பட்டிமன்றம் 69 : நமக்கு பிடித்த வேலையை செய்வது சரியா? அல்லது கிடைத்த வேலையை பிடித்ததாக மாற்றி கொள்வது சரியா?

அன்பு அறுசுவை தோழர் / தோழிகளே,

அனைவருக்கும் என் அன்பார்ந்த வனக்கங்கள்.

இந்த பட்டிமன்றம் 69 ஐ வழி நடத்தி செல்ல நடுவராக வாய்ப்பு குடுத்தமைக்கு என் நன்றிகள் பல.

இன்றைய எந்திரமயமான உலகில், நம் தேவைக்காகவும், நம் திருப்திக்காகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறோம்.

நாம் காலை தூங்கி எழுவதிலிருந்து, இரவு தூங்க செல்வது வரை, நமக்காகவும் நம்மை சார்ந்திருப்பவர்களுக்காகவும் வீட்டிலோ அல்லது வெளியிலோ அல்லது அலுவலகத்திலோ பலதரப்பட்ட வேலைகளை கையாள்கிறோம்.

இதில் நாம் தினசரி செய்யும் வேலையை பிடித்திருக்கின்றதோ அல்லது பிடிக்கவில்லையோ, கட்டாயம் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகின்றோம்.

ஆனால் தொழில் ரீதியாக...

"நமக்கு பிடித்த வேலையை செய்வது சரியா? அல்லது கிடைத்த வேலையை பிடித்ததாக மாற்றி கொள்வது சரியா?"

இதுவே இந்த வார பட்டியின் தலைப்பு. இந்த அருமையான தலைப்பை தந்த நம் அறுசுவை தோழி பிந்து அவர்களுக்கு என் சிறப்பு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

முக்கிய குறிப்பு :
மற்ற பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம்.

இனி... தொடங்குங்கள் உங்கள் காரசாரமான வாதங்களை....

வீர சிங்கங்களே, சீறிப்பாயும் சிறுத்தைகளே வாங்க வாங்க வந்து பட்டியில் பட்டய கிளப்புங்க...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

அன்பு நடுவர் பிரேமாவுக்கு என் வாழ்த்துக்களும், வணக்கங்களும். தலைப்பை தந்த தோழி பிந்துவிற்கு நன்றிகள். வாதிடப்படவேண்டிய யோசனையில் இருந்து இத்தனை நாள் தப்பியிருந்த தலைப்பு தான். நமக்கு பிடித்த வேலை எப்போது கிடைப்பது? நாம் எப்போது அதில் வேலை பார்த்து சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேறி ஒரு இலட்சிய இடத்தை பெறுவது? அதனால் பிடித்ததை விட கிடைத்த வேலையே சரியென்று மனதிற்கு பட்டதால் அந்த தலைப்பில் வாதாட விரும்புகிறேன். பட்டியின் மற்ற ஜாம்பாவான் தோழிகளின் வரவிற்காக ஆவலோடு காத்திருக்கிறேன். அவ்வபோது என் வாதங்களையும் வைப்பேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வணக்கம் நடுவரே!!

பிடித்த வேலையைதான் பிடிப்போடும், விருப்பத்தோடும் செய்ய முடியும். மனம் விரும்பாத எதிலும் மூளை, தன் ஈடுபாட்டை கொடுப்பதில்லை. அப்படியிருக்கும் போது என்ன சம்பாதித்து, சாதிக்க முடியும்? தமிழ் பாடல் வரிகள் போல் ''தாயை விற்று பாசம் வாங்கிய'' கதையாகி விடும்.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

புது நடுவருக்கு வாழ்த்துக்கள் :) நீங்கள் இன்னும் பல பட்டி மன்றங்களுக்கு நடுவராக வந்து கட்டாயம் கலக்க வேண்டும்....

