பட்டிமன்றம் - 37 : விருந்தாளிகளால் சந்தோஷமா? சங்கடமா?

பல தலைப்புகளை பார்த்து எதை தேர்வு செய்ய எல்லாமே நல்லா இருக்கேன்னு இப்பவே குழம்பி போய் கடைசியா சரொ நம்ம காமெடி தலைப்பையே தேர்வு செய்வோம், அப்படியாவது காணாம போனவங்க வராங்களா பார்ப்போம்'னு கல்பனா'வின் தலைப்பையே தேர்வு செய்துட்டு வந்திருக்கேன்.

இதோ உங்களுக்கான இந்த வார தலைப்பு:

வீட்டிற்கு வரும் நம் விருந்தாளிகளால் நமக்கு சந்தோஷமா? சங்கடமா?

விருந்தாளிகள் லிஸ்ட்டில் யாரெல்லாம் இருக்காங்கன்னு ஒரு குழப்பம் வருமே... எல்லாரும் தான். அதவாது உங்க கணவர், குழந்தைகள் தவிற மற்ற அனைவரையுமே கருத்தில் கொண்டு பேச வேண்டும்.

மற்ற பட்டிகளுக்கான விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். ஜூட்... சண்டையை ஆரம்பிங்க, நான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வந்து தலையை காட்டறேன்.

//"கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் இது கௌரவ பிரசாதம் இதுவே எனக்கு போதும்" என்கின்ற பாட்டுத்தான் எனக்கு ஞாபகம் வருகின்றது. நம் இந்திய கலாச்சாரதில் விருந்தோம்மலும் ஒன்று! அது கசப்பென்று யாராவது சொல்ல முடியுமா?//

நடுவரே, கல்யாண சமையல் சாதம் கூட ஒருநாள் நல்லாருக்கும், ரெண்டு நாள் நல்லாருக்கும் தொடர்ந்து ஒரு மாசம் சாப்பிட முடியுமா? இல்லை அப்படி ஒரு விருந்தை தொடர்ந்து போட முடியுமா? அழிஞ்சிட மாட்டாங்க விருந்து தர்றவங்க. இப்படி போட்டா அவங்க வம்சமே திருவோடு தூக்க வேண்டியது தான். தவிர, விருந்து ஒருநாள் சாப்டா பரவாயில்லை, தொடர்ந்து சாப்டா வயிறு என்னதுக்கு ஆகும்? நினைச்சு பாருங்க.

//அவர்கள் எதை வாங்கி வந்தால் நமக்கென்ன! விருந்தாளிகள் வந்தால் நாம் அவர்களை நல்ல முறையில் கவனித்தால் அவர்கள் ஏன் நம்மை புறம் சொல்ல போறாங்க! பாவம் எதிரணி தோழி ரொம்ப அனுபவம் பட்டிருப்பார்கள் போல.//

எதிரணி தோழியே, நாங்கள் அவர்களை எதுவும் வாங்கி வரச் சொல்லவில்லை. நாம் அவர்களுக்காக செலவழித்ததில் 10ல் ஒரு பங்கு கூட அவர்கள் வாங்கி வந்தது இருக்காது. இப்போது அதுவல்ல பிரச்சனை. வந்த இடத்தில் நம்மிடம் இனிக்க இனிக்க பேசி, ருசிக்க ருசிக்க உண்டு,திளைக்க, திளைக்க ஊர் சுற்றி அதிலேயே எதாவது ஒரு குற்றம் குறை கண்டு பிடித்து சொல்லி விட்டு செல்வார்கள். அது தான் ஏன் என்கிறேன்.

//மாதத்தில் ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறை நம் உறவுகள் நண்பர்களை கூப்பிட்டு அவர்களுக்கு பிடிச்ச உணவுகளை சமைத்து அவர்களுக்கு பரிமாறி அவர்களோடு பல விஷயங்களை பகிர்ந்துகொண்டு விளையாடி ஐயோ அந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை//

நடுவரே, மாதம் ஒருமுறையோ, வருடம் ஒருமுறையோ வந்தால் ஆனந்தம் தான். வாரா வாரம் வந்தால் எப்படி இருக்கும்? அப்பவும் ஆனந்தம் தான் வருபவர்களுக்கு. நமக்கு??

//தனியாக இருந்தால் வேலைகள் செய்வது கொஞ்சமாவது கஷ்டமா இருக்கு ஆனால் இதுவே கூட்டு குடும்பமாக இருந்தால் வேலைகளும் குறைவு அரட்டை சந்தோசமோ அதிகம். அதை அனுபவித்ததால் சொல்கிறேன்//

எதிரணி தோழியே, அனைவருக்கும் உம்மை போன்ற கூட்டுக்குடும்பம் மற்றும் சந்தோஷம் தரும் விருந்தாளிகள் வாய்ப்பதில்லையே :( உமது சந்தோஷம் இதே போல நீடிக்கட்டும்.

//விருதாளிகள் நம்மை ஏன் கவனிக்க வேண்டும் அவர்களை கவனிக்க வேண்டியதுதானே நம் வேலை. எதற்கு அவர்கள் வருகிறார்கள் நம் வீட்டில் நன்றாக உபசரிப்பார்கள் என்று தான் வருகிறார்கள்//

நடுவர் அவர்களே, வரும் விருந்தினர்கள் நம்மை கவனிக்க வேண்டும், உபசரிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. உணவு உண்ணும் போது அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அந்த உணவு போதுமா? போதாதா என்று கூட எண்ணுவதில்லை. நான் அதைத்தான் சொல்கிறேன். விருந்தாளிகள் வந்தாலே தினப்படி வேலையை விட 3 மடங்கு வேலை கூடி விடும். இதில் உண்ட தட்டை கூட நகர்த்தாத விருந்தாளியாக போய்விட்டால் சுத்தம். இப்படி இருக்கும் சூழ்நிலையில், விருந்தாளிகளுக்கென்று ஒரு சமையல், நமக்கென்று இன்னொரு சமையல் என்று பண்ணிக் கொண்டிருக்க முடியுமா? இது நமக்கு சந்தோஷத்தையா தரும்? அட, அவங்க வேலை கூட செய்ய தேவையில்ல. வேலை செய்ய வர்ற மாதிரி ஒரு பில்டப்பாவது தரலாமில்லையோ? அது கூட இல்லைனா எப்படி ஒரு இன்ட்ரெஸ்ட் வரும் அவங்களை கவனிக்க?

