கதை, கவிதைகள் குறித்து சில விசயங்கள் + ஓர் எச்சரிக்கை.. !!

அறுசுவை நேயர்களின் சிறுகதை எழுதும் ஆர்வம் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றது. வரிசையாக சிறுகதைகளாக வந்து குவிகின்றது. இந்த வேகத்தில் சென்றால், ஒரு நேரத்தில் சமையல் குறிப்புகளைவிட, சிறுகதைகள்தான் அதிகம் இருக்கும். :-)

ஆரம்பத்தில் சிறுகதைகள் வெளியிடுவதில் நிறைய கட்டுபாடுகள் வைத்திருந்தேன். ஆனால், பங்களிப்பவர்களின் ஆர்வத்தை குறைக்கக்கூடாது என்பதற்காக, அந்த கட்டுபாடுகளை விலக்கிக் கொண்டு, கிட்டத்திட்ட எல்லா கதைகளையும் வெளியிட தொடங்கினேன். இது நிறைய பேரை உற்சாகம் கொண்டு எழச்செய்திருக்கின்றது என்ற வகையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதேசமயம், இந்த கதைகள் விசயத்தில் என்னுடைய பங்காக, கண்ணில் படும் எழுத்துப் பிழைகளை சரி செய்தல், வாக்கிய அமைப்பை சரியாக்குதல் என்று சிலவற்றை செய்து, பின்னர் அதனை பக்கங்களாக தயார் செய்து வெளியிட்டு வந்தேன்.

தற்போது நிறைய கதைகள் வருவதால், இதற்கென நிறைய நேரம் ஒதுக்கும்படி ஆகிவிடுகின்றது. என்னுடைய மற்ற வேலைகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, இனி நீங்கள் அனுப்பும் கதைகளை அப்படியே வெளியிடுவது என்று முடிவு செய்துள்ளேன். எழுத்துப் பிழைகள், பொருட் பிழைகள் இல்லாமல் படைப்புகளை அனுப்ப வேண்டியது உங்களின் பொறுப்பு. அதற்காக அனுப்பும் எல்லாவற்றையும் அப்படியே வெளியிட்டுவிடுவேன் என்று எண்ணிவிட வேண்டாம். :-) ஓரளவிற்கு தரமான படைப்புகளாக இருக்க வேண்டும். பிரச்சனைக்குரிய படைப்புகளாக இருக்கக்கூடாது.

தற்போது கதைகளுடன் ஒப்பிடும்போது, வருகின்ற கவிதைகள் மிகவும் குறைவுதான். இருப்பினும் கவிதைகளுக்கும் இதே நிலைதான்.

வெளியிட இயலாத படைப்புகளை, வெளியிட இயலவில்லை என்று சொல்ல எனக்கு தர்மசங்கடமாக இருப்பதால், படைப்புகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியாகவில்லை, இல்லை அதற்கு பிறகு அனுப்பியவை வெளியாகின்றது என்றால், அந்த படைப்பு வெளியிடும் தரத்தில் இல்லை என்பதை புரிந்து கொள்ளவும். தயவுசெய்து எனது கதை என்ன ஆயிற்று என்ற கேள்வி எழுப்ப வேண்டாம்.

இப்போது "எச்சரிக்கை" விசயத்திற்கு வருகின்றேன்.

சொல்லவரும் விசயம் புதிது இல்லை. பழகிப் போன, விளையாடி விளையாடி களைத்துப் போன ஒரு விளையாட்டு. அவ்வபோது கொஞ்சம் வடிவம் மாறி வந்து கொண்டிருக்கின்றது. அறுசுவை தொடங்கிய தினத்தில் இருந்தே நடந்து வரும் விளையாட்டுதான்.

