பட்டிமன்றம் - 22 - உயர்ந்தது எது? உறவா? நட்பா?

அறுசுவை தோழிகளே...

இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பட்டிமன்றம் இனிதாக தொடங்கப்படுகிறது..

உயர்ந்தது எது? உறவா?(அம்மா அப்பா மட்டும் இல்லாம மற்ற அனைத்து சொந்தங்களும்..) நட்பா?

அவசர ஆபத்துக் காலத்தில் உதவுவது நண்பர்களா, சொந்தங்களா ? இந்த இரண்டிலும் உயர்ந்தது, ஏற்றது எது ?

உங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.. ;-)

//இதுக்கு அர்த்தம் உறவிலேயே நட்பும் இருக்கு.. இதை புரிஞ்சுக்காதவங்கதான் நட்பைத் தேடி வெளில போறாங்கனு என்பது//

உறவுக்குள்ளே சாதாரணமாக இருக்கவேண்டிய உறவே அங்கு இருப்பது இல்லை. இதில் எங்கிருந்து நட்பை தேடுவது.

//உறவைக் கையாளத்தெறியாதவங்க தான் இப்படிலாம் புலம்புவாங்க..
உங்க உறவினர்கள் கிட்ட நீங்க நடந்துக்கிற முறைலதான் அது நல்ல படியா அமையறதும் இல்லாம போறதும்//

உறவு ஒன்றும் பாத்திரம் அல்ல. அதை கையாள்வதற்கு. அது ரத்தத்தில் ஊறி வருவது. ஊறி வரவேண்டும். நாம் எவ்வளவு தான் பணிந்து பாசமாக, புரிந்துகொண்டு, எதையாவது கொடுத்துக்கொண்டே இருந்தாலும் குறை சொல்வதுதான் உறவு. நாம் வாழ்ந்தாலும் நம்மைப்பற்றி குறை கூறுவார்கள். வீழ்ந்தாலும் குறை கூறிக்கொண்டே இருப்பார்கள் உறவுகள்.

//நாமே தேடிக் கொள்வது அல்ல அது. நம் பெற்றோரால் செய்யப் படுகிறது அது.அவ்வாறு பர்க்கப் படும் வரனும்
முறைப் பெண் / பையனை உறவு வருவது போல் பார்த்து தான் திருமணம் செய்யும் வழக்கம் உள்ளவர்கள் நாம்.//

நாம் சொந்தத்திலேயோ, வெளியிலேயோ பெண்/பிள்ளை பார்த்து வைக்கும் திருமணத்தில் கூட உறவோடு நட்பும் இருந்தால் தான் அது காலம் முழுமைக்கு ஆரோக்கியமாக செல்லும். அதை விடுத்து நீ கணவன், நான் மனைவி என்ற சிறிய வட்டத்திற்குள்ளேயே உழன்றால், மனக்கசப்பு தான் மிஞ்சும்.

ஒரு கணவனோ, மனைவியோ தோழமையுடன் இருந்தாலொழிய இருவரும் தங்களுடைய அந்தரங்க பிரச்சனைகளை, ரகசியங்களை சொல்ல முன்வருவதில்லை.

நம்மில் பலரும் இப்படி சொல்லக்கேட்டிருக்கிறோம், என்னுடைய கணவர் / மனைவி ரொம்ப பிரெண்ட்லி டைப் பா. அவர் கிட்ட நான் எல்லாத்தையுமே சொல்லுவேன். நல்ல ஒரு தீர்வு கிடைக்கும் என்று.

இதிலிருந்தே தெரியவில்லையா நடுவர் அவர்களே, ஒரு கணவன் மனைவியாக இருந்தாலும் அவர்கள் அந்த உறவுக்கோட்டை தாண்டி நட்பு என்னும் வட்டத்திற்குள் வந்தால் தான் வாழ்க்கை ஒளிமயமாக எந்த ஒளிவு மறைவுமின்றி இருக்கும் என்று.