இந்த விருந்தாளிகளில் பெருமளவு தாளித்து போவது பெண்கள் தான். எப்படி என்றால் சரியான சாப்பாடு இருக்காது. தூங்க தலையணை, பாய் இருக்காது. இவங்களுக்கு தான் இப்படின்னா குடும்பத்தலைவருக்கும் அதே கதி தான். விதவித உணவுகள் சமைச்சிருப்பாங்க. ஆனா அவருக்கு கிடைப்பதென்னவோ ரசம் சோறு தான். சம்பாதிக்கற மனசு எத்தனை எரியும் பாருங்க?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இன்னும் சிலபேர் இருக்காங்க,நவீன நாரதர்கள்,விருந்தாளிகளா வந்து வீட்டில் கலகம் மூட்டி விட்டுட்டு போவாங்க.சில சமயங்களில் இங்கிதமில்லாமல் பீரோவை குடைவது,இங்க என்ன் வைச்சிருக்க,அங்க என்ன வச்சிருக்க என்று எல்லா இடங்களையும்,நோட்டம் விடுவது.குழந்தை இல்லை என்ற நிலையில் அந்த பெண் இருந்தால் அவ்வளவுதான் ஏன் ?எதுக்கு? என்று ஆயிரம் கேள்வி கேட்டு படுத்தி எடுத்துருவாங்க.மாமியார்.மருமகள் ஒற்றுமையா இருந்தா பிடிக்காது.ரெண்டு பேர்கிட்டயும் மாத்திமாத்தி போட்டு குடுத்து வீட்டை போர்களமாக்கிருவாங்க.

விருந்தினர்கள் வருவதினால் சந்தோஷமே, என்று வாதாட வந்துள்ளேன் நடுவரே.
///அதே சமயம்,விருந்தும்,மருந்தும் மூணு நாள் தான் என்று பெரியவங்க சொல்லி வச்சிருக்காங்க ஏன்??அதுக்கு மேல் ஒரு வீட்டில் தங்ககூடாது என்பத்றகாக தான்.///
எதிரணியினர் எந்த காலத்தில் இருக்காங்கனு தெரியல யாருங்க இப்பலாம் வந்து 10, 12 என்று தங்கி டேரா போடுறாங்க, அவங்கவங்களுக்கு வேலைகள், தொழில் என்று ஏகப்பட்ட commitment டோட தான் வாராங்க. அதுவும் நம்ம எல்லாரியும் பார்த்துட்டு போகலாமேனு வராங்க அவங்கள போய் சங்கடமா நினைத்தா எப்படிங்க. நம்ம தமிழ்நாட்டு கலாச்சாரமே என்ன ஆவது? விருந்தினர்கள் நம்ம வீட்டுக்கும் வந்து போனால் தான் நம்ம பிள்ளைகளுக்கு இவங்களாம் நம்ம சொந்த பந்தங்கள்னு ஒரு அறிமுகம் கிடைக்கும். பணம் காசு சம்பாதிக்கறதுலம் இப்போ ஈஸியா போச்சுங்க நான்கு மக்களை சம்பாதிக்கறது தான் பெரிய விஷயமா இருக்கு இந்த அவசர யுகத்தில்.
///விருந்தாளிகள் வருகை வசதியான குடும்பத்தில் நிகழ்ந்தால் பரவாயில்லை அன்றாட வயிற்று பிழைப்புக்கு தகிடதத்தும் போடும் அடிமட்ட குடும்பத்திலோ, அல்லது மாத பட்ஜெட்டில் குடும்பத்தை ஓட்டும் மிடில் கிளாஸ் மாதவன் குடும்பத்திலோ நிகழ்ந்தால் எப்படி இருக்கும். நான் விருந்தாளிகளே கூடாது என்று சொல்ல மாட்டேன். அடிக்கடி வரும் அழையா விருந்தாளிகளை சொல்கிறேன்///
நடுத்தரமான குடும்பத்தில் வாழ்பவர்களுக்கு விருந்தாளியாக வர போவது ஒன்னு பெரிய கோடீஸ்வரர்கள் இல்லையே அவர்களும் அந்த ஒரு நடுத்தரமான வாழ்க்கை வாழ்பவர்களாகவோ அல்லது அவர்களை விட வசதியில் சற்று உயர்ந்தவர்களாக தான் வர போகிறார்கள் ஏன் அவர்களுக்கு தெரியாத அந்த வீட்டின் சூழ்நிலை அல்லது அவர்கள் தான் அந்த சூழ்நிலையில் இருந்திருக்க மாட்டார்களா?
விருந்தாளியாக வருபவர்கள் எல்லாருமே குறை சொல்லிவிட்டு செல்லபவர்களும், நல்லா சாப்பிட்டுவிட்டு செல்பவர்களும் மட்டுமே கிடையாது. உங்கள் கண்ணோட்டத்தில் அப்படி பார்த்தால் அப்படி தான் தெரிவார்கள்.
நமக்குள் இருக்கும் உறவை புதுப்பித்து விட்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே உறவினர்கள் நம்மளை தேடி வராங்க. நாமளும் அதுக்கு தானே போறோம்.
நாம நம்ம பிள்ளைகளுக்கு கற்று தருவது இதுதானா? இப்ப இருக்கும் பிள்ளைகள் எப்ப பார்த்தாலும் படிப்பு, extra curricular அது இதுனு ஒரு ஓட்டத்திலேயே தான் இருக்காங்க. இப்படி உறவினர்கள் நாலு பேர் வரும் போது அவர்களுடைய பிள்ளைகளுடன் விளையாடி சாப்பிட்டு ஒன்றாக இருந்தால அவர்களுக்கு ஒரு ரிலாக்சேஷம் தானே. வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் அப்ப்படி தானே எப்ப பார்த்தாலும் சமையல் செய்து வீட்டை சுத்தம் செய்து துணிகளை ஒழுங்குபடுத்தி இப்படியே வருடத்தில் 365 நாடகளும் போச்சுனா, மெண்டல் டிப்ரஷன் தான் ஆவாங்க. உறவினர்கள் வந்தால் வெளியில் செல்ல கோவிலுக்கு போக இப்படி ஒரு மாற்றம் ஏற்படும்.

