அன்னுராஜ் கவிதைகள்

அம்மா

சுமையைச் சுகமாக்கி
சுமந்து சுகமடைந்தாய்
உதிரத்தை அமுதாக்கி
உயிரூட்டினாய்
பத்தியச் சோறுண்டு
பாதுகாத்தாய்

முதல் உறவாய்
முதல் குருவாய்
முதல் இறையாய்
நிறைந்தாய்

என் உணர்வே
உன் உயிராய்
என் உறவே
உன் உலகாய்
மா(ற்)றினாய்

கைமாறில்லாக் கடனாற்றி
கடனாளியாக்கிவிட்டாய்
பாசம் பொழிந்து மழையானாய்
எனைக் காக்க நெருப்பானாய்
சிறகடிக்க விண்ணானாய்

தன்னலமற்ற தாயே...
நீயின்றி நானில்லையே
ஆயிரம் உறவுகள்
கொண்டாலும்
உனக்கு இணை இல்லையே...

கோயிலில் தொழுதாலும்
அங்கே புன்னகைப்பது
உன் முகம் தான்

கடவுள் கண்முன் வந்தால்
கேட்பேன் ஒரே வரம்
"மீண்டும் உன் கருவறையில்
ஓர் இடம்"

தாயுமானவன்..

இன்பத்தோடு விலகாமல்
துன்பத்திலும் துணை நின்று
உன்
தாரத்திற்கு தாயானாய்...

பத்தியமாய்ச் சோறூட்டி
பத்திரமாய்ப் காப்பாற்றி
என்
தாய்க்கும் தாயானாய்...

நீராட்டி
நிலவைக் காட்டி சோறூட்டி
எனைச் சீராட்டினாய்

நடக்கையில் தடுக்கிட
விழாமல் எழுந்திட
விரல் பிடித்து
வழி நடத்தினாய்

உன் உறவின் முதல் எழுத்தை
கரம் பிடித்து
எழுத வைத்தாய்

தோள்கள் வளர்ந்து
தோழியாய் உயர
சுமைகளைச் சுமந்து
வழிகாட்டினாய்

வாழ்க்கைத் துணையை
கையணைத்து
விழிநீரை விரல் துடைத்து
வழியனுப்பினாய்

நொடிகள் யுகமாக
காலத்திற்கு காத்திருந்து
தலைப்பிரசவத்திற்கு
வந்தவளின்
தலைகோதினாய்

மறுமுறை பிரசவ வலி உனக்கு!

தாய்க்கும் மேலான
தாயுமானவா...

உனக்குப் பிறந்ததில்
உள்ளம் உருகிட
கசியும் கண்களை
கனிவாய்த் துடைக்கும்
கரத்தின் ஸ்பரிசத்தில்
கண் திறந்தேன்...

தொட்டிலில் பூத்த
சின்னப் பூவை
ஸ்னேகமாய் முத்தமிடும்
என் மகளின் தந்தையிடம்
உன்னை உணர்ந்தேன்!

தொடரும்... இந்த
"தாயுமானவன்"
சகாப்தம்.

 
என் உலகம்...

நான்...
தனித்துவமானவள்
இதோ விரிகிறது என் உலகம்...

கோடிக்கோடியாய்
வாசனை மிக்க வண்ண மலர்கள்
இதழ் விரித்து இதமாய்ச் சிரிக்குது இதயத்திலே!

வண்ணப்போட்டி நடக்குதோ?
மலருக்கு இரண்டாக
வண்ணத்துப் பூச்சிகள்
கண்சிமிட்டித் தேனெடுக்குது இதழ்களிலே!

மார்கழி மாத
முன்பனி மூழ்கடிக்க
வண்ணக் கோலத்தின் நடுவே
பூசணிப்பூ
தன்னை அலங்கரிக்க என்னை அழைக்குது!

இலட்சம் மழலைகள் என்னைச் சுற்றி...
கள்ளமற்ற சிரிப்பு
வார்த்தையற்ற பேச்சு!

பறவைகள் சிறகடித்து
வானத்திற்கு வழிகாட்டியது
வானம் வசப்பட்டுவிட்டது!

விண்மீன்களின் விண்ணப்பங்கள்
ஏற்றுக்கொண்டேன்...
சந்திர சூரியன்
முன் வகிட்டில் நிலைபெற
நட்சத்திரங்கள்
பின்னலை அலங்கரிக்க
கோள்களைக் கோர்த்து மாலையணிந்தேன்

கோள்களையாளும் செங்கோல் என் கையில்!

வருடங்கள்
மின்னலாய் மறைந்தாலும்
என்றும் மாறாது
"என் இளமை!"

 

Comments

அன்புள்ள அன்னுராஜ் அருமையாக இருக்கிறது உங்கள் கவிதைகள்.
கடகடவென அறுசுவையில் புதுயதாய் ஒவ்வொன்றை செய்யும் அட்மினுக்கும் எனது பாராட்டுக்கள்.
நல்ல அழகாக கவிதை உண்டாக்கி இருக்கிரீர்கள்..தாயுமானவர் என்றால் அப்பாவா

...

அன்னுராஜ் கவிதைகள் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

தாயுமானவர் என்பது கடவுளுக்கு இருக்கும் பெயர்களில் ஒன்று. ஒரு பக்தைக்காக சிவன் அவள் அம்மா வேடத்தில் வந்து பிரசவம் பார்த்தாராம். தாயும் ஆனவர் என்பதே பொருள். அந்த கவிதையில் ஒரு தந்தை தன் மகளுக்கு எப்படி தாயாகவும் இருக்கிறார் என்பதால் தாயுமானவன்.

அம்மா,தாயுமானவன் கவிதைகள் உணர்ந்து எழுதியவை.அருமை. எப்படி இத்தனை நாட்கள் என் கண்ணில் படாமல் இருந்தது?

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

கவிதைகள் நன்றாக இருக்கின்றன அன்னுராஜ். பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்