பட்டிமன்றம் - 37 : விருந்தாளிகளால் சந்தோஷமா? சங்கடமா?

பல தலைப்புகளை பார்த்து எதை தேர்வு செய்ய எல்லாமே நல்லா இருக்கேன்னு இப்பவே குழம்பி போய் கடைசியா சரொ நம்ம காமெடி தலைப்பையே தேர்வு செய்வோம், அப்படியாவது காணாம போனவங்க வராங்களா பார்ப்போம்'னு கல்பனா'வின் தலைப்பையே தேர்வு செய்துட்டு வந்திருக்கேன்.

இதோ உங்களுக்கான இந்த வார தலைப்பு:

வீட்டிற்கு வரும் நம் விருந்தாளிகளால் நமக்கு சந்தோஷமா? சங்கடமா?

விருந்தாளிகள் லிஸ்ட்டில் யாரெல்லாம் இருக்காங்கன்னு ஒரு குழப்பம் வருமே... எல்லாரும் தான். அதவாது உங்க கணவர், குழந்தைகள் தவிற மற்ற அனைவரையுமே கருத்தில் கொண்டு பேச வேண்டும்.

மற்ற பட்டிகளுக்கான விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். ஜூட்... சண்டையை ஆரம்பிங்க, நான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வந்து தலையை காட்டறேன்.

தனிகுடும்பங்களா இருக்கவங்களுக்கு பரவாயில்லைங்க…

திருமணமாகிய நிறைய உடன்பிறப்புகள்,பெற்றோர்கள் இருக்கற கூட்டு

குடும்பங்களில் ஏற்கனவே..அந்த வீட்டு மொத்த செலவும் ஒரு பிள்ளையே

செய்வதா இருந்தால் அவங்க நிலைமை ரொம்ப பரிதாபங்க…

எல்லாரும் எப்பவாச்சும் வந்து தங்கற விருந்தாளிகளை சொன்னாங்க.

தினமும் வந்து சாப்பாடு,தேநீர் வேளைக்கு தவறாமல் ஆஜர் ஆகும் ரெகுலர்

விருந்தாளிகளை எந்த லிஸ்ட்ல சேர்க்கறது…….?...:-

ஒரு தோழி சொல்லுவாங்க அவங்க வீட்டில தினசரிக்கு 21/2 லிட்டர் பால்

வாங்கினா அதுல வீட்டில் இருக்கவங்களுக்கு ½ லிட்டர்தான்…மீதியுள்ள 2

லிட்டரும் தினசரி காலை,மாலை தவறாமல் வந்து ஆஜர் ஆகும்

விருந்தாளிகளுக்குதான்..அவங்க எண்ணிக்கை அதிகமானா அவங்களுக்கு

கிடைக்கும் 1/2 லிட்டர் பாலுக்கும் ஆப்புதான்..:-)

அதிகமா வாங்க வேண்டியதுதானேங்கறீங்களா...எவ்வளவு வாங்கினாலும்

இப்படி ஆகுதே...:-)

அங்க தினசரி சாப்பாடே கல்யாண சாப்பாடுமாதிரி எப்பவும் அந்த பெண்கள்

கிச்சனிலேயே கிடப்பாங்க…ஒரு நாளைக்கு 20 காபியாவது..போடணும்

விருந்தாளிகளுக்கு…சமையல் வேகமா போயிட்டு இருக்கப்ப நடுவில

அரட்டை அடிக்கும் ஆண்களிடமிருந்து 6 காபி,மூணு டீ,மூணு பால் இதுல

சர்க்கரை போடாம சில கப்,சர்க்கரை போட்டு சில கப்…அப்படின்னு..

அடுப்பில பாதியில இருக்க குழம்பையும்.கொதிக்கும் சோறையும் எடுத்து

வச்சுட்டு பாலை வைக்கணும்….

இதுக்கு நடுவில காபி டீயோடு எத்தனை ஸ்நாக்ஸ் கொடுக்கலாம் ன்னு

அவங்களுக்கு எண்ணிக்கைக்கு ஏத்த மாதிரி ப்ளேட்ஸ் ரெடி பண்ணனும்..

இதற்கு நடுவில் அழுகின்ற அந்த வீட்டு குழந்தைகளை

சமாதனப்படுத்தவோ,தூக்கவோ ஆள் இருக்காது.

இடுப்பில் தூக்கிகிட்டே அவள் அத்தனையும் செய்வாளாம்….

இன்னொருத்தோழி,அவள் நல்லா படிச்சவ என்னோட கல்லூரியில ஆசிரியையா

வேலை பார்த்தாள்… பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை கவனிக்க,சொல்லி

கொடுக்க நேரமின்றி ட்யூசனுக்கு அனுப்பறா

வீட்டில அப்படி என்ன வேலைங்கறீங்களா…அததான் நானும் அவகிட்ட கேட்டேன்.

நான் மேலேசொன்னமாதிரி தினசரி

விருந்தாளிகளையும்,தன் குடும்பத்துக்கும் மொத்தமா தான் மட்டுமே

சமைச்சு உபசரிக்கணும் இன்னபிற வேலைகளுடன்.. :-(

இது சங்கடமா?சந்தோசமா?

உடனே மனசாட்சி உள்ள எந்த விருந்தாளியும் அப்படி இருக்கமாட்டாங்க கால்

மேல கால் போட்டு உட்கார்ந்து வேடிக்கை பார்க்கமாட்டாங்கன்னு சொல்ல

வர்றீங்களா? நீங்க சொல்றது சரிதான்..கால் மேல் கால் போட்டு சுறுசுறுப்பா

நண்பர்கள்கிட்டயும் அவங்க உறவினர்கள் கிட்டயும் மணிகணக்கா பேசிட்டு

இருப்பாங்க..பேசறது தான் நம்ம கைபேசியாச்சே 

இதெல்லாம் மிகைப்படுத்தல் இல்லை..தோழியிடம் கேட்டு நான் நேரடியாக

அவர்கள் வீட்டில் கண்டது…

இப்படி நிறைய சங்கடங்கள் இருக்கே..சமையல் சந்தோஷமே …ஆனால் சரியான

பகிர்ந்து கொள்ளல் இல்லாமல் ஒருவரே அத்தனையும் செய்யும்போது அங்கே

சங்கடம்தானே…….நாசூக்காக கேட்டால்கூட சஞ்சலமும் சண்டையும்தான்..:(

விருந்தாளிகள் சுகம்தான்..ஆனால் குடும்ப உறுப்பினர்களுக்குள்ளேயே பேசுதல்,

பகிர்ந்துகொள்ளல் என்று எதுவும் /எதற்கும் நேரம் இன்றி விருந்தாளிகள்

கவனிப்பதே..அதுவும் எங்களணித்தோழி சொன்னதுபோல் ஹோட்டல் சர்வராக

எப்போதும் இருப்பது சங்கடம்தானே :-

எது சொன்னாலும் எதிரணி ரொம்ப அனுபவமான்னு கேட்கறாங்க..

சொல்வதற்கு சொந்த அனுபவமாய் இருக்கவேண்டிய அவசியமில்லை

தோழிகளிடம் கேட்ட ,பார்த்த அனுபவங்களாயும் இருக்கலாம்..

