பட்டிமன்றம் 29 "நம் நாட்டின் இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் யார்?

அறுசுவை என்னும் அன்புச்சங்கிலியில் இணைந்திருக்கும் எம் அருமைத் தோழிகளுக்கு அன்பான வணக்கங்கள்.

எல்லா தோழிகளும் இணைந்து நடுவராக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து விட்டதால் இம்முறை நான் பட்டிமன்ற நாட்டாமையாகி விட்டேன் :).

இம்முறை நான் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு இன்றைய நம் நாட்டு சூழலில் நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய விஷயம். நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக பல காரணங்கள் சொல்லப் பட்டாலும் அதிகாரங்களில் இருக்கும் இரு வர்க்கத்தினர்தான் மிக முக்கியமான காரணம்.

எந்த ஒரு நாடும் முன்னேறுவதும் சீரழிவதும் இந்த இரு வர்க்கத்தினரின் கைகளில்தான். இந்த இரண்டு பேரில் யாரால் நம் நாடு அதிகம் சீரழிகிறது என்பதை நாம் கண்டிப்பாக யோசிக்க வேண்டும்.

சரி சரி யார் அந்த இரண்டு வர்க்கத்தினர்னு கேட்கறீங்களா? அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும்தான் அவர்கள்.

இவ்வார பட்டிமன்ற தலைப்பு இதுதான்

###################
"நம் நாட்டில் இன்று நிலவும் பல சீரழிவுகளுக்கு மிக முக்கிய காரணம் யார்? அரசியல்வாதிகளா? அரசு ஊழியர்களா?
###################

தலைப்பை கொடுத்து உதவிய திரு.M.B.குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் :) ஹி ஹி மகள் தந்தைக்காற்றும் உதவின்னு நினைச்சுடாதீங்க. நான் நடுவராக இல்லாமல் வாதாட வேண்டும் என்று நினைத்த தலைப்பு இது. ஆனால் இன்றைய சூழலில் இதைப்பற்றிய விவாதம் வேண்டும் என்பதால் நானே தேர்ந்தெடுத்து விட்டேன் அவ்வளவுதான்:)

பட்டிமன்றத்தின் பொதுவான விதிமுறைகளோடு இப்பட்டிமன்றத்திற்கு என மேலும் சில விதிகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் தோழிகள் கவனத்தில் கொண்டு வாதாட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பட்டியின் விதிமுறைகள்
*******************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

முக்கியமான விதிமுறை
******************************
தனிப்பட்ட அரசியல்கட்சியைக் குறிப்பிட்டோ தனி நபரைக் குறிப்பிட்டோ அல்லது தனிநபர் வாழ்க்கையை குறிப்பிட்டோ பேசக் கூடாது. பொதுவாக அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் என்றே குறிப்பிட வேண்டும்.

அனைவரும் விதிமுறைகளை கவனத்தில் கொண்டு அனல் பறக்கும் சிந்திக்க வைக்கும் வாதங்களை அள்ளி வீசுங்கள். அள்ளிக் கொள்ள மனக்கூடையுடன் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்
இந்த வார நாட்டாமை
கவிசிவா :)

//இப்பொழுது கூட நாம் போன் கனக்ஸன் வாங்க ஈசியா பணம் கட்டிவிட்டு வந்துவிடுவோம், ஆனால் அதை வந்து கனக்ஸன் கொடுக்க வருபவர்களுக்கு அவர்கள் கேட்க்கும் பணம் கொடுக்கவேண்டியுள்ளது. //

ஹி ஹி இதையெல்லாம் லஞ்சம்னு சொல்லக்கூடாது சுமி. டிப்ஸ் அவ்வளவுதான் :)

அடப்பாவிங்களா டிப்ஸ் கொடுக்கலேன்னா கனெக்ஷனை கட் பண்றானுங்களா இதெல்லாம் அநியாயம் இல்லையா எதிரணியினரே! என்ன பதில் சொல்லப் போறீங்க?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பிறப்பிலிருந்து இறப்பு வரை எல்லாமே அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்தாத்தான் நடக்குதுன்னு யாழினி சொல்றாங்க. உண்மைதானே! எதிரணியினர் என்னப்பா சொல்றீங்க?

