பட்டிமன்றம் 26 எந்தக்காலப் பண்டிகையில் மகிழ்ச்சி அதிகம்!

அறுசுவை அன்பார்ந்த நெஞ்சங்களே எனது தங்கங்களே அனைவருக்கும் என் வணக்கங்கள்.............க் க்க்க்ம் நெய்முறுக்கு, அதிரசம், மைசுர்பா, பட்டாசு, புதுத்துணி, தலைவர் பட ரிலீஸ் ம்ம் ம்ம்ம் என்ன பாக்கறீங்க? இது எல்லாம் ஒன்னா வருதுன்னா அது பண்டிகை வருதுங்கறதுக்கான அறிகுறிங்க! ஆமாங்க இந்த மாதத்திலிருந்து நம்ம வீடுகள்ள கொண்டாட்டங்கள் தானே, ஏன்னா பண்டிகைகளான நவராத்திரி, தீபாவளி, கிருஸ்மஸ், பக்ரீத், பொங்கல்னு வரிசையா கலக்கட்டப்போகுதே!

பண்டிகைனாலே சின்னவங்களுக்கு எப்பவுமே சந்தோஷம்தான் புதுத்துணி, பட்டாசு, இனிப்பு, உறவினர்களைச் சந்தித்தல், ஆடல் பாடல்னு ஜாலியா இருப்பாங்க. ஆனா நம்ம வீட்டு பெரியவர்கள்தான் அந்தக்காலத்தை நினைச்சு மருகிட்டே இருப்பாங்க. எந்தப்பண்டிகை வந்தாலும் விஷேசம் வந்தாலும் அந்தக்காலத்துல நாங்க இப்படி பண்ணுவோம் அப்படி பண்ணுவோம்னு சொல்லி சொல்லி நம்மள ஆச்சரியப்பட வைப்பாங்க. அடடா! அப்ப எல்லாம் கொண்டாடினதுதான் பண்டிகைபோல இருக்கு இப்ப நாம் எதோ பேருக்குதான் கொண்டாடரோமான்னு குழம்பிட்டே பண்டிகை நாட்களை எதிர் கொள்வோம். ஆனாலும் எதிலும் குறை வைக்காமல் மெனக்கெட்டுதான் எல்லாத்தையுமே செய்வோம். புதுத்துணி, பட்டாசு, இனிப்புனு சின்னவங்கலுக்கும் குறை வைக்காமதான் பண்ணுவோம்;)

சரி இதுதான் இந்தவார பட்டியின் தலைப்பு;-

***********************************************************************************-
பண்டிகைகளால் குடும்பங்கள் அதிகம் மகிழ்ந்தது இக்காலத்திலா? அக்காலத்திலா?
************************************************************************************

பாட்டி தாத்தன்னு பெரியவங்க நடத்துன பண்டிகைகளால் குடும்பங்கள் அதிகம் மகிழ்ந்ததா ( அந்தக்காலம் )
இல்லை
நாமே முன்னின்று நடத்தும் பண்டிகைகளினால் குடும்பங்கள் அதிகம் மகிழ்ந்ததா ( இக்காலம் )

பட்டிமன்ற விதிகளை மறக்காம நியாபகத்தில் இருத்தி அனைவரும் பங்கு பெற்று அவர் அவர் வாதங்களை அழகா போட்டி போட்டு எடுத்து வைத்து இப்பட்டி மன்றத்தை சிறப்பு செய்யனும்னு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,
நன்றி, வணக்கம்.
___/\___
************************************************************************************.

தோழி யோகலக்ஷ்மி சிறு தடங்கள் காரணமாக இந்தவார பட்டிமன்றத்துக்கு தலைமை பொறுப்பு ஏற்க முடியாமல் போனது. இருந்தாலும் அவரை கௌரவிக்கும் பொருட்டு அவர் அளித்த பட்டிமன்றத்தலைப்பையே இந்தப் பட்டிக்கு தேர்ந்தெடுத்துள்ளேன். அனைவரும் அவர் அவர் பங்களிப்பை அளித்து சிறப்பிக்க வேண்டுகிறேன்;)

Don't Worry Be Happy.

