படித்தவை பிடித்தவை....

தோழிகளே.. நீங்க நிறைய புத்தகங்கல் படிச்சு இருப்பீங்க.இல்ல இன்டெர் நெட்டில் பார்த்து இருப்பீங்க...அதை எல்லாம் பகிர்ந்துக்கலாமே... எல்லாருக்கும் உதவியா இருக்கும் இல்லையா...

முதலில் என் மனதை கவர்ந்த உற்சாகம் தருமாறு உள்ள ஒரு கட்டுரையை பகிர்ந்துக்க விரும்புகிறேன் ...கண்டிப்பாக எல்லா தோழிகளும் படிக்குமாறு தாழ்வுடன் கேட்டு கொள்கிறேன்

மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்தி

ஆழ்மனதை மாபெரும் சக்தி படைத்த ஆயுதமாக மாற்ற ஒருமுனைப் படுத்தப்பட்ட மனதைப் போலவே உதவுகிற இன்னொரு முக்கியப் பயிற்சி மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சி.

வார்த்தைகளைக் காட்டிலும் அதிகமாக ஆழ்மனதை எட்ட வல்லது காட்சிகள். அந்தக் காட்சிகள் நிஜமாக நடப்பவைகளாகக் கூட இருக்க வேண்டியதில்லை. அவை கற்பனையாக இருந்தாலும் கூட தத்ரூபமாகக் கற்பனையில் காண முடிந்தால் அந்தக் கற்பனைக் காட்சிகளையே நிஜமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடும். முன்பே குறிப்பிட்டது போல ஆழ்மனம் பிரமிக்கத்தக்க சக்திகளைப் பெற்றிருந்தாலும் தனக்கு அளிக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அலசி ஆராய்வதில்லை. அதனால் மனதில் உருவகப்படுத்தப்படும் எல்லாக் காட்சிகளையும் உண்மையான தகவல்களாகவே எடுத்துக் கொண்டு அதற்கேற்றாற் போல இயங்குகிறது. இதை ஆராய்ச்சிகளின் மூலம் கண்டு பயன்படுத்திக் கொண்டு சிறந்தபலன் கண்டவர்கள் ரஷியர்கள்.

ஆழ்மன சக்திகள் குறித்து முதல் முதலில் அதிகமாக ஆராய்ந்த நாடுகளில் முதலிடம் வகித்தது ரஷியா என்றே சொல்லலாம். வாசிலிவ் என்ற ஆழ்மன ஆராய்ச்சியாளர் செய்கையால் கவரப்பட்டு ரஷிய சர்வாதிகாரி ஸ்டாலின் லெனின்கிராடு பல்கலைகழகத்தில் ஆழ்மன ஆராய்ச்சிக் கூடம் ஏற்படுத்த அனுமதி அளித்தது பற்றி முன்பு கூறியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அங்கு நடந்த ஆராய்ச்சிகளில் ஸ்டாலினும், பிந்தைய ஆட்சியாளர்களும் ஆர்வம் காட்டினார்கள்.

1976ல் மாண்ட்ரீல் நகரில் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் மிக அதிகமான கோப்பைகளைத் தட்டிச் சென்ற கிழக்கு ஜெர்மானிய வீரர்கள் ஆழ்மனப் பயிற்சிகளில் visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தனர் என்ற செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது. அதைப் படித்தவுடனேயே 1980ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாரான ரஷியா தங்கள் நாட்டிலேயே நடக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் மிகச் சிறப்பாக சோபிக்க வேண்டும் என்று எண்ணி தங்கள் விளையாட்டு வீரர்களின் பயிற்சிகளுக்கு அந்தப் பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்ள முடிவு செய்தது. அந்தப் பயிற்சிகளையே ஆராய்ச்சிகளாகவும் மாற்ற எண்ணிய ரஷியர்கள் ஆரம்பத்திலேயே தங்கள் விளையாட்டு வீரர்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்தனர்.