//இப்படி ஒரு உறவை எதிர்பார்த்துதானே நீங்க நட்பு பாரட்டறீங்க!!! நண்பன் எதையாவது எதிர்பார்க்கிறான் அப்படினு தெரிஞ்சா அப்போ நட்பைத் தூக்கி போட்டுவீங்களா
நீங்க? //

என்ன கொடுத்தாலும் திருப்தி அடையாதவர்கள் நம் உறவுகள். கொடுப்பது என்பது அவர்களுக்கு அப்டேட்டாக இருக்க வேண்டும். நேற்று கொடுத்ததெல்லாம் அவர்கள் கணக்கில் வராது. காசு கொடுத்து சூனியம் வைத்துக்கொள்ள எங்களுக்கு விருப்பம் இல்லை. அதனால் தான் எதுவும் எதிர்பாராத நட்பை நாடி நாங்கள் செல்கிறோம்.

//ரகசியம் என்பது காப்பாற்றப் பட வேண்டியது. அதைப் போய் நீங்க ஏன் வெளில சொல்றீங்க?//

உங்கள் கணவராலோ, கணவர் குடும்பத்தாராலோ, அல்லது மற்றவர்களோலோ, அல்லது வேறு வழியில் வரும் பிரச்சனைகளை யாரிடமாவது சொன்னால்தான் தீர்வு கிடைக்கும். அந்த ரகசியங்களை உங்களுக்குள்ளேயே பூட்டி வைத்தால் அது புற்று நோய்போல் உள்ளுக்குள்ளேயே இருந்து உங்களையே அழித்துவிடும். அப்படிப்பட்ட ரகசியங்களை நண்பர்கள் தவிர வேறு யாரிடமும் சொல்ல முடியாது. உறவுகளிடம் சொன்னால் பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு எள்ளி நகையாடுவதை தவிர வேறெதையும் செய்ய மாட்டார்கள். முடிந்தால் அதையே திரித்து ஒன்றுக்கு நாலாக்கி பெரிய கதையாக்கிவிடுவார்கள்.

//வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லோரும் நண்பர்கள் தான் எல்லாம் என்கிறீர்கள். உண்மை தான். அந்த நண்பர்கள் எல்லோரும் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் தானே!!
புதிதாகப் போன இடத்தில் உங்களுக்கு ஒரு பிடிப்பு, பாதுகாப்புத் தேவைப்படுகிறது.அதனால் ஒற்றுமையாக விட்டுக் கொடுத்து இருகிறீர்கள். அதே விட்டுக் கொடுத்தல்
ஓற்றுமையை உறவினர்களிடம் காட்டுங்களேன் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.//

உள்நாடாக இருந்தால் என்ன? வெளிநாடாக இருந்தால் என்ன? நட்பு நட்புதானே ! வெளி நாடு போவதால் நட்புக்கு வேறு பெயரா வந்து விடப்போகிறது.

தன் தாய்-தந்தையரை சொந்த பந்தங்களையெல்லாம் விட்டு உலகத்தின் ஏதேதோ மூலைகளில் இருக்கும் நம் அறுசுவை தோழிகள் வலைதளம் மூலம் தன் சொந்தங்களோடு உறவாட முடியாதா என்ன? ஏன் அவர்கள் எல்லாவற்றையும் விடுத்து சாதி, மதம், மொழி, உணர்வு, வயது வித்தியாசம், ஏழை பணக்காரன், படித்தவர் படிக்காதவர் போன்ற எந்த வித்தியாசமும்மின்றி நட்பை நாடி செல்கிறார்கள்.இவ்வளவு ஏன் நம்மை இப்போது இந்த பட்டிமன்றத்தில் கொண்டுவந்து விட்டது நட்பா? உறவா? சொல்லுங்கள் நடுவர் அவர்களே !

மீண்டும் உயிர்ப்பேன் !

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.


நடுவரே!
///வெளி நாட்லேந்து வரவா அவளோட நண்பர்களாத்துக்கா போறா?
இல்லையே.

தன்னோட சொந்த பந்தங்கள் ஆத்துக்கு போறா?//

//வெளிநாட்டில் இருந்து வந்தா அப்பா அம்மா வீட்டுக்குத்தான் போறோம்(அப்பா அம்மா உறவுகள் லிஸ்டில் சேர்க்கக்கூடாதுன்னு நடுவர் சொல்லிட்டாங்க) //

’’சொந்த பந்தங்கள் ஆத்துக்கு’’ங்கறது சொந்தக்காரா வீடுங்கறது எதிரணிக்கு தெரியாது போலிருக்கு

நட்பு நட்புங்கறேளே ஒங்களை தாய் நாட்டுக்கு விரும்பி வர வைக்கறது யாரு?

இங்க உள்ள சொந்தங்கள்தான்.உறவுகள்தான்.

அதனால ஒறவே ஒசத்தி ஒசத்தி ஒசத்தி!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நட்புக்கு ஈடு இந்த உலகில் ஏதும் இல்லை.

என் திருமணத்துக்கு ஆரமபத்தில் இருந்து கடைசி வரை உடன் இருந்து எல்லா வேலைகளும் செய்து திருமணத்தை நல்லபடி முடித்து கொடுத்தது அப்பாவின் நண்பர்கள், என்னுடைய நண்பர்கள் தான். உறவுகள் எல்லாம் திருமணத்துக்கு முன் நாளும், திருமணத்தன்றும் கடமைக்கு வந்தது.

வந்து சும்மா போனா பரவாயில்ல, சந்தோஷபடலாம். எனக்கு எடுத்த புடவை பிடிக்கல, அவங்களுக்கு இதை விட அதிகமா செய்தீங்க, சாப்பிட சொல்லல, என்னை நல்லா கவனிக்கல, தங்க இடம் சரியா குடுக்கல இப்படி 100 குறை சொல்லி மனதை காயப்படுத்தியவை உறவுகள்.

நானும் என் தங்கையும் திருமணமாகி போனதும் என் வீட்டில் எந்த ஒரு அவசரத்துக்கும் ஓடி வந்து உதவி செய்வது என் நண்பர்கள் தான்.

உறவுகளும் ஓடி வருபவர்கள் உண்டு இல்லை என்று சொல்லவில்லை... ஆனால் ஒரு சிலர் மட்டுமே!!! மற்றவர் எல்லாம் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் தான்.

நம்ம ஊருல பாதி திருமணத்தில்... இல்லை முக்கால்வாசி திருமணத்தில், வீட்டு விஷேஷங்களில், இவ்வளவு ஏன் துக்க வீட்டில் கூட பிரெச்சனை வந்துவிடுவது உறவுகளால் தானே தவிர எங்கும் நண்பர்களால் வருவதில்லை.

பெற்றோரிடம் அனுமதி வாங்கி நடந்த என் தோழியின் திருமணம் மாப்பிள்ளை இல்லத்தில் 10 பேர் முன்நிலையில் நடந்த சோகம் தெரியுமா?? பெண்ணை பெற்றோர், சகோதரன், மாப்பிள்ளை வழியில் மிக நெருங்கிய சிலர்... இவ்வளவே. காரணம்... காதல் திருமணத்தில் விருப்பம் இல்லை.

நடுவரே... பட்டி மிக அருமையாக போகிறது... எல்லாருடைய வாதத்தையும் படிக்கவே நேரம் போதவில்லை. பக்கங்கள் ஓடிவிட்டன. அழகாக வழி நடத்துகிறீர். வாழ்த்துக்கள். மீண்டும் நேரம் கிடைக்கும் போது வரேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வள்ளுவரை துணைக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க அதுலயும் எதிரணிக்கு ஆப்பு இருக்குதுதுங்கறது தெரியாமல்

//5 கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.//

அதாவது எவன் ஒருத்தன் பொன்னும் பொருளும் கொடுத்துக்கிட்டும் இனிமையா ஐஸ் வச்சு பேசிக்கிட்டும் இருக்கறானோ அவனைச் சுற்றித்தான் சுற்றமும் உறவும் இருக்குமாம். இதெல்லாம் இல்லாம்லேயே நட்பு நம்மக்கிட்ட இருக்குமேன்னு சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்கப்பா.

