பட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா?

பட்டிமன்றம் -- 23
அறுசுவை அன்பு நெஞ்சங்களே வருக வருக.. அடுத்த பட்டி ஆரம்பித்துவிட்டது. தலைப்பு இது தான்.
“ திரைப்படத்தில் நகைச்சுவை உணர்வு அக்காலத்தில் சிறந்து இருந்ததா? அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா? “
அக்காலத்தில் வருபவா்கள் N.S. கலைவாணர், நாகேஷ், பாலையா, சந்திரபாபு மற்றும் பலர்…
இக்காலத்தில் வருபவா்கள் விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம், கஞ்சா கருப்பு மற்றும் பலர்…
அனைவரும் வந்து தங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நடுவர் அவர்களே, இன்று பிறந்த நாள் கானும் நீங்கள் நீடூழி வளமுடன், நலமுடன் வாழ வேண்டும் என எங்கள் அணியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இப்பொழுது எதிர் அணியினர் பார்வை சினிமா தயாரிப்பாளர்கள் மீது விழுந்துள்ளது. இனி தயாரிப்பாளர்கள் நிலைமை ஏழரை சனியிடம் மாட்டிக் கொண்ட மாதிரிதான். ஏனென்றால் இவங்க பார்வை அப்படி, ஏற்கனவே காமெடி, பாட்டு கதை இப்படி தனித்தனியாக எடுத்து ஒட்ட வைத்து பார்த்தாலும் படம் ஓடவில்லை. இதில் கதையை மட்டும் தனியாக எடுத்தால் தயாரிப்பாளர்கள் தலையில் துண்டை போட்டுக் கொண்டு கோடம்பாக்கம் வீதிகளில் பைத்தியம் போல் திரிய வேண்டியதுதான். இருந்தாலும், ஆட்டோகிராப், உனக்குள் ஒருவன் போன்ற படங்கள் கதையை மட்டுமே நம்பி எடுக்கப் பட்ட படங்கள். அதெல்லாம் ஓடவில்லையா?. அதேபோல் திண்டுக்கல் சாரதி, 23 ஆம் புலிகேசி, தெனாலி இவையெல்லாம் நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப் பட்ட படங்கள். இவையும் வெற்றியடைந்த படங்கள்தானே?. நல்ல படங்களாக இருந்தால், மக்கள் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள். மீண்டும் சொல்கிறேன் நகைச்சுவை காட்சியை பார்த்தவுடன் நாம் நம்மை மறந்து சிரிக்க வேண்டும். அதுவே நகைச்சுவை. அது இக்கால நகைச்சுவையே. நன்றி.

