பட்டிமன்றம்20- பெண்சுதந்திரம்

பழைய பட்டிமன்ற இழையில் வேறு விஷயங்களும் புகுந்துவிட்டதால் அதே தலைப்பிலான பட்டிமன்றம் இந்த இழையில் தொடரப்படப் போகின்றது. தோழிகள் தங்கள் வாதங்களை எடுத்து வைத்து பட்டிமன்றதை சுவாரசியமாக்க கேட்டுக் கொள்கிறேன்.

"இன்றைய காலக்கட்டத்திற்கு, பெண் உரிமை மற்றும் சுதந்திரம் என்பது அவரவரின் இடச்சூழலை பொருத்து இருக்கிறது.. ஆனால் பொதுவாக அது வளர்ந்து வருகிறதா? இல்லை பெயரளவில் மட்டும் உள்ளதா?"

வாதங்களை அள்ளி வீசுங்கள். நான் வந்து அள்ளிக்கறேன்

தயவுசெய்து யாரும் யாரையும் பெயரிட்டு குறிப்பிட வேண்டாம். எதிரணியினர் என்ற பொதுவான வார்த்தையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என பட்டிமன்ற விதி கூறுகிறது. மீறுபவர்கள் அணிக்கு ஒரு பாய்ண்ட் குறைக்கப்படும் என்ற விதியும் அமுலுக்கு வருகிறது :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

"நம்ம அம்மா இருந்த அடுப்படில தான் நாமும் இருக்கோம். ...........................":
நம்ம அம்மாக்கள் போல் இல்லையே நாம, உங்கள் கணவர் உங்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்காமல் தான் நீங்க அறுசுவை மாதிரியான தளங்களில் உங்கள் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு உங்கள் வீட்டில் சுதந்திரம் கிடைத்திருக்காவிட்டல் நீங்கள் உங்கள் கணவர் , உங்கள் குழந்தை என்ற குறுகிய வட்டத்திலேயே இருந்திப்பீர்களே. இப்படி ஒரு பேச்சாளாரை நாங்களும் இழந்திருப்போமே.
அந்த பொண்ணு தனியா இருக்கும் போது எவ்வளவு தர்மசங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவாள் என்று உங்களுக்கு தெரியுமா? ................................................அதன் பிறகு பெண்களின் வாழ்க்கைக்கு உத்திரவாதம் இருக்கா?
என்ன ஆகும் ஒரு கணவன் தான் கட்டிய மனைவியை சந்தேகப்பட்டால் அவன் மனிதனே இல்லை. அவள் மேல் நம்பிக்கை இல்லாமல் தான் அவளை பிரிந்து அவன் எங்கோ வாழ்கிறானா? பேசுபவர்கள் பேச தான் செய்வார்கள். அது இல்லை நம்ம வாதம்.
"நாம் நினைத்த படிப்பு, வேலைக்கு போக அனுமதி உண்டா?டீச்சர் ட்ரைனிங் போறதுனா போ. இல்லைன்னா வீட்டுலயே கெடன்னு சொல்பவர்கள் தான் அதிகம். அந்த மாறி படிப்புலாம் வேண்டாம். "
நிச்சயமாக இல்லை இப்படி ஒரு சிலர் வேனும்னா சொல்லலாம், பெரும்பாலானோர் நாம தான் படிக்கல நம்ம பெண்ணாவது படிக்கட்டும்னு நினைச்சு அந்த பொண்ணு ஆசைப்பட்டதை படிக்க தான் வைக்கிறார்கள்.

இப்பொழுது பெரும்பாலான கம்பெனிகளில் ஒரு பெண் HR தான் மற்றவர்களை வழிநடத்தி செல்றாங்க, அவங்களுக்கு கீழே எத்தனையோ ஆண்களும் வேலை செய்கிறார்கள். அப்போ அவர்களுக்கு ஒரு நிறுவனத்தயே அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் மனோபலமும், அறிவு திறனும் வளார்ந்து இருக்குனு தானே சொல்லனும்.