அன்புத் தோழி நடுவர் ஜெயலஷ்மிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :) அனைவருக்கும் பிடித்த, ஏற்றுக் கொள்ளக்கூடிய நல்ல ஆரோக்கியமான தலைப்பைத்தான் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். நான் இன்னும் தலைப்பை முடிவு செய்யவில்லை. நம் தோழிகளின் வருகையை பார்த்து பிறகு தலைப்பை தேர்ந்தெடுத்து வாதங்களுடன் வருகிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கல்பனா. சீக்கிரமா தலைப்பைத் தேர்ந்தெடுத்து வாதத்தோட வாங்க..;-)

Don't Worry Be Happy.

ஹாய் ஜெயா பட்டி நடுவருக்கு என் வாழ்துக்கள் நல்ல தலைப்பு

நடுவர் அவர்களே, பண்டிகைகளால் குடும்பங்கள் மகிழ்ந்தது அக்காலமே ! என்ற தலைப்பையே தேர்ந்தெடுத்து பேச விரும்புகிறேன். வாதங்களுடன் பிறகு வருகிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நன்றி ஃபாத்திமா, சீக்கிரமா நீங்களும் எந்தப் பக்கம் வாதாடப் போறிங்கன்னு முடிவு பண்ணி வாதத்தோட வாங்க;)

ஆஹா கல்பனா எந்தப் பக்கம்னு முடிவு பண்ணிட்டீங்க நன்று, வாதங்களோட வாங்க சீக்கிரம்;)

Don't Worry Be Happy.

பண்டிகை என்றால் மகிழ்ச்சி. மகிழ்ச்சி என்றால் குதூகலம்...குதூகலம்... குதூகலம்... அப்படியொரு குதூகலம். அது எங்கிருந்து வரும்னு நினைக்கறீங்க. கண்டிப்பா அந்தகாலத்துல இருந்துதான். எதிரும் புதிருமா உட்கார்ந்து பண்டிகை கொண்டாடினா வந்துடுமா அந்த மகிழ்ச்சி. பிறந்த நாள்,திருமண நாள் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகள், பண்டிகைகளுக்கு ஏன் உறவுகள், தெரிந்தவர்கள், நண்பர்கள், சுற்றம், சூழல் என்று அழைக்கிறோம். ஏனென்றால் அப்போதுதான் மகிழ்ச்சி பிறக்கும். அது போன்று அந்த காலத்தில் தான் பார்க்க முடிந்தது. இப்போதைய தலைமுறைகள் அதற்கெல்லாம் கொடுத்து வைக்கவில்லை.

அந்த காலத்தில் பண்டிகை வந்தால் போதும் சொந்தங்கள் அத்தனையும் தங்கள் கூட்டில் இருந்து வெளியே வந்து ஆலமர நிழலில் கூடுவர். அதாவது சொந்தங்கள் தத்தம் வீடுகளில் பண்டிகைகளை கொண்டாடாமல் தங்களின் மூத்த உறுப்பினர் தாத்தா - பாட்டி வீட்டில் கொண்டாடுவர். பண்டிகை காலங்களில் அந்த காலத்தில் பத்தும் பத்தாமல் ஒரு பண்டத்தை செய்து பத்து பேர் பிச்சிக்கோ பிடுங்கிக்கோன்னு சாப்பிடுவாங்க. அது சாதாரண உணவாக இருந்தாலும் அப்படி சாப்பிடும்போது பன்மடங்கு சுவை கூடும். எதிரும் புதிருமாக இருவர் சேர்ந்து பத்து வித பலகாரங்கள் செய்து உண்டாலும் அந்த சுவைக்கு ஈடாகாது.

