பட்டிமன்றம் - 5 , வெளி நாட்டு வாழ்க்கையால், மக்கள் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?

இப்பட்டிமன்றத்தில் வந்து கலந்துகொள்ளப்போகும், மற்றும் ஓரமாக நின்று பார்த்து ரசிக்கப்போகும் அன்புள்ளங்கள் அனைவருக்கும், நடுவர் என்ற முறையில் அதிராவின் அன்பு வணக்கங்கள்.

இம்முறைத்தலைப்பு "வெளி நாட்டு வாழ்க்கையால், மக்கள் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?" என்பதுதான். இத் தலைப்பைக் கொடுத்திருப்பவர் சகோதரி தாஜ்பாஃரூக். சகோதரிக்கு என் நன்றி.

அதாவது வெளிநாட்டுக்கு வருவதால் மக்கள் நிறைய விஷயங்களை இழக்கிறார்களா? அல்லது அதனால் நன்மைகளையே அடைகிறார்களா என்பதுதான் தலைப்பு.

அனைவரும் வாங்கோ, உங்கள் கருத்துக்களை அள்ளி வீசுங்கோ. உங்கள் கருத்துக்களுக்கு ஏற்ப, நான் உங்கள் கட்சிக்கு தாவிக்கொண்டிருப்பேன். எனவே, என்னைத் தாவ விடாமல் ஒருபக்க கட்சியில் நிறுத்தி, தீர்ப்பைச் சொல்ல வைக்கவேண்டியது, உங்கள் வாதங்களிலேயே தங்கியிருக்கிறது.

வழமைபோல் நாளை திங்கட்கிழமை ஆரம்பிப்போம்.

பி.கு: "தானறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்" என்றொரு பழமொழி எங்கள் நாட்டில் உண்டு. அதுபோல, அறியாத நடுவர் பதவியைப் பொறுப்பெடுத்திருக்கிறேன், உங்கள் அனைவரினதும் அன்பு வேண்டுகோளுக்கிணங்க.

வனிதா, கோ பைலட் என்று இருப்பதைப்போல, இதுக்கும் கோ நடுவர் என ஒருவரை வைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இனி யோசித்து என்ன செய்வது. சமைத்து அசத்தலாமில்கூட, ரேணுகா துணைக்கு வந்தார். இது எப்படித்தான் நடத்திமுடிக்கப்போறேனோ தெரியேல்லை தனியா. இருப்பினும் சந்தனா சொன்னதுபோல் பூஷைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, குத்துவிளக்கேற்றிவிட்டேன்...

அதிரா - பட்டிமன்றம் என்றால் தன் அணியை பற்றி மட்டுந்தான் பேசனுமா?? பொதுவான என் கருத்துக்களை சொன்னேன்... அப்புறம் இன்னம் ஒரு சந்தேகம் - நீங்கள் வெளிநாட்டு வாழ்க்கை என்று எதை சொல்லுகிறீர்கள்?? நான் இங்கு லாங் டேர்மாக நிரந்தரமாக செட்டில் ஆவதை வைத்து பேசிக்கொண்டிருக்கிறேன்.. எதிரணியினர் ஸ்கூல்க்கு போவதையும் இங்கு வருவதையும் கம்பேர் செய்து பேசுகிறார்கள்.. நீங்கள் அப்பொழுது திரும்பவும் வீடு திரும்ப தானே போறீங்கள்?? அப்படியில்லாமல் ஸ்கூலிலேயே இருப்பது போன்ற ஒரு சூழலை வைத்து தான் நான் பேசுகிறேன்... வந்து கற்று திரும்பி போவதென்றால் - பெற்றது தான் அதிகமாக இருக்கும்...

அதிரா - சும்மா இருந்தவளை உசுப்பி விட்டுட்டீங்க... :((( உட்கச்சி பூசலை த்தான் சொல்லுகிறேன் :((( டூ பேட்.. :(( பூஷுக்கு டூ விட்டதாக சொல்லிடுங்க..எனக்கு தன்னம்பிக்கையே போச்சு :))) எந்த அணிப்பக்கம்ன்னு தெரியாம பேசிட்டு இருக்கேன்னு சொன்னதால..

//தைரியம்,சுய சிந்தனை,பிரச்சனைகள் வந்தால் எதிர்க் கொள்ள கற்று கொள்வது,நம் திறைமைகளை வளர்த்து கொள்வது///

அதிரா ஒன்று மட்டும் புரியவேயில்லை.. எதிரணியினர் எல்லாம் வெளிநாட்டுக்கு போய்த்தான் தன்னம்பிக்கை பெற்றார்களாமே?? தைரியம், சுய சிந்தனை எல்லாமே அங்கிருந்து தான் வந்ததாமே?? அப்படியா?? அப்ப, என்ன சொல்ல வராங்க?? நம்ம நாட்டுல எல்லாம் தன்னம்பிக்கை இல்லாத கோழைகள் னா?? ஏங்க, தன்னம்பிக்கையை வாங்க வெளிநாட்டுக்கு தான் போகனுமா? புலியை முறத்தால் அடித்து விரட்டினாளாமே தமிழ் பெண்.. [ஒரு உதாரணத்துக்கு தான் இந்த saying... உடனே எதிரணியினர் எல்லாரும் கிளம்பிடுவாங்க, அதெப்படின்னு..] இந்த தன்னம்பிக்கை எப்படியம்மா வந்தது?? இட்ஸ் ஆல் இன் அஸ் .. யாருமறியாத நாட்டில் தனியாக காலை வைத்திருக்கிறோமே.. இங்கத்தைய விஷயங்கள் ஒன்றுமே தெரியாமல் (பஸ்க்கு எப்படி டிக்கட் எடுக்க வேண்டும் என்று கூட தெரியாமல்) வந்து வாழ்ந்து காட்டுகிறோமே - இதை எங்கம்மா கற்றீங்கள்?? உங்கள் நாட்டிலா இல்லை அமெரிக்க நாட்டிலா?? தன்னம்பிக்கையின் பல்வேறு பரிமாணங்களை கிராமத்தில் கூலி வேலை செய்து பிழைக்கும் பெண்ணிடமும் பார்க்கலாம்..

//அம்மாவை விட்டு பிரிந்து இருக்க முடியாதுனு பொண்ணு நினைக்க்கிறானு கல்யாணமே பண்ணாமல இருக்காங்க?//

ஹஸ்பெண்டும் வெளிநாடும் ஒன்னுங்களா?? ஒன்றில்லாமல் வாழ்வது கஷ்டம்.. ஆனால் இரண்டாவதில்லாததால் வாழ்வது கஷ்டமா?? அப்ப இந்தியால இருக்க எல்லோரும் கஷ்டப்பட்டுட்டு தான் இருக்காங்களா??

எதிரணியில ஒருத்தங்க திரும்பி வந்தவங்களை பெருமையா பத்தி சொல்லியிருக்காங்க.. ஏன் வந்தாங்க? பெற்றதே அதிகம்ன்னு அங்கேயே இருக்க வேண்டியது தானே?? இல்லையே...இங்கிருப்பதே அதிகம் என்று தானே வந்தாங்க? சோ, இங்கிருப்பது அதிகமென்றால் அங்கிருப்பது குறைவு தானே?? ஏற்க்கனவே சொன்னது தான் - பணம், கல்வி, டெக்னாலஜி நம்நாட்டை விட இங்கு அருமையோ அருமை தான்.. இப்படி ஏதாவது ஒரு நோக்கத்துக்காக தான வெளிநாடு வரோம், அதை பெறுகிறோம் என்பதை யாரும் மறுக்கவில்லையே.. ஆனால் அந்த ஒன்றுக்காகவே காலம் பூரா வெளிநாட்டுலையே இருக்க வேண்டும் என்பதில்லை.. அதைத்தான் சொல்ல வருகிறோம்...

அப்புறம், பாட்டி மேல இருந்து கீழ இறங்கி வந்தா தான் பாசங்களா? அப்ப இத்தனை நாளா தூக்கி வளர்த்தது பாசம் இல்லைங்களா? இங்க இருந்தா தினமும் அப்படி இறங்கி வர மாட்டாங்களா இருக்கும்.. ஆனா உங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா கண்டிப்பா இறங்கி வருவாங்க..

அப்புறம், அறுசுவைக்கு வந்து நண்பர்களை தேடும் நிலைமைக்கு வந்திருக்கோம்ன்னு சொல்லுங்க... அங்கயிருந்தா இதே நண்பர்களை பெற்றிருக்க மாட்டோந்தான்,, ஆனா இவங்களை போல ஒத்த தன்மையுள்ள மனிதர்களை real time ல பாத்து பேசிகிட்டு இருந்திருப்போம்...

//வந்த புதிதில், சுற்று புறத்தை நடந்து தெரிந்து கொள்ளுங்கள். புது நிகழ்ச்சிகளை பாருங்கள். வீட்டை அலங்கரியுங்கள். பின்னர் 2 - 3 டாகுமெண்ட் சேர்ந்த பின் லைசென்ஸ் வாங்குங்கள். நீங்களே வன்டையை ஓட்டி ஊர் சுற்றுங்கள். H4 எல்லாம் ஸ்வைன் ஃப்ளூ போல வெறும் ஹைப் தான்//

ஹைப் முடிந்து விட்டது.. அதிரா, H4 என்பது ஒரு விசா.. கணவரை பின் தொடந்து வாழ வரும் திருமதிகளுக்காக வழங்கப் படுவது.. இதில் வேலை ஏதும் செய்ய கூடாது.. மேலே படிக்க கூடாது.. தேவையென்றால், H1 விசா சொந்தமாக வாங்க வேண்டும்... எல்லா பணி நிறுவனங்களும் இதை கொடுப்பதில்லை.. குறைந்தவையே தருகின்றன.. அதிலும், அவங்களுக்கு போக மிச்சம் இருப்பது தான்.. நான் இவர்களை எந்த குறையும் சொல்லவில்லை.. தெரிந்து தானே வந்தோம்..புலம்பவுமில்லை.. உண்மையைத்தான் எடுத்துரைக்கிறேன் - என்னாட்டில் எங்கு போனாலும் மளிகைக்கடை வைத்தாவது பிழைக்க முடியும் என்று.. :)))

//பின்னர் 2 - 3 டாகுமெண்ட் சேர்ந்த பின் லைசென்ஸ் வாங்குங்கள்//
டாக்குமெண்ட் கொண்டு போனேங்க.. ஒன்னுல மிடில் இனிஷியல் இல்லைன்னு சொல்லி நிராகரிச்சுட்டாங்க.. :((( மத்தபடிக்கு இட் வாஸ் எ ட்ரூ டாக்குமெண்ட்.. :((( மறுபடியும் எல்லாத்தையுமே ஆரம்பிச்சோம்..

