என்ன செய்திருப்பேன்! - புனிதா

மே 20, 1974, இப்போ ஒரு வாரம் முன்பு நடந்தது போல் நினைவிலிருக்கிறது அந்த நிகழ்வு. முப்பத்தொன்பது ஆண்டுகளானாலும் பசுமரத்து ஆணி அளவு அழுத்தமாய்...

பன்னிரண்டு வயது அப்போது. அன்று எதனாலோ என் துவிச்சக்கரவண்டியை விட்டு, நடந்து பாடசாலைக்குப் போயிருக்கிறேன். பாடசாலை விட்டு அழைத்துப் போக அப்பா வருவார் என்று காத்திருந்தேன். அவரது பாடசாலைக் கருமங்களை முடித்துக் கொண்டுதான் வரவேண்டும். நேரமாகும் அதற்கு.

மூன்று மணி வெயிலுக்கு இதமாக, பாடசாலை உணவு அறை வெளிப்புற மூலையில் நிழல் தரும் குட்டித் தேமாவின் அடியில் என்னைப்போல் காத்திருந்த குட்டிப் பெண்கள் சிலரோடு நானும்.

கிறீஸ்தவப் பாடசாலை - அவ்வப்போது கன்னியாஸ்திரிகள் மடத்திலிருந்து யார் யாரோ வெளியே வந்தார்கள்; யார் யாரோ உள்ளே போனார்கள். பாடசாலைச் சிற்றுண்டிச் சாலை வாசலில் வெற்று அலன்ஸ் ஐஸ் பழப் பெட்டியைத் தட்டிச் சுத்தம் செய்துகொண்டிருந்தார் ஒருவர். அவர் அருகே இரு சிறுமிகள் - ஐஸ்கட்டி விரும்பிகள்.

மடத்தில் வசிக்கும் மதலேனா அக்கா மடத்திலிருந்து வெளியே வந்தார். இரண்டு நிமிடங்கள் நின்று என் தாயாரைப் பற்றி விசாரித்தார். அப்போது அம்மாவுக்கு காலெல்லாம் எக்ஸீமா; நடக்கச் சிரமப்படுவார். சில நிமிடங்கள் கழித்து கூடையோடு வெரோணிகா அக்கா வந்தார். அவரும் விசாரித்தார். அருட்சகோதரி மரியா வந்து சேர்ந்ததும் மூவரும் ஒன்றாகக் கிளம்பி தெருவில் இறங்கிப் போனார்கள்.

வெளிவாயிலில் பஸ் தரிப்பிடத்தின் கீழ் பெரிய மரத்தடியில் ஆச்சி இன்னமும் இலந்தைப்பழம் விற்றுக் கொண்டிருந்தார். உள்ளே... யாருமில்லை, என்னைத்தவிர. எல்லோரும் கிளம்பியாகிவிட்டது. காக்கை, குருவி, அவ்வப்போது நின்று கடக்கும் பஸ் வண்டிச் சத்தங்கள் தவிர சப்தம் எதுவுமில்லை. தலைக்கு மேல் பெரிய மரத்தின் சலசலப்பும் தூரத்து ஆலமர இலைச் சலசலப்பும் கேட்டுக் கேட்டுச் சற்று சலிப்படைந்திருந்தேன்.

தேமா உதிர்த்துவிட்டிருந்த பூக்களைப் பொறுக்கிச் சேர்த்து, ஒவ்வொரு இதழாக மடித்து நடுவில் கிள்ளி, அந்தத் துவாரத்தில் காம்பினை நுழைத்து வர... அழகாய் இன்னொருவகை மலர் தெரிந்தது. உதிர்ந்தவை அனைத்தும் ஒவ்வொன்றாய்ப் புதிதாக மலர்ந்து முடிந்துவிட... தரையில் காலால் சக்கரம் வரைந்து, சண்டை போட்ட நாய்களைப் பராக்குப் பார்த்து, குதித்தோடிய அணிலைப் பார்த்து, இரை பொறுக்கும் புறாவைப் பார்த்து... எத்தனை நேரம் கழிந்திருக்குமோ தெரியாது. மெல்லிதாக சூரியன் இறங்க ஆரம்பித்திருந்தான்.

அருட்சகோதரி வேலையை முடித்துவிட்டுத் திரும்பி வந்தார்கள். "இன்னுமா அப்பா வர இல்லை! தனிய நிற்காமல் வீட்டுக்கு போங்க, இருட்டுப் படப்போகுது."

