தோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5

நாம் உண்ணும் உணவில் கலந்துள்ள நஞ்சால் குழந்தைக்கு ஊட்டும் தாய்ப் பால் கூட விஷமாகிட்டது என்கிறார் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள்.
காய்கறிகள், பழங்கள்,அரிசி முதலான நாம் உண்ணும் உணவு வகைகள் எல்லாவற்றிலுமே நஞ்சு கலந்துள்ளது. அதைவிட கொடுமையானது நாம் அணியும் ஆடைகளை கூட நஞ்சு விட்டு வைக்கவில்லை. ஆடைகளில் கலந்திருக்கும் நஞ்சானது நமது வியர்வை சுரப்பிகளின் மூலம் நம் உடலை அடைகிறது.
அறுசுவை சகோதரிகளே நீங்கள் மனது வைத்தால் இயற்கையான முறையில் உங்கள் வீட்டின் தோட்டத்திலேயே நஞ்சு கலக்காத காய்கறிகளை விளைவித்து பயன் பெறலாம். அதற்கான ஆலோசனைகள் இங்கே வழங்கப்படும்.

//மஞ்சள் நீர்// நிச்சயம் வேலை செய்யும். தெளிக்கும் போதும் பிறகு செடி அருகே போகும் நல்ல துணி அணிந்து போக வேண்டாம். பட்டால் கறை படியலாம்.

//இனிப்பு(ச்) சோளம் (sweet corn) \ மக்காச்சோளம்// இரு வேறு இனங்கள். //இளஞ்சோளக்கதிர்// எதிலிருந்தும் அறுவடை செய்யலாம்.

‍- இமா க்றிஸ்

டிராகன் விதைகளிலிருந்து முளைத்த செடி (கொடி - ?)களில் காய்கள் காய்க்குமா? காய்க்குமானால் எவ்வளவு ஆண்டுகளில் காய்க்கும். இல்லை வளர்ந்த கொடிகளை வெட்டி நட்டால்தான் காய்க்குமா? தெரிந்தவர்கள் தயவு செய்து தகவல் தரவும்.

நன்றி.

அன்புடன்
ஜெயா

காய்க்கும் ஜெயா. விதையிலிருந்து முளைக்க வைக்கும் தாவரம் முறையாக வளர்த்தால் 2 வருடங்களில் காய்க்கும். ஆரம்பத்தில் காய்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். சரியான பலன் கிடைக்க, தாவரம் முதிர்ச்சி அடைய வேண்டும்.

கிளைகளை நடுவதன் மூலம் உருவாக்கும் தாவரம் ஒரு வருடத்திற்குள் காய்க்க ஆரம்பித்துவிடும். காய்களில் எண்ணிக்கையும் இவற்றில் அதிகமாக இருக்கும்.

விதையிலிருந்து வளர்க்க ஆரம்பிப்பது, உரோமமில்லாமல், கண் திறவாமல் பிறக்கும் அணில்குஞ்சை வளர்க்கிற மாதிரி. :-) சுவையும் சுவாரசியமும் எப்படி அதிகமோ அதே அளவு எதிர்பாராத ஏமாற்றமும் இருக்கும். இங்கு குளிர் காலத்தில் வளர்ச்சி இராது. கோடையில் நான் விடுமுறையில் போய்விடுவேன். அப்போது அம்மா வீட்டில் செடிகளைக் கொடுத்து வைப்பேன். மூன்று வருடங்கள் கழித்தும் ஒரு அடி உயரம் வளரவில்லை. அழகாக தொட்டிச் செடியாக உள்ளே வைத்திருந்தேன். (கள்ளி வகைதானே! நிறைய முட்கள் இருந்தன.) அதிக பருமனான தண்டு 1 செ.மீ குறுக்களவு இருந்த சமயம் வந்த குளிர் காலத்தில் பனிப்புழுக்கள் பிஞ்சுத் தண்டுகளைக் கோதிவிட்டன. ;( அதன் பின் செடியைத் தக்க வைக்க முடியவில்லை. இதுவே தண்டிலிருந்து வளர்க்க ஆரம்பித்திருந்தால், முதிர்ந்த தண்டில் புழுக்களின் தாக்கம் இருந்திருந்தாலும் கூட நிச்சயம் தாவரத்தை மீட்டெடுத்திருக்கலாம்.

