பட்டிமன்றம் 91 :மாணவர்களிடையே தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாவதன் காரணம் வீட்டுசூழலா? சமூகச் சூழலா?

அன்பு அறுசுவை மக்களே வணக்கம். இன்றைய வாரம் பட்டிதலைப்பு :மாணவர்களிடையே தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாவதன் காரணம் வீட்டுசூழலா? சமூகச் சூழலா?

தேர்வு முடிவுகள் வெளியாகி பல மாணவர்களின் கனவுகள் மெய்ப்பட ஆரம்பிக்கும் நேரம் சிலமாணவர்களின் கனவுகள் சிதறியிருக்கும்.கனவுகள் சிதறிய கவலையில் வாழ்வை முடிக்க போகும் சூழ்நிலைக்கு போவதன் காரணம்?

வாதங்கள் தேர்வு முடிவை ஒட்டித்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. பொதுவாகவே இக்காலத்தில் சிறு தோல்வியையும் தாங்கும் மனநிலை இளம்வயதினரிடையே இல்லை.இதன் பின்னணி என்ன? மனவுறுதியும் தெளிவும் இல்லாமல் சிறுதோல்விக்கும் கோரமுடிவை எடுக்கும் கொடுமைக்கு காரணம்? இதிலிருந்து மாணவர்களைக் காக்கும் வழி? அப்படிப்பட்ட சூழலில் இவ்வாதம் பலருக்கும் ஒரு ஆரோக்யமான சிந்தனைத்தெளிவைத் தரும் என்னும் நம்பிக்கையில் இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.
சமூக மாற்றங்களை தெளிவான கண்ணோட்டத்தில் பார்க்கும் நம் கவிசிவாவின் தலைப்பு இது. அவர்களுக்கு முதல் நன்றி. முதன் முறையாக பட்டித் தலைவர் பொறுப்பேற்றிருக்கும் என்னை மனமுவந்து ஏற்று சிந்தனையை செதுக்கி உங்கள் வாதங்களை வைப்பீர்.

பட்டிமன்ற விதிமுறைகள்:
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது.

3. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

4. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.

5. அரட்டை... நிச்சயம் கூடாது.
இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

வாருங்கள் மக்களே வந்து வாதங்களை பொழியுங்கள் :-)

நடுவருக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும். எனது தலைப்பை தேர்ந்தெடுத்ததற்கு நன்றிகளும் :)

மாணவர்களிடையே தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாவதன் காரணம் வீட்டுசூழலே என்பதே என் வாதம். விரிவான வாதங்களுடன் விரைவில் வருகிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க கவி வாங்க! தலைப்பு தந்ததுமில்லாமல் பட்டி வாதத்திற்கு பிள்ளையார் சுழியும் போட்டாச்சு. உங்க வாதத்தை வைங்க. நான் நாளை வாரேன்.:-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரிக்க காரணம் வீட்டுச்சூழலே என்ற அணியில் நான் வாதாட போகிறேன் நடுவரே

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

வந்துட்டோம்ல நடுவரே :) சமயத்துக்கு ஏற்ற வாதிக்கப்பட வேண்டிய தலைப்பே. வெற்றி பெற வாழ்த்துக்கள். தலைப்பை தந்தவங்க எந்த அணியோ அதே அணி தானாக்கும் நாங்களும் ;) கூட்டணி வெச்சுட்டோம்ல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு நடுவருக்கும் தோழிகளுக்கும் வணக்கங்கள்.

நடுவரே! சமூகம் என்பது என்ன? பல குடும்பங்கள் இணைந்ததுதான் சமூகம். அப்போது சமூகத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கு அடிப்படையான காரணம் எங்கே ஆரம்பிக்கிறது? நிச்சயம் வீட்டில் இருந்துதான். இதே போலத்தான் மாணவர்களிடையே தற்கொலைகள் அதிகரிப்பதன் அடிப்படை முதற்காரணமும் வீட்டுச் சூழல்தான்.