//நான் H4ல் இருந்த காலத்தில் தான் மிக சந்தோஷமாக இருந்தென் என கூறுவேன் :-)//

எனக்கும் இதே மாதிரி தான் இப்போது இருக்கிறது.. இந்தியாவில் இருந்த போது தான் ஹாப்பியாக இருந்த மாதிரி.. :))))

//99% சத்வீத நேரம் நானும் அப்பாவும் தான்.//

நீங்க கூட இருந்தீங்கல்ல.. அதைத்தானே சொல்லறோம்.. பாட்டி மாமாவையா சொல்லறோம்??

எதிரணி தோழி சொல்லறாங்க - வெளிநாட்டில் //நான்,என் கணவர்,என் பிள்ளை என்று மட்டும் தான் இருக்கிறோம்.//

அது தாங்க பிரச்சனையே... :(((

//அல்லது இழக்க நேரிடும் என்று அயல்நாடு வரமறுத்த ஒருவர் உண்டா?///

நானிருக்கிறேன்.. நானிருக்கிறேன்.. இதை நம்ப வேண்டுமானால் எங்க அம்மா அப்பா கிட்ட தான் நீங்க பேசணும்..

//நம் நாட்டில் மட்டும் என்ன, இந்தியராகிய நான் இந்தியானாகிய அரசியல்வியாதிகளுக்கும், ரவுடிகளுக்கும், போலீசுக்கும் ( !! ), அதிகாரிகளுக்கும் பயந்து வாழத் தேவையிருக்கிறதே!!///

வெளிநாட்டில் இருந்தாலும் இவங்களை கண்டு பயப்படத் தான் வேண்டியிருக்கும்.. ஆனால் நியாயம் நம் பக்கம் இருந்தும், பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை பிடிக்க முடியாமல் இருக்கிறதே, அதைத்தான் சொல்ல வந்தேன்...

//பரபரப்பான நியூயார்க் அருகில் அப்படித்தான். அவர்களுக்கு நடக்கவே நேரம் இருக்காது. இதில் எங்கே நம் முகத்தை பார்த்தபடி நடப்பார்கள்? இதுவே ஒரு ஸ்மால் டௌனில் நடந்தால் hai, how are you? சொல்லிவிட்டு செல்பவர்கள் ஏராளம். சரி...நம்மை அவங்க பார்த்து நடந்தா, என்ன, பார்க்காம நடந்தா என்ன:)///

ஏன், அதுக்கு பதிலா இந்தியாவுல ஒரு ஸ்மால் டவுன் ல இருக்கலாமே.. :)) விசா கொடுத்து வேலை கொடுப்பதே பெரிசு... இதுல ஸ்மால் டவுன் ல தான் வேணும்ன்னு கேட்க முடியாதே.. வேலை எங்க கிடைக்குதோ அங்க தானே இருக்க முடியும் !!!
அதானே, யார் நம்மை பாத்து நடந்தா என்ன நடக்காட்டி என்ன - ஆனா, அங்க அப்படி பழகிட்டு வந்து இங்க இப்படி இருக்க முடியலை ன்னு தானே சொல்லறேன்...
.
//கம்ப்யூட்டர் துறையை தவிற வேறு எந்த துறைக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு?//

இப்படிச் கேட்டுபுட்டீங்களே வின்னீ.. இந்தியாக்காரங்க எல்லாருமே கம்ப்யூட்டர் என்ஜினியரா?? இந்நாளில் கூட, மற்ற துறைகளில் அங்க யாருமே சம்பாதிச்சு வசதியா இல்லையா??

//அப்படி இருந்தா வேறு துறையச் சார்ந்த இஞ்சினியர்கள், டாக்டர்கள் ஏன் வெளி நாடுகளுக்கு வர்றாங்க. அவர்களுடைய திறமைக் கேற்ற வாய்ப்பும், சம்பளமும் கிடைக்கவில்லை என்றுதானே?//

வருபவர்கள் குறைவே.. எத்தனையோ பேர் அங்கேயே இருக்காங்களே..திறமையில்லாம இங்க வர முடியாம இருக்கறவங்க இல்லை.. சில பல காரணங்களுக்காக அங்கேயே இருந்து சாதிப்பவர்கள்... தேவைப்பட்டா வந்து கத்துகிட்டும் திரும்பி போயிருக்காங்க.

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

இந்திய கிராமங்களின் இன்றைய நிலை தெரியும்.... ஆனால் அந்த நிலைக்கு அந்த கிராமங்கள் போன காரணம் தெரியுமா??? நம்மை போல் பணம் பணம் என்று நாட்டை விட்டு ஓடி போனவர்கள் தான். இங்கே ஆன்டியாய் இருந்தவன் எல்லாம் வெளி நாடு போய் அரசன் ஆனான்.... இங்கே அரசனாய் இருந்தவன் எல்லாம் ஆன்டி ஆனான். தெளிவாவே சொல்றேன்.... விவசாயம், நெசவு'னு பல தொழிலை நம்பி நம்ம நாடு இருந்தது. அதை எல்லாம் செய்ய தெரியாதவன், வெளி நாட்டில் போய் டாய்லட் கழுவினாலும் பரவா இல்லை'னு வேலைக்கு போனான்.... லட்சியங்களை விட்டுட்டு போய் லட்சங்களை கொண்டு வந்தான்.... விளை நிலம் எல்லாம் பட்டா நிலம் ஆனது.... வீடும், அடுக்கு மாடி கட்டடமும், கம்பெனியுமாக உரு மாறியது..... விவசாயத்தை நம்பி அரசனாய் வாழ்ந்தவன் எல்லாம் ஆன்டி ஆனான்.... இன்று வெளி நாட்டில் வேலை இல்லை என்று தொரத்தி விட்டால் பிழைக்க வழி இல்லாமல் வந்து செய்யும் தொழிலே ரியல் எஸ்டேட் ஆகி போனது.... பின் எப்படி கிராமங்கள் உயிரோடு இருக்கும்??? வெளி நாட்டில் நாம் சம்பாதித்த லட்சங்களை முதலீடு செய்வதே கிராமத்தை அழித்து தானே.... ஆக வெளி நாட்டு வாழ்க்கையால் நாம் மட்டும் இழப்பதில்லை, நம்மை சுற்றி வாழ்ந்த நம் மக்களையும் சேர்த்தே அழிக்கிறோம்.

வாழைக்காய்க்கும் வாழைப்பூக்கும் ஆசை பட்டு வாழ்க்கையை தொலைக்க சொல்லல.... ஆனா அரை ஜான் வயிற்றுக்காக உழைத்தது போய் இப்போது லட்சங்களுக்காக உழைத்து என்ன சாதிக்கிறார்கள் என்றே கேட்கிறேன். உங்களால் இன்று பலர் வாழைபூவை உள் நாட்டில் கூட நினைத்து பார்க்க முடியாமல் விலைவாசி தலைக்கு மேல் போய்விட்டதே.... நீங்கள் லட்சங்களை கொண்டு வந்து குவித்ததால் தானே இன்று ஏழை பாமரன் வாழ்க்கை போனது??? அதர்காக சம்பாதிக்காதிங்கன்னு சொல்லல.... சம்பாதிச்சதை எல்லாருமா சேர்ந்து நிலம் வாங்கி குவிச்சுட்டு விவசாயம் கிராமம் எல்லாம் செத்து போச்சு அதனால் வெளி நாடு போய் முன்னுக்கு வருகிறேன்னு பொய் சொல்ல கூடாதுன்னு தான் சொல்றேன்.

ஒரு வருடம் முன் 10 லட்சத்துக்கு விற்ற நிலம் இன்று 60 லட்சம் விற்கிறது.... ஏன் தெரியுமா? வெளி நாட்டில் சம்பாதித்து கொண்டு வந்து கொட்ட ஆள் இருக்கு... அதனால் தான். என் சொந்த கிராமத்தில் இன்றும் கூட வாடகைக்கு வீடு கிடையாது.... இருப்பவர் எல்லாம் சொந்த வீடு தான். ஆனால் நகரத்தில் வாடகைக்கு வீடு கிடைப்பது கூட கஷ்டமாகி போனது. சொந்த வீடு பல நடுத்தர குடும்பத்துக்கு எட்டாகனி. ஏன் இந்த நிலை.... விலை வாசி ஏறிகொண்டே போகிறது.... வாழ வழி இல்லாமல் பலர் வாழ்க்கையை இழக்கிறார்கள்.

எத்தனையோ பெற்றோர் பிள்ளைகள் வெளி நாட்டில் வாழ்கிறார்கள் ஆதரவு இல்லை என்று முதியோர் இல்லத்தில் தஞ்சம் அடைகிறார்கள். இதற்கா சம்பாதிக்கிறோம்?? நாம் இன்நிலைக்கு வர காரணமாக இருந்தவர்களை வயதான காலத்தில் ஆதரவின்றி தவிக்க விட்டு விட்டு நம் வயதான காலத்தில் நிம்மதியாய் இருக்க ஓடி ஓடி பணம் சம்பாதிக்கிறோமே.... இது தான் வாழ்க்கையா???? உங்களை பெற்றவருக்கு வயதான காலத்தில் உங்கள் நேரத்தை செலவிடுங்கள்.... மகிழ்வார்கள்.... பணத்தை காட்டினால் அந்த மகிழ்ச்சி வராது.

