பட்டிமன்றம் - 37 : விருந்தாளிகளால் சந்தோஷமா? சங்கடமா?

பல தலைப்புகளை பார்த்து எதை தேர்வு செய்ய எல்லாமே நல்லா இருக்கேன்னு இப்பவே குழம்பி போய் கடைசியா சரொ நம்ம காமெடி தலைப்பையே தேர்வு செய்வோம், அப்படியாவது காணாம போனவங்க வராங்களா பார்ப்போம்'னு கல்பனா'வின் தலைப்பையே தேர்வு செய்துட்டு வந்திருக்கேன்.

இதோ உங்களுக்கான இந்த வார தலைப்பு:

வீட்டிற்கு வரும் நம் விருந்தாளிகளால் நமக்கு சந்தோஷமா? சங்கடமா?

விருந்தாளிகள் லிஸ்ட்டில் யாரெல்லாம் இருக்காங்கன்னு ஒரு குழப்பம் வருமே... எல்லாரும் தான். அதவாது உங்க கணவர், குழந்தைகள் தவிற மற்ற அனைவரையுமே கருத்தில் கொண்டு பேச வேண்டும்.

மற்ற பட்டிகளுக்கான விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். ஜூட்... சண்டையை ஆரம்பிங்க, நான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வந்து தலையை காட்டறேன்.

தீர்ப்பு சொல்ல நாட்டாமை இம்முறை ரொம்பவே சிரமம் எடுத்துட்டார். ஒவ்வொருத்தர் வாதத்தை படிக்கும்போது "ஆமாம், நமக்கும் இப்படி நடந்திருக்கே"னு இரண்டு அணி பக்கமும் மனசு தவ்விகிட்டே இருந்தது. ;(

உட்கார்ந்து ரொம்ப யோசிக்க நேரமும் இல்லை, வீட்டில் பிள்ளைகளோட நேரம் சரியா போகுது. இருந்தாலும் ஓரளவு நியாயமான தீர்ப்பை கூட சொல்லாம விட முடியாதே.

விருந்தினர் பட்டியலில் இருப்பவர் யார் யார்??

நம் வீட்டார், கணவர் வீட்டார், இரு வீட்டு உறவுகள், இருவருடைய நண்பர்கள், பிள்ளைகள் வழி உறவுகள், நண்பர்கள், அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாமே இந்த வட்டத்தில் வருபவர்கள் தான். அதாவது நம்மை காண நம் வீட்டுக்கு வரும் அனைவருமே!!! அதோட விட்டுடாதீங்க... பிறரை காண போகும் நாமுமே!!!

அந்த காலத்தில் கூட்டு குடும்பங்கள் தான் அதிகம். அப்போதெல்லாம் பிறந்த பெண்களை வேறு ஊரில் கட்டி கொடுத்திருப்பாங்க. மருமகள்கள் தான் வீட்டில் இருப்பார்கள். பள்ளி விடுமுறை, ஊர் திருவிழா, விஷேஷம் என்றெல்லாம் வரும்போது மகள் தன் தாய் வீட்டுக்கு பிள்ளைகளோடு வருவார். அவர் வருகிறார் என்றால் மருமகள் தன் தாய் வீட்டுக்கு போக அனுமதி கிடைக்காது. "என் பொண்ணு வரா... யார் எல்லாம் செய்யுறது"னு ஒரு கேள்வி வரும். இத்தனை நாள் கழிச்சு வரும் அவளை கவனிக்காம ஆத்தா வீட்டுக்கு கிளம்பிட்டான்னு வசப்பாட்டுலாம் நடக்கும். போகின்ற நாத்தனாருக்கும் தாய் வீட்டில் எல்லா குழந்தைகளும் இருந்து தன் பிள்ளைகள் சந்தோஷமாக இருக்கவே ஆசை இருக்கும். இரு வீட்டு பிள்ளைகளுக்கும் குஷி தான். ஆனால் உள்ளுக்குள் நாத்தனார் மருமகள் கோவம் மட்டும் புகைந்து கொண்டே இருக்கும். இதில் தப்புன்னு ஏதும் இல்லை... அதே நேரத்தில் தானே தன் பிள்ளைகளுக்கும் பள்ளி விடுமுறை, தன் தாய் வீட்டுக்கு போக அவரும் விரும்புவது இயற்கை தானே. விடுமுறை முழுக்க நாத்தனார் இங்கேயே இருந்தால் இவர் என்று தன் தாய் வீட்டுக்கு பேரபிள்ளைகளை அழைத்து போவது, ஓய்வு எடுப்பது?!

