பட்டிமன்றம் - 14 : பெற்றோர்கள் பிள்ளைகளை சார்ந்து இருப்பது சரியா தவறா?

இவ்வார தலைப்பு... நம் தோழி சுரேஜினி கொடுத்தது. "பிற்காலத்தில் பெற்றோர்கள் பொருளாதாரத்தில் பிள்ளைகளை சார்ந்து இருப்பது சரியா தவறா?"

இத்தலைப்பை தேர்ந்து எடுத்த காரணம் இதோ.... இன்றும் நம் நாட்டில் தான் பெண் பிள்ளை மட்டும் போதாது, ஆண் பிள்ளை வேண்டும் பிற்காலத்தில் கஞ்சு ஊற்ற வாரிசு ஆண் பிள்ளை என்று சொல்லப்படுகிறது. கஞ்சி முதல் காசு வரை ஒரு வயதுக்கு பின் பெற்றொர் அனைத்தையும் குழந்தைகள் பொறுப்பில் விட்டு விட்டு அவர்களை சார்ந்தே வாழ்கிறார்கள். இது சரியா தவறா என்று விவாதிக்கவே இப்பட்டிமன்றம். இன்றைய சூழலுக்கு ஏற்ற தலைப்பாக பட்டது. நல்ல ஒரு தலைப்பு தந்த தோழி சுரேஜினி'கு நன்றிகள்.

தோழிகள் அனைவரும் வந்து உங்கள் கருத்தை தெரிவித்து சூடான வாக்கு வாதத்தில் குதிக்கும்படி அன்போடு அழைக்கிறேன். இன்று துவங்கி, வரும் ஞாயிறு அன்று தீர்ப்பு வெளி ஆகும். அதுவரை அனைவரும் வாதாடலாம்.

ஹை வனிதா உண்மையாகவெ சந்தேசமாக இருக்கு.நான் முதல் பதிவுடன் பேதும் என்றுதான் இருந்தேன்.ஆனால் உங்களொட உற்சாக பதிவை பார்தபின்புதான் திரும்பவும் பதிவு பண்ணீனேன்.நன்றி.

தீர்ப்பு சொல்லும் நேரம் ஆயிடுச்சு. :(( எப்படி சொல்ல, என்ன சொல்ல ஒன்னும் புரியாம தான் ஆரம்பிச்சேன். காரணம் தலைப்பு தேர்ந்தெடுக்கும் போது இருந்த தெளிவு இங்கு எல்லாருடைய வாதத்தையும் பார்த்த பின் காணாமல் போனது. மொத்தமாக குழம்பி போனேன். எப்படியோ.... கலங்கிய குட்டையில் தானே மீன் பிடிக்க முடியும்!!! அது போல் குழப்பத்தில் தான் தீர்ப்பு கிடைத்தது!!!

ஒரு மனிதனின் வாழ்க்கை எங்கோ எப்படியோ தொடங்கி எங்கோ எப்படியோ முடிகிறது. இதன் நடுவே பணம் என்பது வந்து போக கூடிய விஷயம். ஆனால் ஒரு கெட்டவனை நல்லவனாகவும், நல்லவனை கெட்டவனாகவும் மாற்றும் சக்தி பெற்றது இது. அப்படி பட்ட மாபெரும் சக்தியை பொருளாதாரம் என்கிறோம். மனிதன் பிறந்த நாள் முதல், கடைசி மூச்சு இருக்கும் வரை அவனுக்கு பணம் தேவை. சாப்பாடு, மருந்து, படிப்பு, திருமணம் என்று எதை எடுத்தாலும் அதுக்கு பணம் வேணும். ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை'னு இதே போல் ஒரு பட்டிமன்றத்தில் நானே தான் தீர்ப்பு சொன்னேன்.

ஒரு குழந்தையை இந்த பூமிக்கு கொண்டு வரும் பெற்றோருக்கு அக்குழந்தையை வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பு நிச்சயம் உண்டு. ஆனால் அது எதுவரை???!!! இதுவே நிறைய பெற்றோர்கள் மறந்து போகும் விஷயம், அல்லது புரிந்து கொள்ள மறுக்கும் விஷயம். பசு ஒரு காலம் வரை மட்டுமே தன் கன்றுக்கு பால் ஊட்டி, நக்கி குடுத்து பாதுகாக்கும்.... குருவி சிறகுகள் வளர்ந்து குஞ்சுகள் பறக்க கற்று கொள்ளும் வரை தான் உணவு ஊட்டும், உடன் வைத்திருக்கும். சிறகுகள் வளர்ந்து பறக்க கற்று கொண்டால் குஞ்சுகள் தானே உணவை தேடி ஆக வேண்டும். இவையும் உயிர்கள் தான், இவற்றுக்கும் பாசம் உண்டு. ஆனால் மனிதன் மட்டுமே பாசம் என்ற பெயரில் பெற்றோரின் உழைப்பை சுரண்டுகிறான்.

