குழந்தை குறித்து

எனக்கு 30வயதாகிறது. திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
எனது கணவரின் தம்பிக்கு திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. அவரது மனைவியை பரிசோதித்த டாக்டர் அவரால் குழந்தை பெற முடியாது என்று கூறிவிட்டார்.

அவருக்கு வேறு திருமணம் செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.

இதனைத் தடுக்க ஏதாவது செய்ய முடியுமா

சட்டப்படி விவாகரத்து ஆகாமல் எப்படி இன்னொரு திருமணம்!

நீங்கள் உங்கள் சகலைக்கு என்ன பிரச்சினை என்பதைச் சொல்லவில்லை. செயற்கைக் கருத்தரிப்பும் பயன்படாது என்பது மருத்துவர்களது அபிப்பிராயமா! மருத்துவர்கள் சொல்லும் காரணம் என்ன?

‍- இமா க்றிஸ்

கொழுந்தனுக்கு உடல்ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை.அவரது மனைவியை பரிசோதித்த டாக்டர் அவரது கருப்பை சிதைவு நோய் காரணமாக அவரால் தாய்மை அடைய முடியாது என்று கூறிவிட்டார்.

இதனால் வீட்டில் என் கணவரிடம் பேசி அவரது தம்பி sperms எனக்கு தந்து (artificial insemination)கருவை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
கணவரும் தனது தம்பி மலடன் இல்லை என்று நிரூபிக்க என்னை பயன்படுத்தி கொள்ள சொல்கிறார்கள்.

அன்புச் சகோதரிக்கு,

இன்னொருவர் பயன்படுத்திக்கொள்ள நீங்கள் பொருள் அல்ல. உயிர்.

உங்கள் உடல், உங்கள் உடமை. உங்கள் வாழ்க்கை, உங்கள் தனிப்பட்ட உரிமை. நீங்கள் மேலே சொல்லியுள்ள விடயம் பற்றி - இன்னொருவர் - அவர் உங்கள் கணவரோ தாயோவாக இருந்தாலும் கூட - தீர்மானிக்க உரிமை கிடையாது. நீங்களாக மனமுவந்து, தெளிந்த சிந்தனையுடன் முடிவு எடுபீர்களானால் தொடர்ந்து செல்லலாம். உங்களுக்கு அதற்கான மனவலிமை போதாது என்று தோன்றுகிறது. அது இருந்திருந்தால் இங்கு வந்து கேளாமல் நீங்களாகவே உங்கள் கணவரிடம் உங்கள் முடிவு எதுவாக இருந்தாலும் சொல்லியிருப்பீர்கள்.

உங்கள் கணவர் வேறு நீங்கள் வேறு. மணமான காரணத்தால் கணவர் / அவரது வீட்டார் சொல்லும் அனைத்திற்கும் உடன்படவேண்டியது இல்லை. அப்படி உடன்பட்டு ஆகவேண்டும் என்று எந்தச் சட்டமும் சொல்லாது. உங்கள் இஷ்டத்துக்கு விரோதமாக நீங்கள் எதையும் செய்யத் தேவையில்லை.

ஆனால், அரை மனதாக செயற்கைக் கருத்தரிப்பு என்று போவீர்களானால், பிற்பாடு, அவர்கள் உங்களை வற்புறுத்தினார்கள் என்று ஒரு போதும் சட்டத்தின் உதவியை நாட முடியாது. எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், குழந்தைக்கு எல்லாவிதத்திலும் 'தாய்' நீங்களாக இருப்பீர்கள். அது உங்கள் கருமுட்டையிலிருந்து உருவாகப் போகும் குழந்தை. உங்கள் / உங்கள் பெற்றோர் & சகோதரர்கள் குணாதிசயங்களைக் கொண்டிருக்கும். அதற்கு மேல்... நீங்கள் மசக்கை & மீதி உடல் உபாதைகள் அனைத்தையும் அனுபவிக்கப் போகிறீர்கள். அதோடு உங்கள் வாழ்க்கையையும் குடும்பத்தையும் சேர்த்துப் பார்த்துக் கொள்ளப் போகிறீர்கள். கடைசியில் பிரசவம், அதன் சிரமங்கள் அல்லது சிசேரியன் என்றால் அது தொடர்பான அனைத்தையும் அனுபவிக்கப் போகிறீர்கள். நீங்கள் பாலூட்டி வளர்க்கப் போகிறீர்கள்! குழந்தையை வேண்டாம் என்று அவர்களுக்கே கொடுத்துவிடப் போகிறீர்களா?

