்டுமொத்தமாக‌ படிப்பதில் ஆரவமில்லாமல் போகலாம்.

//வீட்டில் ஆங்கில‌ எழுத்துக்கள், தமிழ் எழுத்துக்கள், பழங்கள், காய்கறிகள் chart எல்லாம் உள்ளது.// எங்கே! அடுக்கி வைக்காமல் சின்னவர் அதிகம் புழங்கும் அறைகளில் சுவரில் ஒட்டுங்கள். சமையலின் போது அவர் உங்கள் கூட‌ இருந்தால் பழங்கள், காய்கறிகளுக்கு எல்லாம் சார்ட் தேவையில்லை.
//அதை கூட‌ சொல்ல‌ மாட்டேன்கிறான்.// தேவை அவருக்கு இல்லை. அதனால் சொல்லவில்லை. நீங்கள் பேசுவதைப் பார்த்தே அவர் பேச‌ வேண்டுமே தவிர‌ எல்லாவற்ருக்கும் சார்ட் வைத்திருக்க‌ வேண்டுமென்பதில்லை. அவரது முக்கியமான‌ விஷுவல் எய்ட் நீங்களும் வீட்டிலுள்ள‌ மற்றவர்களும் தான். கடையில் வாங்கும் சார்ட் மூன்றாம் பட்சமே. (அட்வற்றில் எழுத்துப் பிழைகள் இருக்கலாம்; சொற்கள் தவறாக‌ அடிபட்டிருக்கலாம். பார்த்துத் தரமான‌ கம்பெனிகள் வெளியிடுவதை வாங்க‌ வேண்டும்.) சார்ட்களை குழந்தையோடு உட்கார்ந்து நீங்களே தயார் செய்தால்... அதிக‌ பலன் கிடைக்கும் என்று நினைக்கிறேன். முயற்சி செய்து பாருங்க‌.

//ஆனாலும் எழுத்து முக்கியம் இல்லையா?// :‍) இதற்குப் பதிலாக‌ மனதில் பலதும் ஓடுகிறது. 'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்,' //அவனுக்கு வேறு எப்படி சொல்லி கொடுப்பதேன்றே தெரியவில்லை.// எழுத்து என்று சொல்லிக் கொடுக்க‌ வேண்டாம் சித்திரமாக வரையச் சொல்லிக் கொடுக்கலாம். ஒவ்வொர் எழுத்துக்கும் ஒரு சித்திரம் நினைத்துக் கொண்டு வரைய‌ வைக்கலாம். பூக்கள் இலைகளாம் எழுத்துகளைத் தரையில் கோலமாகப் போட‌ வைக்கலாம். நீங்கள் சாக் பீஸால் முதலில் எழுதுங்கள். அதன் மேல் அவர் கோலம் போடட்டும்.

இணையத்தில் தேடுங்கள். நிறைய‌ வீடியோக்கள் கிடைக்கும். முதலில் நீங்கள் நேரம் எடுத்து பாருங்கள். பிறகு மெதுவாக‌ சின்னதாக‌ சின்னவரோடு 'விளையாட‌' ஆரம்பியுங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்