//x rayக்கு இவ்வளவு, scanக்கு இவ்வளவுனு வசூல் செய்துக் கொண்டிருக்கிறார்கள். கடவுளுக்கு அடுத்தப்படியாக ஜனங்கள் மதிப்பது டாக்டர்களை அங்கு பணிபுரிபவர்களையும் தான் அப்படி ஒரு உயர்ந்த நிலையில் இருப்பவர்களே இப்படி நடந்துக் கொண்டால் மக்களின் நிலை என்ன தான் ஆவது.//

ஆமாமா ஆண்குழந்தை பிறந்தா 100ரூபாயும் பெண்குழந்தை பிறந்தா 50 ரூபாயும் கொடுக்கணுமாம் வார்டுபாய்க்கு. எப்படீல்லாம் ரேட்டு ஃபிக்ஸ் பண்றானுங்க. இந்த புத்தியை உருப்படியா செலவழிச்சா நாடு நல்லா இருக்குமே ம்ஹூம்
ஸ்கட் ஏவுகணை மாதிரி வாதங்கள் பாயுது? எதிரணி பேட்ரியாட்டை அனுப்புங்க சீக்கிரம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவரே.. அருமையான தலைப்பு.. தாமதமாக வந்ததர்க்கு வருந்துகிறேன்.....அரசியல்வாதிகளே!!!!! என்று வாதிட வந்துதுள்ளேன்... அரசியல் வாதிகள் கைககளில் சிக்கி நாடு படும் பாடை சொல்ல வேண்டுமா என்ன.. அரசாங்கம் வழஙகும் பணிகளை செவ்வனே .மக்களுக்கு செய்வதை விட்டு .இவர்கள் பார்க்கும் வேலை என்ன தெரியுமோ.. அதிலிருந்து எப்படி நாம் ஆதாயம் காண்பது என்கிற வேலையைதான்.... அதாவது ஒரு பழமொழி உண்டு ...எரிகிற கொல்லியில் பிடுங்கும் வரை லாபம் என்று........ இவர்கள் ஒழுங்காக இருந்தால் நம் நாடு என்றோ முன்னேறி இருக்கும் ..... ஏழை எழிய மக்களுக்கோ அடுத்த வேலை சோறு எங்கு கிடக்கும் என்கிற கவலை....
..... இவர்களுக்கோ நாம் சொத்தை எங்கு வாங்குவது இந்தியாவிலா இல்லை சுவிஸ்ஸிலா என்கிற கவலை... இவர்களை போல உள்ளவர்கள்..இருந்தால் நாடு எப்படி முன்னேறும் ...... கனவில்தான் நடக்கும் நடுவர் அவர்களே ............................ அன்புடன் ருக்சானா........

வாழு, வாழவிடு..

நடுவர் அவர்களுக்கும் என் அருமை தோழிகளுக்கும் என் முதல் கண் வணக்கத்தை தெரிவித்துகொள்கிறேன்.இன்றைய சூழலில் நாட்டை சீரழிப்பது அரசி அதிகாரிகளே.இவங்க பண்ணுற அட்டுழியத்திற்கு அளவே இல்லங்க.இன்று நம் நாட்டில் ஒரு அரசு உழியராவது காலையிலிருந்து மாலைவரை பொறுப்பா வேலை செய்யுராங்களான்ன பதில் இல்லைதான்.யார் அப்பன் வீட்டு சொத்தோ நாம் ஏன் ஒழுங்கா வேலை செய்ய வேணும்னு நினைக்கிறாங்க.அவர்களுக்கு சம்பளம் கொடுப்பது நம் வரிப்பணத்திளிருந்து தான்.இதை நினைத்து பார்த்தாலே நம் வயிறு எரிகிறது.காலையில் எழுந்து நீட்டாக தயாராகி கிளம்பிவிடவேண்டியது.அலுவலகத்திலோ ஒரே அரட்டை வேறு. ஏழை எளியவர்கள் என்றால் நையாண்டி.அவர்களின் வேலையை இவர்கள் முடித்து தர லஞ்சம் வேறு தரவேண்டும்.நம் நிலையோ ஒரு வேலை ஆக வேண்டுமென்றாலும் அரசு உழியர்களையே சார்ந்திருக்கிறோம்.