நாங்கள் வாதிடுவது எங்களை வைத்து மட்டுமல்ல ,..பெரும்பான்மையான

நடுத்தர வர்க்கத்தில் பல பெரிய குடும்பங்களில் நடக்கும் தினசரி சங்கடங்கள்

பற்றித்தான்

உடனே எதிரணி அந்த தோழிகளுக்கு சமாளிக்கும் சாமர்த்தியமில்லைன்னு

சொல்லாதீங்க...என்ன பண்றது விருந்தோம்பலை கற்று கொண்ட அளவுக்கு

விருந்தாளிகளுக்கு அவள் சங்கடப்படாமல் சகஜமாக பதிலடி கொடுத்து

அவங்களை சங்கடப்படுத்தும் சாமர்த்தியத்தை கத்துக்கல.....

இதுபோன்ற நிறைய "செல்லம்மாக்கள்" ந்டைமுறை வாழ்க்கையிலும்

இருக்கும்வரை விருந்தாளிகளால் சங்கடமே...சங்கடமே...!

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நானும் elu சொல்றத ஒத்துக்கறேன், கிராமத்தில் உள்ளவர்கள்னா ஓகே. சிட்டில இது மாதிரி சொந்தகாரங்க வந்தா நம்ம நிலைமை திண்டாட்டம் தான்,

தண்ணி பிரச்சநியில இருந்து flat பிரச்சனை வரை ஒரே கலக்கம் தான்

நானும் elu சொல்றத ஒத்துக்கறேன், கிராமத்தில் உள்ளவர்கள்னா ஓகே. சிட்டில இது மாதிரி சொந்தகாரங்க வந்தா நம்ம நிலைமை திண்டாட்டம் தான்,

தண்ணி பிரச்சநியில இருந்து flat பிரச்சனை வரை ஒரே கலக்கம் தான்

*******வீட்டில் லாலி லாலியாக ஒட்டடை தொங்கிட்டு இருக்கும்....அதுக்கெல்லாமே விருந்தினர் வந்தாத்தாங்க விமோசனமே:)*****

என் அன்பிற்கும், மரியாதைக்கும் பாத்திரமான எதிரணி தோழியே, நல்லா யோசிச்சு சொல்லுங்க இதெல்லாம் இந்த காலத்துல நடக்கறதா? நடந்தா? ஒரு 15 வருஷம் அல்லது 20 வருஷத்து கதையாக இருந்திருக்கும். அப்படியே நீங்கள் சொல்வது போல் இருந்தாலும் இது போன்ற பராமரிப்பு வேலைகள் அடிக்கடி வரும் விருந்தினர்களுக்கு பொறுந்துமா? ஏற்கனவே இல்லத்தலைவிக்கு விருந்தினர் வந்த பின்பு வேலை கிழி கிழி என்று கிழிந்து விடும். இதில் அவர்கள் வருவதற்கு முன்பு வேறு இப்படியெல்லாம் ஒரு பட்டுக்கம்பளமா? பார்த்து பார்த்து புளிச்சு போன விருந்தாளிங்களுக்காக ஒவ்வொருமுறையும் இப்படி செய்ய முடியுமா? அந்த குடும்ப அங்கத்தினர்கள் என்னத்திற்காவார்கள்? பாவம்...

*******அடுப்படி அலமாரில டேட் எக்ஸ்பைர் ஆனது, வண்டு வந்தது, உளுத்துப் போனது, இதெல்லாம் சுத்தம் பண்ணி, தூக்கிப் போட்டு,.....இவையெல்லாம் ஒரு வழியாக விடுதலை ஆவது, இதெல்லாம் விருந்தினர்கிட்ட நல்ல பேர் வாங்கணும்கற ஆர்வத்துல நடக்குதா, இல்லையா?****

போருக்கென்று பயன்படுத்தப்படாமல் இருக்கும் வாள் தான் துரு பிடித்து போகும், அது மாதிரி எங்க வீட்டு மளிகை வண்டு, புழு வைக்க சான்சே இல்லை. ஏன்னா, எங்களுக்கு தான் வாங்கின உடனே காலியாய்டுமே வர்றவங்க உபயத்துல. அதேபோல ப்ரிட்ஜ் எப்பவும் காலியாத்தான் இருக்கும். ஏன்னா, பண்ற சாப்பாடு தான் எங்களுக்கே பத்தாம போகுமே, இது எங்கிருந்து ப்ரிட்ஜ்க்கு தர்றது?

***** அவங்க செய்யற சாம்பார், உருளைக்கிழங்கு பொரியல், சுட்டுத் தர்ற முறுக்கு.....வெந்த மொச்சைக்காயை ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டி நடுவில் வச்சுகிட்டு எல்லோரும் சேர்ந்து, கதை பேசிகிட்டு சாப்பிடறது கூட ஒரு தனி ருசிங்க ********

எதிரணி தோழியே, இதெல்லாம் பழங்கதையாச்சே. இப்ப நடக்குற கதைய சொல்லுங்க. வர்ற கெஸ்ட் நம்ம வீட்ல ரெஸ்ட் எடுத்துட்டு போகனும்னு வர்றாங்க. அப்புறம் எங்கிருந்து அவங்க சமைச்ச சாம்பார், முறுக்கு, அதிரசத்த நாம சாப்பிடறது? ஒரு முடிவோட தானே வர்றாங்க :(

****எல்லோருமாக சேர்ந்து வெளியில் போய்ட்டு வர்றப்ப டயர்டாகத்தான் இருக்கும், வந்ததும் ஆளுக்கொரு வேலையாக,......காலையில் லேட்டாக எழுந்திருக்கிற சுகம் - இதெல்லாம் விருந்தினர்கள் வந்தால் கிடைக்கிற சந்தோஷங்கள் - நினைத்தாலே இனிக்குதே!!!******

என்னது ஆளுக்கொரு வேலையா? வெளிய போயிட்டு வந்து ஆளுக்கொரு மூலைல ஆளுக்கொரு தலைக்காணி போட்டு படுத்துடுவாங்க. நம்ம வீட்டம்மா வீட்ல இருக்க வேலையெல்லாம் முடிச்சுட்டு ஆளுக்கொரு பக்கம் உருண்டுட்டு இருக்கவங்கள கடப்பாரை போட்டு நகர்த்தாத குறையா எழுப்பி உக்கார வச்சு சாப்பாடு போட்டு, அந்த இடத்தை ஒழிச்சு, சுத்தம் பண்ணி மறுபடி பாத்திரம் கழுவி வச்சுட்டு பாதி ராத்திக்கு மேல படுத்து காலைல சீக்கிரம் எழுந்து வேலைய ஆரம்பிக்கனும்."அழுதாலும் பிள்ளை அவ தானே பெறனும்ங்கற மாதிரி" எத்தன மணிக்கு எந்திரிச்சாலும் எல்லா வேலையுல் அவ தலைல தானே விடியும். இதுல லேட்டா எந்திரிச்சா என்ன ஆகும்? இதுல வந்திருக்கற விருந்தாளிங்கள்ல ஒரு சிலருக்கு பல்லு தேய்ச்சுட்டாலோ, குளிச்சுட்டு வந்துட்டாலோ உடனே தட்டுல டிபன் இருக்கனும். இல்லாட்டி சமையல் ரூமுக்கும், ஹாலுக்கும் குட்டி போன பூனை மாதிரி அலைஞ்சுட்டு இருப்பாங்க. சரி போகட்டும், அந்த அலையற நேரத்துல ஒரு கை போட்டு ஒரு தேங்காய துருவி சட்னிய அரைப்போமேன்னு மட்டும் தோணவே தோணாது.இந்த மாதிரி ஆளுங்கள நினைச்சா தொண்டைக்குள்ள போன அல்வாதுண்டு கூட எட்டிக்காயா கசக்கத்தான் செய்யும். எங்கே இனிக்கறது?

