பட்டிமன்றம் - 47 - ஆண்கள் சாதித்த துறைகளில் அனைத்திலும் பெண்களும் சாதிக்கமுடியுமா?முடியாதா?

அறுசுவையின் அன்பு உள்ளங்களுக்கு வணக்கம், நடுவர் பணிக்கு எனது விருப்பத்தினை ஆமோதித்த அறுசுவை தோழிகளுக்கு எனது நன்றி.தலைப்பை கொடுத்த திரு.Sheik அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

**************************************************************************

தலைப்பு - ஆண்கள் சாதித்த துறைகளில் அனைத்திலும் பெண்களும் சாதிக்கமுடியுமா?முடியாதா?

**************************************************************************

இன்றைய நவீன யுகத்தில் ஆண்கள் பணி புரியும் எல்லா துறைகளிலும் பெண்களும் பணி செய்து வருகின்றனர், "ஆணுக்கு பெண் இளைப்பில்லை" என்பதை பெண்கள் நிரூபித்து வருகின்றனர், ஆனால் நாம் வாதிட இருப்பது ஆண்கள் சாதித்த அனைத்து துறைகளிலும் பெண்களால் சாதிக்க முடிகிறதா? இல்லையா? பெண்கள் சந்தித்து வரும் இடையூறுகள் என்னென்ன? அதையும் தாண்டி அவர்களால் சாதிக்க முடிகிறதா? என்பதே இந்த பட்டியின் தலைப்பு. தங்களுக்கு ஏற்பட்ட, பார்த்தறிந்த , கேட்டறிந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

வாருங்கள் வந்து முன் வையுங்கள் உங்கள் வாதத்தை......

****************************************************************************************

பட்டிமன்ற விதிமுறைகள்:
************************
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது.
3. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
4. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.
5. அரட்டை... நிச்சயம் கூடாது.

தோழிகளே

இந்த வார பட்டி சூடான தலைப்புடன் இனிதே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எப்போதும் போல தோழிகள் தங்களது கார சாரமான வாதங்களுடன் வாருங்கள் காத்திருக்கிறேன்..

ராஜி

நல்ல தலைப்பு

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நடுவரே, நல்லதொரு தலைப்பை எடுத்து வந்துள்ளீர்கள். இன்றைய காலத்தில் விவாதிக்க வேண்டியதும்கூட. அதற்காக முதலில் ஒரு நன்றி_()_

என்னை பொறுத்த வரை, ஆண்கள் சாதித்த அனைத்து துறைகளிலும் பெண்களால் சாதிக்க முடிவதில்லை. நீங்கள் சொன்ன மாதிரி ஆணுக்கு பெண் இளைப்பில்லை என்றாலும் ஒரு சில இடங்களில் தான் நாம் ஆண்களுக்கு எதிராக அல்லது ஆண்களை போல போராட முடியுமே தவிர அது எல்லா துறைகளிலும் என்கிற போது கண்டிப்பா இயலாத காரியம் தான். என்னடா ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இப்படி பேசறாங்களே என்று நினைக்க வேண்டாம். பெண்ணாக இருக்கும் போது தான் நாம் எத்தனை கஷ்டங்களை அனுபவிக்கிறோம் என்பது தெரியும்.

பெண்களுக்கு மனதைரியம் இருக்கும் அளவிற்கு உடல் தைரியம் இருப்பதில்லை. எதிரணியில் இருந்து வருபவர்கள் கேட்கலாம் ஏன் காவல்துறை, விமானி அந்த துறை இந்த துறை என்று எல்லா துறையிலும் பெண்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் என்று. நாமும் எல்லா துறையிலும் இருக்கிறோம் என்பதற்கும் சாதிக்கிறோம் என்பதற்கும் வித்தியாசம் நிறையவே இருக்கிறது நடுவர் அவர்களே!!

ஏதோ எல்லாரும் போல நாமும் ஒரு வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று தான் இன்றைய பெண்களின் மனநிலை இருக்கிறது. அதனால் தான் அதிகமான பெண்கள் டீச்சிங் தொழிலில் இருக்கிறார்கள். அதில் தான் பிரச்சனை இல்லை என்பது அனைவரது கருத்தும்.

