கோடி அழகு கொட்டி கிடக்கும் கொடைக்கானல்....

அறுசுவை அன்பர்களே! நான் சமீபத்தில் சென்று வந்த கொடைக்கானல் சுற்றுலா அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலாக உள்ளேன்...
ரெண்டு வருஷமா போகலாம்னு பிளான் பண்ணி இப்பதான் போயிட்டு வந்தோம், காத்திருந்தது வீண் போகல என்ன ஒரு அழகான இடம் கொடைக்கானல்... அங்க இயற்கை இன்னும் இயற்கையாகவே இருக்குன்னு தான் சொல்லணும், எங்க பார்த்தாலும் பச்சை பசேல்ன்னு ரம்மியமா கூடவே சிலு சிலுன்னு கிளைமேட்..

சென்னைல இருந்து பஸ்ல தான் கிளம்பினோம், கொடைக்கானல் தானே போறோம், A / C பஸ் எதுக்கு Non A / C ல போலாம்னு ரொம்ப அறிவாளிதனமா? நான்தான் முடிவெடுத்தேன்... அதற்கான பலனை நல்லாவே அனுபவிச்சோம்.. அவனுல வச்ச கேக் மாதிரி வெந்துட்டோம்\.. ஷவர திறந்து விட்டது போல வேர்வையில் பசுகுள்லையே குளிச்சாச்சு... இரவு 7 மணிக்கு எடுத்த பஸ் மறுநாள் காலை 6 மணிக்கு திண்டுக்கல்லை அடைந்தது.. திண்டுக்கல் கிளைமேட் ரொம்ப அற்புதமா இருந்தது, எங்க பார்த்தாலும் தென்ன தோப்பு, பறவைகள் சத்தம்ன்னு நல்ல ஹொலிடே மூட கெளப்பி விட்டது..
திண்டுகல்லுல இருந்து கொடைக்கானல் மலையேற்றம் தொடக்கியது..

மலை பாதை போற வழியெல்லாம் பெயர் தெரியாத பலவகை மரங்கள், கீச் கிச்சுனு பறவைகளோட சத்தம் இது "எங்க ஏரியா உள்ள வராதனு" சொல்ற மாதிரி இருந்தது.. பல ஹேர் பின் வளைவுகள சுத்தி சுத்தி ஒரு பால்ஸ அடைந்தோம்..முதல்ல நாங்க பார்த்த இடம்: வெள்ளி நீர்வீழ்ச்சி - இது கடல் மட்டத்துல இருந்து 5900 அடி உயரத்துல இருக்காம், பார்க்க பளீர்ன்னு வெள்ளிய உருக்கி கொட்டுறத போல இருக்கறதால இந்த பெயராம்... குற்றாலம் அளவுக்கு அங்க தண்ணீர் கொட்டலனாலும் பார்க்க பெயருக்கு தகுந்த மாதிரி அழகா இருந்தது... இந்த இடம் கொடைக்கானல் போற வழியில இருக்குது அங்க அப்படியே ஒரு டீய குடிச்சிட்டு திரும்பவும் எங்க மலை ஏற்றம் தொடங்கியது...
ஒரு வழியா மலையேறி ரூம் எடுத்து பிரெஷ் ஆனோம்.. (நாங்க போனது நல்ல சீசன் டைம் ஏப்ரல், மே, ஜூன் தான் அங்க சீசன் டைம்மாம், அதனால ரூம் வாடகைலாம் அதிகம், இதுவே half சீசன்னா பாதியா குறைசிடுவாங்கலாம்...)