நாம் இழப்பது இன்று புரியாது.... பணம் கண்ணை மறைக்கும்... ஆனால் என்றாவது ஒரு நாள் நம் நாட்டையும் சேர்த்து அழித்திருக்கிறோம் என்று புரியும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பெற்றது, இழந்தது ஒருவரின் முந்தைய மற்றும் இன்றைய வாழ்வு நிலையை பொறுத்து ஒருவருக்கொருவர் வேறுபடும் என்றாலும், சந்தர்ப்ப சாட்சியங்கள் மற்றும் வாதி, பிரதிவாதிகளின் விவாதங்களை கருத்தில் கொண்டு "பெற்றதே அதிகம்" என்று தீர்ப்பளிக்குமாறு இந்த நீதிமன்றம் அதிராவிற்கு ஆணையிடுகிறது :-(

மேலும் "இழந்து" கொண்டிருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு, எந்த ஒரு தடையும் இல்லாத காரணத்தால், அவர்களை "பெறும்" இடம் நோக்கி விரைவில் நகருமாறும் இந்த நீதிமன்றம் ஆலோசனை வழங்குகிறது.

சுட்டிகாட்டலுக்கு பிறகும், இன்னும் வி"ழை" யாடிக்கொண்டிருக்கும் அதிராவை கண்டிப்பதோடு, மிகத்திறமையாக இந்த விவாதத்தை எடுத்துச் செல்வதை மனதார பாராட்டுகிறது.

அன்புடன்,
இஷானி

அன்புடன்,
இஷானி

கொஞ்சம் பொறுங்கோ.. ஐஸ் வோட்டர் ஊற்றிக்கொண்டு வருகிறேன்... ஒரே அனலாகப் பறக்குது, பயத்தில வராமல் இருந்தேன், பூஷ் விடவில்லை, இனியும் தாமதித்தால், நடுவருக்குப் பயம் என்றும் ஒரு பட்டம் கிடைத்துவிடும் எனப் பேசியதால், பயத்தில் ஓடிவந்தேன்.

சந்தனா.. வெளிநாடு வந்து திரும்பிப் போவதும், திரும்பாமல் தங்குவதும் உங்கள் விருப்பம். உங்கள் கேள்விகளை எதிரணியினரிடமே கேட்டுவிடுங்கோ... நடுவருக்கு சும்மாவே நடுக்கம்.. இடையில கேள்வியும் கேட்டு, இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையையும், பூஷுக்கு முன்னால இழக்க வச்சிடாதீங்கோஒ.....:).

///சும்மா இருந்தவளை உசுப்பி விட்டுட்டீங்க... /// இப்பத்தான் எனக்குத் தெரிகிறது, நான் நடுவர் பதவியை சரியாகத்தான் செய்கிறேன் என்று:).

///யாருமறியாத நாட்டில் தனியாக காலை வைத்திருக்கிறோமே.. இங்கத்தைய விஷயங்கள் ஒன்றுமே தெரியாமல் (பஸ்க்கு எப்படி டிக்கட் எடுக்க வேண்டும் என்று கூட தெரியாமல்) வந்து வாழ்ந்து காட்டுகிறோமே - இதை எங்கம்மா கற்றீங்கள்?? உங்கள் நாட்டிலா இல்லை அமெரிக்க நாட்டிலா??//// ஆகா சந்தனா... கட்சியோடு கட்சியாக எல்லோரும் காணாமல் போயிட்டீங்களோ என நினைத்தேன், எவ்வளவு அழகாகக் கேட்டுவிட்டீங்கள், இதுக்குப் பதிலை எதிரணியினர் எப்படித்தான் சொல்லிச் சமாளிக்கப்போகிறார்களோ..

///ஹஸ்பெண்டும் வெளிநாடும் ஒன்னுங்களா?? ஒன்றில்லாமல் வாழ்வது கஷ்டம்.. ஆனால் இரண்டாவதில்லாததால் வாழ்வது கஷ்டமா?? /// ஆகா புல்லரிக்கிறதே சந்தனா... உங்கள் கேள்வியால், உங்கள் கட்சிக்கு மட்டுமில்லை, ஒட்டுமொத்த கணவன்மாருக்கே பெருமை தேடிக்கொடுத்திருக்கிறீங்களே... எதிரணியினரே எங்கே ஓடிவிட்டீங்கள்? கணவனும் வெளிநாடும் ஒன்றா சொல்லுங்கோ?.

H4 விளக்கத்துக்கு நன்றி சந்தனா, அமெரிக்காக்கதை என்றதால பூஷுக்குப் புரியேல்லை, எனக்கு எப்பவோ தெரியும்:).

///நான் இவர்களை எந்த குறையும் சொல்லவில்லை.. தெரிந்து தானே வந்தோம்..புலம்பவுமில்லை.. உண்மையைத்தான் எடுத்துரைக்கிறேன் - என்னாட்டில் எங்கு போனாலும் மளிகைக்கடை வைத்தாவது பிழைக்க முடியும் என்று.. :)))//// எப்படி எப்படி இப்படியெல்லாம் முழங்கிவிட்டீங்கள்? எதிரணியினர் எங்கே சோடக்குடிக்கும் சாட்டில் மேடையை விட்டு நகர்ந்துவிட்டீங்களோ? கெதியா வாங்கோ.

//// //// //// //// //// //// //// ////
வனிதா/// இங்கே ஆன்டியாய் இருந்தவன் எல்லாம் வெளி நாடு போய் அரசன் ஆனான்.... இங்கே அரசனாய் இருந்தவன் எல்லாம் ஆன்டி ஆனான்./// நீங்க எந்த ஆன்டியைச் சொல்லுறீங்க? ஆன்டிமார் எல்லாம் கோவிக்கப்போயினமென பூஷார் சொல்கிறார், பூஷுக்குப் புரியவில்லை, அது "ஆண்டி" என்று. சரி அதை விடுவோம்.

///வெளி நாட்டில் நாம் சம்பாதித்த லட்சங்களை முதலீடு செய்வதே கிராமத்தை அழித்து தானே.... ஆக வெளி நாட்டு வாழ்க்கையால் நாம் மட்டும் இழப்பதில்லை, நம்மை சுற்றி வாழ்ந்த நம் மக்களையும் சேர்த்தே அழிக்கிறோம்./// ஆகா... என்ன சிந்தனை.. என்ன அற்புதமான வாதம்... எதிரணியினரே இதுக்குமேலும் பெற்றதுதான் அதிகமென்றுதான் வாதாடப்போறீங்களோ? சொல்லுங்கோ?.

///சம்பாதிச்சதை எல்லாருமா சேர்ந்து நிலம் வாங்கி குவிச்சுட்டு விவசாயம் கிராமம் எல்லாம் செத்து போச்சு அதனால் வெளி நாடு போய் முன்னுக்கு வருகிறேன்னு பொய் சொல்ல கூடாதுன்னு தான் சொல்றேன்/// எதிரணியினரே, இவரின் கவலைக்கு நீங்கள் என்ன மருந்து போடப்போறீங்கள்?

///நாம் இழப்பது இன்று புரியாது.... பணம் கண்ணை மறைக்கும்... ஆனால் என்றாவது ஒரு நாள் நம் நாட்டையும் சேர்த்து அழித்திருக்கிறோம் என்று புரியும்./// ஆகா இதுக்கு மேலும் எதிரணியினருக்குப் புரியாமல் இருக்குமோ? எதிரணியினரே உங்கள் கட்சி நீரில் மூழ்கிக்கொண்டிருப்பதுபோல இருக்கே.... கெதியா வந்து காப்பாற்றிப்போடுங்கோ..

//// //// //// //// //// //// //// ////

இஷானி.... ///சந்தர்ப்ப சாட்சியங்கள் மற்றும் வாதி, பிரதிவாதிகளின் விவாதங்களை கருத்தில் கொண்டு "பெற்றதே அதிகம்" என்று தீர்ப்பளிக்குமாறு இந்த நீதிமன்றம் அதிராவிற்கு ஆணையிடுகிறது :-( /// நல்லவேளை பூஷுக்கு ஆணை பிறப்பிக்கப்படவில்லை, ஏனெனில் பூஷின் முடிவுதான் தீர்ப்பு:).

///மேலும் "இழந்து" கொண்டிருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு, எந்த ஒரு தடையும் இல்லாத காரணத்தால், அவர்களை "பெறும்" இடம் நோக்கி விரைவில் நகருமாறும் இந்த நீதிமன்றம் ஆலோசனை வழங்குகிறது./// இதைப் படித்துச் சிரித்த சிரிப்பில் பூஷ் கதிரையால் கீழே விழுந்துவிட்டது:), இருந்தாலும் எதிர்க்கட்சிக்கு இது ஒரு மறைமுகத் தாக்குதால்... எப்படி எதிர்கொள்வார்களோ தெரியேல்லையே.

///இன்னும் வி"ழை" யாடிக்கொண்டிருக்கும் அதிராவை கண்டிப்பதோடு, மிகத்திறமையாக இந்த விவாதத்தை எடுத்துச் செல்வதை மனதார பாராட்டுகிறது./// என் வி"ழை"யாட்டையெல்லாம், புகுந்து வி"ளை"யாடிக் கண்டுபிடித்துச் சொல்லும் திறமை, வேறு யாருக்கும் இருக்குமோ தெரியேல்லை, தொட்டில் பழக்கம், இருப்பினும் இனி மறக்கவே மாட்டேன் என்றுதான் நினைக்கிறேன், இருந்தாலும், மேடைக்குப் பின்னால வரச்சொல்லிக், கண்ணைக்காட்டிக் கூப்பிட்டுச் சொல்லியிருக்கலாம்:), பூஷுக்கு முன்னால சொன்னதால, பூஷ் சொல்லிட்டுது, இனியும் எதுக்கு உந்தக் கோட்சூட் எல்லாம், கழட்டிப்போட்டு, சாதாரண உடையோட நில்லென. இருப்பினும் பாராட்டுக்கு நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா.. அதிரா... நீங்க எந்தப் பக்கம் தீர்ப்பு சொன்னாலும் நான் உங்களை முறைக்க போவதில்லையாக்கும்... ஏனென்றால் அடுத்த வாரம் இதேநாள் பூஸ் அமெரிக்காவில் இருக்க வேண்டுமல்லோ? :))) கொடுத்த வாக்கை காப்பாத்தி விடுவீங்கள் என்ற நம்பிக்கையில் வாதத்தை முடித்துக் கொள்கிறேன்...