"நம்மளை ஆட்டிவைக்கிற remote - அ வேறு ஒருத்தர்கிட்ட (கணவர் அல்லது அப்பா) கொடுத்துகிட்டு வந்திட்டு எப்படிங்க சுதந்திரம்ன்னு பேச முடியுது. "
அப்பாவோ கணவரோ நம்மை ஆட்டி வைக்கிற ரிமோட்ங்குற எண்ணத்தை முதலில் கைவிடுங்க, எப்போவாவது நீங்கள் இது தான் படிக்கனும் இந்தா அப்ளிகேஷன் இதுல கையெழுத்து போடு அப்படின்னு சொல்லி இருக்காங்களா. சரி படிச்சு முடிச்சுட்டியா அடுத்து நீ இதுதான் படிக்கனும். சரி மேல் படிப்பு முடிஞ்சுச்சா உனக்கு கல்யாணம் இந்த மாப்பிள்ளைய தான் பார்த்துருக்கேன் அப்படினு சொல்லி இருக்காங்களா?
எந்த ஒரு கணவராவது நீ இப்படி இப்படி தான் நடந்துக்கனும் நான் சொல்றபடி தான் கேட்கனும் நம்ம பிள்ளைய இதுல படிக்க வைக்கனும். இப்படிலாம் எந்த கணவராவது நடந்துக்குறாங்களா இல்லையே.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அப்பா தன் மகளுடனும், கணவர் தன் மனைவியிடமும் கலந்து ஆலோசித்து தானே முக்கியமான முடிவுகளயே எடுக்கின்றார்கள். ஆனா முன்னலாம் அப்படியா கிடையாது அப்பா இருக்குற இடத்துலயே பிள்ளை நிக்க மாட்டாங்க நிமிர்ந்து பார்த்து பதில் சொல்ல மாட்டாங்க. கணவர் சொல்லுவதற்கு எல்லாம் பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிக் கொண்டுதானே இருந்தாங்க. அப்போ இதுலாம் வளார்ச்சி இல்லைனு சொல்றீங்களா?

நடுவரே

//நிறுவனத்துல அல்லது ஒரு தொழிற்கூடத்துல ஆணுக்கு சமமா பெண்ணும் வேலை செய்யிரது மட்டும் சுதந்திரம் கிடையாது. அந்த ஆண் வாங்கும் சம்பளமும், கூலியும் பெண்ணுக்கும் சமமா கிடைத்தால் தானே சுதந்திரம் வளர்ந்துள்ளது எனலாம//

நன்றாக கவனித்தால், அனைத்து துறையிலும் மேலதிகாரியாய் இருப்பது பெண்களே. ஐ டி, டெக்ஸ்டைல் இன்னும் மற்ற துறையிலும். சம்பளம் ஆணை விட பெண்ணுக்கு குறைவு என்று யார் சொன்னார்கள். சில மார்கெட்டிங் வேலைக்கு அலைய கஷ்டபட்டு பெண்களே அத்துறயை தேர்வு செய்வதில்லை. வீட்டுக்கு வந்தும் சில கடைமைகள் இருப்பதால் ஓரளவு சப்போர்ட் செய்யவே பெண்கள் வேலைக்கு செல்கிறோம். குடும்பம் முதலில் எனும் போது வேலையை விடுகிறோம். விட வேண்டிய கட்டாயம்.. ஏனெனில் சுதந்திரம் இல்லை எனக் கூறக்கூடாது. ஆணால் வீட்டில் இருந்து பார்க்கமுடியாதவைகளை பெண் மட்டுமே பார்க்க முடியும்.

//சொத்து பிரிப்பது தந்தையின் சொத்தில் தான் மகளுக்கும், மகனுக்கும் சரிசமம். இங்கே எத்தனை மனைவிமார்கள் கணவன் சொத்தில் சரிசமமாக இருக்கு. கணவன் சம்பாதிப்பது கணவன் பெயரில் சொத்து, விருப்பப்பட்டால் தான் மனைவிக்கு இல்லையேல் முழுவதும் வாரிசுகளுக்கு மட்டும்தானே!//

கணவன் பெயரில் இருந்தால் என்ன, மனைவி பெயரில் இருந்தால் என்ன.. வாரிசுக்கு கடைசியில் என்பது சரியான விஷயம் தானே. எந்த ஒரு தாயும் சொத்து தன் பெயரில் வேண்டும் என நினைத்தால் அது தன் மக்களுக்காக தான் இருக்கும்.

