நம்பர் ப்ளேட் டிசைன்

தேதி: November 10, 2010

4
Average: 3.1 (9 votes)

இந்த நம்பர் ப்ளேட்டை செய்து காட்டியவர் அறுசுவையின் நீண்ட நாள் அங்கத்தினராகிய திருமதி. இமா அவர்கள். 25 வருடமாக ஆசிரிய பணியை சிறப்புடன் செய்து வருகிறார். உணவுகள் தயாரிப்பதில் இருக்கும் ஆர்வத்தைவிட அதை கலையுணர்வுடன் அழகுபடுத்தி பரிமாறுவதில்தான் மிகவும் ஆர்வம் என்று சொல்லும் இவர், கைவினைப் பொருட்கள் செய்வதிலும் மிகத் திறமை வாய்ந்தவர்.

 

சிறிய டைல் - ஒன்று
மெதய்லேட்டட் ஸ்பிரிட் (methylated spirit)
பேப்பர் டவல்
செராமிக் பெயிண்ட் - கருப்பு, பச்சை மற்றும் பூக்களுக்கேற்ற வர்ணங்கள்
டூத் பிக்
காட்டன் பட்ஸ்
டிஸ்போசபிள் க்ளவ்
பென்சில்
கத்தரிக்கோல்
க்ராப்ட் நைஃப்
செல்லோ டேப்
க்ளூ
ட்யூரா சீல் பேப்பர்
ப்ரஷ்கள் மற்றும் தட்டு
பெயிண்ட் செய்யப் போகும் இலக்கம் - இலக்கத்தை டைலுக்கு ஏற்ற மாதிரியான
அளவில் ப்ரிண்ட் செய்து எடுக்கவும்.

 

டைலை சவர்க்காரம் (சோப்பு) கொண்டு முன்பே கழுவிக் காய வைக்கவும். டைலில் ஸ்டிக்கர்கள் எதுவும் இருக்கக் கூடாது. மேசையில் பழைய கடதாசியைப் விரித்து வைத்து பெயிண்ட் செய்தால் மேசையில் பெயிண்ட் படாது.
கையில் க்ளவ் அணிந்து கொண்டு பஞ்சு விடாத பேப்பர் டவலினால் ஸ்பிரிட் தொட்டு டைலின் பெயிண்ட் செய்ய இருக்கும் மேற்பரப்பைத் துடைத்துக் கொள்ளவும். டைலின் அளவுக்கு ஒரு கடதாசித் துண்டு ஒன்றை வெட்டி எடுக்கவும்.
அந்த கடதாசியை நான்காக மடித்து விரும்பிய விதமாக ஒரு பார்டர் டிசைனை வெட்டி வைக்கவும்.
செல்லோ டேப் கொண்டு டைலுடன் இணைத்துக் கொள்ளவும். (டேப்பை பென்சிலைச் சுற்றி வளையம் போல் ஒட்டி எடுத்து ஒட்டிக் கொண்டால் திரும்பக் கழற்றுவது சுலபமாக இருக்கும்.)
டைலில் ஒட்டிய கடதாசியின் நான்கு மூலைகளிலும் பச்சை நிற பெயிண்டினால் அவுட்லைன் போன்று வரைந்து கொள்ளவும். நடுவில் இருக்கும் இடைவெளியில் ஒரு அடையாளத்திற்காக மஞ்சள்நிற பெயிண்டினால் மூன்று புள்ளிகள் வைத்து அவை காயந்ததும் அதனை சுரண்டி எடுத்து விடவும். பிறகு கவனமாகக் கடதாசியை நீக்கிவிட்டு டேப் போட்ட இடங்களை ஸ்பிரிட் தொட்டுத் துடைக்கவும்.
ப்ரிண்ட் எடுத்து வைத்திருக்கும் இலக்கத்தை சுற்றிலும் 3 அல்லது 4 செ.மீ அளவு விட்டு நறுக்கி வைக்கவும். இதை க்ளூ கொண்டு ட்யூராசீல் கடதாசியின் கோடு உள்ள பக்கத்தில் (பின் பக்கம்) ஒட்டவும். டைலின் அளவுக்கு சரியாக வருமாறு பார்த்து ஒட்டவும். (ஒட்டும் போது பக்கம் மாறி ஒட்ட வேண்டி வரும்.)
இலக்கத்தின் நடுவே கத்தியால் கீறிக் கொண்டு அதன் உள்ளே கத்தரியை விட்டு, கவனமாக ஸ்டென்சில் போல் வெட்டி எடுக்கவும். எண்களையும், எழுத்தையும் சுற்றிலும் வெட்டி எடுத்துவிட்டு, நடுத் துண்டுகளையும் பத்திரப்படுத்தி வைக்கவும்.
வெட்டி வைத்திருக்கும் ஸ்டென்சிலை, பாக்கின் பேப்பரை (backing sheet) எடுத்து விட்டு டைலில் ஒட்டவும். தேவையாயின் நடுத்துண்டுகளையும் ஒட்டவும். நடுத்துண்டுகளை ஒட்டும் போது பாக்கிங் பேப்பரை எடுத்து விட்டு ஒரு குச்சியில் வைத்துக் கொண்டால் சரியான இடத்தில் ஒட்டிக் கொள்ளச் சுலபமாக இருக்கும்.
இனி கருப்பு பெயிண்டைத் தொட்டு எழுத்துக்களை ஒரு கோர்ட்டிங் பெயிண்ட் செய்துக் கொள்ளவும்.
முதல் கோர்ட்டிங் பெயிண்டை காய விட்டு, பிறகு இரண்டாவது கோர்ட்டிங் கொடுக்கவும். ஸ்டென்சிலாக ஒட்டி இருக்கும் கடதாசியைப் பத்திரமாகப் பிரித்து எடுக்கவும். காயவிடாமல் உரிக்கவும். இல்லாவிட்டால் பெயிண்ட் செய்ததும் சேர்ந்து உரிந்துவிடும். பச்சை நிறம் அங்கங்கே உரிந்தால் பிரச்சனை இல்லை.
இலைகள், காம்புகளை விரும்பியவாறு பெயிண்ட் செய்துக் கொள்ளவும். (சில இலைகளுக்கு வெண்மை நிறம் கலந்து பூசி உள்ளார்.)
பூக்கள் மற்றும் மொட்டுக்களை உங்கள் விருப்பம் போல் வரைந்துக் கொள்ளவும். அவற்றின் காம்புகளும் பெயிண்ட் செய்துக் கொள்ளவும்.
பூக்கள் இதழ்களில் பொருத்தமாக கோடுகள் வரைந்து விடவும்.
டைலில் முழுவதும் பெயிண்ட் செய்து முடித்ததும் 2 நாட்கள் காயவிட்டு பேக் செய்து எடுக்க வேண்டும். டைலில் செய்த அழகான நம்பர் ப்ளேட் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