ஒரு சிலர் இரண்டு மூன்று ஐடி கள் வைத்துக் கொண்டு, மாறி மாறி வந்து பதிவுகள் போடுவதும், கேள்வி கேட்டு பதில் சொல்லிக் கொள்வதும், பாராட்டி கொள்வதும், அடிக்கடி அறுசுவையில் நடக்கும் விசயம்தான். அது எனக்கோ, அறுசுவைக்கோ பெரிய பாதிப்பை கொடுக்காத வரையில், அதை பெரிதாக கண்டுகொள்வதில்லை. எனக்கு தெரியவந்தாலும் வெறும் புன்னைகையுடன் ஒதுங்கி விடுவேன். அந்த பல முக வேடத்திற்கு காரணம், அறுசுவைக்கு பாதிப்பு உண்டாக்குவது, அதன் வளர்ச்சிக்கு தடை போடுவது என்று தெரியவரும்போது நடவடிக்கை எடுக்கத் தயங்கியதில்லை. இப்போதும் கிட்டத்திட்ட அது போன்ற சூழல் ஒன்று உருவாகி இருப்பது தெரிகின்றது.

ஒன்றிரண்டு பெயர்கள் என்பது போய், ஒருவரே நிறைய பெயரில் வந்து பதிவுகள் போடுவது தெரிய வந்துள்ளது. வெறும் ஐபி முகவரியை மட்டும் கொண்டு ஒருவரை அடையாளம் காண்கின்றோம் என்று முடிவு செய்து கொண்டு, அதனை மட்டும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக மாற்ற நினைத்திருக்கின்றார்கள். ஐபி முகவரியை தாண்டி, மற்ற விசயங்கள் நிறைய இருக்கின்றன. இதனை வைத்து இந்த செயலை ஒரே கம்ப்யூட்டரில் இருந்துதான் செய்திருக்கின்றார்கள் என்பதை கண்டறிய முடியும். நான் அந்த Log ஐ எல்லாம் சோதித்து கொண்டிருப்பதில்லை. சமீபத்தில் அதற்கு அவசியம் ஏற்பட்டதால், அதை பரிசோதித்த போது, சில அதிர்ச்சியான உண்மைகளை தெரிந்து கொள்ள முடிந்தது.

இந்த செயல்கள் தவறா, சரியா என்று யோசிப்பதைவிட, அதற்கான நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை மட்டுமே நான் யோசிக்கின்றேன். நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல், இது போன்ற செயல்களுக்கு கேள்வி கேட்டு விளக்கம் பெற்று, விளக்கம் கொடுத்து நடவடிக்கை என்பதெல்லாம் இனி இருக்காது. நடவடிக்கைகள் ஒருவித சர்வாதிகாரத் தோற்றத்தை எனக்கு கொடுத்தாலும் பரவாயில்லை. இனி வெறும் நீக்கல் நடவடிக்கை மட்டுமே இருக்கும். அது சம்பந்தமான விளக்கங்கள் ஏதேனும் மன்றத்தில் கோரப்பட்டால், அவையும் நீக்கப்படும். இங்கே கூட்டு அரசியலுக்கு இடமில்லை. தயவுசெய்து எனக்கு ஒத்துழைப்பு தாருங்கள்.

என் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு எனது செயல்களின் நியாயங்கள் தெரியும். எனக்கு யார்மீதும் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை. எல்லோரிடமும் சிநேகிதமாக இருத்தலையே நான் விரும்புகின்றேன். அதற்கு மற்றவர்களும் வாய்ப்பு தர வேண்டும்.

அண்ணா... இப்படிலாம் நடக்குதா??? கஷ்டம் தான்!!! தூக்குங்க வம்பு பண்ணா... வேறு என்ன சொல்ல.

ஒருசிலர் செய்யும் தப்பால் மற்றவர் பாதிக்கப்பட கூடாது இல்லையா. மீண்டும் மீண்டும் சொல்லிவிட்டோம்... ஒரு சிலருக்கு இது விளையாட்டான தளம், ஒரு சிலருக்கு இது இன்னொரு உலகம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அட்மின் அவர்களே

தங்களது கருத்துக்களுக்கும் மற்றும் அறுசுவையின் வளர்ச்சிக்கு நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் அறுசுவையின் உறுப்பினர்கள் என்ற முறையில் நாங்கள் எங்களது முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறோம்.. வாழ்த்துக்கள்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அட்மின் அவா்களுக்கு

நான் பல நாட்களாக அறுசுவைக்கு நன்றி சொல்ல எண்ணியிருந்தேன். மிக்க நன்றி அறுசுவை இணையதளத்திற்கு.நல்ல விஷயங்கள் பல பரிமாற உதவியாக இருந்தது. வனிதா அவா்கள் கூறியது போல் இது பலருக்கு தனி உலகம். நிறைய விஷயங்கள் நல்லவிதமாக பரிமாறக்கொள்ளப்படும் ஒரு தளம். அதற்கு தடையாக இருப்பவா்கள் மேல் நடவடிக்கை எடுப்பது தவறே இல்லை. அட்மின் அவா்களின் நடவடிக்கைக்கு அனைத்து அறுசுவை உறுப்பினா்களும் ஆமோதிப்பார்கள் என்று நம்புகிறேன்.

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

உங்க எச்சரிக்கையை படிச்சேன் ரொம்ப சரியா சொல்லிருக்கீங்க, பிரச்சனைன்னு ஆகும் போது யாரு தப்பு பன்றாங்களோ அவங்க மேல சிவியரான நடவடிக்கை கண்டிப்பா எடுத்தே ஆகனும் அண்ணா... உண்மையாவே நீங்க சொல்றப்பதான் இப்படில்லாம் கூட நடக்குதுன்னு தெரியுது... இதுல நீங்க என்ன நடவடிக்கை எடுத்தாலும் நாங்க உங்களுக்கு முழு ஒத்துழைப்பு குடுப்போம் அண்ணா...

என்றும் உண்மையுடன்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

இப்படி கூடவா நடக்குது?! வம்பு பண்ணா தூக்கிடுங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அட்மின் அவர்களுக்கு
அனைத்து அறுசுவை உறுப்பினர்களின் சார்பில் மிக்க நன்றி

அன்புடன்
பவித்ரா

அட்மின் அண்ணா.
என் பெயர் வளர்மதி.
நான் 2 கதை எழுதி அனுப்பியுள்ளேன். அதை எப்போது வெளியிடுவீர்கள்

ஆகமொத்தம் அறுசுவையிலும் டபுள் ஆக்ட் படம் நடிக்க முயற்சி பண்றாங்க..அட்மின் சார் ஓரம் கட்டுங்க அவங்களை ...அதீத ஆர்வம் சில சமயங்களில் அபத்தம் ஆகிவிடும் ...

Madurai Always Rocks...

பிரச்சனைக்குறியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு எல்லாருமே ஒத்துழைக்க தயாரகாவே உள்ளார்கள்.என்பது என் கருத்து, அதனால் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பது இங்கே அவசியமென கருதப்படுகிறது, அவர்களை நீக்குவதே நலம் என்பது என் தனிப்பட்ட கருத்து, இல்லையென்றால், தவறு செய்யாதவர்கள் மீதும் சந்தேகப்பார்வை விழக்கூடும். மேலும் ஒரு சந்தேகமான உறவுகளிலேயே எல்லாரும் உரையாடிக்கொள்வார்கள்..
இவரா இருக்குமோ அவரா இருக்குமோ என எல்லார் மீது எல்லாரும் சந்தேகப்பட வாய்ப்புள்ளது. அதனால் தயவு செய்து தாமதிக்காமல் அவர்களை நீக்கிவிடுங்களேன்.
எல்லாரும் சம்மதிப்பார்கள்.
அன்புடன்
ஆஷிக்

நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் நாங்கள் எங்கள் ஆதரவை தருவோம். என்னை போன்றவர்களுக்கு உண்மையிலேயே இது மற்றொரு உலகம். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களை தயவு செய்து காலம் தாழ்த்தாமல் நீக்கிவிடுங்கள்.
அது தான் அருசுவை வளர்ச்சிக்கும் நல்லது.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்