டிப்ஸ் சொல்லுங்களேன் ப்ளீஸ்...

அறுசுவை சகோதரிகளுக்கும், தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.
அறுசுவயில் இருக்கும் சமையலில் அனுபவம் வாய்ந்த சகோதரிகள் என் சில சந்தேகங்களுக்கு டிப்ஸ் தந்து உதவுங்கள் ப்ளீஸ்.. இது என்னை போன்ற ஏனைய தோழிகளுக்கும் நிச்சயம் பயன்படும்.
1. சமையலில் உப்பு, புளி, காரம் இப்படி எதேனும் ஒன்று கூடிவிட்டால் எப்படி சரி செய்வது??
2. நாம் சமைக்கும் போது தேவைப்படும் பொருள் ஏதாவது இல்லாமல் போனால் எப்படி சமாளிப்பது??
3. நமது ரெகுலர் சமையலிலேயே நீங்கள் செய்யும் சின்ன சின்ன மாற்றங்கள் அதாவது உங்களுக்குனு ஒரு மெத்தட் இருக்கும் தானே அது... (இந்த கறி அவங்க செய்தா வித்தியாசமா ஒரு டேஸ்ட் வரும்னு சொல்லுவாங்க தானே அப்படி)
4. விருந்தினரோ, உறவினரோ திடீரென வருவோருக்கு நீங்கள் செய்யும் இன்ஸ்டன்ட் ரெசிபிஸ்...
இப்படி இக்கட்டான சூழ்நிலைகளை நீங்கள் சமாளிக்கும் விதங்களை சொல்லிக் கொடுத்தால் என்னை பொன்ற கத்துக்குட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..
(பி.கு. கருத்துக்கள், சந்தேகங்கள் இரண்டுமே வரவேற்கத்தக்கது. உங்கள் பதிவுகள் தமிழில் மட்டும் இருந்தால் அனைவரும் பயன்பெறலாம்.)
இதற்கு நிச்சயம் அனுபவசாலிகள் பதில் தருவீர்கள் என நம்புகிறேன்.
நன்றி.
அபி.

அன்பு அபி,

குழம்பில உப்பு கூடிடுச்சுன்னா, 2 பச்சை மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய் தாளிச்சுக் கொட்டலாம். அல்லது தக்காளி வதக்கி சேர்க்கலாம்.

புளிப்பு கூடியிருந்தா, கொஞ்சமாக உப்பு, காரம் சேர்க்கலாம்.

காரம் ஜாஸ்தியாகிடுச்சுன்னா - கொஞ்சம் வெல்லம் அல்லது சர்க்கரை சேர்க்கலாம்.

பொரியல்/கூட்டு செய்யறதுக்கு காய் கொஞ்சமாக இருந்தால், வதக்கின வெங்காயம், தேங்காய்ப் பூ சேர்த்துக்கலாம்.

விருந்தினருக்கு:

எப்பவும் வீட்டில் கடலை மாவு, பச்சரிசி மாவு ஸ்டாக் இருக்கும். இந்த 2 மாவுடன் கொஞ்சம் தோசை மாவு, உப்பு, மிளகாய்ப் பொடி, பெருங்காயப் பவுடர், பெரிய வெங்காயம் அரிந்தது, பொட்டுக்க்டலை ஒரு கைப்பிடி போட்டு, கொஞ்சம் தேங்காய்ப்பூவும் சேர்த்து, போண்டா செய்துடலாம்.

இட்லி மாவில் மிளகுப் பொடி, சீரகம், வதக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, குழிப் பணியாரமாக செய்து கொடுக்கலாம்.

தயிரில் பொரித்த அப்பளத்தைப் போட்டு, பச்சடியாக வைக்கலாம். அல்லது துருவின காரட் சேர்த்துப் பரிமாறலாம். சீக்கிரம் செய்ய முடியும்.

கனிந்த வாழைப்பழங்களை வில்லைகளாக நறுக்கி, அதோடு கொஞ்சம் பால், சர்க்கரை, தேன் சேர்த்துப் பரிமாறியிருக்கிறேன். டேஸ்டான டெஸர்ட் என்று பாராட்டினாங்க(!)