லோக்கலில் கார் வாடைக்கு எடுத்தோம், எங்கள் டிரைவரே கைடாக சுற்றுலா தளங்களுக்கு கூட்டி சென்றார்.. முதலில் சென்றது கோக்கர்ஸ் வால்க் - இது ஒரு நீளமான மலை பாதை, கோக்கர்ன்னு ஒரு வெள்ளைக்காரர் அந்த வழியா நடந்து போய் அந்த அழகான இடத்த கண்டுபிடிச்சதனால இந்த இடத்துக்கு கோக்கர்ஸ் வால்க்குனு பெயர் வந்ததாக எங்க டிரைவர் சொன்னார் (எந்த அளவுக்கு உண்மையோ? யாம் அறியோம்....) அங்க இருக்கற டெலஸ்கோப் வழியா பார்த்தா வைகை அணை, பெரியகுளம் நகர் எல்லாம் தெரியுமாம், ஆனா எங்களுக்கு ஒரே புகைமூட்டமா சாரி பனிமூட்டமா தான் தெரிந்தது.. எங்க டிரைவர் வெயிட் பண்ணுங்க பனிமூட்டம் விலகினா நல்ல வியூ கிடைக்கும்ன்னு சொன்னார், பனி கொஞ்சம் விலகின அப்பறம் தான் தெரிந்தது, அப்ப்ப்பா.... நாங்க எவ்ளோ உயரமான இடத்துல நிக்கரோம்ன்னு, கிழே பச்சை பசேல்ன்னு என்ன ஒரு அழகு.. நாங்க மேல ஏறி வந்த மலை பாதை ரொம்ப தெளிவா தெரிஞ்சது, இதெல்லாம் கொஞ்ச நேரம் தான் திரும்பவும் எங்கிருந்தோ யாரோ துரத்துறா மாதிரி ஓடி வந்த பனி அந்த இடத்தையே மறைச்சிடுச்சு... திட்டு திட்டா இருக்கற அந்த பனிய பார்த்தா நாங்க மேகத்து மேல நிக்கற மாதிரி ஒரு பீலிங்கு... சரின்னு அடுத்த இடத்துக்கு போலாம்ன்னு கிளம்பினோம்...

அடுத்து நாங்க சென்றது "பிலோமென் சர்ச்" (Philomen Church) - இது 100 ஆண்டு காலம் பழமையான சர்ச். சின்ன சர்ச் தான் ஆனா பார்க்க ரொம்ப அழகா இருந்தது. இந்த சர்ச் வெறும் செங்கல், சுண்ணாம்புமண் வச்சு கட்டினாங்களாம்.. ஒ அப்படியான்னு நா நம்பாமல் கேட்டதற்கு எங்கள் டிரைவர் எங்களை சர்ச்சின் பின்புறம் கூட்டி சென்று சிறியதாக பெயர்ந்து இருக்கும் சர்ச்சின் சுவரை காட்டினார்.. அவர் சொன்னது உண்மைதான், அந்த பகுதியை நாங்கள் தொட்டு பார்த்த போது சுண்ணாம்புமண் உதிர்ந்தது.. ரொம்ப ஆச்சரியமா போச்சு, இந்த காலத்துல கான்க்ரீட் காட்டிடங்களே 50 வருஷம் கூட நீடிக்க கஷ்டபடுது, வெறும் சுண்ணாம்பால கட்டின இந்த சர்ச் 100 வருஷமா எந்த பாதிப்பும் இல்லாம பாதுகாத்து வச்சு இருக்காங்களே... இதே மாதிரி அச்சு அசலான இன்னொரு சர்ச் இங்கிலாந்தில் இருக்காம்... சர்ச்சுக்கு வெளியில் ஒரு கடையில் மரங்களால் ஆன வித விதமான பொருட்கள் விற்பன்னைக்கு வச்சு இருந்தாங்க, அதுல என்னை ரொம்ப கவர்ந்தது மரக்கட்டையால் செய்யப்பட்ட கையில் அணியும் ப்ரசெலேட்கள், அதை பார்த்தவுடன் "கொடைக்கானலில் இருந்து எங்களுக்கு என்ன வாங்கி வருவன்னு" கோரசாக கேட்ட என் அலுவலக தோழியரின் முகம் தான் நினைவுக்கு வந்தது, டிசைன்னுக்கு ஒன்னாக 1 டசன் ப்ரேசெலேட்களை அள்ளி விட்டேன்...