என்னுடைய எதிர் கட்சி கூட்டணி எந்த பக்கம் என்று பார்த்து விட்டு, சீக்கிரமே வந்து கலந்துக் கொள்கிறேன் :D

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

பட்டிமன்றம் 69 ல் நடுவராக இணைந்துள்ள பிரேமா அவர்களுக்கும் அனைவரின் மூளைக்கு வேலை கொடுக்கும்படி நல்ல தலைப்பு கொடுத்த பிந்து மேம் அவர்களுக்கும் நன்றி :-)
எந்த அணியில் சேர்வது , குழப்பமாக உள்ளது . :-C விரைவில் ஒரு அணியை தேர்ந்தெடுத்து வாதங்களுடன் வருகிறேன் ..

நட்புடன்
குணா

இந்த தலைப்பின் நடுவர் அவர்களுக்கும் , தலைப்பை பரிந்துரைத்த தோழிக்கும் வாழ்த்துக்களுடன் என் விவாதத்தை துவக்குகின்றேன்

நடுவர் அவர்களே ! நம்மில் பலரும், பிறருடன் சார்ந்தவர்களாகவே வாழ்கின்றோம். தனி மனித வெற்றியை , நம்மில் யாரும் பெரிதாக கொண்டாடுவதில்லை. ஆனால் ஒருவரின் வெற்றியால் அல்லது சிறு முயற்சிகளால், அவரை சார்ந்த சிலரும் மகிழும் போதே முழுமையான சந்தோசம் கிடைக்கும்.

நமக்கு பிடித்த வேலையை தேடுவது, நம்முடைய சுய மகிழ்சிக்காக மட்டுமே முயற்சிக்கின்றோம். நாம் பிடித்த வேலை கிடைக்கும் வரை காத்திருப்பதால், நம்முடைய செயல்திறனையும் இழக்கின்றோம். அந்த வேலை கிடைக்கும் வரை நம்மை சார்ந்த சிலருக்கு நாம் பாரமாக கூட இருக்கக்கூடும்.

ஆனால், கிடைத்த வேலையை நமக்கு பிடித்ததாக மாற்றிகொள்வதால் நாமும் அதனால் மகிழ்கின்றோம் , நம்மை சார்ந்தவர்களும் மகிழ்வார்கள். அதனால், நம்முடைய நாட்டின் முன்னேற்றத்திற்கு காரணமாகவும் அமைகின்றோம். வேலையில்லா நிலை குறைவதற்கும் உதவியாக இருக்கின்றோம்.

மீண்டும் தோழிகளின் விவாதங்களை தொடர்ந்து எனது விவாதம் தொடரும்

நட்புடன் ரூபி

நடுவர் அவர்களே, மறுபடி உங்களுக்கு ஒரு வணக்கத்தை போட்டுட்டு வாதத்தை முன் வைக்கிறேன்.

நம்மில் பலருக்கும் ஆசை இருக்கு ஆனை மேல ஏற, அம்சம் இருக்கு கழுதை மேய்க்க என்னும்படியான யோகம் தான். இதை நீங்க ஒத்துக்கறீங்க தானே.. வேற வழியே இல்ல ஒத்துட்டு தான் ஆகனும். பேருக்கு பின்னாடி ஏ,பி,சி,டி வார்த்தைகள் அத்தனையையும் டிகிரியா வாங்கி குவிச்சவன் ஒரு லட்சியத்தோட இந்த வேலைக்கு தான் போகனும்னு ஒரு கற்பனை கோட்டையை கருங்கல்லில் கட்டி பலமாக வைத்திருப்பான். அந்த கோட்டையின் அடிக்கல் நாட்டுவிழாவுக்காக தன் இண்டர்வியூ பயணத்தை நம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் தொடர்வான்..தொடர்வான் தொடர்ந்துட்டே இருப்பான். எவ்ளோ நாள் தான் தொடர்வான்னு நினைக்கறீங்க. ஒரு மாசம், 2 மாசம், அட 6 மாசம், ஒரு வருஷம்னு கூட வச்சுக்கோங்க. அதுக்கு பிறகு பார்க்கனுமே அவன் வெளித்தோற்ற மற்றும் உள் மன நிலையை. தொடக்க கால இண்டர்வியூவுக்காக அவன் உடையில் இருந்த மிடுக்கும், கடுப்பும் இருக்குமா? நாளாக நாளாக வேலை கிடைக்காத விரக்தியும், நினைத்த லட்சியத்தை அடைய முடியாததின் தொய்வும் அவன் உடையிலும், மனதிலும் பட்டர்வதனமாக தெரியும். பெப்சி உங்கள் சாய்சில் சொல்வது போல கீப் ட்ரை..கீப் ஆன் ட்ரைங்கற வார்த்தை பொழுதுபோக்கான அந்த நிகழ்ச்சிக்கு மட்டுமே பொருந்தும். வாழ்க்கைக்கு அல்ல. நாம் சொல்லலாம் வாழ்க்கையில் முன்னேற தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் மிக அவசியம் என்று. அட... நீங்க எடுத்திருப்பது ஓட்டை சட்டி.. அதில் என்னைக்கு நீர் நிரப்பி... என்னைக்கு வீடு வந்து சேர போறீங்க? அதே போல வாழ்க்கையில் வேலை குறித்து நாம் எடுத்த முடிவு தவறாக இருக்கும் போது நீங்கள் என்ன முட்டி மோதினாலும் அது அமாவாசை அன்று நிலவை எதிர்நோக்கிய கதை போல் தான் ஆகும். அதுக்கு தான் சொல்றோம் சரியான பாதையை தேர்ந்தெடுங்க.. சரியான நேரத்தில் சென்றடைங்கன்னு.

