பட்டிமன்றம் - 1 (நிம்மதியா? நிதியா?)

தோழிகள் அனைவரும் சொன்னது போல் புதிய தலைப்போடு மீண்டும் நம்முடைய வழக்கமான பட்டிமன்றம் துவங்குகிறது. அண்ணா சொன்னது போல் மற்றவர் தந்த தலைப்பே தேர்வு செய்யப்படுகிறது.

தலைப்பு - "வாழ்க்கையில் எது முக்கியம்? நிம்மதியா? நிதியா?"

நமது தோழி "ஆயிஸ்ரீ" அவர்கள் தந்து பலரது பாராட்டை பெற்ற தலைப்புகளில் ஒன்று. இன்று வாழ்வில் மனிதன் பலவற்றை தேடி அலைகிறான். அதில் முக்கியமாக நாம் தேடுவது பணமும், நிம்மதியும் தான். இதில் எது "மிக" முக்கியம்? பணமா அல்லது நிம்மதியா? உங்கள் கருத்துகளோடு வாதாட அழைக்கிறேன். வரும் திங்கள் (நாளை) முதல் துவங்கி அடுத்த திங்கள் வரை வாதாடலாம்.

முதலில் என்னை நடுவரா வர சொல்லி அழைப்பு தந்த தோழிகளும் மூத்த உறுப்பினர்களுமான அதிரா மற்றும் ஆசியா'கு எனது நன்றிகள். பல நாட்களுக்கு பின் மீண்டும் ஆரம்பமாகும் பட்டிமன்றம்.... அனைவரது ஆதரவும் இருக்கும் என்று நம்புகிறேன். தோழிகள் அனைவரும் பொதுவாக பேசிவிடாமல் எதாவது ஒரு பக்கம் மட்டுமே வாதாட வேண்டும் என்று அன்போடு கேட்டுகொள்கிறேன். நல்ல கருத்தாலும், நகைச்சுவையான பேச்சாலும் இந்த பட்டிமன்றத்தை சுவாரஸ்யமானதாக ஆக்குவீர்கள் என்று நம்புகிறேன். அனைவரும் பங்கு கொண்டு அறுசுவையை அதிர வைங்கன்னு அன்போடு அழைக்கிறேன். வருக வருக... வாதிட வருக.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆஹா வனிதா, சூப்பர் டாபிக்.

பழையபடி நீங்க முழுவீச்சுல அறுசுவையில துள்ளீ விளையாடுவதைப் பார்க்க மகிழ்ச்சியா இருக்கு.

வழக்கமான‌ நடுவரா வந்து, இதுவும் வேணும், அதுவும் வேணும்னு மழுப்பல் தீர்ப்பு சொல்லிடாதீங்கோ!

இதோ என் சில கருத்துக்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

பல வருடங்களுக்கு முன் ரீடர்ஸ் டைஜஸ்ட்டில் படித்த என் நெஞ்சை விட்டு நீங்கா வாக்கு இது: "Money is not the key to happiness; but with money you can make the key to happiness."

அதாவது நிம்மதியை அடைய பணமும் வேண்டும் என்பதே அதன் விளக்கம். இது உண்மையே என்பதற்கு உழைக்கும் நாம் எல்லாருமே சாட்சி.

இப்போதைக்கு இது போதும்; பின்னர் தொடர்கிறேன்.

நடுவர் வனிதாவிற்கும், என்னைப்போல் பங்கு கொள்ளும் தோழியர் அனைவர்க்கும் வணக்கம். வாழ்க்கையில் மிக மிக முக்கியம் நிம்மதிதான் என்ற அணியில் வாதாட வந்துள்ளேன்.

