ஸ்பாஞ்ச்பேபி பொம்மை

தேதி: June 4, 2009

5
Average: 5 (7 votes)

 

ஸ்பாஞ்ச் சீட் - 5
பொம்மை - ஒன்று
சம்கி - ஒரு பாக்கெட்
குண்டூசி
கத்திரிக்கோல்
லேஸ்
கிருஸ்டல் மணி - 2

 

ஸ்பாஞ்ச் பேபி பொம்மை செய்வதற்கு குறிப்பிட்டுள்ள பொருட்களை தயாராக எடுத்து கொள்ளவும்.
முதலில் ஸ்பாஞ்ச் சீட் ஒன்றை எடுத்து சமமாக மடிக்கவும். அதன் நடுவில் கத்திரிக்கோலை வைத்து இரண்டாக நறுக்கி தனித்தனியாக எடுத்துக் கொள்ளவும்.
இரண்டாக நறுக்கிய ஸ்பாஞ்சில் ஒரு சீட்டை எடுத்து நான்காக மடக்கிக்கொள்ளவும். பிறகு மடக்கிய சீட்டை ஏதாவது ஒரு முனை கூர்மையாக வரும் படி மடக்கிக் கொள்ளவும் (படத்தில் காண்பித்திருப்பது போல்). மீதியிருக்கும் தேவையற்றப் பகுதியை கத்திரிக்கோலால் நறுக்கி எடுத்து விடவும்.
நறுக்கிய ஸ்பாஞ்ச் சீட்டை பிரித்துப்பார்க்கும் பொழுது சதுரவடிவில் இருக்கும். அதில் ஏதாவது ஒரு முனையை அதன் எதிர் முனையுடன் இணைத்து மடித்துக் கொள்ளவும். இப்பொழுது அதை பார்க்க முக்கோண வடிவில் இருக்கும். இதுப் போல் பத்து ஸ்பாஞ்ச் சீட்டை மடித்து எடுத்துக் கொள்ளவும்.
நறுக்கிய தேவையற்ற ஸ்பாஞ்ச் சீட் துண்டுகளில் ஒன்று எடுத்து பொம்மையின் கழுத்து பகுதியில் சட்டை போல வைத்து குண்டூசியால் குத்தவும்
அதே போல் ஸ்பாஞ்ச் சீட் துண்டை பொம்மையின் இடுப்பின் சுற்றளவிற்கு தகுந்தாற்ப்போல் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அதை பொம்மையின் இடுப்பில் சுற்றி பின்புறமாக வைத்து குண்டூசியால் பின் செய்யவும்.
அதன் பின்னர் எல்லாக் குண்டூசியிலும் சம்கியை கோர்த்து வைத்துக் கொள்ளவும். இரண்டாக மடித்து வைத்திருக்கும் முக்கோண வடிவ ஸ்பாஞ்ச் சீட்டின் மேல் முனையை பொம்மையின் இடுப்பில் சுற்றிய ஸ்பாஞ்ச் சீட்டின் மீது வைத்து, சம்கி கோர்த்து வைத்திருக்கும் குண்டூசியால் பின் செய்யவும்.
இதே போல் பொம்மையின் இடுப்பை சுற்றிலும் மற்ற 9 சீட்டையும் சம்கி கோர்த்த குண்டூசியால் குத்தவும்.
10 ஸ்பாஞ்ச் சீட்டையும் பொம்மையுடன் இணைத்த பின்னர் ஒவ்வொரு சீட்டிலும் இணைக்காத மற்ற இரண்டு முனைகளையும் இடது கையால் இணைத்து பிடித்துக் கொள்ளவும். இப்போது 4 மடிப்புகள் இருக்கும் அதில் நடுவில் இருக்கும் 2, 3 வது (இரண்டு மடிப்புகளையும்) இணைத்து மேலே குத்திய குண்டூசியிலிருந்து அரை இஞ்ச் இறக்கி குத்தவும். அடுத்து முதல் ஸ்பாஞ்சின் 4 வது மடிப்பு மற்றும் இரண்டாவது ஸ்பாஞ்சின் முதல் மடிப்பையும் இணைத்து குண்டூசி குத்தவும். அதன் பின்னர் இரண்டாவது ஸ்பாஞ்சின் 2, 3 வது மடிப்பை இணைத்து குத்தவும். இதைப் போல் தொடர்ந்து ஆரம்பம் செய்த இடம் வரை சுற்றி மடிப்புகளை இணைத்து குத்திக் கொண்டே வரவும்.
அடுத்த சுற்று செய்யும்பொழுது ஒரு இன்ச் கீழே இறக்கி 1,2 வது மடிப்பை இணைத்து குண்டூசியை வைத்து குத்தவும். அதனை அடுத்து 3,4 வது மடிப்புகளை இணைத்து குண்டூசி குத்தவும். இதைப் போல் இந்த வரிசை முழுவதும் குத்தவும்.
அடுத்து மூன்றாவது சுற்று செய்யும்பொழுது ஒன்பதாவது வரியில் சொல்லியதுப் போலும், நான்காவது சுற்று பத்தாவது வரியில் சொல்லியது போல் செய்து கொள்ளவும். இப்போது பார்ப்பதற்கு டைமண்ட் வடிவில் இருக்கும். இதேப் போல் ஸ்பாஞ்ச் சீட்டின் அடிவரை சம்கி கோர்த்த குண்டூசியால் குத்தவும்.
பின்னர் பொம்மையின் இடுப்பு அளவிற்கு லேசை வைத்து குண்டூசியால் குத்தவும். லேஸ் பிரியாமல் இருக்க சுற்றிலும் 4 குண்டூசிகள் குத்தவும். அதே போல் தலையிலும் லேசை வைத்து சுற்றி குண்டூசியால் குத்தவும்.
பிறகு சம்கி கோர்த்து வைத்திருக்கும் குண்டூசியில் ஏதேனும் ஒரு கிருஸ்டல் மணியை கோர்த்து அதை பொம்மையின் காதில் குத்தவும். அதன் பின்னர் பொம்மையின் சட்டையில் கழுத்துப் பகுதி மற்றும் கை பகுதியில் சம்கியை வைத்து குண்டூசியால் குத்தி அலங்கரிக்கவும்.
பொம்மையை தலைக்கீழாக திருப்பி படத்தில் காண்பித்திருப்பது போல் ஊசி நூலால் ஒவ்வொரு ஸ்பாஞ்சாக கோர்த்து எல்லா ஸ்பாஞ்சையும் சேர்த்து இறுக்கமாக கட்டி முடிச்சு போடவும்.
அழகிய ஸ்பாஞ்சுபேபி பொம்மை தயார். இந்த பொம்மையை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. தனலெஷ்மி அவர்கள். இவர் தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

