வாழ்க்கை எனும் ஓடம்... மறக்கவொண்ணா பாடம்.. பகிர்ந்து கொள்ள வாருங்கள்..

எங்கள், எல்லோருடைய வாழ்விலும், நிட்சயம் மறக்கமுடியாத உண்மைச் சம்பவங்கள் நிறைய இருக்கும். அப்படியானவற்றையும், எமக்கு தெரிந்த (அடுத்தவர்களின்)மறக்கமுடியாத "உண்மை"ச் சம்பவங்களைப் பற்றியும் இங்கே பகிர்ந்துகொள்வோம். பழையவற்றை திருப்பிப் பார்க்கவும், மனதில் உள்ளவற்றை வெளியே பதிக்கவும் இவ் இழை பெரிதும் உதவும்.

எல்லோரும் வாங்கோ!!! உங்கள் வாழ்வில் நடந்த சந்தோஷமான, நகைச்சுவையான, துன்பமான, உண்மைச் சம்பவங்களை மட்டும் பகிர்ந்துகொள்ளுங்கள். நானும் பழையவற்றை நினைவுக்குக் கொண்டுவருகிறேன்.

"நடந்தவை யாவும் நடந்தவைதானே?".

உலக அழிவு:):)
நான் சின்னப்பிள்ளையாக இருந்தபோது. பக்கத்து வீடுகளிலும் என் வயதை ஒத்தவர்கள் இருந்தார்கள். நாங்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து விழையாடுவோம். பெரிய காணிகள் இருந்தது, பின்னேரங்களில் எல்லோரும் வெளியேதான் விழையாடுவோம். ஸ்கூல் இல்லாத நாட்களில், பின்னேரங்களில்தான் அடுத்த வீட்டுப் பிள்ளைகளோடு விழையாட அப்பா, அம்மா அனுமதிப்பார்கள். அதுவும் 3 மணிக்குப் போய் 6 மணிக்கு வந்துவிடவேண்டும் என்பதுதான் சட்டம். நானும் அதை மீறுவதில்லை.

ஒருநாள் சனிக்கிழமை, பக்கத்துவீட்டில் விழையாட வரும்படி காலையில் அழைத்தார்கள். அப்போ அம்மாவைக் கேட்டேன், அம்மா சொன்னா வெளியே வெயிலில் விழையாட வேண்டாம், வீட்டிலிருந்து விழையாடிவிட்டு, சொன்ன நேரத்துக்கு வந்துவிட வேண்டும் என்று. அப்படியே அவர்கள் வீட்டுக்குப் போனேன். அங்கு என் வயதை ஒத்த மூவரும், அவர்களுக்கு ஒரு அக்காவும், அண்ணாவும் இருந்தார்கள்.

அப்போ அந்த அக்கா வந்து எம்மோடு கதைத்துக்கொண்டிருந்தா. அப்போ சொன்னா "அதிரா உங்களுக்குத் தெரியுமா?, உலகம், 2000 ஆண்டோடு அழியப்போகிறதாம், அதுவும் தண்ணி வந்து எல்லோரையும் கொண்டுபோகப்போகிறதாம், பைபிளிலும் எழுதப்பட்டிருக்கு" எனச் சொன்னா.

எனக்கு சின்ன வயதிலிருந்தே சாவதென்றால் பயம். அதுவும் தண்ணியால் சாகப்போகிறோம் என்றதும். என் இதயத் துடிப்பே நின்றதுபோலாகிவிட்டது. நான் கேட்டேன் தண்ணியால் எப்படி என்று, அவ சொன்னா "கடல் அப்படியே மேலே எழுந்துவந்து, எம்மை மூடிவிடும், நாம் மூச்சுத்திணறி இறந்துவிடுவோம்" என்று. எனக்கு தண்ணியினுள் தலை வைப்பதென்றாலே பயம். இப்பகூட பிள்ளைகளுக்காக சுவிம்மிங் பூல் போவேன், தலையை கீழே வைக்காமலே குளிப்பேன்.

