பட்டிமன்றம் - 37 : விருந்தாளிகளால் சந்தோஷமா? சங்கடமா?

பல தலைப்புகளை பார்த்து எதை தேர்வு செய்ய எல்லாமே நல்லா இருக்கேன்னு இப்பவே குழம்பி போய் கடைசியா சரொ நம்ம காமெடி தலைப்பையே தேர்வு செய்வோம், அப்படியாவது காணாம போனவங்க வராங்களா பார்ப்போம்'னு கல்பனா'வின் தலைப்பையே தேர்வு செய்துட்டு வந்திருக்கேன்.

இதோ உங்களுக்கான இந்த வார தலைப்பு:

வீட்டிற்கு வரும் நம் விருந்தாளிகளால் நமக்கு சந்தோஷமா? சங்கடமா?

விருந்தாளிகள் லிஸ்ட்டில் யாரெல்லாம் இருக்காங்கன்னு ஒரு குழப்பம் வருமே... எல்லாரும் தான். அதவாது உங்க கணவர், குழந்தைகள் தவிற மற்ற அனைவரையுமே கருத்தில் கொண்டு பேச வேண்டும்.

மற்ற பட்டிகளுக்கான விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். ஜூட்... சண்டையை ஆரம்பிங்க, நான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வந்து தலையை காட்டறேன்.

ஸ்ரீ... வாங்க வாங்க. பிடிங்க உங்களுக்கும் அல்வா. சந்தோஷமா வாதாடுங்க.

கல்பனா... சொன்ன மாதிரியே வந்துட்டீங்களே!!! இது தான் நல்ல பிள்ளைக்கு அழகு. பட்டி தடை இல்லாமல் நடக்கணும்'ன்றதுக்காக தானே ஒவ்வொரு முறையும் நான் ஆளாய் பறந்து ஆளை தேடினேன், யாரும் வரலன்னா நாம வர வேண்டியது தான். நல்ல வேலையா நீங்க "உபத்திரம்"னு சொல்லி தேர்வு செய்துட்டீங்க, எதிர் அணியில் ஆளை காணோமேன்னு பார்த்தேன்.

பூங்காற்று... கருத்து மட்டும் தான் சொல்ல வேணும், அரட்டை கூடாது. சரியா??? முதல் வாதத்தோடு வந்திருப்பவர் நீங்க தான். பிடிங்க ரோஸ் மில்க். சில்லுன்னு குடிச்சுட்டு சூடான வாதத்தோட வாங்க.

தேவி... நீங்களும் சந்தோஷம் அணியா?? பலமாயிடுச்சு அணி. கலக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவர் அவர்களே, விருந்தினர்களின் வருகையால் மனம் மகிழும் உள்ளங்கள் இன்னும் நாட்டில் உள்ளனரா? அவர்களை நினைத்தால் ஆச்சர்யமாக உள்ளது. ஏனென்றால் இந்தகாலத்தில் நம் வீட்டிற்க்கு வரும் விருந்தினர்களில் யார் நம் மனம் சந்தோஷப்படும் படி நடந்து கொள்கின்றனர் சொல்லுங்கள் பார்க்கலாம்.

//விதவிதமான சாப்பாடு கிடைத்தால் சந்தோஷம் தானெ வரும். ;))//

எதிரணி சகோதரியே, விருந்தும், மருந்தும் ரெண்டு நாளைக்கு தான். அதற்கு மேல் போனால் இரண்டுமே கசந்துவிடும். அது போல தான் விருந்தினர்களின் வருகை தரும் மகிழ்ச்சியும்.