’ஏ’ பிரிவில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு நூறு சதவீதம் உடல் ரீதியான விளையாட்டுப் பயிற்சி மட்டும் அளிக்கப்பட்டது. அடுத்ததாக ’பி’ பிரிவில் 75 சதவீதம் உடல் ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும் 25 சதவீதம் மன ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. அடுத்ததாக ‘சி’ பிரிவில் உடல்ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும், மனரீதியான பயிற்சிகளும் 50, 50 சதவீதமாக அளிக்கப்பட்டது. கடைசியாக ‘டி’ பிரிவில் உடல் ரீதியான பயிற்சிகள் 25 சதவீதமும், மனரீதியான பயிற்சிகள் 75 சதவீதமும் அளிக்கப்பட்டது. கடைசியாக 1980 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முடிந்த போது கணக்கிட்டதில் அந்த விளையாட்டு வீரர்களில் மிக அதிகமான வெற்றிக் கோப்பைகளைப் பெற்றது ‘டி’ பிரிவில் பயிற்சி பெற்ற வீரர்கள் தான் என்பதை ரஷிய ஆராய்ச்சி தெரிவித்தது. அதாவது 25 சதவீத உடல் ரீதியான பயிற்சிகளும், 75 சதவீத மனரீதியான பயிற்சிகளும் பெற்றவர்கள் தான் அதிகக் கோப்பைகள் பெற்றவர்கள். மற்ற பிரிவினர்களிலும் மனரீதியான பயிற்சிகள் பெற்ற அதிக விகிதத்தின் படியே அதிகக் கோப்பைகள் பெற்றிருந்தார்கள்.

மன ரீதியான பயிற்சிகளில் பெரும்பாலும் அவர்கள் பயன்படுத்தியது மனக்கண்ணில் வெற்றியைக் காட்சியாகக் காணும் பயிற்சியைத் தான். இது விளையாட்டு உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். அதன் பிறகு மேலை நாடுகளில் சர்வ தேசப் போட்டிகளில் பங்கு பெறும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியளிக்க விளையாட்டு மனோதத்துவ நிபுணர் (sports psychologist) தனியாக நியமிக்கும் வழக்கம் ஆரம்பித்தது. 1970 களில் மொத்த விளையாட்டுகளுக்கும் சேர்த்து ஓரிரண்டு விளையாட்டு மனோதத்துவ நிபுணர்களை மட்டும் வைத்திருந்த மேலை நாடுகளில் பல இப்போது ஒவ்வொரு விளையாட்டின் குழுவிற்கும் தனித்தனியாக விளையாட்டு மனோதத்துவ நிபுணரை நியமிக்கின்றன.

டென்னிஸ் வீரரான ஆண்ட்ரி அகாசி, கால்ஃப் வீரரான ஜேக் நிக்ளாஸ், கால் பந்தாட்ட வீரர் பீலே போன்றவர்கள் தங்கள் துறையில் சிகரத்தை எட்டி வரலாறு படைத்தவர்கள். அவர்களும், அவர்களைப் போன்ற பல வெற்றி வீரர்களும் visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் தங்கள் வெற்றியை கற்பனையாக உருவகப்படுத்தி காணும் பயிற்சியை செய்பவர்களாகத் தான் இருந்தார்கள்/இருக்கிறார்கள். அது அவர்களுடைய விளையாட்டுப் பயிற்சியுடன் சேர்ந்த ஒரு அங்கமாகவே பிரதான இடம் வகிக்கிறது.

கனடா நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவிற்கு மனோதத்துவ நிபுணராக இருந்த டாக்டர் லீ புலோஸ் (Dr. Lee Pulos) தான் விளையாட்டு வீரர்களுக்கு அளித்த மனபயிற்சிகளில் முக்கியமானவை இரண்டு என்கிறார். ஒன்று தனக்குள்ளேயே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளில் தன்னம்பிக்கை இல்லாதவற்றை அகற்றும் பயிற்சி. ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நிமிடத்திற்கு சுமார் 150 சொற்கள் சொல்லிக் கொள்கிறான் என்றும் வெற்றி பெற விரும்புவன் அச்சொற்களில் தன்னைக் குறைத்துக் கொள்கிற, தன்னம்பிக்கை இழக்கிற, பலவீனமான வார்த்தைகளை எதுவும் சொல்லிக் கொள்ளாமல் இருப்பது மிக முக்கியம் என்றும் சொல்கிற அவர் அதற்கான பயிற்சி முதல் பயிற்சி என்கிறார். (கிட்டத்தட்ட இதையே 53வது அத்தியாயத்தில் நாம் பார்த்தோம்.)

அடுத்த பயிற்சியாக வெற்றியை மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தான் டாக்டர் லீ புலோஸ் கூறுகிறார். வெற்றியை மிகத் தெளிவாக சினிமாப்படம் பார்ப்பது போல் மனத்திரையில் திரும்பத் திரும்ப ஓட்டிப் பார்ப்பது முக்கியம் என்கிறார் அவர். வெற்றி பெறத் தேவையான அத்தனையும் ஒவ்வொன்றாய் சிறப்பாகச் செய்து முடிப்பது போல மனதில் காட்சியைத் தெளிவாக உருவகப்படுத்துவது முக்கியம் என்கிறார். அப்படி உருவகப்படுத்தும் பயிற்சியின் போது ஆட்டத்தின் முழு சூழ்நிலையையும் கொண்டு வர வேண்டும் என்கிறார். ஆட்ட மைதானத்தின் சத்தம், கைதட்டல்கள், தட்பவெப்ப நிலை என்று முடிந்த அளவு எல்லா சின்னச் சின்ன விஷயங்களையும் அந்தக் காட்சியில் தெளிவாகக் கொண்டு வர வேண்டும் என்கிறார். இப்படி மனத்திரையில் தொடர்ந்து காட்சியைக் கண்டு ஆழ்மனதில் ஆழமாகப் பதித்தால் நிஜமான விளையாட்டின் போது ஆழ்மனம் அந்தப் பதிவை படபடப்பில்லாமல் நிஜமாக்கிக் காட்டும். இது விளையாட்டுக்கு மட்டுமல்ல எல்லா இலட்சியங்களுக்கும் மிகச்சரியாகப் பொருந்தி வரும் என்கிறார்கள் ஆழ்மனப் பயிற்சியாளர்கள்.

ஆழ்மனதில் சொற்களாகவும், நம்பிக்கைகளாகவும், காட்சிகளாகவும் நாம் அனுப்பிப் பதிய வைக்கும் விஷயங்கள் நம் தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அழிப்பனவாக இருக்கக் கூடாது என்பதையும் நம் இலட்சியத்தை நாம் வெற்றிகரமாக அடைவது போல மனத்திரையில் நாம் காணும் காட்சிகள் தெளிவாகவும் உணர்வு பூர்வமாகவும் இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் ஆழ்மனதால் நிஜமாக்கியே காட்டப்படும் என்பதையும் நாம் என்றும் மறந்து விடக்கூடாது.

பிரமிக்கத் தக்க சாதனைகள் செய்த பல வெற்றியாளர்கள் தங்களை அறியாமலேயே இப்படி மனத் திரையில் இலட்சியங்களை அடைந்து வெற்றி பெறுவதாக காட்சிகளை உருவாக்கிப் பார்க்கும் பழக்கத்தைப் பெற்றிருந்தார்கள். இதற்கு சிறந்த உதாரணம் சொல்ல வேண்டுமானால் நெப்போலியனைச் சொல்லலாம்.

ஒரு சாதாரணக் குடிமகனாய் பிறந்து வறுமையில் வாடி வளர்ந்த நெப்போலியன் இளமையில் ஒதுக்கமான ஓரிடத்தில் கருங்கற்பாறையின் பிளவு ஒன்றில் அமர்ந்து பகற்கனவு காணுவது வழக்கம். மற்ற சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில் அவன் மட்டும் அங்கு அமர்ந்து சக்கரவர்த்தியாகத் தன்னை பாவித்து போர்களை வெல்வது போலவும் நாடுகளை ஆக்கிரமிப்பது போலவும் கற்பனை செய்வது வழக்கம். திரண்டு வரும் அலைகளைத் தன் எதிரிகளாகவும், எதிரிகள் தன்னருகே வந்து தோற்றுப் பின் வாங்குவது போலவும் கற்பனை செய்து கொள்வானாம். அவன் ஆழ்மனதில் பதித்த அந்த கற்பனைகள் பிறகு வரலாறாகியது என்பதை எல்லோரும் அறிவோம். நெப்போலியன் அமர்ந்து கற்பனைக் கனவு கண்ட அந்த பாறைப் பிளவு இன்றும் “நெப்போலியனின் அழகுமிகு செயற்கைக் குகை (Napoleon’s Grotto)” என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

இன்னொரு வியப்பூட்டும் சம்பவத்தையும் மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்திக்கு உதாரணமாய் சொல்லலாம். சில வருடங்களுக்கு முன்பு டிஸ்கவரி சேனலில் மனோசக்தி பற்றிய சில அசாதாரண நிகழ்வுகளைக் காண்பித்தார்கள். அதில் ஒரு நிகழ்வு கான்சரால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுடையது. கான்சர் முற்றிய கட்டத்தில் இருப்பதால் அவன் ஆறு மாதங்களுக்கு மேல் பிழைக்க வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள். அவனை ஆஸ்பத்திரியில் இருந்து திருப்பி அழைத்து வருகையில் அந்த சிறுவன் தாயிடம் தன் உடலுக்கு என்ன வியாதி என்று கேட்டான். தாய் அவனிடம் அந்த நோய் பற்றி விளக்கப் போகாமல் “உன் உடலில் நோய்க்கிருமிகள் நிறைய உள்ளன. அதனால் தான் உனக்கு அசுகம்” என்று சுருக்கமாகச் சொல்லி விட்டாள்.

ஆறுமாதங்கள் கழித்து சிறுவன் இறந்து போவதற்குப் பதிலாக ஆரோக்கியமாய் இருக்க தாய் மறுபடி அவனை அந்த டாக்டரிடம் அழைத்துப் போனாள். அவனைப் பரிசோதனை செய்து பார்த்த டாக்டருக்கு பேராச்சரியம். அவன் உடலில் கான்சர் செல்கள் இல்லவே இல்லை. அவர் அந்தத் தாயிடம் என்ன மருத்துவம் பார்த்தீர்கள் என்று கேட்க அவளோ “பெரிய டாக்டர் நீங்களே இனி ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டதால் நான் வேறு சிகிச்சைக்கே போகவில்லை” என்றாள். பின் மெல்ல அந்த சிறுவனை விசாரித்த போது பதில் கிடைத்தது. ’வீடியோ கேம்’களில் மிக ஆர்வம் உள்ள அந்த சிறுவன் தாய் அவன் உடம்பில் இருப்பதாகச் சொன்ன நோய்க்கிருமிகளை எதிரிகளாக பாவித்து தினமும் அவற்றை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவது போலவும் அவை எல்லாம் செத்து விழுவது போலவும் மனதில் கற்பனை விளையாட்டு விளையாடுவானாம். ஆழ்மனம் அவனுடைய கற்பனைப்படியே நோய்க்கிருமிகளைக் கொன்று அவனைக் குணப்படுத்தியே விட்டது. இது நடந்து முடிந்து பல வருடங்கள் கழித்து தான் டிஸ்கவரி சேனலில் இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டார்கள். அந்த சிறுவன் அப்போது இளைஞனாக மாறி ஆரோக்கியமாய் இருப்பதைக் காட்டவும் செய்தார்கள்.

சக்கரவர்த்தியாவதும், ஒலிம்பிக்கில் கோப்பைகள் வாங்குவதும், கடும் நோய் குணமாவதும் கூட நம் மனதில் தெளிவாகக் காணும் கற்பனைக் காட்சிகளின் மூலம் சாத்தியமாகிறது என்றால் அவற்றை நாம் ஏன் பயன்படுத்தி நம் இலட்சியங்களை அடையக் கூடாது.

இந்தப் பயிற்சி செய்ய அமைதியாய் அமருங்கள். மூச்சுப் பயிற்சி செய்து, ஏதாவது எளிய தியானமும் செய்து மனதையும் அமைதியாக்குங்கள். பின் உங்கள் மனத்திரையில் உங்கள் இலக்கை நீங்கள் அடைந்திருக்கும் ஒரு அழகான தருணத்தைக் கற்பனை செய்து ஓட விடுங்கள். அது நிஜம் போலவே உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். அந்தக் காட்சி ஒரு வரண்ட உயிரில்லாத கற்பனையாக இருந்து விடக் கூடாது. அப்படியிருந்தால் அது ஆழ்மனத்தை சென்றடையாது. உயிரோட்டமுள்ள ஒரு காட்சியாக அது இருக்க வேண்டும். அப்படி உயிரோட்டமாக இருக்க அந்தக் காட்சிக்கு எத்தனை கூடுதல் தகவல்களைச் சேர்க்க முடியுமோ அத்தனை தகவல்களைச் சேருங்கள். அந்த இலக்கை அடைந்த தருணத்தில் எப்படிப்பட்ட சந்தோஷத்தை உணர்வீர்களோ அதை உணருங்கள். அந்த தருணத்தில் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பாராட்டுகளையும் கற்பனைக் காட்சியில் தெளிவாகப் பாருங்கள். ஆழ்மனம் அதை நம்ப ஆரம்பிக்கும் போது புதிய பாதைகள் உங்கள் முன் விரியும், உதவக் கூடிய ஆட்கள் கிடைப்பார்கள், நீங்கள் எதிர்பார்த்திராத திறமைகள் உங்களுக்குள் பிறக்கும். ஒரு நாள் அந்த இலக்கை நீங்கள் கண்டிப்பாக அடைவீர்கள். ஆழ்மனம் அதை சாதித்திருக்கும்.

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

தோழி ஒரு அருமையான கட்டுரையை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்காக என் நன்றிகள் உரித்தாகட்டும். தோழி உண்மையிலே நேரடியாக ஒரு சொற்பொலிவு கேட்ட திருப்தி கிடைத்தது, இது போல் எல்லாரும் படித்ததில் பிடித்தவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். ‘’’’’’’’’’’’’’’’’’’” யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்:............:

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

தோழி ஒரு அருமையான கட்டுரையை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்காக என் நன்றிகள் உரித்தாகட்டும். தோழி உண்மையிலே நேரடியாக ஒரு சொற்பொலிவு கேட்ட திருப்தி கிடைத்தது, இது போல் எல்லாரும் படித்ததில் பிடித்தவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். ‘’’’’’’’’’’’’’’’’’’” யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்:............:

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

தோழி சங்கீதா... அருமையான வழிகாட்டும் கட்டுரை தந்ததற்கு மிக்க நன்றி... சமீப காலமாக எனக்கு ஏற்பட்ட தொடர் தோல்விகளால் மிகவும் மனம் சோர்ந்து குழம்பிப் போயிருக்கிறேன்... போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் எனக்கு இவ்வேளையில் உங்கள் கட்டுரை என் தளர்வடைந்த மனதிற்கு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது... நான் இப்புது பயிற்சியை முயற்சி செய்து பார்கிறேன்...

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

This is one of the Best Information I have ever read in my life. Such a beautiful words expressed in way that your message enters the heart & the brain. Please give more useful message like this in the future which will take our readers into a positive atmosphere and also motivate to achieve in life. Messaged likes this will encourage more people to use this site.

Thanks

your future is created by what you do today, not tomorrow &
you must be the change you want to see in the world

பூங்காற்று,ப்ரியா,சத்யா இந்த கட்டுரையை நான் படித்தபின் தன்னம்பிக்கை பிறந்தது.....சோர்வடையும் நேரத்தில், இந்த கட்டுரையை தான் படிப்பேன்...படித்தபின் புத்துணர்வாக உணர்வேன்....உங்களது உயர்ந்த கருத்துக்கு மிக்க நன்றி......ப்ரியா போட்டி தேர்விற்க்கு தயாராகும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்......

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

ரொம்ப நல்லா இருந்தது உங்க உரை. எனக்கு ஒரு கெட்ட பழக்கம். எப்பவும் தப்பாவே ஏதாவது நடக்குமோன்னு நினைப்பேன். அது நடந்திடும். என் ஹஸ் கூட சொல்வார் பாசிடிவா திங்க் பண்ணுன்னு. அந்த பையன் கதை தான் எனக்கு ரொம்ப பிடிச்சது. இந்த மாதிரி தன்னம்பிக்கை கதையா சொல்லுங்க.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

நன்றி உமா... நம்முடைய எண்ணங்களுக்கு எத்தனை ஷக்தி இருக்கு பாருங்க.....

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

நன்றி

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

ரொம்ப நல்ல ஒரு தகவலை எங்களுடன் பகிர்ந்து இருக்கீங்க சங்கீ. நிஜமாகவே நம்ம எண்ண அலைகளுக்கு இப்படி ஒரு சக்தி இருக்கா. நிறைய நேரங்களில் அச்சச்சோ இப்படி அப்படி நடந்துடுமோன்னு கற்பனை செய்துட்டே இருப்பேன். நெகடிவ்வாகவே யோசிப்பேன். நீங்கள் கூறியது போல முயற்சிக்க போகிறேன்.

மேலும் சில பதிவுகள்