*****உள்ளூரிலே பல வருடங்கள் இருந்தாலும் பக்கத்திலேயே இருக்கிற பொழுதுபோக்கு பூங்காவுக்குப் போகணும்னு தோணவே மாட்டேங்குதே,...அதற்கப்புறமும் அந்த இடத்தை பஸ்ஸில் கிராஸ் பண்றப்போ கூட அந்த இனிமையான நினைவுகள் மனசைத் தாலாட்டி, லேசாக்கிடுதே!!****

இவங்க பூங்காவுக்கு போகும்போதே ஒரு மெனு சொல்லிட்டு போய்டுவாங்களே அப்புறம் எங்கேயிருந்து நாம அவங்களோட பூங்காவுக்கு போறது?அந்த பூங்காவ கடக்கும் போதே, இங்கே வரும்போது தானே நம்ம வீட்ல இறால் தொக்கு,நண்டு வறுவல், மீன்வறுவல் பண்ண சொல்லிட்டு எல்லாரும் வந்து கும்மாளம் போட்டுட்டு போனாங்கன்னு தான் மனம் எண்ணி வெம்பும்.

****மொத்தத்தில் விருந்தினர் வருகையால் சந்தோஷம், சந்தோஷம், சந்தோஷமே!!!****

மொத்தத்தில் விருந்தினர் வருகை சங்கடமே ! சங்கடமே !! சங்கடமே !!!

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எங்களணி தோழி சொல்லியது போல
///எல்லோருமாக சேர்ந்து வெளியில் போய்ட்டு வர்றப்ப டயர்டாகத்தான் இருக்கும், வந்ததும் ஆளுக்கொரு வேலையாக, தட்டு எடுத்து வச்சு, தண்ணீர் மொண்டு வச்சு, காலையில் செய்த மிச்சமிருக்கிற புட்டு, இட்லி, அப்புறம் மதியம் செய்ததில் மீதமிருக்கும் சாதம், கறி, அதோட வர்ற வழியில் வாங்கிட்டு வந்த மிக்ஸர், சிப்ஸ் இதெல்லாம் ஷேர் பண்ணி சாப்பிட்டுட்டு, வராண்டா அல்லது ஹாலில் பெரிய ஜமுக்காளத்தை விரிச்சு, அதிலே ஆளுக்கொரு போஸில் அனந்த சயனமாக சாய்ந்துகிட்டு, போன வருஷம் பார்த்த சினிமா, டி.வி.யில் லேட்டஸ்டாக வரும் விளம்பரம், ஸ்கூலில், காலேஜில் நடந்த கலாட்டா, சொந்தக்காரங்க வீட்டுக் கல்யாண முகூர்த்தப்பட்டுப் புடவையின் கலர் - இப்படி உலக விஷயங்களை எல்லாம் அலசி ஆராய்ஞ்சுட்டு, பாதி ராத்திரிக்கு அப்புறம் தூங்கி, காலையில் லேட்டாக எழுந்திருக்கிற சுகம் - இதெல்லாம் விருந்தினர்கள் வந்தால் கிடைக்கிற சந்தோஷங்கள் - நினைத்தாலே இனிக்குதே!!! ///
இப்படிப்பட்ட சந்தோஷங்களை எல்லாம் இழந்துகிட்டு இருக்கீங்க நீங்க. நிறைய நல்ல உறவினர்களும் இருக்க தான் செய்கிறார்கள் அவர்களுக்காக தான் நாங்க எல்லாரும் பேசுறோம். உங்க வீட்டுக்கு வரும்பவர்கள் அத்தனை விருந்தாளிகளுமா? உங்களை பற்றி குறை சொல்லிக் கொண்டும், ஊருக்கு சென்று புறம் பேசிக் கொண்டும் இருக்காங்க. கிடையாது 10 ல் 1 வராக தானே இருப்பாங்க அந்த ஒருவருக்கலாம் நம்ம எண்ணத்தையும் மற்றவர்களுக்கு செய்யும் குணத்தையும் மாற்றிக் கொள்ள முடியாது தானுங்க. உங்க வீட்டில் வந்து தங்கிவிட்டு சென்றவர்கள் ஒருவர் கூடவா சொல்லவில்லை ஆஹா நான் என் நாத்தனார் வீட்டுக்கு போனே, என் ஓப்படியார் வீட்டுக்கு போனே எப்படிலாம் தெரியுமா கவனிச்சாங்க. ஒவ்வொரு வேளையும் பார்த்து பார்த்து கவனிச்சாங்க. உறவினர்களை கவனிக்கறதுல அவங்களை போல கிடையாதுங்க. நீங்க உடனே சொல்லுவீங்க இது தான் சொந்த செலவில் சூனியம்னு, அடுத்து மற்றவர்களும் உங்க வீட்டுக்கு வந்துடுவாங்கனு. வரட்டுமேங்க உங்களை பற்றி நல்ல விதமாக பேசியதால் தானேங்க வராங்க. உறவுகளுக்குள் உங்களுக்கு ஒரு நல்ல பேரை தானே வாங்கி தந்திருக்காங்க.
///அன்பு எதிரணி தோழியே, நான்கு மக்கள் என்ன நான்காயிரம் மக்கள் நம் அறுசுவையில் உள்ளார்கள். அதற்கு இதுபோன்ற விருந்தாளிகள் தான் வேண்டும் என்ற அவசியம் இல்லை.///
அறுசுவை உள்ளவர்கள் உங்கள் வீட்டுக்கு வந்தாலும் அவர்களும் உங்களுக்கு விருந்தாளிகள் தானே எதிரணி தோழியே. அந்த நான்காயிரம் நல்ல உறவினர்களுக்காக தான் நாங்கள் வாதாடுகிறோம்.
உறவினர்களே இல்லாத வாழ்க்கை பூரணம் அடையாது, நீங்கள், உங்கள் கணவர், குழந்தைகள் என்று ஒரு வட்டத்திற்குள்ளே தான் வாழ ஆசைப்படுகிறீர்களா சொல்லுங்கள் பார்க்கலாம்.
உறவினர்கள் சூழ இருக்கும் ஒரு குடும்பம் எப்படி இருக்கும்னு யோசிச்சு பாருங்க, பிள்ளைகள் எல்லாம் ஜாலியா ஒரு பக்கம் விளையாடிட்டு இருப்பாங்க, இடையிடையே சின்ன சின்ன சண்டை அதை வந்து சமாதானம் செய்ய வீட்டில் பெரியவர்கள், பெண்கள் தங்கள் வேலைகளை முடிச்சுட்டு சூப்பரான அரட்டை கச்சேரி, ஆண்கள் எல்லாரும் வெளியில் போயிட்டு ஊர்சுற்றிட்டு வருவாங்க, இந்த சந்தோஷத்தை அனுபவித்து பார்த்தால் தெரியும். அதை விட்டுட்டு சும்மா உறவினர்கள் என்றாலே தொல்லை தரவங்க, புறம் பேசுறவங்கனு சொல்லாதீங்க. அப்படிப்பட்ட சொர்ப்பான அளவில் உள்ளவர்களை எல்லாம் உறவினர்கள் லிஸ்ட்லேயே சேர்க்காதீங்கங்க. விட்டு தள்ளுங்க. இதுவரை உங்க வீட்டுக்கு வந்தவங்களிடம் பெற்ற அனுபவத்தை விட்டு தள்ளுங்க இனி நாங்க வரோம் உங்க வீட்டுக்கு எப்படி இருக்கும் பாருங்க. உறவினர்கள் என்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை புரிஞ்சிப்பீங்க. என்ன நம்ம தோழிகள் எல்லாரும் ரெடியா எதிரணி வீட்டுக்கு நட்பு பாராட்ட போகலாமா? நம்ம நடுவரையும் கூட்டிட்டு போவோம்.