அந்தக் கதையைக் கேட்டதும், அதுக்குமேல் எனக்கு எதுவும் ஓடவில்லை, ஒரு நடைப்பிணம்போலவே வீட்டுக்கு வந்தேன். வாய் திறந்தால் அழுகை வந்துவிடும்போலிருந்தது. வந்து பேசாமல் இருந்தேன். நான் எப்பவும் வீட்டில் அமைதியாக இருக்கும் ரைப் இல்லை.

மத்தியானம் அம்மா சாப்பாடு போட்டு மேசையில் வைத்து, என்னையும் அக்காவையும் சாப்பிடச் சொல்லிக் கூப்பிட்டா. எனக்கு இப்பவும் கண்ணுக்குள் நிற்கிறது, சிக்கின் பிரட்டல், கத்தரிக்காய் வெள்ளைக்கறி, அவித்த முட்டை. நானும் அக்காவும் மேசையில் எதிரெதிரே இருக்கிறோம். அம்மா கிச்சினுக்குள் போய்விட்டா. எனக்கு மனம் முட்ட வேதனை என்பதால் என்னால் சாப்பிட முடியவில்லை. சாப்பாட்டில் கையை வைத்தபடியே இருந்தேன், எனக்கு அதுக்குமேல் பொறுக்கமுடியவில்லை. வாய் திறக்கவில்லை, ஆனால் கண்களால் கண்ணீர் பெருகத் தொடங்கிவிட்டது. அக்கா சாப்பிடத் தொடங்கிற்றுப் பார்த்தா, நான் அழுகிறேன்.

உடனே "அம்மா!! அம்மா!! இங்க வாங்கோ அதிராவைப் பாருங்கோ" எனக் கூப்பிட்டா. நான் பெரிதாக அழத் தொடங்கிவிட்டேன்.

அம்மா நினைத்தா, ஏதோ சாப்பாட்டில் பிரச்சனையாக்கும் என்று. அதாவது, அக்காவின் முட்டையைவிட, என் முட்டை கொஞ்சம் சின்னதென்றாலும் அழுவேன்:) அப்படியொரு ரைப் என்பதால்:), அதில்தான் ஏதோ சிக்கல் என நினைத்து, அம்மா வந்து கேட்டா. நான் நடந்த கதையைச் சொன்னேன். பெரிதாக அழுதேன். அம்மா நிறையக் கதைகள் சொல்லி சமாதானப் படுத்தினா. அவ பகிடிக்குச் சொன்னதை நீ நம்பிவிட்டாய், அப்படிக் கடல் வராது, கடல் சரியான தூரத்தில்தானே இருக்கு, என்றெல்லாம் சொல்லியபின்னரே நான் சமாதானமாகி சாப்பிட்டேன். அந்தச் சம்பவம் என் மனதைவிட்டு அகலவே இல்லை.

பெரியவர்களுக்கு விழையாட்டாக இருக்கும், ஆனால் குழந்தைகளுக்கு சில விஷயங்கள் சொல்லும்போது, நாம் யோசித்துத்தான் சொல்ல வேண்டும் என்பதையும் புரிந்துகொண்டேன்.

கண்ணதாசனைப்போலவே எனக்கு மிகவும் பிடித்த இன்னொருவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார்..

"வேப்பமர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதென்று
விழையாடப் போகும்போது சொல்லிவைப்பாங்க
உன் வீரத்தை முளையிலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக்கூட நம்பிவிடாதே - உந்தன்
வீட்டுக்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே...."

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹஹஹஹா..நீங்க சீரியசா சொல்லியிருக்கீங்க போலும் ஆனால் நான் சிரித்த சிரிபு இருக்கே அப்பப்பா..நீங்க முட்டி நின்று அழுதது போல நான் சிரித்தேன்

அதிரா உங்க சம்பவத்தை படித்ததும் ஒரே சிரிப்புதான், ரொம்ப க்யூட்! எனக்கும் இந்த மாதிரி உலகம் அழிய போகுது கதைகள் நிறைய கேட்டிருக்கிறேன். அழிந்தால் நான் மட்டுமா எல்லோரும் சேர்ந்துதானே அழிவோம் என்று என்னை நானே தேற்றிக்கொள்வேன்.