//பள்ளி மாணவி சொல்லியிருந்தால் என்ன ஆகும் இனி நீ பள்ளிக்குப் போகாதே....கல்லூரிக்குப் போகாதே......... அலுவலகத்திற்கு போகாதே...... என்பதுதானே இருக்கும்.//

சரி... நான் பிரச்சனையை தீர்த்துவிட்டேன் ..தைரியமாக போ என்றால்..எத்தனை பெண்கள் போக ரெடி.. இது சுதந்திரம் இல்லாதது அல்ல பெண்ணுக்கே உரிய அச்சம், பெண் என்பதால் பெற்றவளின் அச்சம்..இங்கே சுதந்திரத்திற்கும், அவளின் மென்மையான மனதிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது..

முதலில்.. பெண்கள் என்பவர்கள் மென்மையானவர்கள், மிருதுவானவர்கள், அச்சம்,மடம், நாணம், என பல உணர்ச்சிகளின் உயிரே. இவற்றில் எதேனும் ஆணுக்கு எனக் கூறமுடியுமா..? ஆண் மகன் அழலாமா? எனக் கேட்கிறோம். ஆண் என்றால் எதிர் வரும் பிரச்சனையை எதிர்க் கொள்ள வேண்டும்..

பெண்ணுக்கு என சில குணங்கள் உள்ளன. அதன் காரணமாகவே நாம் சில இடங்களில் சிலவற்றை செய்ய தயங்குகிறோம். அதற்காக சுதந்திரம் இல்லை என தவறாக புரிந்து கொள்கிறோம். சிலவற்றை செய்ய சொல்லி சுதந்திரமே கொடுத்தாலும், பெண்களால் செய்ய முடியாது. நம் உடல் அமைப்பு, நம் குண நலன்கள் அப்படி.. இதுவே ஒரு ஆணிடம் கேட்டால் ஒரு கை பார்க்கிறேன் என்று அவன் கூறுவான்.அது அவனுக்கு உரிய குணம். இதை போட்டு குழப்பி கொண்டு பல கேள்விகளை கேட்க கூடாது.

//இந்த வாய்ப்பு கூட குழந்தை தூங்கியதால்தான் கிடைத்தது. கணவரிடம் விட்டு விட்டு அறுசுவையில் உறையாட இன்னும் என் சுதந்திரம் வளரவில்லை மற்ற தோழிகளுக்கும் அப்படிதான் என்று நினைக்கிறேன்...//

குழந்தையை விட்டோ, அல்லது கணவனை விட்டு, சுந்திரமாக செய் என முழுமனதுடன் பெண்ணிடம் கூறினாலும், அவளால் விட்டு கொடுக்க முடியாது என்பது உண்மை.

ஒத்துக் கொள்கிறீர்களா? பெண் சுதந்திரம் என்பது வளர்ந்த ஒன்று. அதை பெண்கள் தான் பெண் என்ற காரணத்தால் எல்லையை தாண்டுவதில்லை.சமுதாயத்தில் இருபாலருக்கும் ப்ரச்சனை ஒரே மாதிரி உள்ளது. ஆனால் ஆண் என்பதால் அவன் அனுகுமுறை வேறுவிதமாகவும், பெண் என்பதால் வேறுவிதத்தில் அனுகுமுறையை அவள் கடைபிடிக்கிறாள்.அதற்கு அவளுக்குரிய சில காரணங்கள் உள்ளன.

இன்னும் நிறைய கேள்விக்கு பதில் கூற வேண்டி உள்ளது.ஆனால் நேரம் தான் இல்லை ;-( மீண்டும் வருகிறேன்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)


நடுவர் அவர்களே,
1.//யாருங்க அந்த "கடமை". அடிக்கடி வந்து கூப்பிட்டுட்டு போயிடுறாரு.// எதிரணியினருக்கு கடமைக்கும் சுதந்திரத்திற்கும் வித்யாசம் தெரியாதது எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கிற்து.

2.//கல்பனா சாவ்லா,சுனிதா வில்லியம்ஸ் இவர்கள் பெண் சுதந்திரத்திற்கு நல்ல உதாரணம். உதாரணத்துக்கு கூட வெளிநாட்டில் வாழறவங்க அல்லது வாழ்ந்தவங்களத்தான் கூப்பிட வேண்டியிருக்கு.//
அறுசுவை தோழிகள் பலரும் வெளி நாட்டில் வசிப்பதால் அவர்களை நம்தேசத்தவர்களில்லை என கூற முடியுமா?