அதே போல் தாய் வீட்டு உறவுகள் வந்திருக்கும் நேரம், கணவர் உறவுகள் வந்துவிட்டால் அங்கும் உஷார் என்று ஒரு சிகப்பு கொடி தலை தூக்கும். அதுவும் நியாயம் தான்... கணவர் அவர் உறவுகளோடு பேசுவது போல் நம் உறவுகளோடு பேசுவதில்லை. மணைவி தன் உறவுகளை கவனிக்கும் அளவுக்கு நம் உறவுகளை கவனிப்பதில்லை.... என்றெல்லாம் நல்லா இருக்க புருஷன் பொண்டாட்டிக்குள்ள குடுமிபிடி சண்டை வந்துடும். இதுவும் தப்பில்லை.. என்ன தான் கல்யாணம் ஆனதும் இருவர் உறவுகளும் ஒன்றுன்னு ஆனாலும், நம் உறவுகளிடம் நமக்கிருக்கும் அன்யூன்யம் நம் வாழ்க்கை துணையின் உறவுகளிடன் பலருக்கு வருவதில்லை.

இதெல்லாம் போதாதென, வரும் உறவுகள் சிலர் காரியம் இருந்தா தான் வருவாங்க. பணம், நிலம் போன்ற பிரெச்சனைகள்... நம் தேவை இருந்தா தான் வருவாங்க. ஒரு சிலர் வந்தாலே "என்ன கேட்டு வந்திருக்காங்களோ"னு உள்ள ஒரு பயம் வந்துடும். அவங்க எதை பற்றி பேசினாலும் பிடி குடுக்காம எஸ்கேப் ஆக பார்ப்போம்... சீக்கிரம் சாப்பட்டாய் போட்டு அனுப்ப தோணும். தப்பில்லை... அங்க போனா எதுவும் திரும்ப வராதுன்னு தெரியும்.

சில உறவுகள் உண்டு... அவங்களுக்கு நம்ம ஊரில் எதாவது வேலை இருக்கும், அதை முடிக்க இங்க தங்குவாங்க, செலவு குறைவில்லையா. காலையில் எழுந்து கிளம்புவாங்க, சரியா சாப்பிட வருவாங்க, மீண்டும் போயிடுவாங்க, நம்மோடு நேரம் செலவு செய்ய முடியாது. நாமும் அவங்க வரும் நேரத்துக்கு சமைச்ச்சுட்டு வந்ததும் சாப்பாடு போட்டுட்டு மற்ற வேலைய பார்க்க வேண்டியது தான்.

நண்பர்கள்.... இது ஒரு தனி கதை. இவர்கள் வந்து தங்குவது ரேர் கேஸ் தான். வருவார்கள் ஒரு வேளை உனவு நம் வீட்டில் சாப்பிட்டாலே பெரிய விஷயம் தான். இலை என்றால் வந்து உட்கார்ந்து கலகலப்பா 2 மணி நேரம் கதை அடிச்சுட்டு கிளம்பி போயிட்டே இருப்பாங்க. அந்த நேரம் நம்ம டீ போட அடுப்படி போனா கூட நம்ம கூடவே வந்து நின்னு கதை அடிச்சுகிட்டு உதவி செய்துகிட்டு நாம வேலை செய்யறோம்'ன்றதே நமக்கு தோணாது. ஆனால் இதுலையும் தங்கும் நண்பர்கள் உண்டு. நாடு விட்டு நாடு, ஊர் விட்டு ஊர் வந்து குடும்பத்தோடு சுற்றி பார்க்கும் நண்பர்கள். இவங்க பகல் முழுக்க ஊறை சுற்றிவிட்டு இரவு நம் வீட்டில் தங்குவார்கள். அந்த நேரம் அவர் யார் நண்பர் என்பதை பொறுத்து இரவு முழுக்க கதை போகும்.

இப்போலாம் உறவுகள் வந்தால் அடுப்படி பக்கம் வருவதை விட நண்பர்கள் தான் அதிகம் உதவி செய்கிறார்கள். பல உறவுகள் வரவேற்பு அறையை விட்டு நகருவதே இல்லை. உட்கார்ந்த இடத்தில் நான் இரவு சாதம் சாப்பிட மாட்டேன், டிபன் கொஞ்சமா எனக்கு மட்டும் செய்துடும்மா'னு சொல்றவங்க அதிகம். இதில் ஆண் பெண் பேதம் இல்லை.

இது போதாதுன்னு வீட்டில் என்ன இருக்கு இல்லன்னு தெரியாம விருந்தினர் முன் உட்கார்ந்து கொண்டு அதை கொண்டு வா, இதை செய் என்று ஆர்டர் போடும் ஆண்களும் இன்னும் இருக்கிறார்கள். நமக்கு மூஞ்சை எங்க கொண்டு வைக்கிறதுன்னே தெரியாது அப்போ. உள்ள வா மவனே, எங்க போயிடுவ, அவங்க போனதும் என்கிட்ட வந்து தானே ஆவனும், அப்ப கவனிக்கறேன் உன்னைன்னு அடுப்படியில் பொலம்ப வேண்டியது தான்.