அதிரா! நலமா?? சிறுவயதில் எனக்கு இப்படி உலக அழிவு கதை கேட்டால் பயமாக இருக்கும். பஸ்ஸில் செல்லும் போது பஸ்ஸே கடல்கொண்டுவிட்டது போல வரும் :)
இந்த வரிகளை என் தந்தை சொல்ல கேட்டு இருக்கிறேன்...

குழந்தைகள் நலமா? மோப்பி( mopsy) நலமா? மீன்குட்டி எல்லாம் எப்படி இருக்கு....

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

தளிகா, மாலி, இலா!!!
எனது பீலிங்ஸ் எல்லாம்:) உங்களுக்குச் சிரிப்பாக இருக்கோ?:), எனக்கு இப்பவும் சாவதென்றால் பயம்தான். எனக்கு சில விசித்திரக் குணங்கள் இருக்கு. சிலவேளைகளில் நான் இறந்துவிட்டால், யார் யாரெல்லாம் எப்படி அழுவார்கள் என ஒருகணம் நினைப்பேன்... என் கண்ணால் நீர் ஓடும்... கஸ்டப்பட்டு இப்படி நினைக்கப்படாதென மனதை மாற்றுவேன்.

இப்படி நிறையக் கதைகள் சொன்னால் சிரிப்பீங்கள். பழைய ஞாபகங்கள் கனக்க இருக்கு அதுதான் ஒவ்வொன்றாகப் பகிர்ந்துகொள்ளலாமே என நினைக்கிறேன். ரசித்தமைக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் இருக்குமே மறக்கமுடியாதவை இருந்தால் எழுதுங்கோ...

இலா மொப்பி நலமே இருக்கிறார். அவர்தான் இப்போ செல்லப்பிள்ளை. என்னோடு சரியான செல்லம். என்னைக் கண்டாலே கடிக்கிறார்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

பொங்கல் நாள்
அன்று மறக்கமுடியாத பொங்கல் நாள். தைப்பொங்கல் வந்தால் ஊரில் பெரிய கொண்டாட்டமாக இருக்கும். காலையில் எழுந்து, வாசலில் பெரிய கோலம்போட்டு, அடுப்பு வைத்து பொங்கி, சூரியனுக்குப் படைப்பது, இலங்கையில் இந்துவாகப் பிறந்த எல்லோரும் செய்யும் ஒன்று. அன்று விடுமுறை நாளாகவும் இருக்கும்.

சின்ன வயதிலே படித்த பாட்டு ஒன்றும் நினைவுக்கு வருகிறது...
தைத்திருநாள் இல்லமெல்லாம்
தளிர்த்திடும் தைப்பொங்கல்
இத்தனைநாள் காத்திருந்தோம்
இனிய தமிழ்ப்பொங்கல்!!

கூவியழைத்திடும் சேவல்
குதித்தெழுவோம் குளிப்போம்
பூவெடுப்போம் புதிதணிவோம்
பொங்கலன்று நாங்கள்!1

கோலமிட்டு விளக்கேற்றிக்
கும்பிடுவாள் அம்மா
பாலெடுத்துப் பொங்கலுக்குப்
பானை வைப்பார் அப்பா!!

மிகுதி மறந்துவிட்டேன். இப்படியான பொங்கல் நாளிலே ஒருநாள் பொங்கி சாப்பிட்டுவிட்டு இருக்கும்போது, என் நண்பிகள் இருவர் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அப்போது எனக்கொரு ஒன்பது வயதிருக்கலாம். எனக்கு சைக்கிள் இருந்தது, ஆனால் எங்கள் வீடு பிரதான வீதியில்(மெயின்) அமைந்திருந்தமையால் ரோட்டில் தனியே போக விடுவதில்லை. அப்பாவோடு சேர்ந்து போய் வருவேன்.