பண்டிகை அன்று பெரியப்பா-பெரியம்மா அவர்கள் குழந்தைகள், சித்தப்பா - சித்தி அவர்கள் குழந்தைகள், அத்தை - மாமா அவர்கள் குழந்தைகள் இப்படி வீடே கல்யாண வீடு போல அமர்க்களப்படும். பார்க்க கண் கோடி வேண்டும். நான் இங்கே உறவுமுறைகளை மட்டும் தான் சொன்னேன். எண்ணிக்கையை சொல்லவில்லை. இன்னும் சித்தப்பா,பெரியப்பா,அத்தைகளில் ஒரு நான்கு ஐந்து பேர் என்று வைத்துக் கொள்வோம். அப்போது இன்னும் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள் (தாத்தா இவஙளுக்கெல்லாம் துணி எடுத்து கொடுத்தே ஒரு மாதிரி ஆகி விடுவார். பாட்டி பலகாரம் செய்து கொடுத்தே பாதியாகிவிடுவார்... அதெல்லாம் இங்கே பேசப்பிடாது. எதிரணி உசாராய்டுவாங்க)

என் சிறுவயது பண்டிகை நாட்களை எண்ணிப்பார்த்தால் இப்போதும் மனசுக்குள் குளுகுளுன்னு ஐஸ்க்ரீம் ஊற்றே கிளம்புது. அவ்வளவு சந்தோஷமா இருக்கும் அந்த நாட்கள். என் பாட்டிக்கு 3 பெண்கள் 2 ஆண்கள், 4 தம்பிகள். பேரன் பேத்திகள் மட்டும் 13 பேர். ஒரு தீபாவளி மற்றும் பண்டிகை நாள் வந்துவிட்டால் அனைவரும் பாட்டி வீட்டில் தான் கூடுவோம். தீபாவளி அன்று விடிகாலை 3 மணிக்கு தீ மூட்டப்படும் பாய்லர் 10 மணிவரையிலும் ஓயாது. அத்துணை பேருக்கும் பாட்டி தான் எண்ணெய், சீயக்காய் சேர்த்து தலைக்கு ஊற்றுவார். சிறு சோர்வுமின்றி மகிழ்ச்சியுடனே செய்வார். அதற்கு முந்தின நாள் போளி செய்யும் வேலை நடந்திருக்கும். வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் ஈடுபட்டிருப்பார்கள். பலகாரங்கள் உறவுகளுக்கு மட்டுமன்றி ஊருக்கே தர தயாராகிக் கொண்டிருக்கும். அதுவும் பாட்டிக்கு கை பெருசு ஒரு வீட்டு உறுப்பினர்களுக்கு ஆகும்படிதான் பலகாரம் தருவார். அதனால் பண்டிகை என்றால் ஊருக்கே கொண்டாட்டம் தான். (என்பாடு தான் திண்டாட்டம் ஆகும். பின்னே அத்தனை வீட்டுக்கும் கால் உடைய டிஸ்ரிபியூட் பண்றது யாராம்? நான் தானே)

அதனால நடுவர் அவர்களே, எனக்கு அன்னைக்கு ஒரு பேச்சு, இன்னைக்கு ஒரு பேச்சு இல்லை. என்னைக்கும் ஒரே பேச்சுதான். பண்டிககளால சந்தோஷம் என்பது அக்காலமே... அக்காலமே.... அக்காலமேன்னு சொல்லி ஜகா வாங்கிட்டு அப்பால வர்றேன் ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நல்ல முடிவு!
நல்ல தலைப்பு..........!

பெரிய பெரிய தலைகள் தலைகாட்டிய பின் என் வாதத்துடன் வருகிறேன். பட்டி சிறக்க வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பண்டிகை காலத்துக்கு ஏற்ற நல்ல தலைப்பு தேர்வு செய்த நடுவருக்கு என் நன்றிகள்!தலைப்பைக் கொடுத்த யோகலெக்ஷ்மிக்கும் நன்றிகள் பல!

நடுவருக்கும் தோழிகளுக்கும் பண்டிகை கால வாழ்த்துக்களோடு அன்பான வணக்கங்கள்!

