பரங்கிக்காய் பால் கறி

தேதி: May 8, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

திருமதி. வனிதா அவர்களின் குறிப்பினை பார்த்து முயற்சி செய்தது.

 

பரங்கிக்காய் - 2 கப்
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - ஒன்று
வற்றல் மிளகாய் - ஒன்று
சாம்பார் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு
தேங்காய் பால் - அரை கப்
புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க
கொத்தமல்லி - சிறிது


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். புளியை நீரில் ஊற வைத்து கரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும். இதில் மிளகாய் வற்றல் சேர்த்து சிவந்ததும் பச்சை மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் மஞ்சள் தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து பிரட்டி விடவும்.
பின் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் நறுக்கி வைத்துள்ள பரங்கிக்காய் சேர்த்து மூடி நன்றாக வேக விடவும்.
புளி வாசம் போய் காய் நன்றாக வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். உப்பு சரிப்பார்த்துக் கொள்ளவும்.
கடைசியாக கொத்தமல்லி இலை தூவி எடுக்கவும்.
சுவையான பரங்கிக்காய் பால் கறி தயார். இது சாதத்துடன் சாப்பிட மிகுந்த சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்பு ஹர்ஷா,

அதென்ன முயற்சி செய்ததுன்னு சொல்லிட்டீங்க, ரொம்ப நல்லா செய்திருக்கீங்க.

சூப்பராக இருக்கு, படங்களும் விளக்கங்களும்.

பாராட்டுக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

எனது விளக்கப்பட குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

சுவையான குறிப்பை வழங்கிய தோழி வனிதாவுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

சீதாலக்‌ஷ்மி அம்மா,
விளக்கங்கள் எல்லாம் நம்ம வனிதாவின் குறிப்புதான்.படங்கள் மட்டுமே என்னுடையவை.வழக்கமாக பரங்கிக்காயில் வெறும் பொரியல் மட்டுமே செய்வேன்.இந்த ரெஸிப்பி வித்தியாசமா ரொம்ப நல்லா இருந்தது.உங்க அன்பான பதிவுக்கும்,பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.

வாவ்!!! என்னடா குறிப்பு பெயரும், படமும் நம்ம செய்த பால்கறி போலவே இருக்கேன்னு நினைச்சேன்... பார்த்தா அதே குறிப்பு!!! என்னைவிட ரொம்ப அழகா செய்திருக்கீங்க :) இதுக்கு பேரு தான் ஸ்வீட் ஸர்ப்ரைஸ் ;) ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு ஹர்ஷா... மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
உங்க அளவுக்கு ப்ரசண்ட்டேஷன் இல்லை.கொஞ்சம் சுமார்தான்.ஆனால் குறிப்பு ரொம்ப சுவையா இருந்தது.இவருக்கும் பிடித்திருந்தது.அருமையான குறிப்பு தந்ததற்கு மிக்க நன்றி.பதிவுக்கும் நன்றி.