இன்னும் மற்ற தோழிகள் வந்து சொல்வாங்க

அன்புடன்

சீதாலஷ்மி

"அனுபவம் வாய்ந்த" அதை தூக்கி போட்டுடுங்க.நானும் சொல்ல போறேன்.
முன்பெல்லாம் இப்படி உப்பு காரமெல்லாம் கூடும் இப்போ இல்லை..ஏன்னு தானே கேக்கறீங்க?சின்ன ஸ்பூனா போட்டு வச்சிருக்கேன் உப்பு குறைந்தாலும் கூட கூடாதுன்னு சபதம் எடுத்திருக்கேன்.
இஞ்சி பூண்டை பொதுவா அரைத்து சேர்ப்பார்கள் நான் பெரும்பாலும் துருவி சேர்ப்பேன் சுவை கூடும்.ஆத்திர அவசங்களுக்கெல்லாம் ரெடிமேட் தேங்காய் பால் பொடி தான்.
குழம்பில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாற்றத்தோடு செய்வேன்..சிக்கன் குழம்பு எனக்கு தூக்கத்திலும் சமைக்க நல்ல வரும்..அதில் ஒருமுறை வெந்தயம் கொஞ்சம் சேர்த்து தாளித்து செய்வேன்,,ஒருமுறை மல்லி தூள் சேர்த்து,மற்றொரு முறை சேர்க்காமல்,மற்றொரு முறை மிள்காய் தூளே சேர்க்காமல் பச்சைமிளகாய் மட்டும் சேர்த்து,சில சமய்ம் பெருஞ்சீரகம் சேர்ப்பேன்,சில சமயம் காரத்துக்கு மிளகு தூள் மட்டும் இப்படி சிக்கனில் ஏகப்பட்ட வெரைட்டி சமைக்கலாம்..ஆனால் எப்போ சமைத்தாலும் சிக்கன் குழம்பு இது நல்லா இருக்கு என்று நிறைய பேர் சொன்னது காரத்துக்கு முழுக்க பச்சைமிளகாய் மட்டும் சேர்த்து சமைக்கும்போது
முன்பெல்லாம் விருந்தினர்கள் என்றால் முழிப்பேன் இப்போ ரொம்ப இஷ்டம்...இப்போல்லாம் மற்ற ஐடம்ஸ் குறைத்து விட்டு விதவிதமாக ஸ்னேக்ஸ்,புட்டிங் செய்வது வழக்கம்.நிறைய பேர் இங்கு அது தான் விரும்புகிறார்கள்..
விருந்தினர் வந்தால் உடனே எடு கடலைமாவு.முந்திரிப் பக்கோடா தான்,,அல்லது இருக்கவே இருக்கு முட்டை பஜ்ஜி,அதுவுமில்லையா எப்பவும் rice வெர்மிசெல்லி வாங்கி வைப்பேன் அதில் முட்டை உடைத்து ஊற்றி வெங்காயம் பச்சை மிளகாய்,மல்லி இலை,சாஸ் எல்லாம் சேர்த்து ஆம்லெட் போல ஊற்றி எடுப்பேன்.நானா கண்டுபுடிச்ச ஒரு ஐட்டம் உண்டு அதுக்கு எப்பவும் மவுஸு அதிகம் தான்....சாசேஜை வெங்காயம் மிளகு,கறிவேப்பிலை சேர்த்து வதக்கி ப்ரெட்டை நனைத்து உள்ளே சாசேஜ் வைத்து சுருட்டி வறுப்பது ஆல் டைம் ஃபேவரைட்.இது எனக்கு சுலபமாக வரும்
இன்னும் இருங்க யோசனைகளோடு வறேன் செய்து பாருங்க.