3.//நாட்டாமை, நீங்களாவது சுதந்திரமா எங்க அணி பக்கம் தீர்ப்பு சொல்லுங்க.//
தங்களையே மிரட்டும் அளவிற்கு எதிரணியினருக்கு சுதந்திரம் கொடுத்துள்ளீர்களே! இது ஒன்றே போதும் எங்களணிக்கு.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

//உங்கள் கணவர் உங்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்காமல் தான் நீங்க அறுசுவை மாதிரியான தளங்களில் உங்கள் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்துக் கொண்டிருக்கிறீர்களா?//
நாலு செவத்துக்குள்ள,மொகம் தெரியாதவங்களோட பேசுனா ஒத்துக்குவாங்க. 1000 பேர் இருக்கும் சபையில் அனைவருக்கும் சவால் விடும் பேச்சுக்கு தடா.....இது எனக்குனு இல்ல. என்னை போல் இன்னும் எத்தனையோ வெளி வர முடியாமல் தவிக்கும் பெண்களின் புலம்பல். ஆர்குட்,பேஸ்புக் மூலமா அவர்கள் நண்பர்களை தேடி பிடிக்க உரிமை உண்டு. அதில் பேர் கூட பதிவிட எங்களுக்கு இன்னும் உரிமை இல்லை.

//உங்கள் வீட்டில் சுதந்திரம் கிடைத்திருக்காவிட்டல் நீங்கள் உங்கள் கணவர் , உங்கள் குழந்தை என்ற குறுகிய வட்டத்திலேயே இருந்திப்பீர்களே. இப்படி ஒரு பேச்சாளாரை நாங்களும் இழந்திருப்போமே//
இந்த சமுதாயத்தில் பெண்கள் வளர்ச்சி இருந்திருந்தால் 25,000 பேர் பார்க்கும் பேச்சாளரை இந்தியாவின் 100 கோடி மக்கள் இழந்திருக்க மாட்டார்கள்.எங்கள் திறமையை உலகறிய செய்திருப்போம்.இன்னும் நாங்கள் வெளிவரவில்லை.அதே கண்வருடன்,குழந்தையுடன் இன்னும் ஒரு குறுகிய வட்டத்தில் தான் வைக்கப்பட்டுள்ளோம்.

//அவள் மேல் நம்பிக்கை இல்லாமல் தான் அவளை பிரிந்து அவன் எங்கோ வாழ்கிறானா? பேசுபவர்கள் பேச தான் செய்வார்கள்//.
பேசுபவர்கள் பேசும் போது கேட்பவனும் கேட்கத்தான் செய்வான். எறும்பு ஊற ஊற கல்லும் தேயும்! எத்தனை பெண்கள் இத்தகைய நிலையில் இருக்கிறார்கள் உங்களுக்கு தெரியுமா?
நான் கூட தாங்க பெண்ணுரிமை பெண்சுதந்திரம் பத்தி பேசிட்டு இருந்தேன். ஆனால் உண்மை அது இல்லை. இன்றும் என் சக நண்பர்களுடன் என்னால் பேச முடியவில்லை. ரோட்டுல பாத்து ஒரு ஹாய் சொல்லவும் எங்களுக்கு அனுமதி இல்லை. அப்படியே பேசினாலும் “உன் மனைவி எவனோடவோ நடு ரோட்ல பேசுறா” என்று பத்த வைக்கும் கும்பல் உண்டு.

//அப்பா இருக்குற இடத்துலயே பிள்ளை நிக்க மாட்டாங்க நிமிர்ந்து பார்த்து பதில் சொல்ல மாட்டாங்க. கணவர் சொல்லுவதற்கு எல்லாம் பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிக் கொண்டுதானே இருந்தாங்க. அப்போ இதுலாம் வளார்ச்சி இல்லைனு சொல்றீங்களா?//
யார் சொன்னது. இன்னும் என் தாத்தாவின் முகத்தை பார்த்து பேச என் அம்மாவும், மாமாவின் மனைவிமார்களும் தயங்கி கொண்டு இருக்கிறார்கள். அவர்களை பார்த்து வளர்ந்த நாங்களும் அப்படி தான் இருக்கிறோம். என் மாமாமார்களிடம் நேருக்கு நேர் பேச எனக்கு அனுமதி இல்லை. ஆண்கள் சாப்பிட்ட பிறகு தான் மிச்சத்தை பெண்கள் சாப்பிடவேண்டும். அவர்கள் துணிகளை அயன் பண்ணலாம். நாங்கள் சாயம் போன துணிகளினை தான் உடுத்தனும். விசேஷ தினங்களில் மட்டுமே துணிமணி.அவங்களுக்கு கோழி என்றால் நாங்கள் கீரையும், கஞ்சியும் தான். இது என் வீட்டில் மட்டும் இல்லை. பல கிராமங்களில் அனுதினமும் நடக்கும் நிகழ்வுகள்.