இமா மேடம் நம்பர் ப்ளேட் டிசைன் டைலில் செஞ்சு இருக்குறது ரொம்ப நல்லா இருக்கு. இத செய்யறதுக்கு நல்ல பொறுமை வேணும். இத எப்படி கதவுல மாட்டி வைக்கனும்.

'லிக்விட் நெய்ல்' கொண்டு ஒட்டலாம்.
ப்ளேட் மாட்டிவைக்கவென்று ஒரு ஸ்ப்ரிங் க்ளிப் விக்குறாங்க, அதுல மாட்டி ஆணியில மாட்டலாம்.
வெயில் படாத இடத்தில் மாட்டுவதானால், டைல் பின்னால் ஒட்டக் கூடிய விதமான ஹூக்குகள் கிடைக்கும், அதை வாங்கி ஒட்டினால் எங்கு வேண்டுமானாலும் மாட்டலாம். இங்கு 2 வருஷ காரண்டியோடு கிடைக்கிறது. ;)
இல்லாட்டி இதைச் சுற்றி பலகைல ப்ரேம் போட்டு மாட்டலாம். உங்க விருப்பம் & வசதி போல செய்யலாம்.

‍- இமா க்றிஸ்

செராமிக் பெயிண்ட் கொண்டு நிறைய வேலை பாடு செய்துள்ளேன். பேக் முறை எளிது. அவன் இல்லாதவங்க 25 நாட்கள் காயவைத்து தான் உபயோகிக்கணும்.

நல்லாயிருக்கு இமா!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இமாம்மா பார்க்க என்னமோ ஈஸியா இருக்கற மாதிரி இருந்துச்சு, செய்முறை படிச்சதும் என்ன மாதிரி சோம்பேரிகள்லாம் செய்ய முடியாது போல. நல்ல நல்ல க்ராப்டா செய்து காண்பிக்கிறீங்க. ஏஞ்சல் எப்படி இருக்காங்க? நான் விசாரித்ததாக சொல்லவும்.