என்னதான் பெண்கள் ஆண்களுக்கு நிகராக இருக்க முயற்சி செய்தாலும், அனைத்து துறைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களால் சாதிக்க முடியாது என்பதே என் வாதம்.

வேலைக்கு செல்வதால் பெண்கள் சந்திக்கும் இன்னல்கள் ஆயிரம் ஆயிரம். அதையெல்லாம் சொல்ல இந்த ஒரு பட்டிமன்றம் போதாது நடுவரே போதாது. பக்கம் பக்கமா எழுதலாம்.தோழிகள் வந்து தங்கள் வாதங்களை முன் வைக்கட்டும். நேரமிருந்தால் மீண்டும் வருகிறேன். நன்றி!

அன்புடன்
பவித்ரா

புதிய நடுவருக்கு வாழ்த்துக்கள்,சிறப்பாய் செயல்பட்டு வெற்றியடைய வாழ்த்துக்கள்.

பட்டியில் பங்கேற்று பேசவிருக்கும் அனைத்து தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்திலா

சொன்ன மாதிரியே தலைப்போடு வந்துட்டீங்க... வாழ்த்துக்கள். யார் தலைப்பு என்று குறிப்பிடவில்லையே... சொன்னா தலைப்பு கொடுத்தவருக்கும் மகிழ்ச்சியா இருக்கும்... :) அப்படியே “****” கொஞ்சம் கம்மி பண்ணுங்க... பேஜ் சரியா ஓபன் ஆகல அதனால.

நேரம் கிடைக்கும் போது அவசியம் வரேன்... எந்த அணி என்றும் முடிவு செய்ய வேண்டும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அமீனா, நித்திலா - வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

பவித்ரா - முதலில் வந்து உங்கள் வாதத்தை முன் வைத்தமைக்கு நன்றி.

///பெண்ணாக இருக்கும் போது தான் நாம் எத்தனை கஷ்டங்களை அனுபவிக்கிறோம் என்பது தெரியும்.
பெண்களுக்கு மனதைரியம் இருக்கும் அளவிற்கு உடல் தைரியம் இருப்பதில்லை
வேலைக்கு செல்வதால் பெண்கள் சந்திக்கும் இன்னல்கள் ஆயிரம் ஆயிரம்.////

சரியாய் சொன்னீங்க பவித்ரா, திறமை, தைரியம் எல்லாம் இருந்தும் எத்தனை இடங்களில் பெண்களால் சாதிக்க முடிகிறது? இல்லையே...

//ஆண்களுக்கு நிகராக பெண்களால் சாதிக்க முடியாது// - என்று பவித்ரா அழகான வாதங்களை சொல்லி இருக்குறாங்க. பார்க்கலாம் எதிரணி என்ன சொல்ல போறாங்கன்னு?

ராஜி

வாழ்த்துக்களுக்கு நன்றி வனிதா
இப்போ ட்ரை பண்ணி பாருங்க , பேஜ் OPEN ஆகும் நு நினைக்கிறேன். நீங்க சொன்ன மாதிரி மாத்தி இருக்கேன். ஏதாவது மாற்றம் இருந்த சொல்லுங்க வனிதா.

ராஜி

என்ன தோழிகளே, என்னாச்சு எல்லாருக்கும். பட்டியை இப்படி தூங்க விட்டா எப்படி. வாங்க வந்து வாதங்களை பதிவு செய்யுங்கள்.

அன்புடன்
பவித்ரா

அதானே.... தோழிகளே என்னாச்சு,

உங்கள் வாதங்களுக்காக காத்து கொண்டிருக்கிறேன்.
பட்டி தொடங்கியது தோழிகளுக்கு தெரியாதா?
வாங்க வாங்க சீக்கிரம் வாங்க....

ராஜி

புதிதாக நடுவர் பதவி ஏற்றிருக்கும் ரங்காராஜி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். எனது வாதங்களைத் துவக்குகிறேன்...........

