விருந்தோ விருந்து - இட்ஸ் பார்ட்டி டைம் !!!

என்ன இழை இதுன்னு குழம்பிக்காதிங்க. நம்ம அறுசுவை'க்கு ரொம்ப சம்பந்தம் உள்ள இழை தான் !!! தமிழர்கள்... (:D நம்ம தான்) பொதுவாவே விருந்து குடுப்பதிலும், விருந்தினரை அசத்துவதிலும் கெட்டிகாரர்கள். அப்படிபட்ட பாரம்பரியத்தை நம்ம காப்பாத்த வேணும் இல்லையா.... ;) அதுக்காக புதுசா விருந்து குடுக்க இருக்கும் நம்ம அறுசுவை தோழிகளுக்கு அனுபவம் உள்ளவர்கள் இங்க டிப்ஸ் கொடுங்க.

சரி.... விருந்து குடுக்கும் முன்னாடி பண்ண வேண்டிய சில விஷயம் பற்றி முதல்ல பார்ப்போம்.... ஏதோ இந்த சின்ன பொண்ணு மண்டைக்கு எட்டிய விஷயத்தை சொல்றேன்... தப்பா இருந்தா சொல்லுங்கோ, பென்ச் மேல ஏத்திடாதிங்க. ;)

1. யார் யாரை அழைக்க போறீங்கன்னு ஒரு லிஸ்ட் போடுங்க.

2. விருந்து பெரியவர்களுக்கு மட்டுமா, குழந்தைகளுக்குமா என்று முடிவு செய்யுங்க.

3. நீங்க அழைக்க போறவங்க வீட்டில் இருந்து எத்தனை பேர் வருவாங்கன்னு கணக்கை ஒரு லிஸ்ட்'ல போடுங்க. முக்கியமா உங்க வீட்டு வரவேற்பு அரை அளவை மனதில் கொண்டு கணக்கு போடுங்க. இல்லைன்ன வந்தவங்க உட்கார விட்டுட்டு நம்ம நிக்க வேண்டி வந்துடும்;)

4. அழைக்க போகும் நபர் அல்லது குடும்பம் எந்த வகையான உணவு பழக்கம் உள்ளவர்கள் என்பதையும் பாருங்க. சிலர் சுத்த சைவமா இருக்கலாம், சிலர் அசைவ உணவு விரும்புபவரா இருக்கலாம்.... இவங்க இரண்டு பேரையும் ஒன்னா அழைக்காம இருப்பது சிறப்பு, ஆனா சில நேரத்துல வேறு வழியே இருக்காது.... அப்போ அதுக்கு தகுந்த மாதிரி மெனு முடிவு செய்ய உதவும். கூடவே சர்க்கரை வியாதி அது இதுன்னு இப்போ பல விஷயம் இருக்கே.... வருபவர் உடல் நலத்தையும் சற்று நினைவில் வைங்க (உங்களுக்கு பழக்கமானவராக இருந்தால்).

5. வர போகும் விருந்தினரை மனதில் கொண்டு நேரத்தை முடிவு செய்யுங்க. உதாரணமா.... பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் வருகிறார்கள் என்றால் விருந்துக்கு மறு நாள் விடுமுறை வருவது போல் அழைக்கலாம், அல்லது மாலை நேர விருந்து சற்று முன் கூட்டியே ஏற்பாடு செய்யலாம் (இரவு வெகு நேரம் ஆகாமல் பார்த்துக்க உதவும்), வயதான மக்கள் என்றாலும் விருந்து நேரம் சற்று முன்னதாக அமைக்கலாம் (சீக்கிரம் தூங்குவாங்க இல்லையா....), இரவு நேரம் பணிக்கு போறவங்களான்னும் பாருங்க.

6. மதிய நேர விருந்து 75% தவிர்ப்பது நல்லது. காரணம் காலை எழுந்து நம்ம வழக்கமான வேலைகளை செய்யவே நேரம் இருக்காது. பின் விருந்துக்கு சமைக்க வேணும் என்றால் நிறைய நேரம் எடுக்கும். அவசரமாக சமைக்க வேண்டி வந்துடும். கூடவே வருபவரும் உண்டு முடித்ததும் வெய்யில் காலத்தில் தூங்கி வழிவார் ;).... ஆனா சில நேரத்தில் மதிய விருந்து தவிர்க்க முடியாது தான். அந்த நேரத்தில் அதுக்கு ஏற்ற மாதிரி முன் தினமே சில வகைகளை சமைத்தோ, அல்லது சமைக்க தேவையான ஏற்பாடுகளை செய்தோ வைக்கமுன் கூட்டியே திட்டமிடுவது நல்லது.