இது மிகவும் சிக்கலான விடயம். நீங்கள் பெற்றெடுக்கப் போகும் குழந்தை ஒன்றில் உங்களைப் பெரியம்மா என்று அழைத்துக் கொண்டு உங்கள் கண் பார்வையில் வளரும் அல்லது உங்களை அம்மா என்றும் உங்கள் கணவர் அல்லாத ஒருவரை அப்பா என்று அழைத்து, உங்கள் கணவரைப் பெரியப்பா என்று அழைத்து.... :-) குழப்பம் இல்லையா! குழந்தை வளர்ந்தபின் அதற்கும் வீண் மன உழைச்சல். வாழ்க்கை யாருக்குமே நன்றாக இருக்கப் போவது இல்லை.

உங்கள் பெற்றோர் என்ன சொல்கிறார்கள்! நீங்கள் சொல்வது நடந்தால், பிறக்கப் போவது உங்கள் பெற்றோருக்கும் பேரக் குழந்தை. அதை இன்னொரு குடும்பத்திற்கு விட்டுக் கொடுப்பார்களா?

இது உங்கள் கொழுந்தனாரது குடும்பப் பிரச்சினை. இதை உங்கள் பிரச்சினையாக மாற்றிக்கொள்ளாதீர்கள். அவர்களே தீர்த்துக் கொள்ளட்டும். ஒரு குழந்தையைத் தத்து எடுக்கலாம். அல்லாவிட்டால், உங்கள் சகலையின் தாய் அல்லது சகோதரி முறையான யாராவது வாடகைத் தாயாக இருக்க முடியாதா! அவர்கள் அதை ஏற்க முடியாது என்பதற்கு ஏதாவது காரணங்கள் சொல்வார்களாக இருந்தால், நீங்கள் முடியாது என்பதை யாருமே பிழை சொல்ல முடியாது.

உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? கர்ப்ப காலம் எப்படி இருந்தது? எந்தச் சிரமுமே இல்லாமல் சாதாரணமாக முன்பு போலவே போயிற்றா? பிரசவம் - குழந்தை எந்தத் தொந்தரவும் கொடாமல் ஜம்மென்று உரிய நாளில் வெளியே வர, நீங்கள் உடனே கட்டிலை விட்டு இறங்கி உங்கள் அன்றாட வேலைகைப் பார்க்கக் கிளம்பினீர்களா? இல்லையல்லவா?

நீங்கள் உடலழகு பராமரிப்பில் கரிசனம் கொண்ட ஒருவராக இருந்தால், ஒவ்வொரு கர்ப்பமும் உடலமைப்பை மாற்றும் என்பதை அறிந்துவைத்திருப்பீர்கள். கர்ப்பமும் பிரசவமும் பெண்னின் உடலில் நிரந்தரமான அடையாளங்களை விட்டுச் செல்லும் நிகழ்வுகள். அதை விட அதிகமாக மனதில் அதன் அடையாளம் ஆளமாகப் பதிந்திருக்கும்.

இன்னும் நிறையக் கேள்விகள் என் மனதில் இருக்கின்றன. இது போதும் உங்களைச் சிந்திக்க வைக்க. சிந்தியுங்கள்.