தோழிகள் சொன்னது போல் அனுபவங்கள் எனக்கும் உண்டு. நாம் யாருக்காவது உடல் நலமில்லை என்றால் விழுந்து விழுந்து கவனித்திருப்போம், ஆனால் நமக்கு உதவி என்றால் எட்டி பார்க்க ஆளிருக்காது. விஷயமே தெரியாது என்றிருப்பார்கள், தெரிந்திருந்தாலும் வேறு காரணம் சொல்லி சமாலிப்பார்கள். நான் கல்லூரி படிக்கும்போது என் தாயாரின் கண் ஆபரேஷன் நான் சென்னையில் தங்கி தனியே பார்த்திருக்கேன். அதன் பின்னும் வீட்டில் 1மாதம் அவர் வேலை செய்ய கூடாது என்றதும் நானும் அப்பாவும் சமைப்பது, துவைப்பது, கழுவுவது என எல்லா வேலைகளும் செய்வோம். அபோதெல்லாம் சமையல் எனக்கு சுத்தம்!!! எப்படி மோசமாக இருந்தாலும் அப்பா, அம்மா நல்லா இருக்குடா'னு சொல்லி சாப்பிடும்போது, உதவ ஆளில்லையே என்று ஏங்கி இருக்கிறேன். ஏன் இது போல் உறவுகள் நமக்குன்னு நொந்து கொண்டதும் உண்டு. இதே உறவுகள் எங்களை தேடி உதவின்னு வரும்போது மாசகனக்கா கூடவே வைத்து உதவி செய்த என் பெற்றோரை பார்த்து நான் ஆச்சர்யப்பட்டிருக்கேன்.

பலர் வந்தா நம்ம பாத்ரூமை சொதப்புரதும், அடுப்படியை சொதப்புறதும், அவங்க பிள்ளைகள் நம்ம வீட்டில் உள்ள பொருட்களை உடைப்பதும்... அப்பப்பா.... பிரெச்சனைகள் பல. சில விருந்தாளிகள் வந்து போனா, வீட்டில் பூகம்பம் வந்து போன மாதிரி இருக்கும். அப்பறம் ஒரு வாரம் அதை எல்லாம் சரி பண்ணி வீட்டை ஒழுங்கு படுத்த ஆகிடும்.

போதாதுக்கு வரும் சிலர் வந்த இடத்தில் பத்த வெச்சுட்டு போயிடுவாங்க. இல்ல இங்க பேச்சு சுவாரஸ்யத்தில் நான் சொல்லும் எதாவது தகவல் போக கூடாத காதுக்கே போயிடும். அப்பறம் என்ன "அவ இப்படி சொன்னாளா? அப்படி சொன்னாளா"னு சண்டை தான். சில நேரம் நம்ம வீட்டுலையே பத்த வெச்சுடுவாங்க... அழாத குறையா இருக்கும்.

பலர் கூடும் இடத்தில் நீ சமைச்சியா, நான் சமைசனா? யார் பாத்திரம் தேய்ச்சது, எல்லா வேலையும் நான் தான் செய்யனுமா? அவ சாப்பிட்ட தட்டை கூட நான் தான் கழுவனுமா? என்று பல பிரெச்சனைகள் இன்றும் வருகிறது.

எதெல்லாம் விடுங்க....

நான் சிறு வயதாக இருக்கும்போது (இப்பவும் சின்ன பொண்ணு தான்... கொஞ்சம் முன்னாடின்னு சொல்ல வரேன்.) அம்மா வீட்டுக்கு போவோம். அங்கே தாதா பாட்டி, மாமா, மாமி, மாமா பிள்ளைகள்.... அந்த தெரு முழுக்க உறவுகள் தான். போனா திருவிழா தான். டவுனில் இருந்து கிராமத்துக்கு போகும் எங்களுக்கு அந்த பஸ் பயணம் கூட சொர்க்கம் தான். நாங்க எப்ப வருவோம்'னு காத்திருப்பார்கள் என் மாமா பிள்ளைகள். எங்க மிடி, ஃப்ராக் அவங்களும், அவங்க பாவாடை சட்டை நாங்களும் மாற்றி போட்டு கொண்டு ஊரை சுற்றுவோம். புதுசா மாமா பசங்க கூட சேர்ந்து தலையில் சின்ன பாத்திரம் வைத்து கொண்டு குலத்துக்கு நீர் கொண்டு வர பல கிலோ மீட்டர் நடந்து போவோம். போகும் வழியில் எல்லாரோடும் சேர்ந்து மரத்தில் புளி அடித்து சாப்பிடுவோம். இரவு வீட்டில் சமையல் முடிந்ததும் பாட்டி பெரிய பாத்திரத்தில் சாப்பாடு போட்டு பிசைந்து தெருவில் வந்து பாய் போட்டு உட்கார்ந்து கொண்டு சுற்றி உட்கார்ந்திருக்கும் குட்டீஸ் எல்லாருக்கும் உருட்டி கொடுப்பார். வீட்டில் எல்லாரும் சேர்ந்தே வேலை பார்ப்பார்கள். அசதியே தெரியாது. நல்ல வெய்யில் நேரத்தில் பம்புசெட்டுக்கு போய் துணி துவைத்து கொண்டு வந்து நீரில் ஆட்டம் போட்ட அந்த காலம்... ஆனந்தம் ஆனந்தமே.

