க்ரோசான் & சாக்லேட் ப்ரெட்

தேதி: July 19, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

மைதா -‍ கால் கிலோ + 100 கிராம்
ப‌ட்ட‌ர் - 125 கிராம் ‍
பேக்கிங் ஈஸ்ட் -‍ 10 கிராம்
சீனி -‍ 3 மேசைக்கரண்டி (சுமார் 35 கிராம்)
தண்ணீர் - 120 மில்லி
உப்பு ‍- ஒரு பின்ச்
சாக்லேட் பார் ‍- ஒன்று
முட்டை -‍ ஒன்று
பால் - ஒரு தேக்கரண்டி


 

முதலில் பேக்கிங் ஈஸ்ட்டை 2 தேக்கரண்டி வெதுவெதுப்பான நீரில் (கட்டியின்றி)நன்கு கரைத்து மைதாவில் ஊற்றி, சீனி, உப்பு, தண்ணீர் அனைத்தையும் கால் கிலோ மைதாவுடன் ஒன்றாக கலந்து பிசைந்து வைக்க‌வும்.
சுமார் கால் மணி நேரம் க‌ழித்து ந‌ன்கு குழைவான‌ ப‌த‌ம் வ‌ரும்வ‌ரை (சுமார் 10 நிமிட‌ங்க‌ள் தொடர்ந்து) ந‌ன்கு பிசைந்து, உருண்டையாக்கி ஒரு பாத்திர‌த்தில் வைத்து ஈர‌த்துணியால் மூடி 2 ம‌ணி நேர‌ம் வைக்க‌‌வும்.
இப்போது ஒரு ப‌ட்ட‌ர் பேப்ப‌ரில் ப‌ட்ட‌ரை வைத்து மூடி, சப்பாத்திக் கட்டையால் சதுர வடிவில் நசுக்கி, அப்படியே ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.
2 மணி நேரத்திற்கு பிறகு குழைத்த‌ மாவு நன்கு உப்பியிருக்கும். பிறகு ஒரு மரவை மீது சிறிது மாவை தூவி உருட்டி வைத்த‌ மாவை சதுரமாக (சப்பாத்தி கன‌த்திற்கு) தேய்த்துக்கொள்ளவும்.
அதன் மேல் ஃப்ரிஜ்ஜில் வைத்துள்ள (சதுரமாக நசுக்கிய) பட்டரை குறுக்காக வைத்து, பட்டர் வெளியில் தெரியாதபடி மாவால் மூடி, நான்கு மூலைகளையும் சற்று அழுத்தி சதுரமாக செட் செய்துக்கொள்ளவும்.
மீண்டும் மரவை மீது சிறிது மாவை தூவி, மடித்த பாகத்தை கவிழ்த்து வைத்து, (மெதுவாக அழுத்தி) நீளமாக தேய்க்கவும்.
இப்போது செவ்வக வடிவில் உள்ள மாவின் இரண்டு ஓரங்களையும் சம அளவில் (இரண்டு புறமும் 1/4 பகுதி அளவுக்கு எடுத்து) மடித்து, மடக்கிய அந்த இரண்டு பாகங்களையும் ஒன்றோடொன்று படியும்படி மீண்டும் மடிக்கவும். இப்போது புத்தக வடிவில் இருக்கும்.
மீண்டும் மரவையில் சிறிது மாவு தூவி செவ்வக வடிவில் தேய்க்கவும். பிறகு அதை மூன்றாக மடிக்கவும். (இத்தோடு ஒரு சுற்று முடிந்தது. முதல் சுற்று முடிந்ததை குறிக்க, மாவின் ஓரத்தில் விரலால் அழுத்தி ஒரு பள்ளம் வைக்கவும்.)