என்ன பாசம் இந்த இஷானிக்கு எம்மேல்.. :)) இப்படி பாசமிக்க ஒரு தோழி வீட்டுப் பக்கம் அமைய பெற்றிருந்தால் நானும் வெளிநாட்டில் பெற்றதே அதிகம் என்று நினைத்திருப்பேனே.. :))) "இழந்த"தை "பெற"ப் "போக"த் தான் "போகிறோம்".. ஆனால் அதற்காக "பெற" வந்ததை "பெறாமலும்" போவதில்லை... ஸ்கூலுக்கு போய் பாதியிலே அழுது கொண்டு திரும்பி வந்த சந்தனாவாக என் பெற்றோர் மறுபடியும் என்னை பார்க்க விரும்ப மாட்டார்கள்.. :)))

பி கு.. அதிரா அதெப்படி அவங்க எதிரணி ன்னு சொன்னீங்க?? முதல் பத்தியின் முடிவில் அவங்களோட சோக முகம் உங்களுக்கு தெரியலையா?? :))

அதிரா - இழப்புகள் உண்டு என்றாலும், வந்த நோக்கம் சரி வர நிறைவேறினால் சந்தோஷமே... ஷார்ட் டேர்மாக நோக்கம் ஒன்றுக்காக இங்கு வாழ்ந்து சிலவற்றை இழந்தாலும், பிற்காலத்தில் அது நன்மையே பாவிக்கும் என்றால் எமக்கு சரி தான்.. ஆனால் லாங் டேர்மாக இங்கேயே இருந்தால் இழப்புகளே அதிகமென்று தான் இன்று வரை தோன்றுகிறது.. எனினும், திரும்பி போவதென்ற முடிவு அங்கும் இங்கும் அப்பொழுது நிலவி வரும் சூழ்நிலையையும் மற்ற உறவுகளையும் பார்த்தே எடுக்கப் படும் என்பதால் இது தான் நடக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது... நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்த கதையாக, நான் இங்கும், எதிரணியினர் மனம் மாறி அங்கும் கூட போகலாம்... சோ, never say never again.. :))

[இந்த வரிக்கும் பூசுக்கு அர்த்தம் புரியவில்லை என்றால் - இத்தனை நாள் பிரித்தானியாவில் வாழ்ந்ததிலிருந்து அது எதையுமே "பெற"வில்லை என்று தான் அர்த்தமாகும்... கெதியாக இந்தியாவுக்கு அதை பேக் செய்து அனுப்பும் வழியை பாருங்கோ :)))) ]

திரும்பி போகப் போகிறோம் என்றால், பிள்ளைகளின் எதிர்காலத்தை கணக்கில் கொள்ளாமல் எப்படி??? வின்னீ கேட்ட கேள்விக்கு ரொம்பவே யோசிச்சு பாத்துட்டேன்.. கம்ப்யூட்டர் துறையை தவிர்த்து வேற ஒண்ணுமே கிட்னியில உதிக்க மாட்டேங்குது.. அதை படிச்சுப்புட்டு அதுகளும் எங்களை விட்டு போட்டு ஓடிப் போயிட்டா?? அதான், இப்பவே முடிவு பண்ணிட்டேன் - முதல் பிள்ளை அரசியல்வாதி, ரெண்டாவது பிள்ளை போலீஸ், மூன்றாவது பிள்ளை தான் மூத்தது ரெண்டையும் காப்பாத்த போகுது.. அதனால ரவுடி அல்லது வக்கீல்... :)) அப்பத்தானே எதிரணியினரை பயமுறுத்த முடியும்.. :))) எப்படியோ மூணு பேருமா சேந்து எதிரணியினரின் ஊடுருவலை வெற்றிகரமாக முறியடித்தால் சரி.. :)) பொண்ணு பொறந்தா கண்டிப்பா சினிமா இல்லை மாடலிங் தான்.. :)))

அப்புறம், எதிரணியினருக்கு - இன்னும் சில வருடம் கழித்து ஒரு மாத விசிட்டுக்காக தாயகம் வந்தால், இந்தியாவின் சன நெரிசல் மிகுந்த அழுக்கடைந்த வீதிகளில் புழுதியும் வேர்வையும் சூழ நடந்து கொண்டிருக்கும் சந்தனாவைக் கண்டு முகம் சுளிச்சுப் புடாதீங்கோ.. :)))) அம்புட்டுத்தான்.. :)))

மேலே உள்ளதெல்லாம் எல்லாம் நகைச்சுவைக்கே.. ப்ளீஸ் யாரும் கோச்சுகிட்டு அடுத்த பட்டிமன்றத்துக்கு வந்துடாம இருந்துடாதீங்கோ.. :))) இல்லாட்டி அழுதுருவேன் (வடிவேலு ஸ்டைலில் படித்துக் கொள்ளவும் :)) )

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

சுவாரஸ்யமான தலைப்புடன் நடுவராக களம் புகுந்திருக்கும் அதிரா!!
உங்களுக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!!

வெளி நாட்டு வாழ்க்கையில் நாம் பெற்றதும் பெறுவதும்தான் அதிகம் என்பதில் சந்தேகமே இல்லை. இல்லை என்று யாராலும் மறுக்க முடியுமா? கடந்த 33 வருடங்களுக்கும் மேலாக வெளி நாட்டில் வாழ்ந்து வரும் என்னுடைய ஆணித்தரமான வாதம், இங்கு வாழ்வதில் இழந்ததைவிட பெற்றதுதான் அதிகம் என்பது!!

முதலில் திருமதி. சீதாலக்ஷ்மிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!! நான் எழுத நினைத்ததில் பாதியை அவர்களே எழுதி விட்டார்கள். வெளி நாட்டில் வாழ்பவர்களைவிடவும் உள் நாட்டில் வாழ்பவர்களின் பார்வை இன்னுன் அதிக கூர்மையாக இருக்கும். அதுவும் அவர்கள் எழுதிய

“முதலில் பாசம் என்பதைப் பொறுத்த வரையில், வெளி நாட்டில் இருக்கும் பிள்ளைகள் அன்பின் தேவையையும் பாசத்தின் அருமையையும் சொந்தங்களின் பெருமையையும் நன்றாகவே உணர்ந்திருப்பதால் அன்பையும் பாசத்தையும் வஞ்சனையின்றி வாரி வழங்குகிறார்கள்.

வெளி நாட்டு வாழ்க்கையில் சிரமங்கள், பிரச்னைகளை சந்திக்கிறார்கள் என்பது உண்மைதான்,ஆனால் முதலில் திகைத்துத் தடுமாறினாலும், பிறகு அதை எதிர் கொள்ளப் பழகும் விதத்தில் தைரியம், துணிவு மட்டுமல்லாது தன்னம்பிக்கையும் மிக அதிகமாகப் பெறுகிறார்களே!

இங்கே பள்ளிக் கூடத்திற்குப் போவதற்குக் கூட எந்த பஸ், எந்தப் பாதை என்று தெரியாமல் வளர்ந்த பெண்கள் அங்கே தனியே எல்லா இடங்களுக்கும் போக வேண்டிய நிர்ப்பந்தம், விமானத்தில் தனியே குழந்தைகளுடன் தாய் நாடு சென்று திரும்ப என்று அசத்துகிறார்கள்.

வீட்டில் ஒரு குடம் தண்ணீர் தூக்கி இடுப்பில் வைக்காமல் சொகுசாக வளர்ந்த பெண்கள், சாப்பிட்ட தட்டைக் கூட நகர்த்தாமல் அதிலேயே கை கழுவும் பையன்கள், இன்று எப்படி மாறி விட்டார்கள். கனமான பெட்டி படுக்கைகளை தானாகவே சுமந்து, தள்ளி, தானாக சமைத்து, சுத்தம் செய்து - அதுவும் எந்த விதமானதொரு முணுமுணுப்புமில்லாமல்! ஆச்சரியமாக இருக்கிறது இந்த மாற்றம்! இந்த மாற்றம் இங்கு தாய் நாடு வரும்போது நன்றாகவே தெரிகிறது. இரண்டு வார விடுமுறையில் வரும்பொழுதும் கூட பொறுமையாக எல்லா உறவினர்களின் வீட்டுக்கும் சென்று, அன்புப் பரிசுகள் கொடுத்து, குலதெய்வத்தை வணங்கி, அம்மா அப்பாவுக்கு வீட்டில் உதவி செய்து என்று நம்மை ஆச்சரியப் படுத்துகிறார்கள். இது நிச்சயம் வேஷம் அல்ல, காரணம் தொலை பேசியில் பேசும்போது கூட, பிள்ளைகள் பெற்றோருக்கு புத்திமதி அல்லவா சொல்கிறார்கள் - உறவினர்களிடம் கருத்து வேற்றுமை வேண்டாம் என்று.” வரிகள் மிகவும் அருமை!!

முதலில் குழந்தை வளர்ப்புக்கு வரலாம். நம் பண்பாட்டுடன் குழந்தைகளை வளர்ப்பது நம் கையில்தான் இருக்கிறது!! வெளிநாட்டுக்கு பொருளாதார பலம் தேடித்தான் அனைவருமே வந்திருக்கின்றோமே தவிர நம் வேர்களை, அருமையான பண்பாடுகளை இழந்துதான் அதைப் பெற வேண்டுமென்பதில்லை. எந்த நாட்டில் வாழ்ந்தாலும் எந்த உயரத்தில் இருந்தால் நம் கால்கள் அழுத்தமாக பூமியில் பதிந்திருந்தால் போதும்!!

