யூரிக் ஆசிட் பிரச்சனை

அன்பு தோழிகளே,
எனது கணவருக்கு யூரிக் ஆசிட் பிரச்சனை உள்ளது,டாக்டர் மருந்து கொடுத்துள்ளார்,ஆனால் சரியாகவே மாட்டேங்கிறது,சாப்பிடகூடாத வகைகள் என்று 1 list குடுத்துள்ளார்,அதை தவிர வேற் என்ன சாப்பிடுவது என்று தெரியவில்லை,இயற்கையாக யூரிக் ஆசிடை குறைக்க வழி கூறுங்களேன்,என் கணவர் அதிகமாக தண்ணீர் குடிப்பார்,இருந்தும் பிரச்சனை இருக்கிறது

//யூரிக் ஆசிட் பிரச்சனை// பொதுவாகச் சொல்லி இருக்கிறீர்கள். என்ன பிரச்சினை என்பது தெரியவில்லை. //டாக்டர் மருந்து கொடுத்துள்ளார்,ஆனால் சரியாகவே மாட்டேங்கிறது,// எத்தனை நாட்கள் மருந்து சாப்பிட்டிருக்கிறார்? ஒரு முழு டோஸ் முடிந்துவிட்டதா? 'சரியாக மாட்டேன் என்கிறது' என்றால் என்ன சரியாகவில்லை! மருந்து ஆகாரம் தவிர வேறு எந்த அறிவுரையும் சொல்லவில்லையா? அவற்றை எல்லாம் ஒழுங்காகப் பின்பற்றுகிறாரா?

உதவ விரும்புகிறேன் ஆனால், 'இன்ன பிரச்சினையாகத்தான் இருக்கும்,' என்று ஊகித்துக் கொண்டு பதில் சொல்லி உங்களைக் குழப்ப விரும்பவில்லை. விபரம் சொன்னால் எனக்கு தெரிந்ததைப் பகிர்ந்துகொள்வேன்.

//சாப்பிடகூடாத வகைகள் என்று 1 list குடுத்துள்ளார்,// அதில் என்ன இருக்கிறது! சொன்னால் எனக்கும் உதவக் கூடும். //அதை தவிர வேற் என்ன சாப்பிடுவது// எல்லாமே சாப்பிடலாம். எதைச் சாப்பிட்டாலும் அளவோடு இருக்கட்டும். அதே சமயம் பிரச்சினை (அது என்னவென்று முதலில் சொல்லுங்கள்.) :) திரும்ப வந்தால் அல்லது கூடினால் அன்றும் அதற்கு முதல் சில நாட்களிலும் என்ன சாப்பிட்டார்கள் என்பதைக் கவனித்துப் பார்த்தால் தவிர்க்கவேண்டியது எது என்பது புரியும். Gout உள்ள சிலரிடம் விசாரித்த போது, தண்ணீர் அடிக்கடி குடிப்பது தனக்குப் போதுமாக இருக்கிறது என்றார். அவரது தாயாருக்கு lettuce ஆகாதாம். இன்னொருவர் red wine தனக்குப் பிரச்சினை என்றார். உங்கள் கணவருக்கு எதெல்லாம் பிரச்சினைக்குரியதாக இருக்கிறது என்பதைக் கவனித்துப் பாருங்கள்.

//இயற்கையாக யூரிக் ஆசிடை குறைக்க வழி// கடலுணவுகளை குறைக்க வேண்டும். வயிற்றைக் காயப்போடக் கூடாது. வேளைக்கு சாப்பிடவேண்டும். 3 வேளை சாப்பாடு என்று இராமல் அளவைக் குறைத்து, நான்கு அல்லது ஐந்து வேளை சாப்பிடலாம். //அதிகமாக தண்ணீர்// ஒரு தடவையில் அதிகம் குடித்தாலும் சற்று நேரத்தில் வெளியேறிவிடும். 'அடிக்கடி கொஞ்சம் தண்ணீர்' குடிப்பது ஆசிட் லெவல் உயராமல் பார்த்துக் கொள்ளும்.

