கத்திரிக்காய் காரப் பொரியல்

தேதி: September 3, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்திரிக்காய் - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 12
பூண்டு - 7
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி


 

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கத்திரிக்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோலுரித்து வைக்கவும். தேவையான இதரப் பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து, அதில் நறுக்கின வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் போட்டு சுமார் 30 விநாடிகள் வதக்கி, பிறகு பூண்டு போட்டு மேலும் 20 நொடிகள் வதக்கவும்.
வெங்காயம் பூண்டு இரண்டும் வதங்கி, நிறம் மாறியவுடன் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் போட்டு பிரட்டி விடவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காய் துண்டங்களைப் போட்டு நன்கு பிரட்டி விடவும்.
ஒரு நிமிடம் பிரட்டிய பிறகு மூடி வைத்து வேகவிடவும்.
சுமார் 7 நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து, உப்பு போட்டு 3 நிமிடம் நன்கு கிளறி விட்டு இறக்கி விடவும்.
கத்தரிக்காய் மசாலா இறங்கி சற்று சுண்டினாற்போல் வரவேண்டும். இது சாதத்துடன் தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.
அறுசுவை நேயர்களுக்காக இந்தக் குறிப்பினை வழங்கி, இதனை செய்து காட்டியவர் திருமதி. ராஜலெட்சுமி அவர்கள். 25 வருடங்களுக்கு மேல் சமையலில் அனுபவம் வாய்ந்தவர். அனைத்து வகை சைவ உணவுகள் சமைப்பதிலும் சிறப்புத் திறன் வாய்ந்தவர்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்