7. என்ன வகையான விருந்து??? 2 கோர்ஸ் டின்னர், 3 கோர்ஸ் டின்னர்.... நீங்க என்ன வகை விருந்து குடுக்க போறீங்க? சிட்டவுனா? புப்பே'வா?? இதுவும் எத்தனை நபர்கள் என்பதை மனதில்கொண்டு முடிவு செய்யுங்க. நிறைய பேர் வந்தால் சிட்டவுன் டின்னர் எல்லாம் ஒத்து வராது. கூடவே உங்க மேஜையின் அளவு, உங்க வீட்டில் எத்தனை பேர் வசதியாக நெருக்கடி இல்லாமல் அமர முடியும் என்பதையும் கணக்கில் வைங்க விருந்துக்கு அழைக்கும் முன்பு.

8. சரி... இப்போ யார் வர போறாங்க, எத்தனை பேர், என்ன வகை உணவு, என்ன நேரம், எவ்வளவு நேரம் விருந்து, எல்லாம் முடிவு செய்தாச்சு. இனி என்ன.... என்ன உணவு??!! "மெனு" இது தான் விருந்தின் முக்கியமான கட்டம். யோசித்து முதலில் ஒரு லிஸ்ட் போடுங்க.

9. போட்ட லிஸ்ட்'ல இருக்க மெனு'கு தேவையான பொருட்களை ஒரு லிஸ்ட் போடுங்க. அது எல்லாம் இருக்கா வீட்டில், எது எது வாங்க வேணும், எவ்வளவு தேவைப்படும் என்றெல்லாம் குறித்து வைங்க. முக்கியமா வெளிநாட்டு மக்கள், அந்த சீசனில் அந்த பொருள் கிடைக்குமா என்றும் பாருங்க.

10. இந்த லிஸ்ட்டில் இருக்கும் பொருள் கிடைக்காத பட்சத்தில் வேறு மாற்று வகை உணவு என்ன செய்யலாம், கடைசி நிமிஷத்தில் நேரம் இல்லாமல் போனால் நீண்ட நேரம் எடுக்க கூடிய உணவு வகை எதை மாற்றலாம், முன் கூட்டியே தயாராக வைக்க வேண்டியது என்னென்ன(மாவு அரைப்பது, ஏதேனும் ஊர வைத்து வைப்பது, நீண்ட நேரம் மாரினேட் செய்ய வேண்டிய வகைகள்).... இதெல்லாம் குறிச்சுக்கங்க.

ஆகா... எல்லாம் செய்துட்டு முக்கியமான விஷயத்தை விடலாமா.... அழைக்க வேணும். விருந்தினரை அன்பாக அழைக்க வேணும். ஆண்களை உங்கள் வீட்டு ஆண்கள் அழைத்தாலும் குடும்பத்தோடு அழைக்க நீங்களும் பெண்களுக்கு தனிப்பட்ட முறையில் அழப்பு விடுங்கோ. அப்படி அழைப்பது அந்த பெண்களை நாம் மதிப்பதை காட்டும், அவர்களுக்கு தரும் முக்கியத்துவமாக நினைப்பார்கள். இப்படி அழைப்பதால் அவர்களால் வர முடியாத சூழ்நிலை என்றாலும் நமக்கு முன் கூட்டியே சொல்வார்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்போ மெனு'கு போலாம்.....

வருகிற விருந்தினர் என்ன வகை உணவு பழக்கம் உள்ளவர் என்று கவனித்து மெனு போடுங்கன்னு சொன்னேன். ஆனா எப்படி'னு சொல்லலயே....

