சூப்பர் சிங்கர் 2008 (?!)

சூப்பர் சிங்கர் 2008ல் ஆரம்பித்து 2009 ஏப்ரல் வரை வந்துவிட்டது. ரேட்டிங் நன்றாக இருந்ததால் இத்தனை காலம் இழுத்துவிட்டதாக சொல்கின்றார்கள். எனது மனைவியைப் போல் ஆரம்பத்தில் இருந்தே எத்தனைப் பேர் பார்த்து வருகின்றார்கள் என்பது தெரியவில்லை. நான் சில காலமாய் பார்த்து வருகின்றேன். அதற்கு காரணம் ஒரே ஒரு போட்டியாளர். அஜீஷ். இவர் எனக்கு தெரிந்தவர் அல்ல. ஒருநாள் இவர் பாடிக்கொண்டிருந்த "காலையில் தினமும் கண் விழித்தால்" பாடலை எதேச்சையாக கேட்க நேர்ந்தது. மிகவும் பிடித்துப் போயிற்று. அன்றிலிருந்து தொடர்ந்து நிகழ்ச்சியைப் பார்த்து இவரது பாடல்களை (மட்டுமாவது) கேட்டு வருகின்றேன்.

எனக்கு இதுபோல் பேஸ் வாய்ஸ்ஸில் பாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், உன்னி மேனன் என்று ஆரம்பித்து இப்போதைய இளம்பாடகர் மது பாலகிருஷ்ணன் வரை எல்லோருமே எனது பேவரைட் பாடகர்கள். இதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால் இவர்கள் அனைவருமே மலையாளிகள். அதென்னவோ தெரியவில்லை.. மலையாள பாடகர்களுக்கெல்லாம் ஜேசுதாஸ் போன்ற குரல்தான் இருக்கும். நான் கல்லூரியில் படிக்கும்போது மலையாளி நண்பர்கள் எல்லோருமே ஜேசுதாஸ் போல் பாடுவார்கள். கேரளாவிற்கே உரித்தான குரல் போல. உன்னிக்கிருஷ்ணன் ஆரம்பத்தில் ஜேசுதாஸை தொட்டு, பின்னர் உஷாராகி குரலில் வித்தியாசத்தை கொண்டு வந்துவிட்டார்.

சரி, விசயத்திற்கு வருகின்றேன். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பற்றி நிறைய கருத்துக்கள் (வதந்திகளாகவும் இருக்கலாம்) வெளி வருகின்றது. சில போட்டியாளர்கள் நீக்கப்பட்ட விதம், சிலர் நீடிக்கும் விதம் பற்றியெல்லாம் நிறைய கமெண்ட்ஸ் இருக்கின்றது. சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத் தொடர்புடைய ஒருவர் (நண்பரின் நண்பர்) இந்த நிகழ்ச்சி குறித்து நிறைய அதிர்ச்சிகரமான தகவல்களையெல்லாம் சொன்னார். எத்தனை உண்மையோ தெரியாது. அவாளெல்லாம் சேர்ந்து பின்னால் பேசி முடித்து, சின்னத் திரையில் நடத்தும் மற்றொரு நாடகம் இதுவென்றும், ரவி, ரஞ்சனி வெற்றி ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது என்றெல்லாம் தகவல் கொடுத்தார். முன்பு இப்படித்தான், சிலரை மீண்டும் உள்ளே கொண்டு வர முயற்சி நடப்பதையும் நண்பருக்கு முன்னரே சொன்னாராம். அதேபோல் அவர்கள் உள்ளே கொண்டு வரப்பட்டனராம். அதேபோல் நன்றாக பாடிய பெண் ஒருவரையும் ஒரு நடுவரிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக நீக்கிவிட்டதாக கூறினார். உண்மையோ பொய்யோ.. தெரியாது. ஆனால் சில நேரங்களில் நடுவர்களின் முடிவும், அவர்கள் கொடுக்கும் கமெண்ட்ஸ்ம் சில விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் கொடுப்பது போல் தெரியும். இன்னும் சில நாட்களில் முடிவுகள் வந்துவிடும். நண்பர் சொன்ன தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்று பார்க்கலாம்.