என் நண்பிகளும் சைக்கிளில் வந்திருந்தார்கள். வந்தவர்கள் கொஞ்சநேரம் கதைத்துவிட்டுச் சொன்னார்கள், அதிரா இன்று ரோட் மிகவும் அமைதியாக இருக்கிறது, வாகனங்கள் பெரிதாக இல்லை, எனவே உங்கள் சைக்கிளை எடுத்துக்கொண்டுவாங்கோ ரோட்டில் ஓடிவிட்டு வருவோம் என்று. அப்பா, அம்மாவும் சொன்னார்கள் தூரம் போகாமல் கொஞ்சத்தூரம் போய் திரும்பி வாங்கோ என்று.

மூவருமாக ரோட்டுக்குப் போனோம். எங்கள் கேற்றிலிருந்து அடுத்தடுத்து 6,7 வீடுகள் உள்ளது, பின்னர் கொஞ்சம் இடைவெளி இருக்கும். வெறும் காணியாக, அந்த இடைவெளிவரை செல்வதும், பின்னர் எங்கள் கேற்றுக்குத் திரும்பி வருவதுமாக ஓடிக்கொண்டிருந்தோம். புது உடுப்பும் போட்டிருந்தோம்(நான் பிங்கலரில் சட்டை போட்டிருந்தேன்), சந்தோஷமாக இருந்தது.

அப்போ, அந்த வீடுகள் முடிந்த இடைவெளி வரை போய், சைக்கிளால் இறங்கி, ரோட்டைக் குறொஸ் பண்ணுவதற்காகத் திரும்பும்போது ஒரு "வெள்ளைக்கார்" எம்மைக் கடந்தது. காரின் ஓரத்தில் ஒரு "அண்ணா" இருப்பதுமட்டும் தெரிந்தது, நன்கு கவனிக்கவில்லை. கார் எம்மை கடந்து போகும்போது அந்த அண்ணா ஜன்னாலால் வெளியே கையை நீட்டி "டாடா" காட்டினார். போகிற கார்தானே, போனால்போகிறது என நினைத்து நாமும் கையைக் காட்டினோம்.

நாம் கையைக் காட்டியதும்தான் தெரிந்தது, கிட்டத்தட்ட பத்துப் பன்னிரண்டு கைகள், காரின் எல்லா ஜன்னல் வழியாகவும் வெளியே நீட்டிக் காட்டப்பட்டன. கார் போய்க்கொண்டே இருந்தமையால் எமக்கு எந்தப் பயமுமில்லை, நாமும் நல்ல வடிவாக் கையைக் காட்டிவிட்டு ரோட்டைக் குறொஸ் பண்ணினோம். காரைப் பார்க்கவில்லை.

சைக்கிளில் ஏற வெளிக்கிட்ட வேளை, அதேகார் பக்கத்திலே வந்துநின்றது, எவ்வளவு வேகமாகக் காரைத்திருப்பிக்கொண்டு வந்தார்களோ தெரியவில்லை. காரில் பெரிய சத்தத்தில் பாட்டோடு, 6,7 அண்ணன்மார், எல்லோரும் வெள்ளை சேட் போட்டு, ரை கட்டியிருந்தார்கள். எம்மைப் பார்த்து "ஹலோ, எந்த ஸ்கூலில் படிக்கிறீங்கள்" என்றார்கள்.. அவ்வளவுதான் பயத்தால் எம் நாடி நரம்பெல்லாம் அடங்கிவிட்டதுபோல் இருந்தது. வீடுகளும் இல்லாத வெளியில் தானே நிற்கிறோம். எப்படி சைக்கிளில் ஏறி மிதித்தோம் எனத் தெரியவில்லை, எமது கேற்றுக்கு(gate) வந்து மெதுவாக திரும்பிப் பார்த்தோம், மீண்டும் காரைத் திருப்பிக்கொண்டு போனார்கள், மீண்டும் கைகாட்டிக்கொண்டே போனார்கள், நாம் காட்டுவோமோ?, சைக்கிள் ஓடியது போதும் என்று நேரே வீட்டுக்குள் வந்துவிட்டோம். கொஞ்ச நேரம் எம்மால் பேச முடியவில்லை. அந்தளவுதூரம் பயந்துவிட்டோம்.