நடுவரே, இந்த விருந்தினர்கள் இருக்காங்க பாருங்க. வரும்போது கை கொள்ளா அளவுக்கு பண்டங்கள வாங்கிட்டு வருவாங்க. அப்புறம் அங்கேயே 10 நாள் டேரா போட்டுட்டு, ஊர்ல எல்லார்கிட்டயும் போய் நான் இதை வாங்கிட்டு போனேன். அதை வாங்கிட்டு போனேன்னு சொல்லிட்டு திரிவாங்க. அவங்க வாங்கிட்டு வந்ததுக்கு மேலயே அங்கே செலவழிச்சிருப்பாங்க விருந்து தந்தவங்க. அந்த 10 நாளும் இருந்து அவங்க வாங்கிட்டு வந்த பண்டத்தை அவங்களே காலிபண்ணியிருப்பாங்க. ஆனா வெளிய வேற மாதிரி சொல்லிட்டு இருப்பாங்க. இது பத்தாதுன்னு ஊருக்கு போய் வேற யோசிச்சு யோச்சி குற்றப்பட்டியல தயார் பண்ணி இன்லெண்ட் லெட்டர்ல எழுதி அனுப்பி வைப்பாங்க, அட்ரஸ் எழுதற இடத்துல கூட பேலன்ஸ் வைக்காம நுணுக்கி நுணுக்கி குட்டி குட்டியா எழுதி குறைய கொட்டியிருப்பாங்க.

உண்மைல பார்த்தீங்கன்னா அவங்க வீட்ல பச்சதண்ணி பால்ல கூட கடுங்காப்பி போட்டு குடிக்க கணக்கு பார்ப்பாங்க. ஆனா விருந்தாட போற இடத்துல அளப்பாங்க பாருங்க.. அய்யோ சாமி அவங்க அலப்பற தாங்காம அய்யனார் சாமியும் எழுந்து ஓடிடுவார். அந்த அளவு விடுவாங்க.... நான் பால் தான் குடிப்பேன். நைட்ல பச்ச பழம் தான் சாப்புடுவேன். முட்டை இல்லாம ஒருவாய் சாதம் கூட தொண்டைல இறங்காது. ப்ரூ காப்பி தான் குடிப்பேன் அப்படி இப்படின்னு...

நடுவரே, வேண்டாம்... நான் அழுதுருவேன்..... அப்பறமா வாரேன்.. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :'(

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

விருந்தினர்களின் வருகை சந்தோசமே.. எப்பொழுதும் தனியாகவே இருந்து விட்டு யாராவது நம்ம வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால் அது ரொம்பவே சந்தோசமாக இருக்கும். ஸ்பெசல் சாப்பாடு,அரட்டை அடிப்பது, ஊரை சுற்றுவது, விருந்தினர்கள் வந்தாலே வீடே கல கலன்னு இருக்கும். உறவினர்களுக்குள்ள சின்ன சண்டைகள் வரத்தான் செய்யும். ஆனால் அதை மறந்துட்டு விருந்தினர்களை உபசரிப்பதே நல்லது..

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

நானும் சங்கடமே என்ற அணியில் வாதிட விரும்புகிறேன்.விருந்தோம்பல் நம்ம கலாச்சாரத்தில் முக்கியமான ஒன்றாக இருந்தாலும்,விருந்தினருக்கு என்று சில விதிமுறைகள் இருக்கு,அதை பெரும்பாலானவங்க கடைபிடிக்க மறப்பதினால்,சந்தோஷமா இருக்க வேண்டிய விருந்தினர் வருகை சங்கடங்களையே ஏற்படுத்துது.

//எப்பொழுதும் தனியாகவே இருந்து விட்டு யாராவது நம்ம வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால் அது ரொம்பவே சந்தோசமாக இருக்கும்//

நடுவர் அவர்களே, நோட் திஸ் பாயிண்ட். தனியா இருக்கறதால விருந்தாளிகளோட வருகை சந்தோஷம் தருதாம். வாஸ்தவம் தான். சாப்பாடு, தண்ணி கிடைக்காத பாலைவனத்துல இருக்கவங்களுக்கு வறட்டு வறட்டு காஞ்சி போன ரொட்டி, அது 10 நாளைக்கு முன்னாடி பண்ணதா இருந்தாலும் தேவாமிர்தமாக இருக்க தான் செய்யும். நீங்க நார்மல் கண்டீஷன்ல அதாவது ஓரளவு சொந்தங்கள் சூழ தனிமை என்பதே இல்லாமல் இருக்கும் போது, அந்த விருந்தினர் வருகையை எதிர்கொண்டு பாருங்க. அப்ப இருக்கு சங்கதி உங்களுக்கு.