அஜீஷை எனக்கு பிடித்துப் போனது என்பதற்காக அவர் பாடிய பாடல்கள் எல்லாவற்றை மிக நன்றாக இருந்தது என்று சொல்ல மாட்டேன். இயற்கையிலேயே அவருக்கு நல்ல குரல் வளம். கஷ்டமான பாவங்களைக்கூட எளிதாக, மிகச் சரளமாக வெளிப்படுத்துக்கின்றார். பாடலைத் தாண்டி, அவரது அலட்டிக்கொள்ளாத எளிமை மிகவும் கவர்கின்றது. பாடும் பொழுதைத் தவிர எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கின்றார் (அவர் அம்மாவைப் போல்). பாராட்டப்படும்போது ஒருவித கூச்சத்துடன் ஏற்றுக்கொள்கின்றார். இவருக்கு பின்னணி பாடல் துறையில் நிச்சயம் நல்ல எதிர்காலம் இருப்பதாக தெரிகின்றது. ஆனால் உன்னியும், சீனிவாஸ்ம் ரவியை புகழும் அளவிற்கு இவரை புகழ்வதில்லை. ஒருவேளை இவர்களுக்கு போட்டியாக வளர்ந்துவிடுவாரோ என்ற பயமோ என்னவோ.. :-)

ரவியைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், எனக்கு சங்கீத ஞானம் கிடையாது. நல்ல பாடல்களை ரசிப்பேன். நல்ல குரல் வளத்தையும் ரசிப்பேன். ரவி நன்றாகப் பாடுகின்றார். சுதி சுத்தமாக இருக்கின்றது. ஆனால் குரலில் வசீகரம் இல்லை. சில நேரங்களில் ஸ்கூல் பையன் பாடுவதுபோல் இருக்கின்றது. யார் பாடலைப் பாடினாலும் இவர் குரலில்தான் பாடுகின்றார். அது ப்ளஸ்ஸா மைனஸ்ஸா என்று தெரியவில்லை. ஒருவேளை பின்னணி பாடல்கள் துறைக்கு ஒரு புதிய குரல் கிடைக்கலாம். தொடர்ந்து அந்த துறையில் சமாளிக்க முடியுமா என்பது தெரியவில்லை. எப்போதும் அமைதியாய், அளவாய் சிரித்து, அளவாய் பேசுவது ஒருவித கர்வமான தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது. இன்னும் கொஞ்சம் இயல்பாய் இருக்கலாம். நான் பார்த்த வரையில் இவரை விட இவரது தம்பி மிக அருமையாக பாடினார்.

விஜய் மற்றொரு போட்டியாளர். ஒருமுறை வெளியேற்றப்பட்டு இரண்டாம் வாய்ப்பு கொடுத்து மீண்டும் உள்ளே வந்தவர். அதனாலோ என்னவோ, எப்போதும் பயம் கலந்த இறுக்கமான முகத்துடன் இருக்கின்றார். இவரது குரலும் எனக்கு பிடித்திருக்கின்றது. ஃபைனலுக்கு செல்வாரா என்பது சந்தேகம். இவர் மிகவும் கஷ்டப்பட்டுதான் நடுவர்களின் பாராட்டுகளை பெற முடிகின்றது.

பெண்களில் ரஞ்சனிதான் அதிகம் புகழப்படுகின்றார். எனவே மிக எளிதாக ரேணுவை ஓரம் கட்டிவிடுவார் என்பது தெரிகின்றது. எனக்கு பெண்கள் குரலில் வித்தியாசம் கண்டுபிடிக்க தெரியாது. இருவருமே நன்றாக பாடுகின்றனர். ஆனால் ராகினி யை எப்படி சென்ற சுற்று வரை கொண்டு வந்தார்கள் என்பது அந்த நடுவர்களுக்கே வெளிச்சம்.

இந்த போட்டியில் அஜீஷ் வெற்றி பெற்றால் இங்கே அலுவலகத்தில் எல்லோருக்கும் ஸ்பெஷல் ட்ரீட் உண்டு.

பி.கு. ஒரு சாதாரண ரசிகனின் கருத்துதான் இது. தேர்ந்த பாடகனின் விமர்சனம் கிடையாது. நீங்கள் ரசித்தவற்றையும், வெறுத்தவற்றையும் இங்கே குறிப்பிடலாம். :-)

நானும் சூப்பர் சிங்கர் சீனியர்(season-1 & 2),ஜூனியர்(season 1) பார்த்தேன்+பார்க்கிறேன்.