விதவைக்கும் மலடிக்கும் ஆண்பாலே இல்லை. பிறகு ஏது சுதந்திரம்?
மனைவி செத்தால் கணவன் புதுமாப்பிள்ளை. ஆனால் ஒரு பெண் கணவனை இழந்தால் அவள் வீட்டை விட்டு வெளியே வந்தாலே அவளை கேவலமாக பார்க்கும் சமுதாயம். ஆண்களுக்கு மட்டும் தான் மனைவி இறந்த பிறகு துனை வேண்டுமா? ஏன் கணவன் இழந்த விதவை மறுமணம் செய்ய கூடாதா? அவளுக்கு துணை தேவை இல்லையா? ஆண்களை நோக்கி கேக்கும் கேள்வியை (மறுமணம் செய்துக்கொள் என்று) ஏன் பெண்களிடம் கேட்பதில்லை? அவர்களுக்கும் உணர்வு இல்லையா?
ஒரு சின்ன விஷயத்துக்கே பெண்களுக்கு உரிமை இல்லை. பிறகு எப்படி வளர்ந்தது என்று உங்களால் வாதாட முடிகிறது?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

//நிறுவனத்துல அல்லது ஒரு தொழிற்கூடத்துல ஆணுக்கு சமமா பெண்ணும் வேலை செய்யிரது மட்டும் சுதந்திரம் கிடையாது. அந்த ஆண் வாங்கும் சம்பளமும், கூலியும் பெண்ணுக்கும் சமமா கிடைத்தால் தானே சுதந்திரம் வளர்ந்துள்ளது எனலாம.//

எனக்கு தெரிந்து ஒரு ஆணும் பெண்ணும் சரி சமமா வேலை செய்யும்போது

இருவரும் பார்க்கின்ற வேலையின் தன்மையை பொறுத்தோ ,திறமையின்

அடிப்படையில்தான் சம்பள வேறுபாடு இருக்குமே தவிர பெண் என்பதால்
அல்ல….

நான் ஒரு கல்லூரியில் IT துறையில் தலைமை பொறுப்பில் இருந்தேன்..அந்த

பொறுப்பை கொடுத்ததும் ஒரு ஆண்தான்…எனக்கு கீழ் வேலை செய்தவர்கள்

எல்லாருமே ஆண்தான்..பார்த்தது ஒரே வேலையாக இருந்தபோதும் என்

தனிப்பட்ட திறமைக்கு கூடுதல் முக்கியத்துவமும்,சம்பள

உயர்வும் ,சலுகைகளும் கொடுக்கப்பட்டது…..இங்கே என் வளர்ச்சிக்கு யாருமே

முட்டுகட்டை போடவில்லை …..!

//சொத்து பிரிப்பது தந்தையின் சொத்தில் தான் மகளுக்கும், மகனுக்கும் சரிசமம். இங்கே எத்தனை மனைவிமார்கள் கணவன் சொத்தில் சரிசமமாக இருக்கு. கணவன் சம்பாதிப்பது கணவன் பெயரில் சொத்து, விருப்பப்பட்டால் தான் மனைவிக்கு இல்லையேல் முழுவதும் வாரிசுகளுக்கு மட்டும்தானே! //

பணம் வங்கியில் இருந்தாலும் ,அதை அனுபவிக்கும் உரிமை நமக்கிருக்கிறதல்லவா?