அது எப்படி பெற்றோரே தன் குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டுவார்கள் என்ற கேள்வி வரலாம். நடுவரே! தங்கள் எதிர்பார்ப்புகளை குழந்தைகளின் மனம் அறியாமல் திணிக்கும் பெற்றோர்களால்தான் பிரச்சினை ஆரம்பமாகிறது.

நான் மருத்துவர் ஆக விரும்பினேன் ஆனால் முடியவில்லை அதனால் என் மகன் மருத்துவர் ஆகியே தீர வேண்டும் என்ற அதீத எதிர்பார்ப்பு, என் பிள்ளை மருத்துவர், எஞ்சினியர் ஆனால்தான் மரியாதை, கவுரவம் என்ற எண்ணம் இவைதான் தன் பிள்ளைகளின் விருப்பத்தையும் திறனையும் கொஞ்சமும் யோசிக்காமல் அதிக அழுத்தத்தை கொடுக்கிறார்கள்.

மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே வாழ்க்கையல்ல அதையும் தாண்டி வாழ்க்கையில் சாதிக்க எவ்வளவோ இருக்கிறது என்று எத்தனை பெற்றோர் இன்று தன் பிள்ளைகளுக்கு எடுத்து சொல்கிறார்கள்? பையன் பத்தாவது, பன்னிரண்டாம் வகுப்பை எட்டி விட்டால் போதும் ஒரே அறிவுரைதான். எப்படியாவது நல்ல மார்க் எடுத்துடு... நம் குடும்ப கவுரவமே உன் கையில்தான் இருக்கிறதுன்னு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். அத்தோடு விடுவார்கள்னு நினைக்கறீங்களா நடுவரே! சில குறிப்பிட்ட பள்ளிகளில் கொண்டு சேர்த்து விடுவார்கள். அங்கே என்ன நடக்குதுன்னு நினைக்கறீங்க? காலை முதல் இரவு வரை படிப்பு படிப்பு... அதாவது புத்தக பக்கங்களை மனப்பாடம் செய்து பேப்பரில் வாந்தி எடுக்கும் பயிற்சிகள் மட்டுமே. ஒரு பொழுது போக்கு கிடையாது, அப்பா அம்மாவிடம் வாரம் ஒரு முறை மட்டுமே பேச முடியும், வெளி உலகமே தெரியாது, மதிப்பெண் சற்று குறைந்தாலும் காட்டுமிராண்டித்தனமான தண்டனைகள்... இந்த சூழலில் இருக்கும் மாணவனின் மனநிலை எப்படி இருக்குமென நினைக்கிறீர்கள்?

இப்படி செய்வது எல்லாம் சமூகம்தானேன்னு எதிரணியினர் கேட்கலாம். ஆனால் இப்பள்ளிகள் இப்படித்தான் நடத்தப்படுகின்றன என்று தெரிந்தும் கூட தன் பிள்ளையை அங்கே சேர்த்து விடும் பெற்றோர் அல்லவா முதல் குற்றவாளி! பெற்றோருக்கு இதெல்லாம் தெரியாது என்று சப்பை கட்டு கட்ட வேண்டாம் எதிரணியினரே! பள்ளிகளில் சேர்க்கும் போதே அவை எல்லாமே பெற்றோருக்கு தெளிவாக சொல்லப்படுகிறதாம். தன் பிள்ளைகளை கண்மூடித்தனமாக அடிப்பார்கள் என்று தெரிந்தும் மதிப்பெண் ஒன்றையே குறிக்கோளாக வைத்து அப்பள்ளிகளில் சேர்த்து விடும் பெற்றோரை என்னவென்று சொல்வது?

பள்ளித்தேர்வு முடிவுகள் வெளியானாலே எத்தனை இளந்தளிர்கள் தன் உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறார்களோ என்று மனம் பக் பக் னு அடிக்குது நடுவரே! மதிப்பெண்கள் குறைந்து ஏற்கெனவே நொந்து போய் இருப்பவனை பெற்றோரும் கண்டபடி திட்டினால் அந்த பிஞ்சு மனம் என்னதான் செய்யும்? பிள்ளை மீது இருக்கும் அக்கறையினால்தானே திட்டுகிறார்கள் என பெற்றோரை நாம் நியாயப் படுத்தலாம். ஆனால் ஏற்கெனவே வீழ்ந்து கிடப்பவனை மீண்டும் மீண்டும் மிதிக்காமல் கைதூக்கி விட்டு ஆறுதல் சொல்லி , அடுத்து என்ன செய்யலாம், ஏற்கெனவே செய்த தவறுகள் என்ன என்பதை இதம் பதமாக சொல்லி தேற்றினால் அவன் மனதில் ஏன் தற்கொலை எண்ணம் வருகிறது? இதைச் செய்வது யார் கடமை? வீட்டில் இருக்கும் அவன் பெற்றோர்களுக்குத்தானே அந்த கடமை.