நடுவரே,

//ஒரு இல்ல திருமணத்திற்கு போனால் கூட.. பெரியப்பா வீடுனா போலாம்.. அத்தை கொஞ்சம் முசுடு கணக்கு பாப்பாங்க.. அங்க வேண்டாம்.. அந்த சித்திக் கூட நைனைனு பேசி குடும்பத்துல பிரச்சனை கொண்டு வந்திடுவாங்க.. அதனால பெரியப்பா வீடு தான் சரி.. இல்லைனா ஹோட்டல்.. என நாம் நினைக்கிறோமா இல்லையா.. //

விருந்தினர் வந்து விட்டால் அந்த வீட்டின் குடும்பத்தலைவிதான் பாவம்.விருந்தினர்க்கு வேளா வேளைக்கு உணவு தயாரிப்பது,வீட்டு வேலைகளை செய்வது,வந்தவர்கள் தங்குவதற்கு வசதி செய்து தருவது,தம் கணவர் மற்றும் பிள்ளைகளை கவனிப்பது என்று பெண்கள் தான் மூச்சு விட கூட நேரம் இல்லாமல் சிரப்படுகிறோம்.(சில கணவர்கள் விதி விலக்கு.)
பெரியம்மாவுக்கு தான் சிரமம்.பெரியப்பாவுக்கு இல்லை.அத்தை,சித்தி தான் ஏதாவது சொல்வார்கள்.மாமாவுக்கும்,சித்தப்பாவுக்கும் ஒன்றும் பிரச்சனை இல்லை.

//எதிரணியினர் எந்த காலத்தில் இருக்காங்கனு தெரியல யாருங்க இப்பலாம் வந்து 10, 12 என்று தங்கி டேரா போடுறாங்க,
அவங்கவங்களுக்கு வேலைகள், தொழில் என்று ஏகப்பட்ட commitment டோட தான் வாராங்க.//

நடுவரே,
நம் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் ”ஏகப்பட்ட commitment டோட தான் வாராங்க”னு எதிரணி தோழியே ஒத்துக்கிட்டாங்க.அவங்க வேலைகள்,தொழில் விஷயமா வந்தால்,சாப்பாடு மற்றும் தங்குவதற்கான ஹோட்டல் செலவைக் குறைக்க உறவினர்களுக்கு சிரமம் தருவது நியாயமா,நடுவர் அவர்களே?

இப்போ எல்லாம் வெகேஷனுக்கே உறவினர் வீடு தேடி செல்பவர்களும் உண்டு.அதிலும் பிள்ளைகளுக்கு பள்ளி விடுமுறை வந்து விட்டால் போதும்.குடும்பத்தோடு உறவினர் வீடுகளுக்கு சென்று மாதக்கணக்கில் டேரா போடுறவங்களும் இருக்காங்க.நடுவரே.அதிலும் சிலர் உறவினர்கள் வீடுகளில் பிள்ளைகளை விட்டு விட்டு சென்று விடுவர்.விடுமுறை என்றால் நம் பிள்ளைகளை சமாளிப்பதே பெரிய விஷயம்.இதில் உறவினர் பிள்ளைகளும் சேர்ந்து விட்டால் வீடே ரெண்டாயிடும்.அவர்களையும் ஒன்றும் சொல்லவும் முடியாது.சில பிள்ளைகள் அம்மா வேணும்,அப்பா வேணும் என்று அழுது ஊரையே கூட்டி விடும்.சமாதானப் படுத்துவதற்குள் போதும்,போதும்னு ஆயிடும்.

// இந்த விருந்தாளிகளில் பெருமளவு தாளித்து போவது பெண்கள் தான். எப்படி என்றால் சரியான சாப்பாடு இருக்காது. தூங்க தலையணை, பாய் இருக்காது. //

தோழி கல்பனா சொல்வது முற்றிலும் உண்மை.கிச்சனுக்கு அடுத்தபடியாக நமக்கென இருக்கும் பெட் ரூமை கூட சில சமயம் விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளது நடுவரே.

//வந்தவங்கள கவனிச்சு, கவனிச்சே இப்ப கவனிப்பாரற்று இருக்கறவங்க நாங்க// .தோழி கல்பனா ஒரே வரியில் நச்னு சொல்லிட்டாங்க.

//நமக்குள் இருக்கும் உறவை புதுப்பித்து விட்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே உறவினர்கள் நம்மளை தேடி வராங்க//

நாம் வீட்டில் புதிதாக என்னென்ன வாங்கி வைத்து இருக்கிறோம் என்று பார்க்கவே வருபவர்களும் இருக்கிறார்கள், நடுவர் அவர்களே!

நடுவர் அவர்களுக்கு ,விருந்தாளி யாரும் வீட்டுக்கு வரலாட்டி போர் அடிக்காத, அவங்களாம் வந்தால் தான கணவர்க்கும் நமக்கும் சண்டை வரும் அப்பரம் சமாதானம் ஆகும், அப்பரம் ஜாலியா இருக்கும்...