// ஸ்பெசல் சாப்பாடு,அரட்டை அடிப்பது, ஊரை சுற்றுவது, விருந்தினர்கள் வந்தாலே வீடே கல கலன்னு இருக்கும். உறவினர்களுக்குள்ள சின்ன சண்டைகள் வரத்தான் செய்யும்//

எதிரணி தோழியே, ஸ்பெஷல் சாப்பாட்டை சாப்ட்டு அரட்டை அடிப்பவர் நீங்களா இருக்க மாட்டீங்க. வந்திருக்கற விருந்தினராத்தான் இருப்பார். உங்களால அரட்டை அடிக்க முடியாது. ஏன்னா தெம்பு இருக்காது. ஏன் தெம்பு இருக்காது உங்களுக்கே சட்டில சாப்பாடு இருக்காது. வந்திருக்கற விருந்தாளிங்களுக்கு அதை பத்தியெல்லாம் கவலையும் இருக்காது. நீங்க சாப்டீங்களா, சாப்பிடலயா? உங்களுக்கு இருக்கா? இல்லையா? அதை பத்தி தெரிஞ்சிக்கவும் பிரியப்பட மாட்டாங்க. சும்மா ஒரு பார்மாலிட்டிக்கு உங்க வீட்லயே உட்கார்ந்துட்டு உங்களையே சாப்பிட ஒரு முறை கூப்பிடுவாங்க. அப்புறம் அவங்க வேலைல கண்ணும் கருத்துமா இருப்பாங்க. நான் எல்லா விருந்தினர்களும் இப்படித்தான் என்று சொல்ல வில்லை. பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று சொல்கிறேன்.விருந்தாளிகளால் சண்டை மட்டும் தான் வரும். சந்தோஷங்கள் எப்போதாவது தான் வரும். புரிந்தால் சரி.

//அதை மறந்துட்டு விருந்தினர்களை உபசரிப்பதே நல்லது..//

விருந்தாளிங்க உங்க வீட்டுக்கு விருந்துக்கு வரும்போது பழைய சண்டை எல்லாம் மறந்துடுவாங்க. அவங்க வீட்டுக்கு நீங்க போகும் போது முன் ஜென்மத்துல நடந்த சண்டையெல்லாம் அவங்களுக்கு ஞாபகம் வரும். வங்கம் வச்சி தீட்டிடுவாங்கல்ல ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

முதலில்,விலைவாசி,இப்போ விக்கிற விலைவாசியில் எல்லாரும் பட்ஜெட் போட்டு தான் குடும்பம் நடத்துறாங்க,இந்த சூழ்நிலையில் கெஸ்ட் என்று சொல்லிகொண்டு ஒருத்தவங்க வீட்டில் போய் டேரா போடுவது நல்லதில்லை.பாவம் அவங்க சொல்ல முடியாமல் தடுமாறுவாங்க.[பணம் பற்றாகுறையை].வீட்டு நிலைமை யை புரிந்து கொண்டு இங்கிதமாவா நடக்குறாங்க???.இல்லை,நான் அது சாப்பிடமாட்டேன்,இது சாப்பிடமாட்டேன்,இந்த ப்ராண்ட் தான் யூஸ் பண்ணுவேன் என்று அலட்டுவாங்க. சில வீடுகளில் பெண்களும் வேலைக்கு செல்பவராக இருப்பாங்க,எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் போய் அவங்க வீட்டில் இரங்குறது,கேட்டா ஸ்ர்ப்ரைஸ் குடுக்குறாங்களாமாம்??அந்த நேரத்தில் பெண்கள் படும்பாடு ,வேலைக்கும் போய்கிட்டு,வந்தவங்களையும் கவனிச்சி,இது சந்தோஷ்மா இருக்குமா? இல்லை சங்கடமா இருக்குமா? சொல்லுங்க நடுவரே///

குழந்தைகளுக்கு பரீட்சை,கணவருக்கோ,இல்ல மனைவிக்கோ ஆபிஸ் ஆடிட் டைம் என்று வச்சுக்கோங்க,அந்த நேரங்களில் சும்மாவே டென்ஷனா இருக்கும்,அந்த நேரத்தில் விருந்தினர் வருகை சங்கடத்தையே ஏற்படுத்தும்.உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போது இதே நிலை தான்.சிலர் வந்திட்டு போனாலே வீட்டில் புதுசா ஏதாவது பிரச்சனையை கிளப்பி விட்ட்டுட்டு போயிடுவாங்க,அப்புறம் இருக்கிறவங்க மண்டையை உடைச்சுக்க வேண்டியதுதான்.