ஆசைக்கு வேண்டுமானால் விதையிலிருந்து வளர்த்துப் பார்க்கலாம். அறுவடை வேண்டுமானால், தண்டிலிருந்து வளர்ப்பது புத்திசாலித்தனம்.

செடி ஒரு குறிப்பிட்ட உயரம் வளர்ந்தபின் குடை போல் வளரப் பழக்கிவிடவேண்டும். இதற்காக தண்டு நடுகிற போது கூட உறுதியான கொம்பு ஒன்றையும் சேர்த்து நட்டால் பிறகு வேருக்குப் பாதிப்பு இராது. பெரிய அளவில் பயிரிடுகிறவர்கள் கம்பி வேலிகளுக்கு நடும் காங்க்ரீட் தூண்களைப் பயன்படுத்துவார்களாம். குடைப் பகுதி, பிரதான தண்டு தாங்க முடியாத அளவு பாரமாக இருக்கும் போல. குடை வடிவம் - கிளைகள் உடையாமல் அறுவடை செய்ய உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். தொட்டிச் செடியாகவும் வளர்க்கலாம். அறுவடை செடியின் அளவுக்கு ஏற்ப இருக்கும்.

இப்போது இங்கும் தண்டுகள் விற்பனைக்குக் கிடைக்கின்றனவாம். என்றாவது மீண்டும் வளர்க்க ஆரம்பித்தால் என் அனுபவங்களை இங்கு பதிவு செய்கிறேன்.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா. ஆசைக்கு வேண்டுமானால் விதையிலிருந்து வளர்த்துப் பார்க்கலாம்// ஆசைக்கேதான் இமா.

கள்ளி இனம் தானே. நம்ம சென்னையிலும் வருமோ என்று பார்க்கத்தான். இங்கு தண்டுகள் கிடைப்பது பற்றி தெரியவில்லை. அதனால் நாம் வாங்கும் பழங்களின் விதைகளில் இருந்து முயற்சிக்கலாமே என்று போட்டேன். முளைத்திருக்கு. ஆனால் வளருமா; வளர்ந்தாலும் காய்க்குமா என்று தெரிந்துகொள்ளவே கேட்டேன்.

ஏனென்றால் மிளகு விதையிலிருந்து முளைத்தால் காய்க்காது என்று சொல்வார்கள். இதுவும் காய்க்காதென்றால் முயற்சிப்பது வீணல்லவா.

(கிளை சந்தேகம்: ட்ராகனா? டிராகனா? இதையும் தீர்க்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்)

விளக்கத்திற்கு மீண்டும் என் நன்றிகள் பல.

அன்புடன்
ஜெயா

சென்னையில் நன்றாகவே வளரும். நிச்சயம் காய்க்கும். கூகுள் செய்ததில், அங்கு இந்தத் தாவரத்தை விற்பனை செய்கிறார்கள் என்று தெரிய வந்தது.

ஆரம்பத்திலிருந்தே கிளைகளை ஒடித்து ஒற்றைத் தண்டு போல் வளரவிடுங்கள். முட்கள் நிறைய வரும். சடைத்து வளரவிட்டால் கொஞ்சம் சிரமம். தண்டு பருக்க ஆரம்பித்த பின் முட்கள் சற்றுக் குறைவாக இருக்கும், ஆனால் இல்லாமல் இருக்காது.

dragon fruit - 'dr'இக்கு இடையில் i இல்லையே! ;D தமிழில் எந்தச் சொல்லும் மெய்யெழுத்தில் ஆரம்பிக்கக் கூடாது. டிராகன் தான் சரி. ;) என்னால் கிறிஸ் என்று எப்போது எழுத முடிகிறதோ அதன் பிறகு நல்ல பிள்ளையாக டிராகன் என்று எழுதுவேன். அதுவரை பொறுத்தருள்க. ;)

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி இமா.