எனக்கும் பல சமயம் ஏற்கனவே இவர்களைத் தான் தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்பது போல் குறிப்பிட்ட contestants-க்கு மட்டும் negative comments வரும்.
நான் வாசகர்களின் comments படித்த வரையில் ராகினிஸ்ரீ அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பளரின் நெருங்கிய உறவினர் என்பதால் எப்படியாவது அவரை finals வரை கொண்டு செல்ல வேண்டும் என ஆரம்பத்திலேயே முடிவெடுக்கப்பட்டது என பார்த்தேன்.ஆனால் அதற்காக அந்த பெண்ணை எப்படி எல்லாம் திட்ட முடியுமோ அப்படியெல்லாம் செய்து அவரே ஏன் வந்தோம் என்பது போல் தான் Re-call Round-ல் இருந்தார்.ஒரு வழி ஆக்கி விட்டர்கள்:-((

அருணா என்ற contestant-ம் Eliminate செய்யப்படும் அன்று எதோ கடனுக்கே என்று பாடினார்.அவர் அன்று வெளியேற்றப்படுவார் என அவரிடமே முன்பே சொல்லப்பட்டது தான் காரணம் என படித்தேன்.உண்மையா என தெரியவில்லை.

எனக்கு ரவி,ரேணு இருவருக்கும் குரல் வளம் இருந்தாலும் எப்போதும் எந்த பாடலை எடுத்தாலும் ஒரே விதமாக பாடுவது போல் தோன்றுகிறது.ஆரம்பம் முதலே பாடுவதில் அவ்வளவு தவறுகள் செய்யாமல் consistent-ஆக பாடுவதால் இப்போது அவர்கள் தவறு செய்தாலும் Marks குறைவதில்லை.

ரஞ்சனி முன்பு இருந்ததை விட நல்ல முன்னேற்றம்.பல வித பாடல்களையும் தேர்ந்தெடுத்து பாடுகிறார்.

அஜீஷ் பல பாடல்கள் அபாரமாக பாடுகிறார்.அதுவும் முயன்ற வரை extra சங்கதிகள் add செய்து பாடுகிறார்.சில சமயம் மூக்கில் பாடுவது போல் சத்தம் வரும்.அப்போது வார்த்தை தெளிவாக விழுவதில்லை.

விஜய்யும் பல வித பாடல்களைப் பாடினாலும் பல முறை ஏனோ மனசில் பதியாதது போல் தோன்றும்.சில சமயம் மட்டும் ஆஹா என இருக்கும்.எப்போதும் tension-ஆகவே இருக்கிறார். ஆனால் நல்ல creativity என பல முறை Judges பாராட்டியுள்ளனர்.

ப்ரசன்னா மிகச் சிறந்த entertainer.எந்த பாடலைப் பாடினாலும் அந்த பாடலின் feel கொண்டு வந்தார்.

எனக்கு பல rounds-க்கு முன்னர் eliminate செய்யப்பட்ட தீப்ஷிகாவை இன்னும் நிறைய rounds-களில் பாட சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாம் என தோன்றும்.

நான் சங்கீதத்தில் zero :-((.எதோ 2 வருடங்களாக Reality shows தொடர்ந்து பார்ப்பதால் ஒரு ஆ.கோ(ஆர்வக் கோளாறு)

அப்பாடா நானே இவ்வளவு பெரிய பதிவை அறுசுவையில் முதல் முறை போட்டு விட்டேன்.ஹூ ஹூ

Patience is the most beautiful prayer!!

சூப்ப்ர் சிங்கரை தொடர்ந்து பார்த்து வருகிறோம்.ஆனால் நடுவில் சில தினங்களாக பார்பது இல்லை காரணம் ராகினி தான் எப்படி தான் ராகினி நல்லா பாட்வில்லை என்று உண்ர்ந்தும் ராகினியை பாரட்டுவது கொஞ்சமுன் சரி இல்லை இதானல் எங்கலுக்கு சூப்ப்ர் சிங்கரை பார்பதையே தவிர்த்து விட்டோம்.

ராகினிக்காகவே ரீகால் ரவுண்டு வச்ச மாதிரி இருந்தது.

இப்போ 2நாலாத்தான் திரும்ப பார்ர்க்க ஆரம்பித்து இருக்கிறோம்.

எங்களுக்கு மிகவும் பிடித்த வாய்ஸ் ரவி&ரேணு கண்டிப்பா இவங்க வின் பண்ணா ரொம்ப்ப ச்ந்தோஷம்மா இருக்கும்.ரேணுவோடா வாய்ஸ் உண்மைலேயே அருமை அவங்க கொஞ்சம் பயபடுறாங்க.

அப்புறம் ரஞ்சனி முன்பைவிட இப்போ பரவாயில்லை.

அஜிஷ் குரல் நல்லா தான் இருக்கு ஆனாலும் எதோ மிஸ்ஸிங்

விஜய் கூட ரொம்ப்பவே பயபடுறா மாதிரி தோனுது.சில பாடல்கலை நன்றாக பாடி உள்ளார்.

