கவிதைமன்றம் - 1 தலைப்பு : "தீ"

வாங்க தோழர் தோழீஸ் கவிதைமன்றம் ஆரம்பமாகிடுச்சு.இந்தவார கவிதை மன்றத்திற்கு நான் நடுவராக வருகிறேன்...தலைப்பு தோழர் நைஸ்பையன் அவர்களோட "தீ". கவிதை புனைவோர் புனைந்து பதிவிடுங்கள்....அனைவரின் பதிவுகளும் வரவேற்கப்படுகிறது.
மன்றத்தின் அனைத்து விதிமுறைகளும் இதற்கும் பொருந்தும்.மேலும் கூடுதலாக இதில் தமிழில் மட்டுமே கண்டிப்பாக பதிவுகள் இருக்கனும்.

கவிதைக்கான தலைப்பு கொடுத்து கவிதைமன்றம் ஆரம்பித்தாகிவிட்டது.....வாங்கப்ப வந்து பதிவிடுங்க உங்கள் கவிதைகளை...

நன்றி ரேணுகா ராஜசேகரன்...எனது தலைப்பை தேர்வு செய்தமைக்கு...
நானே முதல் ஆளாக எனது கவிதையினை பதிவிடுகிறேன் .......

ஒவ்வொரு மனிதர்க்குள்ளும்
தீ உண்டு
வெவ்வேறு முகங்களுடன் ...

காதல் தீ...
தேகம் எரிக்கும்...
ஜீவனை குளிர்விக்கும்...

காமத் தீ
தேகத்தை குளிர்விக்கும்..
ஜீவனை எரிக்கும்...

அன்புத் தீ...
தோழமை வளர்க்கும்..
பகமையை ஒழிக்கும் .

கோபத் தீ
பகமை வளர்க்கும்...
தோழமை ஒழிக்கும்...

ஒழுக்கத் தீ
முதலில் அமிலமாய் தோன்றும்..
முடிவில் அமுதமாய் இனிக்கும்..

ஒழுங்கீனத் தீ...
முதலில் அமுதமாய் தோன்றும்..
முடிவில் அமிலமாய் உருக்கும் ...

சுயநலத் தீ...
நம்மை அதனுள் தள்ளும்..
நன்றி மறக்கச் சொல்லும்..

நல்லெண்ணத் தீ
பிறர்க்கு உதவச் சொல்லும்...
பிற்பகல் நமக்கே உதவும்...

உற்சாகத் தீ..
வெற்றிகள் தேடித் தரும்..
சோகங்கள் எரித்துவிடும்...

சோர்வுத் தீ..
தோல்விகள் கொண்டு வரும்..
மகிழ்ச்சியினை கொன்று விடும்..

நமக்குள் இருக்கிறது
நன்மையின் தீயும்..
தீமையின் தீயும்..

நன்மையின் தீயை
சுடர்விடச் செய்வோம்...
தீமையின் தீயை
தீயிட்டு கொல்வோம்...

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

முதல் கவிதை முத்தான எழுத்துக்கள்....
தீயினை பல பண்புகளுக்கும் பிரித்துகாட்டி புனைந்துள்ளீர்கள்.அருமை அருமை.....மேலும் பலரின் கவிதைகளை எதிர்பார்ப்போம்....உங்களின் கவிதைக்கு வாழ்த்துக்கள்.

தீ ஒன்று மூட்டுங்கள்...
மனதில் தீயொன்று மூட்டுங்கள்...
அநியாயத்தின் வேரறுக்கும்
தீ ஒன்று மூட்டுங்கள்...

அக்கினி குஞ்சொன்று கண்ட
எம் பாரதியின் திருநாட்டில்
அக்கினி பறவைகளாய் வானில்
சிறகு விரித்து பறந்திடுங்கள்...

அடிமையினை அழித்திடுங்கள்...
ஊழலை நசுக்கிடுங்கள்...
உரிமைகளை நிலைநாட்ட
உலகெங்கும் பறந்திடுங்கள்...

உலகினை நாசம் செய்யும்
புல்லுருவிகளை அழித்திடுங்கள்...
அக்கினி விதைகளை எல்லார்
மனதிலும் விதைத்திடுங்கள் ...

