கார போண்டா,சலவை சட்னி

தேதி: December 2, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

போண்டாவுக்குத் தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - அரை டம்ளர்
கடலை மாவு - அரை டம்ளர்
மைதா மாவு - அரை டம்ளர்
உளுத்தம்பருப்பு - அரை டம்ளர் (தண்ணீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும்)
கடலைப்பருப்பு - அரை டம்ளர் (ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்)
பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக அரிந்தது)
தேங்காய்ப்பூ - 2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் பொடி - ஒன்றரை அல்லது இரண்டு தேக்காண்டி
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப (3/4 தேக்கரண்டி)
கறிவேப்பிலை, கொத்தமல்லி - விரும்பினால்
வடை பொரித்து எடுக்க:
ரீபைண்ட் ஆயில் - தேவையான அளவு
சலவை சட்னிக்குத் தேவையான பொருட்கள்:
கடலை மாவு - கால் டம்ளர்
மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
பெருங்காயப் பொடி - கால் தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப (அரை தேக்கரண்டி இருக்கலாம்)
பெரிய வெங்காயம் - ஒரு மேசைக்கரண்டி (பொடியாக அரிந்தது)
தாளிக்க:
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி - விருப்பம் போல்


 

சட்னிக்குத் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கடலை மாவை நன்றாகக் கட்டியில்லாமல் கரைக்கவும். இத்துடன் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, இஞ்சி விழுது, பெருங்காயப் பொடி, உப்பு, ஆகியவற்றையும் கலந்து நீர்க்கக் கரைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதிலேயே நறுக்கின வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
கரைத்து வைத்திருக்கும் கடலை மாவை இதில் ஊற்றி 5 நிமிடங்களுக்கு கை விடாமல் கிளறவும். (கிளறாவிட்டால், கடலை மாவு கரைசல் கட்டி தட்டி விடும்). பச்சை வாசனை போகக் கொதித்ததும், இறக்கி வைக்கவும்.
போண்டாவுக்குத் தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்
ஊற வைத்திருக்கும் உளுத்தம்பருப்பை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த உளுத்தம்பருப்பு, கடலை மாவு, பச்சரிசி மாவு, மைதா மாவு, நறுக்கிய வெங்காயம், தேங்காய்ப்பூ, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, பெருங்காயத்தூள், உப்பு, இஞ்சி விழுது, கறிவேப்பிலை எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலந்து, தண்ணீர் ஊற்றி, கெட்டித் தயிர் பதத்தில் கரைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து போண்டா பொரித்து எடுக்கத் தேவையான அளவு ரீஃபைண்ட் ஆயில் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், கலந்து வைத்திருக்கும் மாவை, போண்டாக்களாக உருட்டிப் போடவும்.
இரு பக்கமும் திருப்பிப் போட்டு, எண்ணெய் சலசலப்பு குறைந்து, போண்டா வெந்ததும், எடுக்கவும்.
சலவை சட்னியுடன் சூடான போண்டாக்கள் சாப்பிடத் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சீதாம்மா போண்டா பார்க்கவே சுண்டி இலுக்குது. அதுவும் இந்த மழை பெய்ற க்ளைமேட்ல ஆஹா செய்து சாப்பிட்டா எவ்வளவு நல்லா இருக்கும். அம்மாகிட்ட சொல்லனும். செய்துட்டு சொல்றேன்மா. ஆமாம் அம்மா அது என்ன சலவை சட்னிமா புதுசா இருக்கே?

சீதாம்மா நல்ல மொறு, மொறு குறிப்பு. விளக்கப்படங்களும் அருமை. உடனே செய்துபாக்க தோணுது.