இதே மாமன் பிள்ளைகள் எங்க ஊருக்கு வரும்போது குற்றாலம், பாபநாசம் என்று அருவிகளுக்கு போய் குளித்து, அங்கே பஜ்ஜி சொஜ்ஜி வாங்கி சாப்பிட்டு, நுங்கும் பதனியும் சாப்பிட்டு காரில் தூங்கி கொண்டே வீடு வந்து சேருவோம். இரவு படுத்தால் தூங்காமல் விளையாட்டு, கதை. மாலை நேரம் படை திரண்டு வீதியில் காற்று வாங்கி கொண்டு நடப்போம். அது ஒரு தனி சுகம்.

இன்று எல்லாரும் வளர்ந்து திருமணம் ஆகி போன பின்னும் என்றாவது சந்திக்கும் போது பழைய கதைகளை பேசி மகிழ்வோம். பல நேரம் பகல் முழுக்க வேலை பார்த்தாலும் இரவில் சீட்டு விளையாடி சிரித்து மகிழ்வோம். எப்போது மேலே கிடக்கும் கேரம் போர்டை தூசு தட்டி எடுப்பது உறவுகள் வரும்போது தான். கூட்டணி வைத்து விளையாடி தோற்றாலும் ரசித்தோம்.

இதோ இது என் மாமியார் வீட்டில் செய்யும் சாப்பாடு... சாப்பிட்டு பார் எனக்கு ரொம்ப பிடிக்கும்... நான் இருக்கும் ஊரில் இந்த வகை உணவு தான் அதிகம் என்று பல குறிப்புகளை நமக்கு கற்றுத்தருவார்கள். நாம் செய்தவற்ரை "அட வனி நீயா செய்த?? இது ரொம்ப வித்தியாசமா சூப்பரா இருக்கே.. எப்படி செய்த??" என்று கேட்டு நம்மையும் மகிழ்விப்பார்கள்.

அவர்கள் கிளம்பினால் இன்னும் சில நாள் இருக்க மாட்டாங்களா என்றிருக்கும். இன்று தனி குடித்தனம் இருக்கும் பல வீடுகளில் உறவுகள் வருகை மகிழ்ச்சியை தான் தருகிறது.

சரி உறவுகளை விடுங்க... ஏன் வெளி நாட்டு வாழ் மக்கள் எப்போதும் விருந்து ஏற்பாடு செய்கிறார்கள். அப்பவாது நம்ம பலரோடு சேர்ந்து உண்டு மகிழ, கதையடிக்க ஒரு வாய்ப்பு என்று தானே??? அது மகிழ்ச்சி தரலன்னா நாம ஏன் செலவு பண்ணி, பல நாள் திட்டம் போட்டு, ஒரு நாள் முழுக்க வேலை பார்த்து ஒரு பார்ட்டி கொடுக்கனும்?? ஆக அங்கு நண்பர்கள் கூடும் போதும் மகிழ்ச்சி தான்.

இங்கு பல பிரெச்சனைகளை சந்தித்தவர்கள் உண்டு. ஆனால் பிரெச்சனை என்று வருபவரை வேண்டாம் என்று சொன்னவரும் இல்லை, உபசரிக்காமல் விட்டவரும் இல்லை. அது தமிழனுக்கே உள்ள சிறப்பு. நம் பெண்களின் பண்பாடு. முடியாத நிலையிலும் எழுந்து சமைத்து சிரித்த முகமாக பழகுவது நம் பெண்களின் சிறப்பு. பல இடங்களில் பல உறவுகள், நண்பர்களால் தொல்லைகள் இருக்கிறது, ஏன்டா என்று நம்மை எண்ண வைப்பவர்கள் உண்டு, நாம வாங்கி வந்த வரமான்னு கூட தோணும். இல்லை என்று மறுக்க யாராலும் முடியாது. ஆனாலும் அதுக்காக நாம யாருமே வர வேண்டாம் என்று இருப்பதில்லையே... இன்று இந்த அறுசுவையில் பேசும் பலரை சந்திக்க நாம் ஆவளோடு இருக்கோம். அவர்கள் வீட்டுக்கு வந்தால் வேண்டாம் என்போமா??? நிச்சயம் இல்லை.... அன்று நமக்கு செய்ய தெரிந்த எல்லா நல்ல உணவு வகையையும் செய்து அசத்த திட்டம் தீட்டுவோம்.

யாரோ ஒரு சில விருந்தினருக்காக இன்றும் நாம் ஏங்க தானே செய்கிறோம். நாம் அவர்களை காணவும், அவர்கள் நம்மை காணவும், நம்மோடு நேரம் செலவழிக்கவும் விரும்பி வருகிறார்களே, அல்லது விரும்பி போகிறோமே.... அந்த ஒரு சில நல்ல விருந்தினரின் வருகை இனிமை தானே??? அந்த இனிமையை மட்டும் ரசிப்போம்... அந்த உள்ளங்களை மதிப்போம்... விருந்தினரின் வருகை "மகிழ்ச்சியே" என்று சொல்லி நாமும் ஒரு நல்ல விருந்தினராக இருக்க முயற்சிப்போம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எப்போதும் இல்லாமல் இன்று தீர்ப்பு பெருசா போச்சு ;( ஃபீல் பண்ணாம படிங்கப்பா...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா, நல்ல அருமையான தீர்ப்பு வாழ்த்துக்கள் ....................