நான் எப்பொழுதும் சந்தோஷம் கட்சி தான். என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நான் அரட்டைக்கு புதிது.

இன்று வேளையை இன்றை முடிப்பது

நடுவர் அவர்களே,
உங்கள் (மற்றும் கல்ப்ஸின்) தலைப்பு என்னையும் பட்டிக்கு வரவழைத்துவிட்டது.நான் எந்த கட்சி என்று இப்போது கணித்து இருப்பீர்கள்.வீட்டிற்கு வரும் நம் விருந்தாளிகளால்
நமக்கு சங்கடமே எனும் அணியில் தான் நானும் இருக்கிறேன்.

விருந்தும்,மருந்தும் மூன்று நாட்கள் என்று நம் பெரியவர்கள் சும்மா சொல்லல,நடுவர் அவர்களே.விருந்தினர்கள் வந்த முதல் நாள் நமக்கு இருக்கும் எனர்ஜியும்,விருந்தோம்பலும்,மகிழ்ச்சியும் முப்பதாவது நாள் இருப்பதில்லை. நமக்கும் குடும்பம்,குழந்தைகள் இருப்பதால் அவர்களையும் நாம் பார்க்க வேண்டும்.

அதனால் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் மேக்சிமம் 3 நாட்கள் இருப்பது தவறல்ல.அதற்கு மேல் இருந்தால் நம் இயல்பு வாழ்க்கை கொஞ்சம் தடுமாறும் என்பது என் கருத்து.

ஒரு பத்து நாட்களுக்கு மேல் தங்கும் விருந்தினர்கள் என்றால் கண்டிப்பாக உறவினர்களாகத்தான் இருப்பார்கள்.அந்த 10 நாட்களுமே நாங்கள் விருந்தினர்கள் என்ற முத்திரையுடன் தான் நடந்து கொள்வார்கள்.காய் நறுக்குவது,ஒன்று இரண்டு வேலை செய்வது,அட்லீஸ்ட் நம் பிள்ளைகளை பார்த்துக் கொண்டால் நமக்கும் ஒரு சந்தோஷம் வரும்.அவர்களை இன்னும் நல்லா கவனிக்கணும்னு தோணும்.
ஆனால் அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால்,ஏதோ ஹோட்டலில் வந்து தங்கி இருப்பது போலவும், நாம் வெறும் ரூம் சர்வீஸ் என்றும் நடந்து கொண்டால் அவர்களால் சங்கடம் தானே நடுவரே....இவ்வளவும் செய்தும் நம்மை பற்றி நம் காது படவே குறை கூறுவது எல்லாவற்றையும் விட கொடுமை...

நம் வீட்டுக்கு வரும் சில விருந்தினர்கள் விருந்துக்கு வந்தால் நாம் விருந்துக்கு சமைத்து வைத்து இருப்பதையும் சாப்பிட்டு விட்டு,காலையில் செய்தது இருக்கானு கேட்டு அதையும் காலி பண்ணிடுவாங்க.நமக்கு ஒன்றும் மிஞ்சாது. நாம் அவர்கள் வீட்டுக்கு போனால் கரண்டியில் இருக்கும் சாதம் கூட நம் தட்டில் விழாது.எல்லாம் நம்ம நேரம் நடுவர் அவர்களே.

மற்றவர்கள் வீட்டுக்கு விருந்தினர்களாக செல்பவர்கள் சில நல்ல பழக்கங்களை கடைப்பிடிப்பது நல்லது.குறிப்பாக தண்ணீர் குடிப்பது.அவர்களது வீட்டில் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.மற்றவர்கள் வீட்டில் தண்ணீர் தூக்கி தான் குடிக்க வேண்டும்.இதை நாம் அவர்களிடம் சொல்லவும் முடியாது.குழந்தைகள் என்றாலும் பரவாயில்லை,சொல்லி தரலாம்.ஆனால் பெரியவர்களே இப்படி செய்வது முகம் சுளிக்க வைக்கிறது.

