வறுத்து அரைத்த மீன் கறி

தேதி: December 30, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (5 votes)

 

மீன்(சுறா மீன் துனா மீன் தவிர்த்து) - 500 கிராம்
தேங்காய் துருவல் - 3/4 கப்
சின்ன வெங்காயம் -. 6 அல்லது 7
பூண்டு - 20 பல்
மிளகு - ஒரு தேக்கரண்டி
சுக்கு - 2" துண்டு
ஓமம் - ஒரு மேசைக்கரண்டி
பெருங்கயம் - அரை தேக்கரண்டி
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி(காரத்திற்கு ஏற்ப)
மல்லிதூள் - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 2 அல்லது 3 இனுக்கு
நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


 

மீனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி மிளகு சேர்த்து வெடித்ததும் சின்ன வெங்காயம், 6 பல் பூண்டு, 2 கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் முக்கால் பாகம் வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
தேங்காய் துருவல் பிரவுன் நிறமானதும் சுக்கு(லேசாக தட்டிக் கொள்ளவும்) ஓமம் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கி பொடி வகைகள் பெருங்காயம் சேர்த்து கிளறி இறக்கி விடவும். வாணலியின் சூட்டிலேயே பொடிகள் வறுபட்டு விடும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு முதலில் தண்ணீர் சேர்க்காமல் பொடித்து கொண்டு பின்னர் தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கலவையில் மீதமுள்ள பூண்டு, கறிவேப்பிலை, புளிக்கரைசல், உப்பு சேர்த்து கலந்து உப்பு புளி காரத்தின் அளவை சரிபார்த்துக் கொள்ளவும்.
மீன் துண்டுகளை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.
குழம்பு நன்றாக கொதி வந்ததும் 7 நிமிடங்கள் அதிக தீயில் கொதிக்க விட்டு பின் தீயைக் குறைத்து மேலும் 5 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கவும்.
சுவையான வறுத்தரைத்த மீன் கறி தயார். இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. கவிசிவா </b> அவர்கள். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளவும்.

இது பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு தினமும் கொடுக்கும் பத்திய குழம்பு. பத்திய குழம்பு என்றாலும் சுவையாக இருக்கும். மீன் சாப்பிடாதவர்கள் முருங்கைக்காய் அல்லது வெறுமனே பூண்டு சேர்த்தும் இக்குழம்பு செய்யலாம். மாதம் இருமுறை உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுக் கோளாறுகள் அஜீரண பிரச்சினைகள் ஓடி விடும். தினமும் சூடாக்கி வைத்தால் 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இதனை கருத்தகுழம்பு என்று எங்க வீட்டில் சொல்வாங்க . இந்த குறிப்பு தந்தமைக்கு நன்றி. வெகு நாட்களாக தேடிய குறிப்பு

கவி, மீன் கறி செய்து பார்த்தேன். சூப்பர். வீட்டில் சிறியவர்கள் முதல் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். ஓமம் இல்லாததால் அது மட்டும் சேர்க்கவில்லை. மிகவும் நன்றாக இருந்தது. நன்றி உங்களுக்கு.

ப்ரபா இது கறுத்த குழம்பேதான். பேரைப்பார்த்து எல்லோரும் ஓடிவிடக்கூடாதேன்னுதான் வறுத்து அரைத்த மீன்கறி :-)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வின்னி மீன்கறி செய்து பார்த்தீங்களா? ரொம்ப சந்தோஷம் பா. ஓமம் இல்லாமல் செய்தாலும் சுவையாகவே இருக்கும். மணம் மட்டுமே சற்று மாறுபடும். நன்றி வின்னி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வானதி, ஓமமும் சேர்த்து செய்துப் பார்.வயிற்றுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் சாப்பிட்டால் நல்லது.பொதுவாக குழந்தைகள் விரும்பி சாப்பிடமாட்டார்கள். Save the Energy for the future generation

Save the Energy for the future generation

this fish source is too healthy