பார்க்கலாம் யார் ஜெயிக்க போவது யாருனு.கண்டிப்பா ரவி ஜெய்ப்பார் என நினைக்கிரேன் எங்கள் சாய்ஸ் ரவி,ரேணு.

நானும் எப்ப முடிவுக்கு வரும் என்று தொடர்ந்து பார்து வருகிறேன்.சிலசமயம் இரவு பார்க்கமுடியாமல் போனால் பகல் பார்க்க தவறுவதில்லை.அட்மின்,அமரக்பரந்த்தொனி,ஜெயா சொன்னது போல் விளக்கமாக சொல்ல தெரியவில்லை.ஆனால் ஏதோ கோல்மால் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.அஜீஸ்தான் ஏ.ஆர்.ரஹ்மான் கையால் பரிசு வாங்கியாச்சே,அதுவே அவருக்கு கிடைத்த பெரிய வெற்றி.ஆனால் எல்லோரிடமும் திறமை இருப்பது உண்மை,ரேட்டிங் தான் சரியாக கணிக்க முடியலை.நடுவர் யாரும் ஒரு போல் எல்லோருக்கும் கமெண்ட் சொல்வதில்லை,சில நேரம் சொல்லி வைத்தது போல் கோரசாக ஒஹோ என்பார்கள்,சிரிப்பாக வரும்.பாடியவர் கூட எதிர்பார்த்திருக்கமாட்டார்.யாரும் எதையும் கண்டு கொள்ளாமல் கையை தட்டி ஆர்பரிப்பது ஆச்சரியம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலே சொன்ன அத்தனை விஷயமும் தற்பொழுது ஏஷியானெட்டில் ஓடிக்கொண்டிருக்கும் ஸ்டார் சிங்கருக்கும் கேட்க வேண்டி வந்தது..முன்பே வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்து விட்டதாகவெல்லாம் வதந்தி வந்தது..ஆனால் அதுவும் அவர்களே உருவாக்கின வதந்தி என்றும் கேள்விப்பட்டேன்... அதனால் இசையைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள் கூட என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாக பிறகு பார்க்க தொடங்கிவிடுவார்கள்
எங்க வீட்டில் விஜய் சேனல் இல்லை..இன்று தான் ஒவ்வொன்றாய் யூ டியூபில் பார்த்தேன்
இந்த ராகினி ஷ்ரீ,தீப்ஷிகா,அஜீஷ் எல்லாம் முன்பு சின்ன குட்டிகளாக சப்தசுவரங்களில் வந்தவர்கள் தானே?
தீப்ஷிகா இப்பவும் போட்டியில் உண்டா?எனக்கு அந்த பெண்ணை ரொம்ப பிடிக்கும்..பொம்மை போல் கழுத்தை கூட அசைக்காமல் ஜானகியம்மா போல் பாடுவதை கேட்க அழகாக இருக்கும்.
ராகினி ஷ்ரீ கடைசி கட்டம் வரை வந்ததா?இளைஞ்சர்களின் ஓட்டால் தேர்ச்சி பெற்று வந்திருக்குமோ.
ரவியும் நன்றாக பாடுகிறார்.ஆனால் எல்லோரும் சொல்வது போல் ஒரே மாதிரி பாடுகிறார்.
அஜீஷுக்கு எங்கயோ நம்மை இழுத்து செல்லும் குரல் வளம்.பாட பாட புல்லரிக்கிறது போல..இந்த பயல் தானே முன்பு குட்டி பயலா சுமார் 7 வயதில் சப்த ஸ்வரங்களில் வந்தது??அன்று முயல் குட்டி போல அழகாக நின்று பெண்குரலில் பாடியது இன்றும் கண் முன்னே நிற்கிறது..மற்றபிள்ளைகள் அன்றும் பில்டப்போடு பாடும்பொழுது மாஸ்டர் அஜீஷ் அன்றும் ஜட்ஜெஸ் சொல்வதை ஒரு 3 வயது குழந்தை போல் இன்னசன்ட்டாக நின்று சிரிப்போடு வெக்கத்தோடு கேட்பார்..எனக்கு அந்த முகமே மனதில் வருகிறது நான் சொல்லும் பைய்யன் தானா இது?