நடுவர் அவர்களே,
//ஹாலில் பெரிய ஜமுக்காளத்தை விரிச்சு, அதிலே ஆளுக்கொரு போஸில் அனந்த சயனமாக சாய்ந்துகிட்டு, போன வருஷம் பார்த்த சினிமா, டி.வி.யில் லேட்டஸ்டாக வரும் விளம்பரம்,ஸ்கூலில், காலேஜில் நடந்த கலாட்டா, சொந்தக்காரங்க வீட்டுக் கல்யாண முகூர்த்தப்பட்டுப் புடவையின் கலர் - இப்படி உலக விஷயங்களை எல்லாம் அலசி ஆராய்ஞ்சுட்டு,பாதி ராத்திரிக்கு அப்புறம் தூங்கி, காலையில் லேட்டாக எழுந்திருக்கிற சுகம் - இதெல்லாம் விருந்தினர்கள் வந்தால் கிடைக்கிற சந்தோஷங்கள் - நினைத்தாலே இனிக்குதே. //

அன்பு எதிரணி தோழி கூறுவதைக் கேட்கவே ஆனந்தமா இருக்கு.இது மாதிரி எங்களுக்கும் நடந்து இருக்கு.எப்போ தெரியுமா? நாங்க சின்ன பிள்ளைகளா இருந்த போது.ஆனால்,அடுப்படியில் நம்ம அம்மா தனியே கஷ்டப்பட்டுட்டு இருந்திருப்பாங்க.அவங்க பட்ட கஷ்டம் இப்போதானே புரியுது.ஆனாலும் பிள்ளைகள் சந்தோஷமா விருந்தினர் கிட்ட பேசிட்டு இருக்கட்டும்னு எல்லாத்தையும் அவங்க செய்தாங்க.

ஆனால் இப்போ வர்ற விருந்தினர்க்கு நம்மிடம் மட்டுமல்ல, நம் பிள்ளைகளிடம் கூட பேச நேரம் இருப்பதில்லை.டீவியில் வச்ச கண்ணை வாங்காமலே நாம் நீட்டும் காபி டம்ளரை வாங்கிப்பாங்க.ஏன் சில நேரம் ”அங்க வை”னு சைகை மட்டும் தான் வரும்.இப்படி இருப்பவர்களிடம் எப்படி மணிக்கணக்கில் அளவளாவுவது?

//அவ்வளவு ஏன் - அவங்க வந்திருக்கறப்ப எல்லோரும் சேர்ந்து, அவிச்ச பனங்கிழங்கு சாப்பிடறது, வெந்த மொச்சைக்காயை ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டி நடுவில் வச்சுகிட்டு எல்லோரும் சேர்ந்து, கதை பேசிகிட்டு சாப்பிடறது கூட ஒரு தனி ருசிங்க.//
அவிச்ச மொச்சையும்,வெந்த பனங்கிழங்கும் தனி ருசிதான். இப்போ யாருங்க அதெல்லாம் சாப்பிடுறாங்க?முக்கியமா இந்தக் காலத்து குழந்தைகள் எல்லாம் பீட்சா,பர்கர்னு வாங்கி கொடுத்தால்தான் நம்மையும் கொஞ்சம் மதிக்கிறாங்க.

//காலையில் செய்த மிச்சமிருக்கிற புட்டு, இட்லி, அப்புறம் மதியம் செய்ததில் மீதமிருக்கும் சாதம், கறி,//
நடுவரே,விருந்தினர்க்கு காலையில் செய்ததையும்,மதியம் செய்ததையும் போட நமக்கு மனசு வராதுங்க.பழையதை நாங்க சாப்பிட்டு,சுடச் சுட வேளா வேளைக்கு செய்து போடுவோம்.அவங்க எல்லாம் சாப்பிட்டு முடித்து நம்ம சாப்பிடுவதற்குள் அடுத்த வேளை காபிக்கு ரெடியாயிடுவாங்க.
"இப்போ தான் சாப்பிடுறீங்களா? காபி போடலையா"னு" கேள்வி வேறு.

// அதோட வர்ற வழியில் வாங்கிட்டு வந்த மிக்ஸர், சிப்ஸ் இதெல்லாம் ஷேர் பண்ணி சாப்பிட்டுட்டு, //
ஷேர் பண்ணியா?கரக்கு,முர்க்குனு சத்தம் மட்டும் தான் காதிலே விழும்.

// இதுவரை உங்க வீட்டுக்கு வந்தவங்களிடம் பெற்ற அனுபவத்தை விட்டு தள்ளுங்க இனி நாங்க வரோம் உங்க வீட்டுக்கு எப்படி இருக்கும் பாருங்க. உறவினர்கள் என்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை புரிஞ்சிப்பீங்க. என்ன நம்ம தோழிகள் எல்லாரும் ரெடியா எதிரணி வீட்டுக்கு நட்பு பாராட்ட போகலாமா? நம்ம நடுவரையும் கூட்டிட்டு போவோம்.//

ஏங்க இவ்வளவு நேரம் எங்க அணித்தோழிகள் பக்கம்,பக்கமா விருந்தினர்களால் படும் சங்கடங்களை சொல்லியும் எங்களைப் பார்த்தால் பரிதாபமாக இல்லையா?
விருந்தோம்பலின் மகிமையையும் பெருமையையும் காட்ட எங்களை யாரும் வீட்டுக்கு கூப்பிட மாட்டீங்களே !நடுவரே நீங்களும் எதிரணியுடன் கூட்டணியா? :-(((

விருந்தினர்களால் பட்ட கஷ்டங்களை உணர்ந்ததால் நாங்க கண்டிப்பா சங்கடங்களை தர மாட்டோம்.விருந்தினர்கள் எப்படி நடந்துக்கணும் என்பதற்கு முன்மாதிரியா இருப்போம். ;-)))

இளவரசி... //நடுவில் அழுகின்ற அந்த வீட்டு குழந்தைகளை

சமாதனப்படுத்தவோ,தூக்கவோ ஆள் இருக்காது.

