உனக்காக எல்லாம் உனக்காக - நித்திலா

"வாடா ராஜாத்தி! ஆபிஸ் முடிஞ்சுதா கண்ணு" எப்போதும் புன்னகை பூவாய் மலர்ந்திருக்கும் சாஹித்யாவின் முகம், தனது மாமியார் பானுரேகாவின் அன்பான வரவேற்பில் மேலும் மலர உற்சாகமாய் வீட்டினுள் நுழைந்தாள்.

"ஹாய் பானுமா! குட் ஈவ்னிங்! பாயாசம் செஞ்சிருக்கீங்களா? வாசனை தூக்குதே"

"சாஹி! எவ்வளவு தடவை சொன்னாலும் கேட்க மாட்டியா நீ!"

"ஹாய் அம்மு! நீங்களும் இங்கதான் இருக்கீங்களா"

"எதுக்கு புள்ளை வந்ததும், வராததுமா சத்தம் போடறே நர்மதை! அவ என்னை செல்லமா கூப்பிட்டு போறா, விடு! கண்ணு! நீ போய் உட்காருடா! அத்தை உனக்கு பாயாசம் கொண்டு வரேன்" என்றுவிட்டு சாஹித்யாவின் தாயார் நர்மதையோடு சமையலறைக்கு சென்றார் பானுரேகா.

ஹால் சோபாவினில் கண்மூடி சாய்ந்த சாஹித்யா காலடி ஓசையில் விழிக்க, அவள் கணவன் அபிநவ், எதிர் சோபாவினில் அமர்ந்திருந்தான். என்ன இது! மணி எத்தனை ஆயிற்று? இந்த நேரத்தில் வீட்டில் இருக்கிறான்! எதுவும் பிரச்சனையோ, உடல்நிலை சரியில்லையோ என பதட்டத்துடன் அவனை ஆராய்ந்து விடை தேடி அவன் முகம் பார்த்தாள். தன்னை ஆராயும் அவள் பார்வையைக் கண்டு கண்களாலேயே என்னவென்று வினவினான் அபிநவ். வசீகரிக்கும் அவன் விழிகளில் கட்டுண்டு சுற்றுப்புறம் மறந்தாள் சாஹித்யா.

அருகில் கேட்ட பேச்சுக் குரலில் இருவர் பார்வையும் விலக, சாஹித்யாவின் அருகில் வந்து அமர்ந்த பானுரேகா மென்மையாக அவள் தலையை வருடிக் கொடுத்தபடி, "பாயாசம் சூடாயிருக்கு! முதல் ரசகுல்லா சாப்பிடு கண்ணு" என தானே ஒன்றை எடுத்து ஊட்டியும் விட்டார்.

"இன்னைக்கு என்ன விசேஷம் அத்தை"

ஒன்றும் தெரியாததைப் போல் கேட்பதைப் பார், எப்போதும் விளையாட்டுதான் என எண்ணிக் கொண்ட பானுரேகா, "விசேஷமா, என் மருமக ஒரு பெரிய கார்மென்ட் கம்பெனிக்கு மேனேஜர் ஆயிட்டாங்க" என்று சொல்லிச் சிரிக்க, சாஹித்யாவிடம் அவர் சிரிப்பின் எதிரொலி இல்லை மாறாக தன் கணவனை முறைத்துப் பார்த்தாள். தன் மகளின் முகபாவனைகளை கண்ணுற்ற நர்மதைக்கு அவள் மனதில் ஓடுவது என்னவென்று விளங்கவில்லை. சிறு வயதிலிருந்தே தனக்கென்று கனவுகளை வளர்த்துக் கொண்டு அதை நிறைவேற்ற முனைபவள் இன்று தன் திறமைக்கும், உழைப்பிற்கும் கிடைக்கும் வெகுமதியை மறுக்கும் மாயம் அவள் மட்டுமே அறிவாள்.

தன் மகளின் சந்தோஷமான வாழ்க்கையைக் கண்டு எங்கே தன் கண்ணே பட்டு விடுமோ என சில சமயங்களில் அஞ்சுவார் நர்மதை. மணமான புதிதில் அன்பான புகுந்த வீடு அமைந்த போதும் தாய், தந்தையரை எண்ணி அடிக்கடி முகம் வாடிப் போவாள் சாஹித்யா. அவள் முகம் வாடுவது பொறுக்காமல் தன் தாயின் ஆலோசனைப்படி சாஹித்யாவின் பெற்றோரைத் தங்களுடனே வந்து தங்குமாறு அழைத்தான் அபிநவ். அவர்கள் மறுத்துவிட தங்கள் வீட்டின் அருகிலேனும் இருக்கட்டும் என பக்கத்து வீட்டை வாங்கி குடி அமர்த்தினான்.கடந்த ஆறு வருடங்களில் அவ்விரு குடும்பங்களுக்கு இடையில் உறவு மறைந்து நல்லதொரு நட்பு நிலை கொண்டு விட்டது.