வீட்டில் சொல்லவும் பயமாக இருந்தது, " ஏன் கை காட்டினனீங்கள்" எனப் பேச்சு விழுமே என்று பயந்திருந்துவிட்டு, பின்னர் அம்மாவிடம் மெதுவாகச் சொன்னேன்(எனக்கு எதையும் அம்மாவிடம் சொன்னால்தான் மன ஆறுதல் கிடைக்கும்), அம்மா சொன்னா, உதுதான் தனியே ரோட்டுக்குப் போகவேண்டாம் எனச் சொல்வது, அது ஒருவேளை யாராவது மியூசிக் குரூப்பாக இருக்கலாம், அதனாலென்ன சும்மா பகிடிக்குத்தான் அப்படிச் செய்திருக்கிறார்கள் என்று. அதன் பின்பே என் மனம் தெளிவடைந்தது. அந்த நாளும் மறக்கமுடியாமல் மனதில் பதிந்துவிட்டது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நான் Primary School இல் படித்தபோது 3 or 4 ம் வகுப்பில். ஆண்களும் பெண்களும் சேர்ந்த ஸ்கூலில்தான் படித்தேன். என் வகுப்பில், அதிகம் எனக்கு ஆண் நண்பர்கள்தான் இருந்தார்கள். அதுக்கு காரணம், என் அப்பாவோடு ஒன்றாக ஒரே ஆபீஷில் வேலைசெய்தவர்களின் பிள்ளைகள் அவர்கள் என்பதால்.

நாங்கள் இடைவேளையில் ஒன்றாக சாப்பிடுவோம், விழையாடுவோம், அதிகமான நேரம் வட்டமாக இருந்து கதைத்துக்கொண்டிருப்போம். அப்போது எங்கள் வகுப்பு நண்பனுக்கு ஒரு தங்கை, அவவும் இடைவேளையில் வந்து எம்மோடு கதைத்துக்கொண்டிருப்பா.

ஒருநாள் எனக்கு பிறந்ததினம் வந்தது. அதுக்கு, ஊரிலிருந்து அம்மம்மா ஒரு அழகான, பச்சைநிறத்தில், பொம்மைச் சட்டைபோல ஒன்று தைத்து அனுப்பியிருந்தா.

அதைப்போட்டுக்கொண்டு, ஸ்கூலுக்குப்போய் சுவீட் கொடுத்தேன். எல்லோரும் அழகான சட்டை எனச் சொன்னார்கள். எனக்கும் நன்கு பிடித்திருந்தமையால், அடுத்தநாளும் அச்சட்டையையேதான் போடுவேன் என அடம்பிடித்தேன், அம்மா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அழவே, சரி இன்றுமட்டும் போடு, அடுத்தடுத்துப் போடக்கூடாது எனச் சொல்லி விட்டா.

நானும் அச்சட்டையோடு போயிருந்தேன், இடைவேளை வந்தது, வழமைபோல் கதைத்துக்கொண்டிருந்தோம். அப்போ அந்த தங்கை வந்தார், வந்து என்னைப் பார்த்ததும் கேட்டார் "என்ன நேற்றுப் போட்ட அதே சட்டையை, இன்றும் போட்டிருக்கிறீங்கள்?" என்று. எனக்கு சரியான வெட்கமாகப் போய்விட்டது, என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்த வேளை, என் மற்ற நண்பன் சடாரென அத் தங்கையைப் பார்த்துக் கேட்டார் "நீங்கள் ஏன், நேற்றுப் போட்ட தோட்டையே இன்றும் போட்டு வந்தீங்கள்" என்று. (பவுண் தோடென்பதால் தினமும் மாற்றுவதில்லைத்தானே). அத் தங்கையின் முகம் வாடிவிட்டது. எனக்கு நெஞ்சில் பால் வார்த்ததுபோல இருந்தது.