அன்புள்ள தனிஷா! வெளிநாட்டுப் பிள்ளைகளுக்கு நம் சிறு வயது அனுபவங்கள் கிடடப்பதில்லை என்றும் ஊரில் சிறு பிள்ளைகளுடன் விளையாடும் சுகம், பல்லாங்குழி ஆட்டம் இதெல்லாம் கிடைப்பதில்லை என்று எழுதியிருக்கிறீர்கள்! உண்மையிலேயே நீங்கள் இப்போதைய தமிழ்நாட்டு சிறுவர்களை கவனிக்கவில்லையா? உண்மையிலேயே அவர்கள் மாலை நேரத்தில் ஆரோக்கியமாக விளையாடுகிறார்களா? அவர்களுக்கு அளவுக்கு அதிகமான படிப்புச்சுமையும் அதன் பிறகு கம்ப்யூட்டரும்தானே இருக்கின்றன? பல்லாங்குழி என்றால் என்ன என்றுகூட அவர்களுக்குத் தெரியாது. மாலை நேரத்து விளையாட்டும் நிலா இரவில் சிரித்து பல கதைகள் பேசுவதும் உறவினர்கள் வந்தால் அவர்கள் ஊருக்குப்போவதுவரை அவர்களுடனேயே ஒட்டித் திரிவதும் அதன்பின் அழுவதும்-இந்த சுகங்கள் எல்லாம் எங்கள் காலத்தில் நாங்கள் பெற்றோம். இந்த வயதில்கூட சிறுவயதில் பூவரசம்பூவைத் தேடித்தேடிப் பறித்ததும் வேப்பம்பழங்களை சேகரித்து ஒரு கல்லை அம்மனாக பாவித்து அதற்கு அர்ச்ச்னை செய்ததும் ஆற்றோரமாக அமர்ந்து தண்ணீரில் கால்களை அளைந்தவாறே கதைகள் பேசித் திரிந்ததும், குடத்தை வைத்து நீச்சல் கற்றதும்-இப்படி எத்தைனையோ அனுபவங்கள் நெஞ்சில் சுகமாக அலைமோதும். அதே ஆறுகளும் அதே வயல்களும் அதே நிலவும் இன்றும்தான் இருக்கின்றன. ஆனால் இந்த மாதிரி அனுபவங்களும் மகிழ்வும் இந்தக் கால சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் நம் ஊரில் இன்று இருக்கின்றனவா? இதற்கெல்லாம் இன்று அவர்களுக்கு நேரமில்லை. அவர்களை உட்கார வைத்து சொல்லிக் கொடுக்க அம்மாக்களுக்கும் அப்பாக்களுக்கும் நேரமில்லை. இதுதான் தமிழ்நாட்டில் இன்றைய நிதர்சனமான உண்மை!! சொல்லப்போனால், இன்றும்கூட நானும் என் கணவரும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் மகன், மருமகளூடன் வீட்டில் காரம், சீட்டு, போர்ட் கேம்ஸ் என்று விளையாடிக்கொண்டிருக்கிறோம்!!

உறவினர்கள் எந்தக் கஷ்டமென்றாலும் ஓடி வந்து விடுவார்கள் என்று எழுதியிருக்கிறீர்கள்! வேறெங்கும் போக வேண்டாம். முன்பெல்லாம் ஒரு வீட்டில் திருமணமென்றால் நாலைந்து நாட்களுக்கு முன்பே உறவினர்கள் வந்திருந்து போட்டி போட்டுக்கொண்டு உதவிகள் செய்வார்கள். இப்போது? சரியாக தாலி கட்டும் நேரத்திற்கு வந்து பரிசைக் கொடுத்து சாப்பிடக்கூட நேரமில்லை என்று சொல்லி பறப்பவர்கள் தான் அதிகம். இதில் ‘ஞாயிற்றுக்கிழமை திருமணத்தை வைத்திருந்தால் வர வசதி’ என்று சொல்லி வேறு கிழமைகளில் திருமணமிருந்தால் வராதவர்கள்தான் அதிகம். இதுதான் இன்றைய நிலைமை!

மதிப்பும் மரியாதையும் பண பலத்தைப் பொருத்தே இன்று மதிப்பிடப்படுகின்றன என்பதுதான் இன்றைய கசப்பான உண்மை. அன்பும் பரிவும் உண்மையும் தூய்மையான மனதும் மகாத்மா காந்தியுடனும் பாரதியாருடனும் என்றோ போய் மறைந்த பழங்கதைகள்!! இந்த கசப்பான உன்மைகளுன் தான் இன்று வாழ வேண்டியிருக்கின்றது.

இங்கு வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருக்கும் எத்தனையோ பேர் டாய்லட் கழுவியும் மூட்டை தூக்கியும் பாலங்கள் கட்டும் சித்தாட்களாயும் பிழைக்கிறார்கள். ஆனாலும் அவர்களாலும் அவர்கள் குழந்தைகளை ஆங்கிலப்பள்ளியில் படிக்க வைக்க முடிகிறது. மனைவிக்கும் குழந்தைக்கும் நகைகள் வாங்கி சேமிக்க முடிகிறது. இவைதானே எதிர்காலத்திற்கான உத்திரவாதங்கள்!! அவ்வளவு ஏன், எங்கள் உணவகத்தில் இன்று வெயிட்டராக வேலை பார்க்கும் அவ்வளவாக படிப்பு இல்லாத ஒருவர் இங்கு வந்து வேலை செய்ய ஆரம்பித்த இத்தனை வருடங்களில் ஊரில் தனது நிலங்களையெல்லாம் அடமானங்களிலிருந்து மீட்டு மேற்கொண்டு நிலங்கள், நவீன மயமான வீடு, தன் மூன்று பெண்களுக்கும் பட்ட மேற்படிப்பு, பொறியியல் கல்லூரிப்படிப்பு என்ற வசதி வாய்ப்புகளுடன் வாழ்க்கையை நிலை நிறுத்தியிருக்கிறார். இது ஒரு உதாரணம் மட்டும்தான்.

உண்மைதான். பெற்றோரை, சகோதரர்களைப் பிரிந்து கணவருடன் வாழ வந்த நிறைய பேருக்கு இந்த வெளி நாட்டு வாழ்க்கை இழப்பாகத்தான் தோன்றும். ஆனால் அத்தனை பேருக்கும் இங்கு இருந்து கிடைக்கும் பொருளாதார பலத்தினால்தான் நல்லது செய்ய முடியும். தம்பியைப் படிக்க வைக்கலாம். அண்ணனுக்கு வேலை தேடித்தரலாம். சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம். தாய், தந்தையருக்கு வசதிகள் செய்து தரலாம். இப்படி சொந்தங்களுக்கு உதவிகள் செய்து, நம்மையும் பலப்படுத்தி நம் குழந்தைகளுக்கும் நல்ல வசதியும் படிப்பும் வாழ்க்கை வசதிகளும் செய்து கொடுக்க முடிவது இந்த வெளி நாட்டு வாழ்க்கையினால்தானே? ஒன்றை இழந்துதான் ஒன்றைப் பெற முடியும் என்பது வாழ்க்கையின் எழுதப்படாத விதி. சின்ன ஏக்கங்கள், சுகங்கள்- அவற்றையெல்லாம் தொலைத்துத்தான் இந்த நிறைவைப்பெறுகிறோம். கடைசியில் எது நிரந்தரமானது? நம் வேர்கள் இருக்கும் நமது ஊரில் பொருளாதர பலத்துடன் கூடிய மதிப்பான வாழ்க்கை மட்டுமே!!

இது மட்டுமில்லை. ஊரில் சுனாமி என்றாலும் பஞ்சம் என்றாலும் வரிந்து கட்டிக்கொண்டு எல்லோரிடமும் ஆடைகள், பணம் என்று வசூலித்து செஞ்சிலுவை சங்கங்களுக்கும் பிரதமர் நிதிக்கும் அனுப்புவது இங்குதான் நடக்கும். நம் தாய்நாட்டிற்கும் செய்ய இங்குதான் முடிகிறது.

மற்றதெல்லாம் ஹேமா மிக அழகாக எழுதிவிட்டார்கள்!! முக்கியமாக தன்னம்பிக்கையைச் சொல்ல வேண்டும். அதற்கு ஒரு சிறந்த உதாரணத்தைச் சொல்ல முடியும். இங்கெல்லாம் பிரசவ வலி வந்ததும் ஹாஸ்பிட்டலுக்கு வலி வந்த பெண்ணை அழைத்துச் சென்று சேர்ப்பதோடு பெற்றோரின் வேலை முடிந்து விடுகிறது. குழந்தை பிறந்த அன்றே அறுவை சிகிச்சை பெற்றிருந்தாலும் யார் உதவியுமில்லாமல் உட்கார்ந்து குழந்தைக்கு பாலூட்டச் சொல்லிக் கொடுப்பார்கள். அடுத்த நாளே இங்கே பிரியாணி, சரி விகித உணவு கொடுப்பார்கள். சலைன் பாட்டிலுடன் குழந்தை இருக்கும் அறைக்கு நடந்து சென்று பாலூட்டி வரச் சொல்லுவார்கள். நான்கு நாட்களிலேயே அந்தத் தாய்க்கு தைரியமும் மன பலமும் குழந்தையைத் தனியாக சமாளிக்கும் பக்குவமும் பெற்றோர் கூடவே இருந்தாலும் வந்து விடுகிறது. ஊரிலோ கேட்கவே வேண்டாம். யாராவது குழந்தையை மாற்றி மாற்றி வைத்துக் கொண்டு, தாய்க்கும் விழுந்து விழுந்து கவனித்து, இரண்டு மாதங்கள் ஆனாலும்கூட குழந்தையைத் தனியாக சமாளிக்கும் தைரியம் அந்தத் தாய்க்கு வருவதில்லை.