சீதாம்மா (இப்படி கூப்பிடுவது தவறென்றால் மன்னிக்கவும். என் சித்தியின் பெயரும் சீதாலக்ஷ்மிதான் அவரை இப்படிதான் கூப்பிடுவேன்) - எனக்கு நீங்கள் வந்து பதில் தந்தது ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷம். குறிப்பா புளி கூடினா என்ன செய்யனும்னு சொல்லியிருப்பது எனக்கு ரொம்ப பயன்படும் (அடிக்கடி விடும் பிழை :)) இங்க இட்லி, தோசை மாவுதான் அடிக்கடி மக்கர் பண்ணும். சீதோஷ்ண நிலையால் புளிக்காது. உங்க பச்சடி ஐடியா நல்லாயிருக்கு. (குறிப்பா அப்பள பச்சடி).. இன்னும் நிறைய சொல்லுங்க முக்கியமா நீங்க சமையலில் செய்யும் சின்ன சின்ன மாற்றங்கள் பற்றி சொல்லுங்க..
மீண்டும் உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

வாழ்க வளமுடன்

தளிகா அக்கா
உங்க சபதத்தை இனி நானும் கடைபிடிக்கிறேன். கண்டிப்பா நீங்களெல்லாம் அனுபவசாலிகள்தான்.
உங்களோட சிக்கன் குழம்பு வகைகள் நல்லா இருக்கு இன்னிக்கே ட்ரை பண்ணிட்டு சொல்றேன். குறிப்பா இஞ்சி, பூண்டு துருவி சேர்ப்பது.
உங்க சாஸேஜ் ஐடியா சூப்பர்ங்க. என் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும். நான் அதை வெங்காயம், தக்காளி, உப்பு, மிளகு போட்டு கொஞ்சம் எண்ணெயில் வதக்கி சாஸ் சேர்த்து கொடுப்பேன். உங்க முறையில் செய்திட்டு சொல்றேன்.
இன்னும் நிறைய யோசித்து சொல்லுங்க காத்துட்டு இருக்கேன்.
நன்றிகளோடு, அபி.

வாழ்க வளமுடன்

அபி

சீதாலஷ்மியே அழகா சொல்லிட்டாங்க

உப்பு அதிகமானா உருளை கிழங்கு ஒன்றை சேர்த்துடுங்க. சமமாக்கிவிடும். அதே உருளையை சன்னமா நீளமா நறுக்கி போட்டா உப்பும் சரியாகிவிடும், சுவையும் கூடும். பெருசா நறுக்கி போட்டிங்கனா.. உங்க சமையலோட வாசத்தை மந்தமா மாத்திடும் சோ. சன்னமா நீளமா நறுக்கி போடுங்க.தக்காளியும் சேர்க்கலாம்

காரம் அதிகமா உப்பு கொஞ்சம் பத்தாம இருக்கும். மேலும் வெல்லம் அல்லது தேங்காய் சேர்த்தால் அடங்கிவிடும்.வெண்ணெய், நெய், தயிர்னு எதுனாலும் உங்க டிஷ்க்கு தகுந்தார் போல சேர்க்கணும்.

புளிப்பு அதிகம் ஆனா வெல்லம் இல்லேன்னா.வெங்காயத்தை தனியா வதக்கி சேர்க்க சொல்வார்கள்

ஏதாவது இல்லைனாவே அதுக்கு தகுந்த மாதிரி செய்துவிடுவது தான்.வெங்காயம் இல்லைனா, தக்காளி மட்டும் வைத்து காய்கறிகளை வேக வைத்து குழைந்த தக்காளியில் பிரட்டி பொடி வகையை சேர்த்தால் நல்லா இருக்கும். இதே தக்காளி இல்லாமல் போனாலும்.. ஒரு முறை அடிப்படையான சுவையை மட்டும் மனதில் வைத்து முயற்சி செய்ய சரி ஆகிவியும்.

திடீர் உறவினர் , நான் ஈசியான பெங்காலி கிச்சடி தான். அப்புறம் வெங்காய பகோடா , இதெல்லாம் எனக்கு என்னவோ ஈசியா தோணும்.
ப்ளைன் பருப்பு வைத்து உருளை வறுவல், ரசமே எல்லா திடீர் விருந்தாளிகளையும் மயக்கிவிடும்

கறி வகைகள். நாமே எக்ஸ்ப்ளோர் செய்வது தான். கிரேவி வகைகளுக்கு தேங்காய் பால், இல்லை தயிர் சேர்ப்பேன்.எனக்கு கரம் மசாலைவிட சாம்பார் பொடி சேர்த்து செய்யும் காய்கறி பிடிக்கும்.சில காய்கறிகளை வெங்காயம் கறிவேப்பிலை வரமிளகாயில் வதக்கினாவே சுவையா இருக்கும்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சிக்கன் வறுவல் செய்யும்போது கொஞ்சம் வெள்ளை எள் சேர்த்து வறுப்பது சுவையாவும் அழகாவும் இருக்கு..இது என் அம்மாவை பார்த்து கத்துக்கிட்டது