ஆனால் இவ்ளோ சீக்கிரம் தீர்பை நாங்கள் எதிர் பார்க்கவில்லை இன்னும் பேசலாம் என்னு நினைத்து கொண்டு இருக்கும் போதே தீர்ப்பு வந்தது சற்று ஏம்மாற்றம் தான்.

இருப்பினும் அழகாய் தீர்ப்பு வழங்கிய உங்களுக்கு மஞ்சள் நிற ரோஜாக்கள் நிறைந்த மலர் கொத்து பிடிங்க. நான் தான் முதல்ல கொடுத்து இருக்கேன். அடுத்த தோழி வந்து கொடுக்கும் வரை கையில் வைத்துக்கொள்ளுங்கள்

உன்னை போல பிறரையும் நேசி.

எப்பாடா இப்போது தான் சந்தோஷமாக இருக்கின்றது. ஒவ்வொருமுறையும் வாய் கிழிய பேசிவிட்டு தீர்ப்பு எப்பொழுது எனக்கு எதிராகவே வந்துக் கொண்டிருந்தது. என்னதான் எதிரணி தோழிகள் கதரினாலும் நம் நடுவர் நன்கு நம் அணியை புரிந்து ஒரு அருமையான தீர்ப்பு கொடுத்ததற்கு ஒரு வைர கிரமும் பொற்காசுகளும் மற்றும் பண மாலையும் எங்கள் அணியின் சார்ப்பாக அணிவித்துக் கொள்கின்றேன். (இது யாருக்கும் தெரிய வேண்டாம்). உங்கள் தீர்ப்பு அருமை அருமை என்று சொல்லி விடை பெறுகின்றேன் நன்றி வணக்கம்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

//எதிரணி தோழிக்கு விருதினர்கள் மேல் ஏன் இவ்வளவு கோவம் என்று எனக்கு தெரியவில்லை. பாவம் ரொம்ப அதிகமாக அவர்கள் இந்த விருதினர்களால் கஷ்டபட்டிருப்பார்கள் போல.//

அன்பான விருந்தினர்களை பெற்று அகமகிழ்ந்து போயிருக்கும் எதிரணி தோழியே, நாங்கள் பிறக்கும்போதே விருந்தாளிகளை எதிரிகளாகவோ, பகைவர்களாகவே நினைத்து பிறக்கவில்லை. அவர்கள் மேல் எந்த கோபமும் இல்லை. வருத்தத்தை தான் இங்கே கொட்டி கொண்டிருக்கிறோம். புரிந்து கொள்ளுங்கள்.உங்களுக்கும் நான் சந்தித்த மனிதர்களை போன்றவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால், நீங்களும் இன்று என்னோடு எமதணியில் நின்று பேசியிருப்பீர்கள். அது அல்லாமல் போனதால் எதிரணியில் சந்தோஷமாக பேசுகிறீர்கள்.

//விருத்தினர் சங்கடம் சங்கடம் என்று கூவி கொண்டே இருக்கின்றார்களே அவர்கள் போன வாரம் கூட தட புடலா விருந்து வைத்தார்கள் அது கூட ஞாபகம் இல்லை போல! //

நான் உங்கள் வீட்டிற்கு வந்தால் என்னை விருந்தினர் என்று கூறுவீர்களா? தோழி என்று கூறுவீர்களா? உங்கள் பள்ளியில் உடன் படித்த தோழியின் திருமணத்திற்கு சென்று வந்ததை எப்படி குறிப்பிடுவீர்கள்? தோழி வீட்டு திருமணத்திற்கு சென்று வந்தீர்கள் என்றா? விருந்தினரின் திருமணத்திற்கு சென்று வந்தீர்கள் என்றா? ஆக, போன வாரம் தடபுடலாக நாங்கள் தந்த விருந்து நண்பர்களுக்கு தான். அதுவும் ஒரே ஒரு அரை நாள் தான். வந்தார்கள். நாங்கள் செய்ததை அவர்களே பரிமாறி கொண்டு, எங்களுக்கும் பரிமாறிச் சென்றார்கள். இதற்கு முன்பு எங்களையும் இது போல அழைத்து விருந்து தந்திருக்கிறார்கள். இதையே தான் விருந்தினரிடமும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

நான் எங்கள் வீட்டிற்கு பேருக்கேனும் ஒருமுறையாவது உங்களை அழைகாமல் நான் மட்டும் தொடர்ந்து உங்கள் வீட்டிற்கு வந்து சென்றால் எப்படி உணர்வீர்கள்?. அன்புத் தோழியே, பேசுவது நன்றாகவே இருக்கும். செயல்முறையில் பார்த்தால் தான் அதன் நிதர்சனம் புரியும் :)எப்போதோ நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கும் எனக்கு போனவாரம் நடந்து மறந்து விடும் அளவிற்கு ஞாபக சக்தி கெட்டு விடவில்லை. நன்றாகவே நினைவிருக்கிறது :D