பெற்ற பிள்ளையை வளர்த்து, படிக்க வைத்து சமுதாயத்தில் ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வருவதோடு நிறுத்தி கொள்ள பலர் நினைப்பதில்லை. அவன் வீடு வாங்க, கார் வாங்க என பல விஷயத்துக்கும் தங்களிடம் இருக்கும் சேமிப்பை கொடுத்து விட்டு, பின்னாடி தேவை வரும்போது பிள்ளைகள் பார்த்து கொள்வார்கள் என நினைக்கிறார்கள். இந்த வகை செலவுகள் கையில் காசு உள்ளவருக்கு மட்டுமில்லை, காசில்லாதவர் கூட அவர்கள் சக்திக்கு மீறி பிள்ளைகளுக்கு செய்கிறார்கள் என்பதை சொல்லவே!!!

இன்றும் தமிழ் நாட்டில் ஆண் பிள்ளை பெற்றவர்கள் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் போதே அவன் பிற்காலத்தில் தங்களை வைத்து காப்பாற்றுவான் என்ற எண்ணத்திலேயே வளர்க்கிறார்கள். ஆண் பிள்லை பெற்றவர்கள் தங்கள் பிள்ளை வருமானமும் அவர்களுடையது, மருமகள் வருமானமும் அவர்களுடையது என்று நினைக்கிறார்கள். பெண் தானாக முடிவெடுக்கவோ, தன் வருமானத்தை தன் விருப்பப்படி செலவு செய்யவோ பல வீடுகளில் அனுமதிப்பதில்லை. இது இன்றும் பலருக்கு புரியாத விஷயமாகவே உள்ளது. ஆண் பெண் என்று எந்த குழந்தை பிறந்தாலும் வளர்க்கும் பெற்றோர் சமமாகவே பார்க்கிறார்கள். படிக்க வைப்பது, துணி எடுப்பது என எல்லாம் ஒன்றாகவே செய்கிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை 70% திருமணம் பெண் வீட்டார் செய்வது. இதுக்கு தனியா பெண்ணை பெற்றோர் ஒரு சேமிப்பை வைக்க வேண்டும். எல்லாம் முடிந்து வயதான காலத்தில் பொருளாதார ரீதியாக வேண்டாம் குறைந்த பட்சம் ஒரு பெண்ணை பெற்று, ஆண் வாரிசு இல்லாத பெற்றோரை உடன் வைத்திருந்து உணவு, மருத்துவம் பார்க்க கூட இன்றும் பெண்கள் கணவனை தான் சார்ந்து இருக்கிறார்கள். பல மருமகன், மகனை பெற்றோர் இதை அனுமதிப்பதும் இல்லை, பெண்ணை பெற்றவரும் மருமகன் வீட்டில் போய் மகளோடு இருக்க விரும்புவதில்லை. ஆண் மகனை பெற்றால் மட்டும் என்ன??? வரும் மருமகள் வயதான மாமியார் மாமனாரை உடன் வைத்திருக்க விரும்ப வேண்டும். இப்படி பட்ட சூழலில் பெற்றோரா, வாழ்க்கை துணையா என்ற கேள்வி எழுகிறது. இது பல குடும்பங்களில் பந்தங்களை வெட்டி விடுகிறது.
ஆணை பெற்றாலும், பெண்ணை பெற்றாலும் பல பெற்றோர் அனாதை இல்லம், முதியோர் இல்லம் தேடி ஓடும் நிலை இன்றும் இருக்கிறது. சிலர் மகன் அல்லது மகளின் வாழ்க்கை துணை தங்களை அவமரியாதையாக நடத்துவதாக சொல்கிறார்கள். உண்மையில் அப்படி நடக்கவும் செய்கிறது, சில நேரங்களில் நாம் அவர்களை சார்ந்து இருப்பதால் நமக்குள் ஒரு தாழ்வு மணப்பான்மை நம்மை அப்படி நினைக்க வைக்கிறது. அது மட்டும் இன்றி இன்று என் வயதுக்கு எனக்கு பிடித்ததை நான் வாங்குவேன், என் பெற்றோர் இதை விரும்புவார்கள் என்று நாம் எதிர் பார்க்க இயலாது. அப்படி நாம் அவர்கள் விருப்பத்துக்கு மதிப்பு கொடுக்காமல் நாம் விரும்பியதை வாங்கினால் அவர்கள் மனதில் ஒரு வகை ஏக்கம் தான் விரும்பிய பொருளுக்காக நிச்சயம் இருக்கும். எது எப்படி இருந்தாலும் தேவை இல்லாத மனக்கஷ்டம் தான் வளர்கிறது.