உங்கள் கணவர் சிந்திக்காமல் சட்டென்று ஒரு எண்ணத்தில் கேட்டிருக்கலாம்,. பிறகு அது தவறு என்பதை உணர்ந்து அமைதியாகிவிடலாம். அப்படித்தான் நடக்கும் என்று நினைக்கிறேன். அல்லாமல் பிடிவாதமாக இருந்தால் உங்கள் பெற்றோர் உதவியை நாடுங்கள். இது பற்றிய மருத்துவச் சட்டம் / இந்தியச் சட்டம் பற்றிய அறிவு எனக்கு இல்லை. அவை என்ன சொல்கின்றன என்பதை முதலில் அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் சம்மதித்தாலும், சட்டப்படி என்னென்ன செய்ய வேண்டுமோ அவை எல்லாம் செய்யதபின்பே சிகிச்சைக்குள் போக வேண்டும்.

‍- இமா க்றிஸ்

உங்கள் சகலையின் தாய் அல்லது சகோதரி முறையான யாராவது வாடகைத் தாயாக இருக்க முடியாதா! அவர்கள் அதை ஏற்க முடியாது என்பதற்கு ஏதாவது காரணங்கள் சொல்வார்களாக இருந்தால், நீங்கள் முடியாது என்பதை யாருமே பிழை சொல்ல முடியாது.

/////////////////////

கண்டிப்பாக அவர்களால் என்னை பிழை சொல்ல முடியாது தான்.
கொழுந்தன் மிகவும் நல்லவர்.அவர் மீது எனக்கு மிகுந்த அனுதாபமும் மரியாதையும் பாசமும் உள்ளது.
அவருக்காகவே இதை செய்யலாம் என்று கூட தோன்றுகிறது.

எங்கள் வீட்டில் நீயாச்சு உன் குடும்பமாச்சு நீங்களே பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லிட்டாங்க.

சகலையின் அம்மா மிகவும் வயதானவர்.
அவரால் வாடகைத் தாய் ஆக முடியாது.
சகோதரிக்கு தற்போது தான் திருமணம் நடந்துள்ளது.
அவரையும் இந்த விஷயத்தில் நிர்பந்திக்க முடியாதே

//அவருக்காகவே இதை செய்யலாம் என்று கூட தோன்றுகிறது.// :-) அவருக்காக, உங்கள் கணவருக்காக என்றெல்லாம் இல்லாமல், '100% உங்கள் மனதிற்கு இது சரி, பிற்காலத்திலும் எந்தப் பிரச்சினையும் வரவே வராது,' என்று சொல்லத் தோன்றவில்லை அல்லவா! அப்படித் தோன்றியிருந்தால் இங்கு வராமலே வீட்டாருக்குச் சம்மதம் சொல்லியிருப்பீர்கள்.

எனக்கு இந்திய மருத்துவ முறைகள், சட்டங்கள் பற்றி எதுவும் தெரியாது. இந்தக் கேள்வியைப் படித்த போதும் கூட நான் வசிக்கும் நாட்டிலிருக்கும் ஒருவர் இந்தக் கேள்வியைக் கேட்டால் என்ன சொல்லுவேன் என்கிற மாதிரிப் பாவித்து பதில் சொன்னேன். உண்மையில் இப்படி இந்தியாவில் நடக்கிறதா! இன்று செய்திகளில் படித்து அறிபவற்றைப் பார்க்கையில்... எங்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது புரிகிறது. ஆனால்... நீங்கள் சொன்ன விடயத்திற்கு, சட்டப்படி அனுமதி உண்டா!

நீங்கள் இதுபற்றி மருத்துவரைக் கலந்தாலோசித்தது உண்டா?

//எங்கள் வீட்டில் நீயாச்சு உன் குடும்பமாச்சு நீங்களே பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லிட்டாங்க.// சந்தோஷமாகச் சொன்னதாக நீங்கள் சொல்லவில்லை. பிரசவத்தில் பிரச்சினையாகி நீங்கள் நோய்வாய்ப்பட்டால்! உங்கள் பெற்றோரை எந்த உதவியும் கேட்கக் கூடாது.