இதற்குமேல்... சம்பந்தமில்லாதது போல் தெரிந்தாலும், பிரச்சினை குறைகிறவரை புளிப்புச் சுவையுள்ள அனைத்துக்கும் தற்காலிக விடுமுறை கொடுக்கலாம். ஊறுகாய், குளிர்பானங்களையும் தவிர்க்கலாம்.

‍- இமா க்றிஸ்

அன்பு இமா,
எனது கணவர் 1 வருடங்களாக மருந்து எடுத்து வருகிறார்,யூரிக் ஆசிட் லெவலில் எந்த மாற்றமும் இல்லை,இப்பொழுது சமீபகாலமாக கை கால்களில் அதிக வலி உள்ளதாக கூறுகிறார்.
டாக்டர்,முழு பருப்பு வகைகள் அதாவது கொண்டை பட்டாணி,பீன்ஸ்,உளுந்து பிரட்,கோதுமை,தயிர்,சிcகென்,மீன்,மட்டன்,முட்டைகோஸ்,காலிபிளவர், சொல்லிகொண்டே போகிற அளவுக்கு இருக்கிறது,அதிக உடற்பயிசியும் வேண்டாம் என்று விட்டார்.என்ன செய்வது,கை கால்களில் joint இடங்களில் வலி இருப்பதாக கூறி உள்ளார்

மன்னிக்க வேண்டும் மஞ்சு. ஆரம்பமாக இருக்கும் என்று நினைத்துத்தான் அப்படிப் பதில் எழுதினேன். இவ்வளவு சிவியராக இருக்கும் என்று நினைக்கவில்லை. ;(

கொடுத்த லிஸ்ட்டில் உள்ள சாப்பாடுகளை ஏற்கனவே தவிர்த்து வருகிறீர்கள் என்றால்... சமைக்கும் விதம் & சேர்க்கும் பதார்த்தங்களைக் கவனிக்கலாம். தாளிதம் தவிர்க்கலாம். சட்னியில் கொழுப்பு, புளி இரண்டும் இருக்கிறது. இதுபோல் சின்னச் சின்ன விஷயங்களையும் முடிந்தவரை கவனியுங்கள். உங்கள் கணவர் நிலையில் நான் இருந்தால் என்ன செய்வேன் என்று யோசித்தேன். மனதில் பட்டதை எழுதியிருக்கிறேன். உங்கள் சாப்பாட்டுமுறை எனக்குத் தெரியாது. அதனால் வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை. எதைச் செய்தாலும் எங்கள் உடல் தொழிற்படும் விதம், பரம்பரை இப்படிச் சில விஷயங்களும் இருக்கிறது இல்லையா! தவிர்க்க நினைத்தாலும் சிலது ஆகிவிடுகிறது. ;(

இன்ன உணவு சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சீனியோ, கொழுப்போ, யூரிக் ஆசிட் லெவலோ குறையும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எது கூடுதலாகிப் பிரச்சினை கொடுக்கிறதோ அதைக் குறைவாக எடுப்பது, அவசியமானால் தவிர்ப்பது நல்லது என்று நினைக்கிறேன். அவசியமானால் மாத்திரை எடுக்கத்தான் வேண்டும். எனக்கு வலி நிவாரணத்துக்கும் வீக்கம் இறங்கவும்தான் கொடுத்தார்கள்.

வலி - ஐஸ்பாக் வைத்தால் கொஞ்சம் குறையும். என்ன பிரச்சினை ஆனாலும் எப்பொழுதும் உள்ளதுதானே என்று நாள் கடத்தாமல் போய்க் காட்டிருங்க.