நமக்கு ஒரு பிரச்சினை என்றால் நாம் முதலில் போவது காவல் நிலையமே அன்றி எந்த அரசியல் வாதியிடமும் அல்ல.காவல் நிலையத்திற்கு போகும் போதே நம் மானம் மரியாதையை கழற்றி வைத்துவிட்டு தான் போகவேண்டும்.அப்படி உள்ளது இன்றயநிலை.ஒருவன் தவறு செய்து போலீஸ் ஸ்டேஷன் போய்விட்டனேன்றால் அவனின் அம்மா அப்பா மற்றும் குடும்பத்தினரையே இழிவாக பேசி அவமதிக்கிறார்கள் இது என்னங்க நியாயம்.
நியாயம் கிடைப்பதற்குள் போலீஸ் அதிகாரிகளிடம் நாம் பணத்துடன் சேர்த்து நம் குடும்ப மானத்தையும் அல்லவா இழக்க வேண்டியுள்ளது.இழந்த நம் பொருள் கிடைப்பதற்குள் அதற்க்கும் மேலல்லவா செலவாகிறது.

அடுத்து அரசாங்க ஆஸ்பத்திரிகள்.இங்கு நம் அரசு ஏழைகளுக்காக எவ்வளவு சலுகைகள் ஏற்படுத்தினாலும் அது முழுவதும் மக்களுக்கு போய் சேர்கிறதா என்றால் பதில் இல்லை.சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுப்பதில்லை என்கிற கதை தாங்க இங்க.இங்கு அனைத்து சிகிச்சைக்கும் இலவசமே. ஆனால் இங்குள்ள தரைக்கு மட்டும்தான் இலவசம். பெட்களுக்கு தனி ரேட்.நோயாளிகளுக்கு கொடுக்கு உணவுகளைகூட கொடுக்காமல் தனியே விற்பவர்களும் இங்கிருக்கிறார்கள்.ஒரு பத்திரிக்கையில் படித்தேன் சென்னையில் தான் பெரிய அரசு மருத்துவமனை உள்ளதாம்.மிகக்கொடிய நோய்களுக்கு கூட சிகிச்சை அளிக்கக்கூடிய வசதி இங்குள்ளதாம் ஆனால் அந்த மருத்துவத்தை ஏழைகளுக்கு இலவசமாக வழங்க தான் நம் அரசாங்க உழியர்களுக்கு மனசில்லை.

வெறும் இரண்டு அரசு அலுவலகங்களை பற்றிதான் இங்கு பார்த்தோம்.அதற்கே இவ்வளவு நேரம் என்றால்.இன்னும் எவ்வளவோ செய்திருக்காங்க அவங்க அதையெல்லாம் எழுத ஒரு வாரம் போதுமான்னு தெரியல.மீண்டும் தொடர்வேன்.

எதிரணியினர் சொல்வதை பாருங்கள்... நேர்மையான அதிகாரிகள் நிறைய பேர் இருக்காங்க....
நம் நாட்டில் எந்த காவல் துறை அதிகாரியையாவது ஒழுங்காக வேலை செய்யவிடுகிறார்களா..
அவர்களை நேர்மையாக நடக்கவிடாமல் தடுப்பது இந்த அரசியல் வாதிகளே...
அவர்கள் ஆட்டி வைக்கிறார்கள் இவர்கள் ஆடுகிறார்கள் ....
ஒரு அரசியல்வாதியின் மீது இவர்கள் நடவடிக்கை எடுத்துவிட்டால் இவர்கள் நிலமை ரொம்ப மோசமாகிவிடும்..... அதனால் அவர்கள் என்ன செய்வார்கள் ..
இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் நம் அரசியல் வாதிகளை பற்றி....
இவர்கள் . அவங்க ஜெயித்த தொகுதிக்கு வருகிறார்கள் என்றால் ..அய்யோ சொல்லவே வேண்டாம் ...
எத்தனை கொடிகள் ..எத்தனை விளக்குகள் .எத்தனை ஆடம்பரம்... அந்த பணத்தை.. எத்தனை மின்வசதி இல்லாத கிராமங்களுக்கு ...மின் வசதி ஏற்
ப்படுத்தி கொடுக்கலாமே...
இதெல்லாம் இவர்களுக்கு எங்கு தெரியப்பொகுது..
விடிந்து எழுந்தால் சொகுசான வாழ்க்கை. ஏசி கார் பெரிய வீடு .. இன்னும் எண்ணிலடங்கா வசதிகள் ...
இவர்களால் தான் சீரழிகிறது நம் நாடு................. திரும்ப வருவேன்.........
ருக்சானா..........