ம்ம்... டிப்ஸ் சொல்லும் அளவுக்கு நானெல்லாம் பெரிய ஆளில்லைங்க சமையலில். ஏன்னா இதுவரை பெருசா திடீர் விருந்தினர் வருகையை ஃபேஸ் பண்ணதில்ல. :) ஆனா எனக்கு என்னவோ என் சமையல் எல்லாமே சுலபமா தான் தோணும். எதுவுமே எனக்கு அதிக நேரம் எடுத்ததில்லை.

அவசரமா செய்வது என்றால் எனக்கு டோக்ளா, பஜ்ஜி, பக்கோடா வகைகள். பக்கோடலாம் வெங்காயம் இல்லைன்னா கூட போட்டுடலாம். முந்திரி, புதினா, கொத்தமல்லி இப்படி பக்கோடாவில் எவ்வளவு வகை. பஜ்ஜியும் அப்படி தான்... பனீர், ப்ரெட், ஸ்பினாச், வெங்காயம், உருளை, வாழை... எல்லாத்துலையும் போடலா. கண்டிப்பா ஒன்னு இல்லன்னா ஒன்னு இருக்கும் தானே எப்பவுமே வீட்டில். இட்லி மாவு இருந்தா பணியாரம்... சீதாலஷ்மி சொன்ன மாதிரி எனக்கு அவசரத்துக்கு கை கொடுப்பது இதுவும் தான்.

சாப்பாடு வகைகளில் ஒரு சாதத்தை குக்கரில் வெச்சுட்டு அது வேகும் முன் தயிரை தாளிச்சு, இலுமிச்சை சாறு தாளிச்சு, தேங்காய் மிக்ஸீயில் போட்டு துருவி தாளிச்சு வெச்சுடலாம். சாதம் சூடா ரெடி ஆகும் போதே நமக்கு 3 வகையா எலுமிச்சை சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம் எதை வேணும்னா ரெடி பண்ணிடலாம். இதெல்லாம் 5 - 10 நிமிஷ வேலை.

இல்லையா... இருக்கவே இருக்கு தேங்காய் பால் சாதம், புளி ஊற்றி குக்கரில் வைக்கும் சாதம், தக்காளி சாதம்... இதெல்லாம் அரிசியை போட்டு தாளிப்போட டைரக்ட்டா குக்கரில் வெச்சு எடுத்துடலாம். வேலை சுலபம்.

கிச்சடி வகை... ரம்யா சொன்னது போல நான் பார்ட்டிக்களில் கூட சட்டுன்னு ஒரு வகை கூட்ட நினைச்சா சேர்த்துடுவேன். ஒரு முறை ரவைன்னா அடுத்த முறை சேமியா... மஞ்சள் சேர்த்தும், சேர்க்காமலும் செய்தா கூட கலர் பார்க்க வித்தியாசமா தெரியும். இதே கிச்சடிக்கு தேங்காய் பால் பாதி, நீர் பாதி விட்டு செய்தா இன்னொரு வகையா இருக்கும். சுவை கூடும்.

சிக்கன்... நான் செய்வதில் பார்ட்டிகளிலும் ஹிட், வீட்டிலும் ஹிட். என்னவர் திருமணத்துக்கு முன் அசைவம் விரும்பி சாப்பிடுவதில்லை... ஆனா இப்ப சிக்கன்னா ரொம்ப விருப்பம். எங்க போய் பிரியாணி சாப்பிட்டாலும் , வீட்டில் சாப்பிடுவது போல் இல்லைன்னுவார். காரணம் பதம் தான். நான் அரிசி முழுசா இருக்கான்னு மட்டும் பார்க்காம வர வரன்னு ட்ரைய்யா இல்லாம இருக்கணும்னும் பார்ப்பேன். அது தான் நான் பிரியாணி செய்தால் ஸ்பெஷல இருக்கும். எண்ணெய் குறைவா சேர்ப்பேன். பிரியாணியை கையில் எடுத்தா நெய்யும், எண்ணெயுமா இருக்க கூடாதுன்னு.