சீதாம்மா, உடம்பு முடியல, முடியலன்னு சூப்பர் சூப்பரா குறிப்பு தந்துட்டே இருக்கீங்க. உண்மையா சொல்லனும்னா நாங்க தான் உடம்பு முடியாதவங்க மாதிரி இருக்கோம். போண்டாவும், கார சட்னியும் நல்ல காம்பினேஷன்ங்க மா. நான் நிச்சயமா செய்து பார்க்கறேன். நீங்க எங்க வீட்டுக்கு வரும்போது உங்களுக்கும் செய்து தர்றேன் ;)) வாழ்த்துக்கள் மா.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

போன்டாவிற்கு தேவையான கடலைப்பருப்பை என்ன செய்யவேண்டும்?

அன்பு யாழினிமுகில்,

பாராட்டுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. வெறும் கடலைமாவில் செய்யறதால், வழுவழுப்பாக இருக்கும் இந்த சட்னி. அதனால சலவை சட்னின்னு பெயர். பாம்பே சட்னி என்றும் சொல்வாங்க.

அன்பு கோமு,

பாராட்டுக்கு நன்றி. செய்து பார்த்துட்டு சொல்லுங்க. இந்த போண்டாவும் இந்த சட்னியும் நல்ல மாட்ச் ஆகும்.

அன்பு கல்பனா,

இப்ப காமிரா கையில் கிடைச்சுடுச்சா, வீட்டில் எதுவும் செய்ய ஆரம்பிக்கறதுக்கு முன்னால, முதல்ல காமிராதான் ரெடியாகுது!! உண்மைக்குமே இப்ப நான் ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாம இருக்கணும்னு பார்க்கறேன், ஆனா, முடியலை, போரடிக்குது. அதான், இப்படி ஏதாவது செய்துட்டே இருக்கேன்.

அன்பு ஆமினாஇப்ராஹிம்

வருகைக்கு நன்றி.

மன்னிக்கவும். குறிப்பில் அது சொல்ல விட்டுப் போய் விட்டது. கடலைப் பருப்பை, 1 மணி நேரத்துக்கு முன்னால், ஊற வைத்து, மாவுடன் சேர்த்து, கலந்து கொள்ளணும். அப்படி ஊற வைக்க மறந்து போச்சுன்னா, பொரிகடலை சேத்துக்கலாம். அதே போல உளுந்து ஊற வைக்க டைம் இல்லன்னா கூட, வீட்டில் இருக்கும் இட்லி/தோசை மாவில் கொஞ்சம் சேத்துக் கரைச்சுக்கலாம்.

அன்புடன்

சீதாலஷ்மி

சந்தேகத்தை தீர்த்துவைத்ததற்கு மிக்க நன்றி.

அன்பு சீதா,ஒரு புது விதமான சமையல் செய்து காட்டி உள்ளீர்கள்.நான் இதுவரை இப்படி செய்ததில்லை.
வரும் சனிக்கிழமை செய்யலாம் என இருக்கின்றேன்.ஏனென்றால் வீட்டில் சிறு விசேசம்.எமது குடும்ப அக்கத்தவர்கள் எல்லோரும் ஒன்று சேரும் நாள். கார போண்டா தான் அந்தநாள் இஸ்பெசல்.
செய்து பார்த்துவிட்டு வருகின்றேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சீதாலக்ஷ்மி மேடம்,
நலமா?
போண்டா சுண்டி இழுக்குது .
செய்துட வேண்டியது தான்..

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பு யோகராணி,

இது எங்கள் வீட்டின் ஆஸ்தான சிற்றுண்டி:):) எல்லோருக்குமே பிடிக்கும். அடிக்கடி செய்வோம். சூடாக சாப்பிடுவதற்கு மிகவும் நன்றாக இருக்கும். செய்து பார்த்து, எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.

அன்பு கவிதா,

நலமே, நீங்க நலமா?

அங்கே இப்ப குளிர் மிகவும் அதிகமாக இருக்குமே, குளிர் வேளைக்கு இந்த டிஃபன் ரொம்ப நல்லா இருக்கும். செய்து பார்த்து, சொல்லுங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சீதா, இன்று உங்கள் கார போண்டாதான் எமது சிற்றுண்டி.