இடுப்பில் தூக்கிகிட்டே அவள் அத்தனையும் செய்வாளாம்
// - என்னை போல் ஆள் போலிருக்கு ;( நான் சிரியாவில் இப்படி தான் அவஸ்தை பட்டேன். சேம் ப்லட்.

//சமையல் சந்தோஷமே …ஆனால் சரியான

பகிர்ந்து கொள்ளல் இல்லாமல் ஒருவரே அத்தனையும் செய்யும்போது அங்கே

சங்கடம்தானே// - நிச்சயமா அது நம்ம ஒருத்தர் வீட்டுக்கு சமையலா இருந்தா கூட.

-------------------

கல்பனா...
//இல்லத்தலைவிக்கு விருந்தினர் வந்த பின்பு வேலை கிழி கிழி என்று கிழிந்து விடும். இதில் அவர்கள் வருவதற்கு முன்பு வேறு இப்படியெல்லாம் ஒரு பட்டுக்கம்பளமா?// - சீதாலஷ்மி... கேட்டீங்களா??? இப்படிலாம் அழகுபடுத்த கூடாதாம். அவங்களுக்கு உள்ளதே போதுமாம்.
//வர்ற கெஸ்ட் நம்ம வீட்ல ரெஸ்ட் எடுத்துட்டு போகனும்னு வர்றாங்க.// - ஆமாம் இங்க வந்து அவங்க சமைக்கனும்'னா எதுக்கு இங்க வரனும்?

-------------------

யாழினி... //பிள்ளைகள் எல்லாம் ஜாலியா ஒரு பக்கம் விளையாடிட்டு இருப்பாங்க, இடையிடையே சின்ன சின்ன சண்டை அதை வந்து சமாதானம் செய்ய வீட்டில் பெரியவர்கள், பெண்கள் தங்கள் வேலைகளை முடிச்சுட்டு சூப்பரான அரட்டை கச்சேரி, ஆண்கள் எல்லாரும் வெளியில் போயிட்டு ஊர்சுற்றிட்டு வருவாங்க, இந்த சந்தோஷத்தை அனுபவித்து பார்த்தால் தெரியும்.// - நீங்களும் வேலை செய்யனும்'னு சொல்றீங்களே!!
//இனி நாங்க வரோம் உங்க வீட்டுக்கு எப்படி இருக்கும் பாருங்க. உறவினர்கள் என்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை புரிஞ்சிப்பீங்க. என்ன நம்ம தோழிகள் எல்லாரும் ரெடியா எதிரணி வீட்டுக்கு நட்பு பாராட்ட போகலாமா? நம்ம நடுவரையும் கூட்டிட்டு போவோம்.// - தாரளமா போயிட்டு வாங்க... கூடவே என்ன நடுவரை சேர்த்துகிட்டீங்க??? நியாயமா??? நமக்கு இருக்க 2 பிள்லைகளையும் பார்க்கவே 24 மணி நேரம் போதல, இதுல எங்க இருந்து விருந்தாளியா போரது?

-----------------

ஹர்ஷா... //நாங்க சின்ன பிள்ளைகளா இருந்த போது.ஆனால்,அடுப்படியில் நம்ம அம்மா தனியே கஷ்டப்பட்டுட்டு இருந்திருப்பாங்க.அவங்க பட்ட கஷ்டம் இப்போதானே புரியுது.// - ஹஹஹ... இப்பவாது புரிஞ்சா சரி.
//சில நேரம் ”அங்க வை”னு சைகை மட்டும் தான் வரும்// - டூ பேட்.
//பார்த்தால் பரிதாபமாக இல்லையா?// - ரொம்ப பரிதாபமா இருக்கு.
//நடுவரே நீங்களும் எதிரணியுடன் கூட்டணியா// - அச்சச்சோ... இல்லவே இல்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு நடுவருக்கு வணக்கம்.

அறுசுவையின் அனைத்து தோழிகளுக்கும் வணக்கம்.

விருந்தோம்பலிற்கு பெயர் பெற்றது இம்மண்.வந்தவர் விரோதி என்றாலும் வரவேற்கும் அன்பு நெஞ்சங்கள்.இங்கு,விருந்தினர் தொல்லையானது எப்படி?வறுமையிலும் விருந்தினர் வருகையால் மகிழ்வடைபவர்கள் இங்குதானே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? சத்தியம் எதுவென்று கொஞ்சம் அலசிப் பார்ப்போமா,நடுவர் அவர்களே.

ஒரு வீட்டின் விருந்தினர் வட்டத்துள் வலம் வருபவர்கள் யார்,யார்?

* அனைத்து உறவுகளும் அடங்கும்

* அக்குடும்பத்தில் உள்ளோரின் நட்பு வட்டம்

* பத்து வயது பிள்ளையோ,இருபது வயது இளம் பெண்ணோ,அலுவலகம் செல்லும் ஆடவனோ இவர்களின் நட்பு வட்டம்

* விசேஷ நாட்களிலும்,பண்டிகை காலங்களிலும் வருகை தந்து நம்மையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி,அவர்களும் மகிழ்ந்து விருந்தினர் பட்டியலை சிறப்பிப்பவர்கள்.

இந்த விருந்தினர்கள் வருகை எப்போதெல்லாம் என்று பார்த்தால்,

* வெகுநாட்களாக பார்க்காமல் இருக்கும்போது-உறவையோ,நட்பையோ

நடுவரே,நாம் இப்போதெல்லாம் எந்நேரமும் தொலைவில் இருந்தாலும் சரி,அருகில் இருந்தாலும் சரி தொலைபேசியில் உரையாடிக் கொள்கிறோம்.வீட்டுப் பூனைக்குட்டி முதல் அடுத்த வீட்டு பெண் வரை அனைத்தும் உரையாடலில் அடங்கும்.ரொம்ப நாளா பார்க்கலையே,பேசலையே அவங்க வீட்டுக்கு போயிட்டு வருவோம் என்று சொல்வதெல்லாம் இன்று காண முடிவதில்லை.கொஞ்சம் அதிக இடைவெளிகளில்தான் செல்வார்கள்.

* வீட்டில் ஏதேனும் ஒரு விசேஷம் என்றால்

வீட்டில் ஒரு விசேஷம் என்றால் விருந்தினர் வருகை அதிகமாக இருக்கும்.திருமணநாள்,பெண் பார்க்கும் படலம்,நிச்சயதார்த்தம்,கிரகபிரவேஷம் எதுவாக இருந்தாலும் உறவும் நட்பும் இருந்தால்,அவ்வில்லம் இன்னும் அழகாகும்.

வேலைகள் அதிகம் என்று யாரையும் அழைக்காமல் இருப்பதில்லை.வீட்டுப் பெண்கள் விதவிதமாய் சமைத்து கொண்டிருப்பார்கள்.ஆனால்,எல்லா விசேஷங்களுக்கும் இல்லை.நிறைய விசேஷங்களுக்கு ஹோட்டலில்தான் ஆர்டர் செய்கிறார்கள்.இதை நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள் நடுவரே.