அதன் பின் எனக்கு ஒரு புத்தகம் கிடைத்தது. சிறிய குட்டிப் புத்தகம். அது லண்டன் பிபிசி யின் தமிழோசை நிறுவனம் வெளியிட்ட புத்தகம். அதில் நிறைய தத்துவ வரிகள் எழுதப்பட்டிருந்தது. அதில் ஒன்று "தக்க தருணத்தில் சொன்ன வார்த்தை, வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமன்" என்று. அதைப் பார்த்ததும் எனக்கு இச் சம்பவம்தான் நினைவுக்கு வந்தது. இப்பவும் அடிக்கடி இதை நான் நினைத்துக்கொள்வேன். இடம் பெயர்வுகளால், பதுகாப்பாக வைத்திருந்த அப்புத்தகம், கைநழுவிவிட்டது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

எப்படி இருக்கீங்க. பசங்க நலமா. உங்கள் பழைய நினைவுகளை படித்ததும் நானும் சிரித்துவிட்டேன்.இது போல நானும் சின்ன வயசில் பயந்து இருக்கிறேன். நீங்க சொன்ன 3 சம்பவமுமே உங்கள் மனதை ரெம்பவும் பாதித்து இருக்குன்னு சொல்லும் போதே தெரிகிறது.

முட்டை சிறியதாக இருந்தால் கூட அழுவீங்களா அதிரா உங்களை கர்ப்பனை செய்தேன் சிரிப்பு தாங்க முடியலை.

எனக்கும் நிறைய மறக்க முடியாத நினைவுகள் இருக்கு.அம்மா என்றால் எல்லாருக்கும் பிடிக்கும். எனக்கு என் அம்மா என்றால் உயிர் என் அம்மா ஹஜ்ஜுக்கு போறதாக இருந்தாங்க. அப்ப வீட்டுக்கு சொந்தகார ஆட்கள் எல்லாம் அம்மாவை பார்க்க வருவாங்க அப்ப ஒரு வெளி ஆள் அவங்க ஹஜ்ஜுக்கு போன சம்பவங்களை அம்மாவிடம் சொல்லிட்டு இருந்தாங்க அப்ப நானும் அம்மா கூட இருந்தேன் அந்த பொம்பளை சொன்னாங்க அங்க போனா அப்படி ஒரு கூட்டம் கூட்டத்தில் சிக்கியே நிறைய பேர் மொளத் ஆகிடுவாங்க(மரணத்திடுவாங்க. அப்படின்னு சொன்னங்க இன்னும் அங்க நிறைய மய்யித்தை(சடலம் கொண்டு போய்ட்டே தான் இருப்பாங்க அப்படின்னு சொல்லி ரெம்பவும் பயமுறுத்தி பேசிட்டு இருந்தாங்க. இது என் மனசுல ஆழமா பதுந்துவிட்டது நான் அம்மாவை போக வேண்டாமா ஹஜ்ஜுக்கு நீங்க எனக்கு வேண்டும்னு ஒரே அழுகை அம்மா அப்படிலாம் இல்லை அம்மாக்கு எதுவும் ஆகாது நான் போய்ட்டு வந்துடுவேன்னு எவ்வளவோ சொல்லியும் நான் கேட்க்கவில்லை தனியா உட்கார்ந்து நைட்ல அழுவேன். அம்மா போகும் நாளும் வந்தது நான் ட்ரைனில் அம்மா ஏறின பின் அம்மான்னு அழுது அம்மா நீங்க என்னைய விட்டுட்டு போடாதீங்கம்மான்னு அழுது பக்கத்தில் இருந்த என் மாமியிடம் என் அம்மா மொளத் ஆகாமல் வந்துடுவாங்களான்னு கேட்டு ஒரே அழுகை. அப்புறம் வீட்டில் இருந்தவங்க சமாதானம் செய்து கூட்டிட்டு வந்தாங்க. என் அம்மா 45 நாள் அங்கு இருந்து விட்டு வரும் வரை என் உயிர் என்னிடம் இல்லாதது போல் இருந்தேன். அம்மா வர்றாங்கன்னு ஏர்போர்ட் போய் அம்மாவை கட்டி வந்துட்டீங்கம்மானு அழுதது என்னால் மறக்கவே முடியாது இன்னும் என் அம்மா என்னிடம் சொல்லி காட்டுவாங்க.