புதிதாக திருமணம் ஆனவர்கள் தங்கள் வருமானம் ஒரு நிலையை அடையும் முன்பே குழந்தை பெற்றெடுக்கிறார்கள். பெற்ற குழந்தையின் எதிர் காலத்துக்காகவே வாழ்கிறார்கள். தங்கள் ஆசைகளை மறைத்து, மறந்து வாழ்கிறார்கள். தங்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருப்பதை மறந்து, தன் ஆசைகளை தேவைகளை தியாகம் செய்து பிள்ளைகளுக்காகவே வாழும் பெற்றோரை அவர்கள் வயதான காலத்தில் உடன் வைத்திருந்து காப்பாற்றும் பொறுப்பு பிள்ளைகளை சார்ந்தது. அதை செய்ய மறுப்பவன் பாவி ஆகிறான். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, பெற்றோருக்கு செய்யும் கடமை இருவருக்கும் உண்டு. ஆனால் அப்படி செய்ய வேண்டும் என்றோ, அல்லது செய்யா விட்டாலும் பரவாயில்லை நாம் செய்வோம் என்றோ நினைத்து பெற்றோர் தன் சேமிப்பு முழுவதும் பிள்ளைகளுக்கே கொடுத்து விட்டு வெறும் கையோடு நிற்பது தவறு.

எந்த ஒரு சமையத்திலும் மனிதன் தனக்காகவும் வாழ வேண்டும். இல்லை என்றால் ஒரு கட்டத்தில் நாம் என்ன வாழ்க்கை வாழ்ந்தோம் என்ற வெறுப்பே அவர்களை கவலை, நோய் என முடக்கி விடும். இன்று பல பெற்றோர்களும் எல்லாம் இருந்து எதையும் தங்களுகென்று அனுபவிக்காமல் பிள்ளைகளுக்கு செய்து விட்டு தனியாக நிற்கிறார்கள். பெண்ணை பெற்றாலும், ஆணை பெற்றாலும் கையில் சேமிப்பு இருக்கும்வரை மட்டுமே ஒரு மனிதன் மற்றவறால் மதிக்கப்படுகிறான் என்பது ஏற்று கொள்ளபட வேண்டிய கசப்பான உண்மை.

ஆகவே பெற்றோரை கடைசி காலத்தில் தங்களோடு வைத்து பார்த்து கொள்ள வேண்டிய கடமை பிள்ளைகளுக்கு உண்டு. அதே சமையம் எந்த சூழ்நிலையிலும் பொருளாதார ரீதியாக பிள்ளைகளை சாராமல் இருக்க திட்டமிட வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கும் உண்டு. இது அவர்கள் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, அவர்கள் பிள்ளைகள் வாழ்க்கையும் நன்றாக இருக்கவே!!!

பங்கு பெற்று பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்த உதவிய தோழிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். அனைவரும் ரொம்ப சிறப்பா வாதிட்டீங்க. வாழ்த்துக்கள். :) அப்படியே அடுத்த பட்டிமன்றத்துக்கு யார் நடுவரா வர விரும்பறீங்கன்னும் கை தூக்குங்க பார்ப்போம். அப்பதான் சமத்துன்னு சொல்வேன்.

