பருப்பு குழம்பு

தேதி: July 20, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (6 votes)

இந்த பருப்பு மிளகாய் வறுத்து கடைந்த குழம்பு குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. அன்பரசி பாலாஜி அவர்கள்

 

துவரம் பருப்பு - 3/4 கப்
காய்ந்த மிளகாய் - 6 (அ) 7
வெங்காயம் - பாதி
பூண்டு - 3 (அ) 4 பல்
வெந்தயம் - அரை தேக்கரண்டி
புளி - ஒரு எலுமிச்சம் பழம் அளவு
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பூண்டை தோல் எடுத்து வைக்கவும்.
கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும்.
சிறிது வதங்கியவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, வெந்தயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
துவரம் பருப்பு சிவக்க வறுத்தெடுக்கவும். வறுக்கும் போது பருப்பின் மணம் நன்றாக வர வேண்டும். பருப்பு தீய கூடாது.
பின்னர் வறுத்து வைத்துள்ள பருப்பு, மிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றை ஒரு குக்கரில் போட்டு, புளி மற்றும் உப்பு சேர்க்கவும்.
குக்கரில் 2 அல்லது 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவும்.
சாம்பாருக்கு 4 விசில் வைத்தால், இதற்கு 3 விசில் மட்டும் விட்டால் போதும்.
பிறகு ஆறியதும் மிக்சியில் போட்டு மிளகாய், வெங்காயம், பூண்டு, புளி சேர்த்து மசிய அரைக்கவும். பிறகு பருப்பு சேர்த்து ஒன்று இரண்டாய் அரைக்கவும். பருப்பு குழைய கூடாது.
புளி சேர்க்கும் போது, அப்படியே போட்டு வேக வைக்காமல், கரைத்த புளியும் சேர்க்கலாம். அரைத்து வைத்துள்ள குழம்பு கொஞ்சம் திக்காக இருக்க வேண்டும். இதற்கு வடகம் போட்டு தாளிக்கலாம். தாளிக்காமலும் நன்றாக இருக்கும்.
இந்த குழம்பிற்கு உருளைக்கிழங்கு பொரியல் மற்றும் அப்பளம் நல்ல காம்பினேஷன். உங்கள் சுவைக்கேற்ப மிளகாய் மற்றும் புளியின் அளவு வேறுபடும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அட்மின் குழுவிற்கு நன்றி.

அன்பரசி மேடம்,
பருப்பு குழம்பு நல்லா இருக்கே
கண்டிப்பாக செய்து பார்கிறேன்
மேலும் பல குறிப்புகள் தர மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

உங்க குறிப்பு வித்யாசமா நல்லா இருக்கு..வாழ்த்துக்கள்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹலோ கவிதா,
வாழ்த்துக்களுக்கு நன்றி. மேடம் எல்லாம் வேண்டாமே, அன்பரசி என்றே கூப்பிடலாம். உங்கள் பதிவுக்கு நன்றி. இது தான் என் முதல் சமையல் குறிப்பு. முதல் குறிப்புக்கு முதலில் பதிவு போட்டது நீங்கள் தான். நன்றி.

இளவரசி
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்கள் மகன் cute ஆக இருக்கிறான்.

உன்களின் ரெசிப்பி பருப்புக்குழம்பு செது பார்த்தேன்.
நாம் எப்பவும் வைக்கிற குழம்பின் டேஸ்டிலிருந்து
மாற்பட்ட சுவையுடன் மிகவும் நன்றாக வந்தது.
இதுபோல நிறைய குறிப்புகளை தொடர்ந்து அனுப்பவும்.
வாழ்த்துக்கள்.

hello Mrs. Komu
உங்கள் பின்னூட்டம் பார்த்தேன். அதற்குள் குழம்பு செய்து விட்டீர்களா? மகிழ்ச்சி. வாழ்த்துக்களுக்கு நன்றி.
உங்களை போன்ற தோழிகளின் வாழ்த்துக்கள் ஊக்கமளிக்கின்றன. மேலும் குறிப்புகள் தர முயற்சிக்கிறேன்.

வித்தியாசமான குறிப்பா இருக்கே, நல்லாவும் இருக்கும்னு தோணுது நிச்சயம் செய்து பார்க்கனும் மேடம். பருப்பு வைச்சு எது செய்தாலும் எனக்கு ரொம்ப பிடிக்கும். முதல் குறிப்பே சூப்பரா கொடுத்துருக்கீங்க மேம். இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.

லக்ஷ்மி ஸ்ரீ
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. குழம்பு செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். இது என் அம்மாவின் special.

சூப்பர் குழம்பு. வித்யாசமான குறிப்பு.
வாணி

வாணி,
உங்கள் பதிவுக்கு நன்றி. செய்து சாப்பிட்டு சுவை பிடித்துள்ளதா என்று சொல்லுங்கள்.

ஹலோ அன்பரசி,
இன்று லன்ச்-க்கு உங்களோட பருப்பு குழம்பு செய்தேன். கோவைக்காய் ப்ரையுடன் சாப்பிட்டோம். குழம்பு டேஸ்ட் டிபரெண்ட்டா ரொம்ப பிடித்து இருந்தது. செய்வதற்கும் ஈஸியா இருந்தது. சுவையான இந்த குறிப்பை அறுசுவையில் ஷேர் செய்து கொண்டதற்கு நன்றி! வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

ஹலோ சுஸ்ரீ,
உங்கள் பதிவை இப்போது தான் பார்த்தேன். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். குழம்பு செய்து பார்த்து பின்னூட்டம் தந்ததற்கு நன்றி. குழம்பின் சுவை உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி. மறக்காமல் பதிவு போட்டதற்கும் நன்றி.

பருப்பு குழம்புல கடுகு கறிவேப்பில்லை போட்டு தாளிக்கலாமா

பறுப்பு குழம்பு செய்தேன் ஆனால் சுவை இல்லை என் கணவர் கிட்ட திட்டு தான் வாங்கினேன்

பருப்பு குழம்பு நல்லா இல்லை அது சுவையா இருக்கு சொல்லி கருத்து வேறா அனுப்புரிங்க

நீங்க இன்னும் கொஞ்சம் நாகரிகமா பதிவு போட கற்றுக்கணும்.

"பருப்பு குழம்பு அவ்வளவு ருசியா இருந்துச்சு.. அது சுவையா இல்லைன்னு சொல்லி கருத்து வேற போடுறீங்களா, உங்க நாக்கு என்ன செத்துப் போன நாக்கா.." ன்னு கேட்டு, நான்கூட உங்க பாணியில கருத்து பதிவு பண்ணலாம்.

சுவைங்கிறது ஒவ்வொருத்தர் நாக்கை பொறுத்த விசயம். நீங்க சுவையா இருக்குன்னு சாப்பிடுற நிறைய உணவுகளை எனக்கு பார்த்தாலே குமட்டும்.. அதுக்காக அந்த உணவே மோசம்னு சொல்லிட முடியுமா?

"இதுல புளிப்பு அதிகமா இருக்கு, கசப்பா இருக்கு, குழம்பு கெட்டியா இருக்கு.. இப்படி எதாவது பிரச்சனையை சொல்லி, எதனால அப்படின்னு காரணம் கேட்டா, குறிப்பு கொடுத்தவர் பதில் கொடுப்பார். அதைவிட்டுட்டு இப்படி பொத்தாம் பொதுவா "சுவையா இல்லை, வீட்டுக்காரர் திட்டுறார், அடிக்கிறார்" ன்னு நீங்க சொன்னா, அது உங்க வீட்டுப் பிரச்சனை, நீங்க பேசாம அவருக்கு பிடிச்சதை சமைச்சு போடுங்க"ன்னுதான் பதில் சொல்ல வேண்டி வரும்.

போதாக்குறைக்கு, நல்லா இருக்குன்னு சொல்லி இருக்கிற மத்தவங்களை வேற நீங்க திட்டுறீங்க.. கஷ்டப்பட்டு குறிப்புகள் கொடுக்கிற ஒருத்தரை, இந்த மாதிரி பதிவுகள் கொடுத்து மனவருத்தப்பட வைக்கிறதை எங்களால அனுமதிக்க முடியாது. போற போக்கில எதாவது குதர்க்கமா பேசிட்டு போறவங்களைவிட, எங்களுக்காகவும், மற்றவங்களுக்காகவும் தங்களோட நேரத்தை செலவு பண்ணி, குறிப்புகள் கொடுக்கிறவங்கதான் எங்களுக்கு முக்கியம். குறைகள் இருந்தா, என்ன பிரச்சனை, எதில பிரச்சனைங்கிறதை சொல்லி விளக்கம் கேளுங்க. அதை விட்டுட்டு இது மாதிரி பதிவுகள் கொடுத்தா, உங்களுக்கு இங்கே இடமில்லைன்னு நாங்க சொல்ல வேண்டி வரும்.