பிரியாணி ஒன்னு போல செய்வதில்லை... ஒரு முறை தயிர் சேர்ப்பது, ஒரு முறை எலுமிச்சை சேர்ப்பது, ஒரு முறை தக்காளி மட்டுமே. ஒரு முறை பிரியாணி மசாலாவுக்கு முந்திரி சேர்த்து அரைப்பது, ஒரு முறை வெறும் தேங்காய் சேர்ப்பது, பச்சை மிளகாய் சேர்த்து அரைப்பது, வர மிளகாய் சேர்த்து அரைப்பது, கொத்தமல்லி அல்லது கறிவேப்பில்லை சேர்த்து அரைப்பது... பச்சை மிளகாய் தாளிப்பில் சேர்த்துச் செய்வது, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, சேர்க்காமல்... தேங்காய் விழுதுக்கு பதில் பால் சேர்ப்பது, வெறும் நீரில் வேக வைப்பது... இப்படி அடுக்கிட்டே போகலாம் பிரியாணியில் மாற்றங்களை. எல்லாமே சுவை நிச்சயம் வேறுபடும்.

தேங்காய் பால் எடுத்து சேர்ப்பதுக்கும், அரைத்து சேர்ப்பதுக்கும், அதே தேங்காய் பால் பவுடராக வருவதை பயன்படுத்துவதற்கும், ரெடிமேட் தேங்காய் பால் சேர்ப்பதுக்கும் கூட சுவையில் மாற்றம் நிச்சயம் உண்டு.

காரத்துக்கு பச்சை மிளகாய் சேர்ப்பதற்கும், வர மிளகாய் சேர்ப்பதற்கும், மிளகாய் தூள் சேர்ப்பதற்கும், சாம்பார் தூள் சேர்ப்பதற்கும் வாசமும் சுவையும் மாற்றம் நிச்சயம் உண்டு.

அதே மிளகாயை அரைத்து சேர்க்கும் போது ஒரு சுவை, நறுக்கி சேர்க்கும் போது ஒரு சுவை...

இப்படி இந்த மாற்றங்களை புரிந்து கொண்டால் சமையலில் தினம் தினம் மாற்றம் செய்யலாம்.

கோழி குழம்பா வெச்சாலும் இதே தான்... இந்த பிரியாணி மசாலாவுக்கு செய்யும் மாற்றங்களை இதுக்கும் செய்யலாம். தேங்காய் பால் போல, முந்திரி அரைச்சு சேர்த்தாலும் கெட்டி ஆகும், ஆனா சுவை மாறும். பாதாம் சேர்த்து அரைச்சா ஒரு விதமா இருக்கும். தாளிக்க எண்னெய்க்கு பதில் வெண்ணெய் சேர்த்தா ஒரு வாசம், நெய் சேர்த்தா ஒரு வாசம்.

பட்டை லவங்கம் ஏலக்காய் எல்லாம் தாளிப்பில் சேர்த்தா ஒரு வாசம், பொடியாக சேர்த்தா ஒரு வாசம்.

அவசர நேரத்தில் எப்பவுமே நான் அடுப்பில் ஒரு வகை என்றால் அவனில் ஒரு வகை போடுவேன். எண்ணெயும் குறைவா சேர்க்கலாம், அதே சமயம் டைமர் செட் பண்ணீட்டா அதை நாம கொஞ்சம் நேரம் கவனிக்காம மற்ற வேலையை பார்க்கலாம்.

இனிப்புன்ன உடனே ஆவது எனக்கு பாயாசம், கேசரி, மா (கோதுமை / பேசன் / நட்ஸ்) லட்டு போன்றவை.

டிஃபன் வகைகளில் சட்டுன்னு ஆக பூரி அல்லது ஃபுல்கா... கூட ஒரு குருமா. வெஜ் அல்லது சிக்கன் அல்லது முட்டை... சட்டுன்னு ஆகும்.