வெளிநாட்டுல இருந்து வந்தா சொந்தக்காரங்க வீட்டுக்குத்தான் போறோமாம். நிறைய பேர் அப்பா அம்மா வீட்டுக்கே போக முடியாம மாமியார் என்ற உறவு தடுக்கறாங்களேனு உள்ளுக்குள்ள புலம்பிக்கிட்டு கிடக்காங்க. இதுல ஊர்ல இருக்கற சொந்தக்காரங்க வீட்டுக்கெல்லாம் போறோமாம். நல்ல கதை சொன்னீங்க போங்க.

கல்யாணப் பத்திரிக்கைகளில் உறவினர் சூழ வாங்கன்னுதான் அழைக்கிறோமாம். வேற வழி? நண்பர்களுக்கு பத்திரிக்கை கொடுக்கவே வேண்டாம். தானே வந்து உரிமையோட நிப்பாங்க அதான் நட்பு.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நல்ல சொன்னாங்க எங்க அணி மக்கள்.... "டேய் வர முடியலடா கல்யாண வேலை, மெயில்ல பத்திரிக்கய் அனுப்பவா"ன்னு கேட்டா கூட, "எதுக்குடா நான் கண்டிப்பா வந்துடுவேன், நீ முகவரி மட்டும் சரியா சொல்லு"னு சொல்லும் நட்பு... கூடவே "ரொம்ப வேலைன்னா சொல்லுட நான் வேணும்'னா வந்து உதவி செய்யறேன், பத்திரிக்கய் வைக்க போக வண்டி வேணும்'ன கூட ட்ரைவரோட என் வண்டி அனுப்பறேன்"னு சொல்லுவாங்க பாருங்க... அது தான் உண்மையான அன்பு, அது கிடைக்கும் இடம் நட்பு.

ஊருக்கு வந்தா எல்லா உறவையும் பார்க்க சும்மா கை வீசிட்டு போங்க பார்ப்போம்... அடுத்த முறை நீங்க வந்தா "ஏம்மா ஊருக்கு வரல... எங்களை மறந்துட்டியா"னு அன்பா ஒரு வார்த்தை கூட வராது. கை வீசிட்டு கூட வேணாம்பா, அவங்க கேட்டதை வாங்காம வேறு பொருள் வாங்கி போங்களேன்... உறவு உறுதிய பார்ப்போம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா


நடுவரே!

நட்புனா லோகத்ல இருக்கறவா எல்லரையும் நட்பா பாக்கனும்

அறுசுவைல ’இந்தஊர்காரா வாங்கோ’,’அந்தஊர்காரா வாங்கோ’னு ஏன் கூப்படனும்.?

தனி தனியா பிரிஞ்சு போய் ஏன் பேசனும்? யோசிச்சாளா?

எல்லாம் ஒரு ’ஊர் பாசம்’தான்னு சொல்றா.

’பாசம்’ எங்கேருந்து வரது?

’ஒறவு’ லேந்து தானே!

’’தேர் ஊரெல்லாம் சுற்றினாலும் அதன் நிலையில் வந்து நின்றுதானே ஆக வேண்டும்’’

தெய்வம் கோவில்ல இருந்தாதான் மதிப்பு.

நம்ம குடும்பம் சொந்த பந்தங்கள் இருக்கற கோவில்.

நட்புங்கறது அங்க வந்துட்டு போற பக்தர்கள் மாறி.

நட்பு வந்துட்டு இதைகொடு ,அதைகொடுனு கேட்டுட்டு பேடும்.

‘யாதும் ஊரே!யாவரும் கேளீர்’ நு வாழனும்னு கணியன் பூங்குன்றனார் சொல்றா.ர்

’’எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா மக்களும் எம் சொந்தம் ’’ இதுக்கு அர்த்தம் இதுதான்

அதனால ஒறவுதான் ஒசத்தி ஒசத்தி ஒசத்தி!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

/உறவுகள் சரியில்லாததால்தனே நட்பைத் தேடி வெளியில் வருகிறோம். அப்புறம் எப்படி உறவே சிறந்ததுன்னு சொல்ல முடியும்? /
தொலைத்ததை தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டும். வெளிச்சம் இருக்கிறதுன்னு வெளியில் தேடினால் எப்படி கிடைக்கும்.பதின்ம வயதுகளில் பகட்டான நட்பால் பாழாய் போனவர்கள் தான் பலர். இன்று வெளிநாட்டில் பணிபுரியும் பலர் தங்கள் குடும்பத்திற்காக தான் கஷ்டபடுகிறார்கள். திருமணமாகாத தங்கைக்காக, கணவரை இழந்த அக்காவிற்காக , தான் படிக்க முடியாத படிப்பை தன் தம்பி படிப்பதற்காக என்று உறவுகளுக்காக வாழ்கிறார்கள்.

நடுவர் உள்ளிட்ட அனைவருக்கும் காலை வணக்கம். நல்ல தலைப்பு. எனக்கும் சிறந்த நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் என் வோட்டு உறவுகளுக்கு தான்.
எனக்கு உறவே சிறந்தது அப்படீன்னு தோணுது. "நட்பு உயர்ந்ததாகவே இருக்கட்டும், நட்பில் சிறந்தவர்கள் இருக்கலாம், அதற்காக உறவுகளை மட்டம் தட்டாதீர்கள், அதிலும் சிறந்தவர்கள் இருக்கிறார்கள், சதவிகீதத்திலும் நட்பை விட உறவுகளில் சிறந்தவர்கள் அதிகம். எனவே நட்பு உயர்ந்து இருந்தாலும், அதை விட ஒரு படி உறவு உயர்ந்திருக்குமே தவிர, தாழ்ந்திருக்க வாய்ப்பில்லை."

(அம்மா அப்பா மட்டும் இல்லாம மற்ற அனைத்து சொந்தங்களும்..) என்பதுதான் நடுவர் குடுத்த குறிப்பு, ஆனால், நீங்களா கூட ஏன் "அண்ணன், தம்பி, கணவர்" அப்படீன்னு ஏன் சேர்த்துகிட்டே போறீங்க, ஏன்னா உறவு வட்டம் ஒரு குரிய பேருக்குள் அடைக்க முடியாதது, நம்மால் சட்டென்று உதற முடியாதது. நீங்கள் உங்க உறவு வட்டத்துக்குள் உங்க அண்ணனை சேர்க்கும் போது, கூடவே அண்ணியும் வருவாங்க இல்லையா, அப்போ அண்ணி எனும் உறவு, பின் தம்பி பொண்டாட்டி, பின் அவர்கள் பிள்ளைகள், அப்படீன்னு இந்த வட்டத்துக்கு எல்லையே இல்லையே. உங்களுக்கு புரியணும்னு வட்டம் போட்டு DEMO கொடுத்திருக்கேன் அவ்வளவுதான்.

நீங்களே உறவுகளை "ரத்தத்தில் கலந்தவர்கள்" அப்படீன்னு குரிப்பிட்டிருகீன்களே. "தான் ஆடவிட்டாலும் தன் தசை ஆடும் அப்படீன்னு சொல்வாங்க." அது சரியா தான் இருக்கு.

//அந்த உறவுகளில் எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். எதையுமே எதிர்பாராததுதான் உண்மையான நட்பு.//

எதிர்பார்ப்பு உறவுகளிடம் அதிகம், நட்பிடம் குறைவு. இந்த எதிர்பார்ப்பின் வேறுபாடு தான் ஏதோ நண்பர்களே சிறந்தவர்கள் போலவும், உறவினர்கள் தொல்லை போன்றவும் தோன்ற காரணம்.

உறவினர்கள் பார்வையில் இருந்து பார்க்காமல், உங்கள் பார்வையில் இருந்து பாருங்கள், உறவினர்கள் இடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது, இதனால் அவர்கள் பெரிய உதவியே செய்தாலும் அது நமக்கு சிறிதாக படுகிறது. இது இவர்கள் கடமை தானே, என்ற ஒரு உணர்வு அங்கே வருகிறது. அதுவே நமது நண்பன் ஏதேனும் சிறிய உதவி செய்தால் கூட, அது பெரியதாக தோன்றுகிறது. இவன் வந்து நமக்கு செய்யனும்னு என்ன இருக்கு செய்றானே, என்பது போன்ற ஒரு மனபோக்கு தோன்றுகிறது. இது ஒரு கானல் நீர் போன்ற தோற்றம்தான். இது உண்மை அல்ல. உற்று அலசினால் உண்மை புரியும்.

அது மட்டும் இல்லை, நண்பர்களிடம் எதிர்பார்ப்பு இல்லை என நீங்க சொல்றது ஏத்துக்க கூடியது அல்ல. அவர்களிடமும் நிறைய நிறைய எதிர்பார்ப்பு உள்ளது. உங்க சந்தேகங்கள அவங்க தீர்த்து வைப்பாங்க அப்படீங்கறதே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இல்லையா. வெளிநாடுகளில் அவங்க உங்க வீட்டுக்கு வந்து உதவுராங்கன்னா, அது போல் நமக்கு வந்து செய்ய ஆள் வேணும் என்கிற எதிர்பார்ப்பு இல்லையா. இது போல் பல.

//அங்கு நமக்கான தீர்வு கிடைப்பது சந்தேகமே என்பது மட்டுமல்லாமல் கேலிப்பேச்சுக்களையும் கேட்க வேண்டுமே என்ற எண்ணம்தானே நம்மைத் தடுத்து நட்பைத்தேடி அறுசுவைக்கு ஓடி வர வைக்கிறது. இதிலிருந்தே தெரியவில்லையா நட்பின் அருமை.//

நண்பர் என்பவர் மூன்றாம் மனிதர் ஆயிடறாங்க, அதனால் ஒரு பிரச்சனை வரும்போது, உங்கள தள்ளி வைத்து வெளியில் இருந்து
பார்க்க அவங்களால முடியுது. ஏதோ ஒரு தீர்வ சட்டுன்னு சொல்ல முடியுது. ஆனால் உறவுகள் இப்படி ஆயிடிச்சேன்னு பிரச்சனையா ஜீரணிக்க கொஞ்சம் நேரம் எடுத்துக்குறாங்க, சில பெரிய பிரச்சனைகளுக்கு ஒடஞ்சி போயிடறாங்க. அவங்கலுக்கு உங்க மேல் அன்பு அதிகமா இருப்பதால் ஏற்படக்குடியது தானே இது.

மட்டுமில்லாமல் கேலி பேச்சு நண்பர்கள் இடத்திலும் பரவலா, சற்று அதிகமாவே இருக்கு. என்ன அவங்க சிரிச்சிகிட்டே கிண்டலடிக்கிறேன் அப்படீங்கற பேர்ல பேசிட்டு, அப்புறம் சும்மா ஜாலிக்கு பா அப்படீன்னு சொல்றாங்க. உறவுகள் அதை நேருக்கு நேரா போலிஷ் போடாமா கேட்கறாங்க. சோ, கேளிபேச்சு உங்களுக்கு கேளிப்பேச்சா தெரியல, நேரடியா கேட்டா, அது உடனே தப்பா தெரியுது. நண்பர்கள் கேலி பேச்சு தாங்கமுடியாம, படிப்ப பாதியில் விட்டவங்க கூட இருக்காங்க. தெரியுமா.

நட்பு உயிரையே கொடுக்கும் அப்படீங்கறீங்க. இது நடக்க சாத்தியமே இல்ல. இருந்தாலும் அப்படியே வச்சிக்கோங்க, அப்போ உங்க நண்பர் உயிரை நீங்க எடுத்தவர் இல்லையா.

உங்களுக்கு உதவி செய்வது நட்புதான்னு சொல்றீங்க. நீங்க குறிப்பிடக்கூடிய இந்த நண்பர்கள் கண்டிப்பா நல்ல உறவினர்களாகவும் விளங்குவாங்க. அதுவே உங்கள கச்டபடுத்தினாங்க அப்படீன்னு நீங்க குறிப்பிடற சில நபர்களால், நல்ல நண்பர்களையும் சம்பாதிக்க முடியாது. எனவே உதவுறதும் உபாத்திரமா இருப்பதும் அவங்க அவங்க இயல்பா பொறுத்தே, உறவா, நட்பா என்பத பொறுத்து இல்லை. நீங்க குறை சொல்லும் உறவுக்கும் நல்ல நண்பர்கள் இருக்கமாட்டாங்க. நீங்க புகழும் நண்பர்களுக்கு நல்ல "உறவுகளும்" இருப்பாங்க.