"என்ன கண்ணு! குழந்தைகளை பத்தி யோசிக்கறயா"

"இல்லத்தை" என அவசரமாக மறுத்தாள் சாஹித்யா, "நீங்களும், அம்மாவும் இருக்கும் போது எனக்கு என்ன கவலை"

"அப்புறம் என்னமா"

"எனக்கு சென்னைக்கு போக பிடிக்கலை அத்தை"

"ஏன் கண்ணு"

"அச்சோ அத்தை! அங்க வெயில் அதிகம் அத்தை! சாப்பாடு, தண்ணி எதுவும் நம்ம ஊர் மாதிரி இருக்காது! எவ்ளோ கூட்டமாயிருக்கும் தெரியுங்களா? ரோட்டுல நடக்கவே பயமாயிருக்கும்! பைக், காரெல்லாம் அப்படியே பறக்கும்!" என திகில் கதை கூறும் பாவனையோடு சாஹித்யா காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்ல, விழி விரித்து அப்பாவியாய் கேட்டுக் கொண்டிருந்தார் பானுரேகா. தன் தாயின் மூலமாகவே மறுப்பைத் தெரிவிக்க சாஹித்யா ஆடும் நாடகத்தைக் கண்டு அபிநவ்வின் விழிகள் நகைத்தது.

"வேண்டாம் கண்ணு! நீ அவ்வளவு கஷ்டப்பட்டு அங்க போய் வேலை பார்க்க வேண்டாம்!" என்றவர் தன் மகனிடம் திரும்பி, "தம்பி! புள்ளைக்கு இஷ்டம் இல்லைனா விட்டுடு தம்பி" என்றார் வேண்டுதலாக. தன் தாயின் குரலில் தொனித்த ஏக்கம் அபிநவ்விற்கு புரியவே செய்தது. அனைவரையும் தன் அன்பால் கட்டி வைத்திருக்கிறாள் என் அழகான ராட்சஸி. இந்த வீட்டு செடி கொடிகளும் இவளின்றி பூக்க மாட்டோமென்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

தாயும், மகனும் உரையாடத் துவங்க, "அத்தைமா! நான் போய் டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்" என்று விட்டு எழுந்து சில எட்டுகள் வைத்துவிட்டு திரும்பி பிறர் அறியாதவாறு தன் கணவனைப் பார்த்து நாக்கை துருத்தி அழகு காட்டிவிட்டு தன்னறைக்குள் சென்று மறைந்தாள் சாஹித்யா. தன் மனைவியின் குறும்பை ரசித்த அபிநவ்வின் இதழ்கள் புன்னகை பூசியது.

படுக்கை அறையின் ஜன்னலருகே கிளை பரப்பியிருந்த பவழமல்லியை ரசித்தவாறு, அதன் வாசனையில் தன்னை மறந்து அமர்ந்திருந்தாள் சாஹித்யா. கதவு திறக்கப்படும் ஓசையில் மயக்கம் கலைந்து திரும்ப, அபிநவ் மௌனமாக அங்கிருந்த சோபாவில் சென்று அமர்வதைக் கண்டாள். யார் சொல்லியிருப்பார்கள்.. ம்ம்.. யாராயிருந்தால் என்ன?உடனே என்னை அனுப்ப துணிந்து விட்டான்! என் பட்டுக்குட்டி! நானின்றி நீரை நீங்கிய மீனாக அல்லவா துடிதுடிப்பான்?? இவனைக் காணாமல் நான் வாழ்வது மட்டும் சாத்தியமா என்ன??

"யாரோ என்னை அனுப்பி வைச்சுட்டு சந்தோஷமா இருக்கலாம்னு நினைச்சாங்க போலிருக்கு! பாவம்"

"யாரோ கனவு, ஆசை, லட்சியம்னு பேசினதை எல்லாம் மறந்துட்டாங்க போலிருக்கு" என்றான் அபிநவ் தன் பங்கிற்கு. இருவர் பார்வையும் ஒன்றை ஒன்று சில கணங்கள் தொட்டு நிற்க, தனது பார்வையை மீண்டும் பவழமல்லிக்கே திருப்பினாள் சாஹித்யா.