//கொழுந்தன் மிகவும் நல்லவர்.// :-) மனிதர் எவரும் ஒரு நாள் போல இன்னொரு நாள் இருப்பது இல்லை. நல்லவர்கள் சரியான புரிந்துணர்வு இல்லாத சமயத்தில் எமக்கு ஒவ்வாதவர்கள் ஆகலாம். இது இருபது வருடம் கழித்துக் கூட நடக்கலாம். சந்தர்ப்பங்கள் நல்லவர்களைக் கெட்டவர்களாக்கும்; கெட்டவர்களை நல்லவர்களாக்கும்.

பிற்காலத்தில் இதனால் உங்கள் குடும்பத்திற்கு வரக்கூடிய பிரச்சினைகளை நீங்கள் சிந்தித்துப் பார்க்க நினைக்கவில்லை.

//சகலையின் அம்மா மிகவும் வயதானவர்.
அவரால் வாடகைத் தாய் ஆக முடியாது.// இல்லை, மருத்துவவிஞ்ஞானத்தில் இது சாத்தியமான விடயம்தான். நான் ஒரு பேச்சுக்காகச் சொன்னதற்கு நீங்கள் சமாதானம் சொல்கிற மாதிரித் தெரிகிறது. :-) //சகோதரிக்கு தற்போது தான் திருமணம் நடந்துள்ளது.
அவரையும் இந்த விஷயத்தில் நிர்பந்திக்க முடியாதே// :-) நீங்கள் நிர்ப்பந்திக்க வேண்டாம். அது இன்னொருவர் வீட்டுப் பிரச்சினை. உங்களை அவர்கள் கேட்பதே பிழை என்கிறேன் நான்.

சிந்தியுங்கள் சகோதரி. வாழ்க்கை விளையாட்டு அல்ல. உங்களுக்கு என்று கணவர் குழந்தைகள் இருக்கிறார்கள்; பெற்றோர் இருக்கிறார்கள். அவர்கள் மட்டில் உங்களுக்கான பொறுப்புகள் இருக்கின்றன.

நீங்கள் இருப்பது மேலை நாடு ஒன்றில் அல்ல. விமர்சனங்கள் நிறைய வரும். தாக்குதல் வார்த்தைகளும் வரும். தைரியமாக முகம் கொடுக்க உங்களால் முடியுமா? அப்படியான மன உறுதி கொண்டவரானால், நீங்கள் இந்தக் கேள்வியை இங்கு கொணர்ந்தே இருக்க மாட்டீர்கள்.

மாட்டிக்கொள்ளாதீர்கள். எனக்கு எந்தச் சமாதானமும் சொல்ல வேண்டாம். இது உங்கள் வாழ்க்கை; உங்கள் விருப்பம். தெரிவும் உங்களதே.

‍- இமா க்றிஸ்

சகோதரி தாங்கள் கூறுவது அனைத்தும் ஏற்புடையதே.உடல் மற்றும் உளவியல் ரீதியாக பல பிரச்சனைகளுக்கு இது வழிவகுக்கும்.

நாங்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக இருக்கிறோம்.அதனால் பெரும்பாலும் வீட்டில் என்ன முடிவு எடுத்தாலும் அனைவரும் அறிந்து விடுவார்கள்.

என் மாமியார் மாமனாருக்கு ஒரு போர்ஷன்
எனக்கும் என் குழந்தைகள் கணவருக்கும் ஒரு போர்ஷன்
கணவரின் தம்பி‌க்கு சிறிது தூரம் தள்ளி வீடு இருக்கிறது.

இந்த விஷயத்தைப் பற்றி கலந்து ஆலோசித்து கொண்டு இருக்கிறோம்.அதே வேளையில் அவர்கள் ஜோதிடம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

கொழுந்தனோடு இணை சேர ஒரு முறை ஏற்பாடும் செய்திருக்கிறார்கள்.
எனக்கு தெரியாமலேயே.
ஆனால் நல்ல வேளையாக அவருக்கு ஒரு அவசர வேலை வந்து சென்றிருக்கிறார்.