இந்த தலைப்பிற்கு காதலையும் ஒப்புமைக்கு அழைக்கலாம். எப்படினு நீங்க கேக்கறதுக்கு முன்னாடி நானே சொல்லிடுவேனே..நம்ம ஊர்ல காதலிச்சவங்க அத்தனை பேரும் வெற்றிகரமாக கல்யாண வாழ்க்கையில் இணைந்துள்ளார்களா? அல்லது வெற்றி பெறாத காதலர்கள் அத்துணை பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்களா? அல்லது இன்னமும் காதல் விரக்தியிலேயே உழல்கிறார்களா? அப்படி காதலில் தோற்றவர்கள் தாங்களாக சுதாரித்து கொண்டோ, பெற்றோர் வற்புறுத்தலின் பேரிலோ, நண்பர்களின் நல்வழிகாட்டுதலினாலோ பெரியோர் பார்த்து வைக்கும் வரனை மணம் முடித்து வாழ்க்கையை தொடங்கவே செய்கிறார்கள். தொடக்கத்தில் அவர்களுக்கு என்னடா வாழ்க்கை என்று இருந்தாலும், போக போக இனிக்க செய்யும் ஆரோக்கியமான நெல்லிக்கனி வாழ்க்கையையே வாழ்கிறார்கள்.. வாழ்ந்துக் கொண்டும் இருக்கிறார்கள். அப்படி காதலில் தோற்ற முன்னாள் காதலர்களையும், இந்நாளின் வெற்றிகரமான தம்பதிகளையும் சென்று இப்படி ஒரு கேள்வி கேட்டால் என்ன சொல்வார்கள்? காதலியை மணக்க முடியவில்லை என்ற வருத்தம் இன்னும் உங்கள் மனதை வாட்டுகிறதா? அதற்கு அவர்கள் பதில் இதுவாக தான் இருக்கும். சே..சே.. இல்லவே இல்லைங்க.. அப்படி ஒரு வாழ்க்கை அமையாததே பெரிய சந்தோஷம்னு இப்ப நினைக்கறேன். இல்லைனா இப்படி ஒரு அன்பான மனைவி எனக்கு கிடைச்சிருப்பாளா? எல்லா காரண காரியங்களிலும் ஒரு அர்த்தம் இருக்கும். அப்படி இப்படின்னு வேதாந்தம் பேச ஆரம்பிச்சிடுவாங்க. அது போல தான் கிடைச்ச வேலையை செய்பவர்களின் நிலையும் கூட.ஜில்லுன்னு ஒரு காதல் படமே இதற்கு சிறந்த உதாரணமாக சொல்லலாம். ரியல் லைப்ல போராடி ஜெயிச்சிருகாங்களேன்னு யாரும் என்கிட்ட எடக்கு கொஸ்டின் கேக்கப்படாது. அப்புறம் நான் பேச மாட்டேன் காங்கோ ஜூஸ் தான் பேசும் ;) சாமான்யமானவங்க எல்லாரும் இப்படி காதலில் ஜெயிக்க முடியாதே.