நடுவரே,

//வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் அப்படி தானே எப்ப பார்த்தாலும் சமையல் செய்து வீட்டை சுத்தம் செய்து துணிகளை ஒழுங்குபடுத்தி இப்படியே வருடத்தில் 365 நாடகளும் போச்சுனா,மெண்டல் டிப்ரஷன் தான் ஆவாங்க. உறவினர்கள் வந்தால் வெளியில் செல்ல கோவிலுக்கு போக இப்படி ஒரு மாற்றம் ஏற்படும்.//

நான் கேள்விப்பட்ட கதை ஒன்று சொல்கிறேன்.ஒரு காலத்தில் ராஜா ஒருவர் இருந்தாராம்.மக்களிடம் ஏகப்பட்ட வரி வசூலித்து,கஜானாவை மட்டும் நிரப்பிக் கொண்டாராம்.மக்களுக்கு என்று எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லையாம்.இதனால் கடுப்பான மக்கள், ராஜாவை மனத்துக்குள் திட்டி கொண்டார்களாம்.இருந்தாலும் ஏதேதோ தொழில் செய்து,வரியும் கட்டி எப்படியோ பிழைத்துக் கொண்டு இருந்தார்களாம். நாளடைவில் மக்களின் மனதில் இருந்த ராஜாவைப்பற்றிய எண்ணம், பேச்சாகி ராஜாவின் காதிலும் விழுந்தது.

இது இப்படியே இருக்க,ராஜாவும் வயோதிகம் அடைந்தார்.வயசானா தானே நிறையப்பேருக்கு ஞானம் வரும்.அதுபோல,ராஜாவும் தன் மகனை அழைத்து,”மகனே, நான் நிறைய தப்பு பண்ணிட்டேன்,மக்களின் பணத்தை எல்லாம் கஜானாவிலே போட்டு நமக்கு மட்டும் செலவு செய்துட்டேன். நல்ல பெயர் ஒன்றும் சம்பாதிக்கல.என் காது படவே மக்கள் என்னை திட்றாங்க.
நான் இறந்தபின் மக்கள் என்னை போற்ற வேண்டும்னு ஆசையா இருக்கு.ஆனால் இதுக்கு மேல என்னால் எந்த நல்ல காரியமும் செய்ய முடியாது.என் காலம் முடியப் போகுது.ஆனாலும் நான் மறைந்த பின்னும்
நம் குடிமக்கள் என்னை போற்றணும்,வாழ்த்தணும் என்பது தான் என் கடைசி ஆசை.அதை நிறைவேற்றிடு மகனே!”என்று கேட்டுக்கொண்டாராம்.

ராஜாவின் மகன் புத்திசாலி.என்ன செய்தான் தெரியுமா?அந்த நாட்டு மக்களின் சொத்தை எல்லாம் அரசுடைமையாக்கிக் கொண்டான்.வழக்கம் போல மக்கள் வரியும் கட்ட வேண்டும் என்று ஆணையிட்டான்.இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மக்கள் ”நம்ம ராஜாவே எவ்வளவோ பரவாயில்லை.அவரின் ஆட்சியே மேல்.அவரது மகன் ரொம்ப மோசம்.”என்றனராம்.இதை கேட்ட ராஜாவும் சந்தோஷமாக போய் சேர்ந்தாராம்.

இந்த கதையில் வருவது போல,வீட்டில் இருக்கும் பெண்களுக்கு,சமைத்து முடித்து,வீட்டு வேலைகளையும் செய்து,பிள்ளைகளை கவனிப்பது,கணவரை கவனிப்பது என்று ஒரு நாளில் தனக்கென கொஞ்ச நேரம் தான் ஓய்வு கிடைக்கும்.அதுவும் வேலைக்கு செல்லும் பெண்கள் என்றால் இன்னும் சிரமம்தான்.இதற்கே நாம் அலுத்துக்கொள்வோம்.இதில் உறவினர்கள் வந்துவிட்டால் கிடைக்கும் கொஞ்சம் ஓய்வுகூட போய்விடும்.எப்போ டா இவங்க கிளம்புவாங்க,நாம் பழைய படி கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என்று எண்ணத் தோன்றும்.

நடுவர் அவர்களே நான் பட்டி மன்றத்தில் வாதிடுவது இதுவே முதல் தடவை சிறு தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்..

எதிரணியினர் பல வாதங்களோடு வந்துள்ளனர்.. அதற்கு பதில் தரவே நானும் வந்துள்ளேன்..

//மாதம் ஒருமுறையோ, வருடம் ஒருமுறையோ வந்தால் ஆனந்தம் தான். வாரா வாரம் வந்தால் எப்படி இருக்கும்? அப்பவும் ஆனந்தம் தான் வருபவர்களுக்கு. //

வாரா வாரம் என்று எதிர் அணியினர் கூறுகிறார். இப்போது உள்ள நிலையில் வாரா வாரம் ஒரு வீட்டிற்கு விருந்தாளியாக செல்ல யாருக்கு நேரம் இருக்கிறது? அவங்கவங்களுக்கு வேலைகள், தொழில் என்று ஏகப்பட்ட commitment இருக்கு. குழந்தைகள்,கணவரை கவனிக்கனும், வேலைக்கு போகணும்.. வீட்டு வேலைய பார்க்கவே நேரம் இல்ல.இதுல ஒரு வீட்டுக்கு வாரா வாரம் எப்படி போக முடியும்..

///விருந்தாளிகள் வந்தாலே தினப்படி வேலையை விட 3 மடங்கு வேலை கூடி விடும்.///

நடுவர் அவர்களே, அக்காலத்தில் கிரைண்டர்,மிக்சி,பிரிட்ஜ் ,ஒவன் முக்கியமாக கேஸ்ஸ்டவ் இப்படி எதுவுமில்லாமல் விறகு அடுப்பு வைத்து சமைத்து உரலில் மாவு ஆட்டி,அம்மியில் அரைத்து விருந்தினர்களை உபசரித்த காலமும் உண்டு.
இப்போது அனைத்து எலக்ட்ரானிக் சாமான்களை வைத்துக் கொண்டு 3 மடங்கு வேலை கூடி விடும் என்றால் என்ன நியாயம்???