சந்தனா வெளி நாட்டிலில் வாழ்பவர்களால்தான் ஊரில் நிலங்களும் வீடுகளும் விலையேற்றம் அடைகின்றன என்று குறிப்பிட்டிருந்தார்கள்!! உன்மையில் இந்த அநியாய விலையேற்றத்திற்கு காரணம் அரசியல்வாதிகள்தான். ஒட்டு மொத்தமாக நிலங்களை சுற்றி வளைத்து வாங்கிப் போட்டுக்கொண்டு ஒன்றுக்கு பத்து மடங்காக விற்பனை செய்வது இன்று எல்லா ஊர்களிலும் நடக்கிறது. சொல்லப்போனால் வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்து ஒரு வீடோ நிலமோ ஊரில் வாங்க இன்று படாத பாடு பட வேண்டியிருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை!! கிராமங்களில்கூட இன்று விளை நிலங்கள் தூர்க்கப்பட்டு கட்ட்டிடங்களாக மாறுகின்றன என்பதும் வேதனையான உண்மை. இதெல்லாம் வெளி நாட்டில் வாழ்பவர்களாலா நடக்கிறது? அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு நெல் விளையும் தாய் பூமியை விற்கும் உள்ளூரில் வசிப்பவர்களால்தான் சொந்த ஊரின் பசுமை அழிகிறது.

அந்நிய செலாவணி வருமானத்திற்காகவும் இந்திய நாடு மேன்மேலும் வளமை பெற வேண்டுமென்பதற்காகவும்தான் இந்தி அரசாங்கம் சிகப்பு கம்பளம் விரித்து வெளி நாட்டில் வாழ்பவர்களை வரவேற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் அதை நம்பி சேமித்த பணத்தை சொந்த ஊரில் ஆக்கப்பூர்வமாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் எத்தனன எத்தனை அல்லல்படுகிறார்கள் தெரியுமா?

வெளி நாட்டில் வாழும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு வாழும் பூமியும் சொந்தமில்லை. பிறந்து வளர்ந்த பூமியும் அந்நியப்பட்டுக்கிடக்கின்றது!

இப்படி எத்தனையோ சோகங்கள், பிரச்சினைகள் வெளிநாட்டில் வாழ்வதால் இருந்தாலும் இதையெல்லாம் பின்னுக்குத் தள்ளி இங்கிருந்து பெற்றவைதான் முன்னால் நிற்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை!!

சந்தனா.. ///அதிரா.. அதிரா... நீங்க எந்தப் பக்கம் தீர்ப்பு சொன்னாலும் நான் உங்களை முறைக்க போவதில்லையாக்கும்.../// மிக்க நன்றி..

/// ஏனென்றால் அடுத்த வாரம் இதேநாள் பூஸ் அமெரிக்காவில் இருக்க வேண்டுமல்லோ? :))) கொடுத்த வாக்கை காப்பாத்தி விடுவீங்கள் என்ற நம்பிக்கையில்/// நானா மறுப்பேன், பூஷ் மாட்டுதாம், தன்னை எங்கேயும் அனுப்பிவிடாதே என ஒரே கூத்து நடக்கிறது... நான் என்ன செய்ய, ஆனாலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற, எங்காவது ஒரு எழுந்து நிற்கவே:) முடியாத பூஸாவது அகப்படாதா?... ஒரு கிழமை இருக்கெல்லோ, கவலை வேண்டாம்.. அனுப்பிவிடுவேன்:).

///[இந்த வரிக்கும் பூசுக்கு அர்த்தம் புரியவில்லை என்றால் - இத்தனை நாள் பிரித்தானியாவில் வாழ்ந்ததிலிருந்து அது எதையுமே "பெற"வில்லை என்று தான் அர்த்தமாகும்... கெதியாக இந்தியாவுக்கு அதை பேக் செய்து அனுப்பும் வழியை பாருங்கோ :)))) ]/// பூஷ் கேட்கிறது, இங்கு புரியாதது, அங்குபோனால் மட்டும் புரிந்துவிடுமோ என? என்னை விடுங்கள் நான் இந்தச் சண்டைக்கெல்லாம் வரவில்லை.

சந்தனா, இம்முறை உங்கள் வாதம் "ஓடுற மீனில் நழுவுகிற மீன்போலாகிவிட்டதே" ஒரு வேளை எதிரணியினரைப் பார்த்துப் பயந்திட்டீங்களோ என்னவோ???.

//// //// //// //// //// //// //// //// //// //// ////

மனோ அக்கா!! ///சுவாரஸ்யமான தலைப்புடன் நடுவராக களம் புகுந்திருக்கும் அதிரா!!
உங்களுக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!!/// எங்கே வராமல் போயிடுவீங்களோ என யோசித்தேன் வந்துவிட்டீங்கள் மிக்க நன்றி வாழ்த்துக்கும்.

///“முதலில் பாசம் என்பதைப் பொறுத்த வரையில், வெளி நாட்டில் இருக்கும் பிள்ளைகள் அன்பின் தேவையையும் பாசத்தின் அருமையையும் சொந்தங்களின் பெருமையையும் நன்றாகவே உணர்ந்திருப்பதால் அன்பையும் பாசத்தையும் வஞ்சனையின்றி வாரி வழங்குகிறார்கள். /// மிக அழகாக எதிரணியினருக்குப் புரியும்படி சொல்லியுள்ளீங்கள்.

///இங்கே பள்ளிக் கூடத்திற்குப் போவதற்குக் கூட எந்த பஸ், எந்தப் பாதை என்று தெரியாமல் வளர்ந்த பெண்கள் அங்கே தனியே எல்லா இடங்களுக்கும் போக வேண்டிய நிர்ப்பந்தம், விமானத்தில் தனியே குழந்தைகளுடன் தாய் நாடு சென்று திரும்ப என்று அசத்துகிறார்கள்/// இதுக்கு மேலும், எதிரணியினர் எதிர்ப்பார்களோ எனத் தெரியவில்லை.

///வீட்டில் ஒரு குடம் தண்ணீர் தூக்கி இடுப்பில் வைக்காமல் சொகுசாக வளர்ந்த பெண்கள், சாப்பிட்ட தட்டைக் கூட நகர்த்தாமல் அதிலேயே கை கழுவும் பையன்கள், இன்று எப்படி மாறி விட்டார்கள். கனமான பெட்டி படுக்கைகளை தானாகவே சுமந்து, தள்ளி, தானாக சமைத்து, சுத்தம் செய்து - அதுவும் எந்த விதமானதொரு முணுமுணுப்புமில்லாமல்! ஆச்சரியமாக இருக்கிறது இந்த மாற்றம்! இந்த மாற்றம் இங்கு தாய் நாடு வரும்போது நன்றாகவே தெரிகிறது/// எதிரணியினருக்கு இது தெரியவில்லைப்போலும்.

///நம் வேர்களை, அருமையான பண்பாடுகளை இழந்துதான் அதைப் பெற வேண்டுமென்பதில்லை. எந்த நாட்டில் வாழ்ந்தாலும் எந்த உயரத்தில் இருந்தால் நம் கால்கள் அழுத்தமாக பூமியில் பதிந்திருந்தால் போதும்!! /// எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டீங்கள். எங்கே எதிரணியினரை மேடையிலேயே காணவில்லையே...

///அதே ஆறுகளும் அதே வயல்களும் அதே நிலவும் இன்றும்தான் இருக்கின்றன. ஆனால் இந்த மாதிரி அனுபவங்களும் மகிழ்வும் இந்தக் கால சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் நம் ஊரில் இன்று இருக்கின்றனவா? இதற்கெல்லாம் இன்று அவர்களுக்கு நேரமில்லை. அவர்களை உட்கார வைத்து சொல்லிக் கொடுக்க அம்மாக்களுக்கும் அப்பாக்களுக்கும் நேரமில்லை/// எதிர்க் கட்சியிலே கர்ச்சித்த சிங்கங்கள் எல்லாம் எங்கே.. ஓடிவந்து இதுக்கு நிட்சயம் பதில் கொடுங்கோ...

///ஞாயிற்றுக்கிழமை திருமணத்தை வைத்திருந்தால் வர வசதி’ என்று சொல்லி வேறு கிழமைகளில் திருமணமிருந்தால் வராதவர்கள்தான் அதிகம். இதுதான் இன்றைய நிலைமை! /// கிட்டத்தட்ட ஊரிலும், வெளிநாட்டு வாழ்க்கைதான் நடக்கிறது என்கிறீங்கள்.

///உண்மைதான். பெற்றோரை, சகோதரர்களைப் பிரிந்து கணவருடன் வாழ வந்த நிறைய பேருக்கு இந்த வெளி நாட்டு வாழ்க்கை இழப்பாகத்தான் தோன்றும். ஆனால் அத்தனை பேருக்கும் இங்கு இருந்து கிடைக்கும் பொருளாதார பலத்தினால்தான் நல்லது செய்ய முடியும்/// அழகாக எடுத்துரைத்திருக்கிறீங்கள் மனோ அக்கா, பார்ப்போம் எதிரணியினர் எப்படி மின்னலாக தாக்கப்போகிறர்கள் என்று.

///கிராமங்களில்கூட இன்று விளை நிலங்கள் தூர்க்கப்பட்டு கட்ட்டிடங்களாக மாறுகின்றன என்பதும் வேதனையான உண்மை. இதெல்லாம் வெளி நாட்டில் வாழ்பவர்களாலா நடக்கிறது? அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு நெல் விளையும் தாய் பூமியை விற்கும் உள்ளூரில் வசிப்பவர்களால்தான் சொந்த ஊரின் பசுமை அழிகிறது./// எதிர்க்கட்சியினரின் பல கேள்விக்கெல்லாம் இங்கே பதில்கள் அழகாக வழங்கப்பட்டுவிட்டனவே.... இங்கே கேட்டுள்ள கேள்விகளுக்கு எதிரணியினரே ஓடிவாங்கோ பதில்களைச் சொல்லிட்டுப் போய்ச் சோடாக் குடியுங்கோ.