மிகவும் நல்லாய் இருந்தது.எல்லோரும் விரும்பி சாப்பிட்டார்கள்.டொமார்றோ கச்சுப்புடன் தொட்டுக்கொள்ள நல்லாய் இருந்தது.

நன்றி சீதா நல்லதொரு ரேசப்பி கொடுத்தமைக்கு.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சீதாலஷ்மி... மழை காலத்துல இப்படிலாம் குறிப்பு கொடுத்தா செய்யாம இருக்க முடியுமா??? பார்த்ததுமே செய்ய ஆசை வந்துட்டுது. சீக்கிரம் செய்துடறேன். நான் கூட கலவை சட்னி'னு போடுறதுக்கு பதிலா சலவை'னு போட்டுட்டாங்களோ'னு நினைச்சேன்... பெயர் காரணம் பார்த்ததும் சந்தேகம் போயிடுச்சு :) சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பரா இருக்கு:)) அந்த தேவையான பொருட்களை பார்க்கும் போதுதான் தலை சுத்துது;(( சும்மா சொன்னேன் சீதாம்மா:)) முடியும் போது அம்மாக்கிட்ட சொல்லி ட்ரை பண்றேன். இன்னும் இந்த வடை போண்டாவில் இறங்கலை, ட்ரை பண்ணும் போது ஒரு முறை எண்ணெய் தெளித்து விட்டது, அதனால் பயம்;(( வாழ்த்துக்கள் சீதாம்மா

அன்புடன்
பவித்ரா

அன்பு வனிதா,

ஆஸ்பத்திரிக்கும், வீட்டுக்கும் போய் வந்து, வேலை சரியாக இருக்கும் உங்களுக்கு. உங்க பிஸி நேரத்திலும், எல்லா இடங்களிலும், பின்னூட்டம் கொடுத்திருக்கீங்க. மிகவும் நன்றி வனிதா.
அவசியம் செய்து பாருங்க. மழைக் காலத்துக்கு ஏற்ற டிஃபன் இது.

அன்பு பவித்ரா,

லிஸ்ட் பாக்க பெரிசாக இருக்குன்னு எனக்கும் தோணிச்சு. இனிமேல் அதை ஷார்ட் ஆகக் கொடுக்கணும்னு நினைச்சிருக்கேன். தேவையான மாவு வகைகளை, தனித்தனியாக இல்லாம, தலா ½ டம்ளர் என்று கொடுத்திருந்தால், 3 லைன், 1 லைன் ஆகியிருந்திருக்கும். வடை பொரிக்க என்று தனியாக தலைப்பு தேவையில்லாம – பொரிப்பதற்கு எண்ணெய் என்று கொடுத்திருக்கலாம். இனிமேல் சரியாக கொடுக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாலட்சுமி அவர்களே...,எப்படி இருக்கீங்க?
நான்கு நாட்களாக நான் இந்த அருசுவைக்கு வரவே முடியவில்லை.
செம பிஸியாகி விட்டேன்.இன்று உள்ளே நுழைந்ததும்,உங்கள் குறிப்புதான்.ம்ம்ம்...நிச்சயம் யம்மி யம்மியாக இருக்கும்னு நினைக்கிறேன்.
பார்க்கும் போது அசத்தலாக உள்ளது.நிச்சயம் எனக்கு நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அன்பு அப்சரா,

உங்க பாராட்டுக்கு மிகவும் நன்றி. உங்க சமையல் குறிப்புகள் எல்லாம் நான் மிகவும் விரும்பிப் படித்துப் பார்ப்பேன். புதிதாக சமையல் குறிப்புகள் கற்றுக் கொள்பவர்கள் கூட, சுலபமாக செய்து பார்க்கும்படி, விளக்கமாக, நீங்கள் சொல்லும் விதம் எனக்குப் பிடிக்கும்.

அன்புடன்

சீதாலஷ்மி