எனக்கோ பயம், சொன்னது போல் செய்யாவிட்டால் வீட்டில் திட்டு விழுமே! அப்பாவுக்கு மிகவும் பிடித்த ஆங்கிலக் கவிதை 'கசபியங்கா'. மரணம் நிச்சயமென்று தெரிந்தும் தந்தை வார்த்தையை மீற விரும்பாது கப்பலோடு எரிந்துபோன அந்தச் சிறுவனது கதையை ஆசிரியரான அவர் சொல்லிக் கொடுக்கையில் வரிகளை வர்ணிக்கும் விதத்திலிருந்து அப்பாவையும் நன்கு புரிந்து வைத்திருந்தேன். அப்பாவின் வார்த்தையை மீறுவது அவரைப் பொறுத்தவரை மன்னிக்க முடியாத பெருங்குற்றம்.

இருந்தாலும்... சிஸ்டர் வார்த்தையை எப்படி மீறுவது? கிளம்பினேன்.

அப்போதெல்லாம் புத்தகப்பை கிடையாது, ஒரு 'சூட்கேஸ்' வைத்திருப்போம். என்னுடையது சற்றுப் பெரிது, என்னைக் கொள்ளும். தரையில் தட்ட விடாமல் தூக்கிப் பிடிப்பது ஒரு சிரமம்; பாரம் மறு சிரமம். விளக்குமாறு சுமந்த மூஞ்சூறு போல எப்படியோ வீட்டுக்குச் சமீபமாக இருந்த கிருஷ்ணா திரையரங்கு வரை நடந்து போயாயிற்று. தெரு முனையிலிருந்த சிங்கள மஹா வித்தியாலயத்திற்கு மதிட்சுவர் இல்லை. திரையரங்கின் முன்பிருந்தே எங்கள் ஒழுங்கை முனை தெரியும். அன்று அது தெரியாமல் தெரு முழுவதையும் மறைத்து ஒரு பெருங்கும்பல் தெரிந்தது.

மெல்லிதாக என்னவோ இனம் புரியாத ஒரு உணர்ச்சி. வயிற்றில் எதுவோ சுரந்தது.

மேலும் முன்னேற... கும்பலினிடையே, கால்கள் மறைக்காத இடைவெளியூடே தரையில், அம்மா பாடசாலைக்கு எடுத்துச் சென்ற பை... அது என் மாமா வாங்கிக் கொடுத்தது என்று பத்திரமாக வைத்திருந்தார்கள். ரத்தச் சிதறலின் நடுவே சரிந்து கிடந்த சைக்கிளில் இருந்த கூடை, சிதறிக் கிடந்த புத்தங்கள் என அனைத்தும் சடுதியாய்ச் சொன்ன சேதியில் ஒரு நொடி மூளை செயலிழந்தது.

எப்படி முன்னேறினேனென நினைவு இல்லை. நடைப்பிணம் என்பார்களே, நான் அதுவாகி இருந்தேன்.

கும்பலைச் சமீபிக்க எல்லோர் பார்வையும் என் மேல் திரும்பிற்று. சற்றுத் தள்ளி தம்பி நிற்கிறார். பார்க்கப் பயந்தேன்.

ஒரு நொடி அநாதையாய்.. அநாதரவாய் உணர்ந்தேன். ஏக்கம், இயலாமை, சோகம், ஆற்றாமை, தனிமை, வெறுமை..... எத்தனை வார்த்தைகள் தனிமைய விபரிக்க உண்டோ அத்தனையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த ஒரு நொடி மிகப் பயங்கரங்களின் கலவையாக இருந்தது.

'என்ன ஆயிற்று!! என்ன செய்யப் போகிறேன் நான் இனி!!'

ஒரு நொடி... ஒரே நொடிதான். மறு நொடி... 'நாமிருக்கிறோம் உனக்கு' என்று அணைத்த அயலவர் கைகள் என்னை சுதாரிக்க வைத்தன. நம்பிக்கை கொடுத்தன.

பிறகு...
பெற்றோரைப் பார்க்க வைத்தியசாலைக்கு அழைத்துப் போனார்கள் அவர்கள். ஒரே இரத்தவாடை. அம்மா மயக்கமாக இருந்தார். வேறு யாரோ ஒருவரது ஆடையை அணிவித்திருந்தார்கள். பின்தலையில் இருபத்திரண்டு தையல்கள், பின்னாலிருந்து விரைந்து வந்த மோட்டார் பைக் ஒன்று மோதியிருக்கிறது. அப்பா ஆண்கள் பிரிவில் ஒரு கட்டிலில் கட்டுகளோடு. வீடு வர நாட்களாகும் என்றார்கள்.