அதுபோல்தான் சொத்துக்கள் கட்டி காக்கும் சுமையை ஆண்களே ஏற்று கொண்டாலும்
அதை அனுபவிக்கும் உரிமையை நமக்கு கொடுத்திருக்கிறார்கள்……..:-)

// அன்றே வாத்தியாரின் பார்வை சரியில்லை என்று சுதந்திரமாக தந்தையிடமும்,அவ்வளவு ஏன் தலைமை ஆசிரியரிடம் எல்லாராலும் சொல்லமுடிந்ததா?
கல்லூரியில் நடக்கும் கேலி கிண்டல்கள் தொந்தரவுகள் தந்தையிடம் எல்லாராலும் சொல்லமுடியுமா?
மேலதிகாரியின் கீழ்த்தரமான பார்வைகளும் பேச்சுக்களையும் கணவனிடம்தான் சொல்ல முடியுமா?//

எல்லா இடத்திலும் எல்லாராலும் சொல்ல முடிந்ததா ன்னுதான் கேட்டிருக்கீங்க…யாராலாவது சொல்ல முடிந்ததான்னு கேட்கல இல்லியா..?அப்ப அதுல இருந்தே உங்களுக்கு புரிஞ்சுருக்குமே…

ஒரு சிலரால கேட்க முடியலன்னு …அதாவது அவர்களுக்கு பயமிருக்கிறது..அந்த பயம் மற்றவரின் பலமாகிப்போகிறது…..இங்கே தொலைந்தது தைரியம்தானே தவிர சுதந்திரமல்ல…

//மாறாக பிரச்சனைகளைத் தீர்த்து நமது சுதந்திரத்தை நிலை நாட்டியிருப்பார்களா!//

வாழ்க்கை மைதானத்தில் விளையாட சுதந்திரம் கொடுக்கலாம்…ஆனால் விளையாட்டில் சிராய்ப்பு வருகிறது….கல் தடுக்கிறது என்றால் அதற்கு சுதந்திரம் மருந்து போட முடியாது…

//வீட்டில் எனக்கு - வேலைக்குப் போக, வெளியில் போக, இண்டெர்னெட் பயன்படுத்த, எனக்கு தேவையானதை வாங்கிக் கொள்ள அனுமதி கொடுத்துள்ளனர் - ன்னு சொல்ரதெல்லாம் சுதந்திரம் அல்ல. "கொடுத்தது" ன்னு வந்திட்டாலே அங்க சுதந்திரம் இல்லன்னு தான் அர்த்தம்//

ஆமாங்க முன்பு நம் பாட்டிகள்,அம்மாக்கள் காலத்தில் இல்லாத/கிடைக்காத சலுகையையும் உரிமையும் சுதந்திரத்தையும் இன்று கொடுக்கிறார்கள்…..இல்லை நாமாக எடுத்து கொண்டாலும் அவர்கள் மறுப்பதில்லை……

//அப்ப ஒத்துக்குறீங்களா? இன்னும் பெயரளவில் தான் இருக்கு. இன்னும் வளர காலம் எடுக்கும்னு!//

நாங்கள் சொல்ல வருவது நேற்றைவிட நம் உரிமையும் சுதந்திரமும் நிச்சயம் இன்று வளர்ந்திருக்கிறது…நாளைக்கு இன்னும் வளரும் என்றுதான்………!!!

//நான் திரும்பத திரும்ப சொல்வது இதுதான். வீட்டவிட்டு வெளிய வாரங்க, வேலைக்கு போறாங்க, சுடிதார் போடுறாங்க இதெல்லாம் சுதந்திரத்திற்கு தேவையானதுதான் (necessity) ஆனால் போதுமானதல்ல (not sufficient).//

சுதந்திரத்துக்கு தேவையானது கிடைத்திருக்கிறது என ஒத்துகொண்டதற்கு நன்றி……
இல்லாமல் இருந்ததைவிட தேவைக்கு கிடைத்துள்ளது வளர்ச்சிதானே…இதுவே இந்த வளர்ச்சியே போதும் என நாங்கள் சொல்லவேயில்லை..இது போதுமானதல்ல ..இன்னும் வளர வேண்டும் என்றுதான் சொல்கிறோம்……..