இன்னொன்று கழிப்பறை மற்றும் குளியலறைகளை உபயோகித்த பின்னர் சுத்தமாக உள்ளதா என்று பார்த்து,பின் வெளியே வர வேண்டும்.அடுத்தவரும் உபயோகிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை.
அவர்கள் விருந்தினர்கள் என்பதால் என்ன செய்தாலும் பொருத்துக் கொள்ள வேண்டுமா என்ன?
நமக்கு என்று தனி பாத் ரூம் இருந்தால் பரவாயில்லை.ஒன்றே ஒன்று இருக்கும் போது, இது பெரும் தலைவலி நடுவர் அவர்களே...

ரீம் சொல்வதுபோல் எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி வரும் விருந்தினர்களால் மகிழ்ச்சியை விட அதிர்ச்சிதான் அதிகம்.அதிலும் காலம்,நேரம் கூட பார்க்காமல் வருபவர்களால்,அதிர்ச்சி மட்டும் அல்ல,சலிப்பும் வருகிறது.இப்படி சொல்வதற்கு சொந்த அனுபவமும் ஓர் காரணம் தான்.25 வருடங்களுக்குமுன்(கேபிள் கனெக்‌ஷனோ,சீரியலோ இல்லாத காலம்) நம் வீடுகளில் அனைவருமே இரவு 8.00 மணி முதல் 9.00 மணிக்குள் தூங்கிவிடுவோம்.எல்லாரும் சாப்பிட்டு முடித்து,பாத்திரம் எல்லாம் கழுவி,கவிழ்த்த பின்,எங்கள் நெருங்கிய உறவினர் மனைவி,குழந்தை,குட்டிகளுடன் இரவு 10 மணிக்கு வருவார்.இத்தனைக்கும் அவர்கள் ஊருக்கும்,எங்கள் ஊருக்கும் பேருந்து பயண தூரம் வெறும் முக்கால் மணி நேரம் தான்.யாரும் சாப்பிட்டும் இருக்க மாட்டார்கள்.அதன் பின்,அம்மா சமைத்து கொடுப்பார்கள்.இது ஒரு முறை,இரு முறை அல்ல.பல முறை நடந்தது.பின்னர் ஒருமுறை அப்பா,”வருவாதானால் முன்பே தெரியப்படுத்துங்கள்,இல்லையெனில் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்” என்று வெளிப்படையாக கூறிவிட்டார்.குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை.ஆனால் இம்மாதிரி அடுத்தவரின் கஷ்டத்தை புரிந்து கொள்ளாது இருக்கும் சுற்றமே தேவையில்லை.

சில சமயம் நண்பர்களும் இப்படி திடீர் விசிட் அடிப்பதுண்டு.பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீடு எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.வருபவர்கள் முன்கூட்டியே அறிவித்தால்,வீட்டை(பொம்மைகள்,விளையாட்டு சாமான்கள்,புத்தகம்)கொஞ்சம் ஒதுங்க வைக்க, நாமும் நைட்டியில் இருந்து சுடிதாருக்கு மாற,வருபவர்களுக்கு காபி,ஸ்னாக்ஸ் ரெடி பண்ண என்று கொஞ்சம் அவகாசம் கிடைக்கும்.இதை எல்லாம் கொஞ்சமும் யோசிக்காமல்,திடீரென்று வந்து தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவார்கள்.

அதனால்,விருந்தினரால் சங்கடமே என்று, இப்போதைய வாதத்தை நிறைவு செய்கிறேன். இன்னும் வாதங்களுடன் பிறகு வருகிறேன். நன்றி நடுவரே.

முதன் முதலாக ஒரு பட்டியை துவங்கிட்டு நான் சிரிச்சுட்டே இருக்கேன்... அத்தனை சுவையான பதிவுகள். அருமையான வாதங்கள். தொடருங்க.

---------------

கல்பனா... சும்மாவே நீங்க பேசினா நான் சிரிச்சுகிட்டெ இருப்பேன்... இப்போ இப்படிலாம் வேறு காமெடி பண்ணா...