அண்ணன், தம்பி ஒரு புறம் இருக்க, நண்பர்கள் ஒரு புறம் இருக்க, இவர்களில் ஒரு புறம் தான் தேர்ந்து எடுக்கணும் எனும் சூழ்நிலை எழுந்தால், கண்டிப்பா நீங்க உறவை தானே தேர்ந்து எடுப்பீங்க. அண்ணன் பிரிண்ட்ஸ் எல்லாம் அப்பா அம்மாவை பாத்துக்கிறாங்க, சரி. உங்க அப்பா கிட்ட போயி ஒரு தேராசுல மகளான உங்களை ஒரு பக்கமும், உங்கள் அண்ணன் பிரிண்ட்ஸ் ஒரு பக்கமும் வைத்தா, "அவர் பார்வையில்" ஒருபுறம் தான் தேர்ந்து எடுக்கணும்னா, யாருக்கு அவர் முக்கியத்துவம் கொடுப்பார், உறவான உங்களுக்குதான. (நடுவர் கொடுத்த லிஸ்டில் மகள் சேர்க்கப்படவில்லை).

இன்னும் நிறைய எழுத வேண்டும்.

இதுவும் கடந்து போகும்.

உங்கள் உறவுகள் வலுப்பட நட்புதான் துனைசெய்கிறது,
ஆனா எங்கள் நட்புகள் வலுவிலுக்கத்தான் உங்கள் உறவுகள் ஆவன செய்கிறது.
நட்பினால் வளர்ந்த உறவுகள் அதிகம், ஆனால் உறவினால் வளர்ந்த
நட்புகள் எங்கும் இல்லை. ?????????
உறவு வீட்டை மட்டுமே காட்டும், நட்பு உலகத்தையே காட்டும்
நட்பு தூய்மை சில நேரங்களில் தாய்மையும் கூட

