பட்டிமன்றம் 29 "நம் நாட்டின் இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் யார்?

அறுசுவை என்னும் அன்புச்சங்கிலியில் இணைந்திருக்கும் எம் அருமைத் தோழிகளுக்கு அன்பான வணக்கங்கள்.

எல்லா தோழிகளும் இணைந்து நடுவராக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து விட்டதால் இம்முறை நான் பட்டிமன்ற நாட்டாமையாகி விட்டேன் :).

இம்முறை நான் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு இன்றைய நம் நாட்டு சூழலில் நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய விஷயம். நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக பல காரணங்கள் சொல்லப் பட்டாலும் அதிகாரங்களில் இருக்கும் இரு வர்க்கத்தினர்தான் மிக முக்கியமான காரணம்.

எந்த ஒரு நாடும் முன்னேறுவதும் சீரழிவதும் இந்த இரு வர்க்கத்தினரின் கைகளில்தான். இந்த இரண்டு பேரில் யாரால் நம் நாடு அதிகம் சீரழிகிறது என்பதை நாம் கண்டிப்பாக யோசிக்க வேண்டும்.

சரி சரி யார் அந்த இரண்டு வர்க்கத்தினர்னு கேட்கறீங்களா? அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும்தான் அவர்கள்.

இவ்வார பட்டிமன்ற தலைப்பு இதுதான்

###################
"நம் நாட்டில் இன்று நிலவும் பல சீரழிவுகளுக்கு மிக முக்கிய காரணம் யார்? அரசியல்வாதிகளா? அரசு ஊழியர்களா?
###################

தலைப்பை கொடுத்து உதவிய திரு.M.B.குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் :) ஹி ஹி மகள் தந்தைக்காற்றும் உதவின்னு நினைச்சுடாதீங்க. நான் நடுவராக இல்லாமல் வாதாட வேண்டும் என்று நினைத்த தலைப்பு இது. ஆனால் இன்றைய சூழலில் இதைப்பற்றிய விவாதம் வேண்டும் என்பதால் நானே தேர்ந்தெடுத்து விட்டேன் அவ்வளவுதான்:)

பட்டிமன்றத்தின் பொதுவான விதிமுறைகளோடு இப்பட்டிமன்றத்திற்கு என மேலும் சில விதிகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் தோழிகள் கவனத்தில் கொண்டு வாதாட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பட்டியின் விதிமுறைகள்
*******************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

முக்கியமான விதிமுறை
******************************
தனிப்பட்ட அரசியல்கட்சியைக் குறிப்பிட்டோ தனி நபரைக் குறிப்பிட்டோ அல்லது தனிநபர் வாழ்க்கையை குறிப்பிட்டோ பேசக் கூடாது. பொதுவாக அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் என்றே குறிப்பிட வேண்டும்.

அனைவரும் விதிமுறைகளை கவனத்தில் கொண்டு அனல் பறக்கும் சிந்திக்க வைக்கும் வாதங்களை அள்ளி வீசுங்கள். அள்ளிக் கொள்ள மனக்கூடையுடன் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்
இந்த வார நாட்டாமை
கவிசிவா :)

நடுவர் அவர்களுக்கும் அனைத்து தோழர், தோழிகளுக்கும் வணக்கம்.

நாடு சுதந்திரம் அடைந்து 53 வருடங்களாகிடுச்சு. முன்பெல்லாம் ஐந்தாண்டு திட்டம்னு ஒண்ணு சொல்வாங்க. இப்ப அப்படின்னா என்னன்னே இளைய தலைமுறையினருக்குத் தெரியல. இருபது அம்ச திட்டம்னு கூட ஒண்ணு நடைபெற்றது. அப்படின்னா என்னன்னு 30 வயதுக்குட்பட்டவங்களுக்கு தெரிய வாய்ப்பேயில்ல. இப்ப தெரிந்ததெல்லாம், வர்ற தேர்தல்ல என்னென்ன இலவசம் அறிவிக்கப் போறாங்க, ஒவ்வொரு ஓட்டுக்கும் எந்தக் கட்சி எவ்வளவு பணம் கொடுப்பாங்க, இதெல்லாம்தான்.

சாதாரணமாக வீட்டுக்கே பட்ஜெட் போடுவாங்க. நடந்ததை அனலைஸ் பண்ணுவாங்க, அடுத்த மாத பட்ஜெட் போடுவாங்க. பட்ஜெட்படி வரவு/செலவு சரியாக நடந்திருக்கான்னு கணக்கு பார்ப்பாங்க.

இன்னிக்கு எந்த அரசியல்வாதிக்காவது அப்படி தொலைநோக்கோடு சிந்திக்கணும்கற எண்ணம் இருக்கா? அவங்க அப்படி சிந்திச்சிருந்தாங்கன்னா, அரசாங்க அதிகாரிகள்கிட்ட அதை எடுத்து சொல்லியிருப்பாங்க. அவங்களும் ஆர்வத்தோட திட்டங்கள் தீட்டி, செயல்படுத்தியிருப்பாங்களே!

அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும், அந்தப் பதவிக்கான படிப்பு, தகுதி, ட்ரெயினிங் இதெல்லாம் முடிச்சுதான் வேலைக்கு வர்றாங்க. முக்கியமாக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், இராணுவம் இந்தத் துறைகளில் அவங்களோட கல்வித் தகுதி, அவங்க எடுத்துக் கொள்ளும் ட்ரெயினிங் பற்றி எல்லோருக்குமே தெரியும். இது தவிர, விவசாயத் துறை, சுற்றுலாத் துறை, முக்கியமாக கல்வித்துறை, பொருளாதாரம், இப்படி மிக முக்கியமான துறைகளில், எல்லா லெவலிலும் – படிச்ச, அனுபவம் வாய்ந்தவங்கதான் பொறுப்புகள் வகிக்கிறாங்க. ஆனாலும் நாட்டில் எத்தனை துறைகளில் முன்னேறியிருக்கிறோம் சொல்லுங்க பாக்கலாம்.