பல வீடுகளில் இன்று சரியான கம்யூனிகேஷனே கிடையாது நடுவரே! எத்தனை குடும்பங்களில் பெற்றோர் பிள்ளைகளுடன் மனம் விட்டு பேசுகிறார்கள்? மனம் தடுமாறும் பதின்ம வயதில் பிள்ளைகளை நண்பனாக அணுக வேண்டும். அப்போதுதான் தனக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் சந்தேகங்களையும் பெற்றோரிடம் பிள்ளைகள் கேட்பார்கள். ஆனால் அப்பா முன்னால் பேசவே தயங்கும்படி வீட்டுச்சூழல் இருந்தால் பிள்ளை என்னதான் செய்யும்?

வீட்டுச்சூழல் சரியாக இருந்தால் சமூகச்சூழல் எப்படி இருந்தாலும் பிள்ளைகளுக்கு தற்கொலை எண்ணமே வராது. ஆனால் வீட்டுச்சூழல் சரியில்லை என்றால் பிள்ளைகள் மனம் தடுமாறவே செய்யும். கொஞ்சம் பலவீனமான மனம் உள்ள பிள்ளை தற்கொலை முடிவையும் நாடும்.

இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது நடுவரே! தற்போது கடமை அழைப்பதால் மீண்டும் விரிவான வாதங்களுடனும் எதிரணிக்கான பதில்களுடனும் பின்னர் வருகிறேன் :

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பிலும் பண்பிலும் சிறந்துவிளங்கும் அறுசுவை நேயர்களுக்கு எனது அன்பு வணக்கம் :) எதிரணி சக அணியாளர்களுக்கும் வணக்கம். முதல்முறையாக பட்டியை ஏற்று நடத்தும் நடுவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் :) நல்லதொரு தலைப்பை நல்கிய கவிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

சமுதாய சூழலே என்னும் அணியை தேர்ந்தெடுத்து வாதாட வந்துள்ளேன். நடுவர் அவர்களே!! படிப்பில் மட்டும் என்றல்ல, திருமணம், ஆடை அணிகலன் வாங்குதல் போனறவற்றில் இன்று சமுதாய சூழல் பெரும் பாதிப்பை உண்டுபண்ணுகிறது. நம்முன்னோர்கள் வகுத்த வழியை விட்டு வெகுதூரம் வந்துவிட்டது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. அந்த கால திருமணங்கள் இக்காலங்களை போல் வெகு விமர்சையாக நடந்ததா?? படிப்பிற்குத்தான் இவ்வளவு செலவு செய்தார்களா?? ஆடை அணிகலன்களுக்குத்தான் இவ்வளவு செலவு செய்யப்பட்டதா??

இப்பொழுதெல்லாம் மாணவர்கள் நன்றாக படிக்கவேண்டும், நன்றாக படித்தால் மட்டும் போதாது முழுமதிப்பெண் வாங்கவேண்டும்.. இதெல்லாம் யாருடைய குறைபாடு சமுதாயத்தின் குறைபாடுதானே, ஏன் ஒரு மாணவன் பள்ளியில் 10, +2 வரும்பொழுது தன்னுடைய விளையாட்டு ஆசைகளாட்டும், மற்ற கலைத்துறை ஆர்வம் ஆகட்டும் அனைத்தையும் மூட்டை கட்டிவைக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகின்றனர். ஏன் பள்ளி ஆசிரியர்களே, அதெற்கெல்லாம் முட்டுக்கட்டை போடுகின்றனர். நாம் இருப்பது இந்தியாவில், அதனால் படிப்பை மட்டும் பாருங்க மத்த விஷயத்தை எல்லாம் நினைக்காதீங்கனு சொல்ற ஆசிரியர்கள் சமுதாய அங்கத்தினர்கள் தானே.