அந்த வீட்டு ஆண்கள்,சாமியானா,வாடகைக்கு சேர்கள்,டிபன் இலை,சாப்பாட்டு இலை,டம்ளர்,வெற்றிலை,பாக்கு என்று ஏகப்பட்டது அலைந்து திரிந்து வாங்கிக் கொண்டிருப்பார்கள்.அந்தக் குடும்பத்தினரின் எண்ணம் ஒன்றுதான்.வருபவர்களை நன்றாக கவனிக்க வேண்டும்.வேண்டியவங்க பேர் எதாவது விட்டுப் போயிருக்க போகுது என்று வேறு கவலைப்படுவார்கள்.எத்தனை பேர் வந்தாலும் சிறப்பாக கவனிக்கவே விரும்புவார்கள்.மகிழ்ச்சியடையவே செய்கிறார்கள்.

*பண்டிகைகளின் போது

விருந்தினர் வருகை பண்டிகைக்கால மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் என்பதே உண்மை.ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள்,நீங்கள் வைக்கும் கொலுவை உங்கள் வீட்டினர் மட்டும் ரசித்தால் உங்களுக்கு முழுமையான மகிழ்ச்சி கிடைத்து விடுமா,தீபாவளிக்கு விதவிதமாய் பலகாரம் செய்திருப்பீர்கள்.அவை உங்கள் வீட்டினருக்கு மட்டுமென்று செய்தீர்களா,சாதாரண நாட்களைவிட பண்டிகை நாட்களில் விருந்தினரின் வரவு உங்களை மகிழ்ச்சிப் படுத்துகிறதா,சங்கடப்படுத்துகிறதா? ஒரு நாள் கிழமைனா வீட்டுக்கு நாலுபேர் வந்தாதானே சந்தோஷம்.

* யாருக்கேனும் உடல்நலம் குன்றியுள்ளபோது

ஹார்லிக்ஸ்,கொஞ்சம் ஆப்பிள்,ஆரஞ்சு வாங்கி வருவார்கள்.நலம் விசாரித்துவிட்டு கொஞ்ச நேரத்திலேயே சென்று விடுவார்கள்.ஒருவர் நோயில் வாடும் போது அவரைப் பார்க்க உறவோ,நட்போ வராவிட்டால் அந்த மனம் அதிகம் சோர்ந்து போகும்.வர்றவங்க பயமுறுத்திட்டில்ல போறாங்கனு கேட்கறீங்களா,அப்படியும் சிலருண்டு.ஆனால்,அன்பு மொழிகளால் நம்பிக்கை
தருபவர் பலருண்டு நடுவரே.

* ஏதேனும் வேலையாக அவ்வூருக்கோ,அவ்விடத்திற்கோ வரநேரும்போது

இவ்வளவு தூரம் வந்திட்டோம்.பக்கத்திலதான் அத்தை வீடு,ஒரு எட்டு பார்த்திட்டு போயிடலாம்.நாளைக்கப்புறம் அவ்வளவு தூரம் வந்திட்டு என்னை பார்க்காம போயிட்டியேனு கோவிச்சுப்பாங்க -இப்படிச் சொல்பவர்களும் உண்டு.

* ஏதேனும் உதவி தேவைப்படும்போது

இந்தப் பக்கம் ஒருஅஞ்சு சென்ட் இடமிருக்குனு சொன்னாங்க.உங்களுக்கு தெரியுமா,பிரச்சனையில்லாத இடமா விசாரிச்சு சொல்லுங்க.

வண்டி எடுக்கலாம்னு இருக்கேன்.எது நல்லாயிருக்கும்.

இந்த கடையில் டிசைன்ஸ் நல்லாயிருக்குமா,நகை வாங்கலாம்னு இருக்கோம்.

தன் நட்பிடமோ,உறவிடமோ அட்வைஸ்,ஐடியா,கேட்பவர்கள்.

* மனமாற்றம் தேவைப்படும்போது

இந்த வீக்என்ட் என் பிரண்டு வீட்டுக்கு போகலாமா?நமக்கும் ஒரு சேன்ஜாயிருக்கும்.அவனும் சந்தோஷப்படுவான்.ஒரே விதமான வாழ்க்கை ஓட்டத்தில் சலிப்பு ஏற்படும்போது நம்மை புதுப்பித்துக் கொள்ள.

இப்படி இந்த விருந்தினரின் வருகையால் வீட்டினரும்,விருந்தினரும் மகிழ்ச்சி,மனநிம்மதி,உற்சாகம் அடைவார்கள்.விரிவாக பின்னர் காண்போம்.

சரி,இந்த விருந்தினரை தொல்லையாய் நாம் எப்போதெல்லாம் நினைக்கின்றோம்.

* கணவரின் அலுவலகத்திலோ,பிள்ளைகளின் பள்ளியிலோ முக்கிய அலுவல்
உள்ளபோது வருகை தரும்போது

நிற்க நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கும்போது விருந்தினர் வந்தால் அவர்களுக்காக செலவழிக்க நம்மிடம் நேரமில்லை.இந்த டைம்ல வந்திருக்காங்களே,நம்மால சரியா கவனிக்க முடியாதே என்ற சங்கடம்.பிள்ளைகளின் பரீட்சை நேரம் எல்லாம் அனைவருக்கும் தெரிந்தேயிருக்கும்.இந்த சமயத்தில் வருவதையும் இன்று காண முடிவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் நடுவரே.

* நாம் உடல்நலம்குன்றி உள்ளபோது

நம்மை பார்க்க இவ்வளவு தூரம் வந்திருக்காங்களே,வெறும் காபியோடவா அனுப்பறது என்ற வருத்தம் சங்கடம்

* வேலைகள் அதிகரிக்கும்போது

அழகாகயிருக்கும் வீடோ,இல்லை ஒட்டடை படிந்த வீடோ விருந்தினருக்காக சுத்தப்படுத்துவதில் தவறென்ன இருக்கிறது.நடுவரே,உங்கள் வீட்டு டிவியில் தூசி படிந்திருந்தால் வருபவர்கள் உங்களை பற்றி என்ன நினைப்பார்கள்.உங்கள் மதிப்பு என்னாவது.நான்கு பேருக்கு சமைத்து உங்கள் கையால் அன்பாக பரிமாறும்போது உங்கள் மனம் ஆனந்தப் பட்டதில்லையா நடுவர் அவர்களே.

* நம் வீட்டிற்குள் விரிசல்களை உருவாக்கும் போது

நடுவர் அவர்களே,உங்கள் வேர்கள் பலமாக இருந்தால் இது போன்றவற்றிற்கெல்லாம் அவை அசையுமா,அன்பு வழியும் நெஞ்சங்களுக்கிடையில் எதற்கும் இடமில்லை,எவை நுழையவும் வாய்ப்பில்லை.அதைவிட,இந்த உறவினர் இப்படித்தான் என்று உங்களுக்கு தெரியாமலாயிருக்கும்.பின் எதற்கு விரிசல்,உடைசல் எல்லாம்.

* பிள்ளைகள் நாம் பாதுகாப்பதை சிதறவிடும்போது

கொஞ்சம் கனிவும் கண்டிப்புமாக எடுத்துச் சொல்லலாமே.பெண்மைக்கு நன்றாகத் தெரியுமே.