என் அனுபவம் - காரணமில்லாமல் திடீரென்று ஒரு நாள் அதிகாலை விழிப்பு வந்தது. கால் சிவந்து வீங்கிப் போய் பயங்கர வலி. சூடு, எரிச்சல், கால் அசைக்கவே முடியவில்லை. இப்போ நினைக்கும் போது மீண்டும் வலிக்கிற மாதிரி இருக்கிறது. ;( எனக்கு இப்படி நீளமாக லிஸ்ட் கொடுக்கவில்லை. சிக்கன், மட்டன் எல்லாம் ஒரு பொழுதும் சாப்பிட்டதில்லை. மீன் பிடிக்காது. சாதாரணமாகவே ஒரே உணவு அடுத்தடுத்து வராமல் பார்த்துப் பார்த்துச் சாப்பிடுவேன். அதனால் எதை விடுவது என்று புரியவில்லை. வீக்கமும் வேதனையும் குறையவென்று பத்து நாட்களுக்குக் கொடுத்த மருந்து தீர்ந்து மேலும் இரண்டுநாட்கள் கழிந்தபின்தான் கொஞ்சமாவது குறைய ஆரம்பித்தது. என் குடும்ப மருத்துவர்மேல் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. மிகத் திறமைசாலி. மாத்திரைகள் கொடுத்தபோதே அவற்றின் பக்கவிளைவுகள் பற்றிச் சொல்லிவிட்டுத்தான் கொடுத்தார்கள். அடிக்கடி எடுக்க நேர்ந்தால் சிறுநீரகம் பாதிக்கப்படலாம், அதனால் ஒழுங்காக ஆரம்பத்திலிருந்தே குறைக்கிற வழியைப் பாருங்கள் என்றார். மாத்திரை எடுத்து வீக்கத்தைக் குறைக்காவிட்டாலும் அதே விளைவு வரலாம் என்றார். சப்பாத்து செருப்புப் போட இயலாமல், நடக்க, தூங்க இயலாமல் ஒரே வதைப்பாகப் போய்விட்டது. க்ளினிக்கில் படிக்க ஒரு புக்லட் கொடுத்தார்கள். அதையும் பார்த்து... இணையத்திலும் ஒரு வலம் வந்தேன். வலி கடுமையாக மனதுக்கும் ஏறிப் போயிற்று. ;) சாப்பாடு மிகவும் எச்சரிக்கையாகிவிட்டேன். ஒவ்வாமைக்குக் கூட மாத்திரை போட்டுக்கொள்ளலாம். இது அப்படியில்லை என்று புரிந்தது. வலி கொடுமை. ;( கால் முற்றாகச் சரியாக இரண்டரை மாதங்கள் ஆயிற்று. குளிர்காலம் வந்தால் என்ன செய்வேன் என்று பயம் வந்தது. முடிந்தவரை கவனமாக இருக்கிறேன். பார்க்கலாம்.

கவனமாக இருங்கள். காஃபி குடிப்பாங்களா? அப்படியானால் அதை விட்டுப் பார்க்கலாம். வேறு ஏதாவது நினைவுக்கு வந்தால் வந்து சொல்கிறேன். வேறு யாராவது பதில் சொல்கிறார்களா என்றும் பார்க்கலாம்.

‍- இமா க்றிஸ்

ரொம்ப ரொம்ப நன்றி இமா,நீங்க சொன்ன வழிகளை பின்பற்றுகிறோம்

நான் 16 ஆண்டுகளாக கவுட்டால் அவதிப்பட்டு வருகிறேன். என் அனுபவம் இதோ..........

கவுட் /ஆர்த்ரைடீஸ் வயிறு (ஜீரண) கோளாறால் வரும் உபாதை.

இன்று உலகில் (இந்தியாவிலும்) இப்பிரச்சனை மிக வேகமாக அதிகரித்துவருகிறது காரணம் இரசாயண உணவு.