///அட, அவங்க வேலை கூட செய்ய தேவையில்ல. வேலை செய்ய வர்ற மாதிரி ஒரு பில்டப்பாவது தரலாமில்லையோ?///

விருந்தினர்கள் வேலை செய்ய வேண்டும் என்று ஏன் எதிர் பார்க்க வேண்டும். எதிர் பார்ப்பதாலே சந்தோஷத்தை இழக்கின்றனர்.

///விதவித உணவுகள் சமைச்சிருப்பாங்க. ஆனா அவருக்கு கிடைப்பதென்னவோ ரசம் சோறு தான். சம்பாதிக்கற மனசு எத்தனை எரியும் பாருங்க?///

விருந்தினர்கள் வருகிறார்கள் என்றால் எப்போதும் சமைப்பதை விட சற்று அதிகமாக தான் சமைப்போம்.. அப்படி இருக்க ரசம் சோறு தான் மிச்சும் என்றால் என்ன அர்த்தம்?? விருந்தாளிகள் அவ்வளவு கல்நெஞ்சக்காரர்களாகவ இருக்கிறர்கள்??

///சிலர் உவினர்கள் வீடுகளில் பிள்ளைகளை விட்டு விட்டு சென்று விடுவர்.விடுமுறை என்றால் நம் பிள்ளைகளை சமாளிப்பதே பெரிய விஷயம்.இதில் உறவினர் பிள்ளைகளும் சேர்ந்து விட்டால் வீடே ரெண்டாயிடும்///

விடுமுறை என்றாலே குழந்தைகள் மாமா வீடு,சித்தி,பாட்டி வீட்டிற்கு எல்லாம் போக வேண்டும் என்று செல்ல ஆரம்பித்து விடுவார்கள்.. அதிலும் அவங்க போகும் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவங்க கூட சேர்ந்து விளையாடனும்னு பல கனவுகளோடு இருப்பாங்க..குழந்தைகள் என்றால் சின்ன சண்டைகள் போட தான் செய்வாங்க.. அவங்க அடுத்த நிமிஷமே அதை மறந்திடுவாங்க..இப்படி இருக்கும் போது நம் பிள்ளைகளை சமாளிப்பதே பெரிய விஷயம்.இதில் உறவினர் பிள்ளைகளும் சேர்ந்து விட்டால் வீடே ரெண்டாயிடும் என்று கூறுகின்ரனர் எதிர் அணியினர்.. என்ன நியாயம்?? குழந்தைகளின் சந்தோஷத்திற்காக பொறுமையாக இருக்கலாமே...

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

//எதிரணியினர் எந்த காலத்தில் இருக்காங்கனு தெரியல யாருங்க இப்பலாம் வந்து 10, 12 என்று தங்கி டேரா போடுறாங்க, அவங்கவங்களுக்கு வேலைகள், தொழில் என்று ஏகப்பட்ட commitment டோட தான் வாராங்க//

நடுவரே, எதிரணி வாழ்ந்து கொண்டிருக்கும் சம காலத்தில் இதே நூற்றாண்டில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சொல்லுங்கள். வேலை, பிசினஸ், கமிட்மெண்ட்ஸ் எல்லாம் எல்லா பெண்களுக்கும் இருக்காது. வேலை வெட்டி இல்லாமல் யார் வீட்டுக்கு போய் யாரை டார்ச்சர் பண்ணலாம் என காத்துக் கொண்டிருக்கும் மக்களை சொல்கிறேன்.

//அதுவும் நம்ம எல்லாரியும் பார்த்துட்டு போகலாமேனு வராங்க அவங்கள போய் சங்கடமா நினைத்தா எப்படிங்க. நம்ம தமிழ்நாட்டு கலாச்சாரமே என்ன ஆவது?//

இப்படியும் செய்யலாமே. நம்மை பார்க்க அவர்கள் இங்குதான் வரவேண்டும் என்று இல்லை நம்மை கூட அவர்கள் வீட்டுக்கு அழைக்கலாமே. ஏன் அவ்வாறு செய்வதில்லை? வீணாக வாய் கொடுத்து வம்பில் மாட்ட விருப்பமில்லையா? இதுபோன்ற உபத்திரவமான விருந்தினர்கள் வராமல் இருப்பதால் தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கு பங்கம் வந்துவிடாது.

//விருந்தினர்கள் நம்ம வீட்டுக்கும் வந்து போனால் தான் நம்ம பிள்ளைகளுக்கு இவங்களாம் நம்ம சொந்த பந்தங்கள்னு ஒரு அறிமுகம் கிடைக்கும்//

நடுவரே, எதிரணிய சத்தம் போட்டு பேச வேணாம்னு சொல்லுங்க :) இப்ப இருக்க பசங்க நம்ம உறவுகள பத்தி நல்லாவே புரிஞ்சி வச்சுட்டு இருக்காங்க. அவங்க தெருமுனைல வர்றத பார்த்தவுடனே இவங்க நம்ம கிட்ட ஓடி வந்து "அம்மா, அம்மா வாடகை தராமயே நம்ம வீட்ல ரொம்ப நாள் தங்கிட்டு போன ஆன்டி வந்துட்டு இருக்காங்கம்மா" நியூஸ் தந்துட்டு ஓடி ஒளிஞ்சுடுவான். அதனால இப்ப இருக்குற எந்த விருந்தாளிகளையும் பசங்களுக்கும் பிடிக்கறதில்ல. இப்ப இருக்க பசங்களுக்கு எதையும் சொல்லித்தரவேண்டிய நிர்பந்தமும் கிடையாது. அனைத்தையும் அவர்களே அறிவார்கள்.