இன்றைய போட்டி நிறைந்த விஷம் போல விலைவாசி கொண்ட பொருளாதார வாழ்க்கை சூழ்நிலையில் யாருங்க ஆசைப்பட்ட வாழ்க்கைக்காக காத்திருக்கோம்? இன்றைக்கு வெற்றிப்பாதையில் நங்கூரமிட்டிருக்கும் பெரிய பணமுதலைகளை கேட்டால் அவர்கள் பெரும்பாலானோர் பதில் இதுவாக தான் இருக்கும். அவர்கள் ஆசைப்பட்ட வாழ்க்கை வேறு. அடைந்த வாழ்க்கை வேறாக இருக்கும். கடவுள் ஒருத்தருக்கு வாழ்க்கை துணை குறித்த முடிச்சோடு, வேலை முடிச்சையும் சேர்த்து தான் போட்டு அனுப்பி வச்சிருப்பார். நமக்கு பிடிச்ச வாழ்க்கையை அடைய நாம் மட்டும் கஷ்டப்பட்டால் பரவாயில்லை. நம்மோடு நம்மை சார்ந்த குடும்பத்தினரும் சேர்ந்து கஷ்டப்பட்டால் அதை பார்க்க நன்றாக இருக்குமா? என்றைக்கோ கிடைக்கும் பலாக்காய்காக இன்று கிடைக்கும் களாக்காயை யாரும் இழப்பார்களா என்ன?

கிடைச்ச வேலையை பண்ணிட்டே, தன் அன்றாட வாழ்க்கை பாதிக்காதவாறு நினைச்ச, பிடிச்ச வாழ்க்கையை பற்றின கனவுகளோடு வாழும் பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி இருந்துட்டு போனாலும் எந்த பாதகமும் இல்லை. அட.. இப்ப உங்களால பிடிச்ச வேலையை செய்ய முடியலையேன்னு கவலைப்பட்டாலும், இரண்டாவது சென்ச்சுரின்னு ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் உண்டே.. ரிடையர்மெண்ட் வாழ்க்கை. அப்ப நீங்க நினைச்சதை எல்லாம் மனதிலும், உடலிலும் எந்த சுமைகளும் இல்லாம ஆற அமர பண்ணலாமே. கடவுள் நமக்கு நிறைய ஆப்பர்ச்சுனிட்டீஸ் தந்துட்டு தான் இருக்கார். நாம தான் அதையெல்லாம் கரெக்ட்டா யூஸ் பண்ணிக்கறதில்லைன்னு நினைக்கறேன்.

நடுவர் அவர்களே, எனக்கு இருக்கும் அறிவுக்கெல்லாம் நான் அமெரிக்கால கூட பொறக்க கூடாத ஆளு..இங்கே இந்த காட்டுல வந்து மாட்டிட்டு...சே..என்னமோ போங்க நடுவரே ;( சும்மா இருந்த என்ன பொலம்பவிட்டு..

இன்னும் வருவேன்!