//நான் பால் தான் குடிப்பேன். நைட்ல பச்ச பழம் தான் சாப்புடுவேன். முட்டை இல்லாம ஒருவாய் சாதம் கூட தொண்டைல இறங்காது. ப்ரூ காப்பி தான் குடிப்பேன் அப்படி இப்படின்னு...// - உண்மை உண்மை... நானும் பார்த்திருக்கேன்.

//விருந்தாளிங்க உங்க வீட்டுக்கு விருந்துக்கு வரும்போது பழைய சண்டை எல்லாம் மறந்துடுவாங்க. அவங்க வீட்டுக்கு நீங்க போகும் போது முன் ஜென்மத்துல நடந்த சண்டையெல்லாம் அவங்களுக்கு ஞாபகம் வரும். வங்கம் வச்சி தீட்டிடுவாங்கல்ல // - சத்திமான உண்மை.

//உங்களுக்கே சட்டில சாப்பாடு இருக்காது// - பாவம்ங்க உங்க அனுபவம் ரொம்ப வருத்தமா இருக்கு ;( அழாதீங்க கல்பனா. இந்தாங்க பாதாம் பால். குடிச்சுட்டு தெம்பாவே வாங்க.

--------------

லக்ஷ்மி... வாங்க பட்டியில் கலக்குங்க.

//எப்பொழுதும் தனியாகவே இருந்து விட்டு யாராவது நம்ம வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால் அது ரொம்பவே சந்தோசமாக இருக்கும்// - உண்மை தான் நானும் பல முறை இதுக்காகவே விருந்தாளி வர மாட்டாங்களான்னு நினைப்பேன்.

---------------

ரீம்... வாங்க வாங்க. கல்பனா'கு கை கொடுத்துட்டீங்க. அணிக்கு பலம் சேருது.

//பெரும்பாலானவங்க கடைபிடிக்க மறப்பதினால்// - அப்படின்னா 90% இப்படி தானா?? ரொம்ப கஷ்டம் தான்.

//இது சந்தோஷ்மா இருக்குமா? இல்லை சங்கடமா இருக்குமா? சொல்லுங்க நடுவரே// - நான் வேற சொல்லனுமா??? நிச்சயம் சங்கடம் தான்.

--------------

நித்யா... புதுசா வந்திருக்கீங்க. வருக வருக. அரட்டை இங்க கூடாது, எல்லாரும் போல நீங்களும் "சந்தோஷம்" அணிக்கு வாதத்தோடு வாங்க.

--------------

ஹர்ஷா... வாங்க... நீங்க வந்ததில் ரொம்ப மகிழ்ச்சி. அப்படி ஒரு தலைப்பை தந்த கல்பனா'கு நன்றிகள். //வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் மேக்சிமம் 3 நாட்கள் இருப்பது தவறல்ல// - 3 நாள் பிரெச்சனை இல்லைன்றீங்களா??? ;)

//நாங்கள் விருந்தினர்கள் என்ற முத்திரையுடன் தான் நடந்து கொள்வார்கள்.காய் நறுக்குவது,ஒன்று இரண்டு வேலை செய்வது// - எதையும் செய்ய மாட்டாங்களே.

//நாம் வெறும் ரூம் சர்வீஸ் // - கல்பனா'கு அடுத்த ஆள்... சிரிப்பு காட்ட.

//நாம் அவர்கள் வீட்டுக்கு போனால் கரண்டியில் இருக்கும் சாதம் கூட நம் தட்டில் விழாது.எல்லாம் நம்ம நேரம் நடுவர் அவர்களே// - கரக்டு கரக்டு... ஆல் பேட் டைம்ஸ்.

//இன்னொன்று கழிப்பறை மற்றும் குளியலறைகளை உபயோகித்த பின்னர் சுத்தமாக உள்ளதா என்று பார்த்து,பின் வெளியே வர வேண்டும்.அடுத்தவரும் உபயோகிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை// - ரொம்ப சரி... எங்க வீட்டிலும் வரும் பொதுவான குற்றச்சாட்டு. எதிர் அணி என்ன சொல்றாங்க பார்ப்போம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்