காரணம் என்ன தெரியுமா? இவங்க எல்லோரும் எத்தனை திட்டங்கள் தீட்டிக் கொடுத்தாலும், அதை அப்ரூவ் செய்யறது நம்ம அழகு அரசியல் வாதிகள் கைலதானே இருக்கு. அவங்க எந்த திட்டமாக இருந்தாலும், அதில் தனக்கு என்ன கமிஷன் வரும் – தப்பு தப்பு இப்பல்லாம் கமிஷனே கிடையாதே, மொத்தமாக எவ்வளவு பணம் – மக்களின் வரிப்பணத்தை அள்ளலாம் அப்படின்னு மட்டும்தானே பார்க்கறாங்க. அல்லது ஓட்டு வாங்கறதுக்காக, இலவச திட்டங்களை – அது எவ்வளவு சாத்தியப்படும் என்பதையெல்லாம் சிந்திக்காமல் அறிவிக்கிறது, இப்படித்தானே அவங்க எண்ணங்கள் இருக்கு.

சமீபத்தில் உலகம் முழுவதையும் பாதித்த ரிஸெஷன் – இந்தியாவை மட்டும் அவ்வளவாகப் பாதிக்கலை. அதுக்குக் காரணம் – நம்ம அரசாங்கங்களோ(மாநில அரசுகள் , மத்திய அரசுகள்) அவற்றின் கொள்கைகளோ காரணம் இல்ல. இந்திய மக்கள் – குறிப்பாக குடும்பத் தலைவிகளின் இயல்பான சேமிப்பு பழக்கம், விலைவாசி கூடும்போது அவங்க எடுக்கும் சிக்கன நடவடிக்கை, இதெல்லாம்தான் காரணம்னு ஒரு எகானமிஸ்ட் சொல்லியிருக்கார். எந்த ஒரு அரசியல்வாதியாவது – ரிசெஷன் பத்தி பேசினாரா, நம்ம நாட்டை அது பாதிக்கும் அல்லது பாதிக்காது, அதுக்கு நாங்களும் அரசாங்கமும் எடுத்த முயற்சிகள், நடவடிக்கைகள்னு ஏதாவது சொன்னாரா? ஊஹும்.

விலைவாசி உயர்ந்திருக்றதைப் பற்றி எதிர்க்கட்சிகள் பண்ணும் ஆர்ப்பாட்டத்துக்கு அளவே இல்ல. ஆனால் , அவங்களுக்கு இதுக்கான காரணம் தெரியாதுன்னு நினைக்கிறீங்களா? ஒரு பொருள் விலை அதிகமாகுதுன்னா என்ன காரணமாக இருக்க முடியும். ஒண்ணு – அது விளைச்சல் கம்மியாகி இருக்கணும், அல்லது அதன் பயன்பாடு மிகவும் உயர்ந்ததாக இருக்கணும்.(விமான சேவை மாதிரி) ஆனா, இன்னிக்கு நாட்டில் செல்ஃபோன் விலை குறையுது, அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி இவற்றின் விலை எவ்வளவு ஏறியிருக்கு. ஆன்லைன் வர்த்தகம்ங்கற பேரில் அன்றாட வாழ்க்கையையே சர்க்கஸ் மாதிரி ஆகிடுச்சே, இதெல்லாம் எந்த அரசியல்வாதி கண்ணிலும் படலையா, தெரியலையா, அவங்க இது கூடப் புரியாமலா இருக்காங்க. ஆனா, சரி செய்ய மாட்டாங்க, ஏன்னா, இந்த வர்த்தகத்தில் ஈடுபடறதே அவங்கதானே!

தேர்தலின்போது ஒரு துண்டுப் பிரசுரம் படிக்கக் கிடைத்தது. நம்ம நாட்டை ஆளுவது முழுக்க முழுக்க அரசாங்க அதிகாரிகள்தான், தேர்தல் நடந்தாலும், எந்த அரசாங்கம் பதவியில் இருந்தாலும், அரசு யந்திரம் ஓடிட்டேதான் இருக்கும். அப்புறம் எதுக்கு தேர்தல் எல்லாம், தேவையில்லை, ஓட்டுப் போடாதீங்க என்கிற மாதிரியான பிரசார வாசகங்கள் இருந்தது. ஆனால் அந்த அரசு அதிகாரிகளை வழி நடத்துகிற, கண்காணிக்கிறவர்களாகத்தான் அரசியல்வாதிகள் இருக்கணும், அவங்களும் பதவி நிரந்தரமானதாக இருந்தால் அரசு அதிகாரிகளைக் கண்டிக்க முடியாம போயிடும்னுதானே ஐந்து வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடக்குது!

ஒரு சாதாரண அரசு குமாஸ்தாவாக சேரணும்னா , அல்லது வி.ஏ.ஓ. ஆகணும்னா கூட, அதுக்கு குறைந்தபட்ச படிப்பு, வயது, இதெல்லாம் பார்த்து, பரீட்சை வைத்து, அரசாங்கத்தில் சேர்க்கறாங்க. ஆனா, அரசியல்வாதிக்கு நாம இந்த மாதிரி படிப்பு, ரிடையர்மெண்ட் அப்படின்னு ரெஸ்ட்ரிக்‌ஷன் எதுவும் வைக்கலை. ஏன்??

அரசியல்வாதி என்பவர், மக்களுக்கு நன்மை செய்பவராக, தேசபக்தி உள்ளவராக, நேர்மையானவராக, பொது நலத்தை மட்டுமே நினைக்கக் கூடியவராக இருக்கணும், அதுதான் அவங்களுக்கு உண்டான தகுதி. இந்தத் தகுதிகள் இருந்தால்தானே, அவரால் மற்றவர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்க முடியும். அவர்கிட்ட லீடர்ஷிப் குவாலிடி இருந்தால்தானே, அவரால் அரசு அதிகாரிகளை தட்டிக் கொடுத்து, ஊக்கப்படுத்தி, தவறுகளை சுட்டிக் காட்டி, தொலை நோக்கு திட்டங்களை செயல்படுத்தி, நாட்டை முன்னேற்ற முடியும்?

இப்ப இருக்கும் அரசியல்வாதிகளுக்கு கரிஸ்மாட்டிக் பவர் என்னும் மக்களை கவர்ந்திழுக்கும் சக்தி கூட இல்லையே, அப்படி மக்களை தன் பின்னால் திரண்டெழக் கூடிய சக்தி அவங்களுக்கு இருந்தால் அல்லவா, மக்களுக்கும் வேகம் வரும், தங்கள் பலம் அறிந்து, உற்சாகமாக பாடுபடுவாங்க.