இப்போது முதல் சுற்று முடிந்தவுடன், மடித்து வைத்துள்ள மாவை பட்டர் பேப்பரால் காற்று படாமல் மூடி 1/2 மணி நேரம் ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.
பிறகு இரண்டாவது சுற்று ஆரம்பிக்கவேண்டும். அதாவது 1/2 மணி நேரத்திற்கு பிறகு சிறிது மாவை மரவை மீது தூவி, செவ்வக வடிவில் தேய்த்து, ஸ்டெப் 6, 7, 8, 9 ல் கூறியுள்ளபடி செய்து, மீண்டும் ஃபிரிஜ்ஜில் வைக்கவும். (இப்போது இரண்டாவது சுற்று முடிந்ததை குறிக்க, மாவின் ஓரத்தில் விரலால் அழுத்தி இரண்டு பள்ளங்கள் வைக்கவும்.) இதேபோல் 4 சுற்றுக்களையும் முடித்து, கடைசியாக 1/2 மணி நேரம் ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.
க்ரோசானுக்கு தேவையான பஃப் பேஸ்ட்ரியை இவ்வாறு த‌யார் செய்த பிற‌கு, சிறிது மாவு தூவி (ச‌ப்பாத்தி க‌ன‌த்தில்)ச‌துர‌மாக‌ தேய்த்து 5 நிமிடம் வைத்து, நீள் முக்கோண‌ வ‌டிவில் க‌த்தியால் துண்டுக‌ள் வெட்ட‌வும்.
இப்போது ஒரு முக்கோண துண்டை எடுத்து, அந்த முக்கோணத் துண்டின் அடிப்பாகத்தின் நடுவில் கத்தியினால் ஒரு இன்ச் அளவு வெட்டி, வெட்டிய‌ இட‌த்திற்கு இர‌ண்டு ப‌க்க‌மும் உள்ள‌ ப‌குதியைப் பிடித்து கூர்முனை ப‌க்க‌மாக‌ மேல் நோக்கி சுருட்டி, பிற‌கு இரண்டு ஓரங்களையும் வளைத்து விட‌வும். இப்படியே எல்லா க்ரோசான்களையும் தயார் செய்து, ஓவன் ட்ரேயில் அடுக்கி 2 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
சாக்லேட் ப்ரெட் செய்வதற்கு இந்த பேஸ்ட்ரியை 3 x 9 அளவுள்ள செவ்வக துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
சாக்லேட் பாரை, சுமார் 1/2 x 2¾ இன்ச் அளவில் (ஒரு ப்ரெட்டிற்கு 2 துண்டுகள் வீதம்) உடைத்து, செய்து வைத்துள்ள பேஸ்ட்ரி துண்டின் ஓரத்திலிருந்து 2 இன்ச் த‌ள்ளி முதலில் ஒரு துண்டை வைத்து, ஒரு மடிப்பு மட்டும் மடித்து, ம‌டித்த‌ பாக‌த்தின் மேல் இன்னொரு சாக்லேட் துண்டையும் வைத்து சுருட்டி, ட்ரேயில் இடைவெளி விட்டு அடுக்கி 2 மணி நேரம் வைக்க‌வும்.
பிறகு முட்டையில் ஒரு தேக்கரண்டி பாலை ஊற்றி கலக்கி, த‌யார் செய்து வைத்துள்ள க்ரோசான்கள் மற்றும் சாக்லேட் ப்ரெட் மீது பிரஷ்ஷால் தடவி, முற்சூடு செய்த அவனில் (350°F ல்)15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.