//சொல்வதை எல்லாம் சொல்லிவிட்டு நான் பல பேரை சொல்லவில்லை சில பேரை மட்டுமே சொல்கிறேன் என்றால் அதில் என்ன தர்மம் நீங்களே சொல்லுங்கள் நடுவரே!//

நடுவரே, ஒரு பழக்கடைக்கு செல்கிறீர்கள் அங்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள பழங்கள் அழுகி கிடக்கின்றன. அதை வைத்து அந்த கடையில் உள்ள அனைத்து பழங்களுமே கெட்டு போயிருக்கும் என்றோ, ஒரு குறிப்பிட்ட பழங்கள் நன்றாக இருக்கும் பட்சத்தில் அதை வைத்து அந்த கடையில் ஒரு அழுகல் கூட இல்லை என்றோ உங்களால் நிச்சயமாக சொல்ல முடியுமா? நாங்கள் சந்தித்த மனிதர்களின் குணாதிசயங்களை தான் சொன்னோம். இதில் எப்படி இல்லாத ஒன்றை கூட்டியோ குறைத்தோ சொல்ல முடியும். அப்படி என்றால் எதிரணி தோழி சொல்வது போல அவர் இதுவரை சந்தித்த மனிதர்கள் அத்தணை பேரும் இவர் சந்தோஷப்படும் விதத்தில் தான் நடந்திருப்பார்களா? அப்போது இவரும் சில, பல மனிதர்களை குறிப்பிட நேருமல்லவா? அதையே தான் நானும் சொன்னேன். நாங்கள் சந்தித்த நல்ல மனிதர்களையும் எப்படி இந்த லிஸ்டில் சேர்க்க முடியும்?

//எதிரணி தோழியை ஒன்று கேட்குறேன் உங்கள் வீட்டுக்கு விருதாளிகள் வந்தாலே ஐயோ வந்துடிச்சி சங்கடம் என்று நினைப்பீர்களா இல்லை சந்தோஷபடுவீர்களா! //

சங்கடத்தை சங்கடமாக தான் உணர முடியும். சந்தோஷத்தை சந்தோஷமாக தான் உணர முடியும்.மிளகாய் பழம் இனித்ததாக சரித்திரம் உண்டா? தேன் கசந்ததாக சரித்திரம் உண்டா?

//எத்தனை பேர் இப்படி இருப்பார்கள் 10 % இருப்பர்களா? மீதியுள்ள 80 % பேர் அவர் அவர் வேலையை பார்பவர்கள். அவர்கள் ஒரு நாள் ஒருத்தர் வீட்டிற்கு வருவதால் எப்படி சங்கமாகும். //

எதிரணி தோழியே, தயவு செய்து என்னுடைய முன் பதிவுகளை படித்து பாருங்கள். அதில் நான் ஒரு நாள் விருந்தாளிகள் வருகை சங்கடம் தருகிறது என்று எங்காவது குறிப்பிட்டுள்ளேனா என்று சொல்லுங்கள். தோழியே, நாங்களும் விருந்தோம்பல், தமிழ் பண்பாடு, கலாச்சாரம், மனிதநேயம் இத்யாதி..இத்யாதிகள் நிறைந்த இந்த மண்ணில் தான் பிறந்துள்ளோம்.பலநாள் தங்கும் சங்கடங்களை தான் இங்கே கொட்டி தீர்த்து கொண்டுள்ளோம்.

//உங்களுக்கு சங்கடமாக தோன்றினால் போன் பண்ணும் போதே நான் இங்கு இல்லை வெளியில் இருக்கிறேன் என்று சொல்ல வேண்டியதுதானே?//

எங்களுக்கு அப்படியெல்லாம் போன் போட்டு சொல்ல மாட்டாங்களே. பஸ் ஸ்டாண்டுல வந்து தானே போன் போடுவாங்க. இதோ வீட்டுக்கு வந்துட்டே இருக்கோம். ஆக வேண்டியத கவனிங்கன்னு :(

//ஏழை வீட்டிலும் விருதாளிகள் வருவார்கள். ஆனால் அந்த வீட்டில் உள்ளவர்கள் தினமும் கூழ் கஞ்சி என்று குடித்துக்கொண்டிருந்தாலும் நம்மை தேடி வருபர்களை கண்டிப்பாக சங்கமாக நினைக்க மாட்டார்கள். அவர்களிடம் இருக்கோ இல்லையோ கடன் வாங்கியாவது நன்கு சமைத்து அன்போடும் பண்போடும் பரிமாறுவார்கள் ஒருபோது சங்கடமாக நினைக்க மாட்டார்கள். //

அன்பானவர்கள் எப்போதும் கடனோ, உடனோ, வட்டிக்கோ, நகையை வைத்தோ தான் விருந்தினர்கள் மனம் கோணாமல் அன்போடு கவனித்து அனுப்புவார்கள். அந்த மரியாதையை வரும் விருந்தினர்களும் காத்துக் கொள்ள வேண்டும் அல்லவா? இந்தமுறை நாம் சென்றோம் அடுத்தமுறை நம் வீட்டிற்கு அவர்களை அழைக்கவேண்டும் என்று நினைக்கலாம் அல்லவா? ஆனால் இதெல்லாம் நடக்காதே.