//பணம் காசு சம்பாதிக்கறதுலம் இப்போ ஈஸியா போச்சுங்க. பணம் காசு சம்பாதிக்கறதுலம் இப்போ ஈஸியா போச்சுங்க நான்கு மக்களை சம்பாதிக்கறது தான் பெரிய விஷயமா இருக்கு இந்த அவசர யுகத்தில்.//

உங்களிடம் பணம் இல்லையென்றால் எந்த விருந்தாளிகள் உங்கள் வீடு தேடி வரப்போகிறார்கள்? லூசா அவங்க? ;) உங்களோட சேர்ந்து பழைய சோறும், வெங்காயமும் சாப்பிட :) நல்ல சாப்பாடு சாப்ட்டு, காலாட்டி ரெஸ்ட் எடுத்துட்டு போக தானே இன்னோரு வீட்டுக்கு போறாங்க. அங்கேயும் போய் கஷ்டத்தை அனுபவிக்கனும்னு தலையெழுத்தா என்ன? அன்பு எதிரணி தோழியே, நான்கு மக்கள் என்ன நான்காயிரம் மக்கள் நம் அறுசுவையில் உள்ளார்கள். அதற்கு இதுபோன்ற விருந்தாளிகள் தான் வேண்டும் என்ற அவசியம் இல்லை.

//நடுத்தரமான குடும்பத்தில் வாழ்பவர்களுக்கு விருந்தாளியாக வர போவது ஒன்னு பெரிய கோடீஸ்வரர்கள் இல்லையே அவர்களும் அந்த ஒரு நடுத்தரமான வாழ்க்கை வாழ்பவர்களாகவோ அல்லது அவர்களை விட வசதியில் சற்று உயர்ந்தவர்களாக தான் வர போகிறார்கள் ஏன் அவர்களுக்கு தெரியாத அந்த வீட்டின் சூழ்நிலை அல்லது அவர்கள் தான் அந்த சூழ்நிலையில் இருந்திருக்க மாட்டார்களா?//

நடுவரே, நம்ம மாதிரி வீட்டுக்கு வர்றவங்க அம்பானியாவும், பில்கேட்ஸாவுமா இருப்பாங்க. எல்லாம் நம்மள மாதிரி மாசக்கடைசில மண்டைய உடைச்சிக்கிறவங்க தான். நானும் அவங்கள பத்தி தானே இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கேன். எதிரணி தோழி சவகாசமா உண்மைய சொல்றாங்க :) அவங்களுக்கு தான் எங்கே புரியுது நம்ம நிலைமை?

//விருந்தாளியாக வருபவர்கள் எல்லாருமே குறை சொல்லிவிட்டு செல்லபவர்களும், நல்லா சாப்பிட்டுவிட்டு செல்பவர்களும் மட்டுமே கிடையாது. உங்கள் கண்ணோட்டத்தில் அப்படி பார்த்தால் அப்படி தான் தெரிவார்கள்.//

நடுவரே, எங்க கண்ணோட்டம் எல்லாம் நல்லாவே இருக்கு. நாங்க என்ன கர்ணனையா கஞ்சப்பிரபுன்னு சொன்னோம். அப்படி சொன்னா கூட பரவாயில்லை, ஊருக்கெல்லாம் வள்ளலா இருக்க ஒருத்தரை பார்த்து இப்படி சொல்றாங்களேன்னு எங்க கண்ணோட்டத்தை குறை சொல்லலாம். நாங்க பார்த்த மனுஷாளை தானே சொல்கிறோம். நீங்கள் பார்த்த நல்ல விருந்தாளிகளை நீங்க சொல்றீங்க.நாங்க பார்த்த விருந்தாளிகளை நாங்க சொல்றோம். இதுல எங்களையே குற்றம் சொன்னா எப்படிங்க?

//நமக்குள் இருக்கும் உறவை புதுப்பித்து விட்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே உறவினர்கள் நம்மளை தேடி வராங்க. நாமளும் அதுக்கு தானே போறோம்.//

நடுவரே, இதைத்தான் தெளிய வச்சு அடிக்கறதுன்னு சொல்லுவாங்க. மாசத்துல மூணு வாரம் இங்கேயே தங்கியிருந்துட்டு ஒரே ஒரு வாரம் மட்டும் போனா போகட்டும்னு அவங்க வீட்டுக்கு போவாங்க. திரும்பவும் இவங்க அந்த ஒரு வாரத்துல கொஞ்சம் தெம்பாகியிருப்பாங்கல்லயோ, அதுக்கு தான் அந்த ஒரு வாரம் கேப். திரும்ப உறவை புதுப்பிக்க அடுத்த மாசத்துல முதல் தேதிக்கே வந்து நிப்பாங்க. இதுல ஒரு கொடுமை பல்லு தேய்க்கறது கூட இங்க வந்து தேய்ப்பாங்கன்னா பார்த்துக்கோங்களேன் :(

நடுவரே, எனக்கு இந்த விருந்தாளிங்கள பத்தி பேசி பேசி நாக்கும், தொண்டையும் வறண்டு போச்சு. நான் போய் லைட்டா, நல்லா ஸ்ட்ராங்கா நம்ம சுவா கைல போட்ட கும்பகோணம் டிகிரி காபி குடிச்சுட்டு வந்து தெம்பா பேசுறேன். அது வரைக்கும் பொறுத்தருள வேண்டும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

//வாரா வாரம் என்று எதிர் அணியினர் கூறுகிறார். இப்போது உள்ள நிலையில் வாரா வாரம் ஒரு வீட்டிற்கு விருந்தாளியாக செல்ல யாருக்கு நேரம் இருக்கிறது?//

எதிரணி தோழியே, வாரா வாரம் வருகை தரும் விருந்தினர்களில் எத்தனை பேரை உங்களுக்கு உதாரணம் காட்ட வேண்டும் சொல்லுங்கள். நாட்டில் அனைவரும் வேலை வாய்ப்போடு இருக்கிறார்கள் என்றால் ஏன் நம் நாடு இன்னும் ஏழை நாடாகவே உள்ளது? டிவி சீரியல்கள் யாரை நம்பி எடுக்கப்படுகின்றன?அதுவும் இப்படி அப்படியா வரும் சீரியல்? ஷிப்ட் போட்டு வருகிறது. விடிய விடிய சீரியல் மயம் தான். இவையெல்லாம் வீட்டில் உள்ள செங்கல்லும், சிமெண்டும், வீட்டில் உள்ள சாமான்களும் கண்டு களிக்கவா எடுக்கிறார்கள்? அல்லது பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் டிவி வைத்துள்ளார்களா?