இவங்க தவறான வழிகளில் போவதால்தானே, அரசு அதிகாரிகளும் “நரி இடம் போனால் என்ன, வலம் போனால் என்ன, நம் மேல விழுந்து பிடுங்காம இருந்தா சரி” என்ற மனப்பான்மையில் இருக்காங்க.

சரி, மக்கள் அவங்களாக முன்னேறி, அதாவது மக்களில் ஒருவர் தன்னை சார்ந்தவங்களை முன்னேற்றலாம் என்று உழைக்கிறாங்க. அதையும் மோப்பம் பிடிச்சு, இது நான் கொண்டு வந்த திட்டம், என்று சண்டை போட்டுக்கறாங்க. நல்லபடியாக குழுவாக பாடுபட்டுகிட்டு இருக்கற இடங்களிலும் அரசியலை நுழைச்சு, அவங்ககிட்ட உங்களுக்கு லோன் தர்றேன், அதை செய்யறேன், இதை செய்யறேன்னு ஆசை காட்டி, தங்களுடைய ஓட்டு வங்கியை பலப்படுத்திக்க முயற்சி செய்யறாங்க. விளைவு? அவங்களும் இந்தக் குழுவில் சேர்ந்தால் தனிப்பட்ட பலன் என்னன்னு யோசிச்சு, அவங்களும் அரசியல்வாதி ஆகிடறாங்க. யாரை சொல்றேன்னு புரியலையா? மகளிர் உதவிக் குழுக்களைத்தான் சொல்றேன். அருமையான ஒரு இயக்கமாக பரவிக்கிட்டு இருந்த இந்த குழுக்கள், இன்னிக்கு அரசியல்வாதிகளின் கருணை கடாட்சம்(!!) பட்டதினால, அவங்களோட சுய சிந்தனை, முன்னேறணும்ங்கற துடிப்பு, உழைப்பு இதெல்லாம் மழுங்கிப் போய், எவ்வளவு லோன் கிடைக்கும், அதில் எவ்வளவு திருப்பிக் கட்ட வேணாம்னு பேசிக்க ஆரம்பிச்சுட்டாங்களே, இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல?

சின்ன குழந்தைகள் கூட, தங்களுடைய விளையாட்டில் சண்டை போட்டால், பின்னால சமாதானம் ஆகும்போது, ஏன் சண்டை போட்டோம்னு பேசுவாங்க, சரி, இப்ப சேத்தி ஆகிக்கலாம், நீ உன் விரல்களை மடக்கி பழம் சொல்லு, நானும் பழம் சொல்றேன்னு ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் வச்சிருப்பாங்க. ஆனா, அரசியல்வாதிகள் கூட்டணி அப்படின்னு ஒண்ணு ஏற்படுத்திக்கறாங்களே, மனிதனுக்கு இருக்க வேண்டிய அடிப்படை உணர்ச்சிகளான, மானம், மரியாதை இதெல்லாம் ஏதாவது இருக்கா, இந்தக் கூட்டணி அமைக்கறப்போ. அதெல்லாம் எல்லாத்தையும் கடல்ல தூக்கிப் போட்டுட்டுதானே அமைக்கிறாங்க! ஆனா, அரசியல்வாதிகளுக்கு ஒண்ணு மட்டும் உறுதியாகத் தெரியும், மக்களுக்கு மறதிங்கறது இருக்கு, அதனால கவலையில்லன்னு.

ஒரு அரசியல்வாதி சரியாக செயல்படலைன்னா, அடுத்த தேர்தலில் அவங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேணாம், சரியான ஆளைத் தேர்ந்தெடுத்து அனுப்புவது நம்ம கைலதானே இருக்குங்கற நினைப்பையும் செயல்படுத்த முடியலையே. வேட்பாளர்களை ஜாதி அடிப்படையில் தேர்ந்தெடுப்பது, அந்த அந்த ஜாதித் தலைவர்களை வளைச்சுப் போடுறதுன்னு முட்டுக்கட்டை போடறாங்களே. இன்னிக்கு ஜாதி சங்கங்கள் எல்லாம் லெட்டர்பேட் கட்சிகளாக மாறி, தங்களுக்கு ஆதாயம் தேட முற்படுத்தும் போக்கு, அரசியல்வாதிகளால்தானே வளர்ந்திருக்கு. இதை விடக் கொடுமை, ஜாதிப் பற்று, ஜாதி வெறியாக மாறி, மனித நேயம்ங்கற பண்பே குறைஞ்சுகிட்டே வருதே, இதுக்கு அரசியல்வாதிகள்தானே காரணம்.

அரசு அதிகாரிகள் வேலைக்கு வர்றதுக்கு பணி நேரம், அட்டெண்டன்ஸ், பணி நாட்கள், இதெல்லாம் இருக்கு. அவங்க வரலைன்னா ஆக்‌ஷன் எடுப்பாங்க. ஆனா, அரசியல்வாதிகள் இத்தனை நேரம் சட்டசபையில் பேசணும், இத்தனை கேள்விகள் கேக்கணும், இத்தனை திட்டங்கள் அறிவிக்கணும்னு எதுவும் கட்டுப்பாடுகள் வைக்கலை. அவங்க நமக்கு நன்மைகள் செய்வாங்கன்னு கண்மூடித்தனமாக நாம நம்பறோம் பாருங்க அதுதான் காரணம். அதனால்தான், அவங்க குறைந்தபட்ச வருகைப் பதிவுக்காக, ரிஜிஸ்தரில் கையெழுத்து மட்டும் போட்டுட்டு, எஸ்கேப் ஆகறாங்க. பாராளுமன்றத்திலும், சட்ட சபையிலும் காலியாகக் கிடக்கும் நாற்காலிகளைப் பார்த்தால், வயிறு எரியுது. இப்ப சுத்தம், பாராளுமன்றம் நடக்கறதே இல்லை.

இன்னிக்கு உள்ள எந்த அரசியல்வாதியின் சுயசரிதையாவது உங்களால் இளைய தலைமுறையினருக்கு படிக்க சொல்லி சிபாரிசு செய்ய முடியுமா? அவங்ககிட்ட என்ன சிறப்பம்சம் இருக்குன்னு சொல்வீங்க?