ஆமினா,
//அவன் இல்லாதவங்க 25 நாட்கள் காயவைத்து தான் உபயோகிக்கணும்.// நீங்கள் பயன்படுத்துவது என்ன ப்ராண்ட் என்று சொல்ல முடியுமா? உதவியாக இருக்கும்.
நான் பயன்படுத்தும் ப்ராண்ட் பெய்ண்ட் அப்படி முடியாது. ;( எத்தனை நாளானாலும், பேக் செய்யாவிட்டால் ஒருமுறை கழுவியதும் உரிந்துவிடும். ஆனால் பேக் செய்தவை... தினமும் மூன்று நான்கு முறை கழுவும் கோப்பைகள் கூட ஒன்பது வருடங்கள் கழித்தும் அதே நிலையில் புதுமை மங்காமல் இருக்கின்றன.

யாழினி, தூர இருந்து பார்த்தால் சிரமம் போல் இருக்கும் எதுவும் பின்பு மெதுவே பழகிவிடும். எனக்கும் இது முதல் முறையில் சரிவரவில்லை. ;)
ஏஞ்சல் நலம். ;) நிச்சயம் சொல்கிறேன். ;)

உங்கள் இருவருக்கும் அட்மினுக்கும் என் நன்றிகள்.

‍- இமா க்றிஸ்

இமா

fevicryl (hoppy ideas) இந்த கம்பெனி தான் இமா நான் யூஸ் பண்ணுவேன். சென்னையில் கைவினை பயிற்சி வகுப்பில் செராமிக் ஒர்க் கற்றுக்கொண்டேன். அங்கே சொல்லப்பட்ட வழிமுறைபடி தான் செய்கிறேன். ஆனால் பத்திரமாக 25 நாள் பாதுகாப்பது தான் சிரமம். தூசு படிந்தால் செய்வதெல்லாம் வேஸ்டாகிவிடும். கவரில் மூடி வைக்கணும். பேக் முறை தான் சுலபம்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தகவலுக்கு நன்றி. ;) சென்னை தோழிகளுக்கு உதவும் இல்லையா?

‍- இமா க்றிஸ்

அத்தனை அழகாக இருக்கு. வெறும் படம் மட்டும் பார்க்கும் போது ரொம்ப சிரமமாக இருக்கும் என்று நினைத்தேன். படிக்கும் போது அவ்வளவு சிரமமாக தெரியவில்லை. இந்த கைவினை குறிப்பிலிருந்து பல குறிப்புகள், தமிழ் எழுத்துக்கள் என்று நிறைய கற்று கொண்டேன்....தொடரட்டும் உங்கள் பணி.

வாழ்த்துக்கள்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இங்கு 'பணி' என்று எதுவும் இல்ல. ;) எனக்கென்று செய்பவற்றை முடிந்தால் படம் எடுத்து அனுப்புகிறேன். ஆரம்பத்தில் அனுப்பியவை மட்டும்தான் 'குறிப்பு அனுப்பவென்று' செய்து அனுப்பியவை. இப்போ இரவில் மட்டும்தான் நேரம் கிடைக்கிறது. அவ்வேளை எடுக்கும் படங்கள் திருப்தியாக வருவது இல்லை. பார்க்கலாம்.

‍- இமா க்றிஸ்

ஹைய் இமா மேடம்,

நீங்கள் செய்து காட்டி உள்ள நம்பர் ப்ளாட் டிசைன் மிகவும் அருமையாக இருந்தது.
மிக்க நன்றி.

kalaimathi

இமா மேடம் ஒரு சின்ன சந்தேகம். டைலில் செராமிக் பெயிண்டை கொண்டுதான் டிசைன் செய்யமுடியுமா. டைலில் வேற என்ன என்ன கிராஃப்ட் பண்ணலாம்.

செராமிக் பெய்ன்ட்தான் டைலில் நன்றாகப் பிடித்துக் கொள்ளும்.

வழுவழுப்பான மேற்பரப்பு உள்ள பொருட்களுக்கு அவற்றின் தன்மைக்கு ஏற்ற பெய்ன்ட் வகைகளைத் தெரிந்து கொள்ளுவதுதான் நல்லது. வேலை சுலபம், அவுட் லைன் சீராக வரும். அழகான ஃபினிஷ் கிடைக்கும்.

எல்லாப் பெய்ன்ட் வகைகளும் எல்லாவற்றுக்கும் பொருந்தாது. ப்ளாஸ்டிக் பொருட்களுக்கு ப்ளாஸ்டிக் பெய்ன்ட், பலகைக்கு வேறு, துணிகளுக்கு டெக்ஸ்டைல் இங்க் / ஃபாப்ரிக் பெய்ன்ட். பிறகு பொருட்களுக்கு ஏற்ப 'பிக்ஸ்' செய்ய வேண்டும். ஃபாப்ரிக் பெய்ன்ட் அனேகம் அயர்ன் செய்யச் சொல்லி இருக்கும். ப்ளாஸ்டிக் என்றால் 'க்யூர்' செய்ய குறித்த அளவு நாட்கள் காய விட்டு சீலர் கொண்டு சீல் செய்ய வேண்டும். கண்ணாடி / செராமிக் பேக் செய்ய வேண்டும். ஃப்ரேம் செய்வதானால் பேக் செய்யாது விடலாம்.