//அக்காலத்தில் கிரைண்டர்,மிக்சி,பிரிட்ஜ் ,ஒவன் முக்கியமாக கேஸ்ஸ்டவ் இப்படி எதுவுமில்லாமல் விறகு அடுப்பு வைத்து சமைத்து உரலில் மாவு ஆட்டி,அம்மியில் அரைத்து விருந்தினர்களை உபசரித்த காலமும் உண்டு.
இப்போது அனைத்து எலக்ட்ரானிக் சாமான்களை வைத்துக் கொண்டு 3 மடங்கு வேலை கூடி விடும் என்றால் என்ன நியாயம்???//

என்னதான் எதிரணி தோழி பட்டியல் இடும் அனைத்து மின்சார உபகரணங்களும் இருந்தாலும் அவை என்ன ரோபோக்களா? தானாக வேலை செய்ய, நாம் தானே அவற்றை இயக்க வேண்டும். வந்திருக்கும் விருந்தாளியில் ஒருத்தருக்கு தேங்காய் ஆகாது. இன்னொருத்தருக்கு தக்காளி சேர்க்க கூடாது. மற்றும் ஒருத்தருக்கு பச்சை மிளகாய் ஒத்து வராது. அப்புறம் சாம்பார் இல்லாமல் டிபன் சாப்பிடவே உட்கார மாட்டாராம் ஒருத்தர். இப்படியிருக்க, வீடு தேடி வந்தவர்கள் விருப்பத்தை நிறைவேற்றாமல் இருக்க முடியுமா? செய்து தானே ஆக வேண்டும். ஒருத்தர் சூப்பரா அப்ரோச் பண்ணுவார், அண்ணி நீங்க சுடுற கோதுமை தோசை இருக்கு பாருங்க. அடா... அடா... என்ன டேஸ்ட்.. என்ன டேஸ்ட் அதென்ன அதே கோதுமை மாவுல தான் அம்மாவும் பண்றாங்க. நீங்க பண்ற டேஸ்ட் வரலயேன்னு ஒரு ஆலங்கட்டி மலையையே தலைல வைப்பார். அப்புறமென்ன தட்ட முடியுமா? கோதுமைய கரைக்க வேண்டியது தான். விருந்தாளிங்க வந்து போற வரைக்கு சமையல் கட்டே ஒரு மினி முனியாண்டி விலாஸ், கையேந்தி பவனா மாறி இருக்கும்.

விருந்தாளிங்க வந்தா என்ன வேலை கூடிட போகுதுன்னு எதிரணி தோழி சூப்பராத்தான் கேட்டாங்க. உங்களுக்கு நான் ஒண்ணு சொல்லிக்கறேங்க என்னதான் உலகம் நவீனமாகி போயிருந்தாலும், இன்னமும் ஒருசில வீடுகளில் வாஷிங்மெஷின்,ப்ரிட்ஜ் மற்றும் இன்ன பிற மின்சார உபகரணங்கள் வாங்காமலே தான் உள்ளார்கள். அவர்களை போன்றவர்கள் என்ன செய்வார்கள்?வந்திருக்கும் விருந்தாளி அவர் வீட்டில் வேலைக்காரர் வைத்திருப்பார். அந்த நினைப்பில் வந்த இடத்திலும் குளித்துவிட்டு துணியை துவைக்காமலே வந்து விடுவார். பிறகென்ன அந்த துணி குடும்பத்தலைவி தலையில் தான் விழும். இதெல்லாம் இருக்காது. ஒருக்காலும் நடக்காது என்று மட்டும் சொல்லாதீர்கள். என் கண்களால் பார்த்ததை தான் சொல்கிறேன்.

ஹைஜீனிக் எதிர்பார்க்கும் குடும்பமாக இருந்தால் விருந்தினர்கள் சென்ற பிறகு அவர்கள் பயன்படுத்திய தலையணை,பாய், துணிமணிகள், மெத்தை விரிப்புகள் போன்ற அனைத்தையும் துவைக்க வேண்டும். இது கூடுதல் வேலை இல்லையா? இதற்கெல்லாம் மோட்டார் போட்டு தண்ணி செலவழித்திருப்பீர்கள். அல்லது அடி பம்பில் அடித்து துணி துவைத்திருப்பீர்கள். உங்களுக்கு உடல்நலக்கோளாறு ஏற்படாதா? நான் பார்த்த பலர் விருந்தினர் வந்து சென்ற மறுநாளே படுக்கையில் விழுந்திருக்கிறார்கள். அப்படியென்றால் பார்த்துக் கொள்ளுங்கள் விருந்தினர்களின் மகிமையை.