அப்பாடி ஒரு வழியா தீர்ப்பை சொல்லிட்டேன். குழப்பாம சொல்லிட்டனான்னு எனக்கு தெரியாது!!! ஆனா சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லிட்டேன். அப்பால ஆரும் வந்து இந்த கட்ட பஞ்சாயத்து சொன்ன வனிதா'வ மெரட்ட கூடாது. இப்போதைக்கு வனிதா.... அப்பீட்டு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவர் அவர்களே!
அருமையான, நியாயமான, சமுதாய பார்வையோடு கூடிய அட்டகாசமான தீர்ப்பு!
உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமாய் நிம்மதியாய் இருக்கு!
தீர்ப்பு சொன்ன வாய்க்கு சர்க்கரை போட்டுக்குங்க!
பெற்றோர்கள், பிள்ளைகள் அனைவரின் நெஞ்சங்களும் உங்களை வாழ்த்தும்!
என்னுடன் என் அணியில் வாதிட்ட, எங்களுக்கு சப்போர்ட் செய்தவர்களுக்கு என்னுடைய நன்றிகளும், பாராட்டுக்களும்!
எதிரணியில் வாதிட்ட அனைவரின் வாதங்களும் மிகவும் அருமை.
அவர்களுக்கும் என் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்!

நடுவர் அவர்களே சரியான முடிவு.

ஹை உங்களை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை.அதுதான் ஹை என்று அழைத்திருக்கிறென்.தவறென்றால் மன்னிக்கவும்.பட்டிமன்றத்தில் உங்களொட கருத்துக்கள் அருமையாக இருந்தது.பாராட்டுகள்.

நடுவரே எங்க அணிக்கு சாதகமாக வா தீர்ப்பு சொல்லியிருக்கீங்க?! நான் எதிர்பார்க்கவே இல்லை. சாய்கீதா ரொம்ப அருமையான நியாயமான வாதங்களை எடுத்து வச்சிருந்தாங்க. அவங்களோட பல நியாயமான கேள்விகளுக்கு எங்களிடம் பதில் சத்தியமாக இல்லை. ஆனால் நீங்கள் சொன்ன கருத்துக்களும் அருமை. அதனால் அதிலுள்ள நியாயங்களை புரிந்து கொள்ள முடிகிறது. நடைமுறைக்கு ஏற்ற நல்ல தீர்ப்பு. வாழ்த்துக்கள் நடுவரே!

பட்டிமன்றத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழிகளுக்கும் வாழ்த்துக்கள் பாரட்டுக்கள்! அருமையாக வாதாடிய சாய்கீதாவுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

எல்லாரும் தீர்ப்பை படிச்சாச்சுல்ல? இன்னும் ஏன் காத்துக்கிட்டு இருக்கீங்க? நாட்டாமை சொன்ன மாதிரி எதிர்காலத்திற்கு சேமிக்க ஆரம்பிக்காதவங்க எல்லாம் உடனே ஒரு கணக்கை ஆரம்பியுங்க! எல்லோரின் மகிழ்ச்சிக்கும் அது ரொம்ப ரொம்ப முக்கியம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அருமையான தீர்ப்பு சொல்லியிருக்கும் நடுவர் வனிதாவுக்கு பாராட்டுக்கள்.

சாய்கீதா.....உங்கள் வாதம் சூடாகவும் சுவையாகவும்....இருந்தது....அருமையான கருத்தை சொன்னீர்கள்....

உங்களின் சில கருத்துக்களை மறுத்து
பேசவே மனம் வரவில்லை....!!!!.........

சூப்பரா சொன்னீங்க.....=D>....=D>

வனிதா...கவி சொன்னதுபோல நானும் எதிர்பார்க்காத தீர்ப்புதான்....!!!!

ஆனால் நடைமுறை நியாய/அநியாயங்களை ...வழக்கம்போல் சரியாக அலசி பார்த்து சொல்லியிருப்பது..மறுபடியும் உங்கள் பக்குவப்பட்ட அறிவை பறைசாற்றுகிறது...=D>...=D>

பட்டிமன்றத்தில் வாதாடிய எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள்...

