இஞ்சிக் கொத்து பணியம்

தேதி: September 10, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

இஸ்லாமிய இல்லங்களில் அதிகம் தயாரிக்கப்படும் ஒரு வகை பிஸ்கட் போன்ற இனிப்பு இது. முட்டை சேர்க்காமல் செய்யப்படுவதால், சைவர்களும் இதனை விரும்புவர். இந்த இனிப்பினை செய்து காட்டியவர், இஸ்லாமிய சமையலில் இணையற்ற திறன் கொண்ட திருமதி. பைரோஜா ஜமால் அவர்கள்.

 

மைதா - 2 கப்
கரூர் நெய் - 125 கிராம்
சீனி - 150 கிராம்
எண்ணெய் - ஒன்றரை கப்
உப்பு - அரைத் தேக்கரண்டி


 

முதலில் மைதாவை சலித்து எடுத்துக் கொள்ளவும். நெய்யை வாணலியில் கொட்டி, உருக்கி எடுத்துக் கொள்ளவும்.
பிறகு சீனியை மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும். சீனியுடன் கால் கப் தண்ணீர், உப்பு சேர்த்து திக்காக கரைத்து கொள்ளவும்.
மைதாவை ஒரு பெரிய தட்டில் கொட்டி, உருக்கின நெய்யை ஊற்றி சூட்டுடன் பிசையவும். பிசைந்த பிறகு கையால் பிடித்தால் கெட்டியாக பிடிக்க வரவேண்டும்.
கரைத்து வைத்துள்ள சீனி தண்ணீரை மாவின் மீது ஊற்றி, நன்கு அழுத்தி மாவு ஒன்றுசேரும் அளவுக்கு பிசையவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சிறிதாக சேர்த்து கொள்ளவும்.
பிசைந்த மாவை 5 பாகமாக பிரித்து, உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பெரிய தட்டை தலைகீழாகப் போட்டு, அதன் மீது மாவு உருண்டையை வைத்து சப்பாத்தி கட்டையால் தேய்த்து விடவும். மிகவும் மெலிதாக தேய்க்க கூடாது.
இரண்டு அப்பள தடிமனுக்கு தேய்த்து, அதனை கத்தியால் கீறி படத்தில் காட்டியுள்ளபடி துண்டங்கள் போடவும். ஓரங்களை வெட்டி மீண்டும் உருட்டிவிடவும்.
தேவையான வடிவில் ஓரங்களில் கத்தியால் கீறி விட்டு ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும். கத்தியால் கீறிய வில்லைகளை நீண்ட நேரம் காயவைக்க கூடாது. உடனே எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள வில்லைகளை எண்ணெயின் அளவிற்கு ஏற்ப போட்டு வேகவிடவும்.
இரண்டு புறமும் சற்று பொன்னிறமாக வெந்ததும், சாரணி கொண்டு அரித்து எடுத்து எண்ணெய் வடியவிடவும்.
இப்போது சுவையான இஞ்சிக் கொத்து பணியம் தயார். நம் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு வடிவங்களில் இதனை செய்யலாம்.
இஸ்லாமிய சமையலில் நீண்ட அனுபவம் கொண்ட திருமதி. பைரோஜா ஜமால் அவர்களின் தயாரிப்புதான் இந்த இஞ்சிக் கொத்து பணியம். இவரது குடும்பத்தினர் பலரும் சமையல் துறையில் வல்லுனர்களாக வெளிநாடுகளில் இருக்கின்றனர். இவரது தந்தை சிங்கப்பூரில் உணவு விடுதி நடத்தி வந்தவர். குடும்பப் பின்னணி, வளர்ந்த சூழல் அனைத்தும் இவரது சமையல் திறனை செம்மைப் படுத்தியுள்ளன.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்