* எதிர்பாராப் பொழுதில் வந்து நிற்கும்போது

சில நேரம் இன்ப அதிர்ச்சியாக இருக்கும்.சிலநேரம்,வெளிய கிளம்பிட்டிருக்கப்ப வந்துட்டாங்களே,என்ன செய்யறது அவசியம் போகனுமே என்று நினைப்பார்கள்.
வரவேற்க தடுமாறும் சூழல் வருத்தம் தரும்.

நடுவரே,இதற்கும் இன்று வாய்ப்பு குறைவு.வீட்டில் உள்ளார்களா,இல்லையா என்று விசாரித்து கொண்டு உறவினர் வீட்டிற்கு செல்பவர்கள் உண்டா இல்லையா? இப்போதுதான் மொபைல் இருக்கிறதே வசதியாக.

"தொடர்ந்து விருந்தினர் வருகை தரும்போது,நடுத்தரவர்க்கத்தினரின் பணநெருக்கடி"

நடுவரே,இந்த காரணங்கள் ஏற்புடையதா?தினமும் விருந்தினராகச் செல்கிறார்களா,ஏன் அவர்களுக்கென்று குடும்பம் எதுவும் இல்லையா,கணவர் வேலைக்கு செல்ல மாட்டாரா,பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல மாட்டார்களா,அந்தப் பெண்ணிற்குதான் வேலை இருக்காதா?அவர்களை தயார் செய்து அனுப்புவது யார்?

குடும்பத்தோடு செல்வதென்றால் அவர்கள் வேலையும்,கல்வியும் என்னாவது?தினமும் விருந்தினராக சென்றால் அந்த வீடு என்னாவது,அந்த வீட்டில் எத்தனை வேலைகள் இருக்கும்? இங்கு யாருக்கு நேரம் இருக்கிறது சொல்லுங்கள்.இன்று,இருபது நிமிடத்தில் செல்லும் இடத்திற்கே இருபத்தைந்து ரூபாய் கொடுக்க வேண்டும் ஒரு நபருக்கு.இதையும் யோசிச்சு பாருங்க நடுவரே.மாதம் முழுவதும் விருந்தினர் வருகை என்பது சத்தியம்தானா,சாத்தியம்தானா என்று சிந்தித்து பாருங்கள் நடுவரே.

விருந்தினர் எண்ணிக்கை நடுத்தரவர்க்க மக்களின் வீட்டில்தான் அதிகமாக இருக்கும்.அவர்கள்தான் உறவுக்கும்,நட்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.அகமகிழ்ந்து போவார்கள்.ஏன் அவர்களால் பத்து பேருக்கு விருந்தளிக்க முடியாதா என்ன!! நல்ல கதையாக இருக்கிறதே.

ஒரு கிலோ அரிசி ஐம்பது ரூபாய்,முருங்கைகாயும்,கத்திரிக்காயும் பத்துரூபாய் கொடுத்து வாங்கினால் சாம்பார் ரெடி,ஒரு சின்ன முட்டைக்கோஸை துருவினால் பொரியல் ரெடி,வெண்டைக்காயை நறுக்கினா கூட்டாச்சு.பத்து ரூபா கொடுத்து கடலைமாவு வாங்கினால் போண்டா ரெடி.ரவை,அதுவும் கம்மி விலைதான்.கேசரி தயார்.

சமைச்சு முடிச்சிட்டு கடைக்கு போய் இலையும்,யூஸ் அண்ட் த்ரோ டம்ளர்(பாத்திரம் கழுவற வேலை இல்லை பாருங்க) வாங்கி பாயாசம் ஊத்தி பரிமாறினா விருந்து அமர்க்களமா முடிஞ்சுடும்.நடுவரே,வாராவாரம் சிக்கன்,மட்டன்,மீன்னு சமைக்கறவங்களுக்கு விருந்தெல்லாம் சாதாரண விஷயம்.நீங்களே நன்றாக சிந்தித்து பாருங்கள்.

* தேநீருக்காக தினசரி ஒரு வீட்டிற்கு செல்லும் வீணர்களைப் பார்த்து

நடுவரே,இவர்களை விருந்தாளிகள் பட்டியலில் சேர்க்கலாமா வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

நடுவரே,விருந்தினர்களை சங்கடப்படுத்தும் சில வீட்டினரை நீங்கள் அறிவீர்களா?அப்படியும் இருக்கிறார்கள் தானே??அது போலதான் வீட்டினரை சங்கடப்படுத்தும் சில விருந்தாளிகள்.பெரும்பான்மையானவர்கள் மகிழ்கிறார்கள்,மகிழ்விக்கிறார்கள்.

விருந்து தொடரும்..

அன்புடன்
நித்திலா

சந்தோசமே

நடுவரே

விருந்தோம்பலில், வந்தவரை அன்புடன் வரவேர்த்து அவர் திரும்பும் போது வாசல் வரை வழியனுப்பும் பண்புக்கு நமக்கு நிகர் நாமே.. இந்த பண்பினை மற்ற நாட்டவரும் போற்றும் வண்ணம் நாம் வழ்ந்து கொண்டுள்ளோம் என்பதை மறுக்க முடியாது.

நீங்களே கூறுங்கள் நடுவரே.. திருமணத்திற்கு பின் நாம் நமது உடன் பிறந்த தங்கை, அக்கா , அண்ணன் என அனைத்து சொந்தங்களையும் பிரிந்து வாழ்கிறோம்.. என்றாவது அவர்கள் வீட்டிற்கு வர மாட்டார்களா என ஏங்கி தவிக்கிறோம்.. தனது தங்கையின் மகளை மகனை சொந்த மகனாக மகளாக நினைக்கிறோம்.. அவர்களின் வருகை நமக்கு பரவசத்தை கொடுக்கிறதா இல்லையா ?

விருந்தாளிகள் பல உறவின் காரணமாக சிறிது மாறுபடுகிறார்கள்.. இல்லை என சொல்லவில்லை.. அதற்காக எல்லா விருந்தாளிகளும் நாம் நினைக்கும் வண்ணம் இருக்கமாட்டார்கள் என்று தான் கூறுகிறோம்.. அதனால் விருந்தாளிகள் வந்தாலே சங்கடம் என கூற முடியுமா?

நம்மை பெற்ற அம்மா அப்பாவின் வரவிற்காக வாசலிலே காத்திருப்பது இல்லையா ? எத்தனை தான் வசதியான வீட்டில் இருந்தாலும் அம்மா வீட்டில் இருந்து கிடைக்கும் ஒரு கைபிடி சாம்பல் ருசியாக இருக்கும் என்பார்கள்.. என்று அடுத்த வீட்டிற்கு நம்மை அனுபினார்களோ அன்றிலிருந்து அம்மா அப்பாவும் விருந்தாளிகள் தானே .. அவர்களை சங்கடம் எனக் கூற முடியுமா?

பண நெருக்கடி என எடுத்துக் கோண்டோமானால் தனது தங்கை அக்காக்கு ஒரு பிரச்சனை என வரும் போது, முதலியே சொல்லக் கூடாது என திட்டி வட்டிக்காவது கடன் வாங்கி கொடுத்து உதவ நினைப்போம் தானே.. ?