* கவுட் கறி மீன் சாப்பிடுவதால் வருகிறது என்று சொல்லும் வாந்தி எடுக்கும் அரைகுறை மருத்துவரிடம் செல்லாதீர்கள். இதில் உண்மை அரவே இல்லை - நான் முதலில் இதை நம்பி அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன் மாதத்தில் இருமுறை வலி வந்தது. இப்பொழுது முன்பை விட அதிகம் சாப்பிடுகிறேன் ஆண்டிற்கு ஒரு முறை வருகிறது...!!!! கவுட்டின் முக்கிய காரணம் அசைவம் அல்ல சர்க்கரையும், மாவு சத்தும்.(பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.) . சரி அசைவத்தால் வருகிறதென்றால் கற்கால மனிதருக்கெல்லாம் கவுட் இருந்திருக்கவேண்டுமே..!! பிராமணர் ஒருவருக்கும் கவுட்டே வரக்கூடாதே..!!!

* நான் செய்த மாற்றங்கள் - செக்கு தேங்காய் எண்ணெய் சமையல் (பெயரிடப்பட்ட எண்ணெய்கள் எல்லாம் விஷம்.விஷம்.விஷம் ), பாகெட் பொருட்களை தவிர்ப்பது, அதிக தண்ணீர் குடிப்பது, பசித்தால் மட்டும் சாப்பிடுவது (PALEO DIET சிறந்தது) வாரத்தில் ஒரு முறையாவது பார்லி கஞ்சி மட்டுமே குடிப்பது, லேசாக வறுத்த கருஞ்சீரகம் ஒரு ஸ்பூன் வயிறு காலியாக இருக்கும் பொழுது ஒரு நாளைக்கு மூன்று வேலை சாப்பிடுவது (சிலர் சூடு, இது அதிகம் என்பார்கள் இதில் உண்மையில்லை.). காலையில் தண்ணீர் கலந்த எலுமிச்சை சாற்றில் ஒரு ஸ்பூன் ஆர்கானிக் மஞ்சள் பொடி கலந்து குடிப்பது, மூன்று பல் பூண்டு நறுக்கி பச்சையாக சாப்பிட்டு தண்ணீர் குடிப்பது, வாரம் இருமுறையாவது வாழைத் தண்டு சாறு குடிப்பது, இரவில் படுக்கும் பொழுது கடுக்காய் பொடி சாப்பிடுவது. இவைகள் கவுட்க்கு மட்டும் அல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. - இது எனது உண்மை கலந்த அனுபவம்.

'பதினாறு ஆண்டுகளாக' & 'அவதிப்படுகிறேன்' - என்று சொல்லிவிட்டுத் தான் மீதியைச் சொல்லியிருக்கிறீர்கள் என்பது தான் முதலில் என் கவனத்திற்கு வந்தது.

எனக்கு 2010 டிசெம்பரில் அந்த முதல் முறை வந்து சிரமம் கொடுத்த பின் இதுவரை மீண்டும் வரவே இல்லை. ஒன்பது வருடங்கள்!

உண்மையில் ஆரம்பத்தில் தான் சற்று அவதானமாக இருந்தேன். (முதலாவது இடுகை 2013ல் எழுதியிருக்கிறேன்.) பிறகு அது மறந்தே போய் விட்டது. நான் சிறு வயதிலிருந்தே சைவம் தான். என் மருத்துவர், 'கவுட் கறி மீன் சாப்பிடுவதால் வருகிறது,' எனவில்லை. கவுட் இருப்பவர்கள் கடலுணவைக் குறைப்பது நல்லது என்றார்.

'சர்க்கரையும், மாவு சத்தும்.' என் உணவில் இவை வெகு வெகு குறைவு. இந்தப் பழக்கத்தால் எங்காவது போகும் போது கஷ்டப்படுகிறேன், 'இத்தனை தானா சாப்பிடுவது! ஏன் சமையல் நன்றாக இல்லையா?' என்பார்கள். :-) அப்படி இருந்தும் தான் முதல் முறை வந்தது. இப்போதும் அதே போல்தான் சாப்பிடுகிறேன். வரவில்லை.

