ஸ்டஃப்டு சப்பாத்தி

தேதி: October 6, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (6 votes)

 

சப்பாத்திக்கு:
கோதுமைமாவு - ஒரு கப்
நெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
தண்ணீர் - பிசைவதற்கு (தேவையான அளவு)
ஸ்டஃப் செய்ய:
காரட் - ஒன்று
டோஃபு - 125 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு


 

முதலில் கோதுமை மாவுடன் நெய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவை பிசைந்துக் கொள்ளவும். கடைசியாக ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நன்கு பிசைந்து முடி வைக்கவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும்.
காரட்டை துருவிக் கொள்ளவும். டோஃபுவை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு பொரிந்ததும் நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு நன்கு பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி, துருவிய கேரட் மற்றும் டோபு சேர்த்து நன்கு கிளறவும். ஒரு நிமிடம் கழித்து மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி ஒருநிமிடம் மூடி வைக்கவும்.
கடைசியில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கிளறி எடுத்து ஆற விடவும்.
பிசைந்து வைத்திருக்கும் சப்பாத்தி மாவை மேலும் ஒரு முறை நன்கு பிசைந்து எலுமிச்சை அளவுடைய உருண்டையாக உருட்டி அதை இரு சம அளவுள்ள உருண்டைகளாக மாற்றவும். அதாவது ஒரு சப்பாத்தி செய்ய தேவையான அளவுடைய மாவை இரண்டு சப்பாத்திக்கு தேவையான மாவாக மாற்றவும். அந்த மாவை இரண்டு சப்பாத்திகளாக மிக மெல்லிய சப்பாத்திகளாக இட்டுக்கொள்ளவும்.
பிறகு ஒரு சப்பாத்தியின் மேல், செய்து வைத்திருக்கும் ஸ்டஃப்பை பரப்பவும். ஓர் அங்குல அளவுடைய ஓரங்களை விட்டுவிட்டு மீதி இடம் முழுவதும் இந்த ஸ்டஃப் பரவலாக இருக்குமாறு பரப்பவும்.
பிறகு இட்டு வைத்திருக்கும் மற்றோர் சப்பாத்தியை அதன் மேல் வைத்து ஓரங்களை கையால் நன்கு அழுத்தி இணைத்து விடவும். இப்போது சப்பாத்திக்கட்டையால் மெதுவாக சப்பாத்தியை அழுத்தி உருட்டி ஸ்டப் சரிசமமாக இருக்குமாறு செய்து கொள்ளவும்.
செய்து வைத்திருக்கும் சப்பாத்தியை தோசைக்கல்லில் போட்டு நெய் அல்லது எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். தோசைக்கல்லில் திருப்பிப் போடும்போது கவனமாக போடவும்.
இந்த சப்பாத்தியில் மாவு அதிகம் கனமில்லாதது, அதே சமயம் எல்லா இடங்களிலும் ஸ்டப் பரவி இருக்கும்.

மாவை குழி செய்து அதற்குள் ஸ்டப் வைத்து செய்யும் முறை இந்த கேரட் டோபு மசாலாவிற்கு ஒத்துவராது. ஏனென்றால் இந்த மசாலா சற்று தளர இருக்கும். உருளைக்கிழங்கு உபயோகித்து செய்யும் ஸ்டப் மட்டுமே குழிசெய்து உள்ளே பூரணம் போல் வைத்து செய்ய முடியும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Chappathi looking very super. what is the meaning of "dobhu".
Please tell me madam.

TRY TRY TRY
DON'T BE SHY
THEN YOUR POSITION WILL BE HIGH.

ராதா மேடம் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு. போட்டோஸ் எல்லாமே ரொம்ப அருமையா வந்துருக்கு கையில நல்ல ஒரு தொழில் இருக்குனு சொல்லுங்க.
இத நான் கட்டாயமா செய்ய போகிறேன் இன்னக்கி நைட் டின்னருக்கே. ஆனா மேடம் டோபுனா என்ன மேடம் அது சேர்க்காமல் செய்ய முடியாதா அது மட்டும் தான் இல்லை.(அப்பறம் அது இல்லாமல் எப்படி செய்ய போறனு கேட்குறீங்களா). அது சேர்க்காமல் செய்து பார்க்க போறேன் மேடம்.