//ராகினி ஷ்ரீ,தீப்ஷிகா,அஜீஷ் எல்லாம் முன்பு சின்ன குட்டிகளாக சப்தசுவரங்களில் வந்தவர்கள் தானே//

அப்படியா?!!! அது நடந்தது எத்தனை வருடங்களுக்கு முன்னால்? சப்தஸ்வரங்களில் அஜீஷ் ஜெயித்தாரா? (யாராவது அவரது மெயில் ஐடி இருந்தா கொடுங்களேன்.. ரசிகர் மன்றம் ஆரம்பிக்க பர்மிசன் கேட்கணும்.. :-))

ஒருவழியாக இன்று மூன்று பேரை ஃபைனலுக்கு தேர்வு செய்துவிட்டார்கள். என்னுடைய ஃபேவரைட் அஜீஷ் அதில் ஒருவர். மற்ற இருவர்கள், ரேணு & ரவி.

சீனிவாஸ் அவர்கள் சென்ற சுற்றுகளில் கொடுத்த மதிப்பெண்களைப் பார்த்த போது, கேள்விப்பட்ட புரளிகள் எல்லாம் உண்மைதானோ என்று எண்ணத் தோன்றியது. ரவியும் அஜீஷ்ம் பாடிய சுற்றில் இரண்டு பேரையுமே குறை சொல்லாமல் நன்றாக பாடியதாக சொன்னார்கள். சீனிவாஸ்ம் குறையே சொல்லாமல் புகழ்ந்துதான் பேசினார். சுஜாதா இருவருக்கும் 20, 20 என்று மதிப்பெண்கள் கொடுக்க, இவரோ ரவி 21, அஜீஷ் 19 என்றார். சீனிவாஸ் கையில் சிக்கவில்லையே என்று வருத்தப்பட்டேன். அவர் மதிப்பெண் குறைவாக கொடுத்ததை தவறு என்று சொல்லவில்லை. இரண்டு மதிப்பெண்கள் வித்தியாசம் கொடுப்பதற்கு ஏற்றவாறு கமெண்ட்ஸ் கொடுத்திருக்கவேண்டும். இருவரையும் ஒரே லெவலில் பாராட்டி, மதிப்பெண் கொடுக்கும்போது ஒரு நிமிடம் யோசித்து அவர் கொடுத்த விதம் அவர் மீதிருந்த நம்பிக்கையை போக்கிவிட்டது.

ஜேசுதாஸின் கணீர் குரலில் கேட்டுப் பழக்கமாகிப் போன "கலைவாணியே.. " பாடலை, சத்தியமாய் ரவியின் குரலில் என்னால் ரசிக்க முடியவில்லை. அவர் பாடும்போது முகபாவங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. நடிகர் மோகன் போல் மைக்கை கையில் வைத்துக்கொண்டு அட்டகாசமாக பாவனைகளை வெளிப்படுத்துகின்றார். பாடும் வாய்ப்புகள் கிடைக்காவிடினும், மோகன் விட்ட இடத்தை பிடிக்க நடிப்பு துறையில் நல்ல வாய்ப்பு இருக்கிறது.. :-)

விஜய் நிச்சயம் ஃபைனல்ஸ் வரப்போவதில்லை என்பது இந்த சுற்றின் தொடக்கத்திலேயே தெரிந்துவிட்டது. அது அவருக்கும் தெரிந்துவிட்டதோ என்னவோ, அவரும் பெரிதாக முயற்சி எடுக்கவில்லை. ஒரு பாடலை முழுவதும் பாட முடியாமல் தடுமாறினார். இறுதியில் இரண்டு ஜட்ஜ்களின் முடிவை மட்டும் வைத்து பார்க்கையில் வெளியேற்றப்படும் அடுத்த நபர் அஜீஷா, ரஞ்சனியா என்ற கேள்விக்குறி இருந்தது. எதிர்பாராத விதமாக உன்னி அவர்கள் எல்லோரையும் விட அதிகமாக அஜீஷ்க்கு மதிப்பெண்கள் (84) கொடுத்து அவரை இரண்டாம் இடத்திற்கு தூக்கிவிட்டுவிட்டார். வாழ்க உன்னி.. இதை அவரிடம் இருந்து நான் எதிர்பார்க்கவே இல்லை. (பேசியபடி இன்றைக்கு அவருக்கு பெட்டி அனுப்பிட வேண்டியதுதான்.. :-))

போட்டியில் கலந்து கொண்டுள்ள பலர் ஏற்கனவே தொலைக்காட்சிகளில் பிரபலமானவர்கள் போல. ரேணு ராகமாலிகாவில பர்ஸ்ட் வந்தவராம். ரஞ்சனி ஜெயா டிவி, என்னோடு பாட்டுப் பாடுங்கள்ல ஃபைனல்ஸ்க்கு வந்தவராம். ரவி, அஜீஸ் எல்லாம் சப்தஸ்வரங்கள்ல வந்தவர்களாம்.