எங்கள் பக்கத்து சமையலில் தாளிதம் குறைவு. இங்கு செக்கு எண்ணெய் கிடைக்காது. ஆலிவ் எண்ணெய் அல்லது ரைஸ் ப்ரான் எண்ணெய் பயன்படுத்துவோம். ஒரு தடவை வாங்கியது மூன்று நான்கு மாதங்களுக்கு வரும். பாக்கெட் பொருட்கள் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்? தெரிந்துகொள்ள ஆவல். 'அதிக தண்ணீர் குடிப்பது,' இதை எனக்கும் சொன்னார்கள்.

என் மருத்துவர் முதல் முறை இங்கு சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட கைநூல் ஒன்றையும் கொடுத்தார். பத்திரமாக இருக்கிறது. எப்போதாவது மீண்டும் தேவைப்பட்டால் படிக்கலாம் என்று பத்திரப்படுத்தி இருக்கிறேன்.

மாற்றங்கள் செய்தபின்னாலும் ஆண்டுக்கு ஒரு தடவை வருகிறது என்று மிர்ஸா அக்பர் சொல்லியிருப்பதை வைத்தும் 2010ன் பின் மீண்டும் வரவே இல்லை என்னும் என் அனுபவத்திலிருந்தும் எனக்குத் தோன்றுவது - ஒருவரது உடல் போல் இன்னொருவரது இல்லை; சிகிச்சை கூட ஆள் ஆளுக்கு வித்தியாசப்படும் போல் இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

இத்தலைப்பை பார்த்து வந்தேன். அதிகப்படியான உப்பு உடலில் தங்கும்போது கற்களாக மாறுவதுபோல அதிகப்படியான புரதம் அப்படியே உடலில் தேங்கும்போது சிறு சிறு கிரிஸ்டல்போல மூட்டுகளில் படிவதே கவுட்னு சொல்லி நாமலும் வலி பொறுத்துக்க முடியாம மருந்தை தேடி ஓடுகிறோம்.

டாக்டர்கள் எந்த நோய்யென யார்போனாலும் முதலில் தேவையில்லாத பழக்கங்கள், ஒவ்வாமை தரும் உணவுப்பழக்கங்கள் இருக்கிறதான்னு தான் முதலில் விசாரிப்பார்.

இமா சொன்னதுபோல ஒருவரின் உடல்வாகு போல மற்றொருவருடையது இல்லை.ஒருவருக்கு வரும் நோய் மற்றவருக்கு வருவதும் கட்டாயமில்லை. அப்படி வரும் பட்சத்தில் தாங்கங்களும் அறிகுறிகளும் வித்யாசப்படுகின்றது.

சென்சிட்டிவ் உடல்வாகு கொண்டவர்களுக்கு குறிப்பிட்ட அளவினை எட்டும் முன்னமே இந்த யூரிக் ஆசிட் தனது குணத்தைக் காட்ட ஆரம்பித்துவிடுகிறது. ஆனால் சிலருக்கோ ஒன்பது வரை எட்டியும் சில அறிகுறிகளுடன் கூடவே வருகிறது.
நோயின்தாக்கம் வந்தபின் மருத்துவர் சொல்வது அசைவம், ட்ரிங்ஸ், புரதம் அதிகமாக உள்ள பருப்பு வகைகள், முட்டைகோஸ், குறிப்பாக தக்காளி, புளி, புளித்துப்போன இட்லி தோசை மாவு, இப்படி இன்னும் பல பொருட்களில் கவனம் செலுத்துங்கள் என்றுதான். நோயின் தாக்கத்தைப்பொறுத்து குறைத்து உண்ணவோ அல்லது முற்றிலும் தவிர்க்கவோ அறிவுறுத்தலாம்.

நாட்கள் அதிகமான இறைச்சியில்( பறவைகள்,மீன்கள்) அமோனியாவை மூலப்பொருளாக கொண்ட ஒருவித பொருள் இருக்கும்( ஈரபதத்தை தன்னுள் தக்கவைப்பதற்காக). இவ்வகையான இறைச்சிகள் நாட்கள் அதிகமாகி நாம் உண்ணும்போது வளர்சிதை மாற்றங்கள் சரிவர நடக்காமல் அவை யூரிக் ஆசிடாக மாற்றமடைந்து உடலில் தங்கிவிடுகின்றன. அதனால் தான் இவ்வகையான உணவுகளை தவிர்க்க சொல்கின்றனர்.