ராதா சப்பாத்தி பார்க்க ரெம்ப சூப்பரா இருக்கு அம்மாட்ட சொல்லி செய்ய சொல்லுவேன்
யாழினி டோபுனா பன்னீர், கரெக்ட் தானே ராதா , தப்புன்னா உடனே சொல்லிடுங்க

நானும் அதுவாக தான் இருக்கும்னு சந்தேகத்துல தான் கேட்டேன் பார்க்க அப்படி தான் இருக்குல நன்றி கலை.
நானும் செய்ய போறேன் நீங்களும் அம்மாகிட்ட சொல்லி செய்ய சொல்லி சாஅப்பிடுங்க இல்லைனா எங்க வீட்டுக்கு கூட வரலாம். நான் செய்தத சாப்பிட
(அய்யோ நில்லுங்க கலை நில்லுங்க கலை நான் நல்லா தான் சமைப்பேன்)

குறிப்பை வெளியிட்ட அட்மின் டீமுக்கு நன்றி....

ஸ்ரீதேவி, யாழினி,கலை
உங்கவருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றிப்பா....

டோபு-ன்னா.. சோயா பனீர். நம்ம நார்மல் பன்னீா் பால்-ல இருந்து எடுப்பது. இது சோயா பால்-ல இருந்து எடுப்பது. டோபு இல்லாமல் சாதா பன்னீர் சேர்த்தும் செய்யலாம். நமக்கு வேண்டும் என்ற குருமா செய்து ஸ்டப் பண்ணலாம். காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு... இப்படி என்ன வேணும்னாலும் செய்யலாம்பா.....

கண்டிப்பா செய்து பார்த்துட்டு பின்னுாட்டம் கொடுங்க.. நன்றி...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா டோபு என்றால் என்னவென்று தெரியாமல் உள்ளே வந்தால். அதற்க்கு விளக்கமும் கொடுத்து விடீர்கள்.
அடடே.....சோயா பனீரா டோபு. எனக்கு இவ்வளவு நாளும் தெரியாமல் போச்சே.
இவ்விடம் சோயா பனீர் கிடைப்பது கஷ்டம். நான் சாதாரண பனீரில் செய்யலாம் என இருக்கின்றேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

வாவ் ராதா சூப்பர் ரெசிப்பி! விரைவில் செய்து விடுகிறேன். இல்லேன்னா உங்க வீட்டுக்கு வரும்போது செய்து கொடுங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் ராதா...,எப்படி இருக்கீங்க..?
சமீபத்தில் நிறைய குறிப்பை கொடுத்து அசத்தியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.
உங்களின் இந்த ஸ்டப்ட் சப்பாத்தி செய்முறை ரொம்ப அருமையாக இருக்கு.
இது போன்று டோஃபுக்கு பதிலாக முட்டை போட்டுதான் செய்திருக்கிறேன்.
இதையும் செய்து பார்த்திட வேண்டியதுதான்.
நல்ல குறிப்புகளை கொடுத்து கொண்டிருக்கும் தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ராதா,
ஸ்டஃப்டு சப்பாத்தி செய்முறையும்,விளக்கமும் அருமை.என் தோழி(she is from goa)இதை'பராத்தா'னு சொல்லுவாங்க.அவங்க வீட்ல சாப்ட்டு இருக்கேன். இனி நானும் செய்ய ட்ரை பண்ரேன்.குறிப்புக்கு வாழ்த்துக்கள்.

யோகா மேடம்.. உங்க வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றி.. எனக்கு டோஃபு அதிகம் கிடைக்கும். சைனீஸ் உணவு வகை என்பதால் டோஃபு இங்கு எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும். நமது பன்னீர் சுவை இருக்காது. இதை எண்ணெயில் பொரித்து நுாடுல்ஸ், பிரைடு ரைஸ் இவற்றிற்கு சேர்த்துக்கொண்டால் சுவையாக இருக்கும்.