இறுதிச் சுற்றுக்கு (இப்போது) வந்திருக்கும் மூவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

ஒரு பிரச்சனையை தெளிவாக சொல்லிருந்தீர்கள்,விஜய் டீவி காதுக்கு போய் விட்டதோ.கொஞ்சம் முடிவு தெரிய ஆரம்பித்து விட்டது.என்னாவாக இருந்தாலும் திறமைசாலிகள் எப்போதும் வெளிவந்துவிடுவார்கள்.ரேணுவின் தன்னடக்கம்,அமைதியான சிரிப்பு ,சிரத்தையோடு பாடும் பாங்கே தனி அழகு.அஜீஸ் சின்ன பையன்,ஆர்வம் இருக்கு,போராடவேண்டும்.ரவி பலே கில்லாடி.பார்ப்போம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நான் சூப்பர் சிங்கரின் தீவிர ரசிகை. எங்கள் வீட்டில் இரவு 9 முதல் 10 வரை அப்பப்ப மூணு போடு, மூணு போடுன்னு என் குரல் கேட்டுக்கொண்டிருக்கும். (எங்க வீட்டில் சானல் 3யில் விஜய்)

நான் முதலில் ரவியின் ரசிகை. இப்ப அஜீஷின் ரசிகை. அதுவும் இந்த இளையராஜாவின் சுற்றில் அஜீஷ் தான் கலக்கல் மன்னன். ஒரு எபிசோடில் ஆனந்த் சார் சொன்னதுபோல் அஜீஷ், விஜய், சந்தோஷ் மூன்றும் ரொம்ப அரட்டை. ஆனால் ஆனந்த் சார் வந்ததும் எல்லார் குரலிலும் மெருகு ஏறியிருக்கிறது. எனக்கும் அஜீஷ் முதலில் வந்தால் ரொம்ப சந்தோஷம்.

அதேபோல் எனக்கு பிரசன்னாவையும் பிடித்திருந்தது. பாட்டே கற்றுக்கொள்ளாத அவர் பாட்டு நன்றாக இருந்தது. டி எம் எஸ் போல நல்ல கம்பீரம். இசை ஞானம் இல்லாததால் தான் அவர் இந்தப்போட்டியில் நிலைத்து நிற்க முடியவில்லை. ஆனால் ஜனரஞ்சக இசை அவரது.

ராகினிஸ்ரீ எப்படி இதுவரை வந்தார். அழுது அழுது சாதித்து பரிதாபத்தை சம்பாதித்து வந்தார் என்பது என் கருத்து.

விஜயைப் பொறுத்தவரை அவர் நல்லபாடகர் என்பதை விட நல்ல ம்யூசிஷியன்.

ரவியும் நன்றாகப் பாடுகிறார். ரேணுவுக்கு நல்ல குரல் வளம். ரஞ்சனியும் நன்றாகப் பாடுகிறார்.

இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற மூவருக்கும் என் வாழ்த்துக்கள்.

நீங்கள் சொல்வது போல் சில நேரங்களில் ரொம்ப நன்றாகப் பாடுபவர்களைவிட சுமாராகப் பாடுபவருக்கு நல்ல கமென்ட் கிடைக்கும். அதிர்ஷ்டமா என்று தெரியவில்லை.

ஞாயிற்றுக்கிழமை ஜெயா டிவியில் ராகமாலிகாவில் என்னுடன் பணி புரிபவரின் மகள்கள் (மாலதி, மஹிதா) பாடுகிறார்கள். ஏற்கெனவே நடந்த ராகமாலிகாவில் "ஜட்ஜஸ் சாய்ஸ்"ஆக வெற்றி பெற்றவர்கள். முடிந்தால் பாருங்கள்

பாபு அவர்களே நானும் உங்களைப்போல் சாதாரண ரசிகைதான்.