எனக்கு இந்த விஷயம் இரண்டு நாட்கள் கழித்து தெரியவந்தது.

அனைவருக்கும் இதில் என்ன மன ஓட்டம் உள்ளது என்று எனக்கு தெரியவில்லை.
ஆனால் கொழுந்தனுக்கும் இதுபோன்ற விஷயங்களில் உடன்பாடு இருக்க வாய்ப்பே இல்லை.

அவருடன் பார்த்து பழகிய இந்த மூன்று ஆண்டுகளில் இருந்தே கூறுகிறேன்.
வீட்டில் உள்ள அனைவரையும் எதிர்த்து என் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதா ?
இல்லை அவர்கள் கூறுவதற்கு எல்லாம் செவி மடுப்பதா ?

வீட்டில் உள்ளவர்கள் மிகவும் வற்புறுத்த காரணம்

1.குடும்ப மானத்தை காரணமாக சொல்கிறார்கள்

2.அதிக பணம் செலவு ஆகிவிடும் என்று நினைக்கிறார்கள் போல

3.artificial insemination மூலமாக செய்வது
எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்று விஞ்ஞானத்தின் மீதான சந்தேகம் இருப்பதாக கூறுகிறார்கள்

4.அவர்களின் மரபு வழி தோன்றலாக குழந்தை இருக்க வேண்டுமாம்

உங்களுக்கு உதவி செய்யும் எண்ணத்தை விட, உங்கள் கேள்வியைப் படித்தவர்களுக்கு அதன் கீழ் வரும் பதில்களையும் படிக்க ஆர்வம் இருக்கும். :-) என்பதனால் இரண்டு முறை பதில் எழுதினேன். என் கையில் நேரம் சற்றுக் குறைவாக இருக்கிறது. இருந்தாலும் தொட்டதைப் பாதியில் விட முடியவில்லை.

//கொழுந்தனோடு இணை சேர ஒரு முறை ஏற்பாடும் செய்திருக்கிறார்கள்.
எனக்கு தெரியாமலேயே.// 'சொல்வதெல்லாம் உண்மை' வீடியோ பார்க்கிற உணர்வு வருகிறது. இது தெரிந்தபின்னும் உங்கள் கணவரோடு எப்படி அந்த வீட்டில் சீவிக்கிறீர்கள்! உங்கள் இடத்தில் என் பெண் இருந்தால், குழந்தைகளோடு தாயை என்னுடன் அழைத்துவருவேன். அந்தக் குடும்பத்தின் மேல் வழக்குப் போட்டு உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவேன். சொல்லச் சொல்ல கண்மூடித்தனமாக இருக்கும் என் பெண்ணுக்கு நறுக்கென்று நாலு குட்டு வைப்பேன். :-)

உங்கள் சகலை உங்கள் மேல் சட்டநடவடிக்கை எடுக்க முடியும் என்பதை மறவாதீர்கள்.

செயற்கை முறைக் கருத்தரிப்பு கூட சற்றுப் பரவாயில்லை, நீங்கள் சொல்கிற விடயம்... உங்கள் மணவாழ்க்கையை நிச்சயம் பாதிக்கும். நீங்கள் யாருக்கு மனைவியாக வாழப் போகிறீர்கள்!! கொழுந்தனாருடனான உங்கள் புதிய உறவின் எல்லை எங்கே என்பதை எப்படி வரையறுக்கப் போகிறீர்கள்! இன்னொரு குழந்தை வேண்டும் என்று கேட்டால் மீண்டும் இயைந்துபோவீர்களா? இன்று உங்களை தன் குடும்பத்தினருக்காக விட்டுக் கொடுக்கும் உங்கள் கணவர் சில வருடங்கள் கழித்து உங்களை எப்படி நடத்துவார்! உங்கள் பெற்றோர் வழி உறவுகள் உங்களை எப்படி நடத்தப் போகிறார்கள்!