.//.என்னதான் பெரிய கெளரவமான பதவியிலோ,வேலையிலோ ஒரு பெண் இருந்தாலும் ஒரு ஆணுக்கு பெண் அடிமைதான் என்ற கருத்து புராணகாலங்களில் இருந்து இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிற்து.சும்மா வேலைக்கு செல்வதாலும் தனியாக வெளியிலோ, வெளிநாட்டிற்கோ செல்வதாலும் சுதந்திரம் கிடைத்து விட்டதாக கூற முடியாது//

நீங்கள் சொல்லியுள்ளது எல்லாம் பெண்களின் சுதந்திரத்துக்குள்

வராதா…..இன்றுபோல் புராணகாலங்களிலும் இந்த அளவுக்கு பெண்கள்

வெளியிலோ /வெளிநாட்டுக்கோ சென்றிருந்தால்…இன்று புதிதாய் எதுவும்

மாறிவிடவில்லை எனலாம்…….ஆனால் அன்றில்லாத உரிமையை இன்று

அனுபவிக்கிறோம்,,,,,,ஆனால் இன்றும் அப்படியே இருக்கிறோம் என்பது

உண்மையில் வேடிக்கையாய்தான் இருக்கிறது.

//ஒரு தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள்; மகள் மகனைவிட நன்றாகப் படிப்பவள். பெற்றோரால் ஒருவரை மட்டுமே படிக்கவைக்க முடியும் என்றால் - அன்றும் இன்றும் (என்றும்) மகன் தான் பள்ளி செல்வான். மகள் இடம் சமையலறைதான். இதில் அக்காலம் தொட்டு இக்காலம் வரை எந்த மாற்றமும் ஏற்படவில்லையே ஏன்?//

ஏன்னா..சம்பாதிக்காத ஆணை சமூகம் புழுவாக பார்க்கிறது..ஆனால் பெண்

கொஞ்சம் குறைவாக படித்திருந்தாலும்…வேலைக்கு போகவில்லை என்றாலும்

அதை வைத்து அவளை யாரும் குறைத்து மதிப்பிடுவதில்லை.நாம் கணவரின்

சம்பளத்தில் கால் மேல் கால் போட்டு கொண்டு சுதந்திரமாய் செலவு

செய்யலாம்..இதை ஒரு ஆண் செய்தால் நாமும் இந்த சமூகமும் அவனை

துச்சமாய் வீசிவிடுவோம்..என்பதால்தான் ஆணின் படிப்பு அவசியமாகவும்

பெண்ணின் படிப்பு முடியாதபோது ஆப்சனலாகவும் இருக்கு,,,,

ஆனா முன்பைவிட இப்போது நிறைய மாறியிருக்கு….என் தோழியின் தந்தை

ஒருவரைத்தான் படிக்கவைக்க முடியும் என்ற நிலையில் மகனைவிட நன்றாக

படிக்கும் மகளைத்தான் படிக்க வைத்தார்….

//நாலு செவத்துக்குள்ள,மொகம் தெரியாதவங்களோட பேசுனா ஒத்துக்குவாங்க. 1000 பேர் இருக்கும் சபையில் அனைவருக்கும் சவால் விடும் பேச்சுக்கு தடா.....//

1000 பேர் இருக்கும் சபையில் ஆணித்தரமாய் என் கருத்துக்களை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்….அதை ஆதரித்து கைதட்டியவர்களில் முக்கால்வாசிபேர் ஆண்கள்..

திருமணத்திற்கு முன்பு வெளிநாட்டில் வேலை கிடைத்தபோது தனியாக

நம்பிக்கையுடன் என்னை சுதந்திரமாய் என் விருப்பத்திற்காகவே பணத்தேவை

அவசியமில்லாதபோதும் அனுப்பி வைத்தவர் என் தந்தை…திருமணத்திற்கு

பின்பும் என் கணவர் வேறு நாட்டில் இருந்தபோதும் என் விருப்பத்திற்கிணங்க

அதே பணியில் பணிக்காலம் முடியும்வரை அனுமதித்தார்….

நிறைய பெண்களுக்கு அப்பாக்களும்,கணவர்களும் இன்று தன்னிச்சையாய் தயங்காமல் செயல்படு…என்றுதான் சொல்கிறார்கள்….

ஆக பெண்ணுரிமையும் சுதந்திரமும் முன்பைவிட இன்று நிறைய வளர்ந்திருக்கிறது என்பதுதான் எங்கள் வாதம்…

வளரவேயில்லை என சொல்வது உங்கள் பிடிவாதம்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அய்யோ பட்டி பக்கம் வரவே பயமா இருக்கு. ரெண்டு பக்கமும் வாதங்களை அள்ளி வீசறாங்க. வீசுங்க வீசுங்க அதான் எனக்கு வேணும்.