வாழு, வாழவிடு..

நடுவர் அவர்களே சகதோழிகளே,தோழர்களே வணக்கம்
நம் நாட்டில் இன்று நிலவும் பல சீரழிவுகளுக்கு மிக முக்கிய காரணம் அரசு அதிகாரிகளேன்னு வாதாட வந்திருக்கிறேன்
பொன்னி

இந்த லஞ்சம் என்கிற சமுதாய சீரழிவிற்கு பிறப்பிடம் அரசு அலுவலகங்கள் தான்
தன் வேலைய சரிவரசெய்யாமல் காலங்கடத்தி ஒரு மனுசன அலயா அலய விட்டு அவனே கடைசியில காசக்கொடுத்தாவது இந்த வேலைய முடிச்சிக்கலாம்னு நினைக்கிற அளவுக்கு அவன ஆளாக்குறானே அந்த அரசு அதிகாரிகள் தான் இந்த லஞ்சத்தின் தாய் தந்தையர்கள்
இந்த புண்ணியவான்களிடமிருந்துதான் அரசியல்வாதிகளே லஞ்சம் வாங்குறத கத்துகிட்டிருப்பாங்க
அரசியல்வாதிங்க லஞ்சம் வாங்கிட்டு வேலைசெய்யவிடாம தடுக்குறாங்கன்னு சொறாங்க அவங்க அப்படி தடுத்தால் படித்து பட்டம் வாங்கியிருக்கிற அரசுஅதிகாரிங்க அப்படி செய்முடியாதுன்னு போராட்டம் செய்யலாம் இல்லன்னா பாலம் கட்டுறதுல முறை கேடு பண்ணசொன்னா
“டேய் நீயும் இந்த பாலத்துக்கு கீழ,மேல ஒருநாள் போகவேண்டிவரும் அன்னைக்கு உன் தலைல உன் புள்ள தலைலகூட இந்த பாலம் இடிஞ்சு விழும் அப்ப நீவாங்குன காசு உன்னை காப்பாத்தாதுன்னு” ஆரம்பத்திலேயே இந்த அரசு அதிகாரிகள் மருத்திருந்திருந்தாங்கன்னா எவ்வளவோ அழிவிலிருந்து மீண்டிருக்கலாம் ஆன இந்த அரசு அதிகாரிங்க அரசியல்வாதிங்க போட்ட எலும்புத்துண்டுக்கு ஆசப்பட்டதால தான் இத்தனை சீரளிவும்
ponni

அரசியல்வாதியும் லஞ்சம் வாங்குறான், அதிகரியும் வாங்குறான் அரசியல்வாதி கோடியில் வாங்குறான் ஆனா அதை கோடீஸ்வரங்கிட்ட வாங்குறான் இந்த அரசுஅதிகாரிங்க ஆயிரத்தில லஞ்சம் வாங்குனாலும் அதை ஒன்னும் இல்லாதவன் கிட்டேர்ந்து புடுங்குறான் இறப்பு சான்றிதழ் வழங்ககூட காசுவாங்குறான்ன இந்த அரசு அதிகாரிகளை எந்த ரகத்தில் சேர்க்குற்து சொல்லுங்க நடுவர் அவர்களே

பொன்னி

அரசியல்வாதியிடம் லஞ்சம் கொடுத்துதான், இப்ப வேலையே வாங்குறான்.அப்பறம் அவன் லஞ்சத்தில வாழாம என்ன பண்ணுவான்?முக்கியமான ஆணிவேர் நம்ப அரசியல்வாதிங்கதான்.ஒவ்வொரு சாலையின் பக்கவாட்டிலும்,பிரிவு சாலைகளிலும்,ஏன் எல்லா தெரு முனைகளிலும் போஸ்டரும்,பானரும் இல்லாமல் இல்லை.இதனால் எத்தனை விபத்துக்கள்.தாங்க முடியவில்லையே இந்தத் தொல்லையை.அரசியல்வாதிகளின் அட்டூழியத்தை.இவர்களால்தான் அதிக சீரழிவு.

சிரிப்பே சிறந்த மருந்து

நடுவருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

அரசு ஊழியர்கள் என்பவர்கள் யார்?