தாக்கம் அதிகமாக இருக்கும் போது ஆங்கில மருத்துவம் எடுத்துக்கொள்ளுதல் உடனடி நிவாரணம் கிடைக்கலாம். (அதாவது கிடைத்ததுபோல இருக்கலாம்.) வலிக்கு வலிநிவாரணி கொடுப்பார்கள் யூரிக் ஆசிட் க்ரிஸ்டல்கள் இருக்கும்வரை வலி நம் உடலை விட்டு போகாது , ஆனால் வலியை நாம் உணராமல் இருக்கவே இவ்வகை மாத்திரைகள்.கூடவே கொடுக்கப்படும் மாத்திரைகள் சில( ஃபெபுசால், ஃபெபுரோஸ் போன்று) யூரிக் ஆசிட்டின் அளவினை குறைத்திட பயன்படலாம்.

எனக்கு தெரிந்த உபயோகித்து பயனடைந்த வீட்டு வைத்தியம் சொல்கிறேன். தேவைபடுவோர் உபயோகித்து பரிசோதித்தும் பார்க்கலாம். பலனும் பெறலாம் .

1. கொத்தமல்லி விதைகளை அரைத்து(ஒன்றிரன்டாக) ஒரு டம்ளர் நீரில் கொதிக்க விடுங்கள். இதனுடன் 4 ,5 உலர் போட்டு நீரின் நிறம் மாறும்வரை காய்ச்சவும். பின் வடிகட்டி உலர் திராட்சையுடன் சேர்த்த இந்த தீநீரை காலையில் வெறும்வயிற்றில் குடித்து வரவேண்டும். இது உள்ளே உள்ள யூரிக் ஆசிட் அளவைனையும் , கிரிஸ்டல்களையும் கரைத்து வெளியேற்றும்.

2. வெள்ளரிக்காய் ஒன்று, இஞ்சி சிறிது, இவை இரண்டையும் அரைத்து வடித்து சாறெடுக்கவும். இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து விரும்பும் நேரம் பருகி வரலாம். இதுவும் யூரிக் ஆசிட் அளவை குறைக்க உதவும்.

3. கழற்சிக்காய் பொடி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) , வெந்தையப்பொடி, 2:1 விகிதத்தில் எடுத்து இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து என்கெல்லாம் வலி வீக்கம் கண்டு சிவந்து எரிச்சல் உள்ளதோ அந்த இடங்களில் தடவி காயவிடுங்கள்(தானாக உதிரும்வரை). இது வலி, வீக்கம், எரிச்சல் அனைத்திலிருந்தும் குணப்படுத்தும்.
இவை நானே செய்து குணப்பட்ட மருத்துவம்.

நீர்சத்துள்ள காய்கறிகள், பூசணி, சாம்பார் வெள்ளரி, வெண்டைகாய், சிறுதானியங்கள், இவற்றினை உணவில் அதிகம் சேர்க்கவும்.முடிந்தவரை வெள்ளை சர்க்கரையை தவிர்த்து நாட்டு சர்க்கரை அல்லது பனை வெல்லம், பனங்கருப்பட்டி சேர்த்துக்கொள்ளலாம்.

படித்துப் பார்த்ததும் தான் எத்தனை வருடங்கள் நிம்மதியாக இருந்திருக்கிறேன் என்பது தெரிகிறது. இன்னமும் திரும்ப வலி எட்டிப் பார்க்கவில்லை. ஆனால் இடையில் ஒரு முறை வேறு ஒரு தேவைக்காக ஆசிட் அளவு சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்கும்படி மருத்துவரிடம் கேட்டேன். சரியாகவே இருக்கிறது.

இந்த இழையை இன்று கேள்வியை வைத்துள்ள பிரியாவுக்காக மேலே கொணர்ந்து விடுகிறேன்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்