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

வனிதா, நலமா? யாழினி, சிவ குமரன் நலமா? சிவ குமரன் பெயர் ரொம்ப அழகாய் இருக்கு.
அரட்டைப்பக்கம் எனக்கு ஓப்பன் ஆகறதில்லை. அதான் இங்கு பதிவு.
என் கம்ப்யூட்டர் அவ்வப்போது பதிவுகள் போடமுடியாமல் தகராறு செய்கிறது.
அதனால்தான் உங்கள் தீர்ப்பு பற்றி விளக்கமாக பதிவு போடமுடியலை.
ஆரம்பத்தில் தீர்ப்பு கொஞ்சம் குழப்பமாய்தான் தோன்றியது. எந்த அணிப்பக்கம் தீர்ப்பு சொல்லியிருக்கீங்கன்னு என்னால் புரிஞ்சுக்கமுடியலை.
பிறகுதான், ஒரேயடியாய் ஒரு அணிப்பக்கம் சாயாமல் பெற்றவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தினையும் கொஞ்சம்மாய் எடுத்துரைத்திருப்பதால்தான் என்னுடைய பாராட்டுக்கள்.
ரொம்ப சென்சிடிவ்வான விஷயத்தினை கையிலெடுத்து தீர்ப்பு சொல்வது ரொம்பவும் கஷ்டமான விஷயம்.
அதிலும், இரு அணியினருக்கும் திருப்தியான தீர்ப்பு தருவதற்கு எவ்வளவு மண்டையை உருட்டியிருப்பீர்கள் என்பதனை புரிந்துகொள்ள முடிகிறது.
எதிரணித்தோழிகள் அனைவருக்கும் என்னுடைய மனப்பூர்வமான பாராட்டுக்கள்!
என்னை பாராட்டிய எரிக், கவிசிவா,இளரவசிக்கு நன்றி!
ஜெயந்திமாமி, மதிசுந்தரேசன்,ப்ரியாக்ரிஷ், இவர்களுடன் எங்கள் அணியினை சப்போர்ட் செய்த ராதாஸ்ரீராம் அவர்களுக்கும் என்னுடைய நன்றிகளும், பாராட்டுக்களும்!

மிக்க நன்றி சாய்கீதா.... குழந்தைகள் நலம். நீங்க சொன்ன கருத்துகள் 100/100 உண்மை. ஆனாலும் இன்று பல வீடுகளில் கணவன் கை ஓங்கி இருந்தால் மனைவி பெற்றோருக்கு செய்ய அனுமதிப்பதில்லை, மனைவி கை ஓங்கி இருந்தால் கணவர் பெற்றோருக்கு செய்ய அனுமதிப்பதில்லை, சில நேரங்களில் பெற்ற பிள்ளைகளே நன்றி மறந்து போகிறார்கள், சுருட்டி கொண்டு போக உறவுகள் இருக்கின்றன, பெற்றோர் வேண்டாம் என காதலுக்காக ஓடும் பிள்ளைகள் இப்படி பார்க்கும்போது நிச்சயம் பெற்றோர் தங்களை காத்துக்க வேணும்'னு தான் சொல்றேன். எல்லாம் பிள்ளைக்காக செய்யும் எல்லாரும் சொல்வது "என் பிள்ளை அப்படி இல்லை".... அப்படி நடந்துவிட்டால் "பிள்ளைக்கு வாய்த்த துணை சரி இல்லை".... ஏன் இந்த வேதனை??? உங்கள் பிள்ளை உங்களிடம் எதுவும் இல்லாமல் உங்களை மதிப்பார்கள், ஆனால் அவர்கள் துணை அவர்கள் புகுந்த வீடு இங்கு உங்களுக்கு மரியாதை இருக்க வேணும். அதனால் தான் பிள்ளைகள் செய்வதும் கடமை அதே சமையம் ஒரு வயதுக்கு மேல் உங்களுக்கு மிஞ்சி தான் பிள்ளைகளுக்குன்னும் சொன்னேன். தவறா எடுத்துக்காதிங்க. நான் வழக்கமாக பல அனாதை இல்லங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் போகும் பழக்கம் உண்டு... நடைமுறையில் உண்மை கசப்பாய் தான் இருக்கிறது. மீண்டும் சூப்பரா வாதாடின உங்களுக்கு என் நன்றிகளும், வாழ்த்துக்களும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எரிக்... நேற்று தீர்ப்பு சொல்லும் குழப்பத்தில் உங்க பதிவுக்கு பதில் போட முடியல. மன்னியுங்கள். உண்மையில் முதல் பதிவில் நீங்க பிழையோடு போட்டிருந்தாலும் உங்க கருத்து பிடிச்சுது. அடுத்தடுத்த பதிவுகள் பிழைகள் குறைந்து விட்டன. இனி எல்லா பட்டிமன்றத்திலும் கலக்குவீங்கன்னு நம்பறோம். மிக்க நன்றி. நானும் ஒரு நாள் உங்களை போல் தான் பட்டிமன்றத்தில் நுழைந்தேன்... ஆனால் என் பிழைகள் மட்டும் குறைந்தபாடில்லை. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்