இன்னும் நினைவுக்கு வந்தா நிச்சயம் வரேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

திடீர் விருந்தினர் வருகை எல்லாம் எனக்கு ரொம்பவே அரிது :). ஆனால் ஆத்துக் காரர் மட்டும் திடீர் விருந்தினர் மாதிரி 10நிமிடத்தில் டின்னர் சாப்பிட வரேன்னு சொல்லி ஆட்டம் காண வைப்பார் :).

இட்லி மாவு கைவசம் இருந்தால் பிரச்சினையே இல்லை. தேங்காய் சட்னியும், வனிதாவின் தக்களிச் சாறும் பத்தே நிமிடத்தில் செய்திடலாம். தோசை வார்த்து கொடுத்தால் முடிஞ்சுது வேலை.
மாவு கைவசம் இல்லைன்னா கோதுமை மாவை வெந்நீர் அல்லது இளஞ்சூடுள்ள பால் சேர்த்து பிசைந்து வைத்து விட்டு தக்காளி வெங்காயம் பொடியாக வெட்டி கடுகு கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் தக்காளி வதக்கி மிளகாய்த் தூள் அல்லது சாம்பார் பொடி சேர்த்து கிளறி கொஞ்சம் தண்ணீஎ சேர்த்து கொதித்ததும் ரெண்டு முட்டையை உடைத்து ஊற்றி கிளறாமல் மூடி போட்டு வேக வைத்தால் சப்பாத்திக்கான முட்டை கறி ரெடி. வெங்காயம் வதங்கும் நேரம் தண்ணீர் கொதிக்கும் நேரம்னு கிடைக்கும் இடைவேளைகளில் சப்பாத்தியும் திரட்டி சுட்டு எடுத்து விடலாம். பத்து பதினைந்து நிமிடங்களில் எல்லாமே ரெடி ஆகிடும்.

அடுத்து நான் அதிகம் எதிர் கொள்வது வெங்காயம் தக்காளி உருளை பூண்டு இஞ்சி தவிர வேறு காய்கள் இல்லாம மாட்டிக் கொள்வதுதான் :(. ஆனாலும் சமைப்போம்ல :)

பருப்பு கடைந்து ரசம் வைத்து உருளை வருவலும் இஞ்சி தயிர் பச்சடியும் வச்சு ஒரு நாள் சமாளிக்கலாம். அடுத்த நாள் உருளை சாம்பார், வேக வைத்த சன்னா வெங்காயம் மிளகாய்தூள் எல்லாம் சேர்த்து வதக்கி பொரியல் செய்து வெங்காய பச்சடியும் செய்தால் வேலை முடிந்தது.

மாலை நேர ஸ்னாக்ஸ் க்கு எல்லோரும் சொல்வது போல பக்கோடாதான் எளிது. நீளமாக நறுக்கிய முட்டை கோஸ், வெங்காயம், ஃப்ரோசன் கார்ன், பீஸ் இதனுடன் ராகி மாவு அரிசி மாவு மிளகாய் தூள் கலந்து பக்கோடா செய்தால் கர கர மொறு மொறு மிக்ஸ்ட் வெஜ் ராகி பக்கோடா பத்து நிமிடத்தில் ரெடி.

சமையலில் எண்ணெய் குறைவாக பயன் படுத்த எண்ணெயை பாட்டிலில் இருந்து அப்படியே ஊற்றாமல் சிறிய கன்டெஉனரில் ஊற்றி குட்டி ஸ்பூன் போட்டு வைத்தால் எண்ணெய் பயன் படுத்தும் அளவை கட்டுப் படுத்த முடியும்.

பொரியலில் உப்பு காரம் அதிக மாயிடுச்சுன்னா கொஞ்சம் தேங்காய் துருவல் சேர்த்து கிளறினால் குறைந்து விடும்.

குழம்பு வகையில் காரம் அதிகம் ஆயிடுச்சுன்னா, தேங்காய் அரைத்து சேர்ப்பது அல்லது தேங்காய் பால் சேர்ப்பது அல்லது வெல்லம் சேர்ப்பதுன்னு குழம்பு வகையைப் பொறுத்து சேர்த்து சரியாக்கிடலாம்.