தனலெஷ்மி அக்கா,
மிகவும் அழகாக இருக்கிறது....நான் பல நாட்களாக தேடிக் கொண்டிருந்த செய்முறை இது.. சின்ன வயதில் என் பக்கத்து வீட்டில் இது போல் பார்த்திருக்கிறேன் அப்போதிருந்தே இதன் மேல் ஒரு ஆர்வம் ...அழகாக விளக்கியமைக்கு எனது நன்றிகள்..
"எல்லா புகழும் இறைவனுக்கே"
அன்புடன்,
♥ஷெய்ரா♥

"எல்லா புகழும் இறைவனுக்கே"
அன்புடன்,
♥ஷெய்ரா♥

உங்கள் பொம்மை நன்றாக இருக்கிறது.என் வாழ்த்துக்கள்

"நேசிப்பதெல்லாம் கிடைத்துவிட்டால்
கண்ணீர் துளிகளுக்கு மதிப்பில்லை...
கிடைப்பதையெல்லாம் நேசித்துவிட்டால்
கண்ணீர் துளிகளுக்கு வேலையே இல்லை...''

என்றும் நட்புடன்,
அகிலா ஸ்ரீதர்

அழகு. செய்முறை விளக்கிய‌ விதம் நன்று.

செய்து பார்த்தேன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது பாராட்டினார்கள் மிக்க நன்றி புதிய பதிவுகள் சேர்க்கலாமே