//அதுவும் நீங்கள் சொல்வது அதே 10% சதவிதம்தான் இருக்கும்.இப்படி ஒரு சிலரை வைத்து எல்லோரும் அப்படி என்று நினைக்க கூட நடுவரே//

ஆங்க்க்க்க். எதிரணி தோழியே எங்களுக்கு வாய்த்த சந்தோஷமான விருந்தினர்கள் 10% தான். மற்றவை எல்லாம் நான் மேலே குறிப்பிட்ட வகையினர் தான். நாங்கள் சந்தித்த மனிதர்களை வைத்து உலகமே அப்படித்தான் என்று நாங்களும் குறிப்பிடவில்லை. நீங்கள் சந்தித்தவர்களை வைத்து குறிப்பிட வேண்டாம் என்று தான் சொல்லிக் கொண்டுள்ளோம்.

அன்பான நடுவரே, தீர்ப்பை இப்போது தான் பார்த்தேன். நீங்கள் இதற்கு பதிவு போடவில்லையென்றாலும் பரவாயில்லை. அந்த தோழிக்கு பதிலளிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு. விடாது கருப்பு :)))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

.வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி.அதிகம் கலந்து விவாதிக்க ஆசைபட்டேன்.தமிழ் ஃபான்டில் அதிகம் பயன்படுத்தி எழுதமுடியவில்லை.ஆனாலும் ஒரு பதிவு இட்டாலும் நான் வாதிட்ட அணி வெற்றி பெற்றதில் எனக்கு இரட்டிப்பு சந்தோசம்.ஆனாலும் நாட்டாமை பானியில் அருமையான தீர்ப்பு சொன்ன சகோதரி வனிதாவிற்கு நன்றிகள் ,வாழ்த்துக்கள் பல.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

இந்த பட்டியில் வந்த ஒவ்வொரு பதிவும் நான் பட்ட கஷ்டத்தையும், அடைந்த மகிழ்ச்சியையும் திரும்பி பார்க்க வைத்தது. கண் முன் சிறு வயது நினைவுகள் படம் போல் ஓடியது. எத்தனை கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும் கடைசியில் அந்த சின்ன சின்ன மகிழ்ச்சியே அந்த வாழ்க்கை இப்போதில்லையே என்று ஏங்கவும் கண்ணில் நீரை வரவழைக்கவும் செய்தது. அதுவே இந்த தீர்ப்புக்கு காரணம். இப்படி ஒரு நல்ல தலைப்பை தந்து வாழ்க்கையை ஒரு முறை திரும்பி பார்க்க வைத்த கல்பனாக்கு மனமார்ந்த நன்றிகள்.

உங்கள் அனைவரது பதிவும் சிரிக்க வைத்தாலும், அதில் இருந்த உண்மைகள் சிந்திக்கவும் வைத்தது. பாராட்ட வார்த்தை இல்லை. அனைவருக்கும் என் நன்றிகள் கோடி கோடி.

-------------

அன்பு தேவி... பொதுவாகவே பட்டி திங்கள் அன்று துவங்கி திங்கள் அன்று காலை (சமைத்து அசத்தலாம் பகுதி துவங்கும் போது) முடிவுக்கு வந்துவிடும். சிலருக்கு வேலை காரணமாக தீர்ப்பு தாமதமாகும். அப்படி தான் இன்றும் நான் தாமதமாக வந்தேன். முன்பெல்லாம் ஞாயிறு அன்றே தீர்ப்பு வந்துவிடும். இருந்தாலும் உங்களின் ஏமாற்றத்துக்காக நான் வருந்துகிறேன். மன்னியுங்கள்.

-------------

ரேவதி... மிக்க நன்றி. மலர்கள் மிகுந்த அழகு.

-------------

கல்பனா... விடுவதாகவே இல்லை போலுமே!!! ;) மிக்க நன்றி கல்பானா.... நல்ல தலைப்பு... காலத்துக்கேற்ற தலைப்பு. இன்னும் காலம் போக போக விருந்தினரே இல்லாமல் கூட போகலாம்... இப்போதே முன் போல் யாரும் வருவதில்லை, வந்தாலும் அன்போடு பழகுவதில்லை, ஒருவருக்கொருவர் உதவும் அன்பான உறவுகளும், நண்பர்களும் இருந்தால் உலகம் மகிழ்ச்சியானது தான். என்ன செய்ய... எப்போதும் அமைவதில்லையே. உங்கள் அனுபவம், எனக்கும் இருந்ததால் நன்றாக அந்த வலியை உணர முடிந்தது.

//எங்களுக்கு வாய்த்த சந்தோஷமான விருந்தினர்கள் 10%// - அந்த 10% க்கு கொடுத்த மரியாதை, காட்டிய அன்பே இந்த தீர்ப்பு.