சிக்கன் விதம் விதமாக செய்வது எல்லாம் வனி போலத்தான். பச்சை மிளகாய் மட்டும், மிளகு தூள் மட்டும் இப்படி சிலவற்றை சேர்த்து சிலவற்றை நீக்கின்னு மூடுக்கு ஏற்ற மாதிரி செய்யறதுதான். ஆனால் நிச்சயம் ருசியாக இருக்கும்.

மீன் குழம்பு செய்யும் போதும் சில நாள் புளி சேர்த்து சில நாள் தக்காளி சேர்த்து சில நாள் மாங்காய் சேர்த்துன்னு செய்தால் சுவையில் நிச்சயம் மாற்றம் இருக்கும்.சிலவகை மீன் குழம்பில் நான் எப்போதுமே இறுதியில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் பரவலாக ஊற்றி இறக்குவேன். மணமும் சுவையும் தூக்கலாக இருக்கும். வெந்தயத்தை வறுத்து பொடித்து கால் தேக்கரண்டி அளவு இறக்கும் முன் தூவினாலும் சுவையும் மணமும் சூப்பராக இருக்கும்.

மீன் குழம்பு வைக்கும் போது மீன் துண்டுகளில் உப்பும் காரமும் நன்றாக பிடிக்க மீனை சுத்தம் செய்த பின் சிறிது புளிக்கரைசல் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து பத்து பதினைந்து நிமிடம் ஊற வைத்து விட்டு வழக்கம் போல் குழம்பு செய்தால் நன்றாக இருக்கும். மீன் வறுவல் செய்யவும் இப்படி ஊற வைத்து விட்டு பின்னர் நீரை வடித்து மசாலா பிரட்டி பொரித்தால் நன்றாக இருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சிக்க சிரியாவில் இருந்தவரை ரொம்ப சுலபமா இருந்தது. எந்த வகையானாலும் அழகா பிரிச்சு பிரிச்சு வகை வகையா வெசிருப்பாங்க. எலும்போடு சின்னதா நறுக்கியது, எலும்பிலாம நறுக்கியது, ப்ரெஸ்ட், லெக் பீஸ், தொடையோடு உள்ளது, தோல் உள்ளது, இல்லததுனு ஏகமா பிரிச்சே வெச்சிருப்பாங்க. ஆனா இங்க அப்படி இல்ல... 3 வகை தான்... ட்ரம்ஸ்டிக், ஃபுல் சிக்கன், போன்லஸ் ப்ரெஸ்ட்.

அதனால் அவசரம்னா நான் ப்ரெஃபர் பண்றது ட்ரம்ஸ்டிக் அலல்து ப்ரெஸ்ட் தான். சுத்தம் பண்ணி கட் பண்ண ஈஸியா இருக்கும். சீகிரம் ஆகும். முழு கோழி வாங்கி சுத்தம் பண்ணி கட் பண்ண எனக்கு எப்பவுமே வேலை ஆள் வேணும்.

ஃப்ரை செய்யும்போது அப்படி தான்... கடைசியில் மிளகு தூள் சேர்ப்பது, சீரக தூள் சேர்ப்பது, வெறும் மிளகாய் தூள் சேர்த்தே செய்வது, இஞ்சி சேர்ப்பது, பூண்டு சேர்ப்பதுன்னு இதிலும் நிறைய வகை உண்டு. உருளை இதில் சூப்பர்... நிறைய விதமா ஃப்ரை பண்ணலாம். சிக்கனும் சரி, உருளையும் சரி... வேக வெச்சு ஃப்ரை பண்ணா ஒரு டேஸ்ட், மசாலாவோட சேர்த்து சமைச்சு அப்படியே ட்ரையா நீர் இல்லாம பிரட்டினா ஒரு டேஸ்ட். இப்படியும் சுவையில் மாற்றம் காட்டலாம்.

கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை எல்லாம் காய வெச்சு அரைச்சு தூள் வெச்சுகிட்டா. சில நேரம் குருமா, குழம்பு வகைகளீல் சேர்க்கலாம். வாசம் மாறுபடும். ஃப்ரெஷா சேர்ப்பதுக்கும், இப்படி சேர்ப்பதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எல்லோரும் கலக்குரீங்களே

மேலும் சில பதிவுகள்