இவை ஐரோப்பிய‌ ம‌க்க‌ளின் டிஃப‌ன் வகைக‌ளில் முக்கிய‌மான‌வை. ப்ளேக் டீ அல்லது ப்ளேக் காஃபியுடன் சாப்பிட வித்தியாசமான சுவையில் அருமையாக இருக்கும். மிகவும் மிருதுவாக இருப்பதால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் பட்ட‌ர் ச‌ற்று அதிக‌ம் க‌ல‌ப்ப‌தால், ட‌ய‌ட்டில் இருப்ப‌வ‌ர்க‌ள் த‌விர்த்துக்கொள்ள‌லாம். சாக்லேட் ப்ரெட் ஃபிரெஞ்ச் மொழியில் 'பேண் ஷொகோலா'என்று சொல்ல‌ப்ப‌டும்.

ஒவ்வொரு முறை மாவை தேய்க்கும் போதும் க‌ண்டிப்பாக‌ கீழே மாவு தூவிக்கொள்ளவேண்டும். இதில் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ நேர‌ அள‌வுக‌ளை ச‌ரியாக‌ பின்ப‌ற்ற‌வும். ஒரு முறை செய்து சற்று ஆற வைத்து காற்றுப்புகாத பாட்டில்களில் வைத்துக்கொண்டால், 4,5 நாட்க‌ளுக்கு ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம். ஆறிய பிறகு சாப்பிடுவதாக இருந்தால் மைக்ரோ ஓவ‌னில் சூடுப்ப‌டுத்தி சாப்பிட‌வும். செய்வதற்குரிய இடைவெளி நேரம் அதிகமாக இருப்பதால், ஒவ்வொரு முறை விடப்படும் இடைவெளியிலும் மற்ற வேலைகளை செய்துக்கொண்டிருந்தால், அதிகமான நேரம் மெனக்கெடுவது போன்ற ஒரு சிரமம் தெரியாது :)

மேலும் சில குறிப்புகள்


Comments

அஸ்மா நலமா
வீட்டில் அனைவரும் நலமா? இதை படிக்கையில் நல்ல ருசியாக இருக்கும் போல் தெரியுது...ப்லீஸ் யாரும் சமைக்கலாமில் கொடுங்களேன் எப்படியாவது செய்து பார்த்து விடுவேன்..பாதி புரியுது கீழ வர வர மறக்கும்போல இருக்கு.

அஸ்மா எப்படியிருக்கிங்க?இந்த க்ரோசான் செய்முறை தெரியாம இருந்தது.இப்போ தெரிந்து கொண்டேன்.என்ன சுவை என்ன சுவை இதை சாப்பிட்டு பார்த்தால் தான் தெரியும்.நன்றி அஸ்மா!!

அன்பு மேனகா! நான் நல்லா இருக்கேன்பா! நீங்க நலமா? இங்கு கடைகளில் வாங்கும்போதெல்லாம் எப்படியும் அதை நாமே செய்து பார்க்கவேண்டும் என்று ஆவலாக இருக்கும். முயற்சிக்கு வெற்றியும் கிடைத்தது, அதான் உங்கள் அனைவரோடும் பகிர்ந்துக்கொண்டேன் :) பேண் ஷொகோலாவுக்கும் அதே மாவுதான் என்பதால் அதையும் சேர்த்தே இதில் சொல்லியிருக்கிறேன். உங்கள் கருத்திற்கு நன்றிபா!

டியர் ருபீனா! நான் நலம். நீங்க, ரீமா அனைவரும் நலமா? குட்டிப் பாப்பாவா, பையனா? :) நல்லவிதமாக இருக்கிறதா? உங்களுக்காக அவ்வப்போது பிரார்த்திக்கிறேன். ஆமா ரூபி, நல்ல டேஸ்ட்டாக இருக்கும். அதன் வாசனையும் மிருதுவான தன்மையும் ஆஹா சூப்பர்! ஆனா பட்டருக்கு பயந்து, நான் அவ்வளவா சாப்பிடமாட்டேன் :) மகனுக்கு ரொம்ப இஷ்டம். யாரும் சமைக்கலாமில் கொடுப்பதற்காக ஃபோட்டோஸ் எல்லாம் எடுத்தேன். அதை அனுப்புவதற்காக செக் பண்ணிய‌போதுதான் பார்க்கிறேன் 2, 3 ஸ்டெப்ஸ் குறைகிறது. எல்லாவற்றையும்தான் எடுத்தேன், எப்படி மிஸ் ஆனதுன்னே தெரியல! அதுதான் அடுத்த முறை செய்து மீதி ஃபோட்டோஸ் சேர்த்த பிறகு அனுப்பலாம் என்றிருக்கிறேன். பின்னூட்டத்திற்கு தேங்ஸ்மா!