அன்புடன்
ஜெயந்தி மாமி

இவர்களெல்லாம் ஜூனியர் சிஙர்களாக வந்தது சுமார் 10 வருடம் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன் மற்றவர்களை எனக்கு பெரிசாக வித்யாசம் தெரியவில்லை கொஞ்சம் வளர்ந்திருக்கிறார்கள் அதே போல் பாடுகிறார்கள்.
ஆனால் இந்த அஜீஷை நம்பவே முடியவில்லை லேசான அடைபட்ட குரலுடன் உச்ச ஸ்தாயில் பாடும்பொழுது அன்னாந்து பார்த்து பாடுவார் எல்லோரும் சிரிப்பார்கள் குட்டிப்பயல் பாடும் அழகை பார்த்து ஆனால் அது எதுவும் தெரியாமல் வெகுளியாக அனுபவித்து பாடிக்கொண்டிருக்கும்.ரமணன் கூட கீழே உட்கார்ந்து குட்டிப்பயலின் உயரத்துக்கு ஏற்ப பேசுவது போல் மனதில் சின்னதாக நியாபகம் வருகிறது.அவர் இப்படி பாடும் அள்வு தேர்ந்து விட்டது அதிசயம்.
அட்மின் சொன்ன அந்த ரவியின் முகபாவனை அது தான் அவருக்கு + பாயின்ட் அது தான் அஜீஷுக்கு மைனஸ் பாயின்ட் என்று நினைக்கிறேன் இன்னும் கொஞ்சம் பில்டப் விட்டால் நல்லா இருக்கும்..ஆனால் அஜீஷின் குரலுக்கு இன்னும் நல்ல கடுமையான பயிற்சி கிடைத்தால் நிச்சயம் நல்ல தேர்ந்த பாடகராக வர முடியும்
நானும் மிகசாதாரண ரசிகை தான்

மெஹா சீரியல்லைவிட மோசமா இழுத்துக்கிட்டு போய்கிட்டு இருந்த சூப்பர் சிங்கர் சீரியலை ஒருவழியா இறுதிக் கட்டத்துக்கு கொண்டு வந்துட்டாங்க... இறுதி கட்டப் போட்டியே கடந்த நாலு மாசமா நடந்துகிட்டு இருக்கு. பைனல்ஸ் 1, 2 எல்லாம் முடிச்சு, கடைசியா ஜூன் 3 ஆம் தேதி சூப்பர் சிங்கரை தேர்ந்தெடுக்கப் போறாங்களாம்.

கடைசி் கட்ட தேர்வை மக்கள் வாக்கெடுப்புக்கு விட்டு இருக்காங்க.. SMS, இணையத்தள வாக்கெல்லாம் எந்த அளவிற்கு உண்மையா இருக்கும்னு தெரியலை. ஒருத்தரே எத்தனை ஓட்டுகள் வேணும்னாலும் போடலாம். நான் அஜீஸ்க்கு ஒரு ஆயிரம் ஓட்டாவது போடணும்னு நினைச்சேன். ஆனா அதுக்கு ஒரு நாள் முழுக்க செலவு பண்ண வேண்டியிருக்கும். ஃபைனல்ஸ் 1 ல நான் யாருக்கும் ஓட்டு போடலை. நேத்துதான் அஜீஸ்க்கு 3 ஓட்டு போட்டிருக்கேன்.(ஒருத்தர் 3 ஓட்டு மேக்ஸிமம் போடலாம்.)

கடந்த ஒரு மாசத்துல நிறைய நாள் மிஸ் ஆயிடுச்சு.. இருந்தாலும் ஒரு சில முக்கியமான நிகழ்ச்சிகள் எல்லாத்தையும் பார்த்துட்டேன். ரஞ்சனியும், பிரசன்னாவும் வைல்டு கார்டு ரவுண்ட் மூலமா மறுபடியும் உள்ளே வந்ததை பார்க்கலை. பிரச்சன்னா அன்னைக்கு என்னமோ ரொம்ப அதிகமா பேசினாராம். எல்லாரும் அவரை திட்டிக்கிட்டு இருந்தாங்க.. ரஞ்சனி வருகை எதிர்பார்த்த ஒண்ணுதான். ஆனா, மக்கள் வாக்கெடுப்பில அவர் தோற்று வெளியேறுனது யாருமே எதிர்பாராத ஒண்ணு.

அஜீஸ் நான் ஓட்டுப் போடாமலே முதல் ரவுண்ட்ல பர்ஸ்ட் வந்திருக்காரு. :-) பைனல்ஸ் ல அவர் பாடின அத்தனை பாடலுமே மிக அற்புதம். அவர்தான் ஜெயிப்பார்ங்கிற நம்பிக்கை இப்ப கூடியிருக்கு. நாளுக்கு நாள் அவர் குரல்வளம் கூடுறது நல்லாத் தெரியுது. இந்த 19 வயது இளைஞர் இன்னும் ஒரு சில வருசங்கள்ல பெரிய பாடகரா வருவதற்கான அறிகுறிகள் நிறைய தெரியுது. வாழ்த்துக்கள்.