///இப்படி எத்தனையோ சோகங்கள், பிரச்சினைகள் வெளிநாட்டில் வாழ்வதால் இருந்தாலும் இதையெல்லாம் பின்னுக்குத் தள்ளி இங்கிருந்து பெற்றவைதான் முன்னால் நிற்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை!!/// எதிர்க்கட்சியினரே!!! இதை ஏற்றுக்கொள்ளுறீங்களோ, இல்லை எதிர்க்கிறீங்களோ ஓடிவாங்கோ... உரலுக்குள் தலையைக் கொடுத்துவிட்டு இடிக்குப் பயந்தால் முடியுமோ? எங்களுக்கும் இடிக்கத்தெரியுமெனக் காட்ட ஓடிவாங்கோ.... கட்சியைக் காப்பாற்றுங்கோ..

அப்பாடா நானும் பூஷும், கொஞ்சம் யூஸ் குடித்திட்டு வாறம்....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நடுவருக்கும் தோழிகளுக்கும் வணக்கம். நான் இன்னும் ஊர் திரும்பவில்லை. தோழியின் கணினியில் இருந்து எட்டிப் பார்த்து என் கருத்துக்களையும் சொல்கிறேன். எல்லா பதிவுகளையும் படிக்கவில்லை. அதனால் கருத்துக்கள் ரிப்பீட் ஆனால் மன்னிக்கவும்.

என்னதான் வெளிநாட்டு வாழ்க்கையில் பணமும் அந்தஸ்தும் கிடைத்தாலும் நாங்கள் இழந்ததுதான் அதிகம் என்பதே என் வாதம்.
சிலருக்கு தன்னம்பிக்கையே வெளி நாட்டிற்கு வந்துதான் கிடைத்தது என்றார்கள். அந்த தன்னம்பிக்கை சூல் கொன்ட இடம் நம் நாடு என்பதை மறந்து விடாதீர்கள். இந்தியாவில் இருந்த வரை பேருந்தில் தனியே செல்லக் கூட பயந்த நான் இன்று நாடு விட்டு நாடு எளிதாக சென்று வருகிறேன். ஆனால் அதற்கு காரணம் வெளிநாட்டு வாழ்க்கையில்லை. சூழல், கட்டாயம் அவ்வளவுதான். நான் இந்தியாவில் இருந்து, தனியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தால் அங்கேயும் எனக்கு இந்த தைரியம் வந்திருக்கும்.

எங்கள் வீட்டில் நான் இங்கே ஒரு நாட்டிலும் என் அண்ணன் வேறொரு நாட்டிலும் என் பெற்றோர் இந்தியாவிலும் இருக்கின்றனர். தினம் தினம் பெற்றோரிடம் பேசுகிறோம்தான். ஆனால் அவர்களுக்கு திடீர் உடல்நிலை பாதிப்பு என்கிற போது எங்களால் உடனடியாக அங்கே செல்ல முடிவதில்லை. இங்கிருந்து நண்பர்கள் மூலமாகவும் உறவினர்கள் மூலமாகவும்தான் அவர்களுக்கு உதவ முடிகிறது. எத்தனை இருந்தாலும் பெற்றவருக்கு பிள்ளைகள் போல் ஆகுமா? இங்கு நாம்தான் நிம்மதியாக இருக்க முடியுமா.

பண்டிகைகளை நாம் அதிகப் படியாகவே கொண்டாடுகிறோம். உண்மைதான் காரணம் என்ன தெரியுமா? நம் பெற்றோரை உடன் பிறந்தோரை பண்டிகை நாட்களில் கூட சந்திக்க முடியாத ஏக்கத்தை மறைக்க நாம் இன்னொரு விதத்தில் நம்மை செய்து கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். அட ஏங்க தீபாவளின்னா ஒரு ராக்கெட் வெடி, டென் தவுசன்ட் வாலா வெடித்து கொண்டாட முடிகிறதா? எத்தனை ஆர்ப்பாட்டமாக இங்கே கொண்டாடினாலும் நம் மனதில் ஒரு ஏக்கம் வருவதை தவிர்க்க முடியுமா இல்லை மறுக்கத்தான் முடியுமா?

சரி இவ்வளவு நேரம் குடும்பமாக வெளிநாட்டில் இருப்பவர்களைப் பற்றி பேசினோம். ஆனால் பணத்திற்காக குடும்பத்தை, மனைவியை மக்களை விட்டு வெளிநாடு வந்து உழைக்கும் எண்ணற்ற சகோதரர்களின் நிலை? அவர்கள் தங்கள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைத்து ஊருக்கு பணம் அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் அவனைப் பெற்ற அன்னைக்கோ அல்லது மனைவிக்கோ ஒரு நாள் ஒரு பொழுது ஒரு கவளம் சோற்றை வாயில் கண்ணீரில்லாமல் வைக்க முடிகிறதா? என் குழந்தை என் கணவர் அங்கே யாருமின்றி தனியே என்ன கஷ்டப் படுகிறாரோ என்ன சாப்பிட்டாரோ என்ற எண்ணம் அவர்க மனதில் வரும்தானே? அப்போது எப்படி அவர்களால் நிம்மதியாக இருக்க முடியும். நாள் முழுவத்தும் கஷ்டப்பட்டு உழைத்து களைத்து தன் இருப்பிடம் திரும்புபவனுக்கு களைப்பு தீர ஒரு வாய் காஃபி கொடுக்கக் கூட ஆள் இருக்காது. அவனேதான் சமைத்து சாப்பிட வேண்டும். இரவு சமைத்ததையே மறுநாளும் கட்டி எடுத்துக் கொன்டு போவார்கள். வெளிநாட்டு வாழ்க்கை பணத்தால் அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தியது. ஆனால் மனதளவில் வாழ்க்கை தரம் உயரவில்லை மாறாக தாழ்ந்து விட்டது. இளவயதில் இப்படி உழைத்து ஓடாய் தேய்ந்து ஓரளவு பணம் சம்பாதித்த பின் சரி குடும்பத்தோடு போய் இருக்கலாம் என்று ஊர் திரும்புவார்கள். இவ்வளவு நாள் உடல் நிலையை எண்ணாமல் ஓயாமல் உழைத்ததால் பல நோய்களும் பின் தொடர்ந்து வந்து அவனது மொத்த வாழ்க்கையும் நிம்மதி இல்லாமல் போய் விடும். இது பட்டி மன்ற வாதத்திற்காக இல்லை. நான் பார்க்கும் மனிதர்களின் வலிகள் இவை.

அப்புறம் என்னதான் நாம் இருக்கும் நாட்டின் நிரந்தர வாசிகளாகவோ அல்லது மற்ற விசாக்களிலோ இருந்தாலும் அந்நாட்டைப் பொறுத்தவரை நாம் இரண்டாம் தர மக்களே. இந்த வேறுபாடு தெரிவதே இல்லை என்று மனசாட்சி உள்ள எவராலும் சொல்ல முடியாது. நான் சிங்கப்பூர் வாசி என்று நினைத்து ஒரு சிங்கப்பூர் இந்தியர் என்னிடம் சொன்னது இதொ ." ஊர்ல இருந்து வந்து நம்மவங்களோட வேலையை பறிச்சுக்கறாங்க. இவங்களால இங்க உள்ள உள்ளூர் இந்தியர்களுக்கு எப்பவுமே தொல்லைதான்" இதைக்கேட்டு மனது வலித்தது. ஆனால் அவர்கள் பார்வையில் அது சரி. அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். நாம் வேடந்தாங்கல் பறவைகள்தானே! இந்த மண் எனக்கு சொந்தமில்லையே!

நம் நாட்டு வாழ்க்கை வசதிகள் குறைந்த சொந்த வீட்டில் இருப்பது போன்றது. வெளிநாட்டு வாழ்க்கை வசதிகள் நிறைந்த வாடகை வீட்டில் இருப்பதைப் போன்றது. வாடகை வீடு வீட்டு உரிமையாளர் நம்மை அங்கு இருக்க அனுமதிக்கும் வரைதான் இருக்க முடியும் சொந்த வீட்டிலிருந்து யாரும் நம்மை துரத்த முடியாது. யாரும் வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டில் இருக்க விரும்புவதில்லை. சொந்த வீடுதான் நிரந்தரம். நம் நாடுதான் நமக்கு நிரந்தரம். வெளி நாடெல்லாம் வெறும் வாடகை வீடுதான்.

வெளிநாட்டு வாழ்க்கையில் பணம் கிடைத்தாலும் மனம்(நிம்மதி சந்தோஷம்) கிடைப்பதில்லை. அது நம் நாட்டில் நம் வீட்டில்தான் கிடைக்கும்.

வெளித்தோற்றத்திற்கு வெளி நாட்டு வாழ்க்கையில் பெற்றது அதிகம் போல் தோன்றினாலும் உண்மையில் மனதளவில் இழந்ததுதான் அதிகம்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா,
///சொர்க்கமே என்றாலும் அது நம் நாட்டுக்கு ஈடாகுமா?/// ஈடாகாதுதான்.

///நான் இந்தியாவில் இருந்து, தனியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தால் அங்கேயும் எனக்கு இந்த தைரியம் வந்திருக்கும். /// எதிரணியினருக்கு அப்படி வரவில்லையாம்.

///ஆனால் அவர்களுக்கு திடீர் உடல்நிலை பாதிப்பு என்கிற போது எங்களால் உடனடியாக அங்கே செல்ல முடிவதில்லை. இங்கிருந்து நண்பர்கள் மூலமாகவும் உறவினர்கள் மூலமாகவும்தான் அவர்களுக்கு உதவ முடிகிறது. எத்தனை இருந்தாலும் பெற்றவருக்கு பிள்ளைகள் போல் ஆகுமா? இங்கு நாம்தான் நிம்மதியாக இருக்க முடியுமா./// இது உண்மைதானே, இதை எப்படி எதிரணியினர் மறுக்க முடியும்???