"சஹி! அப்புறம் வேடிக்கை பார்க்கலாம்"

சாஹித்யாவின் மௌனத்தில் பொறுமையிழந்து அவளருகில் சென்று அவள் தோள் தொட்டு திருப்பினான் அபிநவ். அவள் விழிகளில் மின்னிய நீர்த்துளிகளைக் கண்டு பதறி, "சஹி!! எதுக்குமா அழறே" என்றான்.

"பேசாதடா! என்னை அனுப்புறதில் எவ்வளவு மும்முரமா இருக்க! உனக்கு கஷ்டமாவே இல்லையா"

"மக்கு! உனக்காக மட்டும்தான் சஹி! உனக்காக மட்டும்தான் உன்னை அனுப்ப நினைச்சேன்! உன்னை அனுப்புறதில் எனக்கு கொஞ்சம் கூட இஷ்டம் இல்லைடா! நீ இல்லாத வலியை உனக்காக தாங்கிக்கனும்னு நினைச்சேன் சஹி"

அபிநவ்வை இறுக அணைத்துக் கொண்ட சாஹித்யா, "சாரி அபி! சாரிடா! எனக்கு தெரியும்! நா..ன்... எ..என்னால.... அ..அபி"

"அழக்கூடாது சஹி" அவள் கண்ணீர் ஒருவாறாய் நிற்க.

"அபி! என்னோட ஒவ்வொரு நாளும் உன் முகத்தை பார்த்துதான் தொடங்கனும், முடியனும்! நீ இல்லாத வெறுமையை என்னால தாங்கிக்க முடியாது! உன் பக்கத்தில இருக்கும் போது எனக்கு கிடைக்கிற நிறைவையும், சந்தோஷத்தையும் எந்த பதவியும் எனக்கு தராது அபி! உ..ன்னை விட்டு,ந..நம்ம வீட்டை விட்டு நான் எங்கயும்... போக மாட்டேன். நா..நான் ஆபிஸ் போக மாட்டேன்... சென்னை போக மாட்டேன்" எனத் தேம்பியவளை மிருதுவாகத் தட்டிக் கொடுத்தான் அபிநவ்.

"சஹி! உன்னோட இத்தனை வருஷ கனவும், உழைப்பும் வீணாப் போயிடும்டா. கொஞ்சம் யோசிச்சு பாருடா. சென்னை எங்கயிருக்கு.." என்றவனின் பேச்சில் இடையிட்ட சாஹித்யா, "என்னை துரத்திறதுலயே இரு! நான் போறேன் போதுமா" என அவனிடம் இருந்து விலகி ஜன்னலோரம் சென்று நின்றாள்.

"சஹி! இங்க வா"

"......"

"நீ எங்கயும் போக வேண்டாம்! வா சஹி" என்றதும் திரும்பிப் பார்த்தவளை தன் கைகளை விரித்து அழைத்தான் அபிநவ். ஓடி வந்து அக்கரங்களில் சரண் புகுந்த சாஹித்யாவை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான் அபிநவ்.

"உனக்கு வருத்தமா இல்லையா, நாளைக்கு அழுகக் கூடாது"

"நமக்கு கல்யாணமான புதுசுல எனக்காக நீ தொழில்ல போட வைச்சிருந்த பணத்தை எடுத்து வீடு வாங்கி கொடுத்தியே! அப்ப வருத்தமா இருந்துச்சா, அழுதியா"

"கொஞ்சம் வருத்தம் இருந்துச்சு! ஆனா என் மனைவி சந்தோஷத்துக்காக செய்யறேன்னு நினைச்ச போது நிம்மதியா, ரொம்ப சந்தோஷமா, ஒரு புதுவித பரவசமா இருந்துச்சு"

"எனக்கும் இப்ப அப்படித்தான் இருக்கு அபி" அபிநவ்விற்குள் முட்டி மோதிய உணர்வுகள் மெதுவாய் அடங்க, அறிவு சப்தமிட்டது! எத்தனை மதிநுட்பம் வாய்ந்தவள் என் சஹி! அவள் திறமை வீட்டிற்குள் அடைபடுவதா? கூடாது! கூடாது!