மனித சமுதாயம் முன்னேறிகிட்டே இருக்கணும்னா, சிந்தனையாளர்கள், தலைவர்கள் உருவாகிகிட்டே இருக்கணும். மிகப் பெரிய நாட்டை, மிக உயர்ந்த சிந்தனையுள்ள தலைவன் வழி நடத்தணும். அப்படி இப்ப யாருங்க இருக்கா? நாட்டை வழி நடத்தி செல்லும் தலைமை, வீடடை நன்றாக நடத்தும் தலைமைக்கு ரோல் மாடல் ஆக இருக்கணும்.

மகாத்மா காந்தி, நெல்சன் மாண்டேலா, ஆப்ரஹாம் லிங்கன், சர்ச்சில் இப்படி எத்தனை பேரைப் பற்றி படிச்சிருக்கோம், ஆனால் இப்ப, இன்றைய நிலைமையில், யாரை, எந்த அரசியல்வாதியை நம்ம சந்ததியினருக்கு ரோல் மாடல் ஆகக் காட்டுவது?

அரசு அதிகாரிகளை, அவங்க திறமைகளை, ஆற்றலை, சரியானபடி மேம்படுத்தி, பயன்படுத்தி, நாட்டை முன்னேற்றும் அதிகாரத்தை நம்மில் ஒருவரான, நம்முடைய பிரதிநிதியான அரசியல்வாதிக்குக் கொடுத்திருக்கோம். அந்த அரசியல்வாதிகள் சரியாக நடந்து கொள்ளாததுதான் இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம்.

அரசியல்வாதியால் அரசு அதிகாரிகளை, வழி நடத்த, கண்டிக்க, தண்டிக்க(மக்களின் நன்மைக்காக, நாட்டின் முன்னேற்றத்துக்காக)முடியும். ஆனால், அரசியல்வாதிகளைக் கண்டிக்க, தண்டிக்க அரசு அதிகாரிகளால் முடியாது.

சரி, நீங்க எப்படியும் போங்க, நானாவது என் வேலையை ஒழுங்காகப் பார்க்கிறேன், என்று எந்த அரசு அதிகாரியால் சொல்ல முடியும்? உடனே ட்ரான்ஸ்ஃபர், வேலை பார்க்கும் இடத்தில் பிரச்னை என்று ஒரு வழி செய்து விடுவாங்களே அரசியல்வாதிகள்!

நடுவரே, இதுக்கு மேல புலம்ப முடியல:(:(

அன்புடன்

சீதாலஷ்மி

நடுவர் அவர்களே நல்ல நேரத்தில் எடுத்து சொன்னிங்க, நடுவர் அவர்களே உங்களுக்கு தெரிம்மோ? தெரியாதோ? நான் கண்கூடா பார்த்தேன், இந்த ஆ.ட்.ஓ ஆபிஸில் நடக்கும் அட்டுவொழியத்துக்கு அளவேயில்லை.

நடுவர் அவர்களே என் வண்டி டுயுவில் எடுத்தது, அதன் டுவிவ் முடிந்து எங்க பேரில் வண்டி ரிஜிட்ர் பண்ண ஆபிஸ் போயிருந்தேன் அங்கு க்யுவில் ரொம்ப நேரம் நின்னேன். ஏன்னென்றால் அங்கு உள்ள புரோக்கர்ஸ் அவங்க வேலையை செயவைத்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கையில் கிட்டதட்ட் 100 அப்பிளிகேக்ஷனாவது இருக்கும் அதற்க்கு பதிவு பண்ணதற்க்புறம் தான் கியுவில் உள்ள வங்களை கவனிக்க்றாங்க. அதிலும் கொடுமை என்ன தெரியுமா அவர் கியுவைப் பார்க்கும் போது ஆபிஸ் டைம் அதாவது (கலை 11- 1) முடிந்துவிட்டது.
அங்கு வேலைப்பார்க்கும் ஆபிஸைரைப் போல் புரோக்கர்கள் அங்கு சர்வசாதாரணமாக உள்ளே சென்று( எல்லா ரூமுக்கும்) வருகிறார்கள்.
நடுவர் அவர்களே இதிலிருந்து தெரிகிறாதா இந்த நாடு யாரால் சீரழிகிறது என்று அரசு ஊழியர்களால் தான்.

வாழு இல்லை வாழவிடு

நடுவர் நாற்காலியை அலங்கரித்திருக்கும் அன்பு நடுவருக்கு வணக்கம்.அறுசுவைத் தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.எதிரணியினருக்கும்,எனதணியினருக்கும் வணக்கம்,வணக்கம்.

நடுவரே,அரசியல்வாதிகள் தவறான பாதையில் செல்வதால் அரசு ஊழியர்களும் பாதை தவறுவதாக சொல்லப்படுகிறது.இது நம்பக்கூடியதா,நடுவரே?அவர்களை பின்பற்றி இவர்கள் செல்வதாக இருந்தால்,இந்த (அரசியல்)குப்பையிலும் சில வைரங்கள் இருந்தனரல்லவா,அவர்களை இந்த அரசு ஊழியர்கள் பின்பற்றி நடந்தனரா?அரசு அலுவலகங்கள் சிறப்பாக நடைபெற்றதா?வாங்கும் சம்பளத்திற்கு உண்மையாக உழைத்தனரா?அன்பளி்ப்பு வாங்காத உத்தமர்களாக இருந்தனரா?மக்களை மதிக்கும் பண்போடு
இருந்தனரா?அத்தனை பேரும் நல்லவர்களாக இருந்தனரா?அப்போது(முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால்),இங்கு நடந்ததை தெளிவாய் சொல்லும் இருகவிதைகள் உங்களுக்காக.

கடமையைச் செய்:

பத்து மணிக்குச்
சரியாய் நுழைந்தேன்
கூட இருப்போரிடத்தில்
கொஞ்சம்
குசல விசாரணை....
தலை வலித்தது
தேநீர் குடிக்க
நாயர்கடைக்கு நடந்தேன்...
ஊரில் இருந்து
யாரோ வந்தார்
ஒருமணி நேரம்
உரையாடல்.
இடையில்
உணவை மறக்கலாமா?
உண்டு தீர்த்த
களைப்புத் தீர
ஒரு
கன்னித் தூக்கம்.
முகத்தை அலம்பிச்
சிற்றுண்டி நிலையம்
சென்று திரும்பினேன்.
வேகமாய்
விகடனும் குமுதமும்
படித்து முடித்தேன்.
மெல்லக்
காகிதக் கட்டை எடுத்துத்
தூசியைத் தட்டித் துடைத்துக்
கடமையைச் செய்யத்
தொடங்கும் போது....
கதவை அடைத்தான்
காவற் காரன்
மணி ஐந்தாயிற்றாம்!