--------------

ஷேக்... மிக்க மகிழ்ச்சி. அடுத்த பட்டிக்கு நேரமே வந்து நிறைய பதிவு போடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல தீர்ப்பு,இப்படித்தான் நீங்க சொல்லுவீங்க என்று தெரியும்,என்னதான் எதிரணியில் வாதிட்டாலும்,வெளிநாட்டில் தனியா இருக்கும் போது யாராவது வந்தால் சந்தோஷமா தான் இருக்கும்.ஊரில் ஏதாவது ஃபங்ஷன் என்றால் கலந்துக்க முடியலையே என்று ஏக்கமா இருக்கும்.
கலந்து கொண்ட தோழிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

வனி
தீர்ப்பு தெளிவான விளக்கத்துடன் அழகாக இருந்தது.. நன்றி.. கிட்டத்தட்ட நட்பு உறவு பட்டி போல எல்லாரும் எமோஷன்ஸை எழுப்பி நடமாட விட்டுட்டாங்க..

சொல்ல போனால் எதிரணி தோழிகளுக்கும், நடுவருக்கும் உறவு மூலம் ஏற்பட்ட கசப்பான சம்வங்கள் எனக்கும் இல்லாமல் இல்லை.. அக்கரைக்கு இக்கரைக்கு பச்சை போலவே.. நானும் பல காயங்களை அனுபவித்தவள் தான்.. ஆனாலும் ஒரு வித மகிழ்ச்சி தருவதும் உறவுதான்.. கஷ்டப்படுத்திய யாரோ பலருக்காக புனிதமான சிலரை விட்டுக் கொடுக்க இயலாது.. என்றும் அன்புடன் இருக்கும் அந்த ஒரு உறவுக்கு அங்கீகாரமான சமர்ப்பணமே என் வாதம்.. இதை ஒரு நல்ல தருணமாக நினைத்து உண்மையான பாசத்துடன் பழகும் உறவுகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..
கல்ப்ஸ் தான் கடைசி வரை விடல.. அம்மணி விருந்தெல்லாம் நல்லா நடந்ததுல்ல.. இளவரசி பதிவுக்கு எதிர்பதிவு போடவே பயமாயிருந்தது.. வழக்கம் போல நித்திலா கடைசியில் வந்து கலக்கிட்டாங்க.. இந்த முறை ஹர்ஷா களத்தில் குதிச்சு பயமுறுத்திட்டாங்க.. எங்க அணி தோழிகள் வாதம் சூப்பர்..சீதாலக்‌ஷ்மி ஒரு பதிவு நச்சுனு போட்டு போயிட்டாங்க..இம்முறை ரேவதியும் கலக்கிட்டாங்க.. யாழினி, ஸ்வர்ணாவும் சொல்லவே வேண்டாம்

சூப்பரான தலைப்பு குடுத்த வனிக்கு ஒரு ஜே... வாழ்த்துக்கள்...;)

பட்டி என்றாலும்.. வாதத்திற்காக பேசினாலும் எதிரணி தோழிகள் உறவினரை எப்படி உபசரிப்பார்கள் என நல்லாவே தெரியும்.. ;).. அவர்களின் வாதத்தை வைத்து யாரும் மாற்றி எடை போட முடியாது.. எங்க அணியை செலக்ட் செய்து இருந்தாலும் சூப்பரா பேசியிருப்பாங்க.. ;) நம்ம தான் 2 நிமிடம் பார்த்து, அதை பற்றி 2 மணி நேரம் எழுதுபவர்கள் ஆயிற்றே..;)

மீண்டும் நன்றி கலந்த வாழ்த்துக்கள் வனி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

தீர்ப்பு மிகவும் அருமையான தீர்ப்பு நாட்டாண்மை அவர்களே நன் கண்ட அனுபவமே அப்பா ஹார்ட் அட்டாக் வந்துதவிக்கும்போது நான் 9ம் வகுப்பு படிக்கும் சின்னப்பெண் நானதான் முதல் பெண் எல்லாமே அப்பாதான் எங்களுக்கு அப்பாக்கு அண்ணன்கள் 4 பேர் அக்கா 2 பேர் அம்மாவிற்கு 4அக்காமார்கள் 2அண்ணன் மார்கள் யாருமே உதவ முன் வரல எல்லா சொந்தப்ந்தமும் வீட்டசுத்தி இருக்கரவங்கதான் ஒரு சிலரை தவிர நான் போய் அட்டோ அழைதுக்குகொண்டு வந்து சி.எம்சில அட்மிட் பண்னி அப்பவை குணமாக்கினோம் யாரும் பாக்ககூட வரல(அவங்களுக்கு நாங்க சொல்லலயாம் எந்தவார்ட்ல அப்பா இருகாங்கனு] கடவுள் புண்ணியதுல அப்பா நல்ல இருக்கார் இருந்தாலும் ஒருசிலரை தவிர நல்லவர்களும் இருக்கத்தானே செய்கிரார்கள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பாணியில் பேசினோம் வழ்த்துக்கள் இதாங்க என்னோட மலர் பொக்கே

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

மேலும் சில பதிவுகள்