"கொஞ்ச நாள் ரெஸ்ட் எடு சஹி! நாமளே ஒரு கார்மென்ட் கம்பெனி தொடங்கலாம்" நிமிர்ந்து தன்னவனின் முகத்தை இமைக்காது பார்த்த சாஹித்யாவின் உள்ளம் அவன் காதலால் நெகிழ்ந்து விழி வழியே வழிந்தது. இதுதான் என்னுடைய அபி!

"நா..நான் நம்ம ஆபிஸ்சுக்கு வரட்டுமா"

"சஹி!!" அபிநவ்வின் மனதில் அந்த ஆசை இருந்த போதும் அவன் அதை வெளிக்காட்டியதில்லை, அவள் விருப்பத்தையே பிரதானமாக கொண்டு வாழ்ந்து வந்தான். இன்று அவன் ஆசையை அவளே வெளிப்படுத்தவும் அவன் காதல் உள்ளம் நிறைந்தது. அவள் கண்களில் தெரிந்த கடலளவு காதலில் மூழ்கத் தொடங்கினான் அபிநவ்.

"ப்ளீஸ்..அபி" சாஹித்யாவின் குரல் மீட்க.

"இப்படி அழுதுட்டு கேட்டா கண்டிப்பா 'நோ' தான்"

சாஹித்யாவின் கரங்கள் அவன் கழுத்தில் மாலையாக, "தங்கள் வரவிற்காக அபிநவ் மோட்டார்ஸ் காத்திருக்கிறது தேவி" என மோகனப் புன்னகை சிந்தினான் அபிநவ். ஜன்னலில் தலை நீட்டிய பவழமல்லியும், வான வீதியில் உலாவிய பிறை நிலாவும் தங்கள் பேச்சை கேட்காத வண்ணம் தொடர்ந்து விழிகளால் பேசிய காதல் உள்ளங்கள் மகிழ்ந்தும், நெகிழ்ந்தும் உருகின, காதல் விருந்தொன்று தொடங்கின.

இரு உள்ளங்கள்
ஒருவருக்காய் ஒருவர்
இசைந்து இயற்றும்
தவமே காதல்!!

Comments

எனது கதையை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கும்,அறுசுவை குழுவினருக்கும்

எனது மனமார்ந்த நன்றிகள்.

ஹாய்ய்ய்ய் பிரெண்ட்ஸ்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க?

உங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை ஒரு கதையோடு சந்திக்க

வந்திருக்கிறேன்.என்னுடன் பயணித்த,என்னைச் செலுத்தும் வாசகத்

தென்றல்களுக்கு இக்கதை சமர்ப்பணம் :)

உங்கள் அன்பிற்கும்,ஆதரவிற்கும் என்றும் எனது நன்றிகள்.

என் கதைக்கு ஓட்டளித்த அன்புள்ளங்களுக்கு எனது நன்றிகள்.

"உனக்காக எல்லாம் உனக்காக"உங்கள் உள்ளம் சொல்வது என்ன,அறியக்

காத்திருக்கிறேன்.நன்றி வணக்கம்.

அன்புடன்
நித்திலா

ஹாய் நித்தி
உனக்காக எல்லாம் உனக்காக தலைப்பே உணர்வுபூர்வமா இருக்கு.
சாஹித்யா பேரு ரொம்ப நல்லாருக்கு.நல்லதொரு வரலாற்று பெயர்.
அன்பான மாமியர்,மனதை புரிந்து நடக்கும் கணவன் ஒருவருக்காய் ஒருவர் வாழும் இனிய இல்லம்.அன்பாலே அழகிய வீடு.கதை ரொம்பவும் அருமையா வந்திருக்கு நித்தி.வாழ்த்துக்கள்.

ஹாய் நிக்கி,

பர்ஸ்ட் கமென்ட்டுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்டா :)

கடும் கோடையில் குளிர்மழை பொழிந்தது போன்ற மகிழ்ச்சி உங்கள் பதிவைப்

பார்த்து,நன்றி நிக்கி.

//தலைப்பே உணர்வுபூர்வமா இருக்கு// ரொம்ப நன்றிடா நிக்கி.

//சாஹித்யா பேரு ரொம்ப நல்லாருக்கு.நல்லதொரு வரலாற்று பெயர்//

ஒவ்வொரு முறையும் கதாபாத்திரங்களின் பெயரை கவனிச்சு சொல்றீங்க,ரொம்ப

நன்றி நிக்கி.

