பட்டிமன்றம் 9 - வரலாறு

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பட்டிமன்றத்துக்கு நடுவரா இருக்க வந்திருக்கிறேன்...எனக்கு பிடித்த நிறைய தலைப்புகள் பார்த்தேன் ஆனால் அவை இதற்கு முன்னால் வாதாடியதாகவும், முன்றைய தலைப்புகளுக்கு சம்பந்தம் இருப்பதாகவும் இருக்கிறது... அதனால் எனக்கு பிடித்த இன்னும் சொல்ல போனால் நானும் என் கணவரும் அடிக்கடி வாதாடும் தலைப்பான திருமதி.ஆயிஸ்ரீ அவர்கள் கொடுத்த தலைப்பில் இந்த பட்டிமன்றத்தை தொடங்கலாம் என்று நினைக்கிறேன்...

தலைப்பு “வரலாறு என்னும் பாடம் குழந்தைகளுக்கு தேவையா? இல்லையா?”

இன்றைய காலகட்டத்தில் அதுவும் இந்த அவசர உலகத்தில் படிக்க,பயனுள்ள பல விஷயங்கள் இருக்கும் போது கடந்த கால வரலாறு தேவையா? தேவைதான் எனில் அதன் அவசியம் என்ன என்பதை இந்த பட்டிமன்றத்தில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்..

சின்ன குழந்தைகளுக்கு நிறைய பாடசுமை இருக்கிறது இதில் தேவையில்லாத சில பகுதிகளை நீக்குவதும் அவசியம் எனும் போது வரலாறு தேவையில்லை என்று பலர் கூற நான் கேட்டு இருக்கிறேன்...இதில் தங்கள் அனைவரின் கருத்தை கேட்கவே இந்த பட்டிமன்றம்..

இந்த பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற தங்கள் அனைவரையும் வருக வருக என் அனைவரையும் வரவேற்கிறேன்..

அன்புடன்
தாமரை

நடுவர் தாமரை மற்றும் இரு அணித்தோழியர் அனைவருக்கும் வணக்கம்..
வரலாறு என்ற பாடம் தேவையா? இந்த பாடம் படிப்பதால் என்ன பயன்? பாடமாக குழந்தைகளுக்குத் தேவையில்லை என்ற அணியில் வாதிட விரும்புகிறேன்.

உண்மையில் வரலாறாய்ப் போன கக்கனையும் காமராஜரையும் பற்றிய, அவர்தம் தூய்மையான அரசியல் பற்றி உள்ளதா வரலாற்றில்?

மேல் நாட்டு வரலாற்றை அறிந்து கொள்ளும் அளவு
நாம் நம் நாட்டு, நம் பாட்டன் வரலாற்றை
அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறோமா?

சுதந்திர போராட்ட தியாகிகளாய் மாறிப் போனவர்கள், உண்மையில் வரலாறு படைத்தவர்கள். தம் இன்னுயிர், உறவுகள் இழந்து வரலாறாய் மாறினவர் ஏராளம்..
சுதந்திர தினம் அன்று எவ்வளவு பேர் நம் சுதந்திர போராட்ட வரலாற்றை நினைத்துப் பார்க்கிறோம்?.. ஒரு நொடி கூட இல்லை என்று தான் சொல்ல வேண்டும்,...

இன்னும், தஞ்சை பெரிய கோவிலில் நிற்கும் போது, செங்கோல் ஏந்தி எம் மாமன்னன் ஆண்ட மண்ணிது என்று எண்ணும் போது ஏற்படும் சிலிர்ப்ப்பு....அக்கோயிலை நாம் பராமரிக்கும் விதத்தில் சட்டென மறைந்து போகிறது.. இது காலம்காலமாய் கதைகள் சொல்லும் மாமல்லபுர சிற்பங்கள் முதல் குக்கிராமம் வரை மறைந்து கிடக்கும் நம் முப்பாட்டன் வரலாற்று சின்னங்களின் நிலை வரை பார்த்தாலே தெரியும்..

வரலாற்றின் அருமை உணராத பெரியவர்கள்... எதற்கு குழந்தைகளுக்கு மட்டும் ஒரு சுமையாய் வரலாறு பாடம்?

படிப்பது வேறு, வாழ்க்கை வேறு..
வரலாற்றில் மறைக்கப் பட்ட உண்மைகள் ஏராளம்...

(சம காலத்தில் இன்று, கண்கூடாக நாம் பார்க்கிறோம் ... நம் கைக்கெட்டும் தொலைவில் ... கண்ணீரால் மறைக்கப்பட்டு, தண்ணீரில் எழுதப்படும் உண்மை வரலாறு யாருக்குத் தெரியும்? )

இன்றைய காலத்தில் எவர் வலியவரோ. அவர் எழுதுவது தான் நாளைய வரலாறா?
அதை தான் நம் குழந்தைகள் படிக்க வேண்டுமா? அதில் இருந்து எதைத் தெரிந்து கொள்ள போகின்றனர்...அன்பையும் கருணையையும் சகிப்புத்தன்மையையும் உண்மையையும் நேர்மையயும் குழி தோண்டிப் புதைத்து விட்டு வலியவன் வகுக்கின்ற வரலாறு தேவையில்லை....

வாய்ப்புக்கு நன்றி, விரைவில் சந்திப்போம்.. (நிறைய வேலை ...)

அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

பத்தாவது படிக்கும் ஒரு மாணவியர் கூட்டத்தை பேட்டி கண்டதில் அவர்கள் ஆன்ட்டி,நாங்க கதை பேசி சிரிச்சி மகிழ்ச்சியோடு இருக்கிறதே அந்த ஒரு ப்ரீயட் தான்,அதையும் வேண்டாம் என்று சொன்னால் மண்டை காய்ந்து போய் விடுவோம்,என்று கோரஸாக சொன்னார்கள்.ஆக மாணவக்கண்மனிகளும் வரலாறு பாடத்தை எனக்கு தெரிந்து யாரும் வேண்டாம்னு சொல்லலை,வரலாறு பாடத்தை ஒட்டியே வரும் புவியியலை வேண்டுமானால் அறுவை என்று சொல்லி கேள்விபட்டிருக்கிறேன்.மற்றவர்கள் என்னென்ன கருத்துக்களோடு வருகிறார்கள் என்று
பார்ப்போம்,
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வாங்க வாங்க முதல் ஆளாய் எதிரணியில் வந்திருக்கிறீர்கள், இப்போ தான் எனக்கு சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது.. எனக்கு நிம்மதி கொடுத்த உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து..

//இவர் இவரை இந்த ஆண்டு இந்த நாள் சந்தித்தார் என்று தேதிகளை மனப்பாடம் செய்வதில் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை//

எனக்கும் இதே எண்ணம் இருந்தது படிக்கும்போது!

///முதலாம் உலகப் போர் இரண்டாம் உலகப்போர்னு போருக்கு வரிசை எண்கள் கொடுத்து மூணாவது எப்போ சார் வரும்னு மாணவனை எதிர்பார்க்க வைப்பதுதான் இந்த வரலாற்றுப் பாடம்.///

100% உண்மை, நான் ஸ்கூல் படிக்கும்போது ஒரு மேதாவி எழுந்து 2ம் உலகபோர்னு சொல்லாதீங்க, கடைசி உலகபோர்னு சொல்லுங்க, நீங்க சொல்றது 3,4னு தொடரும்னு சொல்றமாதிரி இருக்கு, என்னால போருக்கு போகமுடியாது, எனக்கு உடல் தைரியமும் இல்ல,மன தைரியமும் இல்லனு சொன்னாள்..உங்க வரிய படிச்சதும் ஸ்கூல் டேஸ்க்கு போய்ட்டேன்,நன்றி..

///நான் வரலாறு தேவையில்லை என சொல்லவில்லை. ஆனால் அதைப் பாடமாக்கி மாணவர்களுக்கு அதன் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்த வேண்டாம் என்பதே என் வாதம்.///

தங்கள் வாதம் ஏற்று கொள்ளவேண்டியதுதான்..

நேரம் கிடைக்கும்போது வந்து உங்கள் வாதங்களை தொடருங்கள்...

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க? அப்படியெல்லாம் இப்போவே எந்த அணியிலும் சாய்ந்துவிடமாட்டேன்...

///அடுத்து நடுவர் அவர்களே! எத்தனையோ விஷயங்கள் மக்களும் குழந்தைகளும் தெரிஞ்சுக்க வேண்டியது நூலகம்,நூல் நிலையங்களில் புத்தகமா இருக்கு... எல்லாத்தையும் எல்லோரும் வாங்கி படிக்கிறீங்களா என்னா?///

அழகா கேட்டு இருக்கீங்க, பதில் பிளீஸ்...

உங்களோட 3பாயிண்ட்ஸ்ம் 3முத்துக்கள் மாதிரி அழகா இருக்கு,

//இல்லையென்றால் யாரும் தேடிப்போயி படிக்க வாய்ப்பேயில்லை// யோசிக்க வேண்டிய விஷயம் தான், ஆனால் பிள்ளைங்க வாழ்க்கைக்கு தேவைப்படும் பல விஷயங்கள் தங்கள் பாடசுமையில் படிக்கும் போது எதற்கு இந்த வரலாறு பயன்படுது? பொது அறிவுக்கு மட்டுமா இல்ல வேறு ஏதாவது காரணம் இருக்கா? அதாவது வரலாறு தேவைதான் என்று பார்க்கும்போது எவ்வளவு யூஸ்னு பார்க்கனும் இல்லையா? அதற்காக மட்டும் தான் கேட்டேன், மற்றபடி எதிரணினு முத்திரை குத்திராதீங்க என்னையும்...

உமாவோட நிறைய கேள்விகளுக்கு பதிலும் விளக்கமும் கொடுத்திருகீங்க இப்போதான் கொஞ்சம் சூடு பிடிக்கிற மாதிரி இருக்கு, நடக்கட்டும்...

///இலக்கை அடைய ஒரு சுலபமான வழியாக மட்டுமே இப்பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்கிறார்கள்./// உண்மைதாங்க...

///இத்துறை மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. இது நிதர்சனமான உண்மை. ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.///

கட்டாயம் ஏற்றுகொள்கிறேன்...ஆனால் சமீபத்தில நாடோடிகள் படம் பார்த்தேன், அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு, சில பல போரட்டத்துக்கு பிறகு வேலை கிடைச்சிருச்சே! சரி அது படம் தானே?

///காந்தி இர்வின் ஒப்பந்தத்தை படித்துக் கொண்டிருக்கும் மாணவனுக்கு இன்றைய அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை பற்றி எதுவுமே தெரிவதில்லை///

நச்! காந்திய பற்றி தெரியுறதே பெரிய விஷயம், வரலாறு எனும் பாடத்திலும் பாஸ் பண்ணினால் தான் அடுத்த வகுப்புக்கு போகமுடியும் என்ற ஒரே காரணத்துக்கு மட்டும் அத படிக்கிறவங்க ரொம்ப அதிகம்...

நன்றிப்பா நேரம் கிடைத்தால் திரும்ப வாங்க...

மன்னிக்கவும் தங்கள் 2பேருக்கும் பதிவு எழுத நேரமில்லை அதனால் கொஞ்ச நேரம் அப்புறம் வந்து சந்திக்கிறேன், தங்கள் பதிவுகளுக்கு மிகவும் நன்றி...

வணக்கம்.
கவிசிவா வரலாறு தேவை ஆனால் கற்கத் தேவையில்லை என்கிறீர்களே....அது எப்படி சாத்தியம்....
சின்ன வயதில் எல்லா பாடங்களையும் படிக்கிறோம் ....நமக்கு அதிக ஆர்வம் இருக்கும் பாடத்தை தெரிவு செய்து மேற்படிப்பு படிக்கிறோம்...இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை....
பத்தாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு புவியியல் படிக்கிறோம்.
பதினொன்றாம் வகுப்பு செல்லும்போது தமிழ் ஆங்கிலத்துடன் ஏதாவது ஒரு பாடத்தை முக்கிய பாடமாக தெரிவு செய்கிறோம்...
இளங்கலையில் இன்னும் தெளிவாக தெரிவு செய்கிறோம். உதாரணமாக அறிவியல் தெரிவு செய்தவர்கள் இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்கிறார்கள்...
முதுகலையில் தெரிந்தெடுத்த பாடத்தை மட்டுமே படிக்கிறோம்...
இன்னும் மேற்படிப்புக்களுக்கு செல்லச் செல்ல இன்னும் தெரிவு செய்த பாடத்திலேயே ஒரு பகுதியை தெரிவு செய்கிறோம்....
இவ்வாறு பின்னாளில் தெரிவு செய்ய முன்னாளில் எல்லாத் துறையிலும் அறிமுகம் வேண்டும்....
எனவே சிறு வயதில் வரலாறு மட்டுமன்றி எல்லா பாடங்களும் அவசியம் என்கிறேன்.....

கவிசிவா அசோகர் மரம் நட்டார் குளம் வெட்டினார் எல்லாம் தேவையில்லை என்று எப்படி கூறமுடியும்? அந்த கால ராஜாக்கள் செய்த நன்மை தீமைகளை தெரிந்து கொண்டு இந்த கால ராஜாக்களை நாம் தெரிவு (ஜனநாயகமல்லோ) செய்யலாமே...நாமே ராஜாவானால் அவர்களின் நன்மையான செயல்களை பின்பற்றி தீமையான செயல்களை விடுத்து நல்லாட்சி செய்யலாமே...
வரலாற்று இடங்களை பாதுகாக்கவேண்டியது அவசியமே...இதைத்தானே சொல்ல வருகிறீர்கள் ஆயிஸ்ரீ ....கண்டிப்பாக செய்ய வேண்டும்...
நவீன வரலாறும் தெரிய வேண்டும் என்கிறீர்கள்....சரியாகத்தான் தோன்றுகிறது இருப்பினும் நிறைய அரசியல் விளையாட்டுக்கள் இதனை தடுக்கிறது...அதற்காக குழைந்தைகளுக்கு வரலாறு பாடம் தேவையில்லை என்று கூற முடியாது... சிறியவர்களுக்கு பெரியவர்கள் இவற்றை சொல்லிக் கொடுக்கலாம்..எங்கள் வீட்டில் செய்தி பார்க்கும்போது குழந்தைகளுக்கு இலங்கை பிரச்னை, ஈராக் போர் பற்றி சொல்லிக் கொடுக்கிறோம்...
எனவே கவிசிவா மற்றும் ஆயிஸ்ரீ இருவருக்கும் மட்டுமல்லாது எதிரணியில் சேரப் போகும் அனைவருக்கும் வரலாறுப் பாடம் தேவை என்று எம் அணியினரான இலா, ஸீத்தாலஷ்மி, ஆசியா மற்றும் எம் அணியில் சேரப் போகும் அனைவர் சார்பிலும் தெரிவித்து கொள்கிறேன்...

வந்துட்டேன் நடுவர் அவர்களே..... யார் சொன்னது சும்மா நல்ல தலைப்புன்னு சொன்னேன்னு.... உண்மையில் பலரும் இன்று பல பாடங்கள் தேவையான்னு யோசிக்க வேண்டி இருக்கு. படிப்பறிவை விட இன்று பட்டு தெரியும் அறிவே பலருக்கும் வாழ்வில் கை குடுக்குது.... எதுக்கு மூட்டை தூக்கிட்டு போய் படிச்சோம்'னு தெரியல. ;)ஏதோ படிச்சோம், எழுதினோம்'னு மறந்து போறாங்க பசங்க. அப்படிபட்ட ஒரு பாடம் தான் வரலாறும் !!!

ஆசியா சொல்ற மாதிரி ரிலாக்ஸ் பண்ண ஒரு பாடமா போச்சு இது. அந்த காலத்து ராஜா என்ன நல்லது செய்தார், கெட்டது செய்தார்'னு தெரிஞ்சுக்க வேண்டிய அவசியத்தைவிட, இப்போ இருக்க கால கட்டத்துக்கு இப்போதைய ஆட்சி, அரசியல் இதை பற்றி தெரிஞ்சா புரோஜனமாவது உண்டு.

இந்த காலத்து பாடத்தில் இலங்கை பிரெச்சனை அந்த காலத்தில் இருந்து உண்மையில் நடந்தது என்ன என்று தெரிகிறதா??? ஈராக்கில் என்ன பிரெச்சனை நடந்தது என்று தெரியுமா??? அவ்வளவு ஏன் பாடத்தில் சொல்லி இருக்கும் ஹிட்லர், நெப்போலியன் கூட முடிவு என்ன, உண்மை தானா அது என்று சொல்லிதரும் ஆசிரியருக்கே இன்னும் சரியா தெரியாது..... ;) அது தான் வரலாறு.

வரலாறு என்பது அவரவர் விருப்பத்துக்கு ஏற்றபடி தேடி படித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமே தவிர, பாடமாக வைத்து உதவாத பழமையை பேச வேண்டிய அவசியம் இல்லை. சரி.... வேணும் வேணும் என்று சொல்பவர் எல்லாம் எத்தனை பேர் அவர் படித்த வரலாறை நினைவில் வைத்திருக்காங்க??!!! படிக்கும்போது வெறுப்பாக கடனேன்னு படிச்சவங்க, பின்னாடி அதுல உள்ள விஷயம் தேவைன்னு தோனுனதும் மீண்டும் எங்கயாவது படிச்சு தான் தெரிஞ்சிக்கறாங்க. ஆக படிக்க வேண்டிய வயசுல தேவை இல்லாத சுமை தான் வரலாறு. அதை தெரிஞ்சுக்க வயசும் பக்குவமும் வரும்போது தேடி தெரிஞ்சிக்கிறது தான் அறிவு. ஒன்னும் புரியாத வயசில் மனப்பாடம் செய்து அன்று பரிட்சையில் பாஸானா போதும்'னு படிக்கும் வரலாறு பாடம் தேவை இல்லாத ஒன்றே!!!!

நடுவர் அவர்களே..... எம் கட்சியில் ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள் என்று தவறாக நினைக்காதிங்க.... நாட்டில் நல்லதை சொல்ல வெகு சிலரே உண்டு..... தேவை இல்லாததுக்கு போராட பெரிய கூட்டமே கூடிவிடும். ;) இந்த கேள்வியை நீங்க படிச்சு முடிச்ச நம்ம அறுசுவை மக்களை கேட்டதை விட, வீட்டில் இருக்கும் பள்ளி குழந்தைகளை கேட்டு இருந்தால் நான் சொன்னதை தான் சொல்லி இருப்பாங்க. தீர்ப்பு சொல்லும் முன் எதுக்கும் வீட்டில் ஒரு முறை கேட்டுடுங்க.... (உங்க நன்மைக்கு தான் சொல்றேன்).

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வரலாறு தேவை இல்லை, கஷ்டம்,கட்டாயப்படுத்த வேண்டாம் என்றெல்லாம் ஒதுக்கினால் பின் எங்கு தேடிப்போய் படிப்போம். அவசியம்(மார்க்) என்று பாடமாக படிக்கும் போதே தேவை இல்லை, கஷ்டமென்று தோன்றினால் எப்படிப்பா பின் கட்டாயமில்லாமல் தேவை என்று படிப்போம்(ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது). இப்போ இதை தேவையில்லை என்று ஒதுக்குவோமானால் நாளை கணக்கு கஷ்டம்,அறிவியல் கொஞ்சம் போதும் என்று ஒவ்வொருவருக்கும் ஏற்ற மாதிரி ஒதுக்கமுடியாது.

வாழ்க்கையில் இன்னும் படிக்கவேண்டியது எவ்வளவோ இருக்கு , காலம் போய் கொண்டுதான் இருக்கு எங்கு படிக்கிறோம்,டைம் இல்லை, சூழ்நிலை சரி இல்லை என்று போய் கொண்டிருக்கிறது.
அதனால் அவசர உலகில் படிக்கவேண்டியவற்றை எளிய முறையில், புரிந்து படித்து கற்பவையின் அளவை கூட்டிக்கொண்டேதான் போக வேண்டுமே தவிர குறைக்க கூடாது. //இன்றைய காலகட்டத்தில் அதுவும் இந்த அவசர உலகத்தில் படிக்க,பயனுள்ள பல விஷயங்கள் இருக்கும் போது கடந்த கால வரலாறு தேவையா? // என்று விட்டுவிட்டால் பின் வரும் சந்ததி இந்தியச்சுதந்திரத் தினம், குடியரசு தினம், குழந்தைகள் தினம், பழைய மன்னவர்கள், இலட்சியம், வீரம் மற்றும் பலவற்றை அறியாமல் அழிந்து பாரம்பரியம், கலாச்சாரம் மறைந்து மண்ணோடு போய் விடும், எனவே ஆரம்பமான ஆணிவேர் முக்கியமானது.

அவசர உலகம்- முன்னேற சாதிக்க அதிகம் என்பதற்க்காக, கலாச்சாரத்தில் சிறந்து விளங்கும் நாடான நம் நாட்டை பற்றி பின் வருபவர்கள் அறியவும் அதன் அருமை, பெருமை தெரியவும் வரலாறு உதவுகிறது.அது மட்டுமின்றி பிறநாட்டை பற்றி பெருமை கொள்ளாமல் நம் நாட்டிலும் இப்படி நடந்ததா? இவர்கள் இவ்வாறு வாழ்ந்தார்கள்,போராடினார்களா? சாதித்தார்களா? என்று எண்ணி ஏன் நம்மால் முடியாது என்ற எண்ணத்தை உருவாக்க உதவுகிறது. வரலாற்றை பள்ளி படித்து நன்மை அடையவில்லை என்று மனதார யாரும் கூற முடியாது.
பள்ளி பருவத்தில் இருந்தே சிறிது சிறிதாக ஆரம்பம் முதல் கற்றல் நல்லது, எளியது,புரியக்குடியது.
தேவைஇல்லை என்று தாய் நாட்டை பற்றிய பெருமை விளக்கும் வரலாற்றை பாடத்தில் இருந்து ஒதுக்கவேண்டாம் என்று கூறி விடை பெறுகிறேன், நன்றி.

அன்புடன்,
சுபத்ரா.

with love

மேலும் சில பதிவுகள்