உறுமீன் வருமளவும்......."

வீர வலசை
விவசாயி போல்
மாறு வேடத்தில்
மந்திரி வந்தார்......
ஆட்சித் தலைவர்
அலுவலகத்தில்
உட்கார்ந் திருந்தவோர்
ஊழிய ரிடம்போய்
விவரம் ஏதோ
வேண்டும் என்றார்;
இரண்டு தாளை
எடுத்து நீட்டினார்.
மாட்டேன் என்றே
மறுத்தார் ஊழியர்.
மந்திரி மகிழ்ந்தார்;
தம்துறை ஊழியர்
நேர்மையை நினைத்து
நெஞ்சங் குளிர்ந்து
சென்றார் வெளியே......
சென்றதும் ஊழியர்
திருவாய் மலர்ந்தார்.....
‘பத்து ரூபாய்க்கா
பார்த்துச் சொல்வேன்
அவ்வளவு எளிதாய்?
அலைய விட்டுநான்
அப்புறம் கறப்பேன்
அறுபது எழுபது.......’

நடுவரே,கவிதையின் பொருள் தங்களுக்கே புரிந்திருக்கும்,அதை எழுதியவரைப் பற்றியும் தெரிந்திருக்கும்.கடமையைச் செய்யாத ஊழியர்களையும்,கையூட்டு பெறும் ஊழியர்களையும்,தன் கவிதைகளால் சாடுகிறார்,கவிஞர்.இன்று,இந்த நிலைமை இல்லை.ஆனால்,இவர்கள் இன்று வேலை செய்வதற்கு காரணம் இங்கு அதிகரிக்கும் போட்டிகள்.

நடுவரே,தலைவன் நல்லவனாக இருந்தாலும் சரி,கெட்டவனாக இருந்தாலும் சரி,இவர்கள் வழி தனிவழி.அதில்தான் செல்வார்கள்.வாங்கும் சம்பளத்திற்கு ஒழுங்காக வேலை செய்வது கிடையாது,பொது மக்களை மதித்து பேசவே தெரியாது இவர்களுக்கு,இவர்களின் ஆடம்பரத் தேவைகளுக்கு பணம் வாங்குகிறார்கள்.நூறு,இருநூறு வாங்கியவர்கள் இன்று ஆயிரக்கணக்கில் வாங்குகிறார்கள்.அவ்வளவுதான் வித்தியாசம்.இவர்கள் யாரையும் பின்பற்றுவதில்லை,இது வெகுகாலமாய் நடக்கும் கதை.

அன்புடன்
நித்திலா

நடுவரே,நாம் முதலில் பார்க்கப்போகும் துறை

நடுவரே,இந்த துறையை பற்றி உங்களுக்கே தெரிந்திருக்கும்.இவர்கள் அனுமதித்தால்தான் இங்கு திரைப்படங்கள்,டிவி நிகழ்ச்சிகள்,டிவி விளம்பரங்கள் அனைத்தும் நம் பார்வைக்கு வரும்.இவர்களால் என்ன சீரழிவு என்று உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

நடுவரே,ஒரு நாட்டில் இளம்தூண்கள் சரியாக இருந்தாலே பாதிநாடு சீர்பட்டுவிடும்.ஆனால்,இன்று நிறைய இளைஞர்கள் தவறான வழியில் செல்கிறார்கள்.அதற்கு முக்கியமான காரணம் இன்றைய திரைப்படங்கள்.நடுவரே,இன்று பெரும்பாலான திரைப்படங்கள் வன்முறையும்,ஆபாசமும் நிறைந்ததாகவே உள்ளது. ரௌடியாக காட்டப்படும் கதாநாயகன்,அந்த கதாநாயகனையும் காதலிக்க! ஒரு கதாநாயகி.(பாவம்,கோடிகளை கொட்டி படம் எடுத்தாலும்,கதாநாயகிக்கு காஸ்ட்டூயூம் வாங்குவதற்கு மட்டும் இவர்களிடம் பணம் இருக்காது.)காதல் கதை சொல்வதாக சொல்லிச் சொல்லியே காதலின் பேரை கெடுத்து விட்டார்கள்.விதவிதமான காதல்கள்.தவறான காதல்கள்.கதை என்ற ஒன்றை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.இப்போதெல்லாம்,கதாநாயகிகளை பள்ளி மாணவியாக சித்தரிக்கிறார்கள்.சிறுபிள்ளைகள் காதல்கத்தரிக்காய் என்று தவறான பாதையில் செல்வதற்கு முழுமுதற் காரணம்,இவர்கள்தான்.

சின்னத்திரை,வன்முறையிலும்,ஆபாசத்திலும் பெரிய திரையை மிஞ்சி நிற்கிறது.எல்லா தொடரிலுமே தவறான உறவுமுறைகள்தான் கதைகளமாகவே இருக்கிறது.அதிலும் ஒரு கொடுமை என்னவென்றால்,பெண்களை மிக மோசமான வில்லிகளாக காட்டுகிறார்கள்,நம் பெண்களும் அதை ரசித்துக் கொண்டு தன் கணவனையும்,பிள்ளையையும் கூட கவனிக்காமல் இருக்கிறார்கள்.

ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் இங்கு நடக்கும் கூத்திருக்கிறதே,அப்பப்பா!!!நடுவரே,குழந்தைகளுக்கு கூட ஜோடி நடன நிகழ்ச்சி.அதில் வேறு,டூயட் ரவுண்டு,எக்ஸ்பிரசன் ரவுண்டு என்று விதவிதமான ரவுண்டுகள்.எந்த குழந்தை முகத்தில் அதிகமான உணர்வுகளை காட்டுகிறதோ,அதற்கு பெஸ்ட் ஜோடி என்று பட்டம் கொடுப்பார்கள். அந்த குழந்தைகள் கதாநாயகி போல ஆடை அணிந்து கொண்டு இன்றைய மோசமான வார்த்தைகள் கொண்ட பாடலை பாடி முகபாவனைகளோடு ஆடுகிறார்கள்,கடவுளே!!!!நடுவரே,நல்ல நிகழ்ச்சிகளை விரல்விட்டு எண்ணி விடலாம்.