சாதாரண பன்னீரிலும செய்து பாருங்கள். நன்றாக இருக்கும். உள்ளே வைக்கும் மசாலா நம் விருப்பம் தானே...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கவி.. நான் இந்த ரெசிப்பி போடுறதுக்கு முன்னாடி இந்த குறிப்பு ஏற்கனவே வந்திருக்கானு பாத்தேன். அப்ப தான் நீங்களும் இதே மாதிரி ஒரு குறிப்பு கொடுத்திருப்பதை பார்த்தேன். இருந்தாலும் 2ம் வித்தியாசம் என்பதால் தைரியமாக குறிப்பை அட்மின்க்கு அனுப்பி வைத்துவிட்டேன். கண்டிப்பா செய்து பாருங்க.. வீட்டுக்கு வர்றேன்னு சொல்லிட்டே தான் இருக்கீங்க.. வர மாட்டேங்கறீங்களே.. வாங்க கண்டிப்பா செய்து தருகிறேன்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அப்சரா மேடம்.. உங்க வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றி.. உங்க குறிப்பு பார்த்து தான் நான் சன்னாமசாலா அனுப்பி வைத்தேன். நீங்க ரொம்ப நாளா அறுசுவைக்கு வர்றது கிடையாதோன்னு நினச்சுட்டு இருந்தேன். பாத்தா என்னோட குறிப்புக்கே பின்னுாட்டம் கொடுத்திருக்கீங்க. ரொம்ப சந்தோஷம். கண்டிப்பா செய்து பாருங்க.. உங்களுடைய குறிப்புகள் தான் எங்களையும் குறிப்புகள் கொடுக்க உற்சாகப்படுத்துது.. எங்களுக்கு வழிகாட்டியே உங்கள மாதிரி சீனியர் மெம்பர்கள் தான..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அன்பரசி.. உங்க வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றி.. ஒவ்வொரு முறையும் என்னோட குறிப்புக்கு பின்னுாட்டம் கொடுத்து உற்சாகப்படுத்துவதில் நீங்களும் ஒருவர். மிக்க நன்றி அதற்கு..

பாராத்தா என்று மைதா மாவில் செய்வதை தானே சொல்வோம். நான் கேள்விப்பட்டதில்லை அன்பரசி.. இருந்தாலும் பெயர் எப்படி ஆகிலும் சாப்பிடுவதும் டேஸ்ட்-ம் தான முக்கியம். அதுனால கண்டிப்பா செய்து பாருங்க..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா ஹரி
நீங்கள் கொடுத்துள்ள செய்முறையும் விளக்கமும் மிக அருமை. உள்ளே வைக்ககூடிய ஸ்டஃப் அவரவர் தேவைக்கேற்றப்டி சிறிது மாற்றிக்கொள்ளலாம் போலத் தோன்றுகிறது. நன்றி.

எஸ்.ஏ.பூரணி

AnbE Sivam

நல்ல ஹெல்தியான் டிஷ்,இன்று டின்னர் இதுதான்,டோபுக்கு பதில் பனீர் சேர்த்துசெய்யபோறேன்,நிச்சயமா நல்லா இருக்கும்,வாழ்த்துக்கள்.

வாவ் ராதா மேடம், நல்ல ரெசிப்பி நானும் இதேபோல் தான் செய்வேன் STUFFING ல் காளிஃபிளவர் துருவி சேர்ப்பேன். தொடர்ந்து குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.

பூரணி, ரீம், ரம்யா.. உங்க வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றிப்பா..

உள்ளே வைக்கும் ஸ்டஃப் நம் தேவைக்கு தகுந்த மாதிரி மாற்றிக்கொள்ளலாம்பா.. கண்டிப்பா செய்து பாருங்க. நன்றி..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

காரட் ஸ்ட்ப்ட் சப்பாத்தி ரொம்ப நல்லா இருக்கு பார்க்கவே செய்து பார்க்கணும்

idhuvum kadandhu pogum.

i will try

நேற்று டின்னருக்கு ட்ரை பண்ணினேன். சுவையாக இருந்தது. குறிப்புக்கு நன்றி.

‍- இமா க்றிஸ்