அழகுக்காக மட்டும் என்றால் வசதிப்படி எந்தப் பெய்ன்ட்டும் பயன்படுத்தலாம். ஆனால் பாவிக்கும் பொருட்கள், இதுபோல் வெயில் மழையில் இருக்கும் பொருட்கள் தாங்காது. ப்ராஜெக்டுக்கு 5 மணி நேரம் எடுத்தால் பொருள் 5 வருடமாவது தாங்க வேண்டும் இல்லையா?

விரும்பினால் சுவருக்கு அடிக்கும் பெய்ன்ட் முயற்சித்துப் பாருங்கள். அது காலநிலையைத் தாங்கும். ஆனால் நிச்சயம் சொல்லத் தெரியவில்லை. பெய்ன்ட் 'டெஸ்ட் பாட்ஸ்' கிடைக்கும். செராமிக் பெய்ன்ட்டை விட விலை அதிகமாக இருக்கும். ப்ராக்டிக்கலாக இராது. மீந்து விடும்.

‍- இமா க்றிஸ்

வினோஜா,

வெகு ஆர்வமாக விசாரிக்கிறீர்கள், மகிழ்ச்சி.

வெல்கம் போர்ட். கோஸ்டர்ஸ், ட்ரே, வால் ஹாங்கிங், டேபிளில் வைக்க அலங்காரத் தட்டு இப்படி நிறையப் பண்ணலாம். 3D கிஃப்ட்ஸ் கூட செய்யலாம். முடிந்தால் 2011 ல் குறிப்புக் கொடுக்கிறேன். ;)

பெய்ண்ட் பண்ண வேண்டாம் என்றால், ரெடிமேட் ட்ரான்ஸ்ஃபர்ஸ் கிடைக்கும். பிடித்த டிசைன் வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது, போட்டோ கொடுத்தால் கடைகளில் டைலில் ட்ரான்ஸ்ஃபர் செய்து கொடுப்பார்கள்.

உடைந்து போகும் / வேண்டாம் என்று தூக்கிப் போடும் பீங்கான் கிண்ணங்களைச் சேர்த்து வைத்து மொசைக் பண்ணலாம். இதற்கென்றே வெட்டிய டைல் துண்டுகளும் கிடைக்கும்.

டைல் கட்டர் இருந்தால் நீங்களே உங்கள் வீட்டு டைலிங் செய்கிற போது டிசைன்ஸ் செய்துகொள்ளலாம்.

பஸில்ஸ் செய்யலாம். விளக்கம் நீளமாக இருக்கும். எனவே இப்போது கொடுக்க இயலவில்லை.