//விருந்தினர்கள் வேலை செய்ய வேண்டும் என்று ஏன் எதிர் பார்க்க வேண்டும். எதிர் பார்ப்பதாலே சந்தோஷத்தை இழக்கின்றனர்//

எதிரணி தோழியே, உங்களுக்கு புரியும் விதத்திலேயே ஒன்று கேட்கிறேன். பதில் சொல்லுங்கள். நம் அறுசுவையில் பல தோழிகள் தங்களுக்கோ, குடும்பத்தினருக்கோ, குழந்தைகளுக்கோ உடல்நலக்குறைப்பாடு ஏற்பட்டால் நம் தோழிகளையே அணுகி ஆலோசனை கேட்கிறார்கள். மனக்கசப்பு என்றாலும் அதற்கு மருந்தை தேடியும், இங்கு தான் வருவார்கள். வாழ்க்கையில் பிரச்சனை என்றாலும் சகோதர, சகோதரிகள் போல எண்ணி நம்மிடம் கொட்டி, பின் நாம் தரும் அன்பான ஆறுதல் வார்த்தைகளி மனம் உருகி கரைந்து போகிறார்கள். முகம் தெரியாத நட்புக்கே இத்தனை மகிமை என்றால், முகம் தெரிந்த உறவு இப்படி இருந்தால் எப்படி இருக்கும்? அதை தான் நாங்கள் இவர்களிடம் எதிர்பார்க்கிறோம். விருந்து கொடுப்பவர், வாங்குபவர் இருவரும் சக மனிதர்கள் தான் அவர்களுக்கென்று கவலைகள், நோய்கள்,உடல் அலுப்பு போன்றவை இருக்கும். அவற்றை புரிந்து அவற்றிற்கு மருந்தளிக்கும் விதமாக பேசி நடக்கலாமில்லையா? ஒரு வேலையை ஒரு ஆள் செய்வதை விட இருவரோ, பலரோ சேர்ந்து செய்யும் போது நேர விரயம், உழைப்பு விரயம் அத்துணையும் சேமிக்கப்படுகிறது. எல்லாவற்றிக்கும் மேல் வந்திருக்கும் மனிதர்களிடம் நமக்கே ஒரு பாசம் உருவாகிவிடும். அப்புறம் நாம் அவர்களை வேலை செய்ய விடுவோமா என்ன? இதை.. இதை தான் எதிர்பார்க்கிறோம். கிடைக்கவில்லையே :(

//விருந்தினர்கள் வருகிறார்கள் என்றால் எப்போதும் சமைப்பதை விட சற்று அதிகமாக தான் சமைப்போம்.. அப்படி இருக்க ரசம் சோறு தான் மிச்சும் என்றால் என்ன அர்த்தம்?? விருந்தாளிகள் அவ்வளவு கல்நெஞ்சக்காரர்களாகவ இருக்கிறர்கள்??//

எவ்வளவு பெரிய ஹோட்டலின் கிராண்ட் செஃப் ஆக இருந்தாலும் ஆட்களுக்கு தகுந்தாற்போல கரெக்டாக உணவு சமைக்க முடியாது. மீந்து விட்டால் யார் சாப்பிடுவது? அசைவம் சமைத்திருந்து மீந்துவிட்டால் மறுநாள் அமாவாசையோ, கிருத்திகையோ கியூ கட்டி நிற்கும். அப்போது இந்த பொருட்கள் அத்துணையும் வேஸ்ட் தானே.நம் விருந்தினர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டில் வாரம் ஒரு நாள் தான் சாம்பார் வைப்பார்கள். அப்படிபட்டவர்கள் வந்த இடத்தில் சாம்பார் பார்த்து விட்டால் போதும். பக்கத்தில் பாவமாக இருக்கும் ரசத்தை திரும்பி கூட பார்க்காமல் அமோக ஆதரவை சாம்பாருக்கே வழங்குவார்கள். இதில் டெபாசிட் இழப்பது குடும்ப தலைவனும் - தலைவியும் தான். வந்திருக்கும் விருந்தாளிகளை கல்நெஞ்சக்காரர்கள் என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் பாத்திரத்தை அடையாளம் காண ஒவ்வொரு சொட்டு சாம்பார் வைத்திருப்பார்கள் :)

//.இதில் உறவினர் பிள்ளைகளும் சேர்ந்து விட்டால் வீடே ரெண்டாயிடும் என்று கூறுகின்ரனர் எதிர் அணியினர்.. என்ன நியாயம்?? குழந்தைகளின் சந்தோஷத்திற்காக பொறுமையாக இருக்கலாமே...//

நடுவர் அவர்களே, விருந்தினரின் குழந்தைகள் விளையாடினால் நாங்கள் ஏன் குறைபட்டுக் கொள்ளப் போகிறோம். நாம் ஆசை ஆசையாக பார்த்து பார்த்து வாங்கி வைத்த பொம்மைகளை விளையாடுகிறேன் பேர்வழி என்று ஒரு வழி ஆக்கி விட்டு தானே செல்வார்கள். அது மட்டுமா? தோட்டத்தில் ஆசையாக வளர்த்த ரோஜா செடி, கணவருக்கு பிடித்த கொய்யா, பெரிய பையனுக்கு பிடித்த பாகற்காய் என்று ரசனையோடு செடிகளை வளர்த்து வைத்திருப்பார்கள். இவற்றை நன்கு வளர்ந்த பிறகு பறித்திருந்தாலும் ஒன்றும் சொல்லப்போவதில்லை, பிஞ்சும், பூவுமாக பறித்து போட்டு செடிகளை குற்றுயிரும், குலையுயிருமாக விட்டு சென்றால் எப்படி இருக்கும்? இந்த அநியாயத்தை சம்பந்தப்பட்ட குழந்தையின் தான் மருந்துக்கேனும் தட்டி கேட்க மாட்டார். இவர்கள் வந்து சென்ற பிறகு அந்த வீடே யானை புகுந்து சென்ற மாதிரி இருக்கும். இதை சந்தோஷம் என்று பொறுத்து போக முடியுமா?நாமும் இதே போல அடுத்த வீட்டிற்கு சென்று மற்றவர்களை இம்சிப்பவர்களாக இருந்தால் இவை நமக்கு குறைகளாகவே தெரியாது. எல்லா விஷயத்திலும் பெர்ஃபெக்ட் எதிர்பார்ப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் கஷ்டமே.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்