ரவி நல்ல பாடகர்ங்கிறதுல சந்தேகமே இல்லை. ஆனா, தமிழகத்தின் பிரமாண்டமான குரல் தேடல் னு விளம்பரம் பண்ணி நடக்கிற இந்த நிகழ்ச்சி மூலமா தேடிக் கிடைக்கிற அபூர்வ குரலா அவர் குரலை ஏத்துக்கிறது கஷ்டம். சிலப் பாடல்கள் அவருடைய குரலுக்கு ரொம்ப நல்லா இருக்கு. அவரைப் பத்தி நான் ஆரம்பத்திலே இருந்து இதைத்தான் சொல்லிக்கிட்டு இருப்பேன். BGM இல்லாம இவர் பாடுறப்பத்தான் உண்மையான குரல்வளம் தெரியும். அஜீஸ்ஸையும், இவரையும் அப்படி பாடவிட்டு கேட்டுப்பாருங்க ன்னு சொல்லுவேன்.. யுவன்சங்கர் ராஜா வுக்கு முன்னாடி அப்படி பாடுற ஒரு சந்தர்ப்பம் வந்துச்சு. அன்னைக்கு ரவி செஞ்ச முதல் தப்பு ஜேசுதாஸ் பாடலை பாட எடுத்துக்கிட்டது. (இனி ஜேசுதாஸ் பாடலை ட்ரை பண்ண வேண்டாம்னு யாராவது அவர்கிட்டே எடுத்துச் சொன்னா ரொம்ப நல்லா இருக்கும்.)

பிரசன்னாவுக்கு எஸ்.பி.பி வாய்ஸ் நல்லா சூட் ஆகுது. ஆனா அவரை மாதிரி பாடறவங்க எங்க ஊர்லேயே ஒரு பத்து பேர் இருப்பாங்க. எல்லா லைட் மியூசிக் ட்ரூப்லயூம் இவர் குரல்ல குறைஞ்சது ரெண்டு பேர் இருப்பாங்க. பிரச்சன்னாவும் ஏதோ ஒரு லைட் மியூசிக் ட்ரூப்ல பாடிக்கிட்டு இருக்கிறவர்தானாம்.. அடுத்த ரவுண்ட்ல வெளியேறப் போவது இவராத்தான் இருக்கும்ங்கிறது என்னோட கணிப்பு.

ரேணு பைனல்ஸ்-1 ல ரொம்பவே சொதப்பினார். ஆனா ஓட்டுக்கள் அடிப்படையில 3 வது இடத்துக்கு வந்துட்டார். சூப்பர் சிங்கர் டைட்டில் ஆண், பெண் இரண்டு தரப்பிற்கும் சேர்த்து ஒருத்தருக்குதான் தரப்போறாங்கன்னு நினைக்கிறேன். சிங்கர்னு ஆங்கிலத்துல டைட்டில் கொடுத்ததினால இங்கே ஆண், பெண்ணை பிரிக்க முடியலையோ என்னவோ.. என்னைக் கேட்டா ஆண்ல ஒருவர், பெண்ல ஒருவர் செலக்ட் பண்ணனும். ஆண், பெண் இரண்டு குரல்களையும் ஒண்ணுப்படுத்தி போட்டி வைக்கிறது
கொஞ்சம் வித்தியாசமா படுது.

வர்ற 3 ஆம் தேதி பிரமாண்டமான பைனல்ஸ்ன்னு ரொம்ப பிரமாண்டமா விளம்பரம் எல்லாம் செய்யுறாங்க. மாலை 6.30 மணியில இருந்தே விஜய் டிவியில லைவ் வரப்போகுதுன்னு நினைக்குறேன். பார்க்கலாம் யார் அந்த சூப்பர் சிங்கர்னு..

பி.கு: அஜீஸ்க்கு ஓட்டுப் போடும் ஒவ்வொருவருக்கும் ஒரு குச்சி முட்டாயும், குருவி ரொட்டியும் தரப்படும். :-)

இது ஆர் பாபு அண்ணா என்பவர்.எங்கேயோ கேட்ட குரல்.
இருக்கட்டும் .இருக்கட்டும்.
குச்சி முட்டாயும் குருவி ரொட்டியும் அறுசுவையில் தேடுக மூலம் தேடியதில் கிடைக்கவில்லை.தயவு செய்து செய்முறையை தரவும்.

என்னமோ இதுல பாத்துட்டு இப்பதான் நான் ஆரம்பத்துல இருந்து பாக்கத்தொடங்கி இருக்கிறன்.
நல்லாய்த்தான் போயி கிட்டு இருக்கு.

சுரேஜினி

மேலும் சில பதிவுகள்