உங்கள் சகலைக்கு இந்த விடயங்கள் தெரியுமா? அவர்கள் மனநிலையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இன்னொரு விடயம், அவர் நீங்கள் பெற்றுக் கொடுக்கும் குழந்தையை சந்தோஷமாக வளர்ப்பாரா!

மூன்று பதிவுகளுக்கும் ஒரே இடத்தில் பதில் சொல்லிவிட்டுப் போகிறேன்.

என் சின்ன மூளைக்கு எட்டுகிற ஒரே சந்தேகம்.... நீங்கள் இருவருக்கு மனைவியாக வாழ முடியாது என்பதைப் பளிச்சென்று உங்கள் கணவரிடம் போட்டு உடைப்பதில் என்ன சிரமம் இருக்கிறது!

//குடும்ப மானத்தை காரணமாக சொல்கிறார்கள்// :-) உங்கள் மானம்!! உங்களைப் பெற்றவர்கள் குடும்ப மானம்! இவற்றிற்கு எந்தப் பெறுமதியும் கிடையாதா!!

//2.அதிக பணம் செலவு ஆகிவிடும் என்று நினைக்கிறார்கள் போல// அந்தப் பணத்தின் அளவு கூட நீங்கள் பெறுமதி இல்லையா!! :-( உங்களைச் சுலபமாக இணங்க வைக்கலாம் என்று தெரிந்துவைத்திருக்கிறார்கள். :-)

//3.artificial insemination மூலமாக செய்வது
எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்று விஞ்ஞானத்தின் மீதான சந்தேகம் இருப்பதாக கூறுகிறார்கள்// எனக்கு மனிதர் மீதும் & அவர்களது ஞானத்தின் மீதும்தான் சந்தேகம். :-)

//அவர்களின் மரபு வழி தோன்றலாக குழந்தை இருக்க வேண்டுமாம்// அது சரிதான். அதற்காக உங்கள் மரபுவழித் தோன்றலாக இருந்தாக வேண்டுமா!

நீங்கள் சிந்திக்கத் தெரிந்தவர். சிந்தியுங்கள்.

‍- இமா க்றிஸ்

நீங்கள் கூறுவது மிகவும் சரியானது.
குட்ட குட்ட குனிந்தால் மேலும் மேலும் இவர்கள் நம்மை அடிமைப்படுத்தி விடுவார்கள்.எனக்கு இப்போது தான் புரிகிறது.

கொழுந்தனுக்கு என்னால் மனைவியாக இருக்க முடியாது.இது எனது குடும்பம் என்பதாலும் குடும்ப ஒற்றுமைக்காகவும் தான் நான் இவர்கள் பேச்சிற்கு அடிபணிந்தேன்.

ஆனால் அதற்காக அவருடன் உல்லாச வாழ்வு வாழ எனக்கு விருப்பம் இல்லை.
இப்போது இணங்கி குழந்தை பெற்றெடுத்தாலும் பிற்காலத்தில் அவருக்கு தேவைப்படும் நேரத்தில் என்னை பயன்படுத்தி கொள்ள முயற்சிக்க வாய்ப்புள்ளது.

கொழுந்தன் மனைவி ஒரு அப்பாவிப் பெண்.அவரது வாழ்க்கை சிதைந்து விடக்கூடாது என்பதற்காக தான் இவ்வளவு பொறுமையாக இருந்தேன்.

அதனை குடும்பத்தில் உள்ளவர்கள் என்னிடம் பேசி பேசியே brain wash செய்கிறார்கள்.

எனக்கு என் கணவர் மற்றும் என் குடும்பமே முக்கியம்.
செயற்கை கருத்தரிப்பு முறைக்கும் இனி முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்து விடுகிறேன்.அப்போது தான் இவர்கள் அமைதியாகுவார்கள்

மேலும் சில பதிவுகள்