//அன்பான மாமியர்,மனதை புரிந்து நடக்கும் கணவன் ஒருவருக்காய் ஒருவர் வாழும் இனிய இல்லம்.அன்பாலே அழகிய வீடு.//

என் கதையை இரண்டு வரிக்குள்ள முடிச்சுட்டீங்களே நிக்கி,"அன்பாலே அழகிய வீடு"வார்த்தை பிரயோகம் அழகு,தேங்க்ஸ்டா.

//கதை ரொம்பவும் அருமையா வந்திருக்கு நித்தி.வாழ்த்துக்கள்//

ரொம்ப ரொம்ப சந்தோஷம் நிக்கி,டென்சனாவே இருந்தேன்,கதை சரியா

வரலையோனு,இப்பதான் நிம்மதியாயிருக்கு.

மனதை குளிர்வித்த முதல் பதிவிற்கும்,அன்பான பாராட்டிற்கும்,வாழ்த்திற்கும்

மனமார்ந்த நன்றிகள் நிக்கி.

வருகைக்கும்,கருத்திற்கும் ரொம்ப ரொம்ப நன்றி நிக்கி.

அன்புடன்
நித்திலா

ரொம்ப அழகான அருமையான கதை ; உங்க கதையிலும் கவிதைகள் வருவது ரொம்ப சூப்பர். வாழ்த்துக்கள்'ங்க :-)

நட்புடன்
குணா

வணக்கம் குணா.

//ரொம்ப அழகான அருமையான கதை//

மிகுந்த மகிழ்ச்சி,மிகவும் நன்றி குணா.

//உங்க கதையிலும் கவிதைகள் வருவது ரொம்ப சூப்பர்//

கதையோடு கவிதையையும் ரசித்த உள்ளத்திற்கு மீண்டும் நன்றி.

வருகைக்கும்,கருத்திற்கும்,வாழ்த்திற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் குணா :)

அன்புடன்
நித்திலா

ஹாய் நித்தி கதை மிகவும் அருமை,
உண்மையான காதலும் அன்பும் என்றும் பிரிவைத்தாங்கிக்கொள்ளாது.
உங்களுக்கு பவளமல்லினா ரொம்ப பிடிக்குமோ!!!

All is well

கதை அருமை :) வித்தியாசமான கதையும் கூட. சொல்லி இருக்கும் விதம் அழகு. கலக்கிட்டீங்க. தொடருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல அருமையான கதை. அதுக்கு முதல் பாராட்டுக்கள். நல்ல பெயர்த்தெரிவுகள். எனக்கு கதை என்றால் நல்ல விருப்பம். படிக்கப் படிக்க தெவிட்டாத இனிமையான கவிதையாகிய கதை. மேன்மேலும் படைப்புக்கள் படைக்க வாழ்த்துக்கள்.

சூப்பர் நித்தி...அழகே உருவான அன்பான வீடு..அதில் காதல் வெள்ளம் பெருகிட கணவன் மனைவி.....சூப்பர்டா...

Be simple be sample

சூப்பர் நித்தி...அழகே உருவான அன்பான வீடு..அதில் காதல் வெள்ளம் பெருகிட கணவன் மனைவி.....சூப்பர்டா...

Be simple be sample

ஹாய் சஜன்,

உங்களை இங்கு காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி,நன்றி சஜன்.

ஒரு சின்ன வேண்டுகோள்,இவ்வளவு பெரிய டைட்டில் கொடுக்காதீங்க செல்லம் :)

//கதை மிகவும் அருமை// மிகவும் நன்றி சஜன்.

//உங்களுக்கு பவளமல்லினா ரொம்ப பிடிக்குமோ//

ஆம் தோழி,பிடிக்கும் :)

வருகைக்கும்,கருத்திற்கும் மிகவும் நன்றி சஜன் :)

அன்புடன்
நித்திலா

ஹாய் வனி,

//கதை அருமை// மிகுந்த மகிழ்ச்சி,மிகவும் நன்றி வனி :)

//வித்தியாசமான கதையும் கூட.//உண்மைதான் வனி,கொஞ்சம் வித்தியாசமான

கதைதான்.

//சொல்லி இருக்கும் விதம் அழகு. கலக்கிட்டீங்க//

உங்கள் பாராட்டை பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி,மிகவும் நன்றி வனி.