விளம்பரங்கள் இருக்கிறதே அவற்றை கண்கொண்டு பார்க்க முடியாது.சோப்பிலிருந்து சேவிங்கிரீம் வரை ஆபாசம் பொங்கி வழிகிறது.

நடுவரே,இவ்வளவு வன்முறையும்,ஆபாசமும் எப்படி வந்தது?சிறுபிள்ளைகள் மனதில் பழி உணர்ச்சி தோன்றியது எப்படி?கவர்ச்சியாக உடை அணியும் பழக்கம் வந்தது எப்படி?இளைஞர்கள் படம் பார்த்து அதே வழியில் சென்று,தன் வாழ்க்கையை கெடுத்து கொண்டது யாரால்?காதல் என்ற பெயரில் இங்கு நடக்கும் விஷயங்களுக்கு யார் பொறுப்பு?

நடுவரே,இந்த விஷவிதைகள் நம்மண்ணில் இல்லாமல் செய்திருக்கலாமே,அவை இன்று வேர்விட்டு வளர்ந்து விருட்சமாகி நிற்பது யாரால் நடுவரே.

நடுவரே,ஒரு திரைப்படம் வெளிவருவதும்,வராமல் போவதும் யார் கையில் இருக்கிறது?அனைத்து மீடியாக்களையும் தன் பிடியில் வைத்திருக்கும் அதிகாரம் படைத்தவர் யார்,அவர்கள் கடமையை சரியாக செய்தார்களா,இளம்தலைமுறையினர் சீரழிந்து போவதற்கு யார் காரணம் என்பதை உரக்கச் சொல்லுங்கள்,நடுவரே.

அன்புடன்
நித்திலா

சீதாம்மா அரசியல்வாதிகளால் ஏற்படும் சீரழிவுகளை கொட்டித் தீர்த்துட்டாங்க.

ஆமா ஐந்தாண்டு திட்டம்னு ஸ்கூல்ல படிச்சிருக்கோமே. இப்போ அதெல்லாம் இல்லையா? அப்போ இவனுங்க என்னதான் பண்றானுங்க? ஹி ஹி கூட்டணிங்கற ஐந்தாண்டு திட்டத்தை கட்டிக் காப்பாத்துவாங்களா இல்லை நாட்டுக்காக ஐந்தாண்டு திட்டங்கள் போடுவாங்களா? போங்க நீங்க அரசியல்வாதிக்கிட்ட ரொம்பத்தான் எதிர்பார்க்கறீங்க :)

//அவங்க குறைந்தபட்ச வருகைப் பதிவுக்காக, ரிஜிஸ்தரில் கையெழுத்து மட்டும் போட்டுட்டு, எஸ்கேப் ஆகறாங்க. பாராளுமன்றத்திலும், சட்ட சபையிலும் காலியாகக் கிடக்கும் நாற்காலிகளைப் பார்த்தால், வயிறு எரியுது. இப்ப சுத்தம், பாராளுமன்றம் நடக்கறதே இல்லை.//

என்ன இப்படி கேட்கறீங்க அவங்க எல்லாம் முதலமைச்சரா மட்டும்தான் சட்ட சபைக்குள் நுழைவாங்க. தன்மானச் சிங்கங்கள் :(. அவங்க தன்மானம் பெருசா மக்கள் நலன் பெருசா?

//ஆனால் இப்ப, இன்றைய நிலைமையில், யாரை, எந்த அரசியல்வாதியை நம்ம சந்ததியினருக்கு ரோல் மாடல் ஆகக் காட்டுவது//

எதிரணிக்கிட்ட பதில் இருந்தா வந்து சொல்லுங்கப்பா. எனக்குத் தெரியலை :(

இப்போ நடுவர் திரும்பவும் குழம்பிட்டார் :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆர் டி ஓ ஆஃபீசில் இப்படீல்லாம் நடந்தா அதுக்கு அரசியல்வாதி என்னப்பா பண்ணுவான். சும்மா அரசியல்வாதியவே குறை சொல்லாதீங்கன்னு சொல்றாங்க சுமி. இதுக்கு என்ன சொல்லப் போறாங்களோ எதிரணி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//நடுவரே,அரசியல்வாதிகள் தவறான பாதையில் செல்வதால் அரசு ஊழியர்களும் பாதை தவறுவதாக சொல்லப்படுகிறது.இது நம்பக்கூடியதா,நடுவரே//

அப்போ நம்பக்கூடாதா! அப்போ அவங்க சொல்றது உண்மை இல்லையா? நல்ல வேளை சொன்னீங்க :)

//(அரசியல்)குப்பையிலும் சில வைரங்கள் இருந்தனரல்லவா,அவர்களை இந்த அரசு ஊழியர்கள் பின்பற்றி நடந்தனரா?அரசு அலுவலகங்கள் சிறப்பாக நடைபெற்றதா?வாங்கும் சம்பளத்திற்கு உண்மையாக உழைத்தனரா?அன்பளி்ப்பு வாங்காத உத்தமர்களாக இருந்தனரா?மக்களை மதிக்கும் பண்போடு
இருந்தனரா?அத்தனை பேரும் நல்லவர்களாக இருந்தனரா?//

ஹை கேட்கறாங்கல்ல கேட்கறாங்கல்லா. பதில் சொல்லுங்க எதிரணியினரே! நல்ல அரசியல்வாதிகள் இருந்த காலத்திலும் கேடுகெட்ட அரசு அதிகாரிகள் இருந்தாங்க இல்ல அதுக்கு என்ன சொல்றீங்க என்ன சொல்றீங்க

நித்திலா கவிதை நல்லா புரிஞ்சிடுச்சு. அரசுஅதிகாரியின் லட்சனம் புரிஞ்சுடுச்சு.