அப்படி நல்ல மதிப்பெண் பெற்று உயர்கல்வி பெறும் மாணவர்களுக்கும் பெறும் சவாலாக இருப்பது வேலைவாய்ப்பு, கேம்பஸில் செலக்ட் ஆகாத மாணவர்களை சிறு பூச்சி போல் பார்த்து எள்ளி நகையாடுவது இச்சமுதாயமே!! வீட்டில் உள்ளவர்கள் எத்துணைதான் அரவணைத்துச் சென்றாலும், அச்செல்வங்கள் நடமாடவேண்டியது இச்சமுதாய வீதிகளில்தானே??

நடுவர் அவர்களே!! சமீபத்தில் ஒரு மிகப்பிரபலமான டீம்டு யூனிவர்சிட்டிக்கு சென்றிருந்தேன்.
அங்கு ஒரு மாணவன் +2 முடித்துவிட்டு தன் தாய் தந்தையருடன் வந்திருந்தார். அவரின் தந்தையோ ஒரு பெரிய பையுடன் தன் மகனை பேமெண்ட் சீட்டில் சேர்ப்பத்தற்காக அங்கும் இங்குமாக போய்க்கொண்டிருந்தார். அந்த மாணவனின் முகமோ மிக்அவும் சோகமாக இருந்தது. அவரின் தாயிடம் பேசிய போது, கட் ஆஃப் மதிபெண் 196 வரும் என எதிர்பார்த்தானாம், 190 தான் வந்ததாம், அதனால் மிகவும் சோகமாகவே இருக்கிறான், பசிக்கவே மாட்டேன்கிறதம்மா என மனமுடைந்து சொல்கிறாராம். அந்த தாயின் ஆறுதல் வார்த்தைகள் அந்த முகத்தில் சிறிதும் சிரிப்பை வரவழைக்க முடியவில்லை.
பள்ளியும் சமுதாயமும் தானே மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது இன்றைய மாணவச் செல்வங்களிடம்!!
அவருடைய மதிப்பெண்ணிற்கு நல்ல கல்லூரிகள் பல கிடைக்கும். ஆனால் இச்சமுதாயத்திற்கு பயந்தே தன் மகன் மிக பிரபலமான கல்லூரியில் படிக்கவேண்டும் என்ற எண்ணத்தை கொண்டு மிகவும் கஷ்டப்பட்டு அக்கலூரியில் சேர்க்க வந்திருந்தனர் அப்பெற்றோர்.

டாம்பீகம் புரையோடிப்போயிருக்கும் சமுத்தாயத்தினாலேயே மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர் எனக்கூறி அமைகின்றேன் நன்றி வணக்கம்!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

முதன் முதலில் நடுவர் நாற்காலியில் பயத்துடனும் ..;) பவ்யத்துடனும் அமர்ந்திருக்கும் நாட்டாமை அவர்களுக்கு வணக்கம், பட்டியை திறம்பட நடத்திச் செல்ல என் வாழ்த்துக்கள். நல்ல தலைப்பை தந்த தோழி கவிக்கு என் வாழ்த்துக்கள்.

நடுவரே, எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே
அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே....:)

