தேதி: October 8, 2006
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
தொடர்ந்து இனிப்புகளாக பார்த்தாயிற்று. திகட்டிவிடாமல் இருக்க இன்று ஒரு காரம் பார்க்கலாம். தீபாவளியன்று அனைத்து இல்லங்களிலும் செய்யப்படும் முக்கியமான காரம், ரிப்பன் பக்கோடா. சிலர் ஓலை பக்கோடா என்று அழைப்பார்கள். இஞ்சி பூண்டு சேர்த்து செய்யப்படும் ரிப்பன் பக்கோடா மிகவும் சுவையாக இருக்கும். செய்து பார்க்க தயாராகிவிட்டீர்களா..
கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - 1 1/2 கப்
பூண்டு - 6 பல்
மிளகாய் வற்றல் - 4
சோம்பு - ஒரு மேசைக்கரண்டி
டால்டா - அரை மேசைக்கரண்டி
இஞ்சி - அரை அங்குலத் துண்டு
உப்பு - 1 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 2 1/2 கப்
தேவையானப் பொருட்களை தயாராய் எடுத்துக் கொள்ளவும். கடலை மாவின் அளவைவிட அரிசி மாவு சற்று அதிகம் சேர்த்து செய்தால் சுவையும் அதிகமாக இருக்கும்.

பூண்டினை தோலுரித்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி, சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி பூண்டு சேர்க்காமலும் இதை செய்வார்கள்.

இஞ்சி, பூண்டு, சோம்பு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை அம்மியில் அல்லது மிக்ஸியில் இட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதனுடன் உப்பு சேர்த்து கலக்கவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு இரண்டையும் கொட்டி ஒன்றாக கலக்கவும். அத்துடன் உருக்கின டால்டாவை சேர்த்து பிசையவும்.

அதன் பின் வடிகட்டி வைத்திருக்கும் தண்ணீரை மாவில் ஊற்றி தளர்வாக பிசையவும்.

மாவின் பதம் மிகவும் தண்ணீராக இல்லாமல் சற்று கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயை ஊற்றி காயவிடவும். முறுக்கு உரலில் பட்டையான அச்சை போட்டு உரல் கொள்ளும் அளவு பிசைந்த மாவை வைத்து, காய்ந்த எண்ணெயில் நேரடியாக பிழியவும். எண்ணெய் தெறிக்காதவண்ணம் எச்சரிக்கையாக பிழியவும்.

எண்ணெயில், பிழியும் போது ஒன்றன் மேல் ஒன்றாக பிழிந்தால் வேகாது. மாவை பிசைந்த உடனே எண்ணெயில் பிழிந்து விடவேண்டும். பிசைந்த மாவை வைத்திருந்து சற்று நேரம் கழித்து பிழிந்தால் பகோடா சிவந்து விடும்.

ஒரு நிமிடம் கழித்து திருப்பி போடவும். சற்றுப் பொன்னிறமாக வேகவேண்டும். பக்கோடா வெந்து, எண்ணெய் கொதிப்பது அடங்கியதும் எடுத்து, எண்ணெய்யை வடிய விடவும்.

மொறுமொறுப்பான, சுவையான ரிப்பன் பக்கோடா தயார்.

Comments
அரிசிமா
வணக்கம். அரிசிமா என்பது வறுத்த மாவா? நன்றி.
THuSHI
அரிசிமாவு
இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் அரிசி மாவு வறுத்த அரிசிமாவு அல்ல. அரைத்த அரிசி மாவு அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது.
ரிப்பன் பக்கோடா
உங்களின் இந்த குறிப்பை செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. வாழ்த்துக்கள்.
லாவண்யா
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
அருசுவை குழு ரிப்பன் பகோடா
Yesterday i tried this recipe.it came really good.thanks for sharing.