நடுவரே....... நாங்க வாதாட வந்திருக்கும் தலைப்பு
"ஆண்கள் சாதித்தத்துறைகளில் எல்லாம் பெண்கள் சாதிக்க முடியுமா..?".
அதாவது நடுவரே இத்தனை வருடங்களாக அதாவது உலகில் மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே ஆண் இனம் மட்டுமே எந்த வேலையும் எப்படிப்பட்ட வேலையையும் செய்வதற்க்குண்டான சுதந்திரத்தை தனக்கு மட்டுமே என்று வரையறுத்து வைத்துவிட்டான்... பெண் என்பவள் வீட்டை பார்த்துக்கொள்ளவும் தன் குடும்பத்தை இனவிருத்திசெய்யும் கருவியாகவே வைத்துக்கொண்டான்.

பெண்ணுக்கென்று இருக்கும் சில உரிமைகள் கூட ஒரு ஆண்கொடுத்த வரையரைதான்.

எனவே பெண் என்பவள் பண்டைய காலத்திலிருந்தே அடக்கி ஆளப்பட்டவள். எனவே அவர்கள் இதுநாள்வரை சாதிக்காமல் இருந்ததில்லை. சாதிக்க விடாமல் தடுக்கப் பட்டவர்களே ஆவார்கள்.

ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது....... விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது........ யாரும் யாருக்கும் தடை போட முடியாது என்கின்ற உரிமைக்காற்று வீச ஆரம்பித்துவிட்டது.......
குறிப்பாக பெண்களை இத்தனை நாளாக அடக்கி வைத்தது எப்பேர் பட்ட தவறு என்று உணரப்படுகிறது.........

இப்படி பெண்களின் வளர்ச்சி சமீப காலங்களாகதான் ஊக்குவிக்கப் படுகிறது. அப்படி யிருக்க பெண்கள் தங்களின் கூச்சத்திலிருந்து வெளிவந்து அனைத்துத்துறைகளிலும் நிச்சயமாக சாதித்து வென்று காட்டுவார்கள்.

இதுவரை பெண்கள் சாதிக்காத துறைகள் என்ன என்று பட்டியலிட்டால் அவைகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கிறது.

நீங்கள் கேட்கலாம் சில பெண்கள் தானே சாதிக்கிறார்கள். ஆண் சாதனையாளர்களின் எண்ணிக்கைதானே அதிகமாக இருக்கு என்று.

அண்கள் பண்ண்டைய காலம் முதலிருந்தே எந்தக் கட்டுப்பாட்டையும் சந்த்திதிராதவன். ஆனால் பெண்கள் அப்படியில்லை. அவர்கள் ஓரிரு நூற்றாண்டுகளாகத்தான் சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்துள்ளனர். அப்படி யிருக்கும் போது பெண் சாதனையாளர்களின் எண்ணிக்கை கூடுவதற்கு சில காலங்கள் மட்டுமே ஆகும்.

நீங்கள் வேண்டுமானால் பாருங்களேன்.......எதிகாலமே பெண்களின் கையில் தான் வரப்போகின்றது.

ஆண்கள் சாதித்த துறைகளில் பெண்களும் சாதிக்க முடியுமாஆஆஆஅ........??????? என்ற சந்தேகம் வரக்காரணம் கூட நாம் எவ்வளவு அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்பதின் வெளிப்பாடே ஆகும்.

சாதிப்பதற்க்கு ஆண் பெண் என்கின்ற பாகுபாடெல்லம் கிடையாது......

சாதிக்கும் வாய்ப்பு ஆண்களுக்கு ஆதியிலிருந்தே கிடைத்துவிட்டது. அதனால் அவர்களுக்குப் பிரச்சனையில்லை.

பெண்களுக்கு சாதிக்கும் வாய்ப்பு பல போராட்டங்களுக்குப் பின்னே தாமதமாக பெறப்பட்டுள்ளது. நம் பெண்களின் சாதனைப்பட்டியல் நீண்டு கொண்டே செல்வது "எதையும் சாதிக்கமுடியும்" என்ற இலக்கை நோக்கிமட்டுமே. பட்டியல் முடியும் என்கின்ற அர்த்தத்தில் அல்ல........

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

மேலும் சில பதிவுகள்