///அட ஏங்க தீபாவளின்னா ஒரு ராக்கெட் வெடி, டென் தவுசன்ட் வாலா வெடித்து கொண்டாட முடிகிறதா? எத்தனை ஆர்ப்பாட்டமாக இங்கே கொண்டாடினாலும் நம் மனதில் ஒரு ஏக்கம் வருவதை தவிர்க்க முடியுமா இல்லை மறுக்கத்தான் முடியுமா?/// இதற்குப் பதில் எதிரணியினர்தன் சொல்லவேண்டும்.

///வெளிநாட்டு வாழ்க்கை பணத்தால் அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தியது. ஆனால் மனதளவில் வாழ்க்கை தரம் உயரவில்லை மாறாக தாழ்ந்து விட்டது/// சரியாகச் சொலியிருக்கிறீங்கள்... இதை எப்படிச் சமாளிக்கப்போகிறார்களோ எதிர்தரப்பினர்.

///யாரும் வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டில் இருக்க விரும்புவதில்லை. சொந்த வீடுதான் நிரந்தரம். நம் நாடுதான் நமக்கு நிரந்தரம். வெளி நாடெல்லாம் வெறும் வாடகை வீடுதான்.///அழகாகச் சொல்லிவிட்டீங்கள்... இதுக்கு என்ன பதில் வரப்போகிறதென பொறுத்திருந்து பார்ப்போம்.... அல்லது பதிலே சொல்லமுடியாமல் வாயடைத்துப் போகப்போகிறார்களோ தெரியாதே..

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இந்த கட்சியில அடுத்ததாக பேசவருவது இலா! பூஸ்சுக்கும் நடுவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இங்க எல்லாரும் பேசுவது என்ன ? இழப்பு பற்றி.. என்னாத்தை அம்மா இழந்துவிட்டீர்கள்.. ஒன்னுமே இல்லை... சில அற்ப சுகங்கள்ன்னு சும்மாவும் சொல்ல முடியலை...
ஏன் நிம்மதி இல்லைன்னு உங்கள நீங்களே கேட்டுக்கவேண்டிய ஒரு கேள்வி.. இத்தனை வசதிகள் இருக்கும் இடத்தில நிம்மதி இல்லைன்னு சொன்னா பூஷே சிரிக்கும். நிம்மதி அவரவர் மனதில.. அது உள்நாட்டில இருந்தாலும் சரி வெளிநாட்டில இருந்தாலும் சரி.

தன்னம்பிக்கை! அது யாருக்கும் எங்கயும் இருக்கலாம் இருக்காமலும் இருக்கலாம்... அதுக்காக ஒரு பாயிண்ட் வீண் செய்யவேண்டியதில்லை..
இந்தியால கோடியில் புரண்டாலும் இங்க நம் வேலை நாமே செய்வது எவ்வளவு பெருமை... ஒரு நாள் வேலைக்காரி வரலன்னா நாறிடும்.. இங்க நீங்களே செய்யனும் அது நாளைக்கானாலும் நான் தானே அதுக்கு சோம்பல் இல்லாம என் வீட்டை நானே சுத்தமா வச்சுகலாம்ன்னு செய்வோம்.. நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்...

மனிதனாய் பிறக்கும் அனைவருக்கும் இருக்கு ஒரு எக்ஸ்ட்ரா கை தன்னம்பிக்கை.. அதுல மக்கள்ஸ் என்ன செய்வாங்க தெரியுமா..அந்த கை உபயோகமே படுத்துவதில்லை.. பெரும்பாலும் எல்லாரும் டெலிகேட் டார்லிங்ஸ்.... நம்ம ஊரிலே ஓஹ்.. நான் எங்கயும் தனியாவே போகமாட்டேன்ன்னு ஒரு பந்தா.. கல்யாணத்துக்கு முன்னாடி அப்பா/சகோதரன்/உறவினர் கல்யாணத்துக்க்கு அப்புறம் கணவன் அவங்களுக்கு துணைக்கு.. வெளி நாடு வந்ததும் கொஞநாள் பார்ப்பார் கணவர்.. நீ உன் வேலைய பாத்துகோ எனக்கும் வேலை இருக்கு சொல்கிறார்கள்...

என் பாலிசி இதுதான் அதை என் கல்லூரி தோழிகளுக்கு சொல்வது... படித்த படிப்புக்கு சமூகத்துக்கு எதாவது செய்யணும்.. இல்லைன்னா எதுக்கு ஒரு இஞ்சினியரிங் சீட் வீண்செய்தேன்னு,.,, அதே கதை தான் உங்களால் சமூகத்துக்கு ( உள்நாடு/வெளிநாடு) ஒன்னும் செய்யலைன்னா... எதுக்கு வெளிநாடு வந்து இழந்துட்டோம்ம்ன்னு எண்ணனும்... ஆர்வம் இருக்க யாருக்காவது பயன் படுமே யாராவது குடும்பம் பொருளாதர நிலமையில் முன்னேறி இருக்குமே..

உள்ளூரில இருந்தாலும் ஓடி வருவாங்கன்னு சொன்னவங்களுக்கு... மனசு இருக்கணுமே வந்து எட்டிபாக்கவும்... நீங்களே சொல்லுங்க.. என் கணவரின் தாத்தா இடுப்பு எலும்பு உடைந்து கிடக்கும் போது உள்ளூர் பேத்தி/பேரன் எல்லாம் வந்தாங்க தான்... காரியத்துக்கு :((

காசு கொடுதிட்டா போதுமானு கேக்கறவங்க... அது இல்லைன்னா என்ன செய்வோம்.. ஒரு தருமாஸ்பத்திரிக்கிகூட போகமுடியாது ...ஏன்னா அது நம்ம நாட்டோட சாபக்கேடு...எங்கபோனாலும் நோட்டு வைக்கனும்... அது இலவசமாவே கிடைத்தால் கூட...

சொந்தம் சொந்தம்ன்னு அடிச்சிகிறாங்களே.. நம் வாழ்வில எதுவுமே நிலையில்லாத நிலையில் இது என்ன ஒரு தனிக்கதை... ஊரில தனியா இறப்பவர்கள் எத்தனைபேர்.. அத்தனை உறவினர் இருந்தும் ஒரு 80 வயது முதிய பெண்மணி ஆத்மஹத்தி செய்து கொள்வதேன்..

இந்தியா போயிருந்த் போது முழுவது மேற்கத்திய கலாச்சார சாயலே அதிகம் ..யாரும் ஒரு பாவாடை தாவணி போட்டு இருக்கவில்லை ...
கடையில் போயி குழந்தைக்கு பாவாடை கேட்டலும் கிடைப்பதில்லை

சரி நாம பல்லாங்குழி வாங்கி போகலாம்ன்னா அதுவும் கிடைக்கல்லே...

தாய்க்கட்டை கேட்டால் கொடுப்பது ஸ்னேக் அன்ட் லேடர் ( மேட் இன் சைனா)

//எங்களோட வேலை பார்க்கும் பலரும் பிள்ளைகளின் அன்புக்கு ஏங்கறாங்க
அன்பு காட்டுங்க அன்பு கிடைக்கும்.. ஏன் உங்க கூட பிறந்தவர்கள் தான் அத்தை/மாமான்னு சொல்லனுமா.. இங்க என் தோழியின் குழந்தை அத்தை என்று தான் அழைக்கும் .. யாருக்காவது ஒன்னுன்னா ஓடி போங்க அவங்களும் ஓடி வருவாங்க ( உள்நாடு /வெளி நாடு அப்ப்ளிகபிள்)

//மகிழ்ச்சியும், நிம்மதியும், சுதந்திரமும்
இதெல்லாம் நம்ம மனசில வாழும் இடத்தில இல்லை... குடிசை கோபுரம் இந்த கான்செப்ட் எல்லாம் போயிடுச்சு ஒன் பெட்/ 2 பெட்/3 பெட் இவ்வள்வே...இந்த 4 அறையில ஒரு 4 பேரு அன்ன்யோன்யமா இல்லைன்னு சொல்லாதீங்க...

//ஒரு தேன் மிட்டாய், குச்சி மிட்டாய், சாப்பிட கூட வழி இல்லாத
அதிகமா இனிப்பு சாப்பிடக்கூடாது வனி! ஒரு வயசுக்கு மேல அது சரிவராது :))

ஒன்னே ஒன்னு சொல்லுங்க.. இந்தியால எந்த டீவி போட்டாலும் எல்லாமே உலக அளவில இருக்கும் பிராடெட்க் தான்... சரி... கலாச்சாரம் பண்பாடும் அதே கோட்பாடுக்குள்ளதான் வருது.. நடுவர் கவனிக்க.... அப்புறம் எங்க போயி கட்டி காப்பத்த முடியும்...இங்கயும் பண்டிகைகள்...எல்லாமே கொண்டாடுபவர்கள் இருக்காங்க

கோவிலில் ஒரு குழந்தை 5 அல்லது 6 வயசு இருக்கும்... ஆடி தெப்ப திருவிழவின் போது "பாக்யதா லக்ஷ்மி " பாடினாள்... எனக்கு முதல் பத்தி தான் தெரியும்.. முழு பாட்டும் பாடிய போது ஆச்சரியத்துக்கு அளவில்லை... இடையில் திக்கியது.... எல்லாரும் ஊக்குவித்து பாடல் முடிந்தபின்பே ஆரத்தி எடுத்தார்கள்...

இழந்தது அதிகம்ன்னு யோசிக்கறவங்க.. இந்த ஒரு பாயிண்டை கவனிக்கணும்.. கல்யாணம் ஆகி புக்கம் போனதும் அங்க எல்லாமே பிடிக்காது கொஞ்சநாள் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கணும்.. அது ஒரு பேஃஸ்.. அது முடிந்ததும் நின்னு நிதானமா வந்து சொல்லுங்க என்ன அடைந்து இருக்கீங்கன்னு ஓகேவா....

All I ask you is if you can live your life passionately .. it wont matter where you live.. it matters we are lively...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்