அக்கி ரோட்டி

தேதி: April 4, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கெட்டி தயிர் - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
தேங்காய் துருவல் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 2
காரட் - ஒன்று
குடை மிளகாய் - பாதி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு கொத்து
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை மேசைக்கரண்டி
மிளகு - அரை மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காரட்டை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். குடைமிளகாயை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி விட்டு காரட் துருவியால் துருவிக் கொள்ளவும். மிளகையும், சீரகத்தையும் பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கின காரட், குடைமிளகாய், வெங்காயம், தேங்காய் துருவல், கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகு, சீரகத் தூள், மற்றும் உப்பு போட்டு கலந்துக் கொள்ளவும்.
அதன் பிறகு கலந்த காய்கறி கலவையுடன் அரிசி மாவு, கெட்டியான தயிர், இரண்டையும் போடவும்.
எல்லாவற்றையும் சேர்த்த பின்னர் நன்கு கலக்கி விட்டு அடை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
பிறகு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி தடவி விட்டு கலந்து வைத்திருக்கும் மாவை ஒரு கரண்டி எடுத்து ஊத்தப்பம் போல் ஊற்றி மேலே நல்லெண்ணெய் ஊற்றவும்.
பின்னர் அடுப்பை மிதமான தீயில் குறைத்து வைத்து ஒரு தட்டை வைத்து மூடி வைத்து 2 நிமிடம் வேக விடவும்.
அதன் பிறகு வெந்ததும் மூடியை திறந்து ஒரு முறை திருப்பி போட்டு மேலே அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஒரு நிமிடம் கழித்து எடுத்து விடவும்.
இப்போது சுவையான அக்கி ரோட்டி தயார். புளிக்காத ப்ரஷ் தயிரில் செய்யவும். இதனை பூண்டு சட்னியுடன் பரிமாறவும்.
அறுசுவை நேயர்களுக்காக இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் <b> திருமதி. சுமதி திருநாவுக்கரசு </b> அவர்கள். சமையல் கலையில் நீண்ட அனுபவமும், நிறைய ஆர்வமும் கொண்ட இல்லத்தரசி இவர். ஏராளமான சமையல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பல பெற்றுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சகோதரி சுமதி நல்ல இருக்கீங்களா ரொம்ப நாட்களுக்கு பிறகு குறிப்பு கொடுத்து இருக்கீங்க அதுவும் கலக்கலான சத்தான அக்கி ரொட்டி.

மிக அருமை.அதுவும் இந்த‌ வெயில் நேர‌த்திற்கு அருமையான‌ டிப‌ன்.

ஜ‌லீலா

Jaleelakamal

இதில் உளுந்து மாவு சேர்க்க வேண்டாமா. அடையில் நான் சிறிது உளுந்து சேர்ப்பேன் மென்மையாக வருவதற்காக. அதனால்தான் கேட்கிறேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

டேஸ்ட் அருமை,செய்து பார்த்தாச்சு.சுமதி மேடம் உங்களை கெட்டுகெதர் போட்டோவா அல்லது அட்மின் திருமணவைபவ போட்டோ எதிலோ பார்த்த நினைவு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சுமதி மேடம்,
உங்களின் இந்த குறிப்பை செய்து பார்த்தேன் (கொஞ்சம் அரிசி மாவின் அளவை கூட்டி கொண்டேன்)......சுவை அருமை.....மிக்க நன்றி. நான் அக்கி ரொட்டி வெறும் அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பில்லை, கொத்தமல்லி சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து ரொட்டி மாதிரி தட்டி போடுவேன். இது வித்தியாசமா நன்றாக இருந்தது.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

பெங்களூரை அடுத்த தமிழ் கிராம்ங்களில் இது மிகவும் பிரபலமானது. ஆனால் அவர்கள் காய் சேர்க்காமல் செய்வார்கள். மிகவும் சுவையாக இருக்கும். நிலக்கடலை சட்டினி காம்பினேஷனுடன்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு