தேதி: November 25, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கோதுமை மாவு - ஒரு கப்
முட்டைக்கோஸ் - கால் பாகம்
காரட் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
உப்பு - அரை தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 4
உருளைக்கிழங்கு - 2
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். காரட்டை துருவிக் கொள்ளவும். முட்டைக்கோஸ், பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை கேரட் துருவலின் மூலம் மெல்லியதாக துருவிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதில் காரட், முட்டைக்கோஸ், பச்சைமிளகாய், வெங்காயம், மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

அதனுடன் உப்பு, கரம் மசாலாதூள் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.

தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். ஏனெனில் காய்கறிகளில் இருக்கும் தண்ணீர் மாவு பிசைவதற்கு போதுமானது. பிசைந்த மாவை ஊற வைக்க வேண்டியதில்லை. பிசைந்தும் சப்பாத்தியாக இடலாம்.

இரண்டாக மடிக்கும் படியான ப்ளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவிக் கொள்ளவும். சப்பாத்தி செய்யும் ப்ரஸ்ஸரில் எண்ணெய் தடவிய ப்ளாஸ்டிக் கவரை வைத்து அதில் ஒரு பெரிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து நடுவில் வைத்து அழுத்தி சப்பாத்தியாக போடவும்.

தோசை கல்லில் எண்ணெய் தடவி சப்பாத்தியை போட்டு எண்ணெய் மேலே ஊற்றி ஒரு நிமிடம் கழித்து திருப்பி போடவும். ஒரு நிமிடம் கழித்து வெந்ததும் எடுக்கவும்.

சுவையான வெஜிடபுள் கார போளி ரெடி. இதை தக்காளி சாஸ் அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.

இந்த குறிப்பை அறுசுவை நேயர்களுக்காக செய்துக் காட்டியவர், திருமதி. <b>கலா ரவிச்சந்திரன்</b> அவர்கள். சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். அனைத்து வகையான சைவ உணவுகளையும் சுவைப்பட தயாரிக்கக் கூடியவர். திருமணத்திற்கு பின் தன்னுடைய நாத்தனாரிடம் தான் சமையல் கற்றுக் கொண்டார்.