1. நீங்க அழைப்பு விடுப்பது சைவம் மற்றும் அசைவ உணவு விரும்பும் வகை விருந்தினர் என்றால் அதுக்கு ஏற்ற மாதிர் இரண்டும் கலந்து மெனு இருக்க வேண்டும். உதாரனமா... இட்லி செய்யறீங்க... அதுக்கு வெறும் கோழி குருமா செய்துடாம வரும் சைவ விருந்தாளியை மனதில் கொண்டு சைவ குருமா'வும் ஒரு வகை செய்யுங்க. இல்லை என்றால் வெறும் இட்லி சாப்பிட முடியாதல்லோ..... ;)

2. எத்தனை வகை உணவோ அது அத்தனையும் சைவம், அசைவம் இரண்டும் சரியான எண்ணிக்கை உடையாதாக பார்த்துக்கங்க. சைவ விருந்தினருக்கு 10 வகை செய்துட்டு, அசைவ விருந்தாளிக்கு 4 வகை செய்தா பார்க்க ஒரு மாதிரி இருக்கும். இது முக்கியமா நிறைய அசைவம் செய்துட்டு சைவ விருந்தாளிக்கு மிக குறைவான வகை இருந்தா கேக்கவே வேண்டாம். இதுக்கு வீட்டுலயே சாப்பிட்டிருக்கலாம்'னு நினைச்சுடுவாங்க.

3. வரும் விருந்தினர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்'னும் பாருங்க. இப்போ டெல்லி ஆளுக்கு அவங்க ஊர் சமோசா'வை விட நம்ம ஊர் வடை செய்து குடுத்தா தான் அசத்தலா இருக்கும். இது அவங்க குறை சொல்லாம இருக்கவும் உதவும்.;) கூடவே நம்ம ஊர் விருந்தாளிக்கு அதே அவங்க வீட்டில் செய்யும் இட்லி போட்டா அவங்களுக்கு விருந்து உணவு சாப்பிட்ட உணர்வு வராது. அதனால் அவங்களுக்கு புதுசா இருக்கும் வகைகளை தேர்வு செய்யுங்க.

4. சரி.... பல மாநில மக்கள் கலந்த விருந்துன்னா.... இரண்டு வகையும் கலந்து செய்யுங்க. வந்ததும் தரும் அபடைசரில் ஒரு வகை வடை, ஒரு வகை சமோசா இப்படி கலந்து செய்யுங்க. மெயின் கோர்ஸும் அப்படியே.... அனைவருக்கும் புது வகையான உணவு சில இருப்பது போல் பார்த்துக்கங்க.

5. வெளிநாட்டு விருந்தினர் என்றால் முக்கியமா சாதம், சாம்பார் இதெல்லாம் தவிர்த்துடுங்க. பலருக்கு அதை சாப்பிடவே தெரியாது. அவங்க வசதிக்கு ஏற்றபடி அப்படியே எடுத்து உண்ண கூடிய உணவு வகைகளை ப்ளான் பண்ணுங்க. அதுக்காக ப்ரெட் சாண்ட்விச், பர்கர் செய்துடாதிங்க.... நம்ம ஊர் வகை உணவு செய்யுங்க.

6. எல்லா விருந்துக்குமே சாலட் வகைகளை சேர்த்துக்கங்க. எண்ணிக்கை கூடும், அதே சமையம் 75% அனைவருமே விரும்புவார்கள்.

7. முக்கியமா வரும் விருந்தாளி இதுக்கு முன் உங்க வீட்டுக்கு வந்திருக்காங்களா... அப்படி வந்திருந்தா அப்போ போட்ட மெனு என்ன??? அதுவே இப்பவும் செய்துடாம பாருங்க. இல்லைன்னா இந்த பொண்ணுக்கு இதை விட்டா வேறு சமைக்க தெரியாதுன்னு முடிவு செய்துடுவாங்க.

8. டெசெர்ட்ஸ்.... என்ன செய்ய போறீங்க?? வருபவர் அதிகம் வயதான விருந்தினர் என்றால் பழ வகைகள் இருக்கும்படி பாருங்க. இனிப்பு தவிர்ப்பவர் அதிகம் இருக்கலாம். குழந்தைகள் என்றால் கேக், ஐஸ் கிர்ரிம் போன்றவை இருக்கும்படி பாருங்க. குழந்தைகள் அதிகம் விரும்புவாங்க. மற்றபடி இவை கூட நம்ம வழக்கமா செய்யும் இனிப்புகள் செய்யலாம்.

9. அசைவம் செய்யும் போது கோழி, ஆடு, முட்டை, மீன், ப்ரான் என என்ன செய்ய போறீங்களோ அதை சரியா திட்டமிடுங்க. கோழி குருமா, கோழி வறுவல், கோழி பிரியாணி'னு எல்லாம் கோழி மயமா அமைந்து விட கூடாது. அதுக்கு ஏற்றபடி மெனு போடுங்க.

10. வருபவர் எல்லாம் அரிசி உணவு விரும்புவாங்கன்னு சொல்ல முடியாது.... அதனால் எப்பவுமே கோதுமை, ரவை, சேமியா போன்ற வகை உணவும் மெனு'வில் சேர்த்துக்கங்க. சில நேரத்தில் சில விருந்து பார்த்தா பிரியாணி, ப்ரைடு ரைஸ், லெமன் ரைஸ்'னு எல்லா வகையும் அரிசி உணவாகவே இருக்கும்.... பார்க்கவும் நல்லா இருக்காது, சாப்பிடுறவங்களும் விரும்ப மாட்டாங்க.

11. நின்னு நின்னு செய்ய வேண்டிய தோசை, ஆப்பம், அடை இப்படிலாம் நிறைய விருந்தினர் வரும் விருந்துக்கு மெனுவில் போட்டுடாதிங்க. ஏன்டா போட்டோம்'னு ஆயிடும்.

12. முன்கூட்டியே செய்து வைக்கவோ, ஏற்பாடு செய்யவோ முடியாது, கடைசி நிமிஷத்தில் ப்ரெஷாக செய்தால் தான் நல்லா இருக்கும் என்பது போன்ற உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. எப்பவுமே விருந்து நெரத்துக்கு ஒரு 2 அல்லது 3 மணி நேரம் முன்பே சமையல்கட்டில் இருந்து வெளியே வரும்படி பாத்துக்க வேணும். அப்பதான் நீங்களும் விருந்தில் வந்தவருடன் பேச நேரம் கிடைக்கும். பார்க்கவும் நீங்க ப்ரெஷா இருப்பீங்க. இல்லை என்றால் உணவு மட்டுமே ப்ரெஷாக இருக்கும். :( இதெல்லாமும் மெனு போடும் போது யோசிக்க வேண்டிய விஷயம் தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா விருந்துக்கான முன்னேற்பாடுகளை அழகா பட்டியல் போட்டு சொல்லிட்டீங்க. சூப்பர்.
எனக்கு தெரிந்த சில...
அதிகம்பேரை அழைக்கும் போது டின்னர் செட் பயன் படுத்துவது சிரமம். அதனால் டிஸ்போசபில் வாங்குவோம். அப்படி நாம் வாங்கும் தட்டுகள் மற்றும் கப்புகள் கொஞ்சம் திக்கானதாக நல்ல குவாலிட்டி உள்ளதாக வாங்க வேண்டும். இல்லேன்னா தட்டில் சாப்பாடு வைத்து கையில் பிடிக்க முடியாமல் கீழே விழுந்து நம் மானத்தை வாங்கும்.

விருந்துக்கு சமைத்து மீதம் வரும் உணவுகளை நண்பர்களுக்கு பேக் செய்து கொடுக்க நல்ல டிஸ்போசபில் மைக்ரோவேவ் சேஃப் கண்டெய்னர்கள் மற்றும் பாக்ஸ் வாங்கி வைத்திருந்தால் பேக் செய்வதும் சுலபம். இல்லேன்னா அதிக விலை கொடுத்து வாங்கிய டப்பர் வேர்களை இழக்க வேண்டி வரும் :-)

விருந்துக்கு குழந்தைகள் வருகிறார்கள் என்றால் அவரவர் வயதுக்கு தகுந்த சில விளையாட்டு சாமான்களை வாங்கி வைப்பது நல்லது. உதாரணத்திற்கு கலரிங் புக்ஸ்,க்ரேயான்ஸ், பில்டிங் ப்ளாக்ஸ். ஓரளவு வளர்ந்த குழந்தைகள் என்றால் அவர்களுக்கான கதை புத்தகங்கள், யுனோ போன்ற கார்ட் கேம்கள். நம் வீட்டில் அதே வயது குழந்தைகள் இருந்தால் பிரச்சினையே இல்லை. அவர்கள் விளையாடிக் கொள்வார்கள்.

விருந்தில் வெளிநாட்டவர்கள் இருந்தால் வனிதா சொன்னது போல் அப்படியே எடுத்து சாப்பிடுவது போல் தயார் செய்ய வேண்டும். சப்பாத்தி செய்து அதன் நடுவில் ஏதேனும் ட்ரை கறி வைத்து ரோல் செய்து ஒரு முனையில் ஃபாயில் அல்லது டிஸ்யூ சுற்றி வைத்தால் அவர்களுக்கு சாப்பிட சுலபமாக இருக்கும்.

தேவையான அளவுக்கு ஐஸ் கட்டிகள் மற்றும் பானங்கள் ஸ்டாக் வைத்திருக்க வேண்டும். விருந்தின் இடையில் காலியாகி விட்டது என்று கையை பிசைந்து நிற்க வேண்டாம்.

வீட்டில் உடையக் கூடிய அலங்கார பொருட்கள் குழந்தைகள் கைக்கு எட்டும் இடங்களில் இருக்குமானால் அவற்றை மாற்றி வைப்பது நல்லது. இல்லேன்னா குழந்தைகள் ஓடியாடி விளையாடும் போது தவறி கீழே விழுந்து உடைந்து அனைவருக்கும் தர்ம சங்கடம் கொடுக்கும்.

சில குழந்தைகளுக்கு(சில பெரியவர்களுக்கு கூட) நம் வீட்டிலுள்ள அலமாரி போன்றவற்றை ஆராயும் பழக்கம் இருக்கும். முடிந்த வரை இவற்றை பூட்டி வைப்பதே நல்லது. எல்லாம் பட்ட அனுவம்தான் :-(

இது விருந்துக்கு செல்பவர்களுக்கு:

விருந்துக்கு சென்றால் ஒப்புக்கு சாப்பிடாமல் நன்றாக சாப்பிட வேண்டும்.(சமையல் நல்லா இல்லேன்னா வேற வழியில்லை). அப்போதுதான் நம்மை விருந்துக்கு கூப்பிட்டு நமக்காக இவ்வளவும் செய்தவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதுதான் மரியாதையும் கூட.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மிக்க நன்றி கவிசிவா.... உங்க பதிவு தான் முதல் பதிவு. நான் பாதியில் வேறு வேலையாக வெளியே போக வேண்டியதாயிட்டுது. இப்ப தான் வந்தேன். பாதியில் விட்டு போனதால் யாருடைய பதிவும் இருக்கும்'னு நினைக்கவே இல்லை. :) உங்க பதிவை பார்த்ததும் சந்தோஷமா இருக்கு. நிறைய விஷயங்களை சொல்லி இருக்கீங்க. நிச்சயம் எல்லாருக்கும் உதவும்.

டின்னர் செட் என்று சொன்னதும் ஒன்று சொல்கிறேன்.....

1. அழைப்பு எத்தனை பேருக்கு என்பதை தட்டு, க்லாஸ், ஸ்பூன் எல்லாம் எத்தனை வைத்திருக்கீங்கன்னும் கணக்கு பண்ணி கூப்பிடுங்க. காரணம் எல்லாராலும் எல்லா சமையத்திலும் யூஸ் அன்ட் த்ரோ பயன் படுத்த முடியாது. (நாங்கலாம் வீட்டில் பார்ட்டி குடுப்பதாக இருந்தா நிச்சயம் யூஸ் அன்ட் த்ரோ'கு அனுமதி இல்லை). அதனால் வேறு வழியே இல்லாமல் டின்னர் செட் பயன்படுத்தும் போது குறைவாக இருக்க கூடாது.

2. குழந்தைகளுக்கு எப்போதும் பெரியவருக்கு குடுக்கும் க்ளாஸ் கப், கண்ணாடி தட்டுகள் எல்லாம் குடுக்காம இருப்பது நல்லது. எதையாவது போட்டு உடைச்சு பார்ட்டியை சொதப்பிடுவாங்க.

3. தேவையான அளவுக்கு டிஷூ பேப்பர்கள் நல்ல தரமானதாக வாங்கி டேபில் மேலும், உணவு எடுத்து சென்று அவர்கள் சாப்பிடும் இடத்திலும் வைங்க. எதாச்சும் சிந்தினா அவங்க டென்ஷன் ஆயிடாம இருக்கவும் இது உதவும்.