அரசியல்வாதியின் லட்சணத்தைச் சொல்லும் கவிதையோடு வாங்கப்பா சொன்னா கேட்டுக்கறேன். தெளிவாகிக்கறேன் :)

மொத்தத்தில் அரசியல்வாதி எப்படி இருந்தாலும் அதிகாரிகள் வழி தனி வழின்னு அடிச்சு சொல்லிட்டாங்க நித்திலா! ராமன் ஆண்டாலும் ராவனன் ஆண்டாலும் அரசு அதிகாரிகல் காட்டில் எப்போதும் மழைதானாம் :)

திரைப்பட தணிக்கைத் துறை பற்றி பல கேள்விகளை சரவெடி கணக்கா வெடிச்சுட்டாங்க. இன்னிக்கு யு சர்டிஃபிகேட்டோடு வரும் திரைப்படத்தை குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்க முடியுமா? இப்படி தரமற்ற சான்றிதழ் கொடுப்பது அரசியல்வாதியா என்ன அதிகாரிதானே?! இதுக்கு என்ன பதில் சொல்றீங்க எதிரணியினரே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அரசியல்வாதிகள் எல்லாரும் கெட்டவங்களாகவே இருக்கட்டும்.. அப்படி அரசியல் வாதி கெட்டவனா இருந்தா அவனை தண்டிக்கிற உரிமை யார் கிட்ட இருக்கு?
காவல் துறை கிட்ட தானே! காவல் துறை ஏன் கையைக் கட்டிகிட்டு நிக்கனும்... அரசியல்வாதியை பகைத்துக் கொண்டால் தண்ணியில்லா காட்டுக்கு
மாத்தறாங்கனு எதிரணி சொல்றாங்களே.. இன்னைக்கு தமிழ்நாட்டுல எந்த ஊர் நல்ல தண்ணி வசதியோட செழிப்பா இருக்கு? எல்லா பக்கமும் தண்ணிய
காசு கொடுத்து தான் வாங்கி குடிக்கிற நிலமை.. இதில எந்த ஊரா இருந்தா என்ன? அன்னைக்கு தன் தேவைக்காக அரசியல்வாதிக்கு அடிபணிய ஆரம்பிச்சாங்களே! அப்போதைக்கு எல்லாம் சுகமாத்தான் போனது.. ஆனா இப்போ காவல் துறை மேல மக்களுக்கு ஏதாவது மதிப்பு இருக்கா என்ன? கேவலமான வார்த்தையால் கிண்டல் செய்யும் நிலைக்கு வந்துவிட வில்லையா காவல் துறை..
அதை பற்றி கவலை யாருக்கும் இல்லையா?

எனக்குள் இருக்கும் ஒரே ஒரு கேள்வி இது தான் “எல்லா அதிகாரிகளும் நியாயமாவும் நேர்மையாவும் இருந்தா அரசியல்வாதி என்ன செய்து விட முடியும் எத்தனை பேரை பணிய வைக்க முடியும்? சொல்லுங்க.. அலைக்கழிக்கிறாங்க அப்படிங்கிறதுக்காக அரசியல்வாதிக்கு அடி பணிந்து போவது தான் சரியா?
அரசியல்வாதி 5 வருஷம் இருப்பான் அப்புறம் போய்டுவான்.. தற்காலிகமாக வரும் அவனுக்கு வேலை பார்க்கிறதை விட்டுட்டு அவனவன் வேலையை சரியா பார்த்தாலே நிலைமை சரி ஆகும்..

திட்டங்களை எல்லாம் அரசு அதிகாரிகள் தீட்டிக் கொடுக்கிறாங்களாம் அதை அப்ரூவ் பண்றது இல்லையாம் அரசியல்வாதி.. அரசியல்வாதி பதவிக்குப் போகனும்னாலே மக்களுக்கு அந்த திட்டம் கொண்டு வரேன் இந்த திட்டம் கொண்டு வரேன்னு வாக்குறுதி கொடுக்கனும்.. அதைப் பார்த்து தேர்ந்தெடுக்காம, அரசியல்வாதி கொடுக்கிற பணத்தைப் பார்த்து தேர்ந்தெடுக்கிறதும் துணை போறதும் யார் தப்பு..? பதவி வெறி பிடித்தவன் என்னவேனா செய்யனும்னு தான்
நினைப்பான்.. அவனைத் தூக்கி விடறதும் தண்டிக்கிறதும் யார் பொறுப்பு....

எதிரணி சொல்வது போல் எந்த அரசியல்வாதி வந்தாலும் வேலை செய்வது என்னவோ அரசு இயந்திரம் தான். அந்த வேலையை சரியா செய்யுறாங்களா அப்படிங்கிறது தான் இன்னைக்கு கேள்வி?

அரசியல்வாதி சரி இல்லைனு நினைத்தால் நம்மோட எதிர்ப்பைக் காட்டத்தான் ”47 ஓ” அதை பயன்படுத்தாது யார் தவறு..ஏமாறவன் இருக்கிற வரை ஏமாத்தறவன் இருந்துகிட்டு தான் இருப்பான்.

தேர்தல்ல தோற்றால் கூட ஜெயித்ததாக அறிவிக்கிற கொடுமைலாம் நடந்துதே!! கள்ள ஓட்டுப் போடறது எல்லாம் அரசு ஊழியர்கள் துணை இல்லாமையா
நடக்குது..? இங்க தப்புக்கு துணை போவது யாரு?

திட்டங்கள் எதுவும் இப்போது தீட்டுவது இல்லையா.. ஏன் இல்லை? ஐந்தாண்டு திட்டங்களைத் தீட்டின அதே மத்திய அரசு இப்போதும் அடித்தட்டு மக்கள் நலனுக்கென திட்டங்கள் தீட்டி நிதி ஒருக்கீடு செய்துகிட்டு தான் இருக்கு.மாநில அரசியல்வாதி அதில ஒருபங்கு அடிச்சா அவனுக்கு கீழே இருக்கிற அதிகாரிதான் அதற்கு துணை போறான்..

பணப் பட்டுவாடா செய்யும் அதிகாரி கொடுக்கிறது தான் காசு..படிப்பறிவில்லாதா அந்த பொது ஜனம் கையைக் கட்டி வாங்கிட்டு போறாங்க.(இந்த விஷயம் அரசு உத்தியோகத்தில் இருக்கும் ஊழியர் சொன்னது தான்)

அப்படியே விவரம் தெரிஞ்சாலும் யாராவது எங்கேயாவது போய் புகார் கொடுக்க முடியாமா?.. கொடுத்தாதான் காவல் துறை நியாயமான நடவடிக்கை எடுக்குமா? சொல்லுங்க? குற்றம் செய்பவனை விட குற்றம் செய்ய துணை போறாவங்களாலதான் இப்போ பிரச்சினை இங்கே!
மேலும் அரசியலைப் பற்றி இங்கே பேசக் கூடாது.. அதனால் என்னால் விரிவாக பேச முடியலை.