அன்புடன்
THAVAM

பட்டிமன்றம் இன்றோடு இனிதே முடிவடைகிறது... விரைவில் தீா்ப்பு சொல்லப்படும்... அதுவரை பொறுமை பொறுமை பொறுமை....பட்டிமன்றம் சிறப்பாக நடத்திச்சென்ற அனைத்து அறுசுவை நெஞ்சங்களுக்கும், மேலும் பட்டியில் கலந்துகொண்டு மேலும் சிறப்பித்த அனைத்து தோழர் தோழிகளுக்கும் மிக்க நன்றி....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அன்பிற்கும் பண்பிற்கும் உரிய அனைத்து அறுசுவை நெஞ்சங்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள். நமது பட்டிமன்றத்தின் தலைப்பான ”திரைப்படங்களில் நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா அல்லது இக்காலத்திலா? என்பதே
தோழர்களும் தோழிகளும் மிகச்சிறப்பாக வாதாடினார்கள்.. தாங்கள் தேர்ந்தெடுத்த பகுதிக்கு முடிந்தவரை அதன் நன்மைகளையும் எதிரணியினரின் தீமைகளையும் திறம்பட எடுத்துக்கூறினார்கள்.
”வாய்விட்டுச்சிரித்தால் நோய்விட்டுப்போகும்” என்ற அருமையான பழமொழ உண்டு. உலகத்தில் மனிதர்களுக்கு மட்டுமே சிரிப்பு சொந்தம். அழுகை மிருகங்களுக்கும் வரும். ஆனால் சிரிப்பு என்பதில் மனிதனுக்கு மட்டுமே பங்கு உண்டு. அத்தகைய சிறப்பு மிக்க விஷயம் நம்மை திரைப்படங்களின் நகைச்சுவை நடிகர்கள் முலம் அதிகம் வெளிக்கெணரப்படுகிறது. அந்தக்காலத்திலிருந்து இந்தக்காலம் வரை நகைச்சுவைக்கென்று திரைப்படங்களில் ஒரு தனிஇடம் உண்டு. ஒருகாலத்தில் நகைச்சுவை என்பது திரைப்படங்களில் இல்லாமலே இருந்தது. அதன் பின்னர் மறைந்த உயர்திரு.கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவா்களின் முலம் நகைச்சுவைக்கென்று திரைப்படத்தில் ஒரு தனி மதிப்பும், தனி சிறப்பும் உருவானது. பாட்டிலும், பேச்சிலும், நடிப்பிலும் நகைச்சுவையை வெளிப்படுத்தியிருப்பார். கணவனும் மனைவியும் சேர்ந்து பல நல்ல நல்ல கருத்துக்களை திரைப்படங்கள் வாயிலாக நகைச்சுவையாக கூறியிருப்பார்கள். அதன் பின்னர் அவா்களைத் தொடர்ந்து நாகேஷ், தங்கவேலு, தேங்காய் சீனிவாசன், டி.எஸ்.பாலையா, எஸ்.வி. ரங்காராவ், வி.கே.ராமசாமி, சந்திரபாபு என்று அந்தக்கால நகைச்சுவை நடிகர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
அவா்களைப்பின்பற்றியே இந்தக்கால நகைச்சுவை நடிகர்கள் பலரும் புகழின் உச்சியில் இருக்கின்றனர். வடிவேலு, விவேக், சந்தானம், கவுண்டமனி, செந்தில், சார்லி, சின்னிஜெயந்த், கஞ்சா கருப்பு… என்று இந்தக்கால நகைச்சுவை நடிகர்களின் பட்டியலும் நீண்டுகொண்டே செல்கிறது. தற்போதைய கால கட்டத்தில் நாம் அதிகம் பார்ப்பதும் அதிகம் ரசிப்பதும் இன்றைய காலத்து நகைச்சுவை மட்டுமே.. அதற்கு முக்கிய காரணம் நம்முடைய காலத்திற்கு தகுந்தார்போல் இன்றைய கால கட்ட நகைச்சுவை அமைந்திருக்கிறது.. மேலும் மேலும் புதிய புதிய நகைச்சுவைகள் வந்துகொண்டும் இருக்கிறது. இன்று ஒரு நகைச்சுவை பார்க்கிறோம், அது பார்த்து போர் அடித்து விடுவதற்குள் அடுத்த படம் வந்துவிடுகிறது. அந்தத்திரைப்படத்தின் காமெடி மேலும் சிறப்பாக அமைந்துவிடுகிறது. பழைய படத்தின் காமெடி சற்று ஒதுக்கிவைக்கப்பட்டுவிடுகிறது.. அதுவே நிதர்சனம். ஆனால் அந்தக்காலம் என்று எடுத்துக்கொண்டால் அந்தக்காலத்தில் எடுக்கப்பட்ட படங்களின் எண்ணிக்கையும் குறைவு, நகைச்சுவை நடிகர்களின் எண்ணிக்கையும் குறைவு. அதனால் பார்த்த படங்களையே திரும்ப திரும்ப பார்க்கவேண்டியுள்ளது.