இந்தகாலத்து பண்டிகைகளை விட அக்காலத்து பண்டிகைகளே மகிழ்ச்சி தருகிறது என்பதே என் வாதம்.

அந்தகாலத்தில் பண்டிகை என்றால் ஒரு மாதத்திற்கு முன்னேயே தயாராக ஆரம்பித்து விடுவோம். மகிழ்ச்சியும் அப்போதே ஒட்டிக்கும். அக்காலத்தில் சிறியவர்கள் என்ன மாதிரியான உடை எடுப்பது, என்னமாதிரி வெடி வெடிப்பது, அம்மா என்னென்ன பலகாரங்கள் செய்வார்கள் என்று நண்பர்களோடு டிஸ்கஷன் ஆரம்பித்து விடுவார்கள். பள்ளியில் சின்ன இடைவேளை கிடைத்தாலும் இதுதான் பேச்சாக இருக்கும். இன்னிக்கு பெரும்பாலான குழந்தைகளுக்கு இந்த ஆர்வம் இல்லை. அவர்களுக்கு கார்ட்டூன் பற்றியும் புதியவகை வீடியோ விளையாட்டுக்களைப் பற்றித்தான் அதிகம் அக்கறை :(. பண்டிகை இக்கால குழந்தைகளுக்கு ஒரு விடுமுறை தினம் அவ்வளவே!

அடுத்து வீட்டிலுள்ள் ஆண்கள் பட்ஜெட் போட ஆரம்பித்து விடுவார்கள். ஆனா பாவம் அவங்களுக்கு பண்டிகை அக்காலத்திலும் இக்காலத்திலும் கொஞ்சம் கிலி பிடித்ததுதான் ஹி ஹி.

அக்காலத்தில் பெண்கள் பண்டிகை வருவதற்கு பத்து இருபது நாட்களுக்கு முன்னமேயே பலகாரங்கள் தயாரிப்புக்கான வேலைகளில் இறங்கி விடுவார்கள். வீடே பரபரப்பாக உற்சாகமாக இருக்கும். வேலைகள் அதிகம் இருந்தாலும் குடும்பத்திற்காக பிள்ளைகளுக்காக செய்கிறோம் என்பதில் ஒரு ஆத்ம திருப்தி மகிழ்ச்சி. அது இன்றைய பண்டிகைகளில் கொஞ்சம் குறைவே! காரணம் இன்று யாருக்கும் நேரம் இல்லை. அலுவலக வேலைகள் பிள்ளைகள் படிப்பு என்று ஓடிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு வீட்டில் உட்கார்ந்து பலகாரம் செய்ய நேரம் இருப்பதில்லை. இல்லத்தரசிகளாக இருக்கும் பென்களுக்கும் எதற்காக இவ்வளவு மெனக்கெடணும் கடைகளிலேயே வாங்கிக் கொள்ளலாமே என்ற எண்ணம் வந்து விட்டது. இல்லை இருக்கவே இருக்கிறது ரெடிமேட் மிக்ஸ்கள். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பலகாரங்கள் கொடுப்பது கூட அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்ப கடைகளில் கிஃப்ட் பாக்சாக வருவதை வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். எல்லாம் கடனுக்காக செய்வது போல் அமைந்து விடுகிறது.

இன்று பலரும் வெளிநாடுகளில் வெளியூர்களில் குடும்பத்தினரை விட்டு தனியே இருக்கிறோம். பண்டிகை நாள் காலையில் அப்பா அம்மாவை, உடன் பிறப்புகளை தொலைப் பேசியில் வாழ்த்தி விட்டு எதையோ இழந்த உணர்வுடனேயே ஆரம்பிக்கிறது. என்னதான் வித வித இனிப்புகள் இருந்தாலும் தொண்டையில் சந்தோஷமாக இறங்க மறுக்கிறது. உண்மையில் இக்கால பண்டிகை நாளில் உணவை நாம் விழுங்க மட்டுமே செய்கிறோம். சாப்பிட முடியவில்லை :(.