சிரமம் எடுத்து பதிலளித்ததற்கு. அங்கு இந்தத் தாவரத்தை விற்பனை செய்கிறார்கள் என்று தெரிய வந்தது.// முயற்சி செய்கிறேன்.

அதுவரை பொறுத்தருள்க. ;) // பொறுத்தேன் ;D

அன்புடன்
ஜெயா

நான் மாடியில் 2 வருடங்களாக 3 (வகை) அன்னாசி செடிகளை (பைகளில்) வளர்த்து வருகிறேன். ஆனால் இன்னும் காய்க்கவில்லை. சிறிய பைகள் என்பதாலா? இன்னும் காத்திருந்து பார்க்கலாமா? ஒருவேளை நிலத்தில்தான் காய்க்குமா? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

அன்புடன்
ஜெயா

தொட்டியிலும் காய்க்கும். செடி எவ்வளவு உயரமாக வளர்ந்திருக்கிறது?

தொட்டி சிறிதாக இருந்தால், பசளை போதாமல் இருக்கும். காய் சிறிதாக வரலாம். கொஞ்சம் பெரிய தொட்டிக்கு மாற்றுங்கள். கூடியவரை வேரிலிருந்து மண் உதிராமல் எடுங்கள். பையுள் வட்டமாகச் சுற்றிச் சுற்றி வேர் ஓடி இருந்தால் சற்று சீண்டி விடுங்கள். (அந்த வேர்களை மட்டும் பிரித்து விடுங்கள்.)

செடிகளுக்கு இரண்டு வயது ஆகிவிட்டது. பூத்தலைத் தூண்டிவிட சில வழிகள் இருக்கின்றன. சுலபமான முறை - 1 அடி அளவு உயரம் வளர்ந்த பின், தொட்டியில் ஆப்பிள் ஒன்றை வைத்து தொட்டியோடு செடியை பாலித்தீன் பையினால் மூடிக் கட்டி வெயில் படாத இடத்தில் வைத்துவிடுங்கள். இரண்டு மூன்று நாட்கள் வைத்திருந்தால் போதும். பிறகு பையையும் ஆப்பிளையும் எடுத்துவிடலாம். பொறுமையாகக் காத்திருங்கள். மெதுவே செடியின் நடுவே பூ வளர ஆரம்பிக்கும்.

சில வகைச் செடிகளுக்கு மகரந்தச் சேர்க்கை அவசியம், சிலவற்றுக்குத் தேவயில்லை என்று நினைக்கிறேன். எப்படி இருந்தால் என்ன! முயற்சி செய்து பார்ப்பதில் நட்டம் இல்லை. காய்த்தால் எனக்கும் ஒரு பங்கு அனுப்ப மறக்க வேண்டாம். :-)

‍- இமா க்றிஸ்

பதிலுக்கு நன்றி இமா!

சிறிய தொட்டிதான். தொட்டி (grow bag) யின் அளவு 3/4' x 3/4' x 1'(உயரம்) செடி எவ்வளவு உயரமாக வளர்ந்திருக்கிறது? // சரியா சொல்ல தெரியல (முக்கால் அடி ?) இலை 1 1/2 அடி நீளம் இருக்கும். தொட்டி சிறிதாக இருந்தால், பசளை போதாமல் இருக்கும் // இருக்கலாம். ஊரில் முன்பெல்லாம் வேலியில் நட்டிருப்பார்கள். ஆனால் எனக்கு அனுபவம் இல்லாததால் ”எப்படி வரும் அல்லது வருமா” என்ற யோசனையெல்லாம் இல்லாமல், அப்பொழுது இருந்த பையில் வைத்துவிட்டேன்.

கூடியவரை வேரிலிருந்து மண் உதிராமல் எடுங்கள். // அதுதான் தயக்கமாக இருக்கிறது. காய் சிறிதாக வரலாம். // அதுகூட பரவாயில்லை. வராமல் போய் விட்டால்? அந்த வேர்களை மட்டும் பிரித்து விடுங்கள்// எனக்கு இப்படியெல்லாம் செய்யத்தெரியுமா என்று தெரியவில்லை. முயற்சி செய்கிறேன்.