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்பு நடுவர் அவர்களுக்கு வணக்கம்.............நல்ல தலைப்பிற்கு வாழ்த்துக்கள்.... தொழில் ரீதியாக என்பதினால், கிடைத்த் வேலையை பிடித்ததாக மாற்றி கொள்வது சரியே என்ற தலைப்பில் எனது கருத்துக்களை முன் வைக்கிறேன்.... இன்றைய சூழ்னிலையில் வாழ்க்கையையே நாம் விரும்பியபடி வாழ முடியாமல் கிடைத்ததை விரும்ப கத்துக்கிட்டோம் வேலையில் கிடைத்ததை விரும்பியபடி மாற்றினால் எப்படி தவறாக முடியும்.... பிடித்த வேலைக்கு தான் செல்வேன் என்பது தவறான முடிவு என்பதை நான் மிகவும் லேட்டாக தான் புரிந்து கொண்டேன்... நான் விரும்பியது ஆசிரியர் பணி... கிடைத்ததோ ஐ.டி துறையில் வேலை.... முடியாது முடியாது நான் ஆசிரிய்ர் பணிக்கு தான் செல்வேன் என்று பிடிவாதம் பிடித்து இன்று ஒரு வேலைக்கும் செல்ல காலம் கனிந்து வரவில்லை.... அன்றே சென்று இருந்தால், வேலைக்கு செல்கிறேன் என்ற மன தைரியம் இருந்து இருக்கும்... இனி மகன் வளரும் வரை வேலைக்கு செல்வது கடினம் பிறகு வேலை கிடைப்பது கடினம்.... பட்டு அனுபவித்த காரணத்தினால் சொல்கிறேன் கிடைத்த வேலையை விழுதாக பற்றி கொண்டு முன்னேறுதலே புத்திசாலித்தனம் இன்றைய வாழ்வில்....
சிலருக்கு வேண்டுமானால் (துணிந்து பிடித்த வேலையை தேடுபவர்களுக்கு) யோகம் அடிக்கலாம்... எல்லோராலும் அப்படிப்பட்ட முடிவை எடுத்தல் என்பது கடினம்... காம்ப்ரமைஸ் என்பது சிறந்த வாழ்க்கைக்கு அவசியமான ஒன்று... அது நம் படிப்பிலேயே ஆரம்பித்து விடுகிறது... பொருளாதார ரீதியாக நம்மை முன்னேறும் வேலையை தேர்ந்தெடுப்பதே சரியான முடிவாக இருக்கும்.....

அன்பு புதுமுக நடுவரே... ;) புதுமுகம்னு சொன்னதுக்காக கோவிக்காதீங்க... என்ன இருந்தாலும் நடுவர் பதவிக்கு புதுசு தானே... அதான் :) வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். நல்ல ஒரு தலைப்பு... நண்பன் படம் பார்த்து இன்னைக்கு பலர் குழப்பிக்கிட்டு இருக்க சப்ஜக்ட். அராய்ச்சி பண்னுவோம் நாமும் நம்ம பங்குக்கு.

தலைப்பு தந்து குழப்பத்துக்கு விதையிட்ட பிந்து மேடம்... வாழ்த்துக்கள் :) பாராட்டுக்கள் :)

அணி... சந்தேகமில்லை.... கிடைத்த வேலையை பிடிச்சதா மாத்திக்கணும் :) இன்னைக்கு வீட்டில் ஹோம் மேக்கரா இருக்கேன்... உண்மையில் TCSலயே இருக்க தான் ஆசை (அவ்வளவு ஏன் நடுவரே... ப்ரைமினிஸ்டர் ஆக கூட தான் அசை ;))... அது நடக்கல... நடந்ததை நினைச்சு மகிழ்ச்சியடையலன்னா, இன்னைக்கு நான் நிம்மதி இல்லாம தான் சுத்திட்டு இருக்கணும். இப்போ ஹோம் மேக்கர் வேலையை எனக்கு பிடிச்சதா மாத்திகிட்டேன்... சந்தோஷமா இருக்கேன்.

நடுவரே... ரொம்ப குழப்பாம சொல்லணும்னா... சந்தர்ப்பம் சூழ்னிலை ஒரு மனிதனை எந்த வேலையில் வேண்டுமானாலும் கொண்டு போய் விடும்... அப்படி விடும் சூழலில் கிடைக்காததை எண்ணி வாழ்க்கையை வீணடிக்காமல் கிடைச்சதை நேசிக்க கத்துகிட்டா லைஃப் நிம்மதியா அமைதியா அழகானதா இருக்கும்.

இது சீட் போடும் பதிவு தான்... பெரிய பதிவோடு எங்க கூட்டணி தலைவி வந்த பின் வருகிறேன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவரே
கிடைத்த வேலையை நமக்கு பிடிச்சதாக மாற்றிக் கொள்ளுவதே புத்திசாலித்தனமானது
எனக்கு ஒரு சீட் போட்டு வைங்க நாளை வாரேன்

மேலும் சில பதிவுகள்