ஒரு நாட்டின் நிர்வாகத்தில் பல துறைகள், பல நிலைகள், பல வேலைகள். இவற்றை சரிவர செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்காக, ஒவ்வொருவருக்கும் வேலைகள் பகிர்ந்தளிக்கப்பட்டு, அதற்கான பொறுப்புகள் தரப்படுகின்றன. வேலைகளுக்கான தகுதிகள் நிர்ணையிக்கப்பட்டு, அதற்கான சம்பளமும் தரப்படுகிறது.

இந்த அரசு ஊழியர்கள் என்னும் யந்திரம் – மன்னராட்சி, சர்வாதிகார ஆட்சி, முதலாளித்துவ ஆட்சி, சோஷலிஸ ஆட்சி, இப்படி எல்லா நாடுகளிலும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த யந்திரம் சரிவர இயங்குகிறதா என்று கண்காணிப்பது, நன்றாக நடக்க ஊக்குவிப்பது, தவறுகள் நடந்தால், கண்டித்து, தண்டிப்பது – இதெல்லாம் யாருடைய பொறுப்பு? யாருக்கு இந்த அதிகாரம்?

மன்னராட்சியாக இருந்தால் – மன்னரும் மந்திரிப் பிரதானிகளும். மன்னரே தவறு செய்தால் தட்டிக் கேட்க, சாதாரண குடிமக்களுக்கு தைரியம் உண்டு. அறிந்தோ, அறியாமலோ நடந்த தவறை ஒப்புக் கொள்ளும் நேர்மை மன்னர்களுக்கு இருந்திருக்கிறது.

புறாவுக்கு அடைக்கலம் கொடுத்து, தன் தசையை அரிந்து கொடுத்த மன்னன், நீதி கேட்ட பசுவுக்காக தன் மகனை தேர்க்காலில் இட்ட அரசன், கண்ணகியின் சிலம்பு மணிகளைக் கண்டு, “யானே கள்வன்” என்று உயிர் நீத்த பாண்டியன், கதவைத் தட்டியது தானே என்று ஒப்புக் கொண்டு, தன் கையை தானே வெட்டிக் கொண்டு, பொற்கை பாண்டியன் ஆன மன்னன் – இவர்களைப் பற்றியெல்லாம் படித்திருக்கிறோம்.

இப்படிப்பட்ட மன்னராட்சி தவறு. இயற்கையின் படைப்பில் அனைவரும் சமம், எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று முழங்கி, நாம் கொண்டு வந்திருக்கும் முறைதான் ஜனநாயகம்.

அரசாங்க ஊழியர்களால் ஆன அரசு யந்திரத்தை சரிவர நடத்துவதற்காக, மக்களாகிய நமது நன்மைக்காக, நம்முடைய பிரதிநிதிகளாக நாம் தேர்ந்தெடுத்து அனுப்பியவர்கள்தான் இன்று சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் பதவி வகிக்கும் அரசியல்வாதிகள்.

அவர்களுக்கு நாம் கொடுத்திருக்கும் பதவி என்பது, அவர்கள் தன்னுடைய நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக, அரசு யந்திரத்தை சிறப்பாக நடத்த, நாம் கொடுத்திருக்கும் பொறுப்பு!

ஆனா, அவர்கள் செய்வது என்ன? நடந்து கொள்ளும் விதம்தான் என்ன?

அந்தக் காலத்து ராஜாக்கள் கூட, தன்னுடைய நாட்டுக்காக,தம்முடைய நாட்டு மக்களுக்காகத்தான், பக்கத்து நாடுகளுக்கு படையெடுத்துச் சென்று, வென்று வந்தார்கள், கடல் கடந்து, கொடி நாட்டி, பொருள் சேர்த்து வந்தார்கள்.

ஆனால், நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டு, நம் பிரதிநிதிகளாக நாம் அனுப்பிய அரசியல்வாதிகள், நம்முடைய பணத்தையே அல்லவா கொள்ளையடிக்கிறார்கள்?? திருடன் கூட சொந்த வீட்டில் கன்னக்கோல் போட மாட்டானே? இவர்களை என்னவென்று சொல்வது, தெரியவில்லையே? வெட்கப்பட வேண்டிய, வேதனைப்பட வேண்டிய விஷயம் இது.

மீண்டும் வருகிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்