தொட்டியில் ஆப்பிள் ஒன்றை வைத்து // முழுதாகவா? செடியின் பக்கத்திலா? இது நான் கேள்விபடாத ஒன்று. அதனால் எப்படி வைக்கவேண்டுமென்று கொஞ்சம் சந்தேகம்.

காய்த்தால் எனக்கும் ஒரு பங்கு அனுப்ப மறக்க வேண்டாம்.// பங்கு தரமாட்டேன். காய்த்தால் முதலில் முழுதாக உங்களுக்கேதான் (நிஜமாவே).........

நன்றி இமா.

அன்புடன்
ஜெயா

//grow bag/ பையில் இருப்பதை மண் உதிராமல் பிரித்து நடுவது சுலபம். ஈரலிப்பு இருந்தால் மண் அப்படியே 'கேக்' போல வரும். :-)
//இலை 1 1/2 அடி நீளம்// உயரம் சரியாக இருக்கிறது.
//அனுபவம்// அது வளர்க்க வளர்க்க, தானே வரும்.
//வராமல் போய் விட்டால்?// அதுவும் அனுபவம் தானே! :-) கட்டாயம் பூ வரும்.

//எனக்கு இப்படியெல்லாம் செய்யத்தெரியுமா என்று தெரியவில்லை.// ஹா! நானும் தெரிந்து செய்யவில்லை. சும்மா ஏதாவது தோன்றுவதைச் செய்துவைப்பேன். பிறகு யாராவது அதே வேலையை ஒரு 'டெக்னிக்' என்கிற மாதிரி விபரித்திருப்பதைப் படிக்கக் கிடைக்கும் போது, ஒரே சந்தோஷமாக இருக்கும். இப்போது பிரச்சினையே இல்லை. தோன்றுவதைச் சரிதானா என்று கூகுளாரிடம் விசாரித்துக் கொண்டு முயற்சி செய்யும் வசதி இருக்கிறது. இந்த 'ஆப்பிள் டெக்னிக்' சின்ன வயதில் ஓர் ஆங்கில தோட்டக்கலைப் புத்தகத்தில் படித்தது. நான் அன்னாசியை அழகுக்காக வளர்த்திருக்கிறேன். காய்க்க வைப்பதைப் பற்றி நினைக்க முன்பாக நாடு கடந்து வந்தாயிற்று. உங்களுக்குச் சொல்லும் முன், இணையத்தில் பார்த்து நிச்சயம் செய்துகொண்டேன்.

//முழுதாகவா?// ஆம்.
//செடியின் பக்கத்திலா?// ஆம்.
தொட்டி மண்ணிலோ அல்லது செடியின் மேலாகவோ கூட வைக்கலாம். முக்கியமானது செடியும் ஆப்பிளும் ஒரே cleas plastic பையுள் இருக்க வேண்டும் என்பது. ஆப்பிள் - பழுத்ததாக வையுங்கள். வெளியேற்றும் எத்தலீன் வாயு, பூத்தலைத் தூண்டும். (ஆப்பிளை வாழைக்காய்களோடு சேர்த்து வைத்தால் காய்கள் விரைவாகப் பழுப்பதும் இதே எத்தலீன் கிடைப்பதால்தான்.)

அன்னாசிச் செடிகளை விதைகளிலிருந்தும் வளர்க்கலாம். விதைகள் கண்டால் முயற்சி செய்து பாருங்கள். தோலை வெட்டும் போது கண்களில் (பழத்தின் கண்களில்) விதைகள் தெரியும். இவை எல்லா அன்னாசி வகைகளிலும் இராது.

உங்கள் செடி கிளை விட ஆரம்பித்து ஓரளவு பெரிதானதும் உறிஞ்சிகளைப் பிரித்து நடவேண்டும். அதைப் பற்றி பிறகு நீங்கள் கேட்கும் போது சொல்கிறேன்.

அன்புடன்
ஜெயா

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்