முருங்கைக்கீரை பொருமா

தேதி: June 15, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

முருங்கைக்கீரை - 4 கப்
வெண்டைக்காய் - 100 கிராம்
தேங்காய் கீத்து - 3
பொரி அரிசி - கால் கப்
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
இறால் சிறியது - 15
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு


 

முருங்கைக்கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து வைத்துக் கொள்ளவும். வெண்டைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பொரியரிசியுடன் பெருஞ்சீரகத்தை சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். தேங்காயுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி நறுக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை அதில் போட்டு வேக விடவும்.
வெண்டைக்காய் வெந்ததும்,அதனுடன் ஆய்ந்து வைத்திருக்கும் கீரையை சேர்த்து வேகவிடவும்.
கீரை வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதினைச் சேர்த்து கிளறி விட்டு சில நொடிகள் வேக விடவும்.
பின்னர் பொடி செய்து வைத்திருக்கும் பொரியரிசியை சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும். அத்துடன் உப்பு சேர்த்து கிளறவும்.
அத்துடன் இறால் சேர்த்து வேக விடவும். கீரை மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
சுவையான முருங்கைக்கீரை பொருமா கூட்டு தயார். இந்த குறிப்பினை வழங்கியவர் அறுசுவை உறுப்பினரான திருமதி. ஹலிலா பர்வீன் அவர்கள்

இது எங்கள் ஊரில் நோன்பு காலங்களில் மாலை நோன்பு திறக்கும் போது செய்வார்கள். இதில் இறால் சேர்க்காமலும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் ஹலீலா,எப்படி இருக்கீங்க..??.
இந்த குறிப்பு எங்கள் ஊரிலும் செய்வோம்.ஆனால் வெண்டைக்காய் போட மாட்டோம்.பீர்க்கங்காய் தான் சேர்ப்போம்.என்னுடைய குறிப்பில் இதை அனுப்ப நினைத்து கொண்டிருந்தேன்.நீங்கள் செய்துவிட்டீர்கள்.மிகவும் சந்தோஷம்.
தங்களுக்கு எனது பாராட்டுக்களும் ,வாழ்த்துக்களும்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹலிலா மேடம்,
புதுமையான குறிப்பு
இது வரை இந்த குறிப்பு பற்றி அறிந்ததே இல்லை முருங்கை கீரை தான் எனக்கு கிடைக்காது கிடைத்தால் கண்டிப்பாக செய்கிறேன் முருங்கை கீரை தான் போடா வேண்டுமா? வேறு கீரையில் செய்யலாமா ?
மேலும் நல்ல குறிப்புகள் தர மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் ஹலிலா ,
எனக்கு மிகவும் பிடித்தமான உணவு .நானும் இப்படி தான் செய்வேன்,வெண்டைக்காய் இல்லையென்றால் பீர்க்கங்காய் உ.கிழங்கு,முளைக்கீரையுடனும் செய்வதுண்டு.
அன்புடன்
சுல்தான் நஸ்ரின்

அஸ்ஸலாமு அலைக்கும்
ஹலிலா இன்று தான் இந்த குறிப்பு பார்த்தேன்...நல்லா இருக்கு...இப்படி பொருமா தூவி சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சு :(.
ஆசையை கிளப்பிட்டிங்க...எங்கள் வீட்டிலும் இதே முறை தான்..வாழைக்காய் ,உருளை சேர்த்தும் செய்வோம்....சூப்பர்...