பர்மிய குழம்பு நூடுல்ஸ் ( மோங்ஞா)

தேதி: June 8, 2006

பரிமாறும் அளவு: 4 -5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

நூடுல்ஸ் - 4
தேங்காய் - 1/2 மூடி
வெங்காயம் - 1 1/2 பெரியது
கொத்தினக் கறி - 100 கிராம் (அ) முள்ளில்லாத மீன்(வஞ்சிரம் அல்லது கொடுவா) - 100 கிராம்
முழு பூண்டு - ஒன்று அல்லது 10 பல்
முட்டை - 2
கொத்தமல்லித்தழை - ஒரு சிறிய கட்டு
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
உப்பு - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
தண்ணீர் - 5 கப் ( ஒரு கப் = 250 மி.லி.)
எலுமிச்சை - 1/2 மூடி
எண்ணேய் - 4 மேசைக்கரண்டி


 

தேங்காயை பால் எடுத்து தனியாக வைக்கவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் அரியவும். பூண்டை மெல்லிசாக நறுக்கவும்.
முட்டையை நன்றாக வேக வைக்கவும். மேல் ஓட்டை உரித்து சிறு துண்டங்களாக்கி தனியே வைக்கவும்.
கொத்தனக்கறி அல்லது மீனை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாயை வறுத்துப் பொடிக்கவும்.
ஒரு வெங்காயத்தை என்ணெய்யில் மொறு மொறுப்பாக வறுத்து எடுக்கவும். பூண்டையும் மொறு மொறுப்பாக வறுத்து எடுக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் வாணலியில் உள்ள எண்ணெய்யை ஊற்றி மீதி உள்ள 1/2 வெங்காயத்தை வதக்கவும். ஒரு நிமிடம் வதக்கிய பிறகு கொத்தனக்கறி அல்லது மீனை சேர்த்து 4 நிமிடம் வதக்கவும்.
மல்லித்தூள் சேர்த்து வதக்கவும். மேகி அல்லது டாப் ரேமன் உபயோகித்தால் அதிலுள்ள மசாலா பொடியையும் சேர்க்கலாம். ஆனால் உப்பு குறைத்து போடவும்.
5 கப் தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் கொதிக்கும்போது நூடுல்ஸை உடைத்து போடவும். உப்பை சேர்க்கவும்.
5 நிமிடம் கழித்து தேங்காய்பாலை சேர்க்கவும். ஒரு கொதி வந்த பிறகு இறக்கவும்.
ஒரு கிண்ணத்தில் ஒருவர் சாப்பிடும் அளவு நூடுல்சை குழம்புடன் போட்டு மேலே ஒரு சிட்டிகை அளவு காய்ந்த மிளகாய் தூள் தூவி, முட்டைத் துண்டுகளைப் போட்டு, வறுத்த வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி தூவி, எலுமிச்சை சிறிது பிழிந்து சாப்பிடவும்.
சிப்ஸ் சேர்த்தோ அல்லது எள்ளடை உடைத்து போட்டும் கூட சாப்பிடலாம்.


இது பர்மாவில் செய்யப்படும் மற்றொரு பிரபலமான உணவு வகை. மிகவும் ருசியான அதேசமயம் சத்தான நூடுல்ஸ் வகை இது. இது கறி சேர்த்தோ அல்லது மீன் சேர்த்தோ செய்யலாம்.
சில முக்கியமான குறிப்புகளை இங்கே கொடுத்துள்ளேன். தாய்லாந்து, வியட்நாம், பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் சில கிழக்கு ஆசிய நாடுகளின் பல உணவு வகைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தயாரிப்பு முறையை கொண்டது. சில மாற்றங்கள் மட்டுமே செய்ய வேண்டியிருக்கும். அவ்வப்போது குறிப்புகளில் மற்ற நாடுகளில் அந்த உணவு வகைகளின் பெயரையும், சேர்க்க வேண்டியது, நீக்க வேண்டியது பற்றியும் எழுதுகிறேன். இந்த பர்மிய குழம்பு நூடுல்ஸ் மற்ற நாடுகளில் Laksa -லக்ஸா என்று சொல்லப்படுகிறது. லக்சாவில் இறால் பொடி(Shrimp Paste) - 1 ஸ்பூன், Basil(நம்ம ஊர் துன்னுத்தி பச்சை இலை)இலைகள் - 5 அரைத்து சேர்ப்பார்கள். மேலும் கறி, மீனை அரைத்து போடாமல் சீஃபுட் லக்சாவில் இறால், மீனை வேக வைத்தும், சிக்கன் லக்சாவில் கோழித்துண்டுகளை வேக வைத்தும் போடுவார்கள். அசைவம் சாப்பிடாதவர்கள் முட்டைகோஸ், கேரட், முளை கட்டிய பயிர், கீரை சேர்த்து குழம்பில் அரை வேக்காடாக வேக வைத்து சாப்பிடுவார்கள்.

மேலும் சில குறிப்புகள்