மிச்சத்தை நாளை வந்து தொடர்கிறேன். இப்போ நல்லா தூக்கம் வருது. :D

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கேட்கணும்ன்னு நினைச்சேன்.. நீங்களே ஆரம்பிச்சிட்டீங்க.. நன்றி வனிதா, கவிசிவா .. அப்படியே மெனுஸ் கூட இதுலையே எல்லாரும் போட்டாங்கன்னா ஹோல்சம்மா வசதியா இருக்கும் எடுத்து பார்க்க.. பட்டு பட்டு பாதி தெரிஞ்சிகிட்டேன்.. மிச்சத்தை நீங்க எல்லாரும் சொல்லுங்க..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

மிக்க நன்றி சந்தனா.... நீங்கபட்டு தெரிஞ்சிகிட்டதையும் இங்க சொல்லுங்க, மற்றவருக்கு உதவும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா ஒரு இழை ஆரம்பித்தால் நிச்சயம் அதில் விஷ்யம் இருக்கும்.நல்ல பயனுள்ள தகவல்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மிக்க நன்றி ஆசியா..... உங்க பதிவுகள் பார்த்து வெகு நாட்கள் ஆகிறது. :) உங்கள் அனுபவத்தையும் சொல்லுங்க, எல்லாருக்கும் உதவும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா..,எப்படி இருக்கீங்க?நல்ல நல்ல டிப்ஸை சொல்லி அசத்தும் தங்களுக்கு முதலில் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்.புதிதாக வெளிநாட்டிற்க்கு வந்தவர்களுக்கும்,தனியே இருந்து விருந்து ஏற்பாடு செய்ய இருப்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ள பக்கமாக இது இருக்கும் என நம்புகிறேன்.
ஏன் சொல்றேன்னா..,ஒன்பது வருடங்கள் முன்பு நான் திருமணமாகி வெளிநாடு வந்ததும் விருந்து என்றால் பல மணி நேரம் கிச்சனில்தான் என் பொழுது போகும்.இதற்க்கு திருமணத்திற்க்கு முன்பே சமைக்க தெரிந்தவள்தான். இருந்தாலும் யோசனை சொல்ல,உதவி செய்ய என ஊரில் பெரியவர்கள் இருப்பார்கள்.இங்கு நாமே யோசித்து,நாமே செய்வது என்பது மலை போன்றவிஷயமானது.
நீங்கள் 12-வது குறிப்பில் சொன்னதுப் போல் கொஞ்சக் காலம் விருந்தினர் வந்தபின்னும் சமயலறையிலேயே இருந்துக் கொண்டிருப்பேன்.அது வந்தவர்களுக்கும் தர்மசங்கடம்.கணவரிடமும் நன்றாக திட்டு வாங்கி கொள்வேன்.(எல்லோரும் போன பிறகுதான்.)இப்போது சமைத்த சுவடுகள் கூட இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்.உங்கள் குறிப்பு நிறைய பேருக்கு உபயோகமாக இருக்கும்.இப்போதைக்கு எனக்கு தோன்றியது சமைத்த பின் சமையலறையை ஒழுங்குபடுத்தி நீட்டாக வைத்திருக்க வேண்டும்.சிலர் அலம்பாமல் அப்படியே சில பாத்திரங்களை போட்டு வைத்திருப்பார்கள்.பெண் விருந்தினர்கள் வந்தால் எப்படியும் சமையல் அறையை நோட்டம் விடுவது வழக்கம்.சில பெரியவர்கள் அதிகம் சுத்தம் பார்ப்பார்கள் இல்லையா..நாம் வைத்திருக்கும் அழகிலேயே அவர்களுக்கு சாப்பிட தோண வேண்டும்.
வேறு ஏதும் தோன்றினால் மீண்டும் இங்கு வருகிறேன் வனி.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஆம் அப்சரா.... நல்ல குறிப்பு !! நானும் எப்போதும் கிட்சனை சமையல் முடிந்ததும் சுத்தம் செய்து விட்டு தான் பார்ட்டிக்கே தயாராவேன். உங்க கருத்தை சொன்னதுக்கு மிக்க நன்றி. :) கண்டிப்பா வேறு ஏதும் நினைவு வந்தா சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்