இன்கம் டாக்ஸ் துறைனு ஒன்னு இருக்கே.. அவங்களுக்கு அரசியல்வாதிகள் வீடு எதுவுமே கண்ணுக்குத் தெரியாதா?

பொருளாதார பின்னடைவு இந்தியாவை பாதிக்கலதான் அதுக்கு காரணம் அரசியல்வாதி இல்லைனு எப்படி சொல்ல முடியும்... வெளி நாடுகளில் இருந்து வரும் வேலை வாய்ப்புகளை அப்ரூவ் செய்தது அதே அரசியல்வாதிகள் தானே!
வேலை வாய்ப்புகள் பெருகியதால் தானே இன்னைக்கு ஆண் பெண் ரெண்டு பேரும் சம்பாதிக்க முடியுது? சேமிப்புங்கிறது நம் இந்திய ரத்ததில் ஊறிய ஒன்று.. ஆனா அது அளவோடதான் இருக்கணும் அளவுக்கு மீறி போறதாலதான்
தலை முறை தலை முறையா சொத்து சேர்க்க அரசியல்வாதியும் துடிக்கிறான் அதிகாரியும் துணை போறான்...

அரசு வங்கிகளில் டிப் டாப்பா துணி போட்டுட்டு போனா ஒரு மாதிரி கவனிப்பு, கிராமத்தில இருந்து வரவங்கள ஒருமாதிரி கவனிக்கிறதுன்னு தானே இன்னைக்கும் இருக்காங்க...

ஒன்னும் இல்லை.. அரசு வங்கில என் தொலைப் பேசி எண்ணை மாற்றனும்னு ஒரு விண்ணப்பம் கொடுத்து மாசக் கணக்காகுது.. இன்னும் ஒரு மாற்றத்தையும் காணோம்... இவங்களுக்கு நம்ம சம்பாதிக்கற பணத்தில இருந்து தான் சம்பளமே போகுது.. நினைத்தாலே பற்றிக் கொண்டு வருகிறது எனக்கு.... மனித மனதிற்கு மதிப்பு இல்லாமல் பணத்திற்கும் புகழுக்கும் வாயைப் பிளக்கும் வரை இங்கு ஒரு மாற்றமும் வரப் போவது இல்லை.. வேறென்ன சொல்ல...

அன்பு நடுவர் அவர்களுக்கு வணக்கம்.பட்டியின் வாதத்திற்கு இடைவெளி அதிகம் விட்டதற்கு மன்னிக்கவும். அரசு ஊழியர்களால் தான் நாட்டில் சீரழிவு அதிகம். அவர்கள் வேலை செய்வது என்னவோ அரசிடம், ஆனால் அவர்களால் பயன் பெறுவது என்னவோ அவர்களின் சுற்றமும் சூழலும் தான்.

திருப்பதி போகிறவர்களை பாருங்கள் நடுவரவர்களே முதலில் அவர்கள் ட்ரெயின் டிக்கெட் புக் பண்ணிய உடன் அடுத்தது உடனே தரிசனம் பெற தெரிந்த அரசு ஊழியர்களிடம் ஒரு கடிதம் வாங்கிவிடுவார்கள்.அந்த கடிதத்தை பார்த்ததும் மலைமேல் உள்ள ஏழுமலையான் மனமிரங்குகிரானோ இல்லையே அங்குள்ள அரசு ஊழியர்கள் அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து கொடுத்துவிடுகின்றனர்.இவ்வாறு கவர்ன்மென்ட் வேலை செய்யும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறார்கள். இதனால் பதிக்க படுவது தர்ம தரிசனத்தில் போகும் ஏழைகளே.இவர்கள் சீக்கிரம் தரிசனம் செய்வதர்க்கு ஏழைகள் மணிக்கணக்கில் காத்துகிடக்க வேண்டியுள்ளது.
இது போல திருச்செந்தூர் கோவில் பற்றி சொல்ல வேண்டியுள்ளது. இங்குள்ள அரசு உழியர்களான பூசாரிகளின் அட்டூழியம் தாங்க முடியாத கொடுமையாக உள்ளது.கோவில் வாசலிலேயே ரெடியாக இருக்கிறார்கள் உடனே முருகனை தரிசிக்க ஒரு தொகை கொடுத்தால் போதும் காடு மலை ஏறி இறங்குவது போல பாலங்களை எல்லாம் தாண்ட வைத்து ஒரு வழியாக கொண்டு போய்விட்டு விடுவார். மேலும் கோவிலில் உள்ள ஒவ்வொரு கடவுளையும் தரிசிக்கும் போதும் பிச்சை காரர்களை போல பணம் கேட்கிறார்கள்.பணம் கொடுப்பவர்களுக்கு கற்பூர ஆரத்தி பணம் கொடுக்காதவர்களை இவர்கள் பார்க்கும் ஏளனப்பார்வை இருக்கிறது பாருங்கள் அது தான் கொடுமையிலும் கொடுமை.இது போல வேறெந்த கோவிலிலும் நான் பார்த்ததில்லை.ஒரு நாளைக்கு எவ்வளவு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள் அவர்களிடம் இந்த பூசாரிகள் இப்படி நடந்து கொண்டால் நம் தமிழ் நாட்டை பற்றி வேற்று மாநிலத்தவர்கள் என்ன நினைப்பார்கள்.இந்த சீரழிவு எப்பொழுது மாறுமோ.நடுவர் அவர்களே முதலில் என்னை மன்னிக்கவும் ஏனெனில் நீங்க இப்ப தான் சொன்னீர்கள் லஞ்சத்தை தவிர சமுதாய சீரழிவை பற்றி எழுதுமாறு. எங்கு சுற்றினாலும் மனிதன் கடைசியில் வருவது பணத்திற்காக மட்டும் தான்.அதான் சுற்றி சுற்றி இங்கேயே வருகிறது. இனி லஞ்சம் பற்றி அல்லாமல் வேறு சீரழி பற்றியும் எழுதுகிறேன்

வாக்களிக்க விருப்பம் இல்லாததைப் பதிவு செய்ய உதவும் ரூல் "49 ஓ"
"47 ஓ" அல்ல.. முந்தய பதிவில் தவறுதலாகப் பதிவிட்டுவிட்டேன்..

மேலும் சில பதிவுகள்