(பழைய படம் என்று கூறும் போது அதில் புதிய படங்கள் வர வாய்ப்பில்லையே) ஆனாலும் அவை அனைத்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது உண்மை. பட்டினத்தில் பூதம், மாயா பஜார், காதலிக்க நேரமில்லை, பூவா தலையா, எதிர்நீச்சல், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, சிவகவி,…. என்று பல படங்கள். அந்தக்காலத்தில் இருந்த மனிதர்களின் பகுத்தறிவுக்கு அந்த காமெடி மிகப்பெரிய விஷயம். அதனால் அது அந்தக்காலத்தினருக்கு மிகவும் ரசிக்கக்கூடிய விஷயமாக இருந்தது. இந்தக்காலம் அப்படியல்ல, அனைத்திலும் ஒரு வேகம், எதிலும் நேரமின்மை, அவா்களால் அன்றைய கால கட்டத்தில் வந்த படங்களை பொறுமையா பார்க்க முடியாது. அதன் காரணம் அடிப்படையிலேயே நாம் அனைவரும் நம் பொறுமையை சிறிது சிறிதாக இழந்துகொண்டிருக்கிறோம். 2 ½ மணிநேரம் படம் என்றால் அதில் கதை, காதல், சிரிப்பு, பாட்டு, சண்டை.. என்று சகலமும் வரவேண்டும். அப்படி இருந்தால் தான் இன்றைய மக்களால் ரசிக்க முடிகிறது. அந்தக்காலம் போல் பாட்டுக்கென்றே ஒரு படம், கதைக்கென்றே ஒரு படம், சண்டைக்கென்றெ ஒரு படம் என்று பிரித்து பார்க்கமுடியாது. பார்க்கவும் நேரமில்லை.
நம் தமிழ் திரைப்படங்களில் தான் காமெடி நடிகர்களின் எண்ணிக்கை அதிகம். வேறு எந்த மொழியிலும் கிடையாது. இது அந்தக்காலம் தொட்டு இந்தக்காலம் வரை நீடிக்கிறது. அதற்கு காரணம் அடிப்படையிலேயே தமிழனின் நகைச்சுவை உணர்வு தான். அதை திரைப்படங்கள் முலம் வெளிக்கெணர்ந்த அந்தக்காலம் ஆலமரம் போன்றது. யாரும் அசைக்க முடியாத வண்ணம் ஆழமாக வேரூன்றி நிற்க வைக்கப்பட்டுள்ளது. அதை ஆலமரக்கிளைகளாகிய இந்தக்காலம் நன்கு படர்ந்து விரிந்து மரத்தை பாதுகாத்துவருகிறது.
அந்தக்கால விட்டலாச்சாரியார் படங்களை பார்த்து வெளிநாட்டவர்கள் ஆச்சரியப்பட்டு போகிறார்களாம். கிராபிக்ஸ் இல்லாத கால கட்டத்தில் எப்படி இப்படி எல்லாம் எடுத்தார்கள் என்று. நம் தமிழன் அனைத்து வகையிலும் திறமை சாலி. எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல. அந்தக்காலத்தில் உள்ளவர்கள் நகைச்சுவையை நிலைநாட்டினாலும், அதை இன்றளவும் பாதுகாப்பது என்பது பெரும் கலையே.. அதை நம் இன்றைய கால கட்ட நகைச்சுவையாளர்கள் திறம்பட செய்துவருகின்றனர். ஆபாசம் என்பது அனைத்திலும் புகுந்துவிட்டது. நகைச்சுவையை மட்டும் எப்படி விட்டுவைக்கும். அதனால் ஆபாசத்தையும் தாண்டி பல நகைச்சுவைகள் நம் மனதில் நீங்கா இடம்பிடித்துவிடுகின்றன..
(சரி இப்ப என்னதான் சொல்லவரீங்க…. எது சிறந்ததுன்னு சொல்லி உங்க கதைக்கு முற்றுப்புள்ளி வைங்கப்பா எவ்வளவு நேரம் ஜவ்வு போட்டு இழுப்பீங்க...… அப்படின்னு நீங்க திட்டிக்கிட்டே படிக்கிறது என் காதுல விழுகுது… சரி சரி சொல்லிடுறேன்)
ஆலமரம் உறுதியாக இருந்தால் தான், கிளைகள் நன்றாக செழித்து மேலும் மேலும் வளர முடியும். அதனால் ஆலமரமாக விளங்கிய அந்தக்காலம் தான் சிறந்தது. ஆனால் கிளைகள் நாளுக்கு நாள் செழித்து வளர்ந்து மேன் மேலும் சிறப்பாக வளர்ந்துகொண்டே செல்லும். அதில் எந்தவித ஐயமுமில்லை.
இன்று திரு. என்.எஸ்.கே (கலைவாணர்) அவா்களின் நினைவு தினம். அவா்களை மனதில் நினைப்போம். அவருக்கு இணை அவரே தான். வேறு யாருமல்ல. அத்தகைய சிறந்த மனிதரை நம் தமிழ்நாடு பெற்றிருப்பது நமது அதிர்ஷ்டமே.. வாழ்க தமிழ்… அனைவருக்கும் நன்றி…