அப்பா அம்மாவோடு இருக்கும் போது விஷேஷ நாட்களில் சாப்பிடும் போது அப்பா ஊட்டிவிடும் முதல் கவளம் சோற்றுக்காக இன்று மனம் ஏங்குகிறது. அண்ணா எனக்கு விபூதியிட்டு காலில் விழுந்தால்தான் பணம் தருவேன் என்று கலாய்க்கும் போது பணத்திற்காக அவன் காலில் விழுந்து கிடைக்கும் 10ரூபாய் என்றாலும் அது மனதிற்கு அன்று சந்தோஷத்தைக் கொடுத்தது. இன்று இருவரும் வெவ்வேறு திசைகளில் :(.

அக்கால பண்டிகைகளில் உறவுகளின் சந்திப்பு என்பது பிரதானமாக இருந்தது. இக்கால பண்டிகைகளில் தொலைக்காட்சியில் வரும் நடிக நடிகையரின் சந்திப்புகளே பிரதானமாகி விட்டது. இதுவா மகிழ்ச்சி?! இன்று பண்டிகை என்றாலே தொலைக்காட்சியின் முன் தவம் கிடப்பதுதானே நடக்கிறது. பண்டிகையின் கொண்டாட்டங்களை பெருமைகளை நாம் மறந்து சிலகாலங்கள் ஆகி விட்டது. இன்று எல்லாமே இன்ஸ்டண்ட். அதே போல் பண்டிகைகளும் இன்ஸ்டண்ட் :(

இன்னும் வருவேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

முதலில் அழகான தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கும் நமது நடுவர் ஜெயலஷ்மிக்கு எனது வாழ்த்துக்கள். நல்ல தலைப்பு யோகா. என்னுடைய வாதம் அக்காலத்திற்கே.

தீபாவளிஈ பொங்கல், நவராத்திரி, வருஷப்பிறப்பு அப்படின்னு எல்லாப் பண்டிகையும் மிகச் சிறப்பாக கொண்டாடியது அந்தக்காலங்களில் தான். கூட்டுக்குடும்பமா எல்லாரும் ஒன்னா சேர்ந்து கொண்டாடிய அந்தக்காலம் தான் மகிழ்ச்சியான காலம். இன்றைய காலகட்டத்தில் எல்லாரும் அந்த அளவு மகிழ்ச்சியா கொண்டாடுவதுகிடையாது.

காரணம்
1. அந்தக்காலத்துல தீபாவளி வருதுன்னா ஒரு வாரத்துக்கு முன்னாடி இருந்தே முறுக்கு, அதிரசம், மிக்சர் அப்டின்னு வீட்ல எல்லாரும் செய்ய ஆரம்பிச்சுடுவாங்க. அப்படி செய்யும்போதே எல்லாரும் ஒன்னா உக்காந்து பட்ஷணம் பண்ணுற அழகே தனி தான். கதை பேசி சிரிச்சு சந்தோஷமா பண்ணுவோம். ஒருமாசம் முன்னாடியே புது டிரஸ், எந்த மாதிரி வெடி வாங்கலாம் என்ன பண்ணலாம்னு பெரிய திட்டம் எல்லாம் போடுவோம்.