கொடுமைகள் சுட்டெரிந்து
மறுமலர்ச்சி மலரட்டும் !!!
பாவிகள் நிறைந்த பாரதம்
புண்ணிய பூமியாய் மாறட்டும்!!!

தீ ஒன்று மூட்டுங்கள்...
மனதில் தீயொன்று மூட்டுங்கள்...
அநியாயத்தின் வேரறுக்கும்
தீ ஒன்று மூட்டுங்கள்...

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

வாழ்த்துகளுக்கு நன்றி ரேணுகா ராஜசேகரன் ....
இன்னும் நிறைய கவிதைகளை நண்பர்கள் பதிவிடுவார்கள் என்று நினைக்குறேன் ..

வணக்கம் தாமரை செல்வி....உங்கள் ஆதங்கத்தை கவிதையில் அழகாய் வெளிப்படுத்தி
இருக்கீர்கள் ..வாழ்த்துகள்..

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

அருமையான கவிதை மன்றத்தை கவிதை மாலைகளால் அலங்கரிக்க அன்புடன் அழைக்கிறோம்

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

தோழீஸ் எனக்கு கவிதை எழுதி பழக்கமில்லை. ஒரே ஒரு கவிதை முதல் கவிதை அறுசுவைக்கு அனுப்பி போனாப்போகுது பாவம்னு நினச்சு போட்டிருந்தாங்க. மத்த கவிதை ஜாம்பவான்களின் கவிதைகளோட என்னோடதும் இடம்பெற்றிருந்தை பார்த்து பார்த்து பூரிச்சுப்போனேன். அதுக்கப்புறமும் துன்புறுத்தவேண்டாம்னு கவிதைக்கு ஒரு முழுக்கும் போட்டுட்டேன். ஆனா இப்ப கவிதங்கிற பேர்ல ஒண்ணு எழுதியிருக்கேன். நல்லா இல்லேனா சொல்லிடுங்க.. ஏத்துக்கிறேன்... முதல் பரிசு கொடுக்கலீனு கோவிச்சிக்குவனோனு நினச்சுறாதிங்க.
நீங்க எல்லாரும் வலுக்கட்டாயம கூப்பிட்டதனாலே தட்டமுடியாம வந்திருக்கேன்.(புரிது புரிது..யாரும் திட்டவேண்டாம்.) நானாத்தான் வந்தேன்.

அன்னத்தை சமைக்க
ஆபரணம் செய்ய
இயந்திரத்தை இயக்க
உலோகத்தை பிரிக்க
ஊர்திகளை உந்த
எறிகுண்டு தயாரிக்க
ஏற்றத்திற்கும் நீயே
அழிவிற்கும் நீயே
அக்னிதேவனே!!

உன்னை சாட்சியாக்கி
இருமனம் இணையும் திருமணம்
சில நேரங்களில்
வியாபாரிகளின் பிடியில் சிக்கி
சாட்சியாக்கிய உன்னையே
சாபம்பெறச்செயவதும்..

அடேய் மனிதா
யாராக இருந்தாலும்
கடைசியில் என்பிடிக்குள்
விழுந்து ஒரு பிடியாகத்தானே வேண்டும்.

ஆத்தீ.....ஆ... தீ.......

என் கவிதையில்(??) பிழையேதும் இருந்தால் பொருத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கவிதைமன்றத்திற்கு வரவேற்கிறேன்.....

உங்களின் எழுத்துக்களிலேயே
தீ கொழுந்துவிட்டு எரிகிறது....
சமூகம்பற்றிய ஆதங்கம்
அதன் கண்களில் தெரிகிறது...
வாழ்த்துக்கள் ...

நெருப்பின் பண்பையும் பயனையும் கவிதையாக்கி கொடுத்துட்டு கவிதை தெரியாதுன்னா எப்படிப்பா......நன்றாக உள்ளது கவிதை.வாழ்த்துக்கள்...

மறந்துட்டீங்களா அனைவரும்..இதுவரை மூன்று கவிதைகளே போட்டிக்கு வந்துள்ளன.மேலும் கவிதைகள் அனுப்புங்கள் தேர்வுசெய்ய வசதியாக இருக்கும்.

மேலும் சில பதிவுகள்