மாமி எங்களை அவர்களோடு வந்திருக்கக் கூப்பிட்டார். பெற்றோர் அனுமதி இல்லாமல் எங்கும் போய்ப் பழக்கமில்லை அப்போது, தயங்கினேன். பெற்றோர் வீடு திரும்பும் வரை வீட்டிலேயே இருந்தோம். அயலவர் எம்மைப் பராமரித்தனர். மூன்று வேளையும் உணவு, பாடசாலைக்கு அழைத்துப் போவது, அங்கிருந்து வைத்தியசாலை அழைத்துப் போவது... எல்லாவற்றுக்கும் மேலாக இதமாக இருந்தது அவர்களது ஆதரவான பேச்சும் அரவணைப்பும்.

அம்மா வீடு வந்த அன்று அவர் குளிப்பதற்கு நீரிறைத்துக் கொண்டிருந்தேன். கிணற்றடிச் சலவைக்கல்லில் அமர்ந்திருந்து கேட்டார், "அடிபட்ட நேரம் எங்களுக்கு ஏதாவது ஆகி இருந்தால் என்ன செய்திருப்பீங்கள்?"

என்னதான் செய்திருப்பேன்!! பதில் சொல்லாது அம்மா முகத்தை நோக்கினேன்.

என்னிடமிருந்து பதிலை எதிர்பார்க்காமல் சொன்னார், 'சாகிற மாடு இருக்கிற மாட்டுக்கு வைக்கோலும் தண்ணியும் சேர்த்து வைச்சிட்டுச் சாகிறதில்லை மகள்,' இதன் அர்த்தம் புரியவில்லையெனக்கு. 'ஒருவருக்கும் கரைச்சல் கொடுக்கக்கூடாது; பாரமாக இருக்கக் கூடாது. பொம்பிளப்பிள்ளை நீங்கள், கான்வென்ட்ல போய் இருந்தால் சிஸ்டர்மார் கவனமாகப் பார்த்துக் கொள்ளுவாங்கள்.' புரிந்தது போல இருந்தது.

Comments

கதையின் தொடக்கத்தில், அப்படியே நானும் அங்கே இருந்து, இந்த உணர்வுகளைக் கடந்து வந்தது போல இருக்கு.

மரத்தடியில் காத்திருக்கும் சூழ்நிலை, அங்கே உதிர்ந்த மலர்கள் - வர்ணனை எல்லாம் ரொம்ப அழகாக, பின்னால் வரப் போகும் அதிர்ச்சிக்கு - ஒரு எக்ஸாக்ட் காண்ட்ராஸ்ட்!

இது கதையல்ல, நிஜம்தானே! அதனால், பாராட்டணும் என்பதை விட, அந்த நேர வலியை இன்னும் சுமக்கும், அன்று சொன்ன புத்திமதியை இன்னும் நினைக்கும் உங்களுடைய மன வலிமைக்கு, ஹாட்ஸ் ஆஃப்!

அம்மா சொன்ன புத்திமதி, உங்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் - எங்களுக்கும்!!!

தாங்க்யூ புனிதா!!!

வலியின் ஆழத்தை தொட்டு விட்டீர்கள்.
அருமை .
வேறு வார்த்தைகள் இல்லை

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

ரொம்ப ரொம்ப அருமைங்க, அழகான வர்ணனை, கதைமுடிவில் வலியுடன்..

நட்புடன்
குணா

என்ன சொல்லுறது என்று தெரியவில்லை. கண்கள் குளமாகிவிட்டது. நெஞ்சு கனத்த வேதனை. நாங்கள் அப்ப பலாங்கொடையில். எனக்கு இரண்டு வயது. 83 கலவர நேரம் நாங்களும் மலையில் தான் இருந்தோம். கிருஷ்ணா தியேட்டர் கடற்கரைக்கு கிட்டத்தானே.

அன்புடன்
சியாமளா

ரொம்ப நல்லா இருந்தது எழுத்து நடை. படிக்கும் போது கூடவே இருந்து பார்த்த உணர்வு. சூப்பர். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர்ப் கதை... ஹாட்ஸ் ஆப்!

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

படித்துக் கருத்துச் சொன்ன லக்ஷ்மி, தாமரை, வனிதா, பிந்து, ஷியாமளா & குணாவுக்கும் ரேட்டிங் கொடுத்த அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்.

உண்மை சம்பவங்கள் .நானும் யோசிபதுண்டு யாரும் இல்லாவிட்டால் என்செய்வது என்று !மனது வலிக்கும் ...

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

//நல்லது மட்டுமே நினையுங்கள்// :-) தேவையென்று வந்தால் தைரியம் தானாக வரும்.
கதையைப் படித்தமைக்கு நன்றி சகோதரி.