ஆனா இந்தக்காலத்துல கடைல வாங்கி மனைல வைக்கிறது தான் பேமஸ். கேட்டா நேரமின்மை. வீட்ல அப்பா அம்மா வேலைக்கு போயிடுறாங்க. கூட்டுக்குடும்பமும் கிடையாது. பசங்களும் ஸ்கூல் போயிடும். தீபாவளிக்கு முதல் வாரம் போய் சனி ஞாயிறுல டிரஸ் எடுப்பாங்க.. அப்படியே கிருஷ்ணா ஸ்வீட்ஸ் போய் தீபாவளி பலகாரங்கள் எல்லாம் வாங்கிட்டு வீட்டுக்கு வந்துடுவாங்க. அப்படியே வெடி எல்லாம் ஒரே நாள் பர்சேஸ்ல முடிச்சுட்டு தீபாவளி அன்னைக்கு காலைல எழுந்து ஒரே ஒரு வெடி மட்டும் போட்டுட்டு குளிச்சு புது டிரஸ் போட்டுக்கிட்டு டிவி முன்னாடி உக்காந்துடவேண்டியதுதான். அதுக்கப்பறம் அன்னைக்கு முழுக்க தீபாவளி சிறப்பு நிகழ்ச்சினு சொல்லி வீட்ல டிவி மட்டும் தான் பேசும். எல்லாரும் அதுல மூழ்கிபோயிடுறாங்க. இது தான் இந்தக்கால கட்டத்துல நடக்குற தீபாவளி. இது தான் சந்தோஷமா? இது தான் கொண்டாட்டமா? நடுவர் அவர்களே சிந்திக்க வேண்டும்.

அந்தக்காலத்துல நம்ம அப்பா அம்மா கூட தீபாவளி கொண்டாடியதற்கும் இப்போது நாம் நம் பிள்ளைகளோடு தீபாவளி கொண்டாடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை நடுவர் அவர்கள் உணர வேண்டும். சற்றே சிந்தியுங்கள் எதிரணியினரே.... (எதிரணி இன்னும் உருவாகவில்லையோ?....)

2. நவராத்தி கொண்டாடுவது அந்தக்காலம் போல் வராது நடுவர் அவர்களே. நான் சின்ன பொண்ணா இருக்கும் போது 9 நாளும் விதவிதமா அலங்காரம் பண்ணி கையில குங்குமச்சிமிழ கொடுத்து எல்லார் வீட்டுக்கும் போய் “எங்காத்துல கொலு வச்சிருக்கோம்.. கண்டிப்பா வந்துடுங்கோ...” அப்படின்னு எல்லாரையும் கூப்பிட்டு பாட்டு பாடி சந்தோஷமா கழித்த நாட்கள்போல் வருமா.

தற்போது இந்த மாதிரி சந்தோஷங்கள் கிடையாது. யாருக்கும் யாரையும் அழைத்து வெற்றிலை பாக்கு கொடுக்க நேரமில்லை. 9 நாளும் ஆபிசில் லீவு கிடைக்குமோ?.. கிடைக்காது. அதனால 9 நாட்கள் குறைந்து 2 நாட்கள் மட்டும் கொண்டாடுவார்கள் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை என்று. குழந்தைகளுக்கும் அந்த 2 நாட்கள் தான் கொண்டாட்டம்.

அதுவும் என்னைப்போன்று வெளிநாட்டில் இருப்பவர்களின் குழந்தைகளுக்கு கொலு என்றால் என்னவென்றே தெரியாது. என் பையனிடம் சொன்னால் அப்படின்னா என்னம்மா என்று கேட்கிறான். எவ்வளவு பெரிய விஷயத்தை குழந்தை இழந்து கொண்டிருக்கிறது என்று பார்க்கும் போது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. இந்த ஊரில் வெடி வெடிக்கக்கூடாது என்பது சட்டம். வெறும் மத்தாப்பு மட்டும் தான் வைக்கலாம். என் பையனுக்கு வெடி என்றால் என்னவென்றே தெரியவில்லை. டிவியில் தான் காண்பிக்க வேண்டியிருக்கிறது. கண்ணா இது தான் வெடி... பயங்கர சத்தத்தோட வெடிக்கும் அப்படின்னு சொல்ல வேண்டியிருக்கு நடுவரவர்களே.. அதனால் சற்றே சிந்தித்து பண்டிகைகளில் சிறந்தது அந்தக்காலமே என்று தீரப்பளிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் வாதங்களோடு வருகிறேன். நன்றி... (இப்ப தான் பட்டி ஆரம்பிச்சுருக்கு அதுக்குள்ள தீா்ப்பு பத்தி சொல்ல வந்துட்ட.............இது ஓவரா இல்ல?)

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்