இந்த இடத்திற்கு சென்று வந்த அனுபவம் என்னால் மறக்கவே முடியாது... அங்கு போகும் வழியில் நான் பார்த்த காட்சிகள் ஏதோ கனவுலகத்தில் இருப்பது போலவே ஒரு பிரம்மையை ஏற்படுத்தியது.. இந்த இடத்திற்கு செல்ல கொடைக்கானல் பஸ் ஸ்டாண்டில் இருந்து 8 கிலோ மீட்டர் பயணித்து வந்தோம், வண்டியில் இருந்து இறங்கி எங்க அந்த டால்பின் நோஸ் என்று சுற்றம் முற்றும் பார்த்து ஆவலாக கேட்டேன்.. 6600 அடி ஆழத்தில் செல்லும் ஒரு மலை பாதையை காண்பித்து இதன் வழியே சென்றால் டால்பின் நோஸ் வரும், அங்கிருந்து பார்த்தல் பழனி மலை, பெரியகுளம், டாம் எல்லாம் தெரியும் என்றார் எங்கள் டிரைவர்.. அந்த பாதையில் இரண்டு அடி எடுத்து வைப்பதற்குள் மூன்று முறை தடுக்கி விழ பார்த்தேன், அவ்வளவு கரடு முரடான மோசமான மலை பாதை... நாங்கள் கீழே செல்ல ஆரம்பித்த போது, அந்த பாதை வழியாக நிறைய சுற்றுலா பயணிகள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க மேலே ஏறி வந்து கொண்டு இருந்தனர், அந்த கூட்டத்தில் இருந்த ஒரு வாண்டு என்னை பார்த்து “தீதி 2 kms 2 hrs” என்று சொல்லி கொண்டே சென்றது.. இரண்டு மணி நேரம் ஆகுமா உள்ளே சென்று வர என்று என்னவரை பார்த்தேன்... அவரோ, அவன் சின்ன பையன் தெரியாமல் சொல்றான் அவ்ளோ நேரம் எல்லாம் ஆகாது என்றார்.. அந்த மலை பாதை வழியே கீழே செல்ல செல்ல பல ஆச்சிரியங்கள் காத்திருந்தது...

எனது பத்து நிமிட நடையில் ஒரு விஷயம் தெளிவாக தெரிந்தது, என் செருப்பை போட்டு கொண்டு அந்த சரிவான மலை பாதையில் செல்ல முடியாது என்று... என் தத்தக்கா பித்தக்கா நடையை பார்த்த ஒரு பெண், உங்க செருப்பை கழட்டிட்டு ஆங்காங்கே தென்படும் டீ கடையில் இருக்கும் ரப்பர் செருப்பை வாங்கி போட்டு கொள்ளுங்கள் வெறும் பத்து ரூபாய் தான், அதை போட்டு கொண்டால் தான் நடக்க முடியும் என்றார். பத்து ரூபாய்க்கு செருப்பா? ரொம்ப சீப்பா இருக்கே, இது தெரியாமல் இவ்ளோ தூரம் கஷ்டபட்டு நடந்து வந்தேனே என்று பக்கத்தில் தெரியும் ஒரு டீ கடைக்கு ஆவலாக சென்றேன், அந்த கடையை பார்த்தால் செருப்பு விற்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை, மிகவும் தயங்கி அந்த கடைக்கார பெண்மணியிடம், இங்க செருப்பு......... என்று இழுத்தேன், அவரோ கடைக்குள்ள வாம்மா எந்த செருப்பு உனக்கு கரெக்டா இருக்கோ அதை போட்டுக்கோ என்றார்.. அட கடைக்குள்ள செருப்பு இருக்கான்னு போய் பார்த்த அது ஏற்கனவே மற்றவர் உபயோகித்த செருப்பு.. பிறகு தான் புரிந்தது பத்து ரூபாய்க்கு செருப்பு, விற்பனைக்கு அல்ல வாடகைக்கு என்று... எனக்கு நானே "தொப்பி தொப்பி" ன்னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டு, என் செருப்பை கலட்டி அந்த கடையில் விட்டுட்டு அவர்கள் தந்த செருப்பை மாட்டி கொண்டு நிமிர்ந்தால் என்னவர் என்னை பார்த்து நக்கலாக சிரித்து கொண்டு நிற்கிறார்... எப்படி தான் மனசுல இருக்கறத கேட்ச் பண்றாங்களோ... ம்ம்ம்ம்ம்ம்ம்... "விட்ரா விட்ரா கைபில்லை"ன்னு என் பயணத்தை தொடர்ந்தேன்...