அந்த பொம்பளை பொறாமையால் தான் இப்படிலாம் பயம் காட்டி இருக்காங்கன்னு அப்புறம் தான் தெரிந்தது அடுத்தவங்க நல்லா இருக்க பிடிக்காதவங்களாம். இப்பவும் சில சமயம் அந்த பொம்பளையை பார்த்தால் எனக்கு பேசவே பிடிக்காது நம்மை இப்படி பயமுறுத்திட்டாங்களே அப்படின்னு.

இன்னும் நிறைய சம்பவங்கள் இருக்கு பிறகு சொல்கிறேன்.

அன்புடன் கதீஜா.

அதிரா, இலா,

நலமா,

இலா, நலம்தானே! இந்தியா வந்து, எங்களை எல்லாம் சந்திக்காமலே சென்று விட்டீர்களே, தகவல் அனுப்பியிருந்தால் சந்தித்திருக்கலாம் அல்லவா?

அதிரா, நடந்த சம்பவங்களை அழகாக விவரிக்கிறீர்கள். உங்களோடு நாங்களும் காலக் கப்பலில் ஏறி, சிறுமியாக மாறி, உங்களோடு அங்கு இருந்தாற் போன்ற உணர்வு ஏற்பட்டது.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

கதீஜா,
நாம் நலமே, கேட்டமைக்கு நன்றி. நீங்கள் எல்லோரும் நலமோ?.

நீண்ட நாட்களின் பின் உங்களை அறுசுவையில், அங்காங்கு காண சந்தோஷமாக இருக்கு. எனக்கு மறக்கமுடியாத நினைவுகள் நிறைய இருக்கு. அதுபோல எல்லோருக்கும் ஒன்றாவது இருக்கும்தானே, அதை எழுதினால் எல்லோரும் பார்க்கலாம், என்றுதான் இதனை ஆரம்பித்தேன்.

உங்கள் கதையைக் கேட்க, எந்தக் குழந்தைக்கும் இப்படிக் கேள்விப்பட்டால் பயம் வரும்தானே. சொல்பவர்கள்தான் யோசித்துச் சொல்லவேண்டும். நானும் சின்னனாக இருந்தபோது, ஒரு பாடல் இருக்கு..... புனிதப் பயணம் கஜ்ஜி..... அது இறுதிக்கடமை ஆச்சே!!!... அப்படிவரும். வரிகள் மறந்துவிட்டேன். இலங்கை வானொலியில் அதிகம் போகும். அதைக் கேட்டு நினைப்பேன்... ஹஜ்ஜுக்கு போனால், திரும்பி வரமாட்டார்களாக்கும், அதுதான் இறுதிக் கடமை என்று பாட்டில் வருகிறதென்று(குறைநினைக்க வேண்டாம்).

உங்கள் நினைவுகளைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. இன்னும் நேரமுள்ளபோது, உங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கோ.

சீதாக்கா வந்துவிட்டீங்களோ?
நீண்ட நாளாக உங்களைக் காணவில்லையே, என்னவோ ஏதோ என மனதில் நினைத்துக்கொண்டிருந்தேன். கெட்டுகெதரில் போய் ஒருதடவை உங்கள் படத்தையும் பார்த்தேன். ஏதாவது உடல் நலமில்லையோ என்றுதான் எண்ணினேன். மீண்டும் உங்களைக் கண்டது மிகவும் சந்தோஷமாக இருக்கு. நான் எப்பவும் எதையும் உதட்டால் சொல்வதில்லை, உள்ளத்திலிருந்துதான் கதைப்பதுண்டு. இதுவும் அப்படித்தான்.

சமைத்து அசத்தலாம் தலைப்பை முதன்முதலில் போட்டுவிட்டு காத்திருந்தேன், யாரும் வரமாட்டார்களோ என எண்ணியவேளை, நீங்கள்தான் முதலாவதாக வந்து "அதிரா இதோ வந்திட்டிருக்கேன்" என ஆரம்பித்து வைத்தீங்கள். எந்த விஷயமாயினும் எனக்கு மனதிலே ஆழமாக பதிந்துவிடும். அப்படித்தான், இதிலும் சின்னவயதில் நடந்தவற்றை எழுதும்போது மனதுக்கு இதமாக இருக்கிறது. உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்