நட்புடன்
ஆஷிக்

நடுவர் அவா்களே
நான் உறவின் பக்கம் பேச முடிவுசெய்துள்ளேன். உயர்ந்தது உறவு தான் எக்காலத்திலும். அதில் சிறிதளவும் ஐயமில்லை.
உறவின் அருமை தெரியாத எதிரணியினரே… ஒரே ஒரு கேள்வி… கணவா்/மனைவி என்பவா் உறவின் கீழே வருகிறார் என்று நடுவர் கூறிவிட்டார்… இங்கு பேசும் யாரேனும் ஒருவா் கூறட்டும் எனக்கு திருமண பந்தம் வேண்டாம்.. அப்பா அம்மா, நட்பு இவை மட்டும் இருந்தால் போதும் என்று…. அப்படி யாராலும் கூறவே முடியாது என்பது தான் உண்மை…..
கணவன் மனைவி உறவு இருந்தால் தானே அடுத்த தலைமுறை உருவாகும்…. இந்த உறவே வேண்டாம் என்றால் அது சமுதாய சீா்கேட்டில் அல்லவா போய் முடியும். இங்கு பேசும் அனைவரும் கணவன் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய சொந்தம், கணவரைச் சார்ந்து வரும் மாமனார்,மாமியார் இவா்கள் யாரும் உண்மையான அன்போடு இருப்பவா்கள் அல்ல என்று கூறுகிறார்கள். அனைவரும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்துதான் இவ்வுலகில் அனைத்ததும் செய்துகொண்டிருக்கிறோம். மாமனார் மாமியார் என்றால் தங்கள் பிள்ளையிடம் அவா்கள் எதிர்பார்ப்பது நியாயமான எதிர்பார்ப்பு தானே. நாளை நீங்கள் உங்கள் பிள்ளையிடம் அன்பையும் அரவணைப்பையும் எதிர்பார்க்கத்தான் போகிறீா்கள். அப்போது பிள்ளையின் மனைவியை வேண்டாம் என்று ஒருக்காலும் உங்களால் உதற முடியாது.
எல்லாம் இருக்கட்டும், இங்கு நட்பின் பக்கம் பேசும் ஒருவா் சொல்லட்டும். அவா்களுக்கு சகோதரனோ சகோதரியோ இருந்தால் அவா்கள் திருமணத்தின் முலம் வரும் அண்ணி, மாமா போன்ற சொந்தங்கள் தேவையில்லை என்று எண்ணிவிட முடியுமா… முடியாது நடுவா் அவா்களே…. நாங்கள் நட்பைக் குறை கூறவில்லை. ஆனால் நட்பையும் தாண்டி உறவு நிற்கிறது.
கணவரின் நட்பை மனைவி ஏற்கவில்லை என்றால் கணவனால் அந்த நட்பை நீட்டிக்க முடியாது. மனைவி நட்பை கணவன் ஏற்கவில்லை என்றாலும் இதே நிலைமை தான். ஆனால் கணவா், மனைவியிடம் நான் உன்னை மட்டும் தான் எதிர்பார்க்கிறேன் உன் அப்பா அம்மா (அதாவது அத்தை,மாமா) எனக்கு தேவையில்லை என்று கூறிவிட்டால் உடனே அப்பா அம்மா வேண்டாம் என்று விட்டுவிட முடியுமா?, அப்படி கணவா் கூறினால் தான் சும்மா இருப்போமா? உறவு என்பது அப்பா அம்மா அல்லாமல் கணவா்/மனைவி, மாமனார், மாமியார், நாத்தனார், அண்ணன், தங்கை, அக்கா, தம்பி, என்று நீண்டுகொண்டே இருக்கும். இதில் எந்த உறவையும் உதாசீனப்படுத்திவிட முடியாது..
அண்ணன் இல்லாமல் எந்த விஷேசமும் நடக்காது. மணவறையில் அமா்வதிலிருந்து, குழந்தை பிறப்பு, காதுகுத்து என்று கடைசி வரை நாம் அண்ணன் தம்பி உறவுகளை எதிர்பார்க்கிறோம். நண்பர் வந்து இந்த இடத்தை பூா்த்திசெய்ய முடியுமா? எதிரணியினரிடம் கேளுங்கள் நடுவர் அவா்களே….
உறவின் பெருமை தெரியாதவா்களுக்கு நட்பின் இனிமையும் புரியாது. முதலில் தன்னைச்சுற்றி இருக்கும் உறவை வளர்த்துக்கொள்ளட்டும். நட்பு வட்டாரம் தானாக வந்து சேரும். உறவையே நட்பாக்கிக்கொண்டவர்களுக்கு வெளிஆட்கள் நட்பாக கிடைக்கும் போது அதை மேலும் சிறப்படையச்செய்ய முடியும்.
வள்ளுவரை துணைக்குக் கூப்பிட்டால் கூட வள்ளுவரும் உறவு தான் சிறந்தது என்று கூறுவார். அவரை பார்த்துப் பார்த்து கவனித்துக்கொண்ட வாசுகி என்ற மனைவி உறவு இல்லையெனில் இப்படி ஒரு திருக்குறளை அவரால் எழுதியிருக்க முடியாது. வள்ளுவன் வாசுகி அன்பைப் பற்றி நான் கூறி அறிய வேண்டிய அவசியம் இல்லை. ஊரறிந்த விஷயம். திருவள்ளுவருக்கு நண்பர் ஒருவா் இருந்தார், அந்த நண்பர் தான் திருவள்ளுவர் திருக்குறள் எழுத உதவினார் என்று யாரும் இதுவரை கூறியதில்லை என்று நினைக்கிறேன்.
ஆகவே நடுவர் அவா்களே உறவு தான் என்றும் சிறந்தது சிறந்தது சிறந்தது என்று கூறி அடுத்த வாதத்துடன் வருகிறேன்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்