இரு அணியிலும் கணவரின் சொத்தில் மனைவிக்கு பங்கு இல்லை என சொல்லியிருக்கிரார்கள். ஆனால் சட்டம் என்ன சொல்லுதுன்னா...
கணவரின் சுயசம்பாத்தியமாக இருந்தால் அவர் உயிரோடு இருக்கும் போது யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அது மகனாக மகளாக மனைவியாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. உயில் எதுவும் எழுதாமல் இருந்தால் அவரது மறைவுக்குப் பின் மனைவி, மகன் மகள் அனைவருக்கும் அவகாசம் உண்டு. அனைவருக்கும் சமமான பங்கு உண்டு

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பெண்கள் சுதந்திரம் என்ற வார்த்தையே இப்போது இல்லை என்று சொல்லும் அளவிற்கு மகளிர் எல்லா துறைகளிலிலும் திறம்பட பணிபுரிந்து வருகிறார்கள் என்பதே இதற்கு அத்தாட்சி நன்றி.

அன்புடன்
THAVAM

உங்க பேரு பட்டிமன்றத்துல அடிபடுதுன்னு சொன்னாங்க.. ஓடி வந்து தேடி பார்த்தா..

//இன்னும் முதல் உறுப்பினர் admin அவர்களெ தனது முழு விவரங்க்ளை தர தயங்கும் போது மற்றவர்கள் தயங்குவதில் என்ன தவறு?//

அடடா.. இந்த மாதிரி வீக் பாயிண்ட் எல்லாம் எடுத்துக்கிட்டு வாதாடாதீங்க. கட்சி தோத்துப் போயிடும்.. :-) நான் பலமுறை சொல்லி இருக்கிற விசயம்தான். அட்மின் ங்கிறது ஒரு பொறுப்பு. அது எப்போதும் நானாக (பாபுவாக) இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனாலத்தான் அதுல பர்சனல் விபரங்கள் எதுவும் கொடுக்கலை. மத்தபடி என்னோட ஐடி இரண்டாவது உறுப்பினர் ஐடி.. http://www.arusuvai.com/tamil/user/2 அதுல என்னைப் பற்றி விபரம் சொல்லி இருக்கேன்.

அதை விடுங்க.. அது சும்மா நாலு வரி தகவல். அறுசுவையில பப்ளிக்கா என்னோட போட்டோ, என் ஒய்ப், குழந்தை, அம்மா, அக்கா, தம்பி, சொந்தங்கள், எங்க வீடு, தோட்டம், அட்ரஸ், போன் நம்பர்லேர்ந்து, வளர்க்கிற எலி, முயல் வரைக்கும் போட்டோவோட எல்லாத் தகவலும் அங்க அங்க கொடுத்து இருக்கேன். கொஞ்சம் பழைய ஆட்களை கேட்டுப் பாருங்க.. நீங்க புது உறுப்பினர்ங்கிறதால உங்களுக்கு தெரியலேன்னு நினைக்கிறேன். நம்ம வரலாறு ஒரு திறந்த புத்தகம் மாதிரி.. :-)


நடுவர் அவர்களே,

//அவள் மேல் நம்பிக்கை இல்லாமல் தான் அவளை பிரிந்து அவன் எங்கோ வாழ்கிறானா? பேசுபவர்கள் பேச தான் செய்வார்கள்//.
பேசுபவர்கள் பேசும் போது கேட்பவனும் கேட்கத்தான் செய்வான். எறும்பு ஊற ஊற கல்லும் தேயும்! எத்தனை பெண்கள் இத்தகைய நிலையில் இருக்கிறார்கள் உங்களுக்கு தெரியுமா?
நான் கூட தாங்க பெண்ணுரிமை பெண்சுதந்திரம் பத்தி பேசிட்டு இருந்தேன். ஆனால் உண்மை அது இல்லை. இன்றும் என் சக நண்பர்களுடன் என்னால் பேச முடியவில்லை. ரோட்டுல பாத்து ஒரு ஹாய் சொல்லவும் எங்களுக்கு அனுமதி இல்லை. அப்படியே பேசினாலும் “உன் மனைவி எவனோடவோ நடு ரோட்ல பேசுறா” என்று பத்த வைக்கும் கும்பல் உண்டு//

“கணவன் மனைவி” கதை எழுதிய எதிரணியில் உள்ளவரா இப்படி சொல்கிறார். ஆச்சரியமாக இருக்கிறது!!!!!!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்