மரவள்ளிக்கிழங்கு அடை

தேதி: December 31, 2008

பரிமாறும் அளவு: 8முதல் 10 அடை வரும்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மரவள்ளிக்கிழங்கு - 1/4 கிலோ
புழுங்கல் அரிசி(அ)பச்சரிசி - 1 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
மிளகு - 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - 2
சீரகம் - 11/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 3 இணுக்கு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - அடை சுடுவதற்கு


 

அரிசியை தனியாகவும், இரண்டு பருப்புகளை ஒன்றாகவும் சேர்த்து கழுவி இரண்டு முதல் மூன்று மணிநேரம் ஊற வைக்கவும்.
மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி மெலிதாக வெட்டி வைக்கவும். மிக்ஸியில் முதலில் மெலிதாக வெட்டிய கிழங்கை போட்டு மையாக அரைத்து எடுத்து வைக்கவும்.
அதே மிக்ஸியில் அரிசியை ஓரளவுக்கு மையாக அரைத்து ஊறவைத்த பருப்பு, மிளகு, மிளகாய்வற்றல், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு சேர்த்து ஓரளவு மையாக அரைக்கவும்.
அரைத்த மாவை அரைத்த கிழங்கோடு சேர்த்து நன்கு கலக்கவும். மாவு இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
தோசைக்கல்லை மீடியம் ஃப்ளேமில் காயவைத்து அவரவர் விருப்பம் போல் மெலிதாகவோ ஓரளவு தடிமனாகவோ ஊற்றி சுற்றிலும் எண்ணெய் ஊற்றி ஒருபக்கம் சிவந்ததும் திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கவும்.
தேங்காய் சட்னி, பொட்டுக்கடலை சட்னி போன்றவற்றோடு சாப்பிட சுவையாக இருக்கும். சர்க்கரை தொட்டும் சாப்பிடலாம்.
ஒரு கப் தேங்காய் துருவலோடு 2பல் பூண்டு, 3 அல்லது 4 மிளகாய் வற்றல் உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைத்து அதனையும் தொட்டு கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.


இது மாவு அரைத்தவுடனேயே செய்ய வேண்டும். மாவு புளித்து விட்டால் நன்றாக இருக்காது. முன்னமேயே அரைத்து பின்னர் உபயோகப்படுத்த வேண்டுமென்றால் உப்பு சேர்க்காமல் அரைத்து அரைத்தவுடனேயே ஃப்ரிட்ஜில் வைத்து தேவையான போது எடுத்து உப்பு சேர்த்து அடை வார்க்கலாம். இந்த முறையில் 3 நாட்கள் வரை புளிக்காமல் இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்