நமது வீட்டில் ஒரு விஷேசம் என வரும் போது எல்லா சொந்தங்களும் வர வேண்டும் என்று தான் எல்லாரும் நினைப்பார்கள் நடுவரே அது தான் இயல்பும் கூட.. யாராவது வரவில்லை என்றால் கண்டிப்பாக மனது கஷ்டபடும்.. இல்லை என்றால் நம்ம வீட்டிற்கு எல்லாம் வருவார்களா? என சங்கடபடுவோம்..

கண்டிப்பாக எந்த வீட்டிற்கும் விருந்தாளிகள் அடிக்கடியும், பேட்ச் வைசாகவும் வருவதில்லை...அப்படி வருவதற்கு யாருக்கு நேரம் உள்ளது.. ? வரும் 10 விருந்தினர்களில் ஒரு 2 பேர்கள் வேண்டுமானால் உதவாமல் சும்மா இருக்கலாம்.. ஆனால் மற்றவர்கள் கண்டிப்பாக அடுப்பங்கரையில் உடன் உதவவே வருவார்கள்.. பட்டிக்காக என ஒரேடியாக இருக்கும் கெட்ட விசயத்தை மட்டுமே பெசக் கூடாது நடுவரே

ஒரு சில இடத்தில் முடக்கடி செய்யும் ஆசாமிகள் இருக்கத் தான் செய்வார்கள்.. விருந்தாளிகளில் மட்டுமில்லை.. நட்பு வட்டாரத்திலேயும்.. அதை மற்ற ஆட்களிடம் விளையாட்டாக கிசுக்கிசுத்து பேசி மகிழ்ந்து கிண்டலும் கேலியுமாக சென்ற நாட்களையெல்லாம் நினைவு கூர்ந்து பாருங்கள்.. விருந்தாளிகளின் வருகை சந்தோசமே எனப் புலப்படும்..

சந்தோசத்திலும் சந்தோசம் அவர்கள் வந்து சென்றடையும் வரை நல்லவிதமாக எல்லாரையும் ஒரு குறை இல்லாமல் கவனித்துக் கொண்டோம் எனும் போது மனதில் வரும் ஒரு திருப்திக்கு அளவுக்கோல் கிடையாது நடுவரே..

அதிலும் சில உறவுகள் என்ன தான் செய்தாலும் குறைக் கூறும் சுபாவம் உள்ளவர்கள்.. என்ன தான் மாங்கு மாங்கு என செய்தாலும் எல்லா விஷயத்திலும் குறை கூறுவார்கள்.. இல்லை என சொல்லவில்லை.. அவர்களை சமாதானபடுத்த கோடி கொடுத்தாலும் சரி செய்ய முடியாது.. அவர்களின் பேச்சை ஒரு பொருட்டில் எடுத்துக் கொள்ளாமல் நமது கடமையை சிறப்பாக செய்தாலே முழு திருப்தி கிடைத்துவிடும்..

உடனே எதிரணி தோழிகள் நீங்களே விருந்தாளிகள் எனில் இம்சை என ஒத்துக் கொண்டீர்கள் என சொல்ல போகிறார்கள்.. ”கனியிருப்ப காய் கவர்ந்தற்று” என்பது போல மகிழ்ந்து குழாவ அழகான விருந்தாளிகள் இருக்கும் போது இம்சை கொடுக்கும் சிலரை பற்றி நினைத்து ஏன் ஒட்டு மொத்த விருந்தாளிகளையும் சங்கடம் என நினைக்க வேண்டும்..?

அதில் நமது அம்மா, அப்பா, சகோதர சகோதரிகள், குழந்தைகள் உள்ளனர் என கருந்தில் கொண்டு ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்..

ஒரு விஷேசம் அல்லது ஒரு நெருக்கடி எனும் போது நமது மானசீகமான விருந்தாளிகள் வந்து பக்கத்தில் நிற்கும் போது ஏற்படும் தைரியத்தை பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை.. நமது பலத்தை பலமடங்காக்கும் பங்கு விருந்தாளிகளுக்கே உண்டு..

இதில் நட்பு உறவு என பிரிக்க தேவையில்லை.. வீட்டிற்கு வரும் அனைவரையும் விருந்தாளிகள் என்றே கூறுகிறோம்.. விருந்திற்கு அழைக்கப்பட்டவர்கள்.. விருந்தாளிகள்.. அது நண்பராக இருந்தாலும் , அழைக்கபடாமல் வந்தாலும்..

பொதுவாக சிலர் தங்களிடத்தில் இருக்கும் பணம் பொருள் ஸ்டேட்டஸ் காரணமாக விருந்தாளிகளை அசத்த நினைப்பார்கள்.. சிலர் உண்மையான பாசத்தில் உபசரிக்க நினைப்பார்கள்.. சிலர் கடமை உள்ளது என செய்ய நினைப்பார்கள்.. ஆக மொத்தம் எல்லாமே நமது தேவைக்காக என தான் நடுவரே..

நமது சொந்தங்களிலேயே.. கமலா.. அவங்க வந்தா தான் எனக்கு அடுப்படியில் வேலையே ஓடும்.. பத்து ஆளுக்கு சமம். எத்தனை பேருனாலும் சமாளிப்பாங்க.. இந்த டெக்ரேஷன் போன்ற விஷயத்திற்கெல்லாம் வனிதா வந்தா தான் சரியாகும்.. நல்ல ஒரு கிரியேட்டிவிட்டி அவங்களுக்கு , மெஹந்திக்காக புள்ளைக வேற வைட்டிங்.. .. பஸ் ஏறியாச்சு.. மதிய சாப்பாட்டுக்கு வந்திடும் புள்ள... என்னோட அக்காகிட்ட தான் கொஞ்சம் பணம் கேட்டிருந்தேன்,, கொண்டு வந்து மாமா குடுக்கறேனு சொல்லி இருக்காரு.. பொடிசுங்க வேற இங்கேயும் அங்கேயும் ஓடும்.. டெலிகேட்டான பொருளை எடுத்து மறச்சு வை.. அம்மா அப்றம் பேரன் பேத்திகளுக்கு தான் சப்போர்ட் பண்ணும்..

இதை போல.. இதற்கு மேலே.. என அனைத்து வித கலகலப்பான சம்பவங்கள் விருந்தாளிகள் மூலமே நிகழும்.. மனதை தொட்டு கூறுங்கள்.. இதை போல இதுவரை நிகழ்ந்ததே இல்லை என....

கண்டிப்பாக விருந்தாளிகளின் வரவு மனதிற்கு சந்தோசம் தான் நடுவரே..

நீங்க ஒத்துக்கவில்லை என்றால் ஒரு நாள் உங்க வீட்டுக்கு எங்க அணித் தோழிகளெல்லாம் வந்து தங்கி நிருபிக்கிறோம்.. ;) என்ன சொல்றீங்க.. ஆளை விடுங்க சாமி.. தீர்ப்பு உங்க பக்கமேனு சொல்றது இங்கே வரை கேக்குது ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

றொம்ப சுவராஸ்யமான தலைப்பை தேர்ந்தெடுத்த வனிதா அக்காவிற்கு நன்றிகள் பல.விரைவில் மேன்டும் வருவேன்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்