க்ராஃப்ட்... உங்கள் கற்பனைத்திறனுக்கு ஏற்ப என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ;) இங்கு 'ஒனெஹுங்கா' என்கிற இடத்தில் தெருவோரம் ஒரு மொசைக் மேசையும் இருக்கையும் இருக்கின்றன. வித்தியாசமாக, 4 கால்களுக்குப் பதில், 2 கால்களும் 2 கைகளும் இருக்கும்.
~~~~~~~~~~~~~~
நன்றி கலைமதி. ;)

‍- இமா க்றிஸ்

இமா மேடம் பெயிண்ட் பற்றி தங்கள் விளக்கத்தற்கு நன்றி. அம்மா தவிர எங்க வீட்டுல உள்ள எல்லோரும் கிராஃப்ட் செய்யறதுல ரொம்ப ஆர்வம் அதிகம். சின்ன வயசுல நானும், என் தம்பிகளும் எங்களுக்கு தெரிந்த க்ராப்ட் செஞ்சு வீட்டுக்கு வரவங்க கிட்ட காண்பிச்சு சந்தோஷப்பட்டுக் கொள்ளவும். இப்போ அறுசுவைல வர க்ராஃப்ட பார்த்தவுடன் நிறைய செஞ்சு வீட்ட அலங்கரிக்கனும் தோணுது. அடுத்த வருஷம் 3D கிஃப்ட்ஸ் எப்படி செய்யனும் சொல்லி கொடுங்க. டைலில் கிராஃப்ட் செய்ய எனக்கொரு ஐடியா கிடைச்சு. அத செஞ்சு பார்த்து சரியா வந்தவுடன் உங்கக்கிட்ட பகிர்ந்துக்கிறேன். நன்றி

செய்யும் போது 'ஸ்டெப் பை ஸ்டெப்' படம் எடுத்து அறுசுவைக்கு அனுப்புங்க. ;) எதிர்பார்க்கிறேன்.

‍- இமா க்றிஸ்

இமா மேடம் கண்டிப்பா எனக்கு தெரிஞ்ச க்ராஃப்ட்டையும் அறுசுவைல பகிர்ந்துக்கனும் ஆசையாதான் இருக்கு. முதல்ல கேமரா வாங்க ட்ரை பண்ணறேன்.

ம். ;)

‍- இமா க்றிஸ்

பார்த்ததுமே தெரிஞ்சுகிட்டேன் இது உங்க வேலை என்று. எப்படி இமா இத்தனை நேரம் ஒதுக்கி செய்யறீங்க???? அதான் உங்களுக்கு அறுசுவைக்கு ;( வர நேரம் இல்லை. ஆனாலும் இவ்வளவு அழகா நேர்த்தியா வேலை செய்த கைக்கு ஆத்துக்காரரிடம் சொல்லி ஒரு வலையல் வாங்கி போட்டுக்கங்க :) சூப்பரா இருக்கு... வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஏற்கனவே இருந்த நம்பர் ப்ளேட் முன்னால் கார் பார்க் பண்ணிடுறாங்க. அதைக் கவனிக்காம குரியர் ஆள் அடிக்கடி தவறா எங்க வீட்டுக் கதவைத் தட்டிடுறார். ஐடியா வீட்டில் வந்தது. ;) வேணும்னா பாதி வளை வாங்கித் தருவாங்க. ;)
இது அறுசுவைக்காக பண்ணல வனி. போட்டோவும் குறிப்பும் மட்டும் அறுசுவைக்காக. ;) ரெண்டு வேலையும் ஒண்ணா பார்க்க முடியல. போட்டோ திருப்தியா வரல. ;( நேர்ல அழகா இருக்கு. இன்னொன்று பண்ணவா போறேன். அப்படியே அனுப்பிட்டேன். அட்மின் பெரிய மனசு பண்ணிப் போட்டிருக்காங்க.

‍- இமா க்றிஸ்

இமா! இன்னைக்கும் கிராப்ஃட் கடையில தான் பாதி நாள் போனது.
ஒரு மொசைக் டிசைன் மாதிரி ஒரு பெண்ணின் உருவம் செய்ய ஆசை ஆனா இந்த ஈப்பாக்ஸி மாதிரி கெமிக்கல்கள் சுவாசிக்கும் போது கெடுதல் உண்டாகுமான்னு பயம்...

மாமா பாதி வளை கொடுத்தாலும் வாங்கிக்கோங்க :)) எங்களால வாயால பாயாசம் காய்ச்ச மட்டும் முடியும் :)
குரியர் மட்டும் வீடு மாறு குடுக்காம பிஸ்ஸா/சைனீஸ் இப்படி டெலிவரி ஆக்களும் கொடுத்த நல்லா இருக்கும் :))

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மூக்குக்கு மாஸ்க் போட்டுக்கங்க. திறந்த வெளில பண்ணுங்க. வாசனை போகும் மட்டும் கராஜ்ல விட்டு வைங்க. 'பீனி' எங்க இன்னும் காணோம்?
அப்பப்ப பீட்சாவும் வரும். ;))

‍- இமா க்றிஸ்

சூப்பர்...செபா அம்மாவிற்கு என் அன்பைத் தெரிவிக்கவும்...
முதலில் டைல் வாங்கணும்... அடுத்தது பெயிண்ட்... அடுத்தது அவன்...
ம்ஹூம்...வீட்டுக்காரர் முறைப்பார்...
அதுக்கு பதிலா, இமா, நான் எங்க வீட்டு நம்பர் சொல்றேன் செஞ்சு அனுப்பிடுங்களேன்...ப்ளீஸ்....

முன்போல் பேசக் கிடைப்பதில்லை. நலம்தானே? அம்மாவிடம் சொல்லிவிடுகிறேன்.
உங்க வீட்டுக்குத் தான் என்று வீட்டுக்காரர்ட்ட சொல்லிடுங்க. ;)

‍- இமா க்றிஸ்

இல்லை இமா... படங்கள் அழகாவே வந்திருக்கு. ரொம்ப நிதானமா சூப்பரா செய்திருக்கீங்க... சந்தேகமே வேண்டாம். படத்திலேயே இத்தனை அழகுன்னா, நேரில் நிச்சயம் இன்னும் அட்டகாசமா தான் இருக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனி. ;)

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta