பட்டிமன்றம் - 45 : பெண்சிசுவை மறுக்க காரணம் என்ன?

வர வர பட்டிக்கு தலைப்பு பஞ்சம் ஆயிடுச்சு!!! எவ்வளவு நேரமா தலைப்பு தேடுறேன்.... இருந்தாலும் த்லைப்பை பிடிச்சுட்டு வந்துட்டேன், சிறு மாற்றத்தோடு. மாற்றத்துக்கு காரணத்தையும் இங்கே சொல்லி விடுகிறேன்.

தலைப்பு இதோ:

பெண் சிசுவை / பெண் குழந்தையை மறுக்க / விரும்பாத காரணம்:

குடும்பம்?! சமூகம்?!

தலைப்பை தந்த திரு. ஷேக் அவர்களுக்கு மிக்க நன்றி. உண்மையான தலைப்பு “பெண்சிசு கொலை” ஆனால் அது இன்றைய காலகட்டத்தில் தலை தூக்கி இல்லை என்ற காரணத்தால் தலைப்பு சிறிது மாற்றப்பட்டது.

தேர்வு செய்த காரணம்:

இன்றைய காலகட்டத்தில் சிசிக்கொலை இல்லை என்றாலும் நிச்சயம் பெண் பிள்ளை வேண்டாம் ஆண் பிள்ளை தான் வேண்டும், பெண் பிள்ளை பிறந்தால் அடுத்தாவது ஆண் பிள்ளை வேண்டும், வீட்டில் வாரிசாக ஒரு ஆண் பிள்ளையாவது வேண்டும் என்பது போன்ற எண்ணம் நம்மில் பலரது மனதில் இன்றும் இருக்கிறது.

காரணம் பல:

வயதான காலத்தில் தன்னை பார்த்துக்கொள்ள ஒரு துணை வேண்டும், பெண் பிள்ளை வேறு வீடு போகும், அல்லது வீட்டில் உள்ள பெரியவர்கள் விருப்பம் ஆண் வாரிசு ... இப்படி குடும்ப சம்பந்தமான காரணம் பல.

வளர்ப்பது செலவு, கல்யாணம் அது இது என்று ஏகப்பட்ட செலவு, பெண் பிள்ளையை பாதுகாத்து வளர்ப்பது கடினம்... இப்படி சமூக சம்பந்தமான காரணம் பல.

இதில் எது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையே இங்கே பேசப்போறோம்.

வாங்க... வழக்கமான பட்டிக்குறிய எல்லா விதிமுறைகளும் இந்த பட்டிக்கும் பொறுந்தும்!!! நாகரீகமான பதிவு, தமிழ் பதிவு ரொம்ப ரொம்ப அவசியம்.

நடுவருக்கு,வாதிடுவோர்க்கு(கோவப்படுவோற்க்கும் சேர்த்துதான்)

நல்ல தலைப்பு.விவகாரமாக தலைப்பு தரும் ஷேக் அண்ணாவிற்கு நன்றிகள்.நம்ம நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்போமே அதுபோல்.இந்த தலைப்பை தேர்ந்தெடுத்த வனிக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்.

வாதம்:பெண் சிசுவை / பெண் குழந்தையை மறுக்க / விரும்பாத காரணம்:

குடும்பம்?! சமூகம்?!

இதில் என்ன சந்தேகம் பெண் குழந்தையை குடும்பம் மறுப்பதே சமூகத்தினால் தானே.அதனால் என் வாதம் சமூகத்தை நோக்கிதான்.

1.பெண் பிறந்தால் வரதட்சனை:சமூகம் வாங்குவதால்தான் இந்த பயம்.குடுப்பதால்தான் வாங்குகிறோம்,குடுக்கவில்லை என்றால் முதிர்கண்ணிதானே நிலைமை.

மீண்டும் சந்திப்போம்.

இதுவும் கடந்துப் போகும்.

நடுவருக்கு வணக்கம்.

தனி மரம் தோப்பாகாது.

பல குடும்பங்கள் இணைந்ததே சமுதாயம். எனவே "பெண் சிசுவை / பெண் குழந்தையை மறுக்க / விரும்பாத காரணம்:குடும்பம்!"

எல்லாக் குடும்பங்களும் முடிவெடுத்தால் தன்னால் சமூகம் சரியாகும்.

வாதங்களுடன் நாளை சந்திப்போம்.

அருமையான தலைப்பு... பதிவுகள் அடை மழை போல கொட்டப் போவது நிச்சயம்...
சரி... பெண் சிசுவை மறுக்கக் காரணம் இந்த வன் சமூகமே என்று என் வாதங்களைத் தர வந்திருக்கிறேன்....
வாதங்களை எழுதிக் கொண்டிருக்கிறேன்... கூடிய விரைவில் வருவேன்...

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..

எங்கிட்டு சுத்தினாலும் சமூகம்னுதான் வரும் .ஆனால், இன்றைய காலத்தில் குழந்தைபிறப்பே ஒன்றோ இரண்டோ. அதுவும் வேர வீட்டுக்கு போய்விடும் என யோசித்தால்!!! இனி வரும் காலம் அப்படித்தானோ? அம்மாடியோவ் நினைத்தாலே பயமாய் இருக்கு.

நடுவருக்கும், இந்த தலைப்பை கொடுத்த கவிஞருக்கும் வாழ்த்துகளை சொல்லிக் கொண்டு வாதங்களில்...
ஒரு குடும்பத்தில் தான் பெற்ற குழந்தையை அந்த தாயே கொல்ல துணிகிறாள் என்றால் என்ன காரணம்?. குடும்பத்தின் மேல் உள்ள பயமா?. சமுதாயத்தின் மேல் உள்ள பயமா?. தகப்பன் இல்லாத குடும்பமாக இருந்தாலும், தாய் இல்லாத குடும்பமாக இருந்தாலும் தன் குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும், நன்கு வளர்க வேண்டும் என்று அந்த குடும்பத்தின் சம்பந்த பட்ட அனைவருமே துணை நிற்பர்.
பெண் குழந்தைகளுக்கு எதிரி சமுதாயம்தான்.எப்படி என்கிறீர்களா?. இதோ இப்படித்தான்.
1) படிப்பு
2) காதல்
3) திருமணம் இந்த மூன்று நிலைகளிலும் சமுதாயம் பெண்களுக்கு எதிராக வில்லன் அவதாரம் எடுத்து பயமுறுத்துகிறது.
படிப்பு; படிக்க வைக்கும் பொழுது பெண்ணுக்கு ஏன் இவ்வளவு செலவு செய்து படிக்க வைக்க வேண்டும் என்று கேட்கும் சமுதாயம், பின்னாளில் அந்த பெண் வேலைக்கு போகும் போது சம்பளம் உன் கையிலா தரப் போகிறாள் என்ற கேள்வியையும் கேட்டு பெற்றோர்களை குழப்புகிறது.
காதல்; விடலை பருவத்தின் விளிம்பில் நிற்கும் பெண்ணிடம், காதல் என்ற ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு சமுதாயம் போடும் ஆட்டதுக்கு அளவே இல்லை, ஈன்றெடுத்து கண்ணுக்குள் வைத்து வளர்த்த பெற்றோரை பிரித்து அந்த பெண்ணை தனிமைப் படுத்தி தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்வதில் கில்லாடி சமுதாயம். இதனால் நல்ல வாழ்க்கையை தொலைத்து வாழ்க்கையை முடித்து கொண்ட பெண்கள் ஏராளம். ஜாதியை பெண்ணின் வாழ்வில் புகுத்துவதும் சமுதாயமே, ஜாதி தேவை இல்லை என்று குழப்புவதும் சமுதாயமே.
திருமணம்; திருமணம் செய்து கொண்டு செல்லும் பெண்ணுடன் வரதட்சினை என்ற பெயரில் ஒரு புதையலே வேண்டும் என்று பெண்ணை பெற்றவர்களிடம் கையேந்தி கௌரவ பிச்சை எடுக்கிறது சமுதாயம். காசுக்காக எந்த ஒரு இழிநிலைக்கும் செல்ல தயங்குவதில்லை சமுதாயம். மாமியார்கள் பற்ற வைக்கும் பொழுது வெடிக்காத அடுப்புகள் மருமகளை கொல்வதற்க்காக மட்டுமே வெடிக்கின்றன. மாமியார் கொடுமைகள், நாத்தனார் கொடுமைகள் என்று தான் சார்ந்த பெண் இனமே தனக்கு எதிராய் அரங்கேற்றும் கொடுமைகள் கணக்கிலடங்காதவை. திருமணமான பின் குழந்தை பேறில் தாமதம் ஆனால் மலடி என்ற மகுடம் சூட்டி அழகு பார்ப்பதும் கேடு கெட்ட சமுதாயமே. இப்படி பெண்ணின் எல்லா நிலையிலும் எதிரியாகவே முன் நிற்கிறது சமுதாயம். நாளடைவில் பெண்களே இல்லாத சமுதாயம் உருவாக்குவதில் சாதனை படைத்து விடுமோ என்று அச்சப்படும் அளவிற்கு அட்டகாசம் செய்வது சமுதாயமே.

அன்புடன்
THAVAM

நடுவர் அவர்களுக்கு இனிய மாலை வணக்கம்... நன்றி நடுவரே சுட்டிக்காட்டியதற்க்கு.... குழப்பத்தை சரிதாச்சு. பெண் சிசுவை விரும்பாததற்க்கு முழுமுதற்காரணம் சமூகமே என்று என் தெளிவான வாதத்தை முன்வைக்கிறேன்....

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

இந்த தலைப்பு ஒரு பெண் குழந்தையின் தாய் என்ற வகையில் என்னை வாதாட அழைக்கிறது. பெண் சிசு என்றதும் ஆண்களை விட பெண்களே அதிகம் மறுக்கின்றனர் அல்லது வேதனைப்படுகின்றனர். இதை பட்டிமன்றம் மூலமாகவோ அல்லது பிரச்சாரம் மூலமாகவோ மாற்ற முடியுமா என தெரியவில்லை. "ஆண் குழந்தை தான் குடும்பவாரிசு" என்ற மனோபாவம் நம்மிடையே ஊறிவிட்டது. ஆனால் இன்று இந்த எண்ணத்தில் நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்ககிறது என்று தான் நினைக்கிறேன்.

"பெண் சிசு மறுத்தல்" என்பது காலத்தின் வேகத்தில் மாறி இன்று பெண் சிசுவிற்காக ஏங்கும் காலம் வரத்தொடங்கிவிட்டதாகவே நான் நினைக்கிறேன். அதன் மிக முக்கிய காரணம் இன்றைய முதியோர்களின் நிலைதான். வயதான காலத்தில் ஆண் பிள்ளைதான் கவனிக்கும் என்ற எண்ணத்தில், அதே ஆண் பிள்ளைகள் ஊற்றிய வெந்நீரே இந்த மனமாற்றத்திற்கான மிக முக்கிய காரணம். ஆனால் அவர்களின் நிலைக்கு "மருமகள்" என்ற பெண் பிள்ளைதான் முக்கிய காரணம் என்பது வேதனை தரும் மறுக்கமுடியாத உண்மை.

படிக்காத பாமரமக்களிடமும், கிராமவாசிகளிடமும் வேண்டுமானால் பெண் சிசு மறுப்பு என்பது இன்னும் இருக்கலாம். ஆனால் ப்டிப்பு, பண்பு, நாகரீகம், அன்பு அனைத்திலும் ஒரு குடும்பதை பெருமளவு வழிநடத்துவது பெண்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளும் காலம் விரைவில் வரும்.

படிமன்ற தலைப்பிற்கு பேசாமல் சிறிது வேறுபட்டு நிற்கிறது என் கருத்துகள் என்பது எனக்கும் தெரிகிறது. ஆனால் என் மனதில் தோன்றிய, நான் மற்றவரிடம் கண்ட கருத்துக்களை உங்க்ளிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அருசுவையில் என் முதல் பதிவு இப்படி ஒரு முத்தான தலைப்பிற்கு என்பதில் கோடி சந்தோஷம்.

என் கருத்துக்களுக்கு உங்களின் ஆதரவை எதிர் நோக்கி,

"நேத்ரா" எனும் தேவதையால் "அம்மா" எனும் பாக்கியம் பெற்ற

தேன்மொழி பாலா........

உழைப்பால் கிடைக்காத வெற்றியும் இல்லை!
உழைப்பால் கிடைக்காதது வெற்றியும் இல்லை!!

தேன்மொழி பாலா..

ஒரு பெண் கருவுறும் போது அது ஆணா பெண்ணா என்று நினைத்து எந்தப் பெற்றோரும் பாசம் வைப்பதில்லை... பிறக்கும் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்பதே அவளின் எண்ணமாக இருக்கும்... ஒரு தந்தையாகப் போகும் ஆணின் மனமும் அவ்வாறே தோன்றும்... கூலி வேலைக்குச் சென்றாலும் தன் பிள்ளையைச் சுமக்கும் மனைவியைத் தாங்கும் கணவன்மார்கள் பலர்... அனால் பிள்ளை பிறந்தவுடன் அது பெண்ணாகிப் போனால்... எத்தனை எத்தனை ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி... இன்னல்களைச் சந்தித்து... சமூகம் என்னும் போர்வையில் உள்ள கொடிய அரக்கர்களின் பேச்சுக்களினூடும்... சமூகக் கட்டுப்பாடு என்ற ஒரே வார்த்தையிலும் அந்த பிள்ளையைப் பெற்றவர்களை துன்புறுத்தி..கள்ளிப்பால் ஊட்டியும்.. நெல்லுமணி கொடுத்ததும் பச்சிளம் பிஞ்சுகளைக் கொல்லத் தூண்டுவது சமுதாயமே...

"என்ன மா ஆம்பளப் புள்ளையப் பேது எடுப்ப நு பாத்தா இப்படி பொட்டப் புள்ளையப் பெத்து வச்சிருக்கே.... ""என்ன கஷ்டப் படப் போறானோ உன் புருஷன்" என்றும்... வசை கூறிக் கூறி அந்தக் குழந்தையை வாழ விடாமல் தடுப்பது சமூகமே...

எங்கே தன் குழந்தை இதற்குமேல் இருந்து இந்தப் பேச்செல்லாம் ஆயுள் முழுதும் வாங்க வேண்டி வருமோ என்று பெற்றோரை அஞ்ச வைத்து விடுகிறது... இன்னும் சில இடங்களில் பெற்றோரே பிள்ளை வேண்டாம் என்று தூக்கி எரியும் கொடுமைகளும் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது...

நடுவர் அவர்களே... தனக்காகத் தோன்றா விட்டாலும் அது போல பெண் குழந்தைகளின் பிறப்பைப் பெற்றோருக்கு பாரமாகக் கருத வைப்பது சமுதாயமே...
தானும் ஒரு பெண் என்பதை மறந்து எத்தனையோ பெண்கள் இந்தக் கொடுமைக்குக் காரணமாக இருந்து வருகிறார்கள்...
தன்னைப் பெற்றவளும் ஒரு பெண் தான் என்பதை மறந்து ஆண்களும் இதற்குத் துணை போகிறார்கள்...
மனிதாபிமானமற்ற இந்தச் சமூகம் திருந்தினால் தான் இந்தக் கொடுமை ஒழியும்..

அது மட்டுமில்லை நடுவர் அவர்களே... ஐந்து பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டியாவான் போன்ற பழ மொழிகளும் கூட இவர்களின் எண்ணத்தை எடுத்துரைக்கிறது...
எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் ஐந்து பெண்கள்.... அனைவருக்கும் இரண்டு வயதிற்குள்ளே மட்டுமே வித்தியாசம்... அவர்களது தந்தை அரசாங்கத்துக் கடைநிலை ஊழியர்... தாய் இல்லத்தரசி... அவர் நினைத்திருந்தால் குழந்தைகள் வேண்டாம் என்று நினைத்து இருந்தால்... இன்று ஒரு அரசுப் பள்ளிக்கு ஆசிரியை கிடைத்திருக்க மாட்டார்... ஒரு தனியார் கல்லூரியின் பேராசிரியர் கிடைத்திருக்க மாட்டார் ... ஒரு வங்கி ஊழியர் கிடைத்திருக்க மாட்டார்... ஒரு மென்பொருள் வல்லுநர் உருவாகி இருக்க மாட்டார்... இவர்கள் நால்வருக்கும் திருமணம் முடிந்தாயிற்று... கடைக்குட்டி இப்போது கடைசி வருட மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறார்...

சமூகம் என்ன சொன்னாலும் அதை பெரிதாக எண்ணாமல் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கும் இந்தக் குடும்பத்திற்கும் இவர்கள் ஒவ்வொருவரும் பிறந்ததிலிருந்து எத்தனை இன்னல்களை அனுபவித்து இருக்கிறார் தெரியுமா.... அந்தத் தெருவில் நடக்கும் போதும் போகும் போதும் வரும் போதும் இவர்களை ஏசி பேசியவர்கள் முகத்தில் இன்று கரி...

சமூகத்தின் பேச்சைத் தூக்கி எரிந்து விட்டு நம் பிள்ளைகளை வளர்த்தல்.. பெண் என்ன ஆண் என்ன எல்லாருமே ஓரினம் தான்... :)

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..

நடுவர் அவர்களே

பல குடும்பங்கள் சேர்ந்தது தான் சமூகம். எனவே குடும்பமே காரணம் என்று தான் சொல்ல வேண்டும். பெண்ணை ஆணுக்கு இணையாக படிக்க வைக்கிறார்கள், ஆணுக்கு திருமணம் என்று வரும் போது எந்த பிரச்னை யும் இல்லை, நல்ல படிப்பு, வேலை இருந்தால் போதும், ஆனால் பெண்ணுக்கு அப்படி இல்லையே, நல்ல படிப்பு, வேலை, அழகு இவை எல்லாம் இருந்தாலும் வரதட்சனை [சீர்]
கொடுக்க வேண்டி உள்ளது.அவள் குழந்தை பெற்று அதற்கு திருமணம் ஆகும் வரை சீர் செய்ய வேண்டி உள்ளது. இதை விட கொடுமை என்னவென்றால், பெண்ணின் பெற்றோர் மாப்பிள்ளை வீட்டிற்கு அடிமை. அவர்கள் முன்பு பணிந்து நிற்க வேண்டும், இல்லை என்றால் பெண்ணை பிறந்த வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். என்ன ஒரு அல்பத்தனமான செயல் இவையெல்லாம்.
சரி திருமணம் செய்த பின்பு அந்த பெண் படும் அவஸ்தை, பெண் அங்கு எப்படி இருக்கிறாளோ, என்ன கஷ்டப்படுகிறாளோ, என்ற கவலை பெற்றவர்களுக்கு, இப்போது சொல்லுங்கள், பெண்ணின் பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் காரணம் குடும்பம் தானே,

ராஜி

நடுவருக்கு வணக்கம்.

பெரும்பாலும் நம் நாட்டில்தானே இந்த சீர் செனத்திப் பிரச்னை எல்லாம், ஆனால் இங்கு சீனர்களிடம் கூட நான் பெண் குழந்தை விரும்பப்படாததாக காண்கிறேன். இவ்வளவுக்கும் ஆண்கள்தான் பெண்கள் தன்னை திருமணம் செய்ய மாட்டார்களா என்பது போல் தோன்றும். இருப்பினும் ஏதோ பெண் பெற்றுக் கொள்ள தயக்கம்தான்.

நமது சமூகம் போலவே முதலில் ஆண்குழந்தையாக இருக்க வேண்டும் என்ற ஆசையும் காணப்படுகிறது. பெற்றோரை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு ஆண்குழந்தைகளுக்கு என்பதாலேயே இருக்க வேண்டும்.

வரதட்சிணை பிரச்னை என்றால் கோடீஸ்வரர்கள் பெண்குழந்தைக்கு ஆசைப் படலாமே. அப்படி இல்லையே. ஏன்? தனக்கு பின் தனது சொத்து மற்றும் தொழிலை கவனித்துக் கொள்ள ஒரு ஆண்வாரிசு வேண்டும் என்ற எண்ணத்தாலேயே அவர்களும் ஆண்குழந்தைக்கு ஆசைப் படுகின்றனர்.

பாட்டிகளுக்கும் தாத்தாக்களுக்கும் கொள்ளி வைக்க பேரன் வேண்டும். பிறக்கும்போதே இப்படிதான் பார்க்கிறோம். பின் எப்படி குடும்பத்தில் பெண் குழந்தைகளுக்கு வரவேற்பு இருக்கும்?

இந்த எண்ணங்கள் எல்லாமும் குடுமபங்களில் மாறினால் மட்டுமே சமுதாயத்தில் வரதட்சணை பிரச்னைகள் ஓயும் என பெண் குழந்தைகளை ஏற்றுக் கொள்ள மறுப்பவை குடும்பமே என்று முதல் வாதத்தை பதிக்கிறேன்.

நன்றி. வணக்கம்.

மேலும் சில பதிவுகள்