முதலில் கூலாங்கற்கள் நிரம்பி தொடங்கிய அந்த பாதை, சிறிது தூரம் சென்றதும் மரவேர்கள் நிரம்பிய பாதையாக மாறியது, இப்பொழுது போட்டு இருக்கும் இந்த ரப்பர் செருப்பு பயபடாமல் நடக்க எனக்கு உதவியது... போற வழியில் ஒரு சின்ன கடையில மரதக்காளி வாங்கி சாப்பிடுங்க, இதுல அஞ்சு வகை சுவை இருக்கு வேற எங்கயும் கிடைக்காதுன்னு கூப்பிட்டாங்க, என்னவர் வா சாப்பிடலாம் என்று அங்கு உக்கார்ந்து விட்டார்.. நான் நார்மல் தக்காளியையே ராவா சாப்பிட மாட்டேன் இதுல மரதக்காளி வேறயா? நீங்களே சாபிடுங்கன்னு மறுத்தேன்.. அந்த பெண்மணி, பார்க்க பெரிய இலந்தை பழம் போல் சற்று பெரிதாக இருக்கும் அந்த பழத்தை கழுவி இளநீர் சீவுவது போல் மேல் பகுதியை மட்டும் வெட்டி கொடுத்தார்.. அதை எப்படி சாப்பிட வேண்டும் என்றும் சொல்லி கொடுத்தார்.. முதலில் பழத்தை வெட்டியவுடன் வரும் சாரை சுவைக்க வேண்டும் - அது இனிப்பாக இருக்கும், பின் அதை மெல்லமாக அழுத்தி உரிய வேண்டும் - அதிலிருந்து தக்காளி விதையோடு கலந்த சாறு வரும் - அது புளிப்பாக இருக்கும், பின் அந்த பழத்தை சற்று அழுத்தி உரிந்தால் - அதன் உள்சதை துவர்ப்பாக உள்ளது, அதற்கு மேல் அதை சுவைபதை நிறுத்தி விட வேண்டும், இன்னும் அழுத்தினால் முழுதாக கசப்பு சுவை வந்துவிடும்... ஐந்தாவது சுவை? சாரி அவங்க சொல்லல, நானும் கேக்கல.... இந்த பழத்தை சமையலுக்கு யூஸ் பண்ணுவீங்கலான்னு நா கேட்டதற்கு, அவங்க: சமயலுல சேர்க்க மாட்டோம் இத வச்சி சட்னி மட்டும் செய்வோம் என்றார்..
என்னவர் நல்லா இருக்கு டேஸ்ட் பண்ணி பாருன்னு வற்புறுத்தியதால் சுவைத்தேன், வியந்தேன்.... சின்னதா ஒரு பழம் சாபிட்டவுடனே சோடா குடிச்சத போல பெரிதா ஒரு ஏப்பம் வந்தது... அந்த பழத்துல அந்த அளவுக்கு ஜீரண சக்தி இருக்கு... (கொடைக்கானல் போறவங்க, கண்டிப்பா அந்த பழத்த டேஸ்ட் பண்ணி பாருங்க... )

நானும் கொடைக்கானல் போயிருக்கேன். கல்லூரி நாட்களில். கண்டிப்பா இந்தியா போனா திரும்பவும் போகிறோம். நீங்க எழுதி இருக்கும் எழுத்துக்காகவே ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு தீபா,

அழகாக சொல்லிட்டிருக்கீங்க. மரத் தக்காளி, இதுவரை கேள்விப்படாத ஒன்று.

அன்புடன்

சீதாலஷ்மி

தீபா நல்லா இருக்குங்க உங்க பயண அனுபவங்களை படிப்பதற்கு. உங்க கூடவே நானும் வந்த மாதிரி இருக்கு. அப்பாலே என்னாச்சு. மேல சொல்லுங்க

உங்க பதிவிற்கு ரொம்ப நன்றி.... என்னடா நாம பாட்டுக்கு எழுதிட்டே போறோம் யாராவது படிக்கிறாங்களா இல்லையான்னு மைல்டா ஒரு டவுட் இருந்தது இப்ப க்ளியர் ஆகிடுச்சு... இனிமேல் சந்தோஷமா என் கோடை பயணத்தை உங்களுடன் தொடருகிறேன்.....

மேலும் சில பதிவுகள்