இப்ப உங்களுக்கு புரிஞ்சுருக்குமே நாட்டாம, நான் எந்த சைடுன்னு, மாணவர்களிடையே தற்கொலை எண்ணிக்கை அதிகமாவதன் காரணம் வீட்டுசூழலே தான், அதாவது அவங்களோட பெற்றோரே தான்.
அன்றாடம் பத்திரிக்கைளை புரட்டினால் பரிட்சையில் தோல்வியடைந்ததால் பள்ளி மாணவ-மாணவி தற்கொலை, இளம்பெண் தற்கொலை, காதல் ஜோடிகள் தற்கொலை, கள்ளக் காதலினால் தற்கொலை, கடன் தொல்லை தாங்க முடியாமல் தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை, ... என்று வகைவகையான தற்கொலை செய்திகள் ஏழை-பணக்காரர், ஆண்-பெண், சிறியவர்-பெரியவர் என்ற பேதமின்றி நடந்தேறுவதை காண முடிகிறது. இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. சிலரின் வாழ்க்கை வசந்தம் வீசும் பூஞ்சோலையாகிறது, சிலரது வாழ்க்கையோ வறுமையும், துன்பமும் தாக்க சோகமாகி சுட்டெரிக்கும் பாலைவனமாக மாறிவிடுவதும் உண்டு.வெளி உலகில் வீராப்பு பேசும் எத்தனையோ நபர்கள் தன் சொந்த வாழ்வில் ஒரு பிரச்சினை வந்துவிட்டால் உள்ளங்கள் உடைந்து கதறி கண்ணீர் சிந்தி நம்மால் இந்த பிரச்சினையை தீர்க்கவே முடியாது என்றெண்ணி தன்னுயிரை தானே மாய்த்துக் கொள்ளவும் துணிந்து விடுகின்றனர்... என் பாட்டி சொல்லுவாங்க , வீட்டுச் சோறு இருந்தா தான் வெளிச் சோறும் அப்படின்னு. வீட்டுக்குள்ள பெத்தவங்க பிள்ளைகளுக்கான அங்கீகாரத்தை தரலேன்னா சமூகத்துல மட்டும் எப்படி நடுவரே அது கிடைக்கும்?
பெத்தவங்க ,தங்களின் போலியான தற்பெருமைக்காக, பிள்ளைகளை பலிகடாவாக ஆக்குகின்றனர்.தன் சொந்தப் பிள்ளைகளின் ஆர்வம் எதில் என்று புரியாமல் (சில வீட்டுல தெரிஞ்சும் கூட), பல பெற்றோர் தங்களுடைய ஆசையை ஆர்வத்தை அவர்கள் மேல் திணிக்கின்றனர். முக்கியமா மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு பேசுவதால், தங்கள் பிள்ளைகளின் சுய மதிப்பீட்டை தாங்களே குறைப்பது மட்டும் அல்லாமல் தாழ்வு மனப்பான்மையை வேறு ஏற்படுத்தி விடுகின்றனர். படிப்பு தான் உலகம் என்பது போன்ற மாயலோகத்தை உருவாக்கி, படி படி என்று அவர்களை மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாகவே மாற்றி விடுகின்றனர். இதனால், அவர்களுக்கு நாளடைவில் படிப்பு என்ற சொல்லை கேட்டாலே எட்டிக் காயின் கசப்பும் அதன் மேல் வெறுப்பும் ஏற்படுவது போல செய்துவிடுகின்றனர்.
நடுவரே டீன்-ஏஜில் தான், உடலிலும், மனதிலும் அதிகப்படியான மாற்றங்கள் ஏற்படுகிறது. சின்ன, சின்ன விஷயங்கள், பேச்சுகள் கூட இந்த வயதில் உள்ளவர்களை எளிதில் உணர்ச்சி வசப்படவைக்கும். அந்த நேரத்தில் பெற்றோரின் அரவணைப்பு, அன்பான பேச்சு மிக மிக அவசியம். குழந்தைகளுக்காக பெற்றோர் பிரத்யேகமாக நேரத்தைச் செலவிட்டு, அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேச வேண்டும். நல்லது, கெட்டது எது, எந்த படிப்புக்கு என்ன வேலை வாய்ப்பு உள்ளது என்பது போன்ற தகவல்களை எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்கெல்லாம் இந்த காலத்து பெற்றோருக்கு நேரம் இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். என் பிள்ளைக்காக தான் நான் 24 மணி நேரமும் கஷ்டப்படுகிறேன், அவன்/ அவ்ள் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் இந்த வயதில் படி படி என்று சொல்கிறேன் ,... இன்னும் நிறைய சொல்லுவார்கள். ஆனால் தன் பிள்ளைக்கு
எந்த துறையில் ஆர்வமோ, அந்த துறையைத் தேர்ந்தெடுக்கும் வகையில் ஊக்கப்படுத்த தவறிவிடுகிறார்கள்.,.. அவர்களுக்கு விருப்பம் இல்லாத படிப்பை தேர்வு செய் என்று டார்ச்சர்.. ... நடுவரே ஒரு பழமொழி சொல்லுவாங்க,
வேண்டாப் பொண்டாட்டி கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் னு, இது மணைவிக்கு மட்டும் இல்லைங்க மாணவர்களோட படிப்புக்கும் பொருந்தும்.
‘பெற்றோரின் அதிகப்படியான பேராசையால், வெறுப்புக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகும் பிள்ளைகள், இறுதியில் தற்கொலையை நாடுகின்றனர்‘ என,( நான் மட்டும் சொல்லலீங்க நடுவரே) சென்னைப் பல்கலை உளவியல் துறைத் தலைவர் கருணாநிதி ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
ஒருவரது மூளை, தொடர்ந்து எட்டு மணி நேரம் மட்டுமே கருத்துக்களை உணர்ந்து உறிஞ்சும் திறன் பெற்றுள்ளது. இதை புரிந்து கொள்ளாமல்,பள்ளியில் படிக்கும் ப்டிப்பு போதாது என்று பெற்றோர் வீட்டிலும் தொடர்ந்து குழந்தைகளை படிக்க கட்டாயப்படுத்தி மன அழுத்தத்தை உண்டாக்குகிரார்கள்.விளைவு, தற்கொலை..நடுவரே, இந்த ச்மூகமே எதிர்த்தாலும் தன் குடும்பத்தாரோட ஒத்துழைப்பு மட்டும் இருந்தால் ஒருவனால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும், அதே குடும்பம் எதிர்த்தால் எதனையும் செய்ய முடியாது போய் தங்கள் இன்னுயிரையே இழக்க துணிகிறார்கள் நடுவரே. பெற்றோர் தங்கள் பிள்ளைகளையும், பிள்ளைகள் தங்கள் பெற்றோரையும் நன்கு முதலில் புரிந்து கொண்டால் கண்டிப்பாக மாணவர்களிடையே தற்கொலை குறையும் என்பது என் கருத்து.தேர்வில் தோல்வி, காதல் தோல்வி, பெற்றோர் கண்டிப்பு, ஏமாற்றம் போன்ற அற்ப காரணங்களுக்காக தற்கொலை செய்துகொள்ளும் இவர்களுக்காக வருத்தப்படுவதா?அல்லது அவர்களின்மீது பரிதாபப்படுவதா? என்று எனக்கு தெரியவில்லை நடுவரே...:(

மீண்டும் வருவேன் நடுவரே....

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வாங்க ஃபரிதா வந்து உங்க வாதங்களை அள்ளிவிடுங்க. கேட்க தயாரா உட்கார்ந்திருக்கேன் :-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

வீட்டுச் சூழலே அணியில் புகுந்து விளாசித்தள்ளியிருக்கீங்க கவி.

//நான் மருத்துவர் ஆக விரும்பினேன் ஆனால் முடியவில்லை அதனால் என் மகன் மருத்துவர் ஆகியே தீர வேண்டும் என்ற அதீத எதிர்பார்ப்பு, என் பிள்ளை மருத்துவர், எஞ்சினியர் ஆனால்தான் மரியாதை, கவுரவம் என்ற எண்ணம் இவைதான் தன் பிள்ளைகளின் விருப்பத்தையும் திறனையும் கொஞ்சமும் யோசிக்காமல் அதிக அழுத்தத்தை கொடுக்கிறார்கள்//அதானே நாம முடிச்சிக்காட்டாத விசயத்த நிறவேற்ற பெற்றெடுத்த மாதிரி ரொம்ப உரிமை காட்டி பெற்ற குழந்தைகள் மீது எதிர்ப்பார்ப்பை திணிக்கிறார்கள் பெற்றோர்கள். தனது நியாங்களை ஆசைகளை சொல்லும் பிள்ளைகளை " இதுக்குத்தான் உன்னை இத்தனை கஸ்டப்பட்டு வளர்த்தேனா?" என்று சென்டிமண்ட் கேள்வி வேறு தொடுப்பது.

//மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே வாழ்க்கையல்ல அதையும் தாண்டி வாழ்க்கையில் சாதிக்க எவ்வளவோ இருக்கிறது என்று எத்தனை பெற்றோர் இன்று தன் பிள்ளைகளுக்கு எடுத்து சொல்கிறார்கள்//அக்காங்.. மதிப்பெண் வாங்குவதைத்தவிர உனக்கு வாழ்க்கையில் வேறென்ன வேலை. வேணும்கிறத வாங்கித்தரத்தான் நாங்க இருக்கிறோமேன்னு குத்தறது.

//எத்தனை குடும்பங்களில் பெற்றோர் பிள்ளைகளுடன் மனம் விட்டு பேசுகிறார்கள்? மனம் தடுமாறும் பதின்ம வயதில் பிள்ளைகளை நண்பனாக அணுக வேண்டும். அப்போதுதான் தனக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் சந்தேகங்களையும் பெற்றோரிடம் பிள்ளைகள் கேட்பார்கள். ஆனால் அப்பா முன்னால் பேசவே தயங்கும்படி வீட்டுச்சூழல் இருந்தால் பிள்ளை என்னதான் செய்யும்? //அப்படிச்சொல்லுங்க கவி. சமுதாயத்தில் தன் புகழை காக்க ஓடிக்கொண்டுடிருப்பவர்களுக்கு தனது பொழுது போக்கை முக்கியம் எனக்கருதி தொலைக்காட்சி முன் ஆர்வமாய் நேரம் கழிக்கும் பெற்றோர்களுக்கு என்ன சொன்னாலும் புரியுமா?

இன்னும்வந்து உங்க வெடிகளை கொளுத்துங்க

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

அருட்செல்வி சமுதாயசூழலேன்னு வாதாட வந்திருக்கீங்க. இந்த திண்ணைக்கு ஆள் இல்லாமல் போயிடுமோன்னு இருந்தேன்.வந்து சும்மா கம்பீரமா இல்லே உட்கார்ந்திருக்கீங்க உங்க வாதங்கள் எதிரணியினை திணரடிச்சு மிரளவைக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை

//நம்முன்னோர்கள் வகுத்த வழியை விட்டு வெகுதூரம் வந்துவிட்டது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. அந்த கால திருமணங்கள் இக்காலங்களை போல் வெகு விமர்சையாக நடந்ததா?? படிப்பிற்குத்தான் இவ்வளவு செலவு செய்தார்களா?? ஆடை அணிகலன்களுக்குத்தான் இவ்வளவு செலவு செய்யப்பட்டதா?? //கிட்டத்தட்ட எல்லோர் மனதிலும் இந்தக்கேள்வி இருக்குங்க. இந்த மாற்றம் எப்பேர்பட்ட விளைவுகளைத்தந்திருக்கு பார்த்தீங்களா? எதிரணியினர் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்

//நாம் இருப்பது இந்தியாவில், அதனால் படிப்பை மட்டும் பாருங்க மத்த விஷயத்தை எல்லாம் நினைக்காதீங்கனு சொல்ற ஆசிரியர்கள் சமுதாய அங்கத்தினர்கள் தானே//
சமுதாயத்தை எதிர்கொள்ளும் துணிவைக்கற்றுத்தரவேண்டிய ஆசிரியர்குலவே மன அழுத்தத்தை அதிகப்படுத்துறாங்க பாருங்க.

//கட் ஆஃப் மதிபெண் 196 வரும் என எதிர்பார்த்தானாம், 190 தான் வந்ததாம், அதனால் மிகவும் சோகமாகவே இருக்கிறான், பசிக்கவே மாட்டேன்கிறதம்மா //சமுதாயம் தரும் மன அழுத்தம் பாருங்க.

//டாம்பீகம் புரையோடிப்போயிருக்கும் சமுத்தாயத்தினாலேயே மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர்//அப்படி போடுங்க அறைஞ்சு சொன்னீங்க

இன்னும் வந்து அணிக்கு பலம் தரும் வாதங்களை வைங்க :-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

மேலும் சில பதிவுகள்