வருகைக்கும்,கருத்திற்கும் மிகவும் நன்றி வனி :)

அன்புடன்
நித்திலா

கதை ரொம்ப நல்லா இருக்கு.
இந்த கதைய படிக்கிற எல்லார் மனசுலயும், இது போல் மாமியார் அமையணும், மாமியார் ஆனா இதுபோல இருக்கணும்கிற எண்ணம் கண்டிப்பா வரும்.
வாழ்த்துக்கள் தோழி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கதை ரொம்ப அருமையா இருக்கு கதை படிக்க படிக்க கட்சிகள் கண் முன்னே வருகிறது சூப்பர் இன்னும் நிறைய கதை எழுத என் வாழ்த்துக்கள்

ஹாய் சியாமளா,

என் கதை பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன் தோழி :)

//நல்ல அருமையான கதை. அதுக்கு முதல் பாராட்டுக்கள்//

மிகுந்த மகிழ்ச்சி.உங்கள் பாராட்டிற்கு மிகவும் நன்றிமா.

//நல்ல பெயர்த்தெரிவுகள்// பெயர்களை கவனித்து குறிப்பிட்டு கூறியதற்கு

மீண்டும் எனது நன்றிகள்.

//எனக்கு கதை என்றால் நல்ல விருப்பம்//

மகிழ்ச்சி தோழி.எனக்கு ஒரு அருமையான வாசகி கிடைத்திருக்கிறார்.

உங்கள் வரவை எதிர்பார்த்து காத்திருப்பேன்.

//படிக்கப் படிக்க தெவிட்டாத இனிமையான கவிதையாகிய கதை//

மிகவும் நிறைவாக உணர்கிறேன்.ரொம்ப ரொம்ப நன்றிமா.அன்பான வாழ்த்திற்கு

என்னுடைய மனமார்ந்த நன்றிகள்மா.

முதல் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி தோழி,மிகவும் தாமதமாக

பதிலளிப்பதற்கு மன்னியுங்கள் தோழி.

அன்புடன்
நித்திலா

ஹாய் ரேவ்ஸ் செல்லம்,

//சூப்பர் நித்தி//ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்டா.

//அழகே உருவான அன்பான வீடு// வார்த்தை பிரயோகம் அழகாயிருக்குடா.

//அதில் காதல் வெள்ளம் பெருகிட கணவன் மனைவி.....சூப்பர்டா//

கவிதை நடை வருதுடா ரேவ்ஸ்,ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்டா.

ரொம்ப லேட்டா ரிப்ளை பண்றதுக்கு உங்க நித்தியை மன்னிச்சுடுங்க.

அன்புடன்
நித்திலா

ஹாய் அருள்,

//கதை ரொம்ப நல்லா இருக்கு//

மிகுந்த மகிழ்ச்சி,மிகவும் நன்றி அருள்.

//இந்த கதைய படிக்கிற எல்லார் மனசுலயும், இது போல் மாமியார் அமையணும், மாமியார் ஆனா இதுபோல இருக்கணும்கிற எண்ணம் கண்டிப்பா வரும்//

நற்சிந்தனைகள் வளர்ந்தால் மகிழ்ச்சியே தோழி.

தங்கள் அன்பான வாழ்த்திற்கு மிகவும் நன்றி அருள் :)

தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னியுங்கள் தோழி.

அன்புடன்
நித்திலா

ஹாய் நஸ்ரின்,

என் கதை பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன் தோழி :)

//கதை ரொம்ப அருமையா இருக்கு//

ரொம்ப சந்தோஷம்மா,நன்றி தோழி.

//கதை படிக்க படிக்க கட்சிகள் கண் முன்னே வருகிறது சூப்பர்//

மனமார்ந்த பாராட்டில் உள்ளம் நிறைந்தது,மிகவும் நன்றிமா.உங்கள் வாழ்த்திற்கு

மீண்டும் எனது நன்றிகள்.

முதல் வருகைக்கும்,கருத்திற்கும் மிகவும் நன்றி தோழி.

தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னியுங்கள்.

அன்புடன்
நித்திலா

அன்பான கணவன் மனைவியின் அன்பான காதல் கதை.
நித்திலா உங்க கவிதையும் சூப்பர் மா.

நீங்க என் தோழியா கிடைத்ததற்கு எனக்கும் மிகவும் மகிழ்ச்சியா இருக்குமா.
உங்கள் அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் அன்புத் தோழி சத்யா.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

ஹாய் நித்தி கதை மிகவும் அருமை,வாழ்த்துக்கள்டா

இரு உள்ளங்கள்
ஒருவருக்காய் ஒருவர்
இசைந்து இயற்றும்
தவமே காதல்! anbulla s.sugima