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நடுவரே, நல்ல தீர்ப்பு, நல்ல முறையில் பட்டியை நடத்தி சென்றீர்கள் வாழ்த்துக்கள். எதிரணியினரின் வாதம் அருமை, நானும் எவ்வளவு நேரம் தான் எல்லாம் தெரிஞ்சமாதிரியே நடிக்கிறது. மடக்கி மடக்கி கேள்விகேட்டா ம்ஹூம்,என் அணியினரும் நன்கு வாதாடினர், ஆனால் பாதியிலேயே காணாம போயிட்டாங்க.

கலைவாணரின் நினைவு தினத்தன்று நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ளீர்கள்.

அன்புடன்
பவித்ரா

நடுவரின் தீர்ப்புக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன், சிறப்பாக வாதிட்ட எதிர் அணியினரை மனதார பாராட்டுகிறோம். நன்றி.

அன்புடன்
THAVAM

ஹி ஹி எங்க அணி(கவி இது உனக்கே ஓவரா தெரியல?!) வெற்றி பெற்றிடுச்சா?! எதிரணியினர் சுற்றி சுற்றி அடிச்சதுல எஸ்கேப் ஆகி ஓடிட்டேன் :). அருமையான வாதம் தோழி(ழர்)களே! எங்கள் அணியை தான்ங்இப்பிடித்த பவிக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்

நல்ல தீர்ப்பு சொல்லி எங்க ஊர்க்காரரின் நினைவுநாளை எனக்கே நினைவு படுத்தியதற்கு நன்றி :). தீர்ப்பை அழகா கொண்டு சென்று முடிச்சிருக்கீங்க. தொடரட்டும் உங்கள் எழுத்துக்கள்

வாழ்த்துக்கள் நடுவரே!

அடுத்த பட்டி நடுவர் யாருப்பா? பவி ரெடியா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாவ்.. நடுவரே! என்ன சிறப்பான தீர்ப்பு... அருமையான விளக்கமும் கூட... N.S.K அவர்களுக்கு மரியாதை செய்யும் விதத்தில் பட்டியும் அமைந்து விட்டதே!! ப்ளான் செய்து தான் தலைப்பைத் தேர்ந்த்தெடுத்தீர்களோ!! :) வாழ்த்துக்கள்..

நம் வரலாற்றில் பெரும்பாலான தலைவர்கள் ஒருவரின் இறந்தநாளில்/பிறந்த நாளில் மற்றொருவர் பிறந்திருப்பார்/இறந்திருப்பார்.. அந்த வரிசையில் தான் நீங்களுமோ! :) அவர் இறந்த நாளில் பிறந்து அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் பட்டியையும் அமைத்து விட்டீர்கள்.. :).. வாழ்த்துக்கள்

பட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. இக்காலத்திற்கான அணி போட்டுத் தாக்கி விட்டீர்கள் போங்கள்...

கவி
உங்க பாராட்டு நன்றி, அடுத்த பட்டிக்கு நான் நடுவர் இல்லை, நம்ம கல்ப்ஸ்தான்னு நினைக்கிறேன். அதுக்கு அடுத்த பட்டிக்கு நான் இருக்கலாம் என்று ஒரு யோசனை.

அன்புடன்
பவித்ரா

பட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த மோகனா மாமி, ஜெயந்தி மாமி, ரேணுகா, ஷேக் அண்ணா, தவமணி அண்ணா, கீதா ஷங்கர், கவிசிவா, நித்யாதேவி செல்வக்குமார், மீரா கிருஷ்ணன், கலைவாணி, கல்பனா சரவணன், பவித்ரா, அனிதா, வினோஜா, ஜெயலஷ்மி, கௌரிலஷ்மி, ஹேமா, பொன்னி, சுந்தரி அர்ஜுன், யோக லஷ்மி, கீதாஜி, லஷ்மிஸ்ரீ, திரு. குமார்(கவிசிவா அப்பா), கோமதி அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.. (யார் பெயரும் விட்டுப்போகலையே)...
அப்பாடி ஒரு வழியா தீா்ப்பு சொல்லிட்டோம்... யார்கிட்ட அடிவாங்கப்போறேன்னு தெரியல....

நானும் வடிவேலு, விவேக், சந்தானம் ரசிகைங்கோ... பார்க்க பார்க்க அலுத்து போகாத காமெடி நிறைய இருக்கு...
பஞ்சதந்திரம் படம் மட்டும் 15 தடவை பார்த்திருப்பேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போது புதிதாக பார்ப்பது போல் ரசித்து சிரித்து பார்ப்பேன்.. இந்தக்காலம் அந்தக்காலத்தை விட எந்த விதத்திலையும் குறைச்சல் கிடையாது.ஆனால் ஆரம்பித்தவர்களுக்கு நன்றி சொல்லணுமே... ஆரம்பித்தவர்கள் தான சிறந்தவுங்க..அதுனால தான் தீா்ப்பு அப்படி....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நன்றி பவி, நானும் எவ்வளவு நேரம் தான் இரண்டு பக்கமும் சப்போர்ட் பண்றது......ஷ்.... யப்பாடி பெரிய வேலை தான் பட்டிக்கு நடுவரா இருக்கறது.. ஆமினா,ரம்யா, கவிசிவா எப்படி நடுவரா இருந்து சமாளிச்சாங்களோ தெரியல... (நான் அவுங்க பட்டி மட்டும் தான் பங்குபெற்றிருக்கிறேன்)....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்