அப்போதய காலத்திலும், இன்றைய காலகட்டத்திலும் நிதியை மட்டும் வைத்துக் கொண்டு நிம்மதியுடன் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த நம் முன்னோர்களைப் பற்றி நம் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. நிம்மதியான வாழ்வு என்பது அன்றாடம் கூலி வேலை செய்து கூழ் குடித்து வாழும் ஏழைக்கு கிடைக்கும் அளவுக்கு கோடி கோடியாக கொட்டி கிடக்கும் கோடிஸ்வரர்களின் வீட்டில் இல்லை. தேவைக்கு அதிகமாக பணம் வந்து சேரும் போதே வாழ்வில் நிம்மதி மெல்ல மெல்ல விலகி கொள்கிறது. இதில் நிதிக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்க முடியும்? எதிரணியினர் சொல்வது போல் பணம்தான் சந்தோசத்தை கொடுக்கும் என்றால் நாட்டில் உள்ள அனைவருமே சோகத்தில்தான் இருக்க வேண்டும். சித்தாள், கொத்தனார் வேலை நடக்கும் இடங்களில் பார்த்திருக்கிறேன், மனைவி, கணவன், மகன் என எல்லோரும் கட்டிட வேலை பார்ப்பார்கள். வேலை முடிந்தது ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டே சாப்பிடுவார்கள். சந்தோஷமாக சிரித்து பேசிக் கொண்டு இருப்பார்கள். பார்க்கவே நன்றாக இருக்கும். வசதியான வாழ்க்கையை மட்டுமே தேடிக் கொண்டு இருப்போர்க்கு இத்தகைய மகிழ்ச்சி கிட்டுமா? பஞ்சு மெத்தையில் உறங்குவது மட்டும்தான் சுகம் என நினைக்கிறோம். மண்தரையில் படுத்து உறங்குவதிலும் சுகம் இருக்கத்தான் செய்கிறது. மகிழ்ச்சி என்பது மனதை பொறுத்துதான் இருக்கிறது. நிச்சியமாக பணத்தை பொறுத்து அல்ல.

அன்றாட வாழ்க்கைக்கு பணம் தேவைதான் அதற்காக அப்பணம்தான் வாழ்க்கையில் முக்கியம் என்பது ஏற்க முடியாத ஒன்று. பொறுப்பான பெற்றோர், பண்பான கணவன், குணமுள்ள மனையாள், நன்மக்கள், அன்பான உடன்பிறப்புக்கள் போன்றவற்றை பெற்று வாழ்வதே நிம்மதியான வாழ்வு. இவை அனைத்தையும் பெற்று இருந்தாலும் வாழ்க்கையில் பணம்.. பணம்.. என்று சுற்றத்தை மறந்து பணத்தின் பின்னால் அலைந்தால் ஒருபோது வாழ்வில் நிம்மதி கிட்டாது என்று கூறி என்னுடைய முதல் சுற்று வாதத்தினை முடிக்கிறேன். தலைவர் வனிதா அவர்களே நிம்மதியான வாழ்வைப் பற்றி உங்களுக்கே தெரியும். எனவே தீர்ப்பு எங்கள் பக்கம்தான் என்று நம்புகிறேன்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நாளை தான் துவங்கும்'னு நினைச்சேன்... இன்னைக்கே சண்டை (வாதம்) ஆரம்பிச்சிடுச்சா?? பலே... கலைகட்டட்டும். :) ஆரம்பமே நல்ல கருத்துகளோடு துவக்கி வெச்சுருக்கீங்க... மிக்க நன்றி.

திருமதி ஹுசைன்...

//Money is not the key to happiness; but with money you can make the key to happiness.//

என்று சொல்லி பணம் இருந்தால் நிம்மதி வரும், பணமே முக்கியம் என்று சொல்லிட்டீங்க (சரிதானே??? ஏன்னா நீங்க நேரா சொல்லாம மறமுகமா சொல்லிட்டு போயிட்டீங்களே....). கண்டிப்பா இந்த முறை தீர்ப்பு எதாவது ஒரு அணியின் பக்கம் தான்.... கவலையை விட்டு வாதாடுங்க, எந்த அணி ஜெயிக்குதுன்னு பார்ப்போம்.

தனிஷா....

அற்புதமா சொல்லிட்டீங்க திருமதி ஹுசைன்'கு பதில்.... :) பணம் மட்டும் இருந்தா நிம்மதி வந்துடாதுன்னு. ம்ம்.. நம்ம ஹுசைன் என்ன பதில் சொல்ல போறாங்களோ...

மற்றவர்களும் வாங்க.... இப்பவே இரண்டு அணி உருவாகிவிட்டது... யார் யார் வந்து யார் யாருக்கு கை குடுத்து உதவ போறீங்கன்னு பார்க்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருமையான தலைப்பு வனிதா அக்கா. மன்னிக்கவும். இது பட்டிமன்றம் இல்லையா? அதனால.......

வாழ்க்கை வாழ நிதியை விட நிம்மதியே தேவை, முக்கியம், அவசியம், இன்றியமையாதது என்று சொல்லி நிம்மதி அணிக்காக வாதாட வந்திருக்கிறேன் நடுவர் அவர்களே!!!!!!

நாளை முதல் தான் பட்டிமன்றம் தொடங்கும் என்பதால் நாளை வந்து வாதாடுகிறேன்.

சுபா

தனிஷா'கு கை குடுக்க சுபா'வும் வந்துட்டாங்க. வருக வருக சுபா. :) உங்கள் வாதத்தை படிக்கவும், யோசிக்கவும் காத்திருக்கோம். மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தனிஷா, காலையிலருந்து உங்க நெனப்பாவே இருந்துது, ஆளையே காணோமே, முதுகு வலி சரியாச்சா தெரியலியேன்னு. நினைத்தேன், வந்தாய்!! அதுவும் எதிரணியில்!! நலம்தானே?

பணம் தேவை என்பது எல்லோரும் (எதிரணியினர் உட்பட) ஏற்றுக்கொள்ளும் உண்மை. பணம் எவ்வளவு தேவை என்பது அவரவர் மனதைப் பொறுத்தது. சித்தாளும், கொத்தனாரும் சந்தோஷமா இருக்காங்கன்னா, அன்றைய உழைப்பின் கூலி கிடைக்கும் என்பதை அறிந்ததால். அவர்களுக்கு அந்தப் பணம் போதும் அன்றைய தேவைகளுக்கு. அவர்களின் நிம்மதிக்கு பணம் அவசியமில்லை என்றால் சித்தாளாகவும், கொத்தனாராகவும் வேலை பார்க்கவே தேவையில்லையே!!

நிம்மதிக்குப் பணம் தேவையில்லை என்றால் நாம் ஏன் உழைக்கிறோம், ச‌ம்பாதிக்கிறோம்? பழைய காலம் போல் உற்றார், உறவினர்களோடு, சுற்றம் சூழ காட்டில் காய்,கனிகளை உண்டு வாழ்ந்து வந்தால் போதுமே!!

கஷ்டத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவ வேண்டுமென்றாலும் கூட பரிவான வார்த்தைகள் மட்டும் போதாது. அங்கு பணமும் வேண்டும்!!

வாழ்க்கையில் எது முக்கியம் நிம்மதியா?நிதியா?என்றால் நிம்மதி தான்.நிம்மதி இருந்தால் எல்லாம் தானாக வந்து சேரும் .பணம் தான் முக்கியம் என்றால் எவ்வளவு இழக்க நேரிடும் என்று அனுபவசாலிகள் அறிவார்கள்.ஏழையின் சிரிப்பில் நிம்மதி இருக்கும்,பணக்காரர் சிரிப்பில் போலித்தனம் இருக்கும்.இன்னும் வருவேன் சின்ன சின்ன கருத்துக்களோடு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

//பரிவான வார்த்தைகள் மட்டும் போதாது. அங்கு பணமும் வேண்டும்!!// - மிசஸ் ஹுசைன்... நல்ல வரிகள், உண்மையான வரிகள். பதில் சொல்லுங்கோ "நிம்மதி" அணியினரே...

வாங்க வாங்க ஆசியா வாங்க. 2 வரியில் சொன்னாலும் நச்சுன்னு சொல்லிட்டு போயிருக்கீங்க. உங்க வருகை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். :)

//ஏழையின் சிரிப்பில் நிம்மதி இருக்கும்,பணக்காரர் சிரிப்பில் போலித்தனம் இருக்கும்// - இதுக்கு "நிதி" அணி என்ன சொல்ல போறாங்க?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா நன்றாக இருக்கிறிர்களா?புது பட்டிமன்றம் தொடங்கியாச்சு.நடுவருக்கு என் வாழ்த்துக்கள்.
பணம் ஒன்றே வாழ்க்கை என்றிருந்தால் நிம்மதியான வாழ்க்கை பறிப்போகும்.அதே பணத்தை தானும் கொண்டு இல்லாதவர்களுக்கு உதவும்போது நிம்மதி தானாகவே வருவது என்பது என்னை பொறுத்தவரை உண்மையான ஒன்று.
அதற்காக பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை.ஆனால் அவரவர் எண்ணம் பொறுத்து அது அழகாக காட்சி அளிக்கும்.எனவே நான் சொன்னது நடுவருக்கு புரிந்திருக்கும்.அடுத்து நாளை